«

»


Print this Post

மழை கடிதங்கள்- 3


1

இனிய ஜெயம்,

நேற்றைய இரவு நிலவரப்படி, கடலூருக்கு உபரியாகவே நிவாரணப் பொருட்கள் வந்து குவிந்திருக்கிறது. இதில் ஒரு சின்ன சிக்கல். உடைகள் அதிகமாக குவிந்திருக்கிறது.  காய் கறிகள் வேறு சில அத்தியாவசிய பொருட்கள் இன்னும் குறைபாடாகவே இருக்கிறது.

இடதுசாரி தோழர்கள் களமிறங்கி அனைத்தையும் வகை பிரித்து தனித் தனியாக அனைவருக்கும் கிட்டத்தட்ட எல்லாம் கிடைக்கும் வண்ணம்  பொட்டலம் கட்டி, சரியான வார்டுகளுக்கு ஒரு வீடு விட்டுவிடாமல் தன்னார்வலர்களைக் கொண்டு உதவிகளை கொண்டு சேர்க்கிறார்கள்.

கடலூர் மையத்தில் வள்ளி விலாஸ் திருமண மண்டபம் இஷா யோகா மையத்தின் இலவச மருத்துவ உதவி மையமாக செயல்பட்டு வருகிறது.

அனைத்துக்கும் மேல் நான் உங்களிடம் மட்டுமே பகிர இயன்ற ஒன்றுண்டு. எனது முஸ்லிம் தோழர்களின் அன்பு.  எனது கீழ்மை மேன்மை எது குறித்தும் கவலைப் படாமல் என் மேல் மூர்க்கமாக அன்பு செலுத்தும் நடுவீரப்பட்டு நஜீர் போல நிறைய முகமதிய நண்பர்கள் எனக்கு உண்டு.

அவர்களின் அதே அன்பின் மூர்க்கத்தை இங்கும் கண்டேன். நானறிந்து கடலூரின் அணைத்து முஸ்லிம் இளைஞ்சர்களும்  தங்கள் ஜாமாத் வழியே ஒருங்கிணைக்கப்பட்ட உதவியுடன் களத்தில் இரவு பகலாக நிற்கிறார்கள். நூறு நூறு கேந்தேல் சாகிப்கள்.

இதை எவனுக்கும் எதையும் நிரூபிக்க இவர்கள் இதை செய்யவில்லை. மனிதன் மனிதனுக்கு செய்து கொள்வது அவ்வளவே.  நேற்று டிசம்பர் ஆறு.  சாதிபெசும் மதம் பேசும் அரசியல் சுமடர்கள்  உள்ளே செத்து மடிய வேண்டிய நாள் இனி இது.

நேற்று கிள்ளை அருகே உதவி பொருட்களுடன் வந்த மதுரை நண்பர்கள் சூறையாடப் பட்டிருக்கிறார்கள். அவர்கின் செல்பேசி பணம் வரை சூறை நடந்திருக்கிறது.  கல்லூரி இளைஞ்சர்கள். பயமும் வெட்கமுமாக சாலை மையத்தில் நின்று அழுதார்கள். இடது சாரி நண்பர்களும், டாக்சி ஓட்டுனர்களும் அவர்களை மீட்டு வழி அனுப்பி வைத்தார்கள்.

கடலூர் சீனு ஆகிய நான்,இந்த ஊரின் உப்புக் காற்றை, நெல் மணியை செரித்து வளர்ந்தவன். ஜெயகாந்தன் நின்று நடந்த ஊரில் இருப்பவன்.  இங்கு நிகழ்ந்த அணைத்து மேன்மைகளிலும் ஒரு பங்கு என்னை சமைத்திருக்கிறது. இங்கு நிகழும் எல்ல்மை அனைத்திளிலும் பாவத்தின் ஒரு பங்கு என்னை சேர்க்கிறது.

கடலூரில் இருந்து மனம் கசந்து வெளியேறும் நண்பர்கள் அனைவரையும் எம் மக்கள் சார்பில் பாதம் தொட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்

கடலூர் சீனு

அன்புள்ள ஜெ

கடலூர் வட்டாரங்களில் நிவாரணப்பொருட்களை கட்சிக்காரர்கள் சூறையாடுவதை நினைக்கையில் ரத்தம் கொதிக்கிறது. நாங்கள் நிவாரணப்பொருட்களுடன் சென்றபோதும் டயர்களை சாலையில் போட்டு வழிமறித்தார்கள். நாங்கள் டிரைவரின் சமயொசிதத்தால் தப்பினோம்.

ஆனால் வழியிலேயே தன்னார்வக்குழு உறுப்பினராகச் சென்ற இளைஞர்களை கண்டோம். அவர்களிடம் அடித்துப்பிடுங்கியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் அடித்துப்பிடுங்கியவர்கள் அதிமுகவினர். முக்கியமான பொருட்களை எடுத்துவிட்டு பிஸ்கட் போன்றவற்றை கட்சி லேபில் ஒட்டி அம்மா கொடுத்தனுப்பியதாகச்சொல்லி கொடுத்தார்கள். அம்மாவுக்கு வாழ்த்துகோஷம் போடுபவர்களுக்கு மட்டுமே கொடுத்தார்கள்.

இப்போது பமக காரர்களும் இந்த அராஜகத்தைச் செய்கிறார்கள். பல ஊர்கள் பமக கோட்டை. அவர்களின் சாதி. அந்தச்சதியை பிறர் அணுகவே கூடாது என நினைக்கிறார்கள். அந்த மக்களும் கட்சிக்கார்களிடம் கொடுங்கள் இல்லாவிட்டால் பிரச்சினை என்கிறார்கள். தமிழகத்தில் இந்த அளவுக்கு ஒரு அராஜகம் இதற்கு முன்னால் நடந்ததே இல்லை. நாங்கள் சிபிஎம் தோழர்களைக்கூட்டிக்கொன்டு சென்றோம். வாய்த்தகராறு. ஆனால் செய்துமுடித்தோம்.

நிறையபேர் மனம் கசந்து எவ்ளியேறுகிறார்கள். குறிப்பாக வடைந்தியர்கள். அவர்களை மார்வாடிகள் சேட்டுக்கள் என்றெல்லாம் கேவலமாகத் த்டிட்டுகிறார்கள். அவர்களைப்பற்றி பமக டிவியில் கேவலமாக ஏற்கனவே காட்டியிருந்தார்கள் என்பதுதான் காரணம்.

அரசாங்கம் என்பதே கண்ணுக்குப்படவில்லை. ஒருபக்கம் மொத்த இந்தியாவுமே மனம் கனிந்து கைநீட்டுகிறது. உதவிக்கு வருகிறது. மறுபக்கம் இந்த மாஃபியாக்கும்பல்களிரன்டும் இந்த நாட்டையே அடகுப்பொருளாக பணயக்கைதிகளாக வைத்திருக்கிறார்கள். கொடுமை

கணேஷ்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/81641