கீதை ஒரு வினா

1

ஜெ,

கீதை பற்றிய பல விவாதங்களையும் நூல்களையும் வாசித்திருக்கிறேன். நீங்கள் எழுதியவை உட்பட. தத்துவ நோக்கில் கீதையின் சாரம்சங்கள் சிறந்தவை எனினும் கீதையின் முழு நோக்கங்களையும் ஏற்பது என்னளவில் இயலவில்லை. கீதை பற்றிய திராவிட பெரியாரிய எதிர்மறை எழுத்துகளாலேயே அதனை நான் ஆர்வமுடன் வாசித்திருக்கிறேன். தத்துவ நோக்கம் ஆழமான கருத்துகள் இவற்றை மீறி பிறப்பின் ஏற்றத்தாழ்வுகளை வருணாசிரம முறையில் கீதை இன்னும் வலுப்படுத்துகிறதல்லவா. பெண்களையும் இரண்டாம் நிலையிலேயே வைக்கிறது. அது எழுதப்பட்ட காலத்தில் அவையெல்லாம் சாதாரண நிலைப்பாடாக இருந்திருக்கலாம் என்பதும் சரியே.

என்னுடைய வினா இதுதான். உங்களின் நூறு நாற்காலிகள், பேய்கள் தெய்வங்கள் போன்றவற்றை வாசிக்கையில் எப்படி கீதையை இத்தனை உயர்வாகக் கருத முடிகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. புனைவுகளில் வெளிப்படும் ஜெயமோகனின் ஆளுமை இத்தகைய கீதை உரை போன்றவற்றால் மாறுபடுவதாக எனக்குத் தோன்றுகிறது. உங்களை வசைபாடும் வழக்கமான தொனியில் இதை நான் கேட்கவில்லை. உங்கள் எழுத்துகளை 99% வாசித்துள்ளேன். வெண்முரசு உட்பட. பின்தொடரும் நிழலின் குரலும் ஏழாம் உலகமும் வெளிப்படுத்தும் உங்களின் தொனி ஏன் இங்கு மாறுகிறது. அல்லது என் புரிதல்கள் முழுமையாக இல்லையா. கீதையின் தத்துவ நோக்கத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டால் போதுமா.

அன்புடன்
மோனிகா மாறன்.

***

அன்புள்ள மோனிகா மாறன்,

திருக்குறளைப்பற்றி இதேபோல ஓர் தொடர் உரை ஆற்றியிருந்தேன் என்றால் நீங்கள் இக்கேள்வியைக் கேட்டிருப்பீர்களா? [உண்மையில் அப்படி ஓர் உரையாற்றும் எண்ணம் உள்ளது] மாட்டீர்கள். ஏனென்றால் அது ‘மதச்சார்பற்ற’ நூலாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. கீதை ‘மதநூலாக’ அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற நூலை ஏற்று மதநூலை நிராகரிப்பது முற்போக்கு என உங்கள் மனம் பயின்றிருக்கிறது.

இந்த பயிற்சியை எவர் உருவாக்குகிறார்கள்? இதன் அரசியல், சமூகவியல் நோக்கங்கள் என்ன? இப்படி ஒரு சூழலில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட பொது மனநிலைகளை இயல்பாக ஏற்றுக்கொள்வதென்பதுதான் ஓர் அறிவுஜீவி பாமரனாகும் இடம். இக்கருத்துக்கள் அமீபாக்களை, வைரஸ்களைப் போல. காற்றில் இருந்து கொண்டிருக்கின்றன. அவை பலவீனமான உள்ளங்களில் தொற்றி வளர்கின்றன. ஆரோக்கியமான உள்ளம் இவற்றுக்கு எதிர்ப்பு சக்தியைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கும்.

கீதை பற்றிய எதிர்விவாதங்களில் அது வர்ணாசிரமத்தை ஆதரிக்கிறது என்பதற்காகச் சுட்டப்படும் வரி.

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்ய கர்தாரமவ்யயம்: [4/12]

நான்கு வர்ணங்களும் என்னால் படைக்கப்பட்டன.
இயல்புகள் செயல்களின் அடிப்படையில்
அதன் படைப்பாளியே ஆயினும் என்னை
படைக்காதவனென்றும் அழிவற்றவென்றும் அறிக.

இதில் முதல் வரியே எப்போதும் எடுத்துமேடையில் சுட்டப்படுகிறது. வர்ணங்கள் குணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் அமைகின்றன என்றே இந்த வரி சொல்கிறது. அடுத்தவரி இன்னும் சிக்கலான தத்துவம் கொண்டது. இவற்றை இயற்றியவன் ஆயினும் அவன் இவற்றுக்கு ஆசிரியன் அல்ல.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்.

என்னும் குறளுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இதிலும் முதல்வரியை மட்டுமே மேற்கோளாக்குவார்கள். செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு குன்றும் கூடும் எனச் சொல்லும் குறளை விடவும் குணத்திற்கும் செயல்பாடுகளுக்கும் ஏற்ப சமூகப்படிநிலை அமைகிறது என்று சொல்வதல்லவா இன்னும் பொருத்தமானதாக உள்ளது?

ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று

போன்ற பல செய்யுட்களைக் கொண்டு வள்ளுவர் குலப்பிறப்பு குடிமேன்மையை முன்வைக்கிறார் என்று ஏன் நாம் வாதிடுவதில்லை? ஏன் அதை வெவ்வேறு வகையில் பொருள்கொள்ள முயல்கிறோம்?

குலக்கலப்பு குறித்த சிலவரிகளை எடுத்துக்கொண்டு கீதையை பெண்களுக்கு எதிரானது என கொண்டுகூட்டி வலிந்து பொருள்கொண்டு முத்திரை குத்தும்போது கடவுளுக்குப்பதில் கணவனைத் தொழ பெண்களிடம் சொல்லும் குறள் எப்படி முற்போக்காக நமக்குத்தெரிகிறது?

இத்தனைக்கும் கீதை ஒரு தத்துவநூல். குறள் அடிப்படையில் நெறிநூல். கீதை உருவகமாகப் பேசும் நூல். குறள் நேரடியாக வகுத்துரைக்கும் நூல். கீதை புனைவின் பரப்பில் அமைக்கப்பட்டநூல். குறள் தெளிவாக வரையறை செய்யும் நூல்.

ஆக, நாம் நூல்களை அணுகும் வகை முழுக்க முழுக்க நம் முன்முடிவுகள் சார்ந்தது. அம்முன்முடிவுகளை மறுபரிசீலனை செய்யவே நான் கோருகிறேன்.

கீதையை ஒரு தத்துவநூலாக ஆன்மீகநூலாகவே நான் முன்வைக்கிறேன். அது செய்-செய்யாதே என ஆணையிடும் நெறிநூல் அல்ல. அதன் அடுக்குகள் பல வகையானவை.

நெறிநூல்கள் காலத்துடன் பிணைந்தவை. காலமாற்றத்தில் பொருந்தாமலாகக் கூடியவை. தத்துவநூல்கள் அப்படி அல்ல. அவை அடிப்படையான வினாக்களை எழுப்பி விடைதேடுபவை. அவை நின்றுபேசும் சமூகதளத்தின் இயல்புகள் அவற்றில் இருக்கும், அவற்றை கடந்து அவை பேசும் தத்துவவினாவை மட்டுமே தத்துவ மாணவன் எடுத்துக்கொள்வான்.

அடிமைமுறையை ஆதரித்தார் என்பதனால் பிளேட்டோ காலாவதியாகவில்லை. இன்றும் மேலைச் சிந்தனையின் சாராம்சமாக நின்றிருக்கும் நூல் அவரது உரையாடல்தான்.

அவ்வகையில் தத்துவ- ஆன்மீக நூல்களை எளிமைப்படுத்துவது, ஒற்றைப் படையாக்குவது, சில்லறை விவாதங்களுக்குள்ளாக்குவது அடிப்படையில் சிந்தனைக்கே எதிரானது.

உண்மையில் இந்த சில்லறைத்தனம் கீதையை பழிக்கும் நாத்திகரிடம் இருப்பதை விட அதிகமாகவே அதை வெறும் வழிபடுநூலாக, உபதேச மஞ்சரியாக காணும் பக்தர்களிடமும் உள்ளது. கீதை வர்ணாசிரமத்தை முன்வைக்கும் நூல் என நாத்திகர் சொல்லும்போது சாதிமேட்டிமைவாதிகள் சந்தோஷமாக ’ஆமா ஆமா’ என்கிறார்கள்.

இந்த இரு தரப்பினரிடமிருந்தும் வேறுபட்டு அதை அணுகுவதற்கான முயற்சியே என்னுடையது. அது நடராஜ குருவும் நித்யாவும் செய்தது. நான் எழுத வந்தகாலம் முதல் செய்துவருவது.

ஜெ

***

கோவையில் கீதைபற்றிப் பேசுகிறேன்

டிசம்பர் 6,7,8,9 தேதிகளில் கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி அரங்கில் மாலை 630 மணிக்கு.

கீதையின் இடம் என்ன?
கீதையும் சாதியும் பெண்களும்
கீதை உரை ஏன்?
முந்தைய கட்டுரைவிருதுகள், அமைப்புகள்
அடுத்த கட்டுரைகோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்