சென்றமுறை கோவையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது கீதையைப்பற்றி விவாதம் எழுந்தது. கீதை இந்துஞானமரபின் மையநூலாக ஆனவிதம், அதன் இன்றைய முக்கியத்துவம் பற்றி.
அப்போது ஒரு நண்பர் பொதுவாக கீதையை முழுக்கமுழுக்க பக்திநோக்கில் பார்க்கும் பார்வையே எங்கும் பரவலாக உள்ளது என்றும் அதன் வரலாற்றையும், தத்துவத்தையும் பேசுவதேயில்லை என்றும் சொன்னார்
என் கோவை நண்பர் நடராஜன் ’நாமே அதைப்பேச ஓர் அரங்கை உருவாக்கினால் என்ன?” என்றார். வேடிக்கையாக ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் ‘சரிதான் பேசித்தான் பார்ப்போமே’ என்னும் இடத்தைச் சென்றடைந்தோம்’
நடராஜனே முன்னின்று ஏற்பாடுகள் செய்தார். கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் நிகழ்ழ்சி ஒருங்கமைக்கப்பட்டது
வரும் டிசம்பர் 6 ,டிசம்பர் 7, டிசம்பர் 8, டிசம்பர் 9 தேதிகளில் கோவை கிக்கானி பள்ளி அரங்கில் மாலை 630 மணிக்கு நான்கு தொடர் உரைகளை கீதையைப்பற்றி நிகழ்த்துகிறேன்
இது எந்தவகையான பேச்சு என முன்னரே சொல்லிவிடுகிறேன்.
இது என்னென்ன அல்ல என்று முதலில்
1. கீதையின் சாராம்சத்தை ‘பாமரருக்கும் புரியும்படி’ எளிமைப்படுத்தி குட்டிக்கதைகள், புராணங்கள், நகைச்சுவைகள் கலந்து சொல்லப்படும் உரை அல்ல. கீதையின் சாராம்சத்தை அப்படிச் சொல்லமுடியுமா என்றே எனக்குத்தெரியவில்லை
2. கீதையின் பாடல் வரிகளைச் சொல்லி விளக்கமளிக்கும் உரை அல்ல இது.
3. பக்தி நோக்கில் கீதாசாரியனின் ஆணைகளையும் வழிகாட்டல்களையும் விளக்கப்போவதில்லை.
4. கீதையை மரபார்ந்த முறையில் கற்று தேர்ந்த அறிஞர்கள் பலர் உள்ளனர் என நானும் அறிவேன். ஏனென்றால் இந்து ஞான மரபின் முதல்நூலாக அது நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. அவர்களை மேற்கோள்காட்டி பேசப்போவதில்லை, மறுத்தும் பேசப்போவதில்லை.
5. ஆணித்தரமான குரலில் ஓங்கிப்பேசப்போவதில்லை. அதெல்லாம் எனக்கு சரியாக வருவதில்லை என அனைவருக்கும் தெரியும். கொஞ்சம் யோசித்தும் தயங்கியும்தான் பேசப்போகிறேன். ஆகவே இது ஒரு வழக்கமான பேருரை அல்ல. ஒரு நீண்ட உரை, அவ்வளவுதான்.
6. இது என்னிடம் கோரப்பட்டதற்கேற்ப நான் முன்வைக்கும் என் பார்வை மட்டுமே. விவாதிப்பதற்குரிய அரங்கு அல்ல. ஆகவே உரைமட்டும்தான், கேள்விபதில், உரையாடல் ஏதும் தொடராது. கீதையைப்பற்றி மட்டுமல்ல எந்த ஒரு தத்துவநூலைப்பற்றியும் அப்படி ஒரு பொதுமேடையில் அனைவரும் பங்கெடுக்கும் விவாதம் நிகழமுடியாது.
என்னென்ன பேசப்போகிறேன்?
1. உலகின் முதன்மையான தத்துவ -மெய்யியல் நூல்கள் அனைத்துமே காலம்கடந்தவை. உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், சாங்கியகாரிகை, பிளேட்டோ சாக்ரடீஸ் உரையாடல்கள், பைபிள், தம்மபதம், ஜைனசூத்திரங்கள், கன்ஃபூஷியஸ் மொழிகள் போன்றவை உலகநாகரீகத்தின் பொதுச்சொத்துக்கள்.
அவற்றை ஒவ்வொரு காலகட்டத்தினரும் தங்கள் வாழ்க்கைச்சூழலைக் கொண்டு, தங்கள் சிந்தனைப்பரப்பைக்கொண்டு மறு கண்டுபிடிப்பு செய்யவேண்டியிருக்கிறது, மறுவரையறை செய்யவேண்டியிருக்கிறது.
இந்த உரையில் இன்றைய சூழலில் கீதையை ஒரு சிந்திக்கும் நவீன இளைஞன் எப்படி அணுகலாம் என்று மட்டுமே பேசப்போகிறேன்
2. ஆகவே கீதையை புனிதநூலாகவோ மதநூலாகவோ அணுகப்போவதில்லை. இலக்கியநூலாக, தத்துவநூலாக, ஆன்மிகநூலாக மட்டுமே அணுகவிருக்கிறேன்
3. கீதையின் வரலாறு, கீதை இந்திய- உலக தத்துவப்புலத்தில் கொண்டுள்ள இடம், அதன் மெய்யியல் ஆகியவையே பேசுபொருட்கள்
4. கீதையை எந்த ஒரு இந்து தத்துவமரபுக்குள்ளும் நிறுத்தப்போவதில்லை. ஆனால் என் குருமரபு என்பது அத்வைதத்தை கொள்கையாகக்கொண்ட நாராயணகுருவின் பள்ளி என்பதனால் அவர்களிடமிருந்து நான் கற்றதே முதன்மையாக இருக்கும்
5.கூடுமானவரை மேற்கோள்களைத் தவிர்க்கவும் இதுவரை கீதைபற்றி பேசப்பட்டதை தொகுத்துவைக்காமலிருக்கவும் முயல்கிறேன். ஆகவே இதை ஓர் அறிஞனின் ஆய்வுரையாக ஆக்காமலிருக்க முயல்கிறேன். இது ஓர் இலக்கியவாதி கண்டடைந்த கீதை.
6. எட்டுமணிக்கு முடிந்துவிடும்.
அன்புடன் அழைக்கிறேன் , வருக
நாள் டிசம்பர் 6, 7, 8,9 [நான்குநாட்கள் ]
நேரம் மாலை 6 30
இடம் சரோஜினி நடராஜ் அரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகம். கோவை.
பிகு
அரங்கில் வெண்முரசு வரிசை நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்
தொடர்புக்கு
9500400093
9842731068
கோவையில் கீதைபற்றிப் பேசுகிறேன்
டிசம்பர் 6,7,8,9 தேதிகளில் கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி அரங்கில் மாலை 630 மணிக்கு.
கீதையின் இடம் என்ன?