மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் வலைத்தளத்தில் எப்படி comment எழுதுவது என்று புரிபடவில்லை. ஆகையால் உங்களுக்கு நேரிடையாக எழுதுகிறேன். இது நான் உங்களுக்கு எழுதும்
முதல் கடிதம். கடந்த நான்கு ஆண்டுகளாக உங்கள் இணைய தள பதிவுகளை படித்து வருகிறேன். அதனால் நான் அடைந்த தெளிவு, ஞானம் ஏராளம். மிக்க நன்றி.
உங்கள் சமுதாய, இலக்கிய, பகுத்தறிவு தொண்டு பல ஆண்டுகள் தொடரவும்,அதனால் நாங்கள் எல்லோரும் பயனடையவும் நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
சகிப்புத்தன்மை குறித்து உங்களின் கருத்துக்களை பதிவு செய்திருந்தீர்கள்.அதற்கு ஒரு நண்பர் கடிதம் எழுதியிருந்தார்.
உடனே, நீங்கள் அவருக்கு உறுதி மொழி அளிக்க வேண்டிய கட்டாயம். அதாவது, இந்த அரசாங்கத்திடமிருந்து எந்த ஒரு விருதையோ, சன்மானத்தையோபெற்றுக்கொள்ளமாட்டீர்கள் என்று.
ஏன் அந்த கட்டாயம்?
இந்தியாவில் இது வரை நாம் எல்லோரும் பார்த்த மட்டும், எந்த அரசில்யல் கட்சியின் எந்த அரசாங்கம் விருது அளித்தால் பெற்றுக்கொள்வீர்கள்?
மதச்சார்பின்மை, நாடு நிலை, நீதி, நியாயம் என்ற பல அளவுகோல்களில் எந்த அரசியல் கட்சி தனித்து நிற்கிறது?
தேவையற்ற வாக்குறுதி. நிர்ப்பந்தம். இந்தியாவில் இன்று நிலவும் சமுதாய உரையாடலின் அராஜக தாக்கம் உங்களையும் பாதிக்க நீங்கள் இடம் கொடுத்தது
வருத்தத்தை அளிக்கிறது.
விருதுகள் உங்களின் ஒப்புதலையோ, ஆதரவையோ பெற்றுக்கொள்ள கொடுக்கப்படும் லஞ்சம் என்பது இது வரை நிறுவப்பட்ட பண்பாடாக இருக்கலாம். அதற்கு நீங்களும் உடன்பட்டாக வேண்டும் என்று உங்களை யாரும் கட்டயாப்படுத்த முடியாது. இது நீங்கள் அறியாதது அல்ல.
உங்கள் எழுத்துக்கு அரசாங்கம் அங்கீகாரம் அளித்தால் அதை பெற்றுக்கொள்ளவும் வேண்டும். அது தவறு செய்யும் போது விமர்சனம் செய்யவும் வேண்டும். அது தான் சரியான நிலைப்பாடு.
அன்புடன்,
அனந்த நாகேஸ்வரன்
அன்புள்ள அனந்த நாகேஸ்வரன்,
எஸ்.எல்.ஃபைரப்பா பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கன்னட மொழியின் முக்கியமான ஐந்து எழுத்தாளர்களில் ஒருவர். [குவெம்பு, சிவராம காரந்த், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், எஸ்.எல்.ஃபைரப்பா, அனந்தமூர்த்தி]. இன்று முதிர்ந்த நிலையில் இருக்கிறார். அவரது ஒருகுடும்பம் சிதைகிறது [கிருஹபங்கா] வம்சவிருட்சம், பர்வம் போன்ற நாவல்கள் சாதனைகள்.
ஃபைரப்பா மரபில் நம்பிக்கை கொண்டவர். அதேசமயம் வம்சவிருட்சா போன்ற நாவல்களில் மரபை மிகமிகக் கடுமையாக விமர்சனமும் செய்தவர். இடதுசாரிக் கருத்துக்களுக்கு எதிரானவர். ஐரோப்பியச் சாயலுடன் எழுதுபவர்களை நிராகரித்தவர்.
ஆகவே அவர்களால் அவர் பழைமைவாதி என முத்திரை குத்தப்பட்டார். ஆனால் அரைநூற்றாண்டு கடந்தபின் அந்த ’நவீன’ படைப்புகளெல்லாம் பொருளிழந்துபோக ஃபைரப்பா அதே வீச்சுடன் இன்றும் வாசிக்கப்படுகிறார்.
ஆனால் ஃபைரப்பா தொடர்ந்து அனைத்து அமைப்புகளாலும் உதாசீனம் செய்யப்பட்டார். மேலே சொன்ன பட்டியலில் ஞானபீடப்பரிசு பெறாதவர் அவர் மட்டுமே
காரணம் கர்நாடகத்தின் கல்வித்துறை, அரசுசார் அறிவுத்துறை முழுக்க முழுக்க போலி இடதுசாரி- லிபரல்களால் ஆனது [உண்மையான இடதுசாரி ஒருபோதும் ஃபைரப்பாவை நிராகரிக்கமாட்டான். அவருடன் விவாதிப்பான்] அவர்கள் அவரை இந்துத்துவ முத்திரை குத்தி ஒதுக்கிவிட்டனர்.
சந்திரசேகரக் கம்பார் போன்ற எலிக்குஞ்சுகளுக்கெல்லாம் ஞானபீடம் வழங்கப்பட்டது. நாலைந்து நாடகங்களை மட்டும் எழுதிய கிரீஷ் கர்நாடு ஞானபீடம் பெற்றார். வேண்டுமென்றே ஃபைரப்பாவை அவமதிப்பதற்காக அளிக்கப்பட்டவை அவை என்றால் மிகையல்ல.
மலையாளத்தில் வாழும் பெருங்கவிஞர் என்றால் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிதான். இந்தியாவின் காவியப்பெருமிதம் வெளிப்படும் படைப்புகளின் ஆசிரியர். ‘இடிந்து சிதைந்த உலகம்’ என்னும் படைப்பில் இடதுசாரிகளை சாடியவர். இந்துஞானமரபின் தொடர்ச்சியாக தன்னை நிறுத்திக்கொள்பவர். ஆகவே முழுமையாக நிராகரிக்கப்பட்டார்.
இடதுசாரிகளை விமர்சித்தமையால், கருணாகர குருவின் சீடராக ஆனமையால் ஓ.வி.விஜயன் எந்த பரிசையும் பெறவில்லை. அவர்களின் கண்ணெதிரே ஓ.என்.வி குறுப்பு என்னும் கற்பனாவாத இடதுசாரிக்கவிஞர் ஞானபீடப்பரிசு பெற்றுச்சென்றார்.
இன்று வரை அசோகமித்திரன் தொடர்ந்து நம் அமைப்புகளால் அவமதிக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவதற்கும் காரணம் இதுவே. இதுவரை ஏழுமுறை அவரது பெயர் ஞானபீட பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் ‘இந்துத்துவ, பார்ப்பனிய’ ஆதரவாளர் என முடக்கப்பட்டார்.
தமிழக சாகித்ய அக்காதமி பட்டியலைப் பார்த்தாலே தெரியும். ஜோ டி குரூஸ் மோடியை ஆதரித்தபோது ‘அவரை இடதுசாரி என நம்பி கொடுத்துவிட்டோம், இப்படித் தெரிந்திருந்தால் கொடுத்திருக்கமாட்டோம்’ என நடுவர் குழுவில் ஒருவர் நாளிதழ் ஒன்றில் சொன்னார்.
இதுதான் பொதுவாக இந்திய அறிவுச் சூழலின் நிலை. நான் எழுத வரும்போதே இதை அறிந்திருந்தேன், இதை வெளிப்படையாக தொண்ணூறுகளிலேயே எழுதி தொடர் விவாதங்களை உண்டு பண்ணியிருக்கிறேன். ஆகவே எனக்கு என்ன இடம் அளிக்கப்படும் என நான் நன்கறிவேன்.
இந்த ஆதிக்கம் எளிதில் உடைக்கப்படக்கூடியது அல்ல. ஏனென்றால் கடந்த அறுபதாண்டு காலமாக மெல்ல மெல்ல உருவானது இது. அத்துடன் அதிகாரத்தை அண்டி, அதை கையாளும் கலை அறிந்தது. அதிகாரத்தை மிரட்டிப் பணியவைக்கும் ஊடக அதிகாரமும் கொண்டது.
இன்று என்ன நடக்கிறதென்றால் இவர்களில் ஒரு சாரார் அரசை மிரட்டுகிறார்கள். பெரும்பாலானவர்கள் பணிந்து நயந்து மீண்டும் அதிகாரத்தின் வாயிலுக்குள் நுழைந்திருக்கிறார்கள். அவர்களே மேலும் அமைப்புகளை ஆள்வார்கள்.
நான் விழைவது ஒன்றே, ஃபைரப்பா போல, அக்கித்தம் போல, அசோகமித்திரன் போல இந்திய மரபின் மேல் அடிப்படை நம்பிக்கை கொண்டிருந்தமைக்காகவே புறக்கணிக்கப்பட்ட மேதைகள் மேலும் புறக்கணிக்கப்படக்கூடாது. இனியாவது அவர்கள் கௌரவிக்கப்படவேண்டும்
அவர்கள் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். ஆனால் நம் கடமை என ஒன்று உள்ளது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்பதையே செய்திகள் காட்டுகின்றன.
இக்கருத்தை நான் இருபதாண்டுக் காலமாக எழுதி வருகிறேன். எம்.டி.வாசுதேவன் நாயரும் ஓ.என்.வி.குறுப்பும் விருது பெற்ற போதும் கர்நாடும், கம்பாரும் விருதுபெற்ற போதும் அந்தந்த மொழிகளிலேயே எழுதி விவாதங்களை உருவாக்கியிருக்கிறேன்.
இதற்கெல்லாம் இவர்களிடமிருக்கும் ஒரே மறுமொழி என்பது நான் எனக்கு விருதுகொடுங்கள் என கேட்கிறேன், கொடுக்க மாட்டோம்- என்பதே. இன்று இந்துத்துவர்களும் அதையே சொல்லிப் பரப்பி வருகிறார்கள்.
என் வாதங்களுக்கு முக்கியத்துவம் வரவேண்டும் என்றால் இது வெறும் விருது சம்பந்தமான கோரிக்கை அல்ல, இதில் என் சுயநலம் என ஒன்றுமே இல்லை என தெளிவாக்கியாக வேண்டும்.
இதெல்லாம் ஒன்றும் தியாகம் அல்ல. எனக்கு சினிமா இருக்கிறது. பணமோ புகழோ தேடுமிடத்தில் நான் இல்லை. இந்த தேசம் என்னை அங்கீகரிப்பது பற்றி… அங்கீகரிக்கவேண்டாம், அவதூறு செய்யாமலிருந்தாலே போதும். என் எழுத்துக்கள் வாழும்
ஜெ
*
அன்புள்ள ஜெ.,
நம்பினால் நம்புங்கள்.. நேற்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்… ஒருவேளை சாகித்ய அகாடெமி விருது இந்த அரசில் கிடைத்தால் நீங்கள் அதை வாங்க மாட்டீர்கள் என்று.. இன்று அதை சொல்லிவிட்டீர்கள்…
நன்றி,
ரத்தன்
அன்புள்ள ரத்தன்
இப்போதல்ல எந்த அரசு வந்தாலும் சாகித்ய அக்காதமியை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அக்காதமி விருதுகள் அளிப்பதைப்பற்றிய என் கருத்துக்களை அது பலவீனப்படுத்தும்
ஜெ
அன்புள்ள ஜெ,
திரு.சங்கர் அவர்களின் கடிதம் அதிர்ச்சியையும் அயர்ச்சியையுமே ஏற்படுத்துகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் “நீ எங்களுடன் இல்லையென்றால் எதிரி” என்று புஷ்-தனமாக உளறிக்கொண்டிருப்பார்கள் ?
ஆண்டுக்கணக்கில் முறைகேடாக ஒரு அரசு பங்களாவை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டால் – வெளியேற்றவேண்டும் என்றுகூட சொல்ல வில்லை – உடனே அதை ”பிடுங்கி என்னிடம் கொடு” என்று சொல்வதாக புரிந்துகொண்டால், இவர்கள் படித்த தமிழ் எது என்று ஐயம் வருகிறது. ஐயா, எனக்கே புரியும் எளிய உண்மை எப்படி இவர்களுக்கு ”முதுகெலும்பு முறிக்கப்படவேண்டும் என்றெல்லாம் திரிந்து பொருள்படுகிறது ?
இன்னும் எத்தனை சங்கர்களோ !
அன்புடன்
பொன்.முத்துக்குமார்
அன்புள்ள முத்துக்குமார்,
அந்தக் கடிதம் சங்கரின் தரப்புக்காக மட்டும் எழுதப்பட்டது அல்ல. அவர்களை விடக் கேவலமான அவதூறு இந்துத்துவத் தரப்பால் பேசப்பட்டது. அதை சில குழும விவாதங்களிலிருந்து அறிந்தேன்.
ஆனால் இது இயல்பானதுதான். அரசியலின் வழி அது
ஜெ
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
இது என்ன பதில் என்று புரியவில்லை,யாரோ ஒருவர் புரியாமல் ஏதாவது உளறினால்(எழுதினால்) அதை சிரமேற்கொண்டு நீங்கள் இப்படி ஒரு முடிவை ஏன் எடுக்க வேண்டும் ?.இப்படி அர்த்தமில்லாத ஒவ்வொரு எதிர் வினைகளுக்கும் உங்களை , நீங்கள் நிரூபிக்கத் தலைபட்டால், முடிவில் இது எங்கு கொண்டு போய் விடும்.?. உங்களுக்கு நியாமாய் கிடைக்க வேண்டிய அங்கீகாரமே இன்னும் கிடைக்கவில்லையே என்று நினைக்கும் எங்களுக்கு உங்களின் இந்த வாக்குறுதி(?) வருத்தமடைய செய்கிறது.
அன்புடன்,
அ .சேஷகிரி.
அன்புள்ள சேஷகிரி,
எந்த எழுத்தாளனுக்கும் அங்கீகாரம் என்பது வாசகர்களிடமிருந்தே. அந்த அங்கீகராம் எனக்கு உண்டு, எழுதவந்த நாள் முதல். நான் செய்வது அந்த அங்கீகாரத்தைப் பயன்படுத்தி மொத்த எழுத்தாளர்களுக்கும் பிற முக்கியமான எழுத்தாளர்களுக்கும் அங்கீகாரத்தை உருவாக்குவது. இருபத்தைந்தாண்டுகளாக அதைத் தான் செய்துவருகிறேன்
ஜெ