சகிப்புத்தன்மையின்மை- ஆறுதல்

1
ஜெமோ

சகிப்பின்மை பற்றிய குறிப்பு [விஷக்கொடுக்கு ] கண்டேன். சரி, இடதுசாரி அறிவுஜீவிகள் எல்லாம் புரோக்கர்கள், அதிகார அடிவருடிகள். அவர்களுக்கு கொடுக்கிற சலுகைகள் தவறு. வீடுகள் பிடுங்கப்படவேண்டும். அவர்களின் முதுகெலும்பு முறிக்கப்படவேண்டும். பதிலுக்கு என்ன? உங்களைப்போன்ற வலதுசாரி அறிவுஜீவிகளுக்கு அதெல்லாம் தரப்படவேண்டும்? அவ்வளவுதானே?

சங்கர்

அன்புள்ள சங்கர்,

1. இடதுசாரி அறிவுஜீவிகளைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. என் எழுத்துக்களில் எப்போதுமே அவர்களை மேற்கோளாக்கி வருகிறேன். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்பவன் நான்

2. எந்த ஒரு அறிவுச்சூழலுக்கும் இடதுசாரிச் சிந்தனையாளர்கள் ஒரு முக்கியமான தரப்பு எந்த ஒரு தேசத்திலும் அவர்கள் மனசாட்சியின் வாள். எந்த அரசியலிலும் அவர்கள் அடித்தள மக்களின் குரல்

3. இடதுசாரிகள் அல்லது லிபரல்களை புரோக்கர்கள் , ஒட்டுண்ணிகள் என்று சொல்லவில்லை. புரோக்கர்களும் ஒட்டுண்ணிகளும் இடதுசாரியாக, லிபரல்களாகத் தோற்றமளிக்கிறார்கள் என்று சொன்னேன். அதைப்பற்றி கவலைப்படவேண்டியது, அவர்களிடமிருந்து விலக்கிக்கொள்ளவேண்டியதும் இடதுசாரிச் சிந்தனையாளர்களே

4. மக்களின் வரிப்பணத்தில் முறைகேடாக அனுபவித்த சலுகைகளை மரியாதையாக ,சட்டபூர்வமாக ரத்துசெய்வதுதான் முதுகெலும்பை முறிப்பதா? [ஆரம்பித்துவிட்டீர்கள் இல்லையா?]

5. சரி, கடைசியாக உங்களுக்கு என்ன உறுதிமொழி தேவை? இதோ சொல்லிக்கொள்கிறேன். நான் இந்த அரசு இருக்கும்வரை எந்த ஒரு விருதையோ மரியாதையையோ ஏற்றுக்கொள்ள மாட்டேன். எந்த ஒரு அரசாங்க நிறுவனத்தின் எந்த நிகழ்ச்சியிலும் எந்தவகையிலும் பங்கெடுக்கமாட்டேன். போதுமா

6 மேலும் உறுதிமொழி, உள்ளூரிலோ அல்லது வெளியூரிலோ எந்த ஒரு பதவியையும் ஏற்கப்போவதில்லை [சினிமா வசனகர்த்தா பதவியை சுட்டிக்காட்டமாட்டீர்கள் என நினைக்கிறேன். அது என் தொழில் ஐயா]

ஆகவே மகிழ்ச்சியாக இருங்கள்.. நீங்கள் கொண்டிருக்கும் இதே பதற்றம் இந்துத்துவர்களுக்கும் இருக்கிறது. அந்தப்பக்கம் அவர்களும் நான் எதையோ பெற்றுவிடப்போவதாக பீதியடைந்து அவதூறுபரப்பலில் தீவிரமாக இருக்கிறார்கள். இந்த உறுதிமொழி அவர்களுக்கும் சேர்த்துத்தான். இரு தரப்பும் மகிழ்ச்சியடைய என்னால் முடியும் என்றால் அதைத்தானே நான் செய்யவேண்டும்?

ஜெ

முந்தைய கட்டுரைசகிப்புத்தன்மையின்மை!
அடுத்த கட்டுரைகிறிஸ்டோபர்