திருசூழ் பெருநிலை

1
வெண்முரசு நாவல் வரிசையில் நீலம் ராதை தன் நிகரற்ற அர்ப்பணிப்பால் கிருஷ்ணனை உருவாக்கி எடுப்பதைக் காட்டியது. இந்திரநீலம் கிருஷ்ணன் தன் காதலால் சத்யபாமை, ருக்மிணி, ஜாம்பவதி, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை,பத்ரை ,காளிந்தி என்னும் எட்டு நாயகியரையும் உருவாக்கி எடுப்பதன் கதை.

உலகளந்தவனின் உள்ளத்தில் நீங்காது அமர்ந்த எட்டு திருமகள்கள் அவர்கள். நீங்காதவர்கள் பிரியவோ மீண்டும் இணையவோ முடியாது. ஆகவே இதெல்லாம் ஓர் இனிய விளையாட்டு மட்டுமே. அவர்களின் கன்னிமை ஏக்கமும், காதலின் துயரமும், ஆழத்துத் தனிமையும், காமத்தின் களிப்பும், மனைபுகுந்தபின் உரிமையாடலும், ஒருவரோடொருவர் கொள்ளும் போராட்டமும் எல்லாம் அவர்கள் எங்கும் நீங்கவேயில்லை என்னும் நிலையில் நிகழும் மாயைகள்.

அந்த விளையாட்டை நிகழ்த்துவது அழகென்றும் செல்வமென்றும் ஆணவமென்றும் தன்னைக்காட்டும் இவ்வுலகத் திரு. அதன் வடிவாகிய சியமந்தக மணி. அனைவரையும் தன் ஆட்டவிதிகளின் படி சுழற்றியடிக்கிறது. ஆழத்தில் தொடங்கி ஆழத்திற்கே மீள்கிறது. அதுவும் அவன் நீலமேயாகும். இந்நாவல் எட்டு திருக்கள் சூழ அவன் இருக்கும் துவாரகை எனும் ஆலயத்தின் காட்சி.

மகாபாரதத்தை நாவல்களாக நான் உருவாக்கும் வெண்முரசு வரிசையின் ஏழாவது படைப்பு இது. நீலம், இந்திரநீலம் இரண்டும் மகாபாரதத்திலிருந்து விலகி பாகவதத்தை மறுஆக்கம் செய்வதாகச் சென்று மீள்கின்றன.

இந்நாவலை உருவாக்குகையில் பலருடைய உதவி உடனிருந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பிழைதிருத்தி, தொகுப்பு செய்து உதவிய ஸ்ரீனிவாசன்–சுதா தம்பதியினருக்கு என் அன்பு. பலபகுதிகளை தட்டச்சு செய்துதந்தவர் மீனாம்பிகை மற்றும் திருக்குறளரசி. நண்பர் கிருஷ்ணன் ஒவ்வொருநாளும் பேசி நாவலின் அத்தியாயங்கள் விரிவாகிச்செல்ல உதவியவர். என் மகன் அஜிதன் ஓர் ஆசிரியனின் இடத்தில் இருந்து எனக்கு உதவுபவன். எப்போதும் உடனுள்ள அரங்கசாமி. இவர்களுக்கு நன்றி சொல்வது அணுக்கத்தை குறைக்கலாம்.

இந்நாவலை செம்மையாக்கம் செய்த கிழக்குபிரசுரம் ஹரன் பிரசன்னாவுக்கும் வெளியிடும் கிழக்கு பிரசுரத்திற்கும் நன்றி.
4054
1989-இல் டெல்லியில் நான் ஒரிய நடனமேதை கேளுசரண் மகாபாத்ராவை சந்தித்தேன். அங்கே ஒரு அரசுநிகழ்ச்சிக்காக வந்திருந்தார். ஒரு இதழியல் நண்பருடன் சென்றிருந்த நான் அவரைச் சூழ்ந்திருந்த கூட்டத்தை நோக்கி நெடுநேரம் நின்றபின்னரே அவரை யாரென கண்டுபிடித்தேன்.

அவரது நடனத்தை திருவனந்தபுரம் சூர்யா நடனத்திருவிழாவிலும் கொனார்க் நடனவிழாவிலும் கண்டிருக்கிறேன். அன்றே என்னுள் ஒரு கனவாகக் குடியேறியிருந்த ராதா-கிருஷ்ண பெருங்காதலை, அவற்றைச் சொற்களாக்கிய ஜயதேவரின் கவித்துவத்தை மானுட உடலில் நிகழும் அழகின் பாவனைகளாக அவரிடம்தான் கண்டேன். அவராக நான் நடித்திருந்தேன்.

பின்னர் மதுராவில் இருந்த நாட்களிலெல்லாம் கிருஷ்ணனுடன் ஜயதேவருடன்அவரையும் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறேன். லலித மதுர கோமள பதாவலி என அஷ்டபதியை சொல்வார்கள். லலிதமதுர கோமள சலனாவலி என்று கேளுசரண் மகாபாத்யாய அவர்களை சொல்வேன்.

கூட்டம் சற்று தணிந்ததும் அவர் அருகே செல்ல எண்ணியிருந்தேன். ஆனால் கூட்டம் விலகியதும் அவர் எழப்போனார். நான் விரைந்து அவரை அணுகினேன். என்னை நோக்கி புன்னகை செய்தார். நான் அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன்.

புன்னகையுடன் வாழ்த்திவிட்டு  என்பெயரை கேட்டார். நான் அன்று பெரிதாக ஏதும் எழுதவில்லை. ஆனாலும் தமிழ் எழுத்தாளன் என்று சொன்னேன். அது என் தன்னுணர்வு. மீண்டும் ஒருமுறை வாழ்த்தினார்.

கேளுசரண் மகாபாத்ரா அவர்களின் நினைவுக்கு இந்த நூல் சமர்ப்பணம்.

ஜெயமோகன்

[கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் இந்திரநீலம் நாவலுக்கான முன்னுரை]

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரை‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1
அடுத்த கட்டுரைமழை கடிதங்கள்- 3