ரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’

d d 10

“At the edge of madness you howl diamonds and pearls.”

― Aberjhani,

இலக்கிய வடிவங்களில் கவிதையே மிகவும் துருவித்தேடும் தன்மை கொண்டது .அது கிளைத்து பிரிந்து தேறும் பாதை இன்னதென்று யாருமே வகுத்துவிட முடியாது. மோப்ப நாயை மூச்சிறைக்க பின்தொடரும் பயிற்றுனர் போலே நாம் அதன் காலடித்தடங்களை பின்தொடர மட்டுமே முடியும் .அந்த நாய்க்கு எப்படி எதை தேடுவது தெரியும் ஆனாலும் கூட அது தேடும் பொருள் என்னவென்று அறியாது.

தேவதச்சனின் கவிதைகளை படிக்கையில் முதலில் நம் மனதுள் எழுந்து வருவது அதன் கட்டுமானம் தான்.கட்டுமானம் என்னும்பொழுது இங்கு மொழி சார்ந்த வடிவ கட்டுமானம் மட்டுமல்ல அதன் உள்கட்டுமானமும் கவிதை அளிக்கும் உணர்வுக் கட்டுமானமும் என்று சேர்த்தே குறிப்பிட வேண்டும்., கூடவே இவையனைத்திற்கும் இடையே தொடர்ந்து வரும் இணைவும் இயைவும் . சொல்லப்படும் விதமே சொல்லப்படும் விஷயமாகவும் அதுவே சொல்லி உணரப்படும் விஷயமாகவுமாவது மிக அரிதாகவே படைப்பில் நிகழும் .இந்த ஓத்திசைவு ஒரு தேர்ந்த படைப்பாளிக்கே கைகூடும் ,அவ்வகையில் அமையும் கவிதையில் அபாரமான ஒரு தனித்தன்மை வந்து அமர்ந்துகொள்கிறது ,இங்கேயே தேவதச்சன் தன் முத்திரையை மிக ஆழமாகப் பதித்கிறார்.

……

முதல் எதிரொலி என் குரல் போலவே இருக்கும்

நான் பேசாமல் யாரோ

நானாக பேசுவது

வேடிக்கையாக இருக்கும்

ஆனாலும்

இரண்டாவது எதிரொலி உடனே வந்துவிடும்

அப்போது

நானே

வேறுயாராகவோ பேசுவது

பயமாக இருக்கும்

பயத்தில் மெல்ல மெளனம் கூடும்.

…..

(இரண்டாவது எதிரொலி )

தேவதச்சனின் அகமொழி மெல்லிய பூவேலைபாடுகள் கொண்ட பள்ளிச்சிறுமியின் வெள்ளைக் கைக்குட்டையை ஒத்திருப்பதாய் தோன்றும் .ஒவ்வொரு மடிப்பிலும் ஒவ்வொரு விதமாக உருமாறும் பூவேலைப்பாடுகள் , ஒவ்வொரு மடிப்பிலும் குறுகும் விஸ்தாரம் , கூடும் அடர்த்தி ஆனால் அதேசமயம் கூடிவரும் மென்மை. அவர் அந்தக் கைக்குட்டையைக் கொண்டு எல்லாவற்றையும் ஓற்றியெடுக்கிறார் , மீனை , பலூனை , மொழியை , கல்லை , வீட்டை ,லெளகீகத்தை கவிதையை , வாழ்க்கையை ,பிரபஞ்சத்தையே. பின் தன் நெற்றியையும் சாவகாசமாய் அதிலேயே ஓற்றி எடுக்கிறார்.இந்த கைகுட்டையையே அவர் வாசகனுக்கு கவிதையாக உவந்தளிக்கிறார். அதை மனதில் ஏந்தி அதன் மென்மை தொட்டு விரித்துப்பார்க்கும் வாசகன் அதன் எல்லையற்ற விசாலத்தை கண்டடைகிறான் கூடவே அதன் மடிப்பிற்கிடையே பொதிந்து வைத்த குட்டிக்கூரா பவுடருடன் சேர்ந்த கவிஞனின் அக வியர்வையின் வாசனையையும்.

தேவதச்சனின் கவிதைகளில் மேற்சொன்ன ஓத்திசைந்த கட்டுமானத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது அவரின் அழகியல் நோக்கு என்று சொல்லலாம்.அவரின் அழகியல் ஒரு சிறுவனுடையதாக இருக்கிறது ,ஒரு மீனினுடையதாக இருக்கிறது , ஒரு பாறையினுடையதாக இருக்கிறது அதே சமயம் அது 50 வயதை தொட்ட வெண்தாடி ஓவியனின் பைபோகல் (Bifocal lens ) கண்ணாடி மூலம் தெரியும் ஓவியத்தையும் ஓத்திருக்கிறது.தூரத்து காட்சியையும் அண்மைக் காட்சியும் பிரயத்தனமே இல்லாமல் சட் சட்டென்று மாற்றுகிறார் .சில சமயம் கண்ணாடியை கழட்டுவிட்டு கண்களை மூடிக்கொள்கிறார் அவர் ஓவியம் அதன் விளிம்புகளை தாண்டி உருகி வழிகிறது.

……

என் அறை

மூடிய கதவு வழியே விழுந்துவிட்ட

ரத்தத்தை துடைத்த தாள்

தூங்கவும் இல்லை

தூங்காமலும் இல்லை

(என் அறை )

இருவரிடையே நடந்த தகராரில் அடிபட்ட ஒருவனோடு ரயிலில் பயணப்பட்ட அனுபவத்தை விவரிப்பது .எதையும் குறிக்காமலேயே ஒரு சாதாரண நிகழ்வாக இது மிகஆழமாக எதையோ கிளர்த்துகிறது , இதையே கண்ணாடியின் தூரத்து ஆடியில் பார்க்கும்பொழுது இன்னும் விரிவாகி பேறுரு கொள்கிறது .அடித்தவன் , அடிவாங்கியவன் , அடிவாங்கியவன் சாய்ந்து கொள்ள தோள் கொடுத்தவன் என்று அனைவரையும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கிறது ரயில் .அடித்தவன் கால் மாற்றி கால் மாற்றி நின்று புகைத்துக்கொண்டிருக்கிறான் , அடிவாங்கியவன் மற்றொருவன் தோள் மீது சாய்ந்து கொள்கிறான்.தோள் கொடுத்தவன் புறநகரிலிருக்கும் ,தவளைகள் வெளியேறும் தன் தூங்கிக்கொண்டிருக்கும் அறைக்கும் சென்றகொண்டிருக்கிறான்.

ரயிலிலிருந்து தூங்கும் அறைக்கும் , ரயிலி உடைந்த ஜன்னலிருந்து அறையின் மூடிய கதவுக்கும் , கவிதை நீள்கிறது .இங்கும் இந்த கவிதை அறுதியிடமுடியாத நிலையழிந்த தன்மையை போகிறபோக்கில் சொல்லிச்செல்கிறது .நெருக்கடி வண்டியில் யாரும் பேசுவதும் இல்லை பேசாமலும் இல்லை , ரத்தத்தை துடைத்த தாள் தூங்கவும் இல்லை தூங்காமலும் இல்லை ஒரு சுழல்காற்றைக்போல கவிதை அனைத்தையுமே அள்ளி எடுத்து சுழற்றி அடிக்கிறது.

தேவதச்சன் கவிதைகளில் திரும்ப திரும்ப வரும் விஷயம் ஒன்று உண்டு அது லெளகீகமான தன்னிலைக்கும் ஒரு கவி மனதின் தன்னிலைக்குமாக பிளவும் அந்த தன்னிலைகளுக்கிடையேயான விநோத உறவும் .இந்த பிளவை , அதன் உரசல்களை, அது சார்ந்த இயலாமைகளையும் எரிச்சலகளையும் பல கவிஞர்கள் கவிதையாக்கியிருக்கிறார்கள் ஆனால் இதை தேவதச்சன் கையாண்டுள்ள விதம் மிகவும் முதிர்ந்ததாய் உள்ளது .இந்தப் பிளவை அவர் சயாமீஸ் இரட்டையர்கள் போன்று உருவகித்துகொள்கிறார்.

…..

விநோத ராட்சசன் வீட்டுக்கு குடிபோகிறேன்

அவன்

எடுத்துத் தருகிறான்

கீழே

விழுந்துகொண்டிருக்கும்

தட்டிக்களை

பிடித்துத்

தருகிறான்

பெய்துகொண்டிருக்கும்

பெருந்தண்ணீரை.

…..

(வினோத ராட்சசன் )

“சட்டையை குளிர்சாதன

பெட்டியில் வை

உன் கடிகாரத்தை பார்தபடு

பட்டினி கிட

(சட்டை )

உன்னிடம் நான் பேசிக் கொண்டிருப்பதெல்லாம்

ஒரு டினோசர்

தண்ணீரில் நடந்து செல்லும் ஓசைகளைத்தான்

(மொழி)

அதே போல அவர் கவிதைகளில் மிகவும் மெல்லிய கீற்றாய் ஆனால் எல்லா கவிதைகளின் அடிநாதமாகவும் இருப்பது அவர் கொண்டுள்ள தத்துவன் நோக்கு என்று கூறலாம் .பொதுவாக இவ்வகை தத்துவ நோக்கு கவிதைக்கு பெரும் பாரமாக அமைந்து விடுவதுண்டு .தத்துவ தர்க்கத்தின் மூச்சு முட்டும் இறுக்கத்திற்குள் ஒரு பட்டாம்பூச்சியை அடைப்பது போன்றதாகிவிடும் .ஆனால் தேவதச்சன் தத்துவ நோக்கு பாரம் உண்மைகளுக்கு பின் உள்ள அர்த்தங்ளையும் , அர்த்தங்களுக்கு பின் உள்ள உண்மைகளையும் அவர் கவிதைகள் தேடிக்கொண்டே இருக்கின்றன .ஆனால் அவை குமுறுவதோ இறைஞ்சுவதோ தீர்ப்பளிப்பதோ விதியமைப்பதோ இல்லை – கோவிலுக்கு நூறடி வெளியே தன் செருப்பை கழட்டிவிட்டுஉச்சி வெய்யில் கண்கள் இடுங்க கோபுரம் நோக்கி கையெடுக்கும் தேங்காய் வியாபாரியைப் போல – அது கவிதையை பற்றாமலும் இருக்கிறது பற்றியும் இருக்கிறது .அண்டத்திலுள்ளதயும் பிண்டத்திலுள்ளதையும் சிரமமில்லாமல் இணைத்துக்கொள்கிறது.தேவதச்சனை மீபொருண்மைகளின் கவிஞர் என்று தாராளமாகச் சொல்லலாம்.

“ஒரு துளி தன்ணீர் ,ஒரு

சின்னஞ்சிறு அறையாகிறது

(பாலபாடம் )

என் கை எவ்வளவு நீளம் என்று

என் கைகள் ஒருபோதும் அறியமுடியா நீளம் என்றூ.

(நீளம்)

…..

நீலநிற ஆடையணிந்த ஒரு பெண்

அவள்

அசைவும் அசைவின்மையும்

ஒருங்கே இருக்கும்

அதிசயத்தை

அபிநயித்துக் காட்டுகிறாள்

அப்புறம்

அவர்கள் ஒரு போதும்

அவளை மறப்பதில்லை

(பாறைகள் )

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.

(காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை)

மொழியின் கச்சிதமும் குறைத்துக்கூறலுமே இந்த கவிதைகளின் அகக்கட்டுமானத்தை , அவற்றின் அழகியலை சிதைக்காமல் நேர்த்தியுடன் எழுத்தில் கட்டமைக்கிறது. தேவதச்சனின் மொழி மெனக்கெடுவதோ , ஆர்பரிப்பதோ இல்லை , அது தன்னைத்தானே களைந்து கொள்ளவே பார்க்கிறது , அனாவசியமான எல்லாவற்றையும் துறந்து வார்த்தைகளின் சாரத்தை மொழியின் பழக்க கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கிறது.இவ்வாறு ஞானஸ்னானம் பெற்ற வார்த்தைகள் பூமி கிளர்த்தெளுந்த மூங்கில் குருத்துக்களாய் மேலேழுந்து வருகின்றன . இதுவே தேவதச்சன் ஆரம்பகால கவிதைகளை கூட இன்று படிக்கையிலும் புதிதாகவே வைத்திருக்கின்றது , அதன் ரகசிய முனுமுனுப்பு உட்பட.

ஒருபோதும்

மீன்கள் திரும்புவதில்லை

திரும்பக் கூடுவதுமில்லை

கடல்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றன

மீன் திரும்பினால்

ன்மீ ஆகிவிடுமே

யாராவது

ன்மீயைப் பார்த்திருக்கிறீர்களா

வலைவீசிப் பிடித்திருக்கிறீர்களா

மேலும்

ன்மீயை எப்படித்தான்

சமைப்பது

ஆனால், திரும்பி

திரும்பிக் கொண்டிருக்கும்

ன்மீயை எப்போதும் விரும்பி

பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

தேவதச்சன் தன் கவிதைகளைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்

“ ஒரு கவிதையை வாசிக்கும்போது ஏற்கனவே உள்ள அனுபவ சேகரங்களிலிருந்து துண்டிக்கப்படுகிறீர்கள். பின்னர் அது உங்களை உலகத்துடன் மறு இணைப்பு செய்கிறது. கவிஞன் ஏற்கனவே உள்ள உங்கள் சிந்தனைத் தொகுப்பை மறு உருவாக்கம் செய்கிறான். சிந்தனைகளில் படிந்துள்ள போதாமைகளை அகற்றுகிறான். இந்த மறு உருவாக்கத்தில்தான் கவிதையின் உண்மையான சவால் இருக்கிறது. ஒரு கவிதையை வாசித்த பிறகு துண்டிக்கப்படுகிற இடத்தில் இருந்து மீண்டும் எவ்வாறு உலகத்தோடு இணைகிறோம் என்பதில் ஒரு ரகசியத் தன்மையும் இருக்கிறது.”

ஆம் இந்த ரகசியத்தன்மையில் தான் கவிதையின் ஜீவன் உள்ளது , தேவதச்சனின் கவிதைகள் நம்மை மீளுருவாக்கி மீண்டும் உலகத்தோடு இணைக்கின்றன.

devadatchan

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் தொடங்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள். வழக்கம்போல ராஜஸ்தான் பவனில் தங்குமிடம் ஏற்பாடாகியிருக்கிறது.

நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். முன்பதிவுசெய்பவர்கள் முன்னரே செய்துகொள்வதற்காகவே இவ்வறிவிப்பு. நிகழ்ச்சிநிரல் சிலநாட்களில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும்

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

=====================================================================

தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு

தேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்

தேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

முந்தைய கட்டுரைகீதை உரை-கடிதம் 5
அடுத்த கட்டுரைடீக்கடை இலக்கியம்