தமிழ் ஹிந்து- பாராட்டுக்களும் கண்டனமும்

1

இன்றைய தமிழ் ஹிந்து நாளிதழின் நடுப்பக்கப் படங்கள் சென்னையின் வெள்ளத்தை அருமையாகக் காட்டின. செல்பேசியில் அசையும்படம் எடுக்கும் வசதி வந்ததுமே செய்திப்பதிவில் புகைப்படங்களின் காலம் முடிந்துவிட்டது என்னும் எண்ணம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அதன்பின்னரும் புகைப்படங்களின் இடம் அப்படியே இருப்பதைத்தான் பார்க்கிறேன்

காரணம், புகைப்படங்களின் படச்சட்டம். அது காட்சியை வரையறைசெய்கிறது. நிலைத்தகாட்சி நம்மை உற்றுப்பார்க்கச் செய்கிறது. அசையும் காட்சிகளில் நாம் காணாத நுட்பங்கள் தெரிகின்றன. சொல்லப்போனால் புகைப்படத்தின் காட்சிகள் குறியீடுகளாக நம்மையறியாமலேயே நம்முள் உருவாகின்றன.குறிப்பாக குருதி வழிவதுபோல கார்களின் வெளிச்சம் தெரியும் படம் [ம.பிரபு]

புகைப்பட நிபுணர்களான ம.பிரபு, எம்.வேதன், ஆர்.ரகு, எம்.மூர்த்தி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

சென்னை மழையின் வெவ்வேறு முகங்களை, பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் கட்டுரைகள் தமிழ் ஹிந்துவில் வெளியாகின்றன. ஆசிரியர் குழுவின் ஆர்வம் மிக்க உழைப்புக்குப் பாராட்டுக்கள்.

டி.எல்.சஞ்சீவ்குமார் தமிழகத்தின் விரிவான பாசன அமைப்பைப்பற்றி எழுதிவரும் கட்ட்டுரைத்தொடர் முக்கியமானது.அ.கா.பெருமாள் முதலிய ஆய்வாளர்கள் பலகாலமாக சொல்லிவருவது. நான் அவற்றின் மேல் கவன ஈர்ப்பாக நிறைய எழுதியிருக்கிறேன். சஞ்சீவ் குமார் உழைத்து தகவல்கள் சேகரித்து எழுதும் இக்கட்டுரைகள் இன்றைய மழைச்சூழலில் மேலும் கவனம் ஈர்ப்பவை

ஊழலில் சுயநலத்தில் மூழ்கிய அரசுகளை நம்பிப்பயனில்லை. ஏரிகளாவது இன்று விவசாயிகள் தவிர எவருக்கும் முக்கியமற்றவை ஆகிவிட்டன. அத்தனைபேரும் பயன்படுத்தும் சாலைகளின் நிலை என்ன? நாகர்கோயிலில் உண்மையில் சென்ற பல ஆண்டுகளாக தேசியநெடுஞ்சாலை தவிர சாலை என்பதே இல்லை. உலகின் எந்த நாட்டிலும் சாலைகள் இப்படி இருப்பதை பார்த்ததில்லை.

எவருக்காவது புகார்கள் உள்ளனவா? எவரது மனநிலையாவது தேர்தலில் பிரதிபலிக்குமா? தேர்தல் முழுக்கமுழுக்க சாதிக்கணக்கு, பணக்கணக்கு. அப்படியிருக்க அரசியல்வாதிகளால் இவை பேணப்படும் என்பதற்கு வாய்ப்பே இல்லை. கோவை சிறுதுளி அமைப்பு போல ஆங்காங்கே மக்களமைப்புகளே கூடி நீர்நிலைகளைப் பேணினால்தான் உண்டு.

கூடவே ஒரு கண்டனம். இன்றைய நாளிதழில் கே.கே. மகேஷ் என்பவர் எழுதியிருக்கும் ‘தலைவனுக்கு ஓட்டுப்போட்டு தமிழ்நாட்டை தெறிக்கவிடலமா?’ என்னும் கட்டுரை ஒரு நாளிதழின் தரம் கொண்டதல்ல

நாளிதழ்களின் கட்டுரைகள் ஒன்று தெளிவான ஆதாரபூர்வமான செய்திகளைக் கொண்டிருக்கவேண்டும். டி.எல்சஞ்சீவ்குமார் கட்டுரை போல. அல்லது தன்னை நிறுவிக்கொண்ட முக்கியமான ஆளுமையின் கருத்தாக இருக்கவேண்டும். அல்லது முக்கியமான எழுத்தாளரின் நடைச்சித்திரமாக இருக்கவேண்டும்

மூன்றுமல்ல இக்கட்டுரை. ஃபேஸ்புக்கில் பையன்கள் எழுதித்தள்ளுவதுபோன்ற அர்த்தமற்ற ‘கலாய்ப்பு’ கள் கொண்ட மண்ணாந்தைத்தனமான எழுத்து. பாமரன் வகையறாக்கள் எழுதுவதைப்போல. இதை ஒரு நாளிதழ் தன் பக்கங்களில் வண்ணப்படத்துடன் போடுவது மிகமிகத்தவறானது

தவறான முன்னுதாரணமும்கூட. இவ்வகை எழுத்துக்கு உடனடியாக சல்லித்தனமான வாசகர்கள் கிடைப்பார்கள். அதை வாசக வரவேற்பு என எண்ண வாய்ப்புள்ளது. அந்த வாசகர்களே அதைப்போல எழுதி அனுப்புவார்கள். அதையும் தொடர்ந்து போடவேண்டியிருக்கும். நாளிதழ் என்னும் கருதுகோளே வீழ்ச்சி அடையும்

தமிழ் ஹிந்து தரமான கட்டுரைகள் வழியாக உறுதியாகத் தன்னை நிறுவிக்கொண்டிருக்கும் நாளிதழ். ஓராண்டாக அது தன் வாசகர்களைப் பயிற்றுவித்து எடுத்துக்கொண்டிருக்கிறது. இக்கட்டுரை தமிழ்ஹிந்துவின் போக்குக்கே நேர் எதிரானது.

சிறுதுளி தந்த மாற்றம்

முந்தைய கட்டுரைமீன்குருதி படிந்த வரலாறு
அடுத்த கட்டுரைகோவையில் கீதை உரை