கீதை- கடிதங்கள் 3

IMG_20151209_200236_1449675967174

 

 

அன்புள்ள ஜெ,

கீதை உரை அருமையாக இருக்கிறது. கீதையின் வரலாற்று தகவல்களையும், கீதையை நாம் எப்படி அணுகவேண்டும் என்றும் மிக தெளிவாக சொல்கிறீர்கள். விரிவாக எழுதாமல் ஒற்றை வரியில் எழுதுவதற்கு மன்னிக்கவும்.

கீதையின் இரண்டாம் உரை கேட்டேன். காந்தியை பற்றிய சிறு குறிப்பு தரும் போது, முள்ளின் மீதும் மலத்தின் மீதும் அன்பை சுமந்து சென்றார் என்று சொல்லுமிடத்தில்.கண் கலங்கிவிட்டது.

நன்றி!

அன்புடன்,

ஹரீஷ்

 

IMG_20151209_200538_1449675948638

அன்பு ஜெ

இன்று உங்கள் உரை அருமை :)

எனினும் பேருரையை கேட்க வந்தவர்கள் உங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கும் விதமாக உங்களின் ஆகச் சிறந்த படைப்பை (ஏழாம் உலகம், வெண்முரசு) ஆர்வத்துடன் வாசிக்க முயற்சி செய்வதையே வெற்றி என்பேன்.

இதற்கு ஒரு சுய நலமான காரணம் உண்டு. நான் சார்ந்திருக்கும் கோவை சமூகத்தில், நாயக்கர் கவுண்டர் என்ற அடையாளங்களை களைய ஓரிருவரேனும் முயற்சி செய்து பிரம்மத்தின் ஒரு பகுதியாக யாவரையும் சமமாக பாவிப்பதையே கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடக்கும் தொடர் சொற்பொழிவுகளின் பயன் என்று கருதுகிறேன்.

அதுவன்றி சுத்தமான சாதியெனும் நெய்யினால் வறுத்தெடுக்கப்பட்ட கோவை மக்களின் சக்கரையின் அளவு கட்டுகடங்காமல் சென்று கொண்டிருப்பது ஆரோக்கியத்தின் கேடு.

உரை முடிந்து வெளி வரும் போது நாண் ஏற்றப்பட்ட வில்லனெ ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பார்கள் என்பதில் ஐயமே இல்லை.

நடக்க மிகுந்த சிரமம் பட்ட ஒரு  முதியவர் உங்கள் உரையை “என்ன ஒரு சொல்லாட்சி” என்று வியந்தார் பாருங்க எனக்கு உங்கள் சொல்முகம் கட்டுரை தொகுப்பின் முன்னுரை ஞாபகம் வந்தது.

செயலூக்கத்தின் மொத்த வடிவான ஆசானுக்கு வணக்கங்கள்.

நன்றியுடன்
கெளரிஷ்

IMG_20151209_182610

அன்புள்ள ஜெயமோகன் சார்
வணக்கம். மூன்றாம் நாள் கீதை உரை கிக்கானி பள்ளியில்  கேட்டேன்.
கீதையை வரிக்கு வரி அணுகி பயில்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாமே தவிர, படித்து  உணர்வதற்கு ஒரு தருணம் வாய்க்க வேண்டும். அது கீதா முகூர்த்தம் என்று சொல்கிறீர்கள். என்னளவில் எந்தவொரு எழுத்தையும் படித்துணர  அந்நூல் சார்ந்த முகூர்த்தம் வேண்டும் எனக் கருதுகிறேன். அது விஷ்ணுபுர  முகூர்த்தமாகவோ போரும் வாழ்வும் முகூர்த்தமாகவோ குற்றமும் தண்டனையும் முகூர்த்தமாகவோ இருக்கும் என நினைக்கிறேன். 1998ல் சுமார் 50 பக்கம் படித்து  விட்டுவிட்ட பின்னர் தற்போது ஸ்ரீ பாதம் படித்து நிற்பது வரை அதை முழுவதும் படித்து முடிக்க முகூர்த்தம் வாய்க்கவில்லை.ரஸ்கொல்னிகொவ் தாயிடமிருந்து வந்த கடிதத்திற்கு மேல் செல்ல சமயம் வாய்க்கவில்லை. போரும் வாழ்வும் உள்ளே செல்லவே முடியவில்லை.
கீதையை பொறுத்த வரை, அதை மிகச் சரியான முறையில் அணுக  தங்கள் வாழ்வில் நிகழ்ந்த தாங்கா துயரம் கொண்ட தருணம் போல் எல்லோருக்கும் வருவதில்லை. அப்படி எனில் வாழ்வில் துயருறு தருணம் அமையப்  பெறாத அல்லது அப்படி ஒன்று நிகழும்  வரையில் அதை படித்துணர வேறு வழி இல்லையா?
 இலக்கியம்,  தத்துவம் இரண்டும் இரு துருவங்கள். இரண்டும்  நெருங்கி வர எடுக்கும் முயற்சி பேரிலக்கியங்களில் நிகழ்கிறது. அவை  காட்டும் வாழ்வு இலக்கியத்தையும் தத்துவத்தையும் நெருங்கி வரச் செய்கிறது எனில்  பேரிலக்கியங்களால்  ஏற்படும் மன விரிவாலும்  நுணுகி சென்று ஆழ் மனதை தொட்டு துயருரச் செய்யும் தருணத்தாலும்  அதன் வழி நிகழும் கண்ணீரை பின் தொடர்தல் மூலமும் தூய ஞானம் தரும் கீதையை படித்துணர முயற்சி செய்யலாமா?
க. ரகுநாதன்
ஊத்துக்குளி, திருப்பூர்.
IMG_20151209_182702_1449665874251

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு

நேற்றும் இன்றும் கோவையில் கீதைப் பேருரை கேட்டேன். குறிப்பெடுத்து வீட்டிற்கு வந்து 75 வயது ஆகும் என் தந்தையிடம் படித்துக்காட்டி, மெய்சிலிர்த்தோம். சொற்களின் உச்சம். அதுவும் பரமேஷ்டி பிரஜாபதியின் சிருஷ்டி கீதத்தின் மொழிபெயர்ப்பு. அடடா. அம்மொழிபெயர்ப்பின் சுட்டியை தயவு செய்து பகிரவும்

 

‘முழுதும் ஆராய்ந்து உன் விருப்பம் போல் செய் ‘ என்று (18.63 ல்) சொன்னவர் ‘எல்லாவற்றையும் துறந்து என்னைச் சரண் அடைவாய்’ என (18.66) சொல்கிறாரே என்ற முரண் ஐயம் உண்மையில் நேற்றே வந்தது. அதுவும் 3 பாடல் இடைவெளியில். மிக வேகமான முரணியக்கம் போலும். ஆனால் தாங்கள் சொல்வது போல், ஒற்றைப்படையாக பார்க்காமல், கீதா முகூர்த்தத்திற்கு காத்திருக்க வேண்டியது தான். அதை முயற்சியால் விரைவு படுத்த முடியுமா? தெரியவில்லை.

 

“உன் ஆன்மாவை நீயே உயர்த்திக்கொள்; மனம் அடங்காது தான்; ஆனால் பயிற்சியாலும், பாராமுகத்தாலும் இதைக்கட்டுப்படுத்தலாம்; இவ்வறத்தில் சொற்ப முயற்சியும் மாபெரும் பயத்திலிருந்து காக்கும்; சமநிலையே யோகம்; செயல்திறனே யோகம்; “ என்றிவ்வாறான பல உச்சங்களை வைத்துக்கொண்டே வாழ்வின் இக்கட்டுகளைக் கடந்து வந்திருக்கிறது நம் தொன்மரபு. தலைவனாக, இறைவனாகக் கண்ட கீதாசாரியனை மார்க்சிய நோக்கில் காண வைத்தீர்.   இதற்கு முன், இப்போக்கில் எவரேனும் முயன்றுள்ளார்களா அறியோம்.

தம்மை அருகிருந்து கண்டேன். எனினும் பேச ஒரு தயக்கம். வெண்முரசுடன் போர் புரிந்து, விலகலும் ஈர்ப்புமாக கழித்து வருகிறேன். சிருங்கார ரசம் அச்சத்தை, விலகலை அளிக்கிறது. மொழியின் மயக்கம் ஈர்க்கிறது. பேசாமல் சித்பவானந்தரால் மடைமாற்றப்பட்டிருந்தால் ராமகிருஷ்ண இயக்கத்திற்கு இன்னும் ஒரு ஸ்வாமி ரங்கநாதானந்தா  அல்லது மகான்மஹராஜ் கிடைத்திருப்பாரோ? (அஜிதன், அம்மையார் மன்னிக்கவும்)

இந்த வில் எதற்காக நாண் ஏற்றப்பட்டிருக்கிறதோ யார் அறிவார்? ஆனால் , எதற்கு credit எல்லாம்? நம்மாழ்வாருக்கு நன்றி சொல்லாத கம்பர் போல, தெளிவு உங்கள் மூலம் ஊற்றெடுப்பதற்கு, பிரம்மாண்டத்திற்கு நன்றி சொல்வோம். உங்கள் ஆளுமையையோ, அல்லது அடைந்த உச்சங்களையோ புரிந்து கொள்ள காலம் அதிகமானால் என்ன? எல்லா விற்களும் எதற்காகவோ கட்டப்பட்டுள்ள இந்த குவாண்டம் விளையாட்டில் இன்புறுவோம்

பதிவிடாவிடினும்  பதிலிடவும்;

 

அன்புடன்

ராகவேந்திரன் ஆர்

கோவை

 

முந்தைய கட்டுரைதேவதச்சனின் கலைக்கூடம்-வேணுகோபால் தயாநிதி-
அடுத்த கட்டுரைவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…