கீதை கடிதங்கள் 4

 

 

IMG_20151209_200538_1449675948638 (1)

ஜெ சார்
உங்க கீதைப்பேருரைத் தொடருக்கு நான் நான்குநாட்களும் வந்திருந்தேன். உங்களிடம் சில வார்த்தைகள் பேசமுடிந்ததும் மகிழ்ச்சி அளித்தது. நான் கிக்கானிப்பள்ளியில் நடக்கும் ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்கு அவ்வப்போது செல்வதுண்டு. எனக்குப்பிடித்த பல நல்ல உரைகள் அங்கே நடந்துள்ளன. அவற்றிலிருந்து இந்தப்பேச்சை தனித்துக்காட்டியவை சில இயல்புகள் என்று நினைக்கிறேன்

மேடையிலே பேசப்படும் வழக்கமான சம்பிரதாயங்கள், முன்வரிசை பிரபலங்களை அடையாளம் கண்டுகொண்டு சொல்லப்படும் சில மரியாதைச் சொற்கள் ஒன்றும் கிடையாது. நேரடியாக விஷயத்துக்குப் போனீர்கள். வழக்கமான மேடைப்பேச்சுக்களின் அறைகூவல்கள் உபதேசங்கள் மாதிரி ஏதும் இல்லை. நேரடியாகவே மனசுக்குள் இருந்து வரும் பேச்சாக இருந்தது. உணர்ச்சிகரமாகப்பேசும்போது அதெல்லாம் நாடகத்தனமாக இல்லாமல் உண்மையான உணர்ச்சிகளாக இருந்தன

ஏனென்றால் நீங்கள் நிறைய பேசுவதில்லை என நினைக்கிறேன். இதையே வாரம்தோறும் பேச ஆரம்பித்தால் இப்படியே ஒரு டெக்னிக் ஆக மாறிவிடும். அது நாடகமாக ஆகிவிடும். ஆகவே பல இடங்களில் உண்மையான உணர்ச்சிகள் வெளிவந்தன. அதை ஒட்டி அழகான சொற்றொடர்கள் வந்தன. அந்த நிமிடங்கள் எல்லாமே புல்லரிப்பை அளிப்பவையாக இருந்தன. சில இடங்களில் நான் கண்ணீர் மல்கிவிட்டேன். காந்தியைப்பற்றிய இடங்கள் குறிப்பாகச் சொல்லவேண்டும்

உரை ஆன்மிகமும் தத்துவமும் கலந்ததாக இருந்தாலும் கூர்மையான சமூகவிமர்சனமும் மதவிமர்சனமும் கொண்டதாக இருந்ததையும் நான் மிகவும் விரும்பினேன். பலபேருக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். மதநம்பிக்கைகளுக்கும் மதக்குறியீடுகளுக்கும் அறிவியலில் ஆதாரம் தேடும் ஸூடோத்தனத்தை கடுமையாகச் சாடினீர்கள். சாதிப்புத்தியை ஒளித்துவைத்து அதற்காக மதமும் ஆன்மிகமும் பேசும் ஆஷாடபூதித்தனத்தைச் சுட்டிக்காட்டினீர்கள். கொரக்பூர் கீதை உரையை நீங்கள் தூக்கிவீசியதைக் கண்டு எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

மொத்தத்தில் நிறைவான உரை.

ஜெயபாலன்

 

IMG_20151209_182433

அன்புள்ள ஜெ சார்

கீதை உரைகளுக்கு வந்து உங்களைக் கண்டு கைகுலுக்கமுடிந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். அரிய வாய்ப்பு. நான் அளித்த மருத்துவநூல்கள் உங்களுக்குப்பிடிக்கும் என நினைக்கிறேன். உங்கள் மருத்துவக்குறிப்புகளை நான் வாசித்ததுண்டு.
கீதை உரையாக இருந்தாலும் பைபிளை மேற்கோள் காட்டும் துணிவும் மனுஷ்யபுத்திரன் கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் மேற்கோள் காட்டியதும் ஆச்சரியமானவை. வழக்கமான மதநம்பிக்கை கொண்ட பழைய மனிதர்களுக்குத் திகைப்பாக இருந்திருக்கும். ஆனால் அங்கே அத்தனைபேரும் அதை மிகவும் ரசித்ததைத்தான் கண்டேன். என்னுடைய கிறிஸ்து ஆல்ஃப்ரட் சுவைஸரின் கிறிஸ்து, கிறிஸ்து என் ஞானகுரு என்று நீங்கள் சொன்னபோது எழுந்த கைத்தட்டலை நினைவுகொள்கிறேன்.

 

ஆனால் ஒரு கேள்வி. பைபிள் உங்களுக்கு முக்கியமான நூல் என்றீர்கள். பௌத்தம் குறிப்பிடுகிறீர்கள். ஒரு நூலாக குரானைச் சொல்வதே இல்லை. குரானின் கலியோகிராஃபிக்கலை மட்டுமே உங்களைக் கவர்ந்ததாகச் சொன்னிர்கள். நான் உங்கள் தளத்தில் வாசித்தபோது குரான் உங்களுக்கு தத்துவார்த்தமாக ஒன்றும் அளிக்கவில்லை என்று எழுதியிருந்தீர்கள். புரிந்துகொள்ளமுடிகிறது

செந்தில்குமார்

 

IMG_20151209_182702_1449665928761
அன்புள்ள ஜெமோ சார்

அருமையான உரைகள். ஒவ்வொரு உரைக்கும் ஒரு தெளிவான திட்டம் இருந்தது. முன்னரே நன்றாக எழுதித்தயாரித்து வந்து எக்ஸ்டெம்போர் ஆக பேசிக்கொண்டு சென்றீர்கள். உங்களுடைய உணர்ச்சிகரமான குரல் அதற்கு நன்றாகவே வருகிறது. இரண்டாம் நாள் உரையும் நான்காம் நாள் உரையும் கிளாஸிக் உரைகள்.

உரைநடுவே வரும் அற்புதமான சொல்லாட்சிகளும் கவிதைபோன்ற வரிகளும்தான் ஆச்சரியமானவை. தென்னையில் வளையம் போல மூப்பு என்பதைப்போன்ற வரிகளெல்லாம் அப்படியே இயல்பாக வருபவை என நினைக்கிறேன். கண்ணனைப்பற்றிய வரிகள் எல்லாம் கவித்துவமானவை. அதேபோல இயற்கைபற்றிய வரிகள். சிந்திக்காமலே வருபவை.

நீங்கள் இதையெல்லாம் எழுதலாம். ஆனால் நேரடியாக இதையெல்லாம் கேட்கும்போது பெரிய மனநிறைவு ஏற்படுகிறது. நம்மோடு நம் எழுத்தாளர் நேரடியாகப்பேசுவதுபோல. கீதையை வெற்றுப்பக்தி, சடங்குகள், சாதிப்பேச்சுகளிலிருந்தெல்லாம் மீட்டு மடி ஆசாரமெல்லாம் இல்லாமலாக்கி ஒரு மாடர்ன் தத்துவ நூலாகவும் இந்த நூற்றாண்டுக்கும் தலைமுறைக்கும் சொந்தமான ஆன்மீக நூலாகவும் காட்டிவிட்டீர்கள். ஒரு பெரிய பேச்சாளருக்குரிய ஆர்ப்பாட்டமான மொழியோ தோரணையோ இல்லாமல் ஆத்மார்த்தமான பேச்சாக இருந்ததனால்தான் இதெல்லாம் நடந்தது.
செந்தில்

முந்தைய கட்டுரைவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…
அடுத்த கட்டுரைகீதை உரை-கடிதம் 5