விலகிச்செல்பவர்கள்…

ஜெ

உங்கள் பழைய கட்டுரை ஒன்றை வாசித்தேன் எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும். அதில் நீங்கள் சொல்லியிருந்த ஒரு வரியே இக்கடிதத்தை எழுத எனக்குத் தூண்டுதல். ‘இருபதுமுப்பது வருடங்களில் என்னை விட்டு விலகிச்சென்ற நண்பர்கள், வாசகர்கள் ஓரிருவர்கூட கிடையாது’ என்கிறீர்கள். உங்களுக்கு ‘பணிவன்புடன்’ கடிதம் எழுதியவர்கள் இன்றைக்கு உங்களை சுயமோகம் பிடித்தவர், அல்பம் என எழுதுவதும் உங்கள் அமைப்பில் இருந்தவர்களே அவற்றை பிரசுரித்து மகிழ்வதையும் காண்கிறீர்களா? உங்கள் மனப்பதிவு என்ன?

கருணாகரன்

அன்புள்ள கருணாகரன்,

இல்லை, தெரிந்துகொள்ளவும் முயல்வதில்லை. உங்கள் கடிதம் மூலம் ஊகிக்கிறேன். ஆனால் மறுபக்கத்தையும் பாருங்கள். அதிதீவிர மோடி எதிர்ப்பாளர்களாக நின்று என்னை வசைபாடுபவர்களிலும் பலர் பழைய நண்பர்களே.

உண்மை, எப்போதும் சிலர் விலகிச்சென்றுகொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நண்பர்கள் அல்ல. அப்படி விலகிச்செல்பவர்களில் முக்கியமான தரப்பினர் தங்களை மிகமுக்கியமானவர்களாக எண்ணிக்கொண்டு என்னை அணுகுபவர்கள்.

நான் அவர்களின் சாதனைகள் என்ன என்றே பார்ப்பேன். அவர்களோ தங்களைப்பற்றி தாங்கள் என்ன உருவகித்திருக்கிறார்களோ அதை நான் அடையாளம் காண்கிறேனா என்று பார்ப்பார்கள். நான் இயல்பாக இருப்பேன், அவர்கள் ஒவ்வொரு கணமும் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பார்கள்.

இன்னும் நுட்பமாக, என்னைச்சூழ்ந்துள்ள மற்ற நண்பர்கள் தங்களை மிகமுக்கியமானவர்களாக எண்ணுகிறார்களா என்று பார்ப்பார்கள்.அவ்வாறு நிகழாதபோது அதை தங்கள் குறைபாடு என எண்ணி அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளும் சிலர் இருக்கலாம். பொதுவாக என்னையும் என் நண்பர்களையும் நிராகரித்து தன் இடத்தைப்பாதுகாத்துக்கொள்ளும் போக்கே அதிகம்.அதன்பின்னர் அவர்களின் நக்கல்களும் வசைகளும் வரத்தொடங்கும். அது நண்பர்களுக்கும் தெரியும்

இன்னொரு தரப்பினர் ஏதேனும் கருத்தியல்பற்று கொண்டவர்கள். இந்தத்தளம் ஆரம்பித்தபின் அப்படி விலகிச்சென்ற முதல் குழுவினர் அறுவை சிகிழ்ச்சைக்குக் கடப்பாரை என ஈ.வே.ரா பற்றி எழுதியபோது சென்றவர்கள். அதன் நித்யானந்தா பற்றிய என் விமர்சனங்களை ஒட்டி சென்றார்கள். அதன்பின் சந்திரசேகர சரஸ்வதி பற்றிய என் விமர்சனம் இன்னொரு தரப்பினரை விலக்கியது.

சமீபமாக வெள்ளை யானை வந்தபோது இன்னொரு குழு சென்றது. அதன்பின் அர்ஜுன் சம்பத் பற்றிய விமர்சனம் ஒரு தரப்பை அகற்றியது. சமீபமாக இடைநிலைச்சாதி, தெலுங்குச்சாதிகளைப்பற்றிய குறிப்புகள் ஒரு சராரை வெளியே கொண்டுசெல்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் கடும் வன்மத்துடன்தான் செல்கிறார்கள்.

1
கருத்துக்களுக்காக ‘புண்பட்டு’ செல்வர்கள் சென்றுகொண்டேதான் இருப்பார்கள். இவர்கள் அத்தனைபேரையும் ஒன்றாக வைத்திருக்கவேண்டும் என்றால் கருத்தே சொல்லக்கூடாது. அப்போதும் கருத்து என்ன என்று கேட்டு குடைந்து , அவர்களே ஊகித்து, புண்பட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.

இவர்கள் வாசகர்களே அல்ல. ஏனென்றால் வாசகனின் திறந்த உள்ளத்துடன் இவர்கள் எப்போதும் வாசித்ததில்லை. உடன்பாடான கருத்துக்களுக்காக மட்டுமே தேடியிருக்கிறார்கள். நண்பர்களாக அவர்கள் தங்களை வைத்துக்கொண்டதுமில்லை. உண்மையில் இவர்களுக்கு என் மேல் எப்போதும் எந்த மரியாதையும் இருந்ததும் இல்லை. அவர்களுக்கு தங்கள் சாதி, மதம், அரசியல் நிலைபாடுகளே முக்கியமானவை.

கருத்தியல்வெறி என்பது பெற்ற தந்தையின் கழுத்தை அறுக்கக்கூட தயங்காத இடத்திற்கே மனிதர்களைக்கொண்டுசெல்லும். ஏனென்றால் மிதமிஞ்சிய கருத்தியல்பற்று கொண்டவர்கள் இயல்பான மனிதர்கள் அல்ல. ஒருவகை ஆளுமைக்குறைபாடு கொண்டவர்கள். தனித்து நிற்கும் தன்னம்பிக்கையும் நிமிர்வும் அற்றவர்கள். அந்த கருத்தியல் என்பது அவர்களின் ஊன்றுகோல்.

அந்த தாழ்வுணர்ச்சியும் தனிமையும் உச்சகட்ட வன்மத்தை நோக்கித்தள்ளுகின்றன. வெறுப்பின் வெறியே அவர்களை வல்லமைமிக்கவர்களாக உணரச்செய்கிறது.

அவர்கள் தங்களுடைய கருத்துக்களுக்கு நான் உதவக்கூடும், ஒத்துப்போகக்கூடும் என நம்பி என்னிடம் வருகிறார்கள். ஏதேனும் சில கட்டுரைகள் அதற்குக் காரணமாக இருக்கலாம். பிற கட்டுரைகள் வரும்போது நான் அப்படி அல்ல எனத்தெரிந்ததும் ‘புண்பட்டு’ விலகிச்செல்கிறார்கள்.

அவ்வாறு விலகும்போது அதுவரை இருந்த நெருக்கத்தை ரத்துசெய்தாகவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். வசைபாடத் தொடங்குகிறார்கள். அவர்கள் அன்பாக இருந்தபோதே நான் அயோக்கியனாக இருந்தேன் என பேச ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் என்னைப்பற்றி வசைபாடத்தேவையான நிகழ்ச்சிகளெல்லாம் அன்பாக இருந்தபோதுதான் நடந்திருக்கும்.

இதை எழுந்தவந்த நாள் முதலே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அது கருத்துத்தளத்தில் செயல்படும் எவரும் சந்தித்தாகவேண்டிய நிலைதான். வேறுவழியே இல்லை. இதை என் ஆளுமையுடன் நான் தொடர்புபடுத்திக்கொள்வதில்லை. ஏனென்றால் இது என் பிரச்சினை அல்ல. இது அவர்களின் பிரச்சினை.

என் நண்பர்கள், என் வாசகர்கள் என்னைவிட்டு விலகுவதும் அவ்வப்போது நிகழும். பல்லாயிரம் வாசகர்கள் இருக்கிறார்கள். ஒருநாளில் சராசரியாக 150 வாசகர்கடிதங்கள் வருகின்றன. புதியவாசகர்களின் கடிதங்களே தினம் பத்துக்கும் குறையாது.

பெரும்பாலும் பதிலிடுவேன், ஆனால் நான் எந்த மனநிலையில் இருப்பேன் எனச் சொல்லமுடியாது. நீலம் எழுதியநாட்களில் மின்னஞ்சல்களையே படிக்கமுடியாதவனாக இருந்தேன். பதில் பெறாமல் புண்பட்டவர்கள் உண்டு..

அத்துடன் ஒன்றுண்டு, அக்கட்டுரை எழுதிய காலகட்டத்தில் இருந்த நான் அல்ல இப்போதுள்ள நான். எப்போதுமே சமநிலையான ஆளுமை கொண்டவன் அல்ல. கொந்தளிப்பான, கட்டற்ற மனநிலைகள் எனக்குண்டு. எழுத்தாளன் என்றே என்னைச் சொல்வேன், சான்றோன் என்று அல்ல.

ஆனால் வெண்முரசு எழுதத்தொடங்கியபின் பித்துக்கும் மனத்தளர்ச்சிக்கும் உச்சகட்ட எழுச்சிக்கும் நடுவேதான் அலைந்துகொண்டிருக்கிறேன். தற்கொலையின் விளிம்புவரை சென்று மீள்வதுண்டு. இது ஒரு யோகியின் பணி. நான் எளிய மனிதன். இந்த அழுத்தத்தை என் உடல் உள்ளம் இரண்டுமே எதிர்கொள்ளமுடியாது தவிக்கின்றன.

இம்மனநிலை சூழ்ந்திருப்பவர்களை தொந்தரவு செய்வது என எனக்குத்தெரியும்.மனைவி குழந்தைகள் கூட புண்படக்கூடும். என் குடும்பத்திலிருந்தே என்னை விலக்கி ஒளித்துக்கொண்டு அந்நாட்களை கடக்கிறேன். ஆகவே சிலசமயம் நண்பர்களிடம் கடுமையான சில எதிர்வினைகள் நிகழக்கூடும். எனவே பெரும்பாலும் மிகநெருக்கமான நண்பர்களுடன் மட்டுமே இருக்கிறேன். நண்பர்கள் மட்டுமே இந்நிலையைப் புரிந்துகொள்ளமுடியும்.

வாசகர்கள், நண்பர்கள் பெரும்பாலும் ஓரளவு அதைப்புரிந்துகொள்பவர்கள் அல்லது அமைதியாக விலகிச்செல்பவர்கள். ஆனால் எல்லாரும் அல்ல. அபூர்வமாகச் சிலர் கடுமையாகப் புண்பட்டுவிடுவதும் கொந்தளிப்பதும் நிகழ்கிறது. நான் அதற்காக வருந்தி மன்னிப்புகோரியும் கூட மேலும் கோபம் கொண்டு விலகிச்சென்றவர்களும் உண்டு.

ஆகவே இன்று என்னை நேரில் சந்திக்கவரும் அனைவரிடமும் முன்னரே மன்னிப்பு கோருவதுண்டு. ஓர் இயல்பான, சம்பிரதாயமான, இனியநட்புக்காக என்னை நெருங்கவேண்டியதில்லை என்று முன்னரே எச்சரிக்கவும் செய்கிறேன். நீங்கள் எண்ணும் அந்த மனிதன் அல்ல நான் இப்போது. நான் வாழும் உலகம் வேறு.

கடைசியாக, தமிழகத்தில் இன்றுள்ள வலுவான இலக்கியக்கூட்டு என்பது விஷ்ணுபுரம் அமைப்பு. இதன் நண்பர்குழுவின் பணிகள் தொடர்ந்து நிகழ்கின்றன. ஒவ்வொரு வருடமும் அது விரிவடைந்தே வருகிறது.

மறுபக்கம் தமிழ்ச்சூழலில் சுயபிரலாபங்களுக்கு, சுயமுன்னேற்றமுயற்சிகளுக்கு அப்பால் ஒன்றுமே நிகழ்வதில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும்.ஆகவே இதற்குள் மனத்திரிபுகளை உருவாக்க பிறர் முயல்வது நடந்துகொண்டே இருக்கிறது.

இருவகையில் அவர்கள் முயல்வார்கள். இந்நண்பர்குழுவில் உள்ளவர்களை அடிவருடிகள் துதிபாடிகள் அல்லக்கைகள் என கிண்டலடிப்பார்கள். நம் நண்பர்களில் சிலர் இச்சொற்களால் அகங்காரம் புண்படுவார்கள். மெல்ல விலகிச்செல்வார்கள்.

இப்படி நம்மைப்பற்றிச் சொல்பவர்கள் தங்கள் அசட்டு நூல்களுக்கான எளிய பிரசுரவசதிக்காக பிரசுரகர்த்தர்களையும் ஊடகப்பிரபலங்களையும் சமூகஊடகங்களில் வெட்கமே இல்லாமல் துதிபாடிக்கொண்டிருப்பவர்கள் என்பதை நண்பர்களால் அப்போது கவனிக்கமுடியாது.

விஷ்ணுபுரம் அமைப்பு அதிலுள்ளவர்களின் சுயநலனுக்காக செயல்படுவது அல்ல. முழுக்கமுழுக்க இலக்கிய நோக்கம் மட்டுமே கொண்டது அது. இதுவரையிலான செயல்பாடுகள் அனைத்துமே அதற்கான ஆதாரங்கள். அதில் பங்களிப்பு மட்டுமே உள்ளது, எவரும் எதுவும் பெறுவதில்லை. நட்பின் மகிழ்ச்சியைத்தவிர

மேலும் இதில் எவரும் மேல் கீழென இல்லை. எவ்வகையிலேலும் இப்படி ஒரு கூட்டமைப்பை உருவாக்காமல் இங்கு எதையுமே நிகழ்த்தமுடியாது. ஆனால் அகங்காரம் சீண்டப்படும்போது இவை கண்ணுக்குப்படுவதில்லை. காழ்ப்பு கொண்டவர்களின் இந்த உத்தி ஓரளவு வெற்றிகரமாகவே உள்ளது

இன்னொன்று  உங்களைப்பற்றி இப்படிச் சொன்னாரே என்ற வகையில் போட்டுக்கொடுப்பது. அவ்வப்போது அதுவும் வேலைசெய்யத்தான் செய்கிறது.

இதையெல்லாம் கடந்தே இங்கே எதையாவது செய்யமுடியும் என நினைக்கிறேன். இத்தனை காழ்ப்புகள், எதிர்ப்புகள், வசைகள், அவமதிப்புகளுக்கு அப்பாலும் இது இயங்குவதையே இதன் சாதனை என கொள்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைசகிப்பின்மை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்