பௌத்தம்,நேரு -கடிதங்கள்

IMG_6514

அன்பு ஜெமோ,

நலம்தானே? அருண்மொழி அவர்கள், அஜிதன், சைதன்யா அனைவரும் நலமா?

சில நாட்களுக்கு முன்பு டாக்டர். வின்பீல்ட் அவர்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம் ( பௌத்தத்தின் படிமங்கள், உருவங்கள் பற்றி உயராய்வு செய்து புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பேராசிரியர். நீங்கள் வந்திருந்தபோது பேரார்வத்துடன் வந்து சந்தித்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தவர்). அவர் வீட்டு வரவேற்பறையில் தாய்லாந்து ஓவியங்களை மாட்டியிருந்தார். நான் திருவாரூரில் கோயில்களில் பார்த்த சிற்பங்களைப்போன்ற ஓவியம்! அப்போது அவர் 20 வருடங்களுக்கும் முன்னர் பரம்பனான், போராப்புதூர் ஆலயங்களுக்கு நேரில் சென்ற அனுபவத்தை சொன்னார். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அந்த இரு நாட்கள் “உருகாத பனிக்கட்டியாய்” கிடப்பதாகவும், அதை இங்கு சொல்லி யாருக்கும் விளங்கவைக்கவும் முடியவில்லை என்றும் சொன்னார்! அதன் பின்னர் வெகு நேரம் அந்த இரண்டு இடங்களிலும் வேலை செய்த சிற்பிகளுக்கிடையில் எப்படிப்பட்ட போட்டி நிலவியிருக்கும், அது அந்த கலைஞர்களுக்கு எப்படிப்பட்ட படைப்பூக்கத்தைக் கொடுத்திருக்கும் என்று பேசிக்கொண்டிருந்தோம்.

வீடு திரும்பி உங்கள் தளத்தைப் பார்த்தால் அந்த நாள் அங்கேயிருந்து நீங்கள் எழுதிய கட்டுரை! கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்!பின்னர் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து படித்துக்காட்டினேன். போராப்புதூர் பற்றி நீங்கள் இறுதியாய் சொன்னதை மிகவும் ரசித்தார்கள்!
“போராப்புதூரின் இந்தக்காலை ஓர் அரிய வாழ்வனுபவம். சில சமயம் சில அனுபவங்கள் இனி இவை திரும்புவதில்லை என்னும் எண்ணத்தை அளித்து ஆலிலைமேல் காற்றென அதிரச்செய்வதுண்டு. இன்று அத்தகைய நாள்.”

அற்புதமான பயணக்கட்டுரைக்கு நன்றிகள்!

அன்புடன்,
ராஜன் சோமசுந்தரம்

அன்புள்ள ராஜன்

நலம்தானே?
பேரா வின்ஃபீல்ட் அவர்களிடம் என் அன்பைத்தெரிவிக்கவும். அவருடன் பௌத்தம் பற்றி விவாதித்தவை நினைவில் மேலும் வளர்கின்றன

அப்போதே இந்தோனேசியத் திட்டம் இருந்தது. ஆனால் போராபுதூர் அங்கு சென்றபின்னரே விஸ்வரூபம் காட்டியது

ஜெ

*

அன்புள்ள ஜெ,

பதில்களுக்கு நன்றி. நேரு பற்றிய குறிப்புக்கு மட்டும் பதில் சொல்ல விரும்புகிறேன். நேரு மார்க்ஸியர்களால் சூழப்பட்டு இந்திய ஞான மரபை மறுதலிக்கும் கல்விக் கொள்கைக்கு வித்திட்டார் என்பது உங்கள் ஆணித்தரமான நம்பிக்கை. ஒரு குழுவிற்கு தலைமைத் தாங்குபவரின் பெயரைக் கண்டு மையல் கொண்டு அக்குழுவின் செயல்பாட்டினை நான் கற்பனை செய்து கொள்ளவில்லை. ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப் பெற்றக் குழுவின் அறிக்கை முழுமையும் இணையத்தில் இருக்கிறது அக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலோடு. அவர்களுள் மார்க்ஸியர்கள், அதுவும் அரைகுரை மார்க்ஸியர்கள், இருக்கிறார்களா என உண்மையில் தேடிப் பார்த்தேன். பலர் சீரிய கல்வியாளர்களே. பொருளாதாரத்திலும் சரி கல்வியிலும் சரி அன்று அமைக்கப் பட்ட பல குழுக்களும் உலகம் பூராவிலிருந்தும் தருவிக்கப் பட்ட வல்லுநர்களாலேயே ஆனது. அவ்வறிக்கையினை வாசிக்கும் போது இவ்வளவு கவனமாக நன் கல்வி அமைப்பு அமைக்கப் பெற்றதென்று அறிந்து வியப்பு மேலிட்டது. அதுவும் அன்று நிலவிய மிக குழப்பமான அரசியல் சூழலுக்கிடையே. நேருவியப் பொருளாதாரத்தைப் பற்றி எழுதிவிட்டு அடுத்து எழுத உத்தேசித்திருப்பதே கல்விக் கொள்கை குறித்து தான்.

நான் தரவுகளைத் தேடும் போது மிகக் கவனமாக cross-reference செய்து தான் தேடுவேன். ஒரு தரவை முன் வைக்கும் போது அதன் நம்பகத் தன்மை, அத்தரவுக்கான பின் புலம், வேறு மாற்றுத் தரப்போடான தொடர்பு, எது ஏற்கப் பட்டது, ஏன் ஏற்கப்பட்டது, எது நிராகரிக்கப் பட்டது, ஏன் என்று முடிந்த வரை ஒரு சாதாரணனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு யோசித்து தான் எழுதிகிறேன் ஏனென்றால் ஒரு தகவல் பிழை நேர்ந்தால் கூட முழு உழைப்பையும் குப்பையில் தள்ளுவதற்கு கூட்டம் தயாராக இருக்கிறது.

நேரு சாகித்ய அகாதமி தலைவராக பொறுப்பு வகித்தாரெனப் படித்தப் போது துணுக்குற்றேன். அது தவறு. அவர் அப்பொறுப்பை ஏற்றிருக்கக் கூடாது. அவர் வாசிக்கத் தக்க மூன்று நூல்களை எழுதியிருந்தாலும் அவரை ஒரு எழுத்தாளராகவோ அல்லது வரலாற்றாய்வாளராகவோ நான் என்றுமே கருதியதில்லை. அவரே கூட தன்னை அப்படிக் கருதிக் கொண்டதில்லை. ஆயினும் அவர் மனிதரே கவுரவம் தேடி வந்தப் போது ஏற்றுக் கொண்டார். அவர் பாரத ரத்னா ஏற்றதும் அப்படியே.

இந்திராவின் காலம் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். புபுல் ஜெயகர் இந்திராவின் மேல் மிகுந்த செல்வாக்குக் கொண்டிருந்த ஒரு சாதாரணர் என்பதை அறிவேன். இந்திராவின் காலத்தில் தான் ஹக்ஸர் ஒரு அதிகார மையமாக உருவெடுத்தார். நேரு உண்மையில் ஒரு தனிமையானவர் அவரைச் சுற்றியோ அவரை எதிர்த்தோ பலர் இயங்கிய போதும் தன் சிந்தனையின் தனித்துவத்தையோ அதன் சுதந்திரத்தையோ இழக்க விரும்பாதவர். அவர் மேல் கிருஷ்ண மேனன் கொண்டிருந்த தாக்கம் என்பதெல்லாம் அதிகம் எழுதப் பட்டது தான். ஆனால் கல்விக் கொள்கையை அவரிடம் தாரை வார்க்கும் அளவுக்கு என்றுமே இல்லை என்பதே வரலாறு. பொருளாதாரத்திலேயேக் கூட மஹலனாபிஸின் தாக்கம் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் மட்டுமே. அதற்கான காரணங்கள் பல ஆனால் சித்தாந்த மயக்கம் மட்டுமே காரணமில்லை. நேருகாலத்தில் இந்தியா கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஒரு மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்தியதென்றால் மிகையில்லை.

கம்யூனிஸ்டுகளை நேரு சாடியது போல வேறெவரும் சாடியிருப்பார்களா என்பது சந்தேகமே. மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் கம்யூனிஸ்டுகளை ‘தீவிரவாதிகள்’ என்றே சாடுகிறார். நேருவுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் என்றுமே நல்லுறவு இருந்ததில்லை.

நேருவைப் பற்றிப் புத்தகம் எழுதலாம் என்று உத்தேசித்து இருக்கின்றேன். அதற்கு முதல் நன்றி அரவிந்தன் நீலகண்டனுக்கு தான். ஒரு தீவிர எதிர் தரப்பு அளிக்கும் உற்சாகமும் நன்றியோடு நினைவுகூரப்பட வேண்டியதே. பொருளதாரம், மதச் சார்பின்மை, தேச நிர்மாணம், ஜனநாயக மரபுகள் என்று ஒவ்வொரு கூறுகளிலும் நேருவின் செயல் பாட்டினை தொகுத்து எழுத வேண்டுமென்பது எண்ணம். அப்படியொரு எண்ணம் தோன்றிய இரண்டு தினங்களுக்குள்ளாகவே பி.கே. நேரு எழுதிய ‘Nehru: Rebel and Statesman’ கிடைத்தது. 90-களில் நேரு வசைப்பாடல் ஆரம்பித்த சமயம் பி.கே. நேரு அப்புத்தகத்தை நான் எழுத உத்தேசித்த வடிவத்தில் எழுதியுள்ளார். ஆனால் அது மிக மேலோட்டமாகவே எழுதப்பட்டது. அரவிந்தன் நீலகண்டன் அதைப் புறங்கையால் தள்ளிவிட முடியும். இன்றிருக்கும் உற்சாகம் நீடித்தால் புத்தகம் எழுதலாம். தமிழில். இலக்கணப் பிழைகளைத் திருத்த இப்போது இணயத்திலேயே வசதியிருக்கிறது. உங்களுக்கு எழுதப் படும் கடிதங்கள் அவசரமாக கை பேசியில் தட்டச்சு செய்வதால் பிழை திருத்தம் செய்து அனுப்ப இயலவில்லை. அதை நீங்கள் பொறுத்துக் கொள்வது ஊக்கமளிக்கிறது.

அரவிந்தன் கண்ணையன்.

அன்புள்ள அரவிந்தன்

நேருவுக்கு கம்யூனிஸ்டுகள் மேல் இருந்த எதிர்ப்பு மிக எளிதாகப்புரிந்துகொள்ளக்கூடியது. கல்கத்தா தீஸிஸுக்குப்பின் அவர்கள் ஆயுதமேந்தி அரசுக்கு எதிராகப் போராடிய காலம் அது.

ஆனால் இடதுசாரிக் கருத்துக்களால், சோஷலிசம் என அவர் நம்பியவற்றால், தொடர்ந்து ஈர்க்கப்படுபவராகவே அவர் இருந்தார்

நீங்கள் ஒரு நூலாக எழுதுவது மிகமிக முக்கியமானது. உதிரி எழுத்துக்களாக உங்கள் உழைப்பு வீணாகாமலிருக்கும்

ஜெ

முந்தைய கட்டுரைகோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்
அடுத்த கட்டுரைகீதையின் முன்னிலையாளர்