‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 1

d d 8

1. உலகிலிருந்து ஒரே ஒரு புகையிலைப்பொட்டலம்

கால் சகன் எழுதிய காண்டாக்ட் என்னும் நாவலில் கதாநாயகி எல்லி அரோவே விண்ணிலிருந்து அனுப்பப்பட்ட செய்திகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எந்திரம் ஒன்றில் ஏறி, பிரபஞ்சத்தில் இருக்கும் காலத்துளை ஒன்றின் ஊடாக பிரபஞ்சத்தின் எல்லைகளுக்குப் பயணமாகிறாள். இந்த விண்வெளியை உருவாக்கி நிலை நிறுத்தி மறு ஆக்கம் செய்யும் முன்னோடிகளான பிரபஞ்ச சக்திகளுடன் உரையாட அவளுக்கு வாய்க்கிறது. அதன் பின் அவள் திரும்பி வருகிறாள்.

அவள் என்ன உணர்ந்தாள்?கால் சகன் அதை இப்படி சொல்கிறார். ’ஒரு மாபெரும் ஓவியத்தின் மூலையில் மிகச்சிறிய தெளிவற்ற கிறுக்கலாக அதை எழுதியவனுடைய கையெழுத்து இருப்பது போல மிக சிக்கலான ஊடுபாவுகள் கொண்ட இப்பிரஞ்சக் கட்டமைப்பின் உள்ளே பிரபஞ்ச சிற்பியின் கையெழுத்தாக ஒன்று உள்ளது. அது π (பை) 22/7. விண்மீன்களின் சுழற்சியையும், கோள்களின் ஓடு பாதைகளையும், திசைகளென்றான வளைவுகளையும் தீர்மானிக்கும் வட்டம் என்ற அமைப்பின் ரகசியம் அது.

நீண்ட நாட்களுக்குப்பின் ஜார்ஜ் ஹெர்பர்ட் பால்மரின் Auto Biography of a philosopher [George Herbert Palmer] என்றநூலை வாசித்த போது அதன் ஆசிரியர் தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே மனிதன் ஒரு போதும் தீர்க்க முடியாத தத்துவப்பிரச்னை ஒன்றை சந்திக்க நேர்ந்ததை சொல்கிறார்.

ஒவ்வொரு நாளும் தன்னுடைய அக்காவிடம் கதை கேட்டு தூங்குவது அவர் வழக்கம். மறு நாள் காலை எழுந்ததும் ”நான் நேற்று எப்போது தூங்கினேன்?” என்பார். ”நான் கதையின் இப்பகுதியை சொல்லிக்கொண்டிருந்தபோது” என்று அக்கா சொல்வாள். ”ஆம் அது எனக்கு தெரியும் நான் தூங்கவில்லை. ஆனால் தூங்கியது எப்போது?” என்பார். ”இல்லை. இதற்குப்பின் நான் இந்த வரியை சொன்னேன்” என்பார். ”ஆம் அதையும் நான் கேட்டேன்” என்பார். ”அதற்கு பிறகு நான் இதை சொன்னேன்” என்பார் அக்கா. ”அதை நான் கேட்கவில்லை அப்போது நான் தூங்கிவிட்டிருந்தேன். ஆனால் நான் இதற்கு நடுவே நான் மிகச்சரியாக எப்போது தூங்கினேன்?” என்பார்.

அதைக் கண்டுபிடிக்கவே முடியாது என்ற உண்மை அந்த வயதில் அவரை உலுக்கி இருக்கிறது. அது ஒரு பிரபஞ்ச தரிசனம் இந்த பிரம்மாண்டமான ஓவியத்தின் மூலையில் ஒளிந்திருக்கும் ஒரு சின்ன புன்னகை அது. சற்றேனும் அக விழிப்பு கொண்ட எவருக்கும் அந்த உண்மை தன்னைக் காட்டியிருக்கும். அறியமுடியாத முடிவின்மை ஒன்றின் மீது நாம் நமது எளிய வாழ்க்கையை கட்டியிருக்கிறோம்.

சமீபத்தில் இந்தோனேஷியாவில் மராப்பி எரிமலையை பார்க்க சென்றிருந்தபோது ஒரு அதிர்வு போல அதை உணர்ந்தேன். மேலே எரிமலையின் வாய் அப்போதும் அனல் உமிழ்ந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் சரிவுகள் முழுக்க பச்சைப்பசேல் என்று அடுக்கடுக்கான நெல் வயல்கள், தோள் முட்டிச் செறிந்த வீடுகள் கொண்ட கிராமங்கள். குழந்தைகள் விளையாடின. முதியோர்கள் ஓய்வாக அமர்ந்திருந்தார்கள். பெண்கள் வேலை செய்து கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

எரிமலையின் கீழ் இப்படி வாழ்கிறார்கள் என்ற துணுக்குறல் வந்த மறுகணமே பூமியில் உள்ள அத்தனை உயிர்களும் ஒரு மாபெரும் எரிமலைக் குழம்புருளைக்கு மேல் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் வந்தது.

தற்செயலாக வந்து தொடும் அறிதல்களாக நம்மை வந்தடைகிறது அந்த பிரம்மாண்டம். உச்சகணங்களில் மட்டும் அல்ல, பலசமயம் மிகச்சிறிய தருணத்திலும் அது நம்மைத் தொட்டுச் செல்லக்கூடும்.என் இளவயதில் மங்களூரில் இருந்து உடுப்பிக்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் பின்பக்க உடல் வளைவைப் பார்த்து அவள் அழகில் மனம் அதிரப் பெற்றேன். அவள் முகம் எப்படி இருக்கும் என்று எண்ணினேன். அதை மாற்றி மாற்றி கற்பனையில் வரைந்தேன். எப்படியும் நான் இருக்கும் வழியாக அவள் திரும்பிச் செல்வாள் என்றும் அப்போது அவளைப் பார்த்துவிடலாம் என்றும் எண்ணினேன்.

ஆனால் ஓரிடத்தில் வண்டி நின்றபோது நான் எதிர்பாராத வாசல் முன்பக்கம் திறந்து அவள் இறங்கிச் சென்றுவிட்டாள். அவளைப் பார்ப்பதற்காக நான் எழுந்ததும் இன்னொரு வண்டிக்கு பின் அவள் மறைந்தாள். எனது பேருந்து கடந்து வந்து விட்டது.

அந்தக் கணத்தில் ஒரு துணுக்குறல் போல முடிவின்மை வந்து என்னை அறைந்தது. இனி ஒரு போதும் அவளை நான் பார்க்க முடியாமல் போகலாம். அவள் முகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற புதிருக்கு விடையே கிடையாது. அந்த முடிவிலி வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், காலத்தின் ஒவ்வொரு கணத்திலும் இருந்து கொண்டிருக்கிறது.

“நவீனக் கவிதையில் இதுவரை என்ன சாதிக்கப்பட்டது?’ என்ற ஒற்றை வரியை ஒருவர் எழுப்புவார் என்றால், அன்றாட எளிய நிகழ்வுகளிலிருந்து வாழ்வுப்பின்னலின், பிரபஞ்ச நிகழ்வின் பேருண்மைகளை நோக்கிச் செல்லும் வாயிலை திறக்கும் கலையை அது கண்டடைந்தது என்று சொல்லிவிட முடியும்.

ஒருமாதம் தமிழில் வெளிவரக்கூடிய அனைத்து சிற்றிதழ்களையும் எடுத்து ஒட்டு மொத்தமாக அத்தனை கவிதைகளையும் வாசிக்கும் போது, ஓர் உண்மை நம்மை அறைகிறது. பெரும்பாலான கவிதைகள் அன்றாட எளிய வாழ்க்கைக் கணங்களை வந்து தொட்டு செல்லும் முடிவின்மை ஒன்றை சொல்லிவிடவே முயல்கின்றன.

கணிசமான கவிதைகள் அதற்கு முன்பே நிகழ்த்தப்பட்டுவிட்டவற்றின் நகல்கள் என்பது இயல்பே. ஏராளமான கவிதைகள் அவ்வகையான அகக்கண்டடைதலின் முறைமையை முந்தைய கவிதைகளில் இருந்து பெற்று ஒரு திட்டமாக மாற்றிக் கொண்டு அதை நிகழ்த்துபவை. ஆனால் எப்போதும் ஏதோ ஒரு கவிதை முற்றிலும் புதிய வகையில் முடிவின்மையில் தன்னைப் பிரதிபலித்துக் காட்டி நம்மை அதிர வைக்கிறது. அந்தச்சாத்தியமே கவிதைகளை நாம் மீண்டும் மீண்டும் தேடிச்செல்லவைக்கிறது.

திரும்பத் திரும்ப எழுதப்பட்டுவிட்ட போதும் கூட ஒவ்வொருமுறையும் இந்த எளிய வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளில் ஏதோ ஒரு கணம் அதுவரை கண்டடையப்படாததாக உள்ளது. இந்த பூமியில் மானுட வாழ்க்கை நிகழ்ந்து இத்தனை ஆயிரம் வருடங்களுக்கு பிறகும் இந்த தருணம் இப்படி இதற்கு முன் கண்டடையப்பட்டதில்லை என்ற வியப்பை புதிய கவிதை அளிக்கிறது. மணல் பெருக்கில் வைரம் போல அக்கவிதை தனித்து தெரிகிறது. அதை நினைவு எடுத்துப் பத்திரப்படுத்திக்கொள்கிறது.

கவிதை வாசகர்களுக்கு தெரியும், நவீன கவிதை என்று ஒன்று உருவாவதற்கு முன்பு இக்குறிப்பிட்ட விஷயத்தை கற்பனாவாதக் கவிதைகளிலோ அதற்கு முந்தைய செவ்வியல் கவிதைகளிலோ காண முடியாது என்று. கற்பனாவாதக் கவிதைகள் வாழ்க்கையின் பேருண்மை என்பது சித்தமும், உணர்ச்சிகளும், உள்ளுணர்வும் ஒருங்கு குவிந்து சென்று அடையும் உச்சத்தில் வெளிப்படுவது என்ற எண்ணம் கொண்டிருந்தன. அந்த உச்சத்தை மொழியால் தொட்டெடுக்கும் கனவை மீட்டின. ஒவ்வொரு தருணத்திலும் சாத்தியமான உச்சகட்ட உளவிசையை செலுத்தி அதைத் திறக்க முயன்றன. அதற்கான தருணங்களை அவை கண்டடைந்தன.

அத்தகைய தருணங்கள் எப்போதும் நமது கண்முன் பேருருக்கொண்டு நிற்கும் இயற்கையிலேயே கண்டடைந்தன.வானம், முகில்கள், நிலவு, சூரியன், காற்று, ஒளி, நீர், கடல் என எத்தனை சொல்லியும் தீராதவற்றால் ஆன இயற்கை, தன் அடியில் பெருகி நிறைந்திருக்கும் முடிவின்மையை அவர்களுக்கு காட்டியது. அக்கண்டடைதலின் அரியகணங்களால் ஆனது

கற்பனாவாதக்கவிதைகளின் உலகம். பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிமரபின் திரண்ட தத்துவமுனை என்று சொல்லத்தக்க எமர்சன் அவரது இயற்கை என்னும் கட்டுரையில் இயற்கை என்பது தன்னை அவ்வாறாக வெளிப்படுத்திக் கொண்டுள்ள பிறிதொன்று என்று கண்டடைகிறார். இலைத்தளிர்கள் பனித்துளிகள் பெருங்கிளைவிட்ட மரங்கள் அனைத்தும் ஒரு அறியா மொழியின் எழுத்துக்கள். அவ்வண்ணம் அவை பிணைந்தும் விரிந்தும் தங்களை காட்டுவதனூடாக ஒன்றை உணர்த்தி நிற்கின்றன. அதை நோக்கிச் செல்லும் ஒரு பயணமே இயற்கையை அறிதல் என்பது. ஆழ்நிலை வாதத்தின் அடிப்படை மனநிலை அதுதான்.

உலகெங்கும் கற்பனாவாதத்தின் தேடல் இங்குள அனைத்திலும் திரண்டிருக்கும் இங்கிலாத ஒன்றை அறியும் பெருநிலைதான். வேர் முதல் கனி வரை மரத்தின் சாரமாக இருக்கும் சுவையை தனித்து எடுத்து அறியும் துடிப்பு அது.

அதற்கு முந்தைய செவ்வியல் எழுத்தில் வாழ்க்கையின் முடிவற்ற வண்ணபேதங்களை நோக்கி விரிவதென்பது ஒவ்வொன்றையும் பொருள்இழக்க செய்யும் என்று அவர்கள் புரிந்து கொண்டிருந்தனர். செவ்வியல் எல்லைகளையே முதலில் வகுக்கிறது.அனைத்தையும் வகுத்து இலக்கணப்படுத்தி வரையறைசெய்வதில் ஆர்வம் கொண்டிருந்தது. நவரசங்களாகவும், ஐந்து திணைகளாகவும், எட்டு பாவங்களாகவும் எல்லாம் அது வாழ்க்கையை வகுத்து அளித்தது. அதையொட்டி அணிகள், செய்யுள்வடிவங்கள், காவியக் கட்டமைப்புகள் என உறுதியான அமைப்புகளை மொழியில் எழுப்பியது .

அந்த அமைப்பின் கூறுகளுக்குள் முடிவில்லாத நுண்மையாக்கத்திற்கான அறைகூவலை அது விடுத்தது. கைவளை கழல்தல் என்ற ஒரு நிகழ்வை ஓராயிரம் வகையில் சொல்லிச்சொல்லி பிரிவின் துயரத்தை முழுக்க சொல்லிவிடவே முடியாது என்று அது கண்டுபிடித்தது, அனைத்தையும் சொல்லுதல் என்பதற்கு பதிலாக சொல்ல சொல்ல்லிச்சொல்லிச்ச் சென்று சொல்லமுடியாமல் எஞ்சிவிடும் ஒன்றை நோக்கி மட்டும் செல்வதற்கான துடிப்பென்று செவ்வியல் கலை சொல்லலாம். சொல்லை விஞ்சிச்செல்லும் அந்த சிறு துளியை நோக்கி தன்னை குவித்துக் கொண்டது அது

செவ்வியலும் சரி, கற்பனாவாதமும் சரி, ஒருபோதும் அன்றாட வாழ்க்கையை பெரிதென நினைத்ததில்லை. கற்பனாவாதத்திலும் செவ்வியலிலும் அன்றாட வாழ்க்கைத் தருணங்கள் வந்து போவதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக செவ்வியல்கலையில் அதன் அடிப்படை இயல்பான முழுமையான உணர்வுச் சமநிலை அடையப்படும்போது ஒரு சர்வசாதாரண தன்மை சில சமயம் சாத்தியமாகிறது. ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ போன்ற பாடல் உதாரணம்.

ஆனால் தமிழின் செவ்வியல் மரபை நாம் எடுத்து பார்த்தால் இறப்பும் காமமும் களியாட்டும் துயரும் கலந்த உச்ச தருணங்கள் வழியாக அது கடந்து வருவதைக் காண்கிறோம். அந்தத் தருணங்கள் அக்கவிஞனின் உணர்வின் அனலால் பற்றிஎரிய வைக்கப்பட்டு, பெருந்தழலாக மாற்றப்பட்டு, கற்பனாவாதம் நிகழ்கிறது . ‘வன் பணை மரமும் தீயும் மாலைகளும் குளிர வாழும் மென்பனி எரிந்தது என்றால் மேனிலை விளம்பலாமோ?’ என ஒரு பெண்மேல் கொண்ட காதல் ஏக்கத்தைச் சொல்லமுடியும். ’பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலனழிந்து ஒரு புத்துயிர் எய்துவேன்’ என ஒரு பெண் ஓரவிழியால் தன்னை பார்க்கும் ஒரு கணத்தை சொல்லமுடியும் அவனால்.

ஈராயிரம் ஆண்டுகளாக இவ்விரு கவிதை மரபுக்களுக்கு பழகிப்போனதனால்தான் தமிழில் புதுக்கவிதை வந்தபோது கவிதைரசிகர்களை அது அதிர்வுறச் செய்தது, இன்று அன்றைய கவிதை விவாதங்களை திரும்பி பார்க்கையில் ஒன்று தெரிகிறது யாப்பு அல்லது யாப்பற்ற கவிதை என்பதல்ல அன்றிருந்த முரண்பாடு. யாப்பு அவர்களுக்கு சொல்லத் தெரிந்த ஒரு புற அடையாளம் மட்டுமே. அவர்களின் குற்றச்சாட்டு இரண்டு கோணங்களில் அமைந்திருந்தது. நவீன கவிதை எதை பேசியதோ அவை பேசப்படுவதற்கு உரியதல்ல என்று அது கருதியது. நவீன கவிதை எப்படி பேசியதோ அதுவல்ல பேசும் முறை என்று அது கருதியது.

நவீனக் கவிதையை யாப்பிற்கு வரும்படி அன்றைய வாசகர்கள் அறைகூவியதற்கு காரணம் யாப்பில் அன்று வரை பேசியிருந்த பேசுபொருட்களை கவிதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையே. யாப்பில் வெளிப்படையான ஓசையொழுங்கு ஒன்று உள்ளது. அது கூறு முறையை முன்னரே வகுத்துவிட்டிருக்கிறது. நவீனக்கவிதை அந்த இரண்டையும் உதறியிருந்தது

நவீன கவிதை உருவாகும்போது அதற்கு இரண்டு முகங்கள் இருந்தன. பாரதியின் வசன கவிதைதான் நவீனக் கவிதையின் தொடக்க புள்ளி என்கிறார்கள். ஆனால் அவை எவ்வகையிலும் அன்றைய மரபார்ந்த கவிதை வாசகனுக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை என்பதைக் காணலாம். ஏனெனில் அவற்றில் யாப்பு மட்டுமே தவிர்க்கப்பட்டுள்ளது. பேசுபொருள் என்பது மரபார்ந்த கவிதை வாசகனுக்கு உகந்ததே.

சக்தி அடிப்பது, துரத்துவது, கூட்டுவது,
பிணைப்பது,கலப்பது, உதறுவது,புடைப்பது, வீசுவது, சுழற்றுவது,கட்டுவது, சிதறடிப்பது, தூற்றுவது,ஊதிவிடுவது, நிறுத்துவது, ஓட்டுவது,ஒன்றாக்குவது, பலவாக்குவது.
சக்தி குளிர் செய்வது, அனல் தருவது…

போன்ற வரிகள் யாப்புஇன்மை என்ற அம்சத்தால் மட்டுமே புதுக்கவிதைகள் என்று பெயர் பெற்றுள்ளன. ’இருளென்பது குறைந்த ஒளி’ என்பது சற்றே எதுகை மோனை கூடிய மேலும் மூன்று வரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்றால் அற்புதமான மரபுக்கவிதை வரியாகியிருக்கும்.

ந.பிச்சமூர்த்தி எழுதிய வசன கவிதைகளில் கணிசமானவை மரபிலிருந்து யாப்பின்மை என்ற அம்சத்தால் மட்டும் வேறுபடக்கூடியவை. உதாரணம் கொக்கு.

படிகக் குளத்தோரம்
கொக்கு.
செங்கால் நெடுக்கு
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
முடியில் நீரை நோக்கும்
மஞ்சள் கட்டாரி மூக்கு

இதை சற்றே குறைபாடுள்ள ஆசிரியப்பா என்று சொல்லிவிட முடியும்.

பிரமிள் ஒரு கட்டுரையில் உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுளை காப்பிய மொழியாகக் கொண்ட தமிழுக்கு, நிலைமண்டில ஆசிரியப்பா, அகவல் போன்ற கவிதை வடிவங்கள் கொண்ட மரபுக்கு புதுக்கவிதையை இன்னொரு வகையான யாப்பாக எடுத்துக் கொள்வதில் எந்தத் தடையுமில்லை என்று குறிப்பிடுகிறார். ஆகவே யாப்பல்ல இங்குள்ள சிக்கல்.

பெட்டிக்கடை நாரணன் என்ற கவிதையை பிச்சமூர்த்தி எழுதியபோது, அதை கவிதை என்று ஏற்பதில் மரபான வாசகனுக்கு இடர் இருந்தது. அந்த அன்றாடவாழ்க்கைச் சித்தரிப்பு எத்தனை ஆழமானதாக இருந்தாலும் எப்படி கவிதை ஆகும் என்று அவனுக்கு புரியவில்லை. அது ஒரு மொழிச்சித்திரம் கவிதைக்குரிய பேசுபொருள் அதில் இல்லை, கவிதைக்குரிய முறையில் அது சொல்லப்படவும் இல்லை.

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு சி.சு.செல்லப்பா எழுத்து இதழின் பிரசுரத்தை தொடங்கும்போது பெட்டிக்கடை நாரணன் என்ற கவிதையை மறு பிரசுரம் செய்தார். உண்மையில் தமிழ் நவீனக்கவிதையின் தொடக்கம் அங்கு தான். அன்று அதுவரையிலான கவிதையிலான பேசுபொருள் மீதும் பேசுமுறை மீதும் நிறைவின்மை கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி உளநகர்வு கொண்ட ஒரு கவிஞர்வட்டம் உருவாகியிருந்தது. சி.மணி, நகுலன், பசுவய்யா [சுந்தர ராமசாமி] தி.சொ.வேணுகோபாலன் போன்றவர்கள். அவர்கள் பெட்டிக்கடை நாரணன் என்ற அக்கவிதையை ஒரு அழைப்பாக எடுத்துக் கொண்டார்கள். அது ஒரு தொடக்கமாக ஆகியது.

அவர்கள் எழுதிய அத்தனை கவிதைகளும் அவற்றின் மாறுபட்ட கோணங்கள், வெவ்வேறுவகை மொழிநடைகள் அனைத்துக்கும் அப்பால் ஒரு பொதுத்தன்மை கொண்டிருந்தன. அவை கவிதைகளை கவிதைக்கு உரிய தனிச்சிறப்பான சந்தர்ப்பங்களில் இருந்து எடுத்துக் கொள்ளவில்லை. கவிதையை நிகழ்த்துவதற்கு உரிய தனி மொழியில் அக்கவிதைகளைச் சொல்லவுமில்லை. அன்றாட வாழ்க்கையில் இருந்து, வீட்டுக்குள் இருந்தும் தெருவில் இருந்தும் கவிதைக்கான கருக்களை எடுத்துக் கொண்டனர். அவற்றை சாதாரண உரையாடலின் மொழியில் முன் வைத்தனர். நவீன கவிதை பிறந்தது.

இன்றைக்கு ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது தமிழ் நவீனக் கவிதை. பல வகையான சோதனை முயற்சிகள், மீறல்கள், சரிவுகள் அதில் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த குறிப்பிட்ட அம்சம் மட்டும் பொதுவான கூறாக இன்றுவரை இருந்துகொண்டிருக்கிறது. வெவ்வேறு தளங்களில் இது தமிழ்நவீனக்கவிதையை திறந்துகொள்ளச் செய்திருக்கிறது. ஒருவகையில் நவீனக்கவிதையை ஜனரஞ்சகப்படுத்தியது இந்த இயல்புதான். தங்கள் வாழ்க்கையின் எல்லா தருணங்களும் எழுதுவதற்குரியவையே என அனைவரையும் எண்ணச்செய்தது இது.

இலக்கிய வடிவங்களில் மிக எளிமையானது கவிதை வடிவம். மிக அரிதானது அதில் கவித்துவத்தை அடைவது. இந்த ஒரு காரணத்தாலேயே ஏறத்தாழ பிழையின்றி [அல்லது ஓரளவு பிழைகளுடன்] தமிழ் எழுதத் தெரிந்த அனைவருமே கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றிகரமான கவிதைகள் எப்போதுமே ஒரு மாதிரிவடிவமாக மாறி ஓர் அச்சாக பயன்படத் தொடங்குகின்றன. பல்லாயிரம் நகல்கவிதைகளை அவை உற்பத்தி செய்து தள்ளுகின்றன. ஆகவே இன்று தமிழில் வாசிக்கப் புகுந்தவர் ஒவ்வொரு நல்ல கவிதைக்கும், சுற்றிலும் நிறுத்தப்பட்ட கண்ணாடிகளில் முடிவின்றி தெரியும் ஆடிப்பிம்பங்களை காண்பது போல் போலிக் கவிதைகளை காண்பார்கள்.

ஆனால் இவற்றுக்கும் அப்பால் தமிழ் நவீனக் கவிதை இங்குள்ள ஒவ்வொன்றிலும் வெளிப்படும் முடிவிலி ஒன்றை மொழிவழியாகக் காட்ட முடியும் என்று நிறுவியிருக்கிறது. ந.பிச்சமூர்த்தியிடமிருந்து தேவதச்சன் வரை ஒரு நேர் கோடைப் போட முடியுமென்றால் அது இந்த ஒற்றை வரியைக் கொண்டு மட்டுமே.

[மேலும்]

 

முந்தைய கட்டுரைமழை,மனிதர்கள்- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைகீதை உரைகள்: அனைத்தும்…