இரு கடிதங்கள்

அன்பின் ஜெமோ,
நான் கடந்த ஒரு வருட காலமாக உங்களது எழுத்தை வாசித்து வருகிறேன், ஆனால் ஒரு முறை கூட உங்களை நேரிலோ அல்லது பின்னூட்டத்தின் மூலமாக சந்திக்க முயலவில்லை.கடந்த வாரத்தில் இனிமேல் தவறாது பின்னூட்டம் இட வேண்டுமென நினைத்தேன் ஆனால் சரியாக அன்றைய தினத்தில் இருந்து நீங்கள் பின்னூட்டத்தை நிறுத்தி விட்டார்கள் (நீங்கள் ஒரு சித்தராய் மாறி கொண்டிருபதின் அடையாளம் இந்த நிகழ்வு! :-)) .
“பட்டாம்பூச்சி” கதையை குறித்தும் மற்றும் அதன் திரை வடிவமான “பாப்பிலான்” குறித்தும் உங்களது கட்டுரையை வாசித்தேன், அதியசம் என்ன வென்றால் கட்டுரையை படிப்தற்கு ஒரு நாள் முன்பதாகதான் நானும் அந்த திரைபடத்தை பார்த்தேன்(நானும் சித்தனாய் மாறி வருகிறேன் போலும்) உங்கள் விமர்சனம் எனது திரைப்படம் பார்த்த அனுபவத்தை மேலும் இன்பமாக்கியது.
மேலும் இந்த படம் எனக்கு உலக வாழ்கையில் நாம் அனைவரும் விடு பட முயற்சி செய்யும் ஒவொரு நிகழ்வையும் (சிலருக்கு குடி, சிலருக்கு குறை சொல்லுதல்,சிலருக்கு புகை,சிலருக்கு பகை ,சிலருக்கு எழுத்து ,சிலருக்கு எழுத்தாளர்கள்…) நினைவூட்டியது.
நீங்கள் எங்களுக்காக எழுதுபவை எல்லாமே எனக்கு பிடிக்கும்,நீங்கள் உங்களுக்காக எழுதுவதில் பெரும்பலனவையே எனக்கு பிடிக்கும்.
நான் இந்தியா வரும்போது உங்களுக்கு நேரமும்,என்னை சந்திககூடிய மனோ திடமும்:-) இருந்தால் உங்களை சந்திக்க ஆவல்.

குடும்பத்தார்க்கு எனது விசாரிப்புகளை தெரியபடுத்தவும்!!

ஆனந்தத்துடன்
ஷிவா

அன்புள்ள ஷிவா

பலசமயம் ஒரே எண்ண ஓட்டங்கள் தற்செயல்களை அமைக்கின்றன. தற்செயல்களை கூர்ந்து கவனிப்பது நம்மை நாமே கவனிப்பது போல

கண்டிப்பாக சந்திப்போம்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் ,
என் பெயர் செந்தில் குமார், வயது 25. சொந்த ஊர் விருதுநகர். தற்போது ஜெர்மனியில் கேன்சருக்கான மரபுக் காரணிகள் குறித்து பிஎச்டி செய்து வருகிறேன். பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயின்று வந்த நான் கல்லூரியில் ஆங்கில வழிக்கு மாறியவுடன் , தமிழ் ஆர்வம், வாசிப்பு ஆர்வம் எல்லாம் தடை பட்டுப் போய், ஆங்கிலத்திலும் ஆதிக்கம் இன்றி தமிழிலும் தன்நிறைவின்றி இரண்டும் கெட்டான் ஆகிப் போய், ஒரு கட்டத்தில் கல்வி ,தேர்வு, ஆராய்ச்சி என்ற வாழ்க்கை சூழலில் எதைத் தொடர்வது எதை விடுவது என்று ஒன்றும் புரியாமல் போய் முற்றிலும் வாசிக்கும் பழக்கத்தையே இழந்துவிட்டேன். சமீபத்தில் வெளிநாட்டு வருகைக்குப் பின் கிடைத்த தனிமை, நேரம் காரணமாக மீண்டும் வாசிக்க தொடங்கியுள்ளேன்.

உங்களைப் பற்றியும், விஷ்ணுபுரம் பற்றியும் 11 ஆண்டுகளுக்கு முன் நான் பள்ளியில் படிக்கும் போதே சுஜாதா அவர்கள் மூலமாக கேள்விப்பட்டிருந்தாலும், சமீபத்தில் உங்கள் இணையத்தள பின்னோடப்பகுதியில் ஏற்ப்பட்ட சர்ச்சை குறித்து வந்த ஒரு இடுகையைத்தொடர்ந்து வந்து தான் உங்கள் வலைமனையை அடைந்தேன். இத்தனை நாள் உங்கள் எழுத்துக்களைப் படிக்காமல் போனேனே என்று பெரிதும் வருந்தினேன். அதற்குக் காரணம், உங்கள் எழுத்துக்களின் மூலமும் உங்களுக்கு வரும் கடிதங்களில் கூறுபவர்கள் மூலமும் நான் அறிந்து ஆட்கொள்ளப்பட்ட ‘உங்களின் இந்திய மரபு ஞானம் குறித்த ஆழ்ந்த அறிவும்,அனுபவமும்’.
“இந்திய மரபு ஞானம்” என்ற பெயரை முதன் முதலில் உங்கள் மூலமாகவே அறிந்தாலும் அவ்விஷயத்தின் மேல் எனக்கு எப்போதும் ஆழ்ந்த நம்பிக்கையும் ஆர்வமும் உண்டு. ஆங்காங்கு சில புத்தகங்கள், கட்டுரைகள் வாயிலாக அதை ஓரளவேனும் அறிந்துகொள்ள தொடர்ந்து முற்பட்டு வருகிறேன். (செய்வது உயிர் நுட்பவியல் ஆராய்ச்சி எனினும் இன்றளவும் நான் ஆங்கில மருத்துவத்தையும் மேற்கத்திய சிந்தனைகளையும் போற்றுவதில்லை). இப்போது உங்கள் தளத்தை படிக்கும் போது நான் தேடிய விஷயங்கள் அடங்கிய ஒரு சுரங்கத்தை அடைந்ததைப் போல் உணருகிறேன். பல இரவுகள் விடிய விடிய உங்கள் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். நாராயண குரு பற்றிய கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டது போல வாகனம் இருப்பதால் பயணத்தை தொடங்கிய ஒருவனாகவே பல வருடங்களாக என்னை நான் அடையாளம் காணுகிறேன், சில சமயம் வருந்துகிறேன், பின்னர் என்னை நானே சமாதானம் செய்து கொள்கிறேன்.

உடுமலை.காம் மூலம் விரைவில் உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் பெறப்பெற்று படித்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். விஷ்ணு புரம் போன்ற ஒரு பெரும் தத்துவப் படைப்பை படிக்கும் முன் உங்கள் மற்ற புத்தங்களை படித்து ஓரளவுக்கேனும் ஒரு அறிமுக அனுபவம் பெற விரும்புகிறேன். ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரிய வில்லை.

பலமுறை உங்களை தொடர்பு கொள்ள நினைத்தேன் இருப்பினும் பணிச்சுமை நிறைந்த உங்களைப் போன்ற ஒருவரை தொந்தரவு செய்ய தயங்கி தவிர்த்துவிட்டேன். உங்களைப்போன்ற கொண்டாடப்படும் ஒரு எழுத்தாளரை தொடர்பு கொள்வது எனக்கு மிகப்பெரிய விஷயம்.
தயவு செய்து என்னை வளர விரும்பும் உங்கள் இளம் வாசகனாக கருதி எங்கிருந்து தொடங்குவது என வழிகாட்டுமாறு வேண்டுகிறேன்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எனக்கு பதில் எழுதவும். தொந்தரவு எனில் மன்னிக்கவும்.

பணிவன்புடன்,
செந்தில் குமார்

அன்புள்ள செந்தில்குமார்

அறிவியல் இலக்கியம் தத்துவம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டவையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, உண்மையில் அவை முரண்பட்டவையும் அல்ல. அறிவ்யல் தர்க்கத்தையும் இலக்கியம் கற்பனையையும் தத்துவம் அல்லது மெய்யியல் நுண்ணுணர்வையும் பயன்படுத்துகிறது. ஒன்றை ஒன்றால் நிரப்பும்போது முழுமைநோக்கை நாம் செல்லமுடியும். இதையே holistic approach என்று இன்று சொல்கிறார்கள்.

நடைமுறைத்தளத்தில் இலக்கியமும் அறிவியலும் இணைந்தே செயல்படமுடியும். ஒன்றில் ஏற்படும் சிறு சலிப்பை அல்லது ஊக்கக்குறைவை இன்னொன்றை வைத்து சமன்செய்துகொள்ளலாம். அது ஐன்ஸ்டீன் உட்பட அறிவியல் மேதைகள் கூட கைகொண்ட முன்னுதாரணமான வழிமுறை.

உங்கள் அறிவியல் ஆய்வின் இன்னொரு பக்கமாகவே நீங்கள் விஷ்ணுபுரத்தையும் இந்துஞான மரபில் ஆறுதரிசனங்களையும் எடுத்துக்கொள்ள முடியும். ஒரு அறிவுஜீவியால் இவையனைத்துக்குமே சாதாரணமாக மனதிலும் நேரத்திலும் பங்கு ஒதுக்க முடியும். ஒன்றுக்காக ஒன்றை கைவிட வேண்டியதில்லை. ஒன்றினால் ஒன்றில் ஊக்கம் குறையவும் கூடாது

அறிவியல் ஆராய்ச்சியில் உங்கள் ஆர்வம் மேலும் மேலும் ஊக்கத்துடன் முனையவேண்டும் என்று விரும்புகிறேன், வாழ்த்துகிறேன். ஆனால் அது சீராக பலகாலம் கடும் உழைப்பைச் செலுத்தி செய்யவேண்டிய ஒன்று. அதில் ஏற்படும் சோர்வை தீர்ப்பதற்கான துறைகளாக இலக்கியத்தையும் தத்துவத்தையும் வைத்துக்கொள்ளவும். அறிவியலை மட்டுமே பின் தொடர்ந்தால் உருவாகும் பார்வைக்குறுகலுக்கு தீர்வாகவும் தத்துவமும் இலக்கியமும் அமையும்

என்னுடைய நாவல்களை வாசிக்க காடு, ஏழாம் உலகம், கன்யாகுமரி போன்ற நாவல்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் ஓர் ஆய்வுமானவ்ராக இருப்பதனால் விஷ்ணுபுரத்தையே ஒரு சவாலாக முதலில் எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்வேன். இந்துஞானமரபில் ஆறு தரிசனங்கள், இந்தியஞானம் போன்ற நூல்களை தத்துவ தளத்தில் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளலாம். எங்கே தொடங்கினாலும் பிரச்சினை இல்லை, வாசிப்பு உருவாக்கும் சவால்களை எப்படி சந்திக்கிறீர்கள் என்பதே முக்கியம்

தொடர்ந்து எனக்கு எழுதுங்கள். உரையாடலே எல்லா வழிகளையும் திறக்கும்

வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைசினிமா, கடிதம்
அடுத்த கட்டுரைகாந்தி, ஒரு கடிதம்