பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
நீங்கள் தற்சமயம் கோவையில் கீதைப்பேருரை ஆற்றி வருவதை வலைத்தளத்தின் மூலம் அறிந்தேன்.நேரில் வந்து கேட்பதற்கு பொருளாதார வசதியும்,சூழ்நிலையும் இடம் கொடுக்கவில்லை.உங்களின் எழுத்துக்களை சமீபகாலங்களாக வலைத்தளத்தில் படிப்பதே மற்றவர்களின் தயவினால்தான்.உங்களிடம் ஒரு வேண்டுகோள் சமீப காலங்களாக உங்களின் சொற்பொழிவுகள் எல்லாம் -கனடா,அமெரிக்காவில் ஆற்றியது உட்பட- “ஒலி” வடிவத்தில் தான் தங்கள் தளத்தில் வருகிறது,இதன் உரைநடை வடிவத்தை (கீதைப்பேருரை உட்பட) கொடுத்தால் மிகுந்த வசதியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.சற்று பரிசீலிக்கவும்.
நன்றி.
அன்புடன்,
அ .சேஷகிரி
அன்புள்ள சேஷகிரி
உரைக்கும் எழுத்துவடிவுக்கும் நிறையவேறுபாடுண்டு. எழுத்துவடிவம் உரையைவிட செறிவானது. உரை தன்னிச்சையானது, உணர்ச்சிகரமானது. அதில் தகவல்கள் நினைவுக்கு வரும் வரிசையில் உள்ளன. கட்டுரையில் அவை சீரான அடுக்கில் இருக்கும்.
கட்டுரையின் செறிவும் தகவல்சார் துல்லியமும் உரையில் இருக்காது. உரையில் உள்ள ஒழுக்கும் உணர்ச்சிகரமும் தனிப்பட்ட முறையில் நேரில் பேசுவதுபோன்ற உணர்வும் கட்டுரையில் இருக்காது. வெவ்வேறு வகையான அனுபவங்கள் அவை. கீதை பற்றி நான் பேசுவதை எல்லாம் நூல்களாக எழுதவும் போகிறேன்.
ஜெ