தமிழில் மிகக்குறைவாகவே எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். எழுதும்போது மிகப்பெரிய செல்வாக்குடன் இருக்கும் வணிக எழுத்தாளர்கள் எழுத்தை நிறுத்தும்போது அப்படியே மறைந்துபோய்விடுவதைக் காணலாம்.
ஒருமுறை சேலத்தில் ஓர் இலக்கியக்கூட்டத்தில் ஒருவரைச் சுட்டிக்காட்டி ”அவர்தான் மகரிஷி, எழுத்தாளர்” என்றனர். என்னுடனிருந்த எவருக்கும் அவரைத் தெரிந்திருக்கவில்லை. எழுபதுகளில் அவர் குமுதம் வார இதழ் வாசகர்கள் நடுவே மிகப்பெரிய நட்சத்திரம். அவரது பலநாவல்கள் சினிமாக்களாகியிருக்கின்றன. ஒன்றில் ஜெயலலிதா நடித்திருக்கிறார், நதியைத்தேடிவந்த கடல்.
ஜானகிராமனின் பாதிப்புள்ள, காமம் கலந்த, மென்மையான உணர்ச்சிகரமான கதைகள். வணிக எழுத்தின் எல்லைக்குள்ளேயே அவை முக்கியமானவை. ஆனால் மிக எளிதாக அவர் நினைவின் ஆழங்களுக்குள் தள்ளப்பட்டார். அடுத்த தலைமுறைக்கு அறிமுகமே இல்லாதபடி.
அதேபோல ஒருமுறை ரயிலில் ஒருவரை நானே பி.வி.ஆர் என அடையாளம் கண்டுகொண்டேன். ஒரேசமயம் குமுதம் , கல்கி. விகடனில் தொடர்கதைகள் எழுதுமளவுக்கு அவர் பிரபலமாக இருந்தார் என்பதை நினைவுகூர்ந்தேன். அவ்வளவு ஏன், சாண்டில்யன் இறந்தபின் அப்படியே மறக்கப்பட்டார். அவரைப்பற்றிய பேச்சே எங்கும் இல்லை.
ஆனால் ஐம்பது அறுபதுகளில் வணிக இதழ்களில் நட்சத்திரமாக ஒளிவிட்ட ஜெயகாந்தன் எண்பதுகளில் எழுத்தை நிறுத்திவிட்டு முப்பதாண்டுக்காலம் வாழ்ந்தபோதும் நட்சத்திரமாகவே இருந்தார். அவர் மறைந்தபின்னரும் அந்தச்செல்வாக்கு நீடிக்கிறது.
அதற்கு என்ன காரணம் ? ஒன்று, அவர் வெறும் கேளிக்கையாளர் , கதைசொல்லி அல்ல. அவர் ஒரு கருத்துத்தரப்பு. ஓர் அறிவார்ந்த பெருங்குரல். அவரது படைப்புகள் வாசகர்களின் அறிவுடனும் ஆன்மீகத்துடனும் உரையாடியிருக்கின்றன, வெறுமே உணர்வுகளை சீண்டிவிட்டு அமையவில்லை.
இரண்டவதாக, அவர் ஓர் ஆளுமை. நிமிர்வும் நகைச்சுவையுணர்வும் சுதந்திரமான சிந்தனையும் அதற்கேற்ற கூர்மொழியும் கொண்ட மனிதர். ஆளுமையாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர். தமிழில் மிகக்குறைவானவர்களுக்கே அந்த அடையாளம் உள்ளது. ஆகவேதான் அவர் இன்றும் நீடிக்கிறார். குறைந்தது ஒரு தலைமுறைக்காலமாவது அவரது செல்வாக்கு இருந்துகொண்டுதானிருக்கும்.
ஜெயகாந்தன் மறைவுக்குப்பின் அவருக்கு நெருக்கமானவராக இருந்த மணா [எஸ்.டி.லட்சுமணன்] தொகுத்து குமுதம் வெளியிட்டிருக்கும் நினைவஞ்சலித் தொகுதியான ’ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம்’ அவ்வகையில் மிக முக்கியமான ஒன்று. ஜெயகாந்தனின் ஆளுமையை அனைத்துக்கோணத்திலும் அறிமுகம் செய்யும் ஒரு நல்ல தொகைநூல் இது.
ஜெயகாந்தனின் சுருக்கமான சுயசரிதைக்குறிப்பை அவரே எழுதிய ‘நினைத்துப்பார்க்கிறேன்’ என்னும் கட்டுரை சொல்கிறது. அவரது எழுத்தின் இயல்பை அவர் எழுதிய ‘நான் ஏன் எழுதுகிறேன், நானும் என் எழுத்தும் ஆகிய கட்டுரைகள் விவரிக்கின்றன. டிராட்ஸ்கி மருது, ஆதிமூலம் வரைந்த கோட்டோவியங்கள், தளவாய் சுந்தரம் மற்றும் சமஸ் எடுத்த இரு பேட்டிகள் என விரிவான உழைப்பு செலுத்தப்பட்ட தொகுப்பு இது
இரு முக்கியமான குறிப்புகள் ஜெயகாந்தனின் அறிவுலகத்தோழியும் இரண்டாவது மனைவியுமான திருமதி ஞானாம்பிகா ஜெயகாந்தன் எழுதிய ‘என் கணவர்’ என்னும் கட்டுரை. ஜெயகாந்தனின் கதைகள் மிகப்பெரும்பாலும் சொல்லி எழுதப்பட்டவை. அவற்றை அவர் சொல்லச்சொல்ல எழுதியவர் ஞானாம்பிகை. தனக்கும் ஜெயகாந்தனுக்குமான நெருக்கம் உருவாகி திருமண உறவாக ஆனதை அவர்கள் சொல்கிறார்கள்.
இன்னொரு குறிப்பு ஜெயகாந்தனின் பிரியத்துக்குரிய மைந்தனான அப்பு [ஜெயசிம்மன்] எழுதிய அப்பாவுக்கொரு கடிதம் என்னும் பழைய கட்டுரை. அக்கட்டுரையில் அப்பா மேல் அப்பு கொண்டுள்ள ஆழமான நட்பும் பக்தியும் பிரியமும் வெளிப்படுகின்றன. அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் என்னும் ஜெயகாந்தனின் கட்டுரைகளும் நினைவுக்கு வருகின்றன. கூடவே அப்புவின் பிற்கால மாற்றங்கள் நினைவிலெழுந்து துயரை நெஞ்சில் நிறைக்கின்றது
சா.கந்தசாமி, கே.எஸ்.சுப்ரமணியன், கி.வீரமணி, அசோகமித்திரன், ஈரோடு தமிழன்பன், முருகபூபதி போன்றவர்களின் நினைவுக்குறிப்புகள், அஞ்சலிகள் தொகுக்கப்பட்டுள்ளன. நான் எழுதிய ‘ஆலமர்ந்த ஆசிரியன்’ என்னும் கட்டுரையும் உள்ளது.
இறப்புக்குப்பின் அறிமுகமாகும் தன்மை எழுத்தாளர்களுக்கு மட்டுமே உள் தனிச்சிறப்பு. அவ்வெழுத்தாளரின் ஆக்கங்கள் முறையாகத் தொகுக்கப்பட்டு அவரது ஆளுமை வரையறைசெய்யப்பட்டு வெளிப்படுகிறது.. அதுதான் எதிர்காலம் வரை நீள்கிறது. ஜெயகாந்தனின் ஆளுமையை அறிமுகம்செய்யும் இந்த தொகைநூல் அக்காரணத்தால் முக்கியமானது