‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 4

d d 4

4. குருவிகள் போய்விட்ட நிசப்தம்

ஒரு சுவாரசியமான மாற்றத்தை நாம் பெண்களிடம் பார்க்கலாம். கன்னியர் என்று ஆகி மணமாகி அன்னையாவது வரை அவர்களின் உடல் சார்ந்த தன்னுணர்வு ஒருவகை இறுக்கத்தை அசைவுகளில் நிறுத்தியிருக்கும். சூழல் பற்றிய உணர்வு காற்றை ஏற்கும் தீபச்சுடர் போல அவர் அசைவுகளில் எப்போதும் இருக்கும். நேர்விழியை விட ஓரவிழி கூர்மை கொண்டிருக்கும். தொடுகையைப்போல் பார்வையை உணரும் தன்மையை உடல் அடைந்திருக்கும்.

ஆனால் முதற்குழந்தை அவர்களை விடுவிக்கிறது. ஒரு முலையில் குழந்தை பாலுண்ண மறுமுலையை திறந்து போட்டு பேருந்து நிலையத்தில் அமர்ந்திருக்கும் பெண்களை நான் கண்டிருக்கிறேன். முறுக்கப்பட்ட சுருள் வில் ஒன்று அதன் உச்சத்தை அடைந்து மறுதிசை நோக்கி தன்னை விடுவித்துக் கொள்ளும் அது போல.

அதைப் போன்ற ஒரு மாறுதல் தேவதச்சனின் கவிதைகளிலும் நடந்திருப்பதை வாசகன் காணமுடியும். அதுவே அவர் முந்தைய காலகட்ட கவிதைகளில் இருந்து இன்றைய காலகட்டக் கவிதைகளை பிரித்துக் காட்டுகிறது என்று தோன்றுகிறது. அவரவர் கை மணல் தொகுதியின் கவிதைகளை இப்போது பார்க்கையில் அவை தேர்ந்த பொற்கொல்லன் கிடுக்கியால் தொட்டு எடுத்து பொடியிட்டு உருக்கி ஒட்டிய நகைகளின் நேர்த்தியுடன் கட்டமைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

பல்லாயிரம் பேர் கூடிய அரங்கில் மேடையேறி பத்து வார்த்தைகளை மட்டுமே சொல்லிவிட்டு கிளம்பிச் செல்லும் தத்துவ ஞானி ஒருவரின் பாவனை அவற்றில் இருக்கிறது. மிக தீவிரமான முகத்துடன் நமது உள்ளங்கையில் அரிய பொருள் ஒன்றை கவிஞர் வைக்கிறார் என்று தோன்றுகிறது. அவற்றைப்பற்றி ஒருமுறை நான் சொன்னேன், நாலாட்டின்புதூருக்கு அப்பாலுள்ள பொட்டலில் கிடக்கும் ஆட்டுப்புழுக்கைகள் போன்றவை என. ஈரமற்று உலர்ந்து விதைபோல ஆனவை. ஆடு மேய்ந்த அத்தனை செடிகளையும் அதை முகர்ந்து அறிந்துவிடமுடியும்.

பழத்தை சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும்
என்றாள் அம்மா
வாங்கி விண்டு
உண்டேன்
இன்றை.

என்ற கவிதை ஓர் உதாரணம். வாங்கி விண்டு உண்டேன் இன்றை என ஒவ்வொரு சொல்லிலும் அழுத்தம் விழும்படியாக தேவதச்சன் அவ்வரிகளை உடைத்து அமைத்திருப்பதைக் காணலாம். யுவன் சந்திரசேகரின் கணிசமான கவிதைகளில் இந்த இறுக்கம் இருப்பதை அவதானிக்கிறேன்.

பிற்காலக் கவிதைகளோ ’ஒன்றுமில்லை, இப்போது வரும்போது இதைப்பார்த்தேன், சும்மா, சொல்லத்தோன்றியது’ எனும் பாவனை கொண்டுள்ளன. எவ்வகையிலும் அக்கவிதைகளுக்கு ஓர் அடிக்கோடிட தேவதச்சன் முயல்வதில்லை. அவரது ஆரம்பகாலக் கவிதைகளில் மிகக்கூரிய படைக்கலம் ஒன்றைக்கையில் வைத்திருப்பவனின் பதற்றம் இருந்தது. இன்று வாளுடன் பிறந்து வாளுடன் ஒவ்வொருகணமும் வாழும் ஒருவன் முற்றிலும் வாளையே மறந்து விட்டது போல் இருக்கிறது அவரது மொழி.

அவளது வலதுபக்கம் அம்மா அமர்ந்திருக்கிறாள்
எதிரில் இருக்கும் அதிகாரியோ தேநீரை
ஒவ்வொரு மடக்காகச் சுவைத்துக்கொண்டிருக்கிறார்
அம்மாவின் கையில் கட்டியிருக்கும் கடிகாரம்
அப்பாவுடையது
ஆறுமாதத்திற்கு முன் இறந்துபோனவரின் எச்சம் அது
அதன் ஒரு வினாடி முள் நகரும்போது
எதிர்காலம் எல்லாமும் நகர்ந்துவிடுகிறது
அம்மா பதட்டத்துடன் பேசுகிறாள்
சில ஆவணங்களைக் காட்டுவதற்கு
பாலிதீன் பையிலிருந்து அவற்றை வெளியே எடுக்கிறாள்‘
வழக்கம்போல அவை நழுவி தரையில் விழுகின்றன
அம்மாவின் வலதுபக்கம் யாருமில்லை

என ஒரு நுண்சித்தரிப்பை மட்டுமே அளித்துவிட்டுச் செல்லும் கவிதைகளைப் பின்னாளில் தேவதச்சன் எழுதியிருக்கிறார். அவை அவற்றின் இயல்பான கூறுமுறையினுள் உள்ள இரக்கமற்ற விலகலால் கவிதையாகின்றன.

இக்கவிதையில் ஒவ்வொன்றும் படிமம் ஆகியிருக்கலாம். அம்மாவின் கையில் கட்டியிருக்கும் அப்பாவின் கடிகாரம். அப்பாவின் காலத்தை அது காட்டுகிறது. இரக்கமில்லாமல் அது கடந்துசெல்கிறது. ஆனால் சித்தரிப்பு என்னும் எல்லைக்கு அப்பால் அவை செல்லக்கூடாது, படிமம் ஆகக்கூடாது என தேவதச்சன் கவனம் கொள்கிறார்

அம்மாவின் வலப்பக்கம் காலியாக இருக்கிறது. வழக்கம்போல அவள் சிதறவிடும் காகிதங்களை சேர்க்கும் கைகள் அங்கில்லை. வாழ்நாள் முழுக்க அவள் இடப்பக்கமாக இருந்தாள். இன்று தனித்திருக்கிறாள். மாதொரு பாகனில் எஞ்சிய மாது. ஒரு கணத்தில் அந்த சித்திரம் விபத்தில் கார்பலூன் போல விரிந்து நம்மை அழுத்தும் அனுபவமே இதை கவிதையாக்குகிறது

இக்காலகட்டக்கவிதைகளை பழைய தேவதச்சனிடம் கொடுத்தால் முக்கால்வாசி வரிகளை வெட்டி வீசிவிடுவார் என்று தோன்றுகிறது. ஒரு சித்திரத்தை சுருக்கமாகவும் அடர்த்தியாகவும் உருவாக்க அவர் முயல்வதில்லை. இயல்பாக பக்கத்திலமர்ந்து பேசிக்கொண்டிருப்பதுபோல உருவாக்க விழைகிறார்.

வானவில்கள்

அது
நிறங்கள் அடர்த்தியாகிக்
கொண்டுவரும் வானவில். என்
வீட்டின்மேல் அழகாய் வட்டமிடத்
தொடங்கியது
“எவ்வளவு பெரிய வில். உள்ளே
வந்தால் வீடு
உடந்துவிடும்தானே” என்கிறார்கள்
உறவினர்கள்
“வில்லும் உடைந்துதானே
போகும்” என்கிறார்கள்
நண்பர்கள்
கண்ணில் வழிந்தோடும்
குமிழிகளில்
தானே வளர்கிறது
சப்தத்தைக் கடந்த அன்பில் வில்
தோன்றித் தோன்றி மறையும் சாலைகளாக
வளைந்திருக்கும்
வானவில்லுக்குள்ளே
இருக்கிறது என் ஊர்.
ஊருக்குள்ளே இருக்கிறது
என் வீடு,
எப்போதும்
கதவுகள் மூடியிருக்கும்
என் சின்னஞ்சிறிய வீடு

என்னும் கவிதையை பழைய தேவதச்சன் சோடாப்புட்டிக்குள் கண்கள் தெறிக்க அமர்ந்து அறுவைசிகிழ்ச்சை செய்து இப்படி ஆக்குவதை என்னால் மனக்கண்ணில் பார்க்கமுடிகிறது.

வானவில்கள்

நிறங்கள் அடர்த்தியாகிக்
கொண்டுவரும் வானவில்.

உள்ளே
வந்தால் வீடு
உடந்துவிடும்தானே” என்கிறார்கள்

“வில்லும் உடைந்துதானே
போகும்”

கண்ணில் வழிந்தோடும்
குமிழிகளில்
தானே வளர்கிறது

வானவில்லுக்குள்ளே
என் ஊர்.
ஊருக்குள்ளே
என் மூடிய வீடு.

சொற்சிக்கனமென்பதை கைவிட்ட கணமே தேவதச்சன் உருவாகி வரத்தொடங்கினார் என்று எனக்கு தோன்றுகிறது உண்மையில் அவரது இயல்பான உரையாடலே சொற்சிக்கனமற்றது தான். சுந்தர ராமசாமி உரையாடலுடன் தேவதச்சன் உரையாடலை ஒப்பிட்டு நான் ஒருமுறை பேசியிருக்கிறேன். கருத்து என ஒன்றை சொல்ல வருகையில் மூளைக்குள் அனைத்துக் கடிவாளங்களையும் இழுத்து பிடித்து டி.எஸ்.எலியட்டை நினைவுறுத்தும்படி வரையறை போன்றட சொற்றொடர்களில் சொற்களை எண்ணி எண்ணி அடுக்கி சேர்த்து வைத்து பேசும் இயல்பு சு.ராவுக்கு உண்டு.

ஆனால் தேவதச்சன் பள்ளி விட்டு வந்து தன் சாகச செயல் ஒன்றை தந்தையிடம் சொல்லும் சிறுவனின் எழுச்சியுடனும் விரைவுடனும் சொற்களைக் கட்டுவார். நடுவே நகைப்பார். தொடையை தட்டிக்கொள்வார். எழுந்து சென்று வெற்றிலைச்சாறை உமிழ்ந்துவிட்டு மேலும் எழுச்சி கொண்டு அங்கிருந்தே கைவீசிப் பேசிக்கொண்டு உள்ளே வருவார். பேசுபவர்களை மறித்துப்பேசுவார். தன் வாக்கில் வந்த நல்ல வரிகளுக்காக தானே மகிழ்வார்.

அந்த கட்டற்ற துள்ளும்சிறுவனை அவரது ஆரம்பகாலக் கவிதைகளில் காண முடிவதில்லை. அவை அவருக்கு முந்தைய கவிதை மரபிலிருந்து அவர் பெற்றுக்கொண்ட வடிவத்தை கையாள்பவை. ஆனால் சி.மணியும் ஞானக்கூத்தனும் உருவாக்கிய அங்கதம் தேவதச்சனுக்கு உவப்பானதல்ல. ஆத்மா நாம் முன் வைத்த நெகிழ்வும் பரிவும் அவரால் பங்கிடப்படக்கூடியவை அல்ல .அவரது இயல்பின் தத்துவார்த்தமான எண்ணப்போக்கும் விலகலும் அதற்கு ஒவ்வாதவை.

அவர் முன்னுதாரணமாக்க் கொண்ட கசடதபற இயக்கத்தின் கவிஞர்கள் சரளமான கூறுமுறையைக்கொண்டவர்கள் அவர்கள் தான். அவர்களை நிராகரிக்கும் போக்கில் அந்த சரளத்தையே அவர் நிராகரித்தார் என்று கொள்ள வேண்டியிருக்கிறது. அத்துடன் எண்ணி அமைத்த வார்த்தைகளால் ஆன ஜென் கவிதைகளின் தாக்கமும் அவரிடம் இருந்தது

ஆனால் ஜென் கவிதைகள் அனைத்துமே குழந்தைக்குரிய விழிவிரிப்பை கொண்டவை. தேவதச்சனின் தொடக்க காலக் கவிதைகளில் அந்தக் கள்ளமின்மையும் சிரிப்பும் நிலவவில்லை,. ஆகவேதான் அவை தத்துவஞானியின் உதாரண வரிகள் என்ற இயல்பை மீண்டும் மீண்டும் சென்றடைந்தன. இரண்டாம் கால கட்ட கவிதைகளில் ஆடையை அவிழ்த்துவிட்டு காற்றாட நின்றிருக்கும் விடுதலையை தேவதச்சன் அடைந்திருக்கிறார்.

ஊட்டியில் இரண்டாயிரத்து நான்கில் நிகழ்ந்த தமிழ் மலையாளக் கவியரங்கு ஒன்றில் தேவதச்சன் கலந்து கொண்டார். அவரது கவிதை ஒன்று வாசிக்கப்பட்டது. உடலுக்கேற்ப உருமாறும் சட்டையெனக் காலம் சித்தரிக்கப்பட்ட அக்கவிதையில் அது வளர்ந்து கைகளை மறைக்கும் சித்திரம் வந்து முழுமை நிகழ்ந்தபோது அரங்கு முழுக்க எழுந்த மெல்லிய சிரிப்பொலியையும் வியப்புச்சொற்களையும் இப்போது நினைவுறுகிறேன்.

தேவதச்சனின் எந்த முற்காலக் கவிதையையும் அந்த சிரிப்பை உருவாக்கி இருக்காது. அவை தியானமந்திரங்கள் என்னும் பாவனை கொண்டவை. இவற்றிலுள்ள ‘சரிதான், இப்ப என்ன?’ என்ற பாவனை அவற்றில் இல்லை. இன்று அவரது கவிதைகள் அடுத்த காலகட்டத்திற்கு சென்றுவிட்டன என்பதற்கான ஆதாரம் அந்த சிரிப்பு.

உரத்த குரலில் டி .பி .ராஜீவன் சொன்னார் ,”ஒரு சொல் கூட விவாதிக்க வேண்டியதில்லை. இந்தக் கவிதையில் இனி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. இது கவிதை”. அவரது முழுமை கொண்ட கவிதைகளில் ஒன்று என்றும் தமிழில் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று என்றும் அதை நான் எண்ணுகிறேன். பிற்கால தேவதச்சன் கவிதைகளில் மிகச் சிறந்த முன்னுதாரணம் அது.

நவீனக் கவிதையின் பொது உணர்வென ஒன்று இருக்க முடியுமா என்று பார்த்தால் அதை துயர் என்று சொல்லலாம். இன்று பார்க்கையில் எழுத்து காலகட்டத்தில் இருந்து சமகாலக் கவிஞர்கள் வரைக்கும் ஏதோ ஒரு வகையில் மீண்டும் மீண்டும் துயரைத்தான் பாடுபொருளாக்கியிருக்கிறார்கள். ஒரு பகுப்பாய்வின் முப்பட்டைக் கண்ணாடிக்குள் அத்துயரை விட்டால் அது மூன்று வகை துயராக பிரிவதைக் காணலாம் தனிமையின் துயரம், பிரிவின் துயரம், இருத்தலின் துயரம். துயரைக் கொண்டாடும் ஒரு மனநிலையை மெல்ல இக்கவிதைகள் உருவாக்குகின்றன.

ஆனால் கவிதை என்பதே கொண்டாட்டம் என்றிருக்க அதில் பேசப்படுவதும் மெல்ல மெல்ல கொண்டாட்டமாகிறது. பின்பு துயருக்கான துயராக அது மாறுகிறது. பின்பு நவீனக்கவிதை என்ற மொழிக்கட்டமைப்பு தன்னளவிலேயே துயரை நோக்கி செல்லத் தொடங்கியது. அதன் இறுக்கமான வடிவமும் சுருக்கமான மொழியும் துக்கத்தை குறித்துப்போட வாகானவை என ஆயிற்று. ‘தேடலின் புனித துக்கம்’ என்று சுந்தர ராமசாமி அதைச் சொன்னார். ‘சும்மா இருப்பதன் துக்கம்’ என்றார் நகுலன்

வியத்தகு முறையில் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தை சார்ந்த இரு கவிஞர்களிடம் துயரம் இல்லை என்பதை கவனிக்கிறேன். தேவதச்சனைப்போலவே தேவதேவனும் துயரற்றவர். எப்போதும் தேவதேவனிடம் ஒரு வலுவான பித்தும், கற்பனாவாத நிலையும் இருந்துகொண்டிருக்கிறது. ஒரு புல்லின் இதழ் கொண்டு ஒரு காட்டையே படைக்கும் உத்வேகம் அவரிடம் உண்டு. அது அவரை துயரற்றவராக்குகிறது

அவரது சம காலத்தவர் என்று சொல்லத்தக்க தேவதச்சனிடம் அந்த கற்பனாவாத எழுச்சி இல்லை. பித்துநிலை இல்லை .ஆனால் ஒரு வண்ணத்துப்பூச்சியின் காலில் ஒட்டியிருக்கும் மகரந்த தூளில் உருவாகச் சாத்தியமான பெருங்காட்டை பார்க்கும் களிப்பொன்று அவரது கவிதைகளை துயரற்றதாக்குகிறது.

தேவதச்சனின் கவிதைகளை திரும்ப திரும்ப அளையும்போது அத்தனை கவிதைகளிலும் இருக்கும் துயரின்மை, கொண்டாட்டம் வியப்பூட்டுகிறது. துயரென்பதை உணருவதற்கு முந்தைய இளமைபருவத்திலேயே நின்றுவிட்டதைப் போலிருக்கிறது இக்கவிதையின் மேற்பரப்பு. காண்பவை அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் சிறுவனின் கண்கள் அடைந்த காட்சிகளால் ஆனவை இக்கவிதைகள். அடுத்த கட்ட வாசிப்பு காண்பவை அனைத்திலிருந்தும் முழுமை கண்டடைந்த தத்துவ ஞானியொருவனின் விலகலை நமக்கு காட்டுகின்றன . அவ்வீடுபாட்டின் களியாட்டத்தால் அவ்விலகலின் துயரின்மையால் நிகழ்ந்துள்ளது இக்கவிதையுலகம்.

’இதோ,பார் இங்கே!” என்று கொந்தளித்தெழுகிறது தேவதேவனின் கவிதை என்றால் தேவதச்சனின் கவிதைகள் ‘இவையனைத்திலுமே இவ்வொன்றிலுமே’ என கூவியபடி துள்ளி சுழன்று வருகிறது தேவதச்சனின் கவிதை. உப்பரிகையின் மேல் எழுந்து நின்று கீழே நிகழும் மனித வாழ்க்கையை எட்டிப் பார்த்து ‘ஒன்றுமில்லை, எளிய மானுடர் ஏதோ செய்யும் அரவம்’ என்று உணரும் ஒரு மீபிரக்ஞை தேவதேவனின் கவிதையில் இருக்கிறதென்றால் திருவிழாவில் முற்றிலும் தன்னை தொலைத்துக் கொண்டு கால்களுக்கு நடுவே ஓடிஓடி சுற்றி வரும் சிறுவனின் விடுதலையை கொண்டாடுகின்றன தேவதச்சனின் கவிதைகள்

கவிதைக்கென்றே அமைந்த வழக்கமான பேசுபொருட்கள் அனைத்தையுமே இக்கவிதைகள் உதறியிருப்பது இதனால்தான். தமிழ் நவீன கவிதை பேசுபொருளாக அடைந்த திரிபு, தனிமை, ஆற்றாமை போன்ற உணர்வுகளைக் கூடவே தவிர்த்துவிட்டிருக்கின்றன. மீண்டும் மீண்டும் மிக எளிய தருணங்களை தொட்டறிந்து புதிய விளையாட்டு பொருள் கிடைத்த பெரும்பரவசத்துடன் அதை புரட்டி நோக்கி எங்கோ விசித்திரமான ஒரு எல்லையை திறந்து உட்புகுந்து நின்றுவிடுகின்றன.

ஒருவகையில் இக்கவிதைகள் செய்வதென்ன என்பது வியப்புடன் கவனிக்கத்தகுந்தது. முன்னிலைப்படுத்தல் [ Forefronting ] என்று கலையில் வகுக்கப்படும் ஒன்று அல்லது ஓவியத்தில் சட்டகப்படுத்தல் [ framing] என்று சொல்லப்படக்கூடிய ஒன்று. எடுத்து முன் நிறுத்துதல், ஒரு சட்டகத்தில் வைத்தல். வின்சண்ட் வான்கா எளிய விவசாயியின் கிழிந்த செருப்புகளை ஒரு சதுரp படத்திட்டத்துக்குள் அமைக்கையில் ,அவ்வாறு அதை முன்நிறுத்துகையில் அது ஒரு கலைப்படைப்பாக மாறுகிறது. விவசாயிகளின் துயரை அல்லது கைவிடப்படும் பொருளின்மையை அல்லது நினைவுகளின் சுமையை அது குறிக்கத் தொடங்குகிறது.

தேவதச்சன் அன்றாட நிகழ்வுகளை ஒட்டுமொத்த நோக்கால் பொருளேற்றம் செய்வதில்லை மாறாக அதை சுற்றி ஒரு விரைவான சதுரக்கோடு வழியாக ஒரு சட்டத்தை உருவாக்குகிறார். பிரபஞ்சத்தின் முடிவற்ற கோடிகோடி நிகழ்வுகளிலிருந்து அதை சற்றே முன்னுக்கு தள்ளிவைக்கிறார். அது உருவாக்கும் அர்த்த சரடுகளுக்கு முற்றிலும் அதையே பொறுப்பாக்குகிறார். அக்காட்சிகளுக்கு பின்னால் நின்று அவர் சொல்வதென ஏதுமில்லை.

காத்திருத்தல்

நிறையப் பேர் உறங்கியபடி காத்திருக்கிறார்கள்
உறவுப்பெண்கள் தேநீர் குடித்தபடி
சித்ரகுப்த நயினார் கதையைப் பாடியபடி
நடுவீட்டில், முதுமகள், இறந்தபடி காத்திருக்கிறாள்
நடுச்சாமம் நகர்வதற்கு
பொழுது புலர்வதற்கு
ரத்த உறவுகள் காலையில்
கதறியபடி வருவதற்கு
சாவின் கண்ணாடி காத்திருக்கிறது.
பக்கத்து வீட்டு ஜன்னலை மூடி
தன் பருத்த காம்புகளை
கணவனுக்கு ஈந்து
இறுகப் புணரும் இளமகளின் நாசியில்
வந்துவந்து போகிறது பத்திவாசனை.
தெருவில்
கலைந்து கிடக்கும்
இரும்புச் சேர்களில்
காத்திருக்கிறது
நிலவொளி.

இந்நிகழ்வு சொல்லப்பட்டதனாலேயே கவனிக்கப்பட்டு கவிதையாக ஆகிவிட்டிருக்கிறது என தோன்றுகிறது. சர்வசாதாரணத்தன்மையே இதன் அழகு. அத்தனைபேரும் அறிந்த ஒன்று. வேண்டுமென்றால் இறப்பும் பிறப்பும் என அதை சிந்தனையாக்கிக்கொள்ளலாம். மரணத்தை வாழ்க்கையால் எதிர்கொள்ளல் என பொருள் அளிக்கலாம். ஆனால் அவற்றுக்கு அப்பாலும் அது ஒரு நிகழ்வு மட்டுமே.

ஒரு கவிஞன் இந்த சிருஷ்டிப்பெருக்கை , அதை நிகழ்த்தும் ஏதோ ஒன்றை எப்படிப்பார்க்கிறான் என்பது அவனைப்புரிந்துகொள்ள மிக உதவியான ஒன்று. பிரமிளுக்கு அது உக்கிரம், ஒரு நடனம்

நாம் ஒருவருள் ஒருவர்
ஊடுருவ முடியாதா?
ஊடுருவி நின்றாடி
எமது ரத்தத் துடிப்பின்
நடனத்தைப்
பருகமுடியாதா?

என தவிக்கும் முடிவில்லாத தாகம். தேவதேவனுக்கு அது ஒரு இமைவிழிப்பு. ஓர் ஒளியெழல். ஒரு பெரும்புன்னகை.

தான் என ஒரு கணமும்
முழுமுதல் என மறு கணமும்
இங்கும் அங்குமாய் அல்லாது
வேறெங்கும் செல்லாத ஒரு பயணியாய்
என்றும் இருக்கிறதை மட்டும் அறிந்திருந்தது அது

என தன்னை உணரும் ஒரு களிப்பெருநிலை.

ஆனால் தேவதச்சனுக்கு அது ஒரு விளையாட்டு. இருப்பும் இன்மையுமாக கலைந்து கலைந்து அடுக்கிக்கொள்ளுவது. நிகழ்வதும் பதிவதுமாக , எண்ணமும் மொழியுமாக சலிக்காது ஆடுவது.

ஓவியத்துக்கும் தாளுக்கும்
நடுவே உள்ள
இடைவெளியில்
அசைந்தபடி செல்கின்றன
சோர்வுற்ற அதன் இறக்கைகள்

என காகங்களை அறியும் கவிதை. தேவதச்சனின் அனைத்துக்கவிதைகளிலும் ஓடும் பொதுச்சரடு என்பது இதுவே. இந்த வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு கணத்தையும் அரியநிகழ்வாக ஆக்கும் முடிவில்லாத ஆடல். ஆடல் என்று ஆனபின்னர் அதற்கு பொருளென, இலக்கென ஏதுமிருக்கவேண்டியதில்லை. உருவென சாரமென ஏதும் இருக்கவேண்டியதில்லை.

சிறுவனுக்குரிய கண்களுடன் பார்க்கும் காட்சிகளின் கவித்துவம். ‘நண்பகலோ நள்ளிரவோ பாறைகள் எப்போதும் மாலைநேரத்திலேயே இருக்கின்றன’ என்று சொல்லும் ஒருவரின் மொழியைப்புரிந்துகொள்ள அந்த அழியா இளமையின் சாயல் நம்மிடமும் தேவை.

அவரது தரிசனத்தின் மிகச்சிறந்த உதாரணம் அவரது சிறந்த கவிதைகளில் ஒன்றான ஜெல்லிமீன். தன் உருவற்ற உருவை எடுத்து ஜெல்லிமீனே ஜெல்லிமீனே என விளையாடும் குழந்தைகளிடமே கண்களை, விரல்களைப்பெற்று ஜெல்லிமீனே ஜெல்லிமீனே என்று தானும் நடனமிடும் ஜெல்லிமீனின் லீலை. அதையே அவரது அனைத்துக்கவிதைகளும் வெவ்வேறு மொழியில் சொல்லிக்கொண்டிருக்கின்றன போலும்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஉமாகாளி
அடுத்த கட்டுரைநேருவின் பொருளியல்கொள்கை பற்றி…