சினிமா, கடிதம்

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் எழுதிய கட்டுரை வாசித்தேன்.

‘ஆனால் படச்சுருள் காலாவதியாகும்போது அகிரா குரசேவா அவரது மகத்துவத்தை இழக்கிறார்’ என்பதை படித்து விட்டு சோகமாகி விட்டேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது ஓரளவு புரிந்த போதும் கூட. தொழில் நுட்ப உபகரணங்களை உபயோகித்தல், மனித சமூகத்தை எதோ ஒரு தளத்தில், நேரத்தில், இணைக்க விட்டு விடுகிறது என்பதை போல..

நாடகம், நடனம், இசை, போன்ற செவ்வியல் ஆரோகணித்த கலைகளையும், புகைப்படம், சினிமா, முதலான நவீன கலைகளையும், செவ்வியல் கலைகளை படம் பிடிக்கும் நவீன கலைகளையும் சிந்தித்து கொண்டிருந்தேன். தெளிவாக ஒன்றும் தோன்றவில்லை. எதோ ஒரு வகையில் ஊமை படங்கள் (silent movies) செவ்வியல் படங்களாகவும், தொல்கலைகளாகவும் உரு மாற வாய்ப்பு இருக்கிறது என தோன்றுகிறது. (ஒரு நூறு வருடங்களு பின் என்றாலும்)

மொழி வடிவிற்கு virtualization – மன பிம்பங்களின் அளவில் ஒரு சாத்தியப்பாடே. பிம்பங்களுக்கு அதன் துல்லியமே ஒரு இடைஞ்சல். எங்கள் ஐ. ஐ. டி பேராசிரியர் கூறுவார் – மாதிரி உரு (model) மனதின் வீச்சை குறைத்து விடும். மாதிரி உருவின்றி சிந்தனை செய்ய பழக வேண்டுமென – (in our lattice physics chapter for material science class) – மொழி அந்த விதத்தில் மாபெரும் தெரிவித்தல்.

ஒரு விதத்தில் கலையை அனுபவிக்க அந்த பிரதேசத்து மொழி அறிந்து, இலக்கியம் அறிந்து, பாலம் அமைத்து கொள்ள வேண்டும். இது அறிதல் சார்ந்த விஷயம் மட்டுமே. உபகரணங்கள் தேவை இல்லைதான்.

அந்த விதத்தில் மொழி சார்ந்த இலக்கிய வெளிப்பாடுகள் சற்று உயர்ந்தே இருக்குமென தெரிகிறது. ஒரு விதத்தில் கலைகள் அனைத்தும் சமமானவையே என்றாலும் மற்றொரு முக்கியமான விதத்தில் மொழி சார்ந்த இலக்கிய முயற்சிகள் தனித்துவத்தில் இருப்பதன் அமைப்பு புரிகிறது

அன்புடன்
முரளி

முந்தைய கட்டுரைசு.வேணுகோபால், ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகீதையும் யோகமும்