மழை கடிதங்கள்- 2

1

இனிய ஜெயம்,

சாதி, கட்சி, ஏழை, பணக்காரன் அனைவரும் கூடி பாகுபாடின்றி வரும் நிவாரணப் பொருட்களை நகருக்கே வெளியேலேயே கொள்ளை அடிக்கிறார்கள்.

ஒரு நிவாரண வண்டியை[வழியில் கட்டையை போட்டு பஞ்சர் ஆக்கி] டிரைவர், நிவாரண பணியாளரை வீட்டில் வைத்து பூட்டி விட்டு, அனைத்தையும் கொள்ளை அடித்து சென்று விட்டனர்.

இதில் மின்சார ஊழியர், அரசு வாத்தி போன்ற ஈனப் பிறவிகளும் அடங்குவர். நிவாரணப் பொருட்கள் வந்து தாங்கும் மண்டபங்களுக்கு யாதொரு பாதுகாப்பும் இல்லை.

நிவாரண உதவிகள் புரிய வரும் தன்னார்வ நண்பர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

இது தற்போதைய நிலவரம்.

கடலூர் சீனு

*

*
குருஜி சவுந்தர் தயாரித்த செய்திருந்த உணவுப் பொட்டலங்கள், பிஸ்கெட்டுகள், பழங்கள் ஆகியவற்றை தேவையானவர்களுக்கு வினியோகம் செய்துவிட்டு, பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் நண்பர்களையும், நண்பர்களின் நண்பர்களையும் சந்திதுவிட்டு, காலையிலிருந்து சுற்றிவிட்டு இப்ப்போது தான் திரும்பியிருக்கிறோம்.

சில நாட்களுக்கு முன் நான் எழுதிவைத்தது இது

http://www.velavanam.com/2015/12/ChennaiFlooding1.html

சுரேஷ் பாபு

ஜெ,

முதல்முறையாக தமிழகத்தில் சமூக ஊடகம் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதை என் கண் முன் கண்டு கொண்டிருக்கிறேன். உமாமகேஸ்வரன் போன்ற என் நண்பர்கள் ஐம்பது மணிநேரத்திற்கு மேலாக மக்களுக்கு உதவி கொண்டிருக்கிறார்கள். நேற்று நீயா நானா அந்தோணியிடம் பேசிக்கொண்டிருந்தேன். நகரம் எப்படி உயிர்ப்புடன் இருக்கிறது என பேசிக்கொண்டிருந்தார். எனது உறவினர்கள், நம் நண்பர்கள் என பலரிடமும் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் அளிக்கும் நகரத்தின் சித்திரமே வேறு.

அச்சம், வெறுப்பு, அன்பு ஆகிய மூன்று உணர்வுகள் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் மையங்கள். சென்னையை பொறுத்தவரை அச்சம் ஒன்றிணைத்தாலும் அவர்களுக்கு அன்பின் கணங்கள் வாய்த்திருக்கின்றன.

சுநீல் கிருஷ்ணன்

*

ஜெமோ,

இதையெல்லாம் எழுத ஒரு தளம் இல்லை என்பதனால்தான் உங்களுக்கு எழுதுகிறேன். ஏனென்றால் இது என்றைக்கும் இருந்துகொண்டிருக்கும். சுனாமி காலகட்டத்தில் நீங்கள் எழுதிய குறிப்புகள் இன்றைக்கு எடுத்துவாசிக்கத்தக்கவையாக இருக்கின்றன. அவை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இன்றைக்கும் நடக்கின்றன

சுனாமி பேரழிவும், பேரழிவின் அரசியலும்

சுனாமி மீட்சியின் இதிகாசம்

இந்த வெள்ளப்பேரழிவில் இதுவரை தமிழகத்தை ஆண்ட இரு திராவிட அரசுகளுக்கும் முக்கியமான பங்குண்டு. அவர்கள் சென்னை நகரத்தையோ அல்லது பிறநகரங்களையோ எவ்வகையிலும் திட்டமிடவில்லை. சொல்லப்போனால் எந்தவகையான எதிர்காலத் திட்டமிடலும் எந்தத் தளத்திலும் நடக்கவில்லை. இலவசங்கள், மனமயக்குத்திட்டங்கள் வழியாகவே இதுவரை தமிழகத்தை ஆண்டார்கள். தமிழகம் தன்னிச்சையாக வளர்ந்தது. அவர்கள் அதில் லாபம் பார்த்தார்கள்.

பெரிய நகரங்கள் உப்பி வளர்வது உலகளாவிய போக்கு. அவற்றை முறையாகத் திட்டமிட்டு அமைக்காவிட்டால் இதைப்போன்ற சந்தர்ப்பங்களில் பேரழிவு உருவாகும். அகமதாபாத், ஹைதராபாத் இருநகரங்களும் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு திட்டமிட்டு செம்மையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் நகரங்கள் எல்லாமே மிகுதியான மக்கள்தொகை கொண்டவை என்பதனால் இது எளிதான வேலை இல்லை.

சென்னையில் செய்யப்பட்ட குளறுபடிகள் பல.

1. நீர்வழிகளை தூர்க்கவும் அடைக்கவும் விட்டது. சென்னையின் இரண்டுபெரிய வடிகால்கள் கூவமும் அடையாறும் இரண்டுமே முப்பதாண்டுக்காலமாக ஆக்ரமிப்பில் உள்ளன. குடிசைவாசிகள் முதல் கல்வித்தந்தைகள் வரை ஆக்ரமித்திருக்கிறார்கள்

2. புறநகர்களை கட்டுப்பாடில்லாமல் வளரவிட்டது. ஒருபகுதி அதிகமாக ஜனநெருக்கம் உள்ளதாக ஆகிறது என்றால் தெருக்கள் அந்த அளவுக்குப் பெரிதாக இருக்கவேண்டும். வீடுகள் நடுவே இடைவெளி வேண்டும் என்றெல்லாம் சட்டங்கள் உள்ளன. எதுவுமே பாலிக்கப்படவில்லை

3 ஏரிகள் நீர்நிலைகளை சட்டவிரோதமாக ஆக்ரமிக்க அனுமதித்தது

4 பல பத்தாண்டுகளாக குப்பைகளை முழுமையாக அகற்றாமல் ஆங்காங்கே கண்ணுக்குத்தெரியாத இடங்களில் குவித்தது. பெரும்பாலும் வடிகால்பகுதிகளில். அவை மழையில் பெருகி நீர்வழிகளை அடைத்தன.

5 இத்தனை மக்கள் வாழும் நகரில் சாக்கடைவசதியைப்பற்றிக் கவலையே படாமலிருந்தது. இருந்த சாக்கடைவழிகள்கூட ஆக்ரமிப்பால் அழிந்தன

இதன்விளைவாக இந்த அழிவு. இதில் திமுக, அதிமுக இருசாராரும் பேராசைபிடித்த அதிகாரிகளும் பொறுப்பு.மாறிமாறி அவர்களுக்கு ஓட்டுபோட்டவர்கள் மறைமுகப்பொறுப்பு

மேலதிகமாக அதிமுக அரசின் முழுமையான செயலின்மை ஒரு காரணம். இந்த அரசு சென்ற நான்காண்டுகளாக அனேகமாக செயல்படவே இல்லை. மக்கள் அணுகக்கூடிய பொறுப்பான எவருமே இல்லை. எவருக்கும் அதிகாரம் இல்லை. அதிகாரம் உள்ளவர்களை அணுகவே முடியவில்லை. ஆகவே எதிலுமே எந்த வகையான நிர்வாகமும் இல்லை.

விளைவாகவே இந்த அழிவுகள். மழை எச்சரிக்கை வந்ததுமே என்னென்ன செய்திருக்கலாம், எதைச்செய்யாமல் விட்டார்கள் என்று பார்ப்போம்

1 முதலில் மழையைச் சந்திப்பதற்காக ஒரு கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து அதற்குப்பொறுப்பான அதிகாரிகளையும் அமைச்சர்களையும் அமர்ந்த்தி அவர்கள் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க வைத்திருக்கலாம்.

2 எந்தெந்த பகுதிகள் தாழ்வானவை என முன்னரே அறிவித்திருக்கலாம். ஏனென்றால் தங்கள் பகுதி தாழ்வானது என மக்களுக்கு எப்படித்தெரியும்?

3 தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேறும்படி ஆணையிடும்போது அவர்கள் செல்வதற்கு சில மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். தங்குமிடங்கள், வாகன வசதிகள். பணம்கூட செலவழித்திருக்க வேண்டாம்.இடங்களை அறிவித்திருந்தாலே போதும்

4 புகார்களைப் பெறுவதற்கான இடங்களை முன்னரே அறிவித்திருக்கலாம்

5 நகரை சில பகுதிகளாகப்பிரிந்த்து நிவாரணப்பணிகளை அந்தந்த பகுதிகளுக்கு ஒருங்கிணைக்கவேண்டியவர்களை நியமித்து அவர்களை கட்டுப்படுத்தியிருக்கலாம்

6 மக்கள் வெளியேறும் இடங்கள் காவல்துறை கண்காணிப்பில் கொண்டுவந்து பொருட்களுக்கு பாதுகாப்பு என அறிவித்திருக்கலாம்.

எதையுமே செய்யவில்லை. அரசே இல்லாத நிலை. அதிகாரிகளுக்கு எதைச்செய்யவும் பயம். ஆகவே மக்கள் தாங்களே தங்கள் பாட்டை பார்த்துக்கொண்டார்கள்.

எந்த ஒருங்கிணைப்பும் இல்லாததனால் கூவம் அடையாறு முகத்துவாரங்களில் மணல்மேடுகளை பொக்லைன் வைத்து அள்ளாமல் ஏரிகளைத் திறந்துவிட்டார்கள். ஏரிகளை திறப்பவர்களுக்கும் கடலோரக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் தொடர்பே இல்லை. இத்தனை பெரிய அழிவு வந்தது நீர் கடலுக்குள் போகமுடியாததனால்தான்

ஆளும்கட்சிக்காரர்கள், கார்ப்பரேஷன் ஊழியர்கள் பண்ணும் அராஜகம். கட்சிக்காரர்கள் நிவாரணப்பொருட்களை பிடுங்கி தாங்களே கட்சிசார்பில் வினியோகிக்க மிரட்டுகிறார்கள். கொள்ளைக்கூட்டத்தை பயப்படுவது போல இவர்களை பயப்படவேண்டியிருக்கிறது.கார்ப்பரேஷன் ஊழியர்கள் ஒரு தெருவுக்கு வர பணம் கேட்கிறார்கள்.

கடைசியாக பதுக்கல். ஒரு லிட்டர் பாலை நூறுரூபாய்க்கு விற்கிறார்கள் மளிகைக்கடை அண்ணாச்சிகள். ஒருவர் கூட கைதாகவில்லை. பத்துபேரை உள்ளேதள்ளியிருந்தால் கொஞ்சம் பயப்பட்டிருப்பார்கள்.

சுவாமிநாதன்

  • குறிச்சொற்கள்
  • மழை
முந்தைய கட்டுரைதேவதச்சன் என்னும் பெண்கவிஞர்
அடுத்த கட்டுரைஇன்று முதல் கீதை உரை