‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3

d d 6(1)

3 . பிரபஞ்சம் விழித்தெழுந்த இரண்டாம் நாள்

1988 ல் நான் காலச்சுவடு இதழில் சில கவிதைகளை எழுதியிருந்தேன். எனது கவிதைகள் அனைத்தும் புனைவெழுத்துக்கான பயிற்சிகளே என்று இன்று உணர்கிறேன். ஒரு கணத்தில், அல்லது துளியில் நின்று முழுமை கொள்ளும் தரிசனமோ உணர்வுநிலையோ அல்ல என்னுடையது. அன்று நான் உருவகங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தேன் அது எனக்கு செவ்வியல் படைப்புகளில் இருந்த ஆர்வத்தின் விளைவு. கதேயையும் காளிதாசனையும் கம்பனையும் ஒரே விருப்போடு வாசித்துக் கொண்டிருந்த தீவிரமான நாட்கள் அவை.

கோவில்பட்டிக்கு சென்ற போது நான் காலச்சுவடில் எழுதிய கடற்பாறை என்னும் கவிதையை பற்றி தேவதச்சன் என்னிடம் சொன்னார், ”முடிவின்மையின் அறைபட்டு அறைபட்டு உருவான அதன் முகம்” என்னும் வரியை எடுத்து கவிதைக்குரிய மொழியில் சரியாக அமைந்த ஒரு சொல்லாட்சி என்றார் ஆனால் தொடர்ந்து கவியுருவகம் [metaphor] என்ற வடிவத்தின் எல்லைகளை பற்றி பேச தொடங்கினார். ”கவியுருவகம் தும்பியை வைத்து கல் எடுக்க முயற்சி செய்கிறது” என்ற அவருடைய வரியை நினைவு கூறுகிறேன். பறந்தலையும் தும்பிகள் கல் சுமப்பதற்கானவை அல்ல அவற்றின் சிறகுகளும் கால்களும் காற்றையும் ஒளியையும் துழாவுவதற்குரியவை

இப்பிரபஞ்சம் எங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் நிகழ்வுகள் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த அர்த்தத்தை தாங்கும் பொருட்டு தங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கவில்லை. ஒரு தனிமனிதன் அடைந்த அறிதல்களை அவற்றின் மேல் ஏற்றி வைக்கையில் அவை தங்கள் இயல்பு நிலையில் இருந்து வழுவுகின்றன. தேவையற்ற எடை கொள்கின்றன. ”ஒரு பொருளும் தன் சொந்த எடைக்கு மேல் எடையை மண்ணில் செலுத்தக் கூடாது” என்ற தேவதச்சனின் வரியை அன்று டைரியில் எழுதிவைத்தேன்.

உருவகங்கள் தத்துவக் கட்டுமானங்களின் அலகுகள்.ஆலய விக்ரகங்கள் போல கல்லிலும் கலையிலும் எழுந்த தெய்வங்கள் அவை. கோபுரங்களும் பிரகாரங்களும் மண்டபங்களுமாக விரிந்து கிடக்கும் கோயிலின் கருவறைக்குள் அமர்ந்திருக்கும் மூலச்சிலையின் மீது ஏறியுள்ள எடையை எண்ணிப்பார்க்கிறேன். எத்தனை பெரிய கட்டுமானத்தின் எடை அது. ஆலயம், பக்தர், பேரிலக்கியங்கள், தலபுராணங்கள் உற்சவங்கள், நிலங்கள், போர்கள், களஞ்சியங்கள். தன் மேல் ஏற்றப்பட்ட அர்த்தங்களால் பிதுங்கி உருவழிந்து அமர்ந்திருக்கிறது. உண்மையில் நாம் அதை பார்ப்பதே இல்லை. மலர்மாலைகளாலும் பொற்கவசங்களாலும் விளக்கொளியாலும் தூபப்புகையாலும் தோத்திரப்பாடல்களாலும் மூடி வைக்கிறோம்.

அதே ஆலயத்தில் பிரகார தூண்களில் நின்றிருக்கும் சிலை, தன்னியல்பிலேயே தான் எதுவோ அதுவாக இருக்கிறது. தேவதச்சனின் உள்ளம் நாடியது அந்தச் சிலையின் தன்னியல்பைத்தான். என்னிடம் “உருவகங்கள் ஒரு சந்தோஷத்தை அளிக்கின்றன. ஆகா என்று நாமே ஒரு ஷொட்டு வைத்துக்கொள்வோம். ஆனால் கவிதையின் பன்னிரண்டு வரிக்குள் நிற்கும் உருவகம் ரொம்பச் சின்னது. உருவகம் என்றால் அது பெருங்காவியத்தின் எடையை சுமந்து நிற்கவேண்டும். அல்லது தத்துவத்தின் வடிவமாக நிற்கவேண்டும்” என்றார் தேவதச்சன்

நான் அவரிடம் ந.பிச்சமூர்த்தியிடமிருந்து சுந்தர ராமசாமி வரைக்கும் அன்று எழுதிய பல முக்கியமான கவிஞர்களின் படைப்பிலிருக்கும் உருவகங்களைப் பற்றிக் கேட்டேன். பிச்சமூர்த்தியின் ’ஆத்தூரன் மூட்டை; ‘கரிக்குருவி’ போன்ற கவிதைகள். பிரமிளின் ’வண்ணத்துபூச்சியும் கடலும்’ நகுலனின் ’கோட் ஸ்டாண்ட் கவிதைகள்’ சுந்தர ராமசாமியின் ’பறக்கத் துடி’ போன்ற கவிதைகள் முன்வைப்பவை கவியுருவகங்கள் தானே?

ஏன் அவரது கவிதைகளிலேயே எத்தனை கவியுருவகங்கள்! ‘யாரும் அழைக்காது திரும்பிக் கொண்டிருக்கும் காலம்’
என அவரே எழுதியிருக்கிறார்.

நாடி ஒடுங்கிற்று வார்த்தைப்பூதம்
காலத்தின் சிலைகள் வீழ்ந்து
ஓடிவரலாயிற்று கல்

என்னும் அவரது கவிதை வரியை உடனே நினைவு தொட்டு எடுக்க முடிந்தது

தனக்கே உரிய முறையில் எச்சரிக்கை அடைந்த தேவதச்சன் ”அக்கவிதைகளைத் தான் நிராகரிக்கவில்லை. அவை ஒரு கால கட்டத்துக்குரியவை. அன்று கவிஞனுக்கு அவற்றை அப்படி சொல்ல வேண்டியிருந்தது” என்று நழுவி சென்றார். ”உருவகம் ஆகும்போது ஒவ்வொரு பொருளும் கொள்ளும் அழுத்தம் ஒருபோதும் தடுக்க முடியாததே” என்றார். அவர் ஒருபோதும் பூசல்களை விரும்புவதில்லை. பூசல் வரும்போலத் தெரிந்தாலே அமைதியாகிவிடுவார்.

”ஈட்டி அதன் நீண்ட தண்டில் கைகளால் செலுத்தப்படும் அனைத்து விசையை தொகுத்து அதன் முனையிலுள்ள இரும்புக்கூரின் நுனியில் கொண்டுவந்து சேர்க்கிறது ஆகவேதான் அதனால் துளைத்து செல்ல முடிகிறது. அதே போலத்தான் உருவகம். அது தவிர்க்கக்கூடியது அல்ல”

“சிறுகதையிலும் நாவலிலும் உருவகம் இருந்து கொண்டிருக்கும். தத்துவம் உருவகம் இன்றி சொல்லப்படவே முடியாது. ஆகவே இலக்கிய விமர்சனம் என்றென்றும் உருவகங்கள் நிரம்பி தான் செயல்பட முடியும்” என்றபின் உதடுகளை வேடிக்கையாக குவித்து ”ஆனால் இங்கே கோவில்பட்டியில் கொஞ்சநாளுக்கு உருவகங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன்” என்றார்.

சிரித்தபடி மீண்டும் ஒரு முறை வெற்றிலை போட்டுக் கொண்டார். அவர் சொல்வது ஒரு தனிப்பட்ட பிரகடனம் என்று எனக்குத் தோன்றியது. மேலதிக அர்த்தங்களின் சுமையற்று இயல்பாக இருக்கும் படிமங்களை உருவாக்கும் அறைகூவலை அவர் அன்று எடுத்துக் கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் சிந்தனையின் சுமையற்ற படிமங்கள் .இன்னும் கச்சிதமாக சொல்லப்போனால் ஆசிரியனின் கைகள் அளிக்கும் அழுத்தம்கூட இல்லாத படிமங்கள். அன்று அவர் எழுதிய

காற்றில் வாழ்வைப்போல்
வினோத நடனங்கள் புரியும்
இலைகளை பார்த்திருக்கிறேன்
ஒவ்வொருமுறையும்
இலையைப்பிடிக்கும்போது
நடனம் மட்டும் எங்கோ

என்னும் கவிதை அன்றிருந்த மனநிலையையே சுட்டுகிறது. அது

கைப்பற்றப்படுகையில் இழப்பதன் அழியாத மர்மம் என்பது கவிதையின் நிரந்தரமான பேசுபொருள். பலநூறு படிமங்களை இவ்வகையில் நாம் காணமுடியும். அவரது மாணவர்கள் அனைவருமே அதைப்போல பல கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். கடல் பார்க்கப்போய் சிப்பி, கிளிஞ்சல் மணல் எல்லாம் வாங்கி வந்தேன், கடலை கொண்டுவர முடியவில்லை என்ற எம்.யுவனின் கவிதை ஓர் உதராணம். எஸ்.ராமகிருஷ்ணன் இந்த வரியை அவரது நிரந்தரமான மாதிரி வரியாகவே வைத்திருக்கிறார்

எந்தக் கைகளாலும் பற்றப்படாத ஒரு நடனம் தன் கவிமொழியில் நிகழவேண்டும் என்று தேவதச்சன் விழைந்தார். திரும்பத் திரும்ப பல்வேறு வார்த்தைகளில் அவர் அதைத்தான் அன்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அது அவர் முயலும் ஒன்றாக இருக்கவில்லை, அவர் அக்கனவை தன்னுள் கொண்டிருந்தார்.

சற்றுக் கூர்மையாகவே அவரைத்தாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் கேட்டேன். ”தத்துவம் இருவகையில் வெளிப்பட முடியும். ஒன்று முறையாகக் கற்கப்பட்டு மொழியாக பயிலப்பட்ட தத்துவம் என்னும் பாடம் .அப்போது அதிலுள்ள ஒவ்வொரு வரியும் எந்த தத்துவ மரபைச் சார்ந்தது, எந்த தத்துவ தரிசனத்தை முன் வைக்கிறது என்று பார்ப்போம். இன்னொன்று தன்னளவில் ஓர் அகவிழிப்பின் விளைவாக உருவாகும் தரிசனம் .அதற்கு தத்துவ முறைமை எதுவும் தேவையில்லை. ஒரு அகம் அறிந்த தத்துவ உணர்வு மொழியால் வெளிப்பட்டால் மட்டும் போதுமானது .நீங்கள் இரண்டுக்கும் நடுவே ஊசலாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது” என்றேன்

நான் நினைத்ததுபோல் அவர் புண்படவில்லை. மிகுந்த உற்சாகத்துடன் ”சரியாக சொன்னீர்கள்!” என்றார். ”நான் அவ்வப்போது கண்டடைந்து அங்கங்கே போட்டுவிட்டு போக விரும்புகிறேன் ஆனால் கற்ற தத்துவம் பின்னால் வந்து நான் போட்டுவிட்ட ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு என்னை தொடர்ந்து ஓடி வருகிறது” தலையை ஆட்டி சிரித்துக்கொண்டு ”காமெடியன் வெடிகுண்டை வீச அதை நாய் எடுத்திட்டு பின்னாடியே வருமே அதமாதிரி” என்றார். அந்த சித்திரத்தை எண்ணி நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன்.

அன்று தேவதச்சன் கிட்டத்தட்ட கவிதையிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் என்று சொல்ல வேண்டும். கவனிக்கப்பட்ட அவரது அவரவர் கைமண் என்ற தொகுதிக்கு பிறகு தொகுப்பென ஏதும் வரவில்லை. ஆங்காங்கே உதிரியாக சில கவிதைகள் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. சரியாக சொல்லப்போனால் அவை அனைத்தும் ஒரு வகை தத்துவப் புழுக்கைகள் என்று எனக்கு தோன்றியது. ஆனால் தமிழ் கவிஞர்களின் எல்லா பட்டியலிலும் அவர் பெயர் இடம் பெற்றுக் கொண்டிருந்தது. தவிர்க்க முடியாதவராகவும் அதே சமயம் ஐயம் திரிபற தன்னை நிறுவிக்கொள்ளாதவராகவும் அவர் இருந்தார்

அன்றைய அவரது பெரும்பாலான கவிதைகள் ஒரு கணப்பொழுதில் கண்டடைந்த அனுபவம் ஒன்றை குறைவான வார்த்தைகளில் உருட்டி உருட்டி சொல்லி வைக்கப்பட்டவை. பலசமயம் அக்கவிதைகளில் தன்னளவில் ஒன்றையும் பொருளுறுத்துவதும் இல்லை. யுவன் சந்திரசேகர் போல அவருடைய மாணாக்கர் அதை விளக்க வேண்டியிருக்கும். சிறந்த உதாரணம்

‘ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஆனால்
எண்ணிலிறந்த தூக்குவாளிகள்
எண்ணிலிறந்த மழைகள்
எண்ணிலிறந்த தலைப்பாகைகள்
எண்ணிலிறந்த காற்றுகள்
எண்ணிலிறந்த தொரட்டிகள்
எண்ணிலிறந்த பகல்கள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ரயில்வே கேட் அருகில்
எப்படா திறக்குமென்று…

தேவதச்சனின் இயல்பென முன்பு சொன்ன அந்த வாழ்க்கை தரிசனம் இதில் அமைந்துள்ளது. ஒவ்வொரு கணமும் இன்னொரு கணத்துடன் பிணைந்து காலம் ஒரு ஒழுக்காக ஆகும் போதுதான் அது ஒற்றைக்காட்சி. காத்திருப்பின் உச்சகட்ட அழுத்தம் காரணமாக ஒவ்வொரு கணமும் பிறிதொன்றிலிருந்து பிரிந்து பல்லாயிரம் ஆடுகளாக பல்லாயிரம் ரயில்வேகேட்டுகளாக ஆகிவிடுகிறது

ஆனால் இத்தரிசனம் கவிதையில் இல்லை, அந்த அனுபவத்தை அக்கவிதை தன்னளவில் வெளிப்படுத்தவில்லை. அறிந்த அகஉண்மை ஒன்றுக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லிநிற்கிறது. அதை தேவதச்சனை அறிந்தவர்கள், அவரை அறிந்தவர்கள் விளக்கியபின் சிலர் புரிந்துகொள்ளமுடியும் , உணரமுடியாது. தத்துவக்கல்வி படித்த ஒருவருக்கு இதை ஒரு கவிதை என்று எடுத்துக் கொள்வதில் தயக்கம் இருக்கும். இதைப்போன்ற பல்லாயிரம் உதாரணங்களை தத்துவத்தில் அவர் கண்டடைந்திருப்பார்.

தேவதச்சனின் கவிதைகளைப்பற்றி எனக்கும் யுவன் சந்திரசேகருக்கும் நீண்ட விவாதங்கள் நடந்துள்ளன. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தேவதச்சன் எழுதிய கவிதைகள் அனைத்துமே அவருடைய தத்துவ அகத்தேடலின் ஒரு பகுதியாக அவர் கண்டடைந்த சில உதாரணங்களை மட்டுமே முன் வைக்கின்றன. அவை கவிதைகள் அல்ல, அவற்றிலிருந்து தத்துவத்தை ஊகித்தெடுப்பதற்கு பேர் கவிதை வாசிப்பும் அல்ல என நான் வாதிட்டேன்.

”கவிதைக்கு தன்னளவில் ஒரு முழுமை உள்ளது அது விதையின் முழுமை. விதை முளைத்து மரமாகி காடாகலாம். ஆனால் அந்த சாத்தியங்கள் அனைத்தும் அந்த விதைக்குள் உள்ளன. இக்கவிதைகள் அப்படி அல்ல. அவற்றின் விரிவாக்கங்கள் அனைத்தும் தேவதச்சனின் தத்துவ மனதில் உள்ளன. அவருடன் தொடர்ந்து தத்துவார்த்தமான உரையாடலில் இருக்கும் மிகச்சிறிய வட்டத்திற்கு மட்டுமே புரியக்கூடியதாக உள்ளன” என்று சொன்னேன்

அபூர்வமாக அன்றைய சில வரிகள் கவித்துவமான மின்னல்களுடன் அமைந்திருந்தன. ’வண்ணத்துப்பூச்சி தன்காலில் காட்டை சுமந்து செல்கிறது’ போன்றவை. ஆனால் அவையும் ஜென் சிந்தனை மரபை அறிந்தவருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுப்ப்வை அல்ல. ஏற்கனவே பேசப்பட்ட ஓர் உதாரண மரபில் தொடர்ச்சியாக அவை அமைகின்றன.

தேவதச்சனின் அறிவியயக்கத்தில் எண்பதுகளின் இறுதியில் குற்றாலத்தில் நடந்த கவிதை விவாதங்கள் ஒரு அதிர்வை உருவாக்கியவை .சொல்லப்போனால் தன்னுடைய அந்தரங்கமான தத்துவஅலைதல்களும் மொழிஅளாவுதல்களுமாக கோவில்பட்டியின் சிறு வட்டத்திற்குள் ஒடுங்கி விட்டிருந்த அவரே இழுத்து வெளியே கொண்டுவந்தன அவை.

இரு வகையில் அவருக்கு விவாதங்கள் அதிர்ச்சியை அளித்தன என்று அவர் சொன்னர் ஒன்று அவர் கற்று நம்பி சென்று கொண்டிருந்த தத்துவப் பாதையை முற்றாக மறுக்கும் சில பார்வைகள் அங்கு முன் வைக்கப்பட்டன. இரண்டு அவர் ஐயம் கொண்டு தயங்கி நின்றிருந்த பல இடங்களை ஆமோதித்து முன்னே செல்லும் உந்துதலையும் அவை அளித்தன.

தேவதச்சனின் தத்துவம் வழியாக தத்துவத்திற்கு அப்பாற்பட்ட அகவய அறிதல் ஒன்றை உருவகித்து அதை நோக்கி செல்வது. அதுவே அவரை ஜென்னுக்கு அணுக்கமாக்கியது தத்துவார்த்தமாக சொல்லப்போனால் அவரை essentialist என்று சொல்லலாம். தரிசன நோக்கில் ஒரு absolutist என்று சொல்ல்லாம். ஜென்னுக்கும் அத்வைதத்துக்கும் அணுக்கமான ஒரு நவீனப் பார்வையை அவர் மெல்ல மெல்ல உருவாக்கிக் கொண்டிருந்த காலம் அது

இக்காலகட்டத்தில் தேவதச்சன் கண்டடைந்த நிஸர்கத்த மகராஜ் அவருடைய சிந்தனைகளிலும் மொழியில் ஆழமான பாதிப்பை செலுத்தியிருந்தார். தத்துவ சிந்தனை என்பது முற்றிலும் அகஉருவகங்களால் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருகும் ஒன்று, அதை உச்சபட்ச சாத்தியங்களை மட்டும் பயன்படுத்தி மொழிக்குக் கொண்டுவந்து நிறுத்துவதுதான் சாத்தியம் என்று அவர் நம்பியிருக்கக் கூடும் குற்றாலத்தில் நிகழ்ந்த அன்றைய உரையாடலகளில் இக்கருத்தை அவர் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அமைப்புவாத அமைப்புவாத, பின்அமைப்புவாத, பின்நவீனத்துவ வாதமுறைகள் அவருடைய நம்பிக்கையை ஓங்கி அறைந்தன. தத்துவ விவாதமென்பது முழுக்க முழுக்க மொழி மட்டுமே என்றும் மொழிக்கு அப்பால் என ஏதுமில்லை என்றும் அவை வாதிட்டன. அகப்படிமங்களும் கனவுகளும் கூட மொழியின் தோற்றங்களே என்று கூறின. மொழிக்கு அப்பால் ஏதுமில்லை என்ற வரி தனக்கு அளித்த அதிர்ச்சியை எண்பத்தெட்டில் தேவதச்சன் ஒரு மாலை முழுக்க என்னிடம் பேசிக் கொண்டிருந்த்தை நினைவுறுகிறேன்.

ஆனால் ஏற்கனவே தான் அடைந்திருந்த அகவய நிலைப்பாட்டில் நின்றபடி அப் புதிய சிந்தனையை ஒடுமொத்தமாக மறுக்க அவர் முயலவில்லை. தத்துவவாதிக்கே உரிய தர்க்கங்களின் அனைத்து சாத்தியங்களையும் கொண்டு விவாதித்து பார்க்கவே அவர் முயன்றார். மொழியின் புறவடிவம் பிரக்ஞையுடனும் அகவடிவம் ஆழ்மனதுடனும் சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால் படிமங்கள் அதற்கும் அப்பாலுள்ளவை என தான் உணர்வதாகச் சொன்னார். ”அதை நான் தர்க்கபூர்வமாக அறியவில்லை, நானே அங்கே அதுவாக இருந்து உணர்ந்தேன்” என்றார்

”ஆனால் நான் இதை பின்னவீனத்துவர்களுடன் விவாதத்திற்கு எடுக்கவும் முடியாது ஏனென்றால் விவாதத்திற்கு அப்பாற்பட்டு தான் எப்போதும் இருக்கும் .அதை கவிதையாகவே எழுத முடியும். கவிதையாக மட்டுமே உணர்த்திவிடவும் முடியும். தத்துவத்திற்குள் அதை விவாதித்து நிறுத்த முடியாது” என்றார். திரும்பத்திரும்ப அப்போது அவர் தொட்டெடுத்த the untouched என்ற சொல்லை பயன்படுத்தி அவர் எண்ணுவதை தெரிவிக்க முயன்றார்.

“மேலைச் சிந்தனை எப்போதும் தர்க்கத்துக்குள் நிற்க்க்கூடியதாக இருக்கையில் கீழைத்தத்துவ சிந்தனை தர்க்கம் வழியாக சென்று தர்க்கத்திற்கு அப்பால் தன் அடைதல்களை வைத்துக் கொள்வதாக இருக்கிறது. இந்திய சிந்தனையில் தியானத்தையும் தத்துவத்தையும் பிரித்துக்கொள்ள முடியாது. வெறுமே வாதித்து தத்துவத்தின் உச்ச நிலைகளை அடைய முடியாது. தெரிதாவை தர்க்கம் செய்து புரிந்து கொள்ள முடிகிறது. நிஸர்கதர்க மகராஜை உணர்ந்து கொள்வதற்கு அவ்ரை தியானிக்க வேண்டும்” என்று தேவதச்சன் சொன்னர்

”பின் நவீனத்துவத்தில் என்ன சிக்கலை நீங்கள் பார்க்கிறீர்கள்?” என்று நான் கேட்டபோது ”அதில் absolute க்கு இடமில்லை” என்றார். ”சிந்தனையின் ஒரு பகுதியில் முட்டாள் தனத்திற்கும் களங்கமினமைக்கும் பித்துக்கும் அராஜகத்துக்கும் இடமில்லையேல் அது ஓர் அமைப்பாகவே மாறும்” என்றார். ”இப்போது இவர்கள் ஏற்கனவே இருந்த அமைப்புகளை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தர்க்கத்தை இவ்வளவு ஆவேசமாக நம்பும் காரணத்தாலேயே மிக விரைவில் இன்னொரு அமைப்பை இவர்கள் உருவாக்குவார்கள்.”

“இவங்க கிட்ட இருக்கிறது சுத்தியல் மட்டும் இல்ல. சிமிண்டும்தான்” என்று தேவதச்சன் சொன்னார். சில ஆண்டு காலம் பின்நவீனத்துவம் அவரை பல வகையிலும் அலைக்கழித்திருக்கிறது. அதன் வினாக்கள் வழியாக தன்னைச்சூழ்ந்திருந்தவர்களிடம் ஓயாது பேசிப் பேசி அவர் கடந்து சென்றார். விவாதங்களில் ஈடுபடுவதும் எழுத்து வடிவில் கட்டுரைகளாக பதிவு செய்வதும் அவரது இயல்புகள் அல்ல, நீண்ட தன்னுரைகளே அவருடைய சிந்தனை முறை. அத்தன்னுரைகளுக்கு முன்னிலையாக அமைபவர் செவி மட்டும் கொண்டிருந்தால் போதும் என்று அவர் நினைப்பது போல் தோன்றும்.

எங்கோ ஓர் எல்லையில் தேவதச்சன் பின்நவீனத்துவம் அவருக்களித்த அனைத்து வினாக்களையும் கடந்து சென்றார், ’மொழி மட்டுமே உள்ளது’ என்ற வரியை ’ஆம் ஆனால்…’ என்று அவர் கடந்து சென்றதை நான் கண்டேன் மொழிக்கு அப்பால் உள்ளது அறிய முடியாத பிரம்மாண்டம் அல்ல. மிக எளிதான இங்குள்ள ஒவ்வொன்றிலும் தொட்டு அறியக்கூடிய ஒன்று என்ற கண்டடைதலே அடுத்த கட்ட தேவதச்சனை உருவாக்கியது. இன்று எதன் பொருட்டு நாம் அவரை தமிழின் முதன்மையான கவிஞர்களுள் ஒருவர் என்று சொல்கிறோமோ அது இந்த அறிதலுக்கு பிறகு உருவானதே.ஒரு கவிஞர் என்ற வகையில் இந்தப் பிற்கால தேவதச்சனே தமிழுக்கு முக்கியமானவர், சாதனையாளர்.

பின் நவீனத்துவம் தேவதச்சனுக்கு அளித்த இன்னொரு பங்களிப்பென்பது அவருடைய சிதறுண்ட சிந்தனைகளைக் குறித்து அவருக்கு இருந்த ஐயத்தை இது அகற்றியது என்பதே. ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற அறிதல்களின் பெருக்காகவும் சிந்தனை ஒன்று இருக்க முடியும் என்றும் அது காட்டியது. பின் நவீனத்துவம் அறிமுகமான காலகட்டத்தில் அவரே தேடி சென்று அன்று அவற்றை பேசிக்கொண்டிருந்தவர்களிடமிருந்து விட்கென்ஸ்டின் போன்றவர்களின் படைப்புகளைப்பற்றி கேட்டு அறிந்தார். அந்நூல்களை அவர் படித்தறிந்தார். அவை அவரை ஒருவகையில் விடுதலைசெய்தன

பெரும் கட்டுமானங்களாக சிந்தனைகள் உருவாக்கப்படும்போது அக்கட்டுமானத்திற்கு தேவையான அடிப்படைத் தர்க்கம் ஒன்று உருவாகி வருகிறது. பின்னர் அனைத்து அறிதல்களும் அத்தர்க்கத்திற்கு உகந்த முறையில் உருமாற்றம் அடைகின்றன. அத்தர்க்கத்திற்கு பயன்படாதவை தவிர்க்கப்படுகின்றன. எதையும் கட்டி எழுப்பாத அறிதல்கள் எப்போதும் புதிய ஒன்றுக்காக திறந்துள்ளன. அவை ஒன்றுக்கொன்று முரண்படுபவையாக இருக்கலாம் பொருளற்றவையாக கூட இருக்கலாம் ஆயினும் எப்போதும் ஒரு புது அறிதலுக்கு முன் சென்று நிற்கும் சாத்தியம் கொண்டவை ஆகையால் அவை முக்கியம் என்று அவர் அறிந்தார்.

அவர் அதுவரை முரண்பட்டு ஆனால் உதறிவிட முடியாதிருந்த நவீனத்துவத்தை அதன் தத்துவ சிந்தனையாகிய இருத்தலியலில் முற்றாக தன்னிடம் இருந்து அறுத்து எறிந்துவிட பின் நவீனத்துவம் அவருக்கு உதவியது. பிற்கால தேவதச்சனின் புனைவுலகில் இருந்த சுதந்திரம் இவ்வாறு உருவாகி வந்தது. தத்துவமற்ற தத்துவவாதியின் கொண்டாட்டம் என அக்கவிதைகளை வரையறைசெய்வேன்.

 

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகம்பனும் குழந்தையும்