6. முட்டையிலிருந்து வெளிவருவது யார்?
சமீபத்தில் ஓர் உரையாடலில் தேவதச்சன் சொன்னார். ’நான் ஒரு அத்வைதி’ .நான் புன்னகையுடன் ‘எந்தப்பொருளில்?” என்றேன். ’நிஸர்கதத்த மகராஜ் எந்தப்பொருளில் அத்வைதியோ அந்தப்பொருளில்’ என்றார். வெற்றிலை வாய்குவித்து சோடாப்புட்டி வழியாக கண்கள் தெறிக்கச் சிரித்து “அத்வைதம் பத்தி ஒண்ணுமே தெரியாம இருக்கிற அத்வைதம்”. அவர் அதையும் ஒருவகை விளையாட்டாகவே அவர் சொல்கிறார். நிஸர்கதத்தர் வீரசைவ மரபினர். அவருடையது சிவாத்வைதம்.
மேலைத்தத்துவத்தின் கலைச் சொல்லை பயன்படுத்தினால் absolutist என்று சொல்ல வேண்டும் நடராஜ குரு தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை An Autobiography of An Absolutist என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார். தமிழில் முதல்முழுமைவாதம். இங்குள்ள அனைத்தும் கனவே என்றும் இவற்றுக்கெல்லாம் சாரம்சமாக அமைந்த ஒன்றே முதல் முழுமையானது என்றும் எண்ணும் ஒரு சிந்தனை போக்கு.
அது பிரம்மம் என்னும் சொல்லால் மரபான அத்வைதத்தில் சுட்டப்படுகிறது. பிரம்மம் என்ற சொல்லை அது என்றும் அவன் என்றும் விளக்கிக் கொள்ளும் அத்வைதிகள் உண்டு. அறிய முடியாமை என்றும் கூற முடியாமை என்றும் விளக்கிக் கொள்பவர்களும் உண்டு. நிஸர்கதத்த மகராஜ் இறுதியாகச் சொன்ன வகைப்பட்டவர். இன்றைய மனிதனின் தர்க்கத்தை உறைய வைக்கும் வினாக்களுடன் அத்வைத்தத்தைச் சொல்லத் தெரிந்த மெய்யியலாளர் என்று நிஸர்கதத்தரைச் சொல்ல முடியும்.
அத்வைதத்தை ஒரு வசதிக்காக இரண்டாக பிரிக்கலாம் மதவழிப்பட்ட மரபான அத்வைதம் ஒன்று உள்ளது. அதற்கான வரையறுக்கப்பட்ட கருதுகோள்களுடன், தர்க்க முறைமையுடன் குருகுல வரிசைகள் வழியாக கற்கப்படுவது .கயிற்றரவு, குடவானம் பெருவானம் போன்ற உவமைகள் அர்த்தாபத்தி,அனவஸ்தை போன்ற பலநூறு கலைச்சொற்களைக் கொண்டு விவாதிக்கப்படும் ஒரு தத்துவ தளம் அது. அதை தத்துவ அத்வைதம் எனலாம்
பிறிதொன்று உள்ளது அதை ஒரு விவாதத்துக்காக நடைமுறை அத்வைதம் என்று சொல்ல்லாம் ஒரு தனி மனிதன் தன் சொந்த அனுபவமாகவே அறிந்த இரண்டின்மை நிலை ,அதை விளக்கும் பொருட்டு அவர் கண்டடைந்த மொழி வெளிப்பாடுகள் ஆகியவற்றாலானது அது. அதற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை. அது தத்துவத்தின் கருவிகளை அது பயன்படுத்துவதில்லை. தரிசனத்தின் பொதுமையாலேயே அதை அத்வைதம் என்று சொல்லுகிறோமே ஒழிய அந்தத் தத்துவத்தை நம்பி எடுத்துக் கொள்வதனாலோ அதை சார்ந்து சிந்திப்பதனாலோ அல்ல.
இருபதாம் நூற்றாண்டின் கவிஞர்களை சிந்தனையாளர்களை முற்றிலும் தன் சொந்த அனுபவத்தாலேயே இரண்டின்மையை அடைந்து முன் வைக்கும் பல படைப்பாளிகளை நாம் பார்க்க முடியும். தாகூரையும் பாரதியையும் கூட அவ்வகைப்பட்ட அத்வைதிகளாகவே எண்ணவேண்டும்.
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
என்னும் பாரதியின் வெளிப்பாடு அவரை அத்வைதி என்று காட்டுகிறது.
பாரதிக்கு சமகாலத்தவர்களாக இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியவைல் எழுந்த நவயுகக் கவிஞர்கள் பெரும்பாலானவர்களை இவ்வகையில் நவீன அத்வைதிகள் என்று சொல்லவேண்டும். விவேகானந்தர் வழியாக மறுஎழுச்சி கொண்ட நவீன அத்வைதம் உருவாக்கிய பாதிப்பு ஒருகாரணம். அன்றைய நவீன உலகை எழுச்சி கொள்ளச்செய்த பிரித்தானியக் கற்பனாவாதத்தின் உள்ளுறையாக இருந்த ஆழ்நிலைவாதத்தை அல்லது இயற்கைவாதத்தை அத்வைதத்தின் இவையெல்லாம் நான் என்னும் தரிசனத்துடன் இணைத்துக்கொண்டு ஒரு புதியசிந்தனையை அவர்கள் அடைந்தது இன்னும் முக்கியமான காரணம்.
‘விண்ணில் பறக்கும் புள்ளெலாம் நான்’ என்னும் பாரதியின் வரியின் உருவாக்கம் அந்தக்கலவையினால்தான். தாகூர், குவெம்பு, குமாரன் ஆசான் போன்றவர்களின் கவிதையின் சாராம்சமாக உள்ளது இந்த நவதரிசனம்தான். பின்னர் மீண்டும் மீண்டும் கவிஞர்கள் இயல்பாக அந்த அனுபவ உச்சத்தை வந்தடைந்துள்ளனர். அறிதல் அறிவு அறிபடுபொருள் அறிபவன் ஆகிய நான்கு முனைகளும் ஒன்றென்றே ஆகும் ஒரு முழுமைநிலை அது. பிச்சமூர்த்தியில் பிரமிளில் தேவதேவனில் அதைக் காணலாம்
தேவதச்சனை அவரது சொற்களைக் கொண்டே அமைப்பதாக இருந்தால் ஒரு நடைமுறை அத்வைதி என்று சொல்லவேண்டும் அத்வைத மரபின் சிந்தனைகள் எதையும் அவர் கையாண்டதில்லை. அத்தகைய பெரும் தத்துவத் தொகைகளில் அவருக்கு அக்கறையும் இல்லை. தன் அனுபவமென அவர் அறிந்தது இவையனைத்தும் ஒற்றை பெருங்கனவு என்னும் தரிசனம். அதுவே அவரை அவ்வாறு சொல்லவைக்கிறது. அவரது தொடக்கம் அது.
இக்கனவின் ஒவ்வொரு துளியும் தன்னளவில் வேறு பொருள் கொண்டது என்றும் நம் அனுபவம், நமது தேவை, நமது ஆசைகள், நமது அச்சங்கள் சார்ந்து இவற்றை தொகுத்து இவ்வாறு அடைந்து கொண்டிருக்கிறோம் என்றும், நாம் அறியும் பிரபஞ்சமென்பது நமது அறிவே என்றும், நமக்கு அறிதலுக்கு அப்பால் உள்ளது இதன் உண்மையான பெருவிரிவு என்றும், இதன் சாராம்சமாக இருந்து கொண்டிருப்பது இதை ஆக்கி நிலை நிறுத்தி இப்படி நமக்குக்காட்டும் அந்த மாற்றமின்மையே என்றும் தர்க்கமின்றி தன்னறிவாகவே உணரும் ஒரு நிலை
அந்த முதல்முழுமையை அவரது வரிகள் ஒவ்வொன்றிலும் மீள மீளக் காணமுடிகிறது. அப்படிக் காணும் பரவசத்திற்கு அப்பால் அதற்கு மாறாத பொருளேதும் இல்லை. சொல்லப்போனால் அவை திறந்துகொள்ளும்போது நிகழும் பொருளழிவை மட்டுமே அக்கவிதைகள் சொல்கின்றன. பொருளுருவாக்கம் நம்முடைய பழக்கத்தால் நாம் செய்துகொள்வது. அவை சரிகைச் சட்டையைக் கழற்றிப்போட்ட சின்னக்குட்டியின் துள்ளலைத்தான் காட்டுகின்றன.
பொருளென்று நாம் சொல்வது ஒன்றை பிறிதொன்றுடன் இணைக்கும் தர்க்கம். அவற்றை நம் பயன்பாட்டில் கொண்டு வரும் விளக்கம். பயன்பாட்டுத்தளத்தை இழக்கையில் ஒவ்வொரு அறிதலிலும் எஞ்சுவது நோக்க நோக்கக் களியாட்டம் என்ற நிலையை. மைனாவைக் கண்டு அதுவாக ஆகி நீரை அள்ளி தன்மேல் தானே தெளிக்கையில் நீராலானவன் என உணரும் பரவசம். சிறுசிறு இலைகளாகப் பெரிய மரம் ஒன்று நிற்பதைப்போல சிறுசிறு கயிறுகளாக பெரிய சர்க்கஸ் நடப்பதைப்போல இங்கு நிகழும் ஆடலின் புதிர்கொண்டாட்டம். கண்வழியே பாய்ந்துசெல்லும் என்றுமுள்ள ரகசியத்தின் நீரோட்டம்.
மீண்டும் மீண்டும் தேவதச்சனின் கவிதை இந்த பெரிய களியாட்டு அரங்கை நோக்கி திரும்பி நிற்கிறது இங்குள்ள அனைத்தும் வெறும் தோற்றங்களே எனும்போது இவற்றின் முழுமுற்றான தன்னியல்பு என்பது நமது பாவனையே எனும்போது ஒவ்வொன்றையும் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம் என்ற சாத்தியத்தை அது அடைகிறது. கையில் மந்திரக்கோலுடன் வந்து நின்று கைக்குட்டையை முயலாக்கி முயலை கைக்குட்டையாக்கி அது விளையாடிக்கொண்டே இருக்கிறது
மொழி
எனக்குச் சிரிப்பு தாங்கவில்லை
கொண்டாட்டமாக இருக்கிறது
இந்தநிமிஷம் நான்
உயிருடன் இருக்கிறேன்
கண்கள் இல்லாமல் கண்களால் பார்க்கிறேன்
எல்லாத்தேர்வுகளிலும் தோற்றுக்கொண்டிருக்கிறேன்
முகத்தைத் திருப்பிக்கொள்கிறேன்
முகத்தைத் தொங்கவிடுகிறேன்
முகத்தை எங்கு வைப்பது என்று
அறியாமல் திணறுகிறேன்
வழியில்
விபத்துக்குள்ளான வாகனம் ஒன்றின்
இரும்புச்சிதறல்கள் அதில்
நேற்றைய மழை தேங்கியிருந்தது
ஆனால் நான்
தனியாக இல்லை நல்லவேளை
என் எண்ணங்கள் எப்போதும்
கூட இருக்கின்றன
ஏனோ சிரிப்பு தாங்கவில்லை
என் சிரிப்பு
யாருடைய மொழி?
உயிர்களின் இயல்பு ஆனந்தம் என்கிறது வேதாந்தம். ஆகவேதான் பிறந்ததுமே கன்று துள்ளுகிறது. ஆனந்தமெனும் பரப்பின் மேல் உணர்ச்சிகள் எழுதப்பட்டுள்ளன. எவ்வுணர்ச்சியும் இல்லாத நிலை மகிழ்ச்சியே. அதை கற்று அறிவதற்கும் உற்று அறிவதற்குமிடையே உள்ளவேறுபாடு பிரம்மாண்டமானது. உயிர் அறியும் அனைத்தும் அழிந்தபின் எஞ்சும் களிப்பு. அதன் மொழி இங்குள்ள பொருட்களிலிருந்து பொருளை கொண்டிராதது.
தமிழ் கவிதையின் குதூகலமான விளையாட்டுப் பரப்புகளில் ஒன்று தேவதச்சனின் கவியுலகம்.