நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் என்ன வேறுபாடு? பழைய ஒரு நகைச்சுவை உண்டு. ஓட்டலில் சாப்பிடச்சென்றவர் கேட்கிறார் ‘தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?’ பரிமாறுபவர் பதில் சொல்கிறார், ‘கெட்டிச்சட்னி இருக்கிறது, துவையல் இருக்கிறது’
கேட்பவருக்கு கொஞ்சம் குழப்பம். ‘இரண்டுக்கும் நடுவே என்ன வேறுபாடு?’ பரிமாறுபவர் யதார்த்தமாகப் பதில் சொல்கிறார் ‘இரண்டு நாள் வேறுபாடு’
ஆம், நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு இரண்டாயிரம் வருடம்தான். நவீன இலக்கியத்தின் தலை இந்த நூற்றாண்டில் உள்ளது. வால் மரபிலக்கியத்தில் விழுந்து கிடக்கிறது. மரபிலக்கியத்தின் தலை ஈராயிரம் வருடம் முன்பு நம் வரலாற்றின் தொடக்கப்புள்ளியில் கிடக்கிறது. வால் இந்தக்காலத்தில் விழுந்து அசைந்துகொண்டிருக்கிறது. இரு பாம்புகளும் ஒன்றை ஒன்று விழுங்க முயல்கின்றன. ஒயாத ஒரு சுழல் உருவாகிறது.
வழக்கமாக நான் சந்திக்கும் ஒரு கொந்தளிப்பான குரல் ஒன்றுண்டு. ஒரு தேவதேவன் கவிதையை வாசித்துவிட்டு ஒரு பெரியவர் கேட்டார். ‘ஐயா நான் நாற்பதாண்டுக்காலமாக தமிழிலக்கியம் வாசிக்கிறேன். நற்றிணை முதல் பாரதிவரை கற்றிருக்கிறேன். எனக்கே இந்த கவிதை புரியவில்லை. அப்படியானால் இவை யாருக்காக எழுதப்படுகின்றன?’
இப்படி கேட்ட பெரியவரிடம் நான் சொன்னேன். ‘ஐயா நற்றிணையோ பாரதியோ படித்தால் புரிந்துகொள்ள முடியாத, தமிழே படிக்காத இந்த இளைஞருக்கு இந்தக்கவிதை எளிதாகப் புரிகிறதே, எப்படி என்று யோசித்தீர்களா? யோசித்தால் எது நவீன இலக்கியம் என்று எளிதில் புரிந்துகொள்ள முடியும்’
ஆனால் பெரியவர் அந்தக் கேள்வியைச் சந்திக்க தயாராக இருக்கவில்லை. மீண்டும் ‘எனக்கே புரியவில்லையே’ என்ற குரலை எழுப்பினார். நான் சொன்னேன், ‘ஐயா இப்போது சிக்கல் நவீன இலக்கியத்தை புரிந்துகொள்வதல்ல, உங்களைப் புரிந்துகொள்வதுதான்’
இலக்கியம் மொழியில் எழுதப்படுவதில்லை என்று சொன்னால் ஆச்சரியப்பட மாட்டீர்கள்தானே? தமிழ்க்கவிதை தமிழில் மட்டும் அமைந்திருந்தால் தமிழ் தெரிந்த அனைவருக்கும் அது புரிந்துவிடும் அல்லவா? ஓர் அகராதியை வைத்துக்கொண்டு அதை எவரும் புரிந்துகொள்ள முடியும் அல்லவா?
அப்படியானால் தமிழ்க்கவிதை எதில் அமைந்திருக்கிறது? தமிழ் மொழிக்குள் நுண்மையாக அமைந்துள்ள இன்னொரு குறியீட்டு மொழியில் அமைந்துள்ளது. அதை மீமொழி [meta language] என்று நவீன மொழியியலில் சொல்கிறார்கள். அது மொழியின் இரண்டாவது அடுக்கு. இப்படி பல அடுக்குகளை உருவாக்கிக்கொண்டுதான் எந்தமொழியும் செயல்பட முடியும். நம்மை அறியாமலேயே இப்படி பல அடுக்குகள் நம் மொழியில் உள்ளன.
மொழியையே குறியீட்டுஒழுங்கு [symbolic order] என்று மொழியியலாளர்கள் சொல்கிறார்கள். ஒர் ஒலிக்குறிப்பு ஒரு பொருளை அல்லது நிகழ்ச்சியை அல்லது உணர்ச்சியை சுட்டிக்காட்டுவதுதான் மொழியின் ஒழுங்கு இல்லையா? படி என்றதுமே உங்களுக்கு ஒரு பொருள் நினைவுக்கு வருகிறது. படி என்ற ஒலி அந்த பொருளுக்கான ஒலி அடையாளம். இறங்குதல் என்ற ஒலி ஒரு செயலுக்கான ஒலிக்குறியீடு.
இரண்டையும் இணைத்து படி இறங்குதல் என்று சொன்னால் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. இதுதான் மொழியின் செயல்பாட்டுக்கான அடிப்படை. இவ்வாறு நாம் மொழிக்குறியீடுகளை இணைத்து இணைத்து மொழி என்ற அமைப்பை விரிவாக்கிக்கொண்டே செல்கிறோம். இதைத்தான் பேச்சு என்றும் எழுத்து என்றும் சொல்கிறோம். இதையே மொழியின் முதல் குறியீட்டு ஒழுங்கு என்கிறோம்.
மொழிக்குள் இன்னொரு குறியீட்டு ஒழுங்கு இருக்க முடியும். படி என்ற பொருளையே இன்னொன்றுக்கு குறியீடாக ஆக்க முடியும் அல்லவா? அப்போது படி என்னும்போது அது அந்தபொருளைச் சுட்டிக்காட்டி கூடவே அந்தப்பொருள் எதற்கு குறியீடோ அதையும் சுட்டிக்காட்டுகிறது அல்லவா?
ஒரு கவிதையில் ‘படி இறங்குதல்’ என்று வந்தால் அது ஒரு வீழ்ச்சியை குறிக்கலாம். ஒரு தரம் இறங்குவதை குறிக்கலாம். இதற்கு இரண்டாம் கட்ட குறியீட்டு ஒழுங்கு என்று பெயர் [secondary symbolic order]. அது மொழிக்குள் செயல்படும் இன்னொரு மொழி. அதில்தான் இலக்கியம் எழுதப்படுகிறது. உங்களுக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் இலக்கியத்தை புரிந்துகொள்ள முடியாது. தமிழுக்குள் செயல்படும் அந்த இரண்டாவது தமிழை அறிந்திருந்தால் மட்டுமே இலக்கியம் புரிய ஆரம்பிக்கும்.
இது இன்றுள்ள இலக்கியத்திற்கு உள்ள விதி அல்ல, எப்போதும் இலக்கியத்தின் செயல்முறை இதுவே. இலக்கியத்துக்கான இந்த இரண்டாவது மொழியை இலக்கிய ஆசிரியர்களும் இலக்கியவாசகர்களும் சேர்ந்து உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு. அந்த இரண்டாவது மொழி அனைவருக்கும் பொதுவாக ஓரு பண்பாட்டுச்சூழலில் திரண்டு வந்தபடியே இருக்கிறது.
என் கண்களில்
இன்று இல்லை வாள்
என்ற புதுக்கவிதை வரி உங்களுக்கு புரிகிறதா? சிலர் புரியவில்லை என்று சொல்லக்கூடும். புதுக்கவிதை என்ற பேரில் சிலர் இப்படித்தான் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்று வசைபாடக்கூடும். மன்னிக்கவும் இது புதுக்கவிதை அல்ல. இது வெள்ளிவீதியாரின் குறுந்ததொகைப் பாடல்
கண்ணே நோக்கி நோக்கி
வாள் இழந்தனவே
என்கிறார் அவர். இங்கே வாள் என்பது கூர்மை, ஒளி என்பதற்கான அடையாளமாக நிற்கிறது. கண்கள் நோக்கி நோக்கி வாளை இழந்தன என்றால் உடனே அந்த அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.
ஏன் கூர்மை ஒளி என்று நேரடியாகச் சொன்னால் என்ன? சொல்லலாம்தான். ஆனால் வாள் என்னும்போது சட்டென்று அவ்விரண்டும் ஒரு திட்டவட்டமான காட்சி அனுபவமாக கிடைக்கிறது. இதுதான் இலக்கியத்தின் வழி. அது சொல்லி தெரியவைக்க முயல்வது இல்லை. அனுபவமாக ஆக்க முயல்கிறது.
இதே போல சங்க காலத்தில் மழை என்ற சொல் குளிர்ச்சி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். தொடி என்றால் தொடுக்கப்பட்ட முறையில் அமைந்த நகை என்று பெயர். இழை என்றால் இழையும் தன்மை கொண்ட நகை என்று பெயர். ஆனால் இச்சொற்கள் எல்லாமே நகையணிந்த பெண்ணையும் குறிக்கும். தொடீ, இழாய் என்று அழைத்தால் பெண்ணைத்தான் அழைக்கிறார்கள்.
இது சங்ககாலத்து இரண்டாவது குறியீட்டு ஒழுங்கு அல்லது மீமொழி. சங்காப்பாடல்களை வாசிக்கிறவர்கள் இவற்றை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள்? வேறு ஒன்றும் இல்லை, இவற்றுக்கான அர்த்தம் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது இந்த மீமொழிக்கும் ஓர் அகராதி உள்ளது. அதை உ.வே.சாமிநாதய்யர், அவ்வை துரைசாமிப்பிள்ளை, புலியூர் கேசிகன் என யாராவது எழுதியிருப்பார்கள். அதைக்கொண்டுதான் அந்தக் கவிதையை புரிந்துகொள்கிறார்கள்
அதேபோல நவீனக்கவிதைக்கும் ஓரு பொழிப்புரை இல்லையே என்றுதான் கேட்கிறார்கள். சங்கப்பாடல்களை ஒருவர் பொழிப்புரை இல்லாமல் உள்வாங்கிக்கொள்ள முடியும் என்றால், கம்பனை புரிந்துகொள்ள முடியும் என்றால், புதுக்கவிதை ஒரு பொருட்டே அல்ல. அவற்றுடன் ஒப்பிட்டால் இது மிகமிக எளிமையானது.
ஒரு பண்பாட்டில் உள்ள இந்த மீமொழியை பொழிப்புரை அல்லது அகராதியைக் கொண்டு புரிந்துகொள்ளலாம்தான். தமிழ்ப்புதுக்கவிதையில் பறவை என்று சொன்னால் அது விடுதலை, வானுடன் உள்ள தொடர்பு என்ற பொருளையே அளிக்கிறது என்று சொல்லலாம்தான். ஆனால் அந்த வழியைக் கொண்டு இன்று வரும் ஒரு புதிய கவிதையை புரிந்துகொள்ள முடியாது. இலக்கணம் பின்னால் ஊர்ந்து ஊர்ந்து வரும், இலக்கியம் முன்னால் பறந்து சென்றுகொண்டிருக்கும்.
ஆகவே இந்த மீமொழி எவ்வாறு உருவாகிறது என்று தெரிந்துகொள்வதே சரியான வழி. இந்த மீமொழிக்கு ஒரு உருவாக்கமுறை உள்ளது. ஓர் தொடர்புறுத்தல் முறை உள்ளது. அந்த முறை என்ன என்று தெரிந்துகொண்டால் இயல்பாக அந்த மொழி நமக்கு தெரிந்துவிடும். அந்த மொழியில் எது சொல்லப்பட்டாலும் நமக்கு புரியும்.
அந்த மீமொழியை கற்றுக்கொள்வது மிக எளிது . ஒரே ஒரு வருடம் கவிதைகளை கூர்ந்து வாசித்தாலே போதும் அது அந்தரங்கமாக நமக்கு பிடிபடும். ஏன், ஒரு நல்ல விவாத அரங்கை உருவாக்கி தேர்ந்த கவிஞர்களுடன் அமர்ந்து ஒரு இரண்டுநாள் பேசினாலே போதும். ஊட்டியில் அவ்வாறு நான் அமைத்த அரங்குகளில் வந்து பங்கெடுத்த எளிய வாசகர்கள் ஒரேநாளில் புதுக்கவிதையின் ரகசிய மொழி கிடைத்துவிட்டது என்றார்கள்.
அதை நான் விளக்கப்போவதில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்கிறேன். பெரும்பாலும் இந்த மீமொழி என்பது இயற்கையை ஆழ்ந்து கவனித்து அதில் உள்ள காட்சி நுட்பங்களை குறியீடுகளாக ஆக்கி அக உணர்ச்சிகளை சொல்லுவதன் மூலம் உருவாகி வருகிறது
பறவையில் சிறகாக
இருப்பது
மனிதனில் கை
இது கல்பற்றா நாராயணன் எழுதிய ஒரு கவிதைவரி. ஒரு குழந்தை போல இயற்கையை கவனிப்பதில் இருந்து இந்தவரி வருகிறது. எந்த விஷயம் பறவையில் சிறகாக இருக்கிறதோ அதுவே மனிதனில் கை. சிறகொடிந்த பறவை பறவையே அல்ல. அதேபோலத்தான் கையில்லாத மனிதன். கைகளுக்கு விலங்கு போடுதலைப்பற்றி பேசும் கவிதை இது.
கைவிலங்கிடப்பட்டவன் அளவுக்கு சுதந்திரமிழந்தவன் வேறு யார்?
என முடிகிறது. மனிதனின் கைகளை ஒரு கணம் அவன் சிறகாக கற்பனைசெய்ய முடிந்தால் அதன்பின் இக்கவிதை முழுமையாகவே நம் கைக்கு வந்துவிடும்.
மீண்டும் முதல் கேள்விக்கு வருகிறேன். நவீன இலக்கியம் என்பது என்ன? இப்போது ஒரு பதிலை நான் சொல்ல முடியும். நவீன கவிதை இன்றைய நவீன மீமொழியில் எழுதப்பட்டது. மரபுக்கவிதை மரபான மீமொழியில் எழுதப்பட்டது.
என்ன வேறுபாடு? மிக எளிமையான வரலாற்று சித்திரமே இதற்கான பதில். மரபான மீமொழி தமிழுக்குள் ,நம் சூழலுக்குள் மட்டும் இருந்து பல ஆயிரம் வருடங்களாக மெல்ல மெல்ல உருவாகி வந்தது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து உலகம் மாற ஆரம்பித்தது. ஐரோப்பியர்கள் உலகம் முழுக்கச் சென்று காலனியாதிக்கத்தை உருவாக்கினார்கள். உலகம் முழுக்க இருந்து இலக்கியங்களை தங்கள் மொழிக்கு மொழியாக்கம் செய்தார்கள். அவ்வாறாக உலக இலக்கியம் என்ற ஒன்று உருவானது.
அந்த உலக இலக்கியத்தை ஆங்கிலம் பிரெஞ்சு போன்ற மொழிகள் வழியாக உலகமெங்கும் கொண்டுசென்றார்கள் ஐரோப்பியர்கள். அந்த மொழிகளைக் கற்றவர்கள் உலக இலக்கியத்தை பற்றிய எண்ணத்தை அடைந்தார்கள். தமிழில் பாரதி அந்த பிரக்ஞையை அடைந்த முதல் கவிஞன். ஆகவே அவன் நவீனக் கவிஞன். அவன் தமிழில் எழுதினாலும் தமிழுக்குள் அவன் பிரக்ஞை நிலைகொள்ளவில்லை. உலக இலக்கியத்தின் பரந்தவெளியில் நின்றுகொண்டு அவன் எழுதினான்.
இங்கே என்ன நடக்கிறது என்றால் தமிழுக்குள் உள்ள இந்த இரண்டாவது குறியீட்டு ஒழுங்கு, அதாவது மீமொழி, உலகம்தழுவியதாக ஆகிவிடுகிறது. இலக்கியத்துக்கு உலகம் முழுக்க ஒரே குறியீட்டு மொழி ஒன்று உருவாகி வந்தது. அதனால்தான் நமக்கு பாப்லோ நெரூதாவும் மயகோவ்ஸ்கியும் புரிகிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சாதனை என்றால் இப்படி உலகம் முழுமைக்குமாக ஒரு இலக்கிய மீமொழி உருவானதேயாகும்
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். பாரதி உலக இலக்கியப்பிரக்ஞையுடன் அந்த பரப்பில் நின்று எழுதினார். அவருக்குப்பின் வந்த பாரதிதாசனுக்கு அந்த பிரக்ஞை இல்லை. பாரதிதாசனின் மரபில்வந்த கவிஞர்களுக்கும் அந்த பிரக்ஞை இல்லை. அவர்கள் தமிழ் கவிராயர் மரபிலேயே நிற்கிறார்கள். ஆகவேதான் பாரதியின் வசனகவிதைகள் போன்றவை புரியவில்லை என்பவர்கள் பாரதிதாசனை நன்றாக புரிகிறது என்கிறார்கள்.
என் கிண்ணத்தின்
தேநீர்
இந்தக்காலையின் தழல்.
எரிகிறது இந்தமேஜை
என் வீடு
இந்நகரம்
என்ற ஜப்பானியக் கவிதையின் அழகியல் நமக்கு உடனே புரிகிறது. ஒரு பெரும் தாபத்தை இந்தக்கவிதை சொல்கிறது. சிவப்புநிறமான தேநீர் காலை ஒளியில் தீச்சுடர் போல ஆவது ஒரு ஜப்பானிய அனுபவம். ஆனால் நமக்கு அது உடனே பிடி கிடைக்கிறது. அந்த தழலில் எரியும் துயரத்தை நம்மால் உடனே உள்வாங்க முடிகிறது.
இங்கிருந்துதான் நவீன இலக்கியம் மரபிலக்கியத்தில் இருந்து துண்டுபட்டு தனியாக ஆகிறது. மரபிலக்கியத்துக்குள் உள்ள மீமொழி இங்கேயே உருவாகி இந்த எல்லைக்குள் நிற்பது. நவீன இலக்கியத்துக்கான மீமொழி உலகளாவிய மீமொழியின் ஒரு பகுதியாகச் செயல்படுகிறது.
ஏன் அந்தப்பெரியவருக்கு மரபான கவிதை புரிகிறது? அவர் உரைகள் மூலம் ஆசிரியர்கள் மூலம் மரபுக்கவிதையின் மீமொழியை கற்றிருக்கிறார். நவீனக் கவிதையின் மீமொழியை அவர் கற்கவில்லை. அதை அவர் பொருட்படுத்தவில்லை. எனக்கு பாட்டு தெரியுமே ஆகவே நான் ஏன் பரதம் ஆடமுடியாது என்று கேட்கிறார். நண்பர்களே, அவை இரண்டும் வேறு வேறு.
மரபு இலக்கிய வாசிப்புக்கும் நவீன இலக்கிய வாசிப்புக்கும் இடையே முக்கியமான ஒரு வேறுபாடு உள்ளது, அதையும் இங்கே குறிப்பிட வேண்டும். எப்போதுமே நம் மரபு இலக்கிய வாசகர்கள் சொல்லும் சில வரிகள் உண்டு. ‘இந்தப் படைப்பில் சொல்லவந்ததை தெள்ளத்தெளிவாக வெள்ளிடைமலையாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்’
இதே நோக்கில்தான் நம் கல்வித்துறை இலக்கியம் கற்றுக்கொடுக்கிறது. ‘இந்தக்கவிதையின் திரண்ட பொருள் யாது, நான்கு பக்கங்களுக்கு மிகாமல் விளக்குக’
இந்த மனநிலை கவிதையை, இலக்கியத்தை அறிவதற்கு மிகமிக எதிரானது. ஒரு ஆக்கத்தில் ஆசிரியர் ‘சொல்லவந்த கருத்து’ என்ன என்று தேடுவதும் அதை அவர் ‘ஐயம்திரிபற’ சொல்லியிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும்தான் உண்மையில் நவீன இலக்கியத்தில் இருந்தே மரபான வாசகர்களை பிரிக்கிறது.
ஒரு படைப்பில் உள்ளது ஓர் அனுபவம். அது ஒர் அக அனுபவம். அந்த அக அனுபவத்தை நாம் கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளலாம். அக்கருத்துக்கள் அந்த ஆசிரியர் சொன்னவை அல்ல, நாம் அடைந்தவை. நமக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் கிடைக்கிறது, அதில் இருந்து நாம் சில சிந்தனைகளை அடைகிறோம். அச்சிந்தனைகள் அந்த அனுபவத்துக்குள் உள்ளனவா என்ன? அதே அனுபவத்தை அடைந்த இன்னொருவர் இன்னொரு கருத்தைத்தானே அடைகிறார்? அதேபோன்றதே இலக்கிய அனுபவம். அது நிஜ வாழ்க்கை அனுபவம்போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிற்து
நம்முடைய கற்பனையை தூண்டி விடக்கூடிய இயல்பே இலக்கிய படைப்பை ஆழம் மிக்கதாக ஆக்குகிறது. இதையும் நாம் நம் அனுபவத்தில் இருந்தே உணரலாம். ஓர் அனுபவத்தில் நம்மால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு புதிர் இருந்தால், அதை நாம் வகுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், நாம் அதைப்பற்றியே சிந்திப்போம் இல்லையா? நம் மனம் அதைநோக்கியே சுழன்றுகொண்டிருக்கிறது இல்லையா?
ஆகவேதான் முக்கியமான இலக்கிய ஆக்கங்கள் முழுமையாக எல்லாவற்றையும் சொல்வதில்லை. எவ்வளவு குறைவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு குறைவாகச் சொல்லி மிச்சத்தை வாசகக் கற்பனைக்கே விட்டுவிடுகின்ரன. அதிகமாக கற்பனைசெய்ய வைக்கும் இலக்கியம் அதிகநேரம் நம்முடன் இருக்கிறது. நம்மை அதிகமாக பயணம் செய்ய வைக்கிறது.
ஆகவே பொருள்மயக்கம் என்பது இலக்கியத்தின் முக்கியமான அழகியல் உத்தி. தெள்ளத்தெளிவாக இருப்பது இலக்கியத்தின் பலவீனம். நீதிநூல்கள் தெளிவாக இருக்கலாம். ஆனால் அதை இலக்கியத்தில் எதிர்பார்க்கக் கூடாது. கொன்றை வேந்தன் வாசிப்பது போல பிரமிள் புதுக்கவிதையை வாசித்தால் ‘என்ன இது ஒண்ணுமே புரியலை, என்னதான் சொல்லவரார்?’ என்ற குழப்பமே எஞ்சும்
வில்லியம் எம்ப்சன் என்ற விமர்சகர் ஏழுவகை பொருள்மயக்கங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்த பொருள்மயக்கங்கள் இலக்கியத்துக்கு ஆழத்தையும் அழகையும் அளிப்பவை. இன்றுவரை பாடத்திட்டத்தில் உள்ள நூல் அது.
பொருள்மயக்கம் என்பது இன்றுள்ள ஓர் இயல்பு அல்ல, எல்லா காலத்திலும் இலக்கியத்தின் அழகியலாகவே உள்ளது. குறுந்தொகை நற்றிணை பாடல்கள் குறள்பாடல்கள் பல அற்புதமான பொருள்மயக்கங்களுடன் உள்ளன. பல நூறு ஆண்டுகளாக அவற்றுக்கு மீண்டும் மீண்டும் உரைகள் எழுதப்படுகின்றன. எவ்வளவு உரைகள் எழுதப்பட்டபின்னரும் அவற்றின் பொருள்மயக்கம் புதிய சிந்தனைகளை உருவாக்கியபடி நீடிக்கத்தான் செய்கிறது
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
இந்த ஒரு குறளுக்கு மட்டும் எத்தனை வகையாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது என்று நோக்கினால் எம்ப்சன் என்ன சொல்கிரார் என்று புரியும். ‘பல்லக்கில் செல்பவன் சுமப்பவன் இருவரையும் வைத்து அறத்தின் வழி இதுவே என நினைக்கவேண்டாம்’ இவ்வளவுதான் குறள். இது முற்பிறப்பின் வினைப்பயனைச் சொல்வது என்பது பரிமேலழகர் கூற்று. சமண ஊழ்வினையைச் சொல்கிறது என்பது நச்சினார்க்கினியர் உரை
இப்போதுள்ள இதுவே அறத்தின் எப்போதுமுள்ள வழி என்று நினைக்காதே வண்டியும் ஓர்நாள் ஓடத்தில் ஏறும் என்றுதான் வள்ளுவர் சொல்கிறார் என்றே நான் வாசிக்கிறேன். இன்னும் பல வாசிப்புகளுக்கு இதிலே இடமுள்ளது. இன்னும் இன்னும் சிந்திக்கச் செய்கிறது இந்தக்குறள்.
ஆகவே பொருள்மயக்கம் எப்போதும் இலக்கியத்தில் உள்ளது. அதுவே அதன் வழி. ஆனால் மரபிலக்கியம் உரைகள் உரைகள்மீது உரைகள் என எழுதப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. ஆகவே பலர் பொருள்மயக்கம் பற்றி யோசிக்காமலேயே மரபிலக்கியத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நவீன இலக்கியம் சிக்கலாக இருக்கிறது, காரணம் இங்கே உரை இல்லை. பொருள்மயக்கம் முகத்தில் அறைகிறது.
ஒரு கதை. ஓரு ரோமாபுரி இளவரசியை அடிமை காதலித்தான். மன்னர் அதை அறிந்துவிட்டார். மன்னர் ஒரு குரூர நகைச்சுவைக்கு ஏற்பாடு செய்தார். கொலோசியத்திலே அந்த அடிமையை விட்டார். அவன் முன்னால் இரு வாசல்கள். ஒன்றுக்குள் பசித்த புலி. அதைத்திறந்தால் மரணம். இன்னொன்றுக்குள் ஒரு பேரழகி. அதை தேர்வுசெய்தால் விடுதலையும் இன்பவாழ்வும். அதில் எதை வேண்டுமானாலும் அந்த அடிமை திறக்கச் சொல்லலாம். அவன் விதி அவனாலேயே தீர்மானிக்கப்படும்.
அடிமை ஓரக்கண்ணால் இளவரசியை பார்த்தான். அவளுக்கு உண்மை தெரியும். அவள் உதவுவாள் என நினைத்தான். அவள் கண்களால் சுட்டிக்காட்டினாள். அவன் தேர்வுசெய்தான்- அவ்வளவுதான், கதை முடிந்தது.
கடைசிவரை இளவரசி என்ன சொன்னாள் என ஆசிரியர் சொல்ல முன்வரவில்லை. இன்றுவரை முடிவிலாது விவாதிக்கப்படுகிறது இக்கதை. ஒரு பெண்ணுள் ஓங்கியுள்ளது தாய்மையே என நீங்கள் எண்ணினால் அவள் அந்த பெண் இருந்த அறையைச் சுட்டிக்காட்டியிருப்பாள் என்பீர்கள். பெண்ணுக்குள் இருப்பது காதலிதான் காமம்தான் என்றீர்கள் என்றால் அவள் ஒருபோதும் தன் காதலனை இன்னொரு பேரழகிக்கு விட்டுக்கொடுக்க மாட்டாள்.
இந்த பொருள்மயக்கம் மூலமே இந்தக்கதை முடிவிலாத கற்பனைச் சாத்தியங்களை திறந்து வைக்கிறது. அடுக்கடுக்கான சிந்தனைகளை உருவாக்குகிறது. நவீன இலக்கியங்கள் அனைத்தும் இந்த வழியையே தேர்வுசெய்கின்றன.
ஆகவே நவீன இலக்கியத்தை அறிந்துகொள்ள இரு அடிப்படை புரிதல் தேவை என்று சொல்லிக்கொள்கிறேன். ஒன்று, நவீன இலக்கியம் உலகளாவிய ஒரு மீமொழியில் உள்ளது. அந்த மீமொழியை பயிலவேண்டும். இரண்டு, நவீன இலக்கியம் தெளிவுபடுத்துவதன் மூலம் நம்மிடம் தொடர்புகொள்ளவில்லை. மாறாக பொருள்மயக்கங்கள் மூலம் நம் கற்பனையை விரியச்செய்து நம்மை சிந்திக்க வைக்கிரது. அது எதைச் சொல்லவருகிறது என்று பார்க்க கூடாது. அந்தப் படைப்பு அளிக்கும் அனுபவத்தை நம் சொந்த கற்பனைமூலம் விரியச்செய்யவேண்டும்
இவ்விரு அடிப்படைத்தெளிவும் இருந்தால் நவீன இலக்கியத்துக்குள் நுழைவது மிக எளிது. நவீன இலக்கியம் என்பது நவீன சிந்தனைகளின் அழகியல் வடிவம். நவீன உலகின் ஆன்மீக உலகம். நவீன இலக்கியம் மூலமே ஒருவர் நவீன உலகின் அழகியலையும் ஆன்மீகத்தையும் உணர முடியும். அதற்கு மரபிலக்கியம் போதாது.
ஆனால் இலக்கியம் ஒரு பொது நோக்கில் ஒன்றுதான். கம்பனுக்கும் தேவதேவனுக்கும் பெரிய தூரம் ஒன்றும் இல்லை. தூரம் என்பது நாம் நம்முடைய காலகட்டத்தின் சில இயல்புகளால் உருவாக்கிக் கொள்வதே. இந்த புரிதலும் நமக்கு தேவை. இது இருந்தால்தான் நம்மால் இலக்கியத்தின் மூலம் அடையக்கூடிய உச்சத்தை அறிய முடியும்.
மரபிலக்கியம் மட்டுமே அறிந்த ஒருவர் நவீன உலகை இழக்கிறார். நவீன இலக்கியம் மட்டும் அறிந்த ஒருவர் முழுமை நோக்கை இழக்கிறார். இரண்டும் ஒன்றே. இரண்டும் வேறு வேறாக கற்கப்பட்டு ஒன்றாக உணரப்படவேண்டும்
நவீன இலக்கியத்துக்கும் மரபிலக்கியத்திற்கும் என்ன தூரம்? தேவதேவன் கவிதை வரி இது
அசையும்போதே தோணி அசையாதபோதோ தீவு
தோணிக்கும் தீவுக்கும் நடுவே
மின்னற்பொழுதே தூரம்
நவீன இலக்கியம் அசையும் தோணி. மரபிலக்கியம் அசையாத தீவு. தூரம் மின்னற்பொழுதுதான். கணநேரம். ஆனால் பல்லாயிரம் காதம். ஆம், பல்லாயிரம் காதம்தான் ஆனால் ஒரே ஒரு கணம்.
நன்றி
[10-09௰ அன்று மலேசியா சுங்கைப்பட்டாணி எழுத்தாளர் சந்திப்பில் ஆற்றப்பட்ட உரை]
: Sep 14, 2010 முதற்பிரசுரம்/மறுபிரசுரம்