மழை- கடிதங்கள்

1

ஜெ

மொத்தம் நாற்பத்தி எட்டே மணி நேரம், அறுபத்தி ஐந்து விழுக்காடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மருந்து பாதுகாப்பு அடுத்த இரண்டு நாட்களுக்கு தயாரகி விட்டது.

சுனாமி, தானே என அப்போது வந்த மனிதர்கள் யாவரும் இப்போதும் குழுமி விட்டனர். மக்கள் கடந்த இரு இடர்களில் கற்ற பாடத்தில் இயல்பாக எங்கெங்கு முகாம் வசதிகள் வழக்கமாக செய்யப்படுமோ அங்கே இயல்பாக வந்து சேர்ந்து விட்டனர்,

புதிதாக எங்கும் உதவி பணியில் வடநாட்டு இளைஞர்கள் இறங்கி அடிக்கிறார்கள். ஒரு நண்பர் குழு வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் உதவியில் சிதம்பரம் அருகே வல்லம்படுகை எனும் கிராமத்தையே தத்தெடுக்க விரைந்து கொண்டிருக்கிறது.

இங்கே ஒரு மோசமான குணம் இங்கே எவரும் யாரும் எதை கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள். தனது பக்கத்து வீடு தத்தளிக்க மாடி வீட்டுக் காரன் எந்த கூச்சமும் இல்லாமல் வரிசையில் நின்று நிவாரணப் பொருளுக்கு முந்துகிறான். தமிழ்நாட்டு குணம்.

நான் நண்பர்கள் உதவியுடன் யாருக்கு மிக சரியாக உதவி சென்று சேர வேண்டுமோ அங்கு உதவி செல்ல ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறோம். மதியம் மன நிலை பாதிக்கப்பட்டு முப்பது பேர் வரை தங்கி இருக்கும் தர்க்காவுக்கு உணவு உடை தர ஏற்பாடு ஆகிக் கொண்டு இருக்கிறது.

இன்னும் முக்கிய உதவி தேவைப் படும் இல்லங்களை நண்பர்கள் கணக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகம் எங்கும் இருந்து வரும் நிவாரண பொருட்களை உரிய ஓரிடத்தில் சேர்த்து உரிய இடம் நோக்கி பிரித்து அனுப்பும் பணியும் நடக்கிறது. கடலூர், சிதம்பரம், விழுப்புரம் மூன்று நகர எல்லையிலும் ஆயிரம் பேர் வரை தாங்கும் முகாம் அமைத்து உணவு வசதி நடைபெறுகிறது.

கடலூரில் மின்சாரம் அரிசி பால் மருத்துவமனை அனைத்தும் இருபத்து நாலு மணி நேரமும் இயங்கும்.

சைலேந்திர பாபு தனிப்பட்ட முறையில் நண்பர்கள் குழுவுடன் களமிறங்கி அனைத்தையும் ஒருங்கு செய்கிறார். ககன்தீப் சிங் பேடி ஒரு குழுவுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் உள்ளார்.

அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என செய்தி உலவுவதால் கிட்டத்தட்ட அனைவரும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

இதுதான் இன்றைய நிலை.

அப்புறம் ரணகளத்திலும் ஒரு குதூகலம்.

தமிழகம் எங்கும் வந்து குவிந்த நிவாரண பொருட்கள் கலக்டர் ஆபிசில் சேகரிக்கப்பட்டு. முறையாக விநியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பையிலும் துரித கதியில் அம்மா புகைப்படம் ஒட்டப்பட்டு கொண்டு இருக்கிறது.

அம்மாவின் தாயுள்ளத்துக்கு நன்றி

கடலூர் சீனு

*

அன்புள்ள ஜெ

கடந்த சிலநாட்களாக கடலூர் வட்டாரத்தில் நான் சார்ந்துள்ள சேவை அமைப்பு வழியாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். மகிழ்ச்சிக்கும் வருத்தத்திற்கும் உரிய விஷயங்கள் உள்ளன. மகிழ்ச்சி என்பது ஏராளமாக வந்து குவியும் உதவிகள். தமிழகத்தைவிட தமிழகத்திற்கு வெளியில் இருந்து வந்த நிதியுதவியும் பொருளுதவியும் சேவையாளர்களும்தான் அதிகம். இளைஞர்களின் அர்ப்பணிப்பும் பணியும் மகிழ்ச்சியளிக்கின்றன

வருத்தம் என்னவென்றால் கட்சிக்காரர்களின் போக்கு. அதிகாரிகளின் போக்கு. அதிமுக கட்சியினர் இந்தச்சந்தர்ப்பத்தில் நடந்துகொள்ளும் முறை சுனாமியில் பிணங்களை அகற்றவிடாமல் வம்புசெய்த பரிமிய ராணுவத்துக்குச் சமானமானது. எங்கே போனாலும் ஊர்த்தலைவர் பஞ்சாயத்துத்தலைவர் வார்டு மெம்பர் என்று சிலபேர் வந்து நிவாரணப்பொருட்களை எங்களிடம் தந்துவிடுங்கள் என்று சொல்லி வம்புசெய்கிறார்கள். பெரும்பாலும் பிடுங்கிக்கொண்டு அவற்றில் உள்ள விலைமதிப்பு மிக்கவற்றை எடுத்துக்கொள்கிறார்கள்.

மக்கள் அன்பளிப்பாகக் கொடுக்கும் பொருட்கள் மேல் ஆளும்கட்சிசார்பில் லேபில் ஒட்டி கட்சித்தலைவர் படம் ஒட்டி வினியோகம் செய்கிறார்கள். அதிலும் பயங்கர அரசியல். கோடிகோடியாக பணம் வைத்திருக்கும் அவர்கள் எதையுமே செய்வதில்லை. தேவையானவர்களும் தேவையற்றவர்களும் வந்து முட்டிமோதி வாங்கிக்கொள்கிறார்கள். பாதிக்கப்படாதவர்களும் வாங்கிக்கொள்ளமுட்டிமோதுகிறார்கள். வடநாட்டிலிருந்து வந்திருக்கும் பால், கோதுமை, போர்வைகள் எல்லாவற்றிலும் சிவகாசியில் அடித்து கொண்டுவந்து இறக்கப்பட்ட லேபில்களை அதிகாரிகளும் கட்சிக்காரர்களும் செர்ந்து ஒட்டி கொடுக்கிறார்கள். இன்றுவரை அரசு சார்பில் பத்துபைசாவுக்குக்கூட நிவாரணப்பணியோ பணமோ வரவில்லை என்பதுதான் உண்மை. எந்த அதிகாரியும் எதையுமே செய்வதில்லை. ஆர்டர் இல்லை என்றுதான் பதில்.கடைமட்ட ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் வேலைபார்க்கிறார்கள்.

மொத்தத்தில் நம்முடைய சமூகம் எந்த அளவுக்கு ஊழலுக்குப்பழகிப்போய் அழுகியிருக்கிறது என்பதைத்தான் பார்க்கிறேன். இபப்டி நிவாரணப்பொருட்களை ஆளும்கட்சி பிடுங்கிக்கொள்வதும் ஆளும்கட்சியும் அரசும் எதையுமே செய்யாமல் பிறர் செய்வதை தாங்கள் லேபில் ஒட்டுவதும் மக்களுக்கும் தெரிகிறது. ஆனால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்று மட்டுமே பார்க்கிறார்கள். அடுத்த தேர்தலில் இதெல்லாம் எதிரொலிக்கும் என்றால்தானே கட்சிக்காரர்கள் பயப்படுவார்கள். அடுத்த தேர்தலில் காசுவாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டுவிடுவரகள் என்பதனால் கட்சிக்காரர்கள் வெளிப்படையாகவே செய்கிறார்கள். அத்தனை பேருக்கும் ஒரே கோரிக்கை. தயவுசெய்து எந்தப்பொருட்களையும் அரசிடமோ ஊர்த்தலைவர்கள் என்றெல்லாம் வருபவர்களிடமோ கொடுக்கவேண்டாம். நீங்களே நின்று கொடுத்துவிட்டு திரும்புங்கள்

ஜெயராமன்

அன்புள்ள ஜெ,

நேற்று சீனிவாசன் சார் வீட்டுக்குச் சென்றிருந்தேன். இந்த மழையின் மிகப்பெரிய சவாலை சந்தித்திருக்கிறார்கள், வீட்டிற்குள் இடுப்பளவுக்குத் தண்ணீர் வந்திருக்கிறது. மேல் தளம் இருந்ததால் அங்கு சென்று சமாளித்திருகிறார்கள்.

நாங்கள் சென்றபோது தண்ணீர் முழுவதும் வடிந்திருந்தது. அவரும் சுதா மாமியும் வழக்கம்போல உற்சாகமாக வரவேற்றார்கள். சவாலை சந்தித விதம்பற்றி மிக உற்சாகமாகவே பேசினார்கள். பக்கத்து வீட்டு மக்களுக்கும் மிக உதவியாய இருந்திருக்கிறார்கள்.

சில பொருட்களை மேலேற்றமுடிந்தாலும், கார் முழுவதும் மூழ்கியிருக்கிறது. பிரிட்ஜ் கூட.

நேற்று அந்த பகுதியில் மின்சாரம் மற்றும் செல்போன் சிக்னல் இல்லை. இன்று வந்திருக்கலாம்

அன்புடன்

சுரேஷ் பாபு

அன்புள்ள ஜெ சார்

சென்னையில் முழுக்கமுழுக்க நிவாரணப்பணிகளை தன்னார்வக்குழுக்கள்தான் செய்கிறார்கள். நானும் நண்பர்களும் நான்குநாட்கலாக இங்கேதான் இருக்கிறோம். உங்கள் மிஸ்டுகால் பார்த்தேன். கூப்பிடமுடியாத நிலை. கரெண்ட் இன்றுதான் வந்தது. இங்கே என்ன பிரச்சினை என்றால் நிர்வாகம் என்ற ஒன்று அறவே இல்லை என்பதுதான். இந்தமாதிரி வேலைகளை அரசுத்துறைகள்தான் ஒருங்கிணைக்க முடியும். அப்படி எவருமே இல்லை. ஆகவே சில இடங்களில் எவருமே எட்டிப்பார்க்கவில்லை. சில இடங்களில் சாப்பாடும் தண்ணியும் மிச்சமாகியது. சமூக வலைத்தளங்கள் மட்டும்தான் கோவார்டினேட் பண்ணினார்கள். அதுவும் இல்லை என்றால் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டதுதான். தன்னார்வக்குழுக்களும் தனிநபர்களும் இல்லாவிட்டால் இந்த நகரத்துக்கு  ஆளே இல்லை என்றுதான் ஆகியிருக்கும். இதுவரை இப்படி அரசாங்கமே இல்லாத நிலை வந்ததே இல்லை

விவேகானந்தன்

  • குறிச்சொற்கள்
  • மழை
முந்தைய கட்டுரைகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’
அடுத்த கட்டுரைதான்சானியா -ஒருகடிதம்