அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம் . 2 /9 /10 . அன்று மதுரை பாத்திமா கல்லூரியில் அறக்கட்டளை சொற் பொழிவாக தாங்கள் முன்வைத்த அதிர்வுகளின் எதிரொலி அல்ல இது . “எதிர் ” ஒலி .
யின்-யாங் என உலகில் எதுவும் முழுமையாக தனியானதல்ல. முரண்களின் இணைவே என்ற சீனா தரிசனத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு சு .வேணுகோபாலின் ‘தொப்புள்கொடி ‘ என்ற கதையையும் இணையாக கி . ரா . வின் ‘பேதை ‘ கதையையும் சாயல் அமைந்த தங்கள் ‘அன்னை ‘ கதையையும் சொன்னீர்கள் . வேணுகோபால் கதையில் பிச்சி ஒருத்தி, அவளின் வாழ்க்கை
அலங்கோலம், அவள் கருவுறுதல், குடும்பத்தார் அவமானம், பிள்ளை பெறுதல், தாய்மை வெளிப்பாடு என்று கதை விரிகிறது. இதில் ஏன் அவள் பிச்சிஆனாள், எந்த அயோக்கியன் அந்தப் பேதையை தாய் ஆக்கினான் என்ற வெகு நியாயமான கேள்விகளை முன்வைத்தால் அது படைப்பாளனின் சுதந்திரத்தில் கைவைத்ததாகிவிடும் என்றும் பிரபஞ்ச பொதுமையாகிய தாய்மையை விவரிப்பது மட்டுமே அவன் நோக்கம் என்றும் பதில் வரலாம் .
அடுத்து அந்த சீன தத்துவம். உருவாக்கும் தாயிடமே உருக்குலைக்கும் இயல்பும் இணைந்து இருக்கும். வேணுகோபால் கதையில் தாயே மகளை கொல்ல வழி சொல்கிறாள். திட்டம் செயல் பட்ட போது தாய் அலறித் துடித்தாலும் கொலை நடந்தே விடுகிறது. படிப்பவர் கண்களில் கண்ணீர். உள்ளத்தை அதிர வைத்து கதை வெற்றி அடையலாம் . ஆனால்………………………………………………………………………????……………..
கௌராவக் கொலைகள் மிகுந்து கொண்டிருக்கின்ற இன்றைய சமூகச் சூழலில், சினிமா, டிவி, கணினி, மீடியா வழி உருவாகும் சமூகக் கோரங்களால், தீமையின் வசீகரத்தால் பலவகையில் சீர்மையுடன் வாழ வேண்டிய இளைய சமுதாயம் சீரழிவின் உச்சிக்கே சென்று கொண்டிருக்க, தான் பெற்ற மக்கள்தான் என்றாலும் கொன்று போட்டு விடலாமா என நினைக்கத் தோன்றும் இன்றைய பெற்றோர்கள் மனநிலையில், இப்படிப்பட்ட கதைகள் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்ற தார்மீகப் பொறுப்பு எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டுமா? வேண்டாமா ?
நல்ல தங்காளைவிட, தாயுமானவன் பற்றி அதாவது அழிக்கும் தாயைவிட, அரவணைக்கும் தந்தையைப் பற்றி ராவணனைவிட ரோஜாவைப் பற்றி அதாவது தீயவனுக்கு இரங்குவதைவிட தீயவனும் நல்லவனாகலாம் என்பது பற்றி (இங்கு ராவணன் பற்றி சில ,
அவரவர் மனைவியை அடுத்தவர் இழுத்துக் கொண்டு ஓடும்போது எவராவது எனக்கு கொன்றன்ன இன்னா செயினும் அவரிடம் இருக்கும் நல்லதை நினைத்து இரங்குவேன் என்று சொல்ல முடியுமா ? தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் ) கதைகள் எழுதவேண்டிய, சினிமா எடுக்கவேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம் என்ற சமூக அக்கறை தேவை. பன்றிகளும், பித்தேறியவர்களும் வேண்டுமானால் தாங்கள் ஈன்றவற்றை தாங்களே கொன்று அழிக்கட்டும். நாம் மனிதர்களாகவே வாழ்வோம், மனிதராய் வாழ்வதற்குரிய மார்க்கங்களை சொல்வோம் என்று சொன்னால் தங்கள் பதில் என்ன ??
முனைவர். நா.அனுராதா
பாத்திமா கல்லூரி
மதுரை
அன்புள்ள அனுராதா
உங்கள் கடிதம்
வருத்தப்படமாட்டீர்களே, நீங்கள் நம் கல்வித்துறையால் வேறுபாடே இல்லாமல் தயாரித்து வெளித் தள்ளப்படும் ஓரு தயார்நிலை மாதிரி ஆகவே இருக்கிறீர்கள். அதேபோலவே சிந்திக்கிறீர்கள். சொந்த வாசிப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. கருத்துக்கள் மட்டுமல்ல சொற்கள் கூட கல்லூரி வட்டார மேடைப்பேச்சுகளில் புழங்குபவை.
‘இளைஞர் சமூகம்’ சீர் கெட்டுக் கொண்டே இருக்கிறது என்ற வரியை எப்போதும் எரிச்சலுடன் மட்டுமே நான் எதிர்கொண்டிருக்கிரேன். எந்த வரலாற்றின் அடிப்படையில் இம்மாதிரி சொற்றொடர்கள் சொல்லப் படுகின்றன? அறுபது வீடுகள் கொண்ட கிராமத்தில் ஐந்து வீடுகள் தாசி வீடுகளாக இருந்த நம் தாத்தாக்களின் காலத்தில், ஐந்தும் ஆறும் ஆசை நாயகிகளை வைத்து கூத்தடித்த அப்பாக்களின் காலத்தில் எல்லா ஒழுக்கமும் பேணப்பட்டு இப்போது சீர்கெட்டு கிடக்கிறதா என்ன? இன்றைய இளைஞர்களின் உலகளாவிய நோக்கும், இலட்சியமும், தனிமனித ஒழுக்கமும் எப்போதும் தமிழ் வரலாற்றில் இருந்ததில்லை என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டாவதாக இலக்கியத்தின் ‘திரண்ட கருத்து’ ஒழுக்க போதனையாகவே இருக்க வேண்டுமென்ற எண்ணம் நம் கல்வித்துறையால் மீண்டும் மீண்டும் சொல்லப் படுகிறது. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் காலகட்டத்தில் இருந்து இவர்கள் மேலே செல்வதே இல்லை. இலக்கியம் உபதேசம் செய்வதற்கான வழி முறை அல்ல. அது வாழ்க்கையை காட்டுவதற்கானது. இந்த இணைய தளத்திலேயே குறைந்தது இருபது கட்டுரைகள் உள்ளன படித்து பாருங்கள்.
ஒரு மனிதனின் வாழ்க்கையின் அனுபவங்கள் மிகக்குறைவாகவே இருக்க முடியும். இலக்கியம் அவனுக்கு மேலும் மேலும் அனுபவங்களை அளிக்கிறது. ஒரு வாழ்க்கைக்குள் பற்பல வாழ்க்கைகளை வாழும் வாய்ப்பை அளிக்கிறது. அதிக வாழ்க்கையில் இருந்து அதிக விவேகமும் அதிக பக்குவமும் அதிக அறிவும் அவனுக்கு உருவாகிறது. இலக்கியம் போதனைசெய்வதில்லை, வாழ்க்கையை கற்பனை மூலம் இன்னும் உக்கிரமாக இன்னமும் விரிவாக நிகழ்த்திக் கொள்ள வழிசெய்கிறது. அப்படி நிகரான வாழ்க்கையை அளிக்கும் இலக்கியங்களே கலைப்படைப்புகள். அவற்றில் வாழ்க்கையில் உள்ள அனைத்துமே இருக்கும்.
இலக்கியத்தை கற்றுக் கொடுப்பதென்பது அவ்வாறு சொற்கள் வழியாக இன்னும் கூர்மையான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான பயிற்சியை அளிப்பதே. நம் கல்வித் துறைகளில் அதை அளிப்பதில்லை. திரண்ட கருத்தை தேடி எழுதச்சொல்லிக் கொடுத்து இலக்கியத்துக்கு எதிரான மனநிலையை உருவாக்கி கற்பனையை வேருடன் கெல்லி வீசி விடுகிறார்கள்.
உங்கள் வாதங்களை வைத்துப் பார்த்தால் ராமாயணத்தைத் தடை செய்ய வேண்டும். ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு சென்றது இளைஞர் சமுதாயத்துக்கு தவறான முன்னுதாரணமாக ஆகுமே. சிலம்பையும் தடை செய்ய வேண்டும். கோவலன் மாதவியை அடைந்தது இளைஞர் சமூகத்தை கெடுக்குமே. மொத்த சங்க இலக்கியத்தையே தடை செய்ய வேண்டும், காமத்தையும் வன்முறையையும் கற்பிப்பவை அல்லவா?
நீங்கள் என்ன கல்லூரிகளில் இலக்கியத் தாலிபானியத்தையா சொல்லிக்கொடுக்கிறீர்கள்? இலக்கிய ஆக்கங்கள் முன் கற்பனையை திறந்து கொண்டு நிற்க பழகுங்கள். அது இலக்கிய அனுபவத்தை அளிக்கும். இலக்கியவாதிக்கு ஒழுக்கத் தீர்ப்பளிக்கும் முல்லாக்களாக நீங்கள் உங்களை நிறுத்திக் கொள்ள வேண்டாம்.
ஜெ