‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 5

d d 14

 

5. நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்

நாகர்கோயில் மதுரை நெடுஞ்சாலை எனக்கொரு தியான அனுபவத்தை அளிப்பதாக இருப்பது. நான் ஏழாவது வகுப்பு படிக்கும் போதுதான் முதல் முறையாக ஆரல்வாய்மொழிக் கணவாயை கடந்து தமிழக மையநிலத்திற்குள் வந்தேன். எங்களூரில் வானம் என்ற அனுபவத்தை பெறுவதற்கு ஏதாவது குன்றின்மேல் ஏறினால் தான் உண்டு. அதற்கேற்ற மரங்களற்ற மொட்டைப்பாறைக்குன்றுகளும் மிக அரிது. மரங்கள் மூடிய வானத் துண்டுகளைத்தான் சிறு வயதிலேயே பார்த்திருந்தோம். தொடுவானம் என்ற ஒன்று ஒரு போதும் கண்ணுக்கு தெரிவதில்லை.

ஆரல்வாய்மொழியைக் கடந்ததுமே சட்டென்று நாற்புறமும் திறந்து கொண்ட நிலம் என்னை பதைக்க வைத்தது .இத்தனை ஆண்டுகளுக்கு பின்பும் அன்றிருந்த பரவசமும் துக்கமும் நினைவில் இருக்கிறது. பேருந்தின் ஜன்னல் கம்பியை இறுகப்பற்றியபடி திரும்பி அமர்ந்து கண்களே பிரக்ஞையாக பார்த்துக் கொண்டிருந்தேன். மிகத் தொலைவில் பிரம்மாண்டமான அரைவட்டமாக சுழன்ற தொடுவானம் .அங்கிருந்து கிளம்பி என் பேருந்தின் கீழ்ப்பகுதி வரை வந்து சேர்ந்த சமநிலம். அதில் தீக்குச்சிகள் போல் நின்றிருந்த பனைமரங்கள். எப்போதாவது சிறிய குடிசைகள். பிசிறி நின்ற முட்புதர்கள் காற்று அள்ளி கொண்டு சென்ற சருகுகளால் ஆன சிறிய அலைகள்.

வானம் முகிலற்று பெரும் கண்ணாடிக்கூடை போல் கவிந்திருந்தது. அது பின்காலை நேரமாகையால் கண்கூசும்படி சூரிய வெளிச்சம் அலையலையாக இறங்கியது. சற்று நேரத்திலேயே நான் மனம்கசிந்து அழத்தொடங்கினேன் என்னுடன் வந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த பிறநண்பர்களும் கண்ணீர் வடிப்பதைக் கண்டேன். அந்த நிலக்காட்சி என்னை மாதக்கணக்கில் கொடுங்கனவு போல் வந்து துன்புறுத்தியிருக்கிறது. பசுமையன்றி வேறெதையும் பார்த்திராத நான் கண்ட முதல் பாலைநிலம். நிலம் கருணையற்றதாக ஆகமுடியும். அன்னை அயலவளாக ஆக முடியும். அந்த அறிதலை நெடுங்காலம் என்னால் கடக்கமுடியவில்லை

ஆனால் அந்த அனுபவத்தின் தீவிரமே மீண்டும் மீண்டும் என்னை ஆரல்வாய்மொழி கடந்து அங்கே வரச்செய்தது. இப்போது பலநூறு முறை அந்த பொட்டல் பாதையில் பயணம் செய்திருக்கிறேன். மெல்ல மெல்ல இருபுறமும் வீடுகளும் சிறு நகரங்களும் உருவாகி அன்றிருந்த பொட்டலின் பெருங்காட்சி இல்லாமல் ஆயிற்று. இப்போது மீண்டும் நாற்கரச் சாலை புதிய பொட்டல் வழியாக செல்லத்தொடங்கியிருக்கிறது காரின் முன்னிருக்கையில் அமரும்போது இரு பக்கமும் என பொட்டல் விரிந்து என்னை சூழ்ந்து கொள்ளும் அனுபவத்தை அடைகிறேன்.

ஒரு முறை அவ்வாறு சென்று கொண்டிருந்த போது தொலைவில் ஒரே ஒரு விவசாயப்பெண் உடை முள் வெட்டும் பொருட்டு குனிந்து கையில் அரிவாளுடன் நின்றிருந்தாள். அவளுக்கு மேல் வானம் பெரியதொரு வளையம் போல் நின்றிருத்து. தேவதச்சனின் கவிதை வரி ஒன்றை ஓர் மெல்லிய உலுக்கலுடன் நினைவு கூர்ந்தேன்.
பருத்தி பறித்து மடித்துணியில் துருத்திக் கொண்டிருக்கும் பார்வதிஅவளோடு சேர்ந்து குனிந்திருக்கும் அத்துவானவெளி

உண்மையான கவிதை அனுபவமென்பது உண்மையான வாழ்வனுபவத்திற்கு அருகே தன்னிச்சையாக வந்து நிற்கும். கவிதை வரி அளிக்கும் துணுக்குறலே. அக்காட்சியினூடாக தேவதச்சனை மிக அணுக்கமாக புரிந்து கொண்டேன் இந்த பொட்டல், இதன் மேல் கவிந்திருக்கும் மாபெரும் வானம், இதன் மகத்தான தனிமை, கலைக்க முடியாத அமைதி ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கவிஞர் அவர். அத்துவான வெளி என்னும் வார்த்தை அவரை உத்வேகம் கொள்ள செய்திருக்கிறது என்பது பல கவிதைகளில் தெரியும். அது மௌனியின் சொல்லாட்சி. அத்துவானவெளி, அத்துவானவேளை போன்றவை மௌனிக்கு அவரும் பெருவெளியும் மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரு நிலையைச் சுட்ட பயன்படுகின்றன. தேவதச்சனில் மௌனியின் பாதிப்பின் தடையம் இச்சொல்

அச்சொல்லை தேவதச்சன் அக்கவிதையில் இரண்டாகப் பிரிக்கிறார். ஆற்ற என்ற பொருள் வரும் அத்துவானம் என்பது வானம் ஆகவும் பொருள் கொள்ளும் படி பிரிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டு காலம் வாழ்ந்தாலும் எவரும் அற்ற நிலம் ஆனால் அங்கே தன்னந்தனியாக பணியாற்றும் ஒருவருக்கு துணையாக தானும் வளைந்து நின்று கொண்டிருக்கிறது .இந்த வரியிலிருந்து பின்பு அந்த பொட்டலை என்னால் பிரிக்க முடிந்ததே கிடையாது.

ஒவ்வொரு பனைமரக்கொண்டைக்கு மேலும் வளைந்திருக்கும் அத்துவானவெளி .ஒவ்வொரு மேயும் தனி மாட்டுக்கு மேலும் சூழ்ந்திருக்கும் அத்துவான வெளி. அங்குள்ள ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு முள்ளையும் ஒவ்வொரு பறவையையும் அத்துவானவெளி சூழ்ந்திருக்கிறது. அத்துவான வெளியால் சூழப்பட்ட சிற்றிருப்புகளை பற்றி தேவதச்சன் எழுதுகிறார் என்று கொள்ளலாம். அல்லது ஒவ்வொன்றையும் சூழ்ந்திருக்கும் அத்துவான வெளியை கண்டடையும் கலையே அவரது கவிதை.

அர்த்தங்களும் உணர்ச்சிச் செறிவுகளும் நேற்று இன்று நாளைகளும் கொண்ட ஒவ்வொன்றையும் தன் பெருவுருவில் வைத்து அர்த்தமின்மை ஆக்கி, சாரமின்மை ஆக்கி, காலமின்மை ஆக்கி களிக்கும் ஒன்றைக் கண்டடையும் கணங்களின் மொழிப்பதிவுகள். திரும்பிப் பார்க்கையில் மிகப்பெரும்பாலான கவிதைகள் இந்த வெறுமையின் களிநிலை நோக்கிச் சென்று நிற்பதைக் காண்கிறோம். சொல்லப்போனால் வான்நோக்கி சென்று முடிவிலி முன் தோற்று வளைந்து கீழே விழும் அம்புகள் என்று இக்கவிதைகளை சொல்லமுடியும். ஆனால் அவை ஒன்றை சுட்டுகின்றன. சென்று எட்டாவிட்டாலும் வானை

வெறுமை அல்லது முடிவிலி எனும்போது அவை தேவதச்சன் கவிதைகளில் இருத்தலியல் காலகட்டத்துக் கவிதைகளின் துயரைச் சென்றடைவதில்லை. பொருளின்மை என்று சொல்லும்போது அவை சோர்வை அளிப்பதில்லை என்பதைச் சுட்டவேண்டும். பொருளின்மையின் களியாட்டம் என்றோ முடிவிலியை உணர்ந்ததன் மோனம் என்றோ இக்கவிதைகளை சொல்லலாம் என்று தோன்றுகிறது .ஆகவே தேவதச்சனின் கவிதைகள் பெரும்பாலும் இனிய குதூகலம் ஒன்றை அளித்து நிற்கின்றன.

இப்படி சொல்லலாம், இயற்கையை ,முடிவிலியை, அத்துவானவெளியை மனிதன் தன் தரப்பிலிருந்து அவற்றை பார்ப்பதன் சோர்வும் துயரும் அவர் கவிதைகளில் இல்லை. தன்னை இங்கே உதிர்த்துவிட்டு அதன் தரப்பில் சென்று நின்று பார்க்கும் விடுதலைக் களியாட்டம் அவர் கவிதையில் உள்ளது. பார்க்கப்படும் ஜெல்லிமீன் விழிகளை பார்வையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறது

திரும்பத் திரும்ப அன்றாட நிகழ்வுகளை பரிசோதித்துக் கொண்டே இருக்கின்றன அவருடைய கவிதைகள். குழாய்நீரை, குளியல் அறைச் சோப்பை, முற்றத்தில் இலையுதிர்க்கும் வேப்பமரத்தை, களைத்துப்பறக்கும் காகத்தை, சைக்கிள் பெண் கடக்கவிருக்கும் சாலையை .ஒவ்வொரு முறையும் அக்காட்சி வெளிக்கு அப்பால் செல்ல மொழியால் முயல்கிறார்.

இங்குள்ள ஒவ்வொரு பொருளும் பயன்பாடு என்னும் ஒரு முகத்தைக் கொண்டுள்ளது. பயன்பாட்டால் ஒன்றை ஒன்று பிணைத்துக் கொண்டுள்ளது அது பயன்பாட்டின் சரடால் மாறி நம்மைச் சூழ்ந்து ஒரு பொருள்வய உலகை உருவாக்கியிருக்கின்றன அவை. கவிதை அப்பயன்பாடை நுணுக்கமாக ரத்து செய்யும் போது ஒவ்வொரு பொருளும் தனித்தனியாகி விடுகின்றன. அவை இணைந்து அளிக்கும் ஒற்றை உலகம் மறைந்து அவ்வுலகத்தில் அவை கொண்ட அர்த்தங்கள் அழிந்து அவையனைத்தும் பிறிதொன்றாகிவிடுகின்றன.

தொலைந்து தொலைந்து திரும்ப கிடைக்கும் சோப் குளியலறையில் அழுக்கு நீக்கும் பொருள் அல்ல அதற்கு அப்பால் அதற்கொரு விளையாட்டு நோக்கம் உள்ளது. ஒவ்வொன்றும் தன்னை பிறிதொன்றாக காட்டும் இந்த விளையாட்டுப் பெரும்பரப்பு தமிழ்க் கவிதையின் அரியதோர் அர்த்தவெளியாக உள்ளது. இவ்வாறு புழக்க அர்த்தமென்பதை தொடர்ந்து ரத்து செய்வதன் கலை என்று தேவதச்சனின் படைப்புலகை சொல்லலாம்.

இங்கு நாம் அறியும் ஒவ்வொன்றும் அதுவன்றி பிறிதொன்றாக இருக்க முடியும். சம்பந்தமற்ற இரு பொருட்கள் அருகருகே வைக்கும் போது நாமறிந்த அர்த்தத்தை இழந்து நம்மை அவை துணுக்குறச் செய்கின்றன. உடை வாள் ஒன்று ஒரு வீட்டு திண்ணையில் வைக்கப்பட்டிருந்தால், படுக்க விரிக்கப்பட்ட பாயொன்றில் வெட்டப்பட்ட தலையொன்றிருந்தால் போல. சின்னஞ்சிறிய குழந்தைகள் காணும் உலகம் ஒருவேளை அத்தகையதோ ?

என் மகன் சிறுவனாக இருக்கையில் ஒரு முறை ஆட்டுக் கறி வாங்க அவனை எடுத்து சென்றேன். சிறிய ஸ்டூல் ஒன்றில் வெட்டப்பட்ட ஆட்டின் தலை வைக்கப்பட்டிருந்தது. துணுக்குற்று அதை பார்த்தபின் என்னை பார்த்து ‘அந்த ஆட்டின் கால்களைப் பார்த்தாயா?’ என்றான் திகைத்து திரும்பி நோக்கினால் சதுர வடிவ உடலும் சதுர வடிவக் கால்களும் மரக்கால்களும் கொண்டு நின்றிருந்த ஒருஆட்டைக் கண்டேன். அதன் கண்களில் இருந்த துயரம் மிகுந்த சிரிப்பை உணர்ந்தேன்.

பின்னர் குழந்தை மொழிக்குள் வருகிறது. மொழி வழியாக இவ்வுலகு கட்டப்பட்டுள்ளது ஒவ்வொன்றுக்கும் இதுவரை நம் முன்னோர் கொடுத்த அர்த்தங்களால் ஆனது மொழி. சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் அது தன் அர்தத்ததால் விலக்கி ஒன்றுடன் ஒன்று தொடுத்து வைத்திருக்கிறது. ஒன்று பிறிதை அடைய உதவுகிறது. முதன்முறையாக சந்தையொன்றில் குரங்கைக் கண்ட அஜிதனை நினைவுகூர்கிறேன். முதலில் திகைத்து சொல்லிழந்தான் பின்பு கையை அதைச் சுட்டி ஏதோ சொல்ல முயன்றான். ஒரு கணத்தில் மூளை மின்ன ”பார்த்தாயா குழந்தை!” என்றான். குரங்கு ஒருவகையான குழந்தை என்று புரிந்து கொண்டான்.

பிறிதொன்றிலாத முதல் அனுபவத்தை அந்தஃகரண விருத்தி என்கிறது பௌத்த ஞானம். அங்கே நம் உள்ளுணர்வு அதிர்வடைகிறது. நம் அகம் முற்றிலும் நிலைகுலைகிறது. அறிதல் ஓர் துன்பமாக ஓர் அறைதலாக நிகழும் கணம் அது. அத்தகைய மகத்தான முதலறிதலின் கணங்கள் வழியாகவே நமது பிரக்ஞை நிகழ்ந்து கொண்டிருக்கிறது .பின்பு முன் அனுபவம் என்னும் பெரும் பரப்பில் அதைக்கொண்டு வந்து பொருத்துகிறது. அதை அர்த்தாகார விருத்தி என்கிறது பௌத்தம். பின்பு அதை மொழிக்குள் கொண்டு நிறுத்தி மொழி வழியாக அதை ஆரம்பிக்கிறோம். பௌத்தம் அதை ததாகார விருத்தி என்கிறது.

ததாகார விருத்தியையே ரத்து செய்து மீண்டும் அந்தகரண விருத்தி அளிப்பதையே கவிதை என்கிறோம். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் தேவதச்சனின் கவிதைகள் அனைத்துமே நாம் அறிந்த மொழிவழி முன்தொடர்புகள் கொண்டு சமைக்கப்பட்ட பிரபஞ்சத்தை ரத்து செய்து குழந்தைக்குரிய குதூகலத்துடன் புதிய பொருட்களை எடுத்து நம் முன் வைக்கின்றன. விந்தையாக கலைத்துக் காட்டுகின்றன. நாம் அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளூம் போதே குறும்புச் சிரிப்புடன் அடுத்த நகர்வொன்றை மெல்ல உருவாக்கி நாம் உருவாக்கிய அர்த்தங்களை சரிந்து விழச்செய்கின்றன

தேவதச்சனின் நீண்ட உரையாடல்கள் நிகழ்த்துவதும் இதைத்தான். கோர்த்துத் தொகுத்து உருவாக்கிக் கொண்டிருக்கும் பொருள்வயப் பேருலகை அர்த்தங்களின் வெளியை துண்டுகளாகச் சிதைத்து சிறிய சிறிய ஆச்சரியங்களாக மாற்றிக் கொள்வது அவர் இயல்பு. தன் இந்த இயல்புக்கேற்ற கவிமொழியை தன் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்தில் கண்டடைந்ததே தேவதச்சனின் வெற்றி என்று தோன்றுகிறது.

முந்தைய கட்டுரைகம்பனும் குழந்தையும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைராஜாஜி பிரதமராகியிருக்கலாமா?