‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1

Devadachan-1 (1)

’இரண்டு சூரியன்’ தொகுப்பில் இத்தலைப்பிடப்பட்ட ஒரு கவிதை உள்ளது

தன் நாவு நீட்டி
மின்மினிப்பூச்சியை
கவ்வுகிறது
தவளை ஒன்று
தவளையும் பூச்சியும்
கலந்து
புதிய ஜீவராசி ஒன்று
ஒரு விநாடி
தோன்றியது
அதற்கு
தேவதச்சம் என்று
பெயர் வைத்தேன்

தவளை ஒரு குழப்பமான ஜீவராசி,மனிதனைப் போலவே.தன் வீடு எதுவென்று அறியாது குழம்பித் தவிக்கும் ஒரு வகையினம்.அதுவே அதன் அலைபடலுக்குக் காரணமாக அமையப்பெற்றது.மாறாக,மின்மினி என்ற சொல்லே பரவசத்தில் படபடக்கும் இமையென ஒலிக்கிறது.முதலில், அது பறக்கத் தெரிந்த ஓர் உயிர்.மேலும் அது ஒளிரவும் செய்கிறது.பறந்துகொண்டே ஒளிர்கிறது.புழங்கித் தோய்ந்த பகலொளியில் காணமுடியாதது.குளுமையானது,மர்மமானது.எந்த நினைவுகளும் விளக்கங்களும் அண்டாத ஒரு சிறுபிள்ளைக்கு, அதுவே மந்திரஉயிராக அல்லது தானே தனித்தவொரு அற்புத நிகழ்வாகத் தோன்றக்கூடும்.விபத்தைப் போலொரு சந்திப்பில் இவ்விரண்டு உயிர்களும் கலந்து விசித்திர ஜந்து ஒன்று உருக்கொள்கிறது.ஆயினும் அவ்விசித்திரத்தின் ஆயுட்காலமோ ஒற்றை விநாடி தான்.அவ்விநோத கலப்புயிரியான அந்த ஜீவராசியே தேவதச்சனின் இலக்கு.அதன் வாழ்வெனச் சொல்லத்தக்க அக்கணத்திற்கான வேட்கையே அவரது கவிதைப்பாடு.இந்த வேட்டைக்கு எந்த ஆயுதமோ உத்தியோ தேவையில்லை.குழந்தைமையின் பேராவல் இழைந்த விழிப்பும் அயராது காத்திருக்கும் பொறுமையுமே போதும்.எந்த ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் அற்று அப்படித்தான் ஒரு தவளை, குளக்கரையில் மிதக்கும் மரத்துண்டின் மீதமர்ந்து, காத்துக்கிடக்கும்,மீண்டும்.

நவீனத்துவமும் அன்றாடமும்:

சொர்க்கத்திற்கான மகத்தான கவிதைகள் எழுத்தப்பட்டுவிட்டன.நரகத்திற்கான பெருங்கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன.மண்ணிற்கான கவிதைகள் இனிதான் எழுதப்பட வேண்டும்.

இவ்வரிகள் தேவதச்சனை நினைவூட்டக்கூடிய அமெரிக்கக் கவிஞரான வாலஸ் ஸ்டீவன்ஸ் உடையவை.நவீன இலக்கியத்தின் மையநீரோட்டமான இயங்குதளம் சாமான்ய வாழ்வே.அதற்கு முன்னர் எழுதப்பட்ட காப்பியங்களையோ,வீரகதைப் பாடல்களையோ அது தொடரவிரும்பவில்லை.அதே போல புரட்சிகளின் நூற்றாண்டை கடந்துவிட்டபடியால் இலட்சியவாதக் கற்பனைகளிலும் மிதக்கவியலவில்லை.அதற்கு மிஞ்சியது சராசரி மனிதனின் சாமான்ய வாழ்க்கையே.இதை ஒரு அரசியல் விமர்சகர் ’ஆம் நவீன இலக்கியம் மத்தியவர்க்கத்தினரின் ஆசை துவேஷங்களன்றி வேறேதும் இல்லை’ எனக் கூறக்கூடும்.தமிழிலும் சரி வெளியிலும் சரி கூறியிருக்கிறார்கள்.ஆயினும் நவீன இலக்கியத்தின் மையநீரோட்டம் துவக்கம் முதல் அன்றாட வாழ்வையே பாடுகளமாகக் கைக்கொண்டது.அன்றாடத்தை துல்லியமாக எழுதவே துவக்ககால நவீன நாவலாசிரியர்கள் விரும்பினர்.அன்றாடத்தின் நெருக்கடிகளையும் சவால்களையுமே கவிதைகள் கவனப்படுத்தின.பலநேரம் அத்தகைய நிகழ்வுகள் ‘நிகழ்வுகள்’ என்று சொல்லத் தகுதியற்றவையாகக் கூடத் இருந்துள்ளன.அதை ஈடு செய்யவே நவீனக் கவிதை ஒருவிதமான அந்நியத்தன்மையை/அதீதத்தன்மையை அல்லது புதிரான பூடகத்தனத்தை உட்செரித்துக்கொண்டது.உதாரணத்திற்கு படிமம் எனும் ’கணநேர துலக்க அனுபவம்’ முன்வைக்கப்பட்டு அழுத்தம்பெற்றது.தினசரி வாழ்விற்குள் திருப்புமுனைத் தருணங்களை கண்டுபிடித்து முன்னிலைப் படுத்தவேண்டிய பங்கு இலக்கியவாதிகளிடம் வந்தது.இன்னும் சொல்லப் போனால் அன்றாட வாழ்வை அன்றாடத்தனத்திலிருந்து வடிகட்டி எடுக்க வேண்டியிருந்தது.பரிச்சயமழிப்பு எனும் கருதுகோள் இலக்கியத்தின் ஆதாரமான பணிகளில் ஒன்றாக ஆனது.பழக்கதோஷம், எல்லாவற்றையுமே மழுங்கடித்துவிடுகிறது,ஒருவரின் உடைகளை உணவை மனைவியை,அச்சத்தை…… என்பதால், கலை, வாழ்வனுபவத்தின் மெய்யுணர்ச்சிகளை மனிதனுக்கு மீட்டளிப்பதை தன் நோக்கமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.சுருங்கச் சொன்னால் பழக்கதோஷம் மறைப்பதை கலை திறந்துகாட்ட வேண்டும் என்பது அவர்களது வாதம்.புழங்கு பொருட்களையோ அதனூடான மனிதசந்திப்பையோ மறுதலிக்கச் சொல்லவில்லை மாறாக அதை நாம் எதிர்கொள்ளும் விதத்தையே மாற்றியமைக்கச் சொன்னது.ஒரு தனித்த கலாச்சாரச் செயல்பாடாக கலை இப்பணியை நிறைவேற்றமுடியும் என எதிர்பார்க்கப்பட்டது.தினசரியின் மீதான விழிப்புணர்ச்சியை அக்கறையை அதிகப்படுத்துவதின் மூலம் தினசரிகளால் நகரும் மனிதவாழ்வின் உயிர்த்தன்மையை தக்கவைத்துக்கொள்ள முயற்ச்சித்தது இலக்கியம்.இனக்குழு அடையாளங்களும் தேசிய கற்பிதங்களும் கலைந்து போன பிறகு போர்களும் கலகங்களும் இல்லாத காலகட்டத்தில் ஜனநாயக யுகத்தில் வாழ்கிற ஒரு தனிமனிதனின் அல்லது குடிமகனின் அந்தரங்க வாழ்வையே தவிர்க்கமுடியாத பேசுபொருளாக்க வேண்டியிருந்தது.ஆனால் இந்தத் தனிமனிதன் என்ற கருத்தை வார்த்துக்கொண்ட விதத்தில் தான் முன்னோடிக்கவிஞர்கள் தமக்குள் வேறுபட்டனர்.

தமிழில் இந்திய சுதந்திரத்திற்கு முன் எழுதிவந்த கவிஞர்கள் எல்லோருமே(புதுமைப் பித்தன் தவிர்த்து) ஏதோவொரு வகையான இலட்சியவாதத்தில் நம்பிகையுடைவர்களாக இருப்பைதைப் பார்க்கிறோம்.ஒரு மறுமலர்ச்சிக் காலப் பிரதிநிதி என்பதால் தத்துவத் தளத்திலும் சரி சமூகவியல் தளத்திலும் சரி முழுமுற்றான இலட்சியவாதியாகவே பாரதியைச் சந்திக்கமுடிகிறது.கு.பா.ரா பிளேட்டோனிய இலட்சியக் காதலையும் இயற்கையையும் மெய்யனுபவத்திற்கான வாசல்களாக நினைத்து கவியெழுதிக்கொண்டிருக்க ந.பிச்சமூர்த்தியிடமோ வாழ்வியல் நெறிகளின் மீதான பற்றுதலும் ஆன்மிகத் தேட்டம் குறித்த விசுவாசத்தையும் பார்க்கமுடிகிறது..படிமம் உருவகம் போன்ற கவிதைக்கருவிகளைப் பற்றிக்கொண்ட பிரமிள் வெளிப்படையாகவே கலையனுபவம் இரண்டாம் பட்சமானதாகவும் ஆன்மிக அறிதலே மனித அனுபவத்தின் விதானமாகவும் கருதினார்.குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எண்ணிக்கையிலான அவரது கவிதைகளிலும் இந்தப் பிடிப்பை காணமுடிகிறது.இவரின் இந்தப் பார்வையை சிறிது தக்கவைத்துக்கொண்டு நகர்ந்தவரென தேவதேவனைச் சொல்லலாம்.அனுபவத்தை மீறிய அனுபவங்களை பேசமுயன்றவராக அபியையும் கூட இந்த இழையில் இணைத்துக்கொள்ளலாம்.தனக்கு முன்னோடியாகவும் பின்னோடியாகவும் யாரும் இல்லாத நகுலனோ சிதறுண்ட சுயத்தின் போத அபோத வெளிப்பாடுகளை பிதற்றலை எழுதிக்கொண்டிருந்தார்.இவை எவற்றிலுமே சாமான்ய மனிதனின் சாமான்ய அனுபவத்தளம் பெரிதாகப் பதிவாகவில்லை(விமர்சனத்தில் பொதுமைப்படுத்தல்களை ஒரெல்லை வரை தவிர்க்கமுடிவதில்லை எனப்படுகிறது).அல்லது இவர்களின் கவிதைசொல்லி ஏதொவொரு விதத்தில் பொதுவெளி மனிதரிடம் இருந்து தன்னை சற்று வேறாகக் கருதியவர் எனவும் கூடச்சொல்லலாம்.உலகம் குறித்த அவர்களது மனப்பாங்கு பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட அணுகுமுறையோடு பெரிதும் இசைந்துபோவதாக இருப்பதில்லை. மாறாக சி.மணி,,விக்ரமாதித்யன் ஞானக்கூத்தன்,ஆத்மாநாம் எனத் தொடங்கும் கவிதையிழை தான் சாதரண மனிதனின் அன்றாடச் சிக்கல்களை நவீனக்கவிதைக்குள் கொண்டுவந்தனர்.அவனது அகத்தடுமாற்றங்களும் எளிய ஏக்கங்களும் இவர்களின் மூலமே பதிவானது.இவர்களைத் தொடர்ந்து எழுதவந்த சுகுமாரன் கலாப்ரியா எனப்பலரும் இந்த மையச்சரடைப் பற்றி நடந்தவர் எனச்சொல்லலாம்.தேவதச்சனுமே இந்த தரப்பில் வருபவர் தாம்.அவரது கவிதைகளிலும் அன்றாட சாமான்யனே முன்னிலை வகிக்கிறான்.அவனது நிகழ்கணங்களே துலக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப் படுகின்றன.ஆனால் முக்கியமான வேறுபாடு:மற்றவர்களைப் போலல்லாது தேவதச்சன் மனிதனை வரலாற்றின் ஊடே உலவவிடுவதில்லை.அல்லது வரலாற்றை அவனிடமிருந்து உரித்துவிடுகிறார்.முதலில் அது சாத்தியமா?அப்படி ஒரு இடம் இருக்கிறதா?.துவக்கம் முதலே தேவதச்சன் இதற்கு ஆம் என்று பதிலளித்து வந்திருக்கிறார்.

வரலாற்றிலிருந்து தப்பித்தல்:

கவிஞனுடைய வரலாற்றுப் பாத்திரம் குறித்தும் கலைக்குள் இயங்கும் வரலாற்றின் பங்கு குறித்தும் நிரம்பப் பேசிய கவிஞர்களுல் ஒருவர் ஆக்டாவிய பாஸ்.ஆனால் அவரே பின்னாளில் ஒரு பேட்டியில் ’தனிமனித வாழ்வு என்பது வரலாற்றுத் தன்மை கொண்டதல்ல மாறாக அது அதிகம் இயற்கையை ஒத்தது எனலாம்’என்றார்.ஒவ்வொரு சாம்ராஜ்யங்களாக எழுவதையும் வீழ்வதையும் ஓரமாக நின்று சுண்ணாம்புப் பாறை ஒன்று பார்த்துக்கொண்டே இருக்கிறது.அது வரலாற்றிற்குள் அடங்குமா?ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கும் நட்சத்திரத்தின் கண்களில் நம் சரித்திரம் தான் என்ன?மானுடத்தின் வயதும் பூமியின் வயதும் ஒன்றில்லையே.மனித வாழ்வும் அதைப் போலத்தானா?பொத்தாம் பொதுவாக அப்படிச் சொல்ல முடியாது என்றே படுகிறது.சரித்திரம் என்பதை பொருளியல் மாற்றங்களின் தொகுப்பாகவும் அதன் விளைவாக அல்லது தீர்மானகரச்சக்தி கொண்ட உபநிகழ்வாக கலாச்சாரம், சமூக அமைப்புகள் மற்றும் மனவுலகம் இவை அடைந்த மாற்றங்களின் கூட்டுச்சேர்க்கையாகவும் கொண்டோமெனில் வரலாற்றுச் சக்திகளின் கரங்கள் நீண்டு தொடாத குடிசை ஒன்று கூட இருக்கமுடியுமா என்பது சந்தேகம் தான்.மொத்தமாக மனித வரலாறு மட்டுமின்றி ஒவ்வொரு சமூகமும் தத்தமது பழைய போர்களிலிருந்து தொன்மங்களை உருவாக்கிக்கொண்டும் மூதாதைகளின் அனுபவச்சேகரங்களை கூட்டுநனவிலியில் தேக்கிக்கொண்டுமே திரிகிறது.தவிர அது உண்ணும் ஒரு பதார்த்ததில் அல்லது உபயோகிக்கும் ஒரு சின்ன கருவியில் அதன் வரலாற்றின் தீற்றல் இருக்கவே செய்யும்.ஆயினும் பாஸின் கூற்றில் ஒரு எளிய உண்மை ஒளிந்துள்ளது என்றே தோன்றுகிறது.யுகமாற்றங்கள் போர்கள் இடம்பெயர்ப்புகள் இவை எல்லாவறினூடேயும் மனிதர் வாழ்ந்தனர் வேலை செய்தனர்,காதலித்தனர்,புணர்ந்தனர்,குட்டிபோட்டனர்.இந்த தனிமனித வாழ்வு சமூகவாழ்வியலின் வரையறைக்கு உட்பட்டிருந்தாலும் பெரும்பாலும் ஒரே மாதிரியானதாக இருந்துவந்துள்ளது என்கிறார்.ஒரு மனிதன் ஒவ்வொரு நொடியையுமே வரலாற்றில் வாழ்பனாகச் செலவழிப்பதில்லை,எளிய லௌகீகனாக,தோராயமாகக் காதலிப்பவனாக,நோய் கண்ட உடலாக இப்படி எல்லாமுமாக வாழநேரிடுகிறது.சில கணங்கள் பிரபஞ்சத்தின் உள்ளே ஊர்ந்துகொண்டிருக்கும் ஒரு குள்ளமான ஜீவியாகவும் தன்னை உணரக்கூடும்.தவிர வரலாறு அவ்வக்காலத்தில் ஆதிக்கம் செலுத்தமுடிந்த நிறுவனங்களாலும் கருத்தியல்களாலும் வடிவமைக்கப்படுகிறது.கோடி கோடி பேர்களின் தனிமனித வாழ்வு எந்தத் தடயமும் இல்லாதொழிக்கப்படும் போது வரலாற்றின் தற்பெருமை மீது அவநம்பிக்கை கொள்ளவேண்டியுள்ளது.மேலும் எவ்வளவு ஆணித்தரமாகக் கூறமுடியும் வரலாறு சதாநேரமும் நம்முள்ளே செயலாற்றிக்கொண்டிருப்பதாகவும் நாம் எரியும் எல்லாக் கல்லும் அதற்குள்ளே தான் விழும் என்றும்.

வரல் ஆற்றின் மீது

வரல்
ஆற்றின் மீது
பெய்துகொண்டிருக்கிறது மழை
வாழ்வின்
கடைசி வாக்கியங்களை
தினசரி
நாலு
ஐந்துமுறை
மாறி மாறி எழுதிக் கொண்டிருக்கிறோம்
ஆங்காரத்தோடு பெருமூச்சோடு
எல்லா அசைவுகளையும் கடந்துவிட்ட
கிணற்று நீர்
லேசாகச் சாய்க்கும்போது
அசைவின்மை கடந்து
அழித்தபடி செல்கிறது
நம் வாக்கியங்களை
நீரில்
குப்புறக் கிடக்கும்
பெண்ணின் சடலத்தின் மேல்
தாவி ஏறி
உட்கார்ந்திருக்கிறது
குஞ்சுத்தவளை

வரலாற்றை வரல் கூட்டல் ஆறு பிரிப்பதைப்பதிலேயே தன் தரப்பை எடுத்துவைத்துவிடுகிறார் என்று தோன்றுகிறது.பொதுவாக ஆற்றை காலவோட்டத்திற்குக் உவமைப் படுத்துவார்கள்.இதுவும் ஆறு தான் ஆனால் உயிரற்ற ஆறு.வரண்ட ஆற்று மணலில் ஆங்காரத்தோடு நாம் வரையும் கோடுகள் தாம் நம் எச்சங்களா,பெருமழையும் அசைவுகளைக் கடந்த கிணற்று நீரும் நம் சின்னச் சின்ன அடிக்குறிப்புகளை அழித்துதான் செல்லுமா?நீரில் குப்புறக்கிடக்கும் பெண்ணின் சடலம் ஒருவிதத்தில் மனித வரலாற்றின் சடலம் தானோ.அதன் மேல் அமர்ந்திருக்கும் கருணையோ மனிதத்தன்மையோ அற்ற குஞ்சுத்தவளை நிர்க்குணமான பிரபஞ்சத்தின் பிரதிநிதியோ.இன்னொரு கவிதையில் வரலாறு ஆமையைப் போல் கடலில் இருந்து கரைக்கு வந்து முட்டையிடுவதாகச் சொல்கிறார்.ஆனால் ஆமைகளின் வதிவிடம் காலம் ஆகிய பெருங்கடலே.கரையில் வந்து அவை முட்டை தான் இடமுடியும்.எவ்வளவு தடுத்தாலும்அதிலிருந்த வரும் ஆமையோ மீண்டும் எட்டுவைத்து கடலை நோக்கியே செல்லும்.ஏனெனில் அது அவ்வுயிரின் இயல்பூக்கம்.

சரித்திரத்திற்கு மாற்றாக அவர் முன்வைப்பது காலம் எனும் அபௌதிக அலகை.அதாவாது மனித வரலாற்றுக்கெதிராக பூமியின் வரலாற்றிற்கு ஆதரவளிக்கிறார்.மானுட வரலாற்றுக்கு விழுமியச் சார்பு உண்டு அதனாலேயே அது அறவியலின் சான்றையும் பெற்றாகவேண்டும்.கணக்கற்ற காரணிகளால் உருப்பெற்று வளர்வதென்றாலும் வரலாற்றில் கணிசமான அளவிற்கு மனிதனின் பங்கு உள்ளது.அதாவது மனிதார்த்தமானது.அதுவே பிரபஞ்ச நோக்கில் பொருளற்ற ஒன்றாகப் படலாம்.மேற்சொன்ன எந்த அழுத்தமும் இல்லாத ஒன்று காலம்.சுருங்கச்சொல்வதெனில் காலம் மனிதத்தன்மையற்ற அல்லது மீமனிதத்தன்மை உடைய ஒன்று.பிரபஞ்ச அனுபவங்களின் இந்த மீமனிதத்தன்மையை பலவிடங்களில் நினைவூட்டுகிறார் தேவதச்சன்.அதன் மூலம் சிந்திக்கத் தெரிந்த அறிவார்ந்த மனிதனை உலக மையத்தில் இருந்து சற்றுத் தள்ளி உட்காரச் சொல்கிறார்.வரலாற்றைத் தவிர்ப்பதன் மூலம் காலம் அகாலம் இரண்டின் சரிவில் ஒரு வீட்டைக் கட்டிவிடமுடியும் என எண்ணுகிறார். காலம் மனிதச்செயல்களுக்காக காத்திருப்பதுமில்லை,அதற்கு அவன் மீது எந்த அக்கறையுமில்லை.இந்த விதமான அபௌதிகப் பிரபஞ்சத்தையும் அதனுள்ளே நிகழும் அசைவியக்கங்களையும் முன்னிறுத்துவதாலுமே இவரது கவிதையில் அறவியல் சார்ந்த கேள்விகளோ விவாதங்களோ பெரும்பாலும் இருப்பதில்லை.அவ்வகையான பிரச்சனைகளால் உந்தப்பெறும் உணர்ச்சிகரமும்(கோபம்,உக்கிரம்,கருணை) காணக்கிடைப்பதில்லை.அவரே கூட பலவிடங்களில் இயற்கையின் கண்டுகொள்ளாமையை() சுட்டிக்காட்டுகிறார்.உதாரணத்திற்கு எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது தொகுதியில் ’கண்’ கவிதையில் ‘கண்ணை மூடிக்கொண்டிருக்கவா/திறந்துவைக்கவா/தெரியவில்லையா உனக்கு/எத்தனை நூற்றாண்டு தான் இன்னும் இப்பிடி/சிமிடிக்கொண்டிருப்பாய்/அதனால் பரவாயில்லை/இலை/அசைந்தபடி இருந்தாலும் நின்றாலும்/மரத்திற்கு ஒன்றும்/இல்லை…/ஒன்றும் இல்லை…’.இதற்கு நேரதெதிர் நோக்கில் இயங்கும் சில கவிதைகளும் இருக்கவே செய்கின்றன.உதாரணமாய்
பின் தொடரல் எனும் அபாரமான கவிதை.

என் தோட்டமெங்கும்
ஏகப்பட்ட்ட ஒடிந்த செடிகள்
சாய்ந்தசெடிகள்ஒரு வண்ணத்துப்பூச்சி
ஒவ்வொன்றையும்
நிமிர்த்துவைத்தபடி
நிமிர்த்துவைத்தபடி செல்கிறது/
எனக்கதை/
பின் தொடர வேண்டும் போல இருக்கிறது

கண்டுகொள்ளாமைக்கு எதிராக இதில் இயற்கையின் குணப்படுத்தும் தன்மையை காணமுடிகிறது

இலட்சியங்கள் இல்லாத உலகில்…

தேவதச்சனின் முதல் தொகுப்பான அவரவர் கைமணலில் ஒரு கவிதை இருக்கிறது

எங்கே என்று

எங்கே என்று தேடுகிறாயா
உன் காலிடைப் பேரோடையில்
மிதக்கிறேன்
பிடித்துக்கொள்

தேவதச்சனின் கவிப்பார்வையின் மையப்புள்ளியில் ஒன்று அவ்ரது முதல்தொகுப்பிலேயே சுட்டப்பட்டிருக்கிறது.சமத்துவம்,சுதந்திரம் போன்ற இலட்சியங்கள் பெருங்குரலெடுத்து பேசப்பட்ட கடந்த இரு நூற்றாண்டுகளிலும் இன்னொரு இலட்சியவாதம் இன்னொரு துருவத்தில் மெல்லிய குரலில் ஒலித்துவந்தது.தனிப்பிரியம் கொண்ட வெகுசிலரின் கூட்டமானாலும் சரி,வெறும் நம்பிக்கை மட்டும் கொண்டு இயங்கி வந்த அபிமானிகளிடத்தினாலும் சரி அப்படி ஒரு குரல் பிடிவாதமாக எழுப்பப்பட்டே வந்தது.அது தான் ஆன்மிக இலட்சியவாதம்.இது சமூகத்தை மாற்றுவதன் மூலம் ஒரு பொன்னுலகை ஆக்கமுடியாது என்றும் தனிமனித சுயத்தை சீர்திருத்துவதின் மூலமே சமூகப் பரிணாமம் சாத்தியம் என்றும் வாதிட்டது.தவிர ஒரு தனிமனிதனின் அகவாழ்வை ஒரு பயணமாகச் சித்தரித்தது.அப்பயணத்தின் ஊடே சுயவளர்ச்சி சாத்தியம் என்று நம்பியது.இது பழங்கால ஆன்மிக நோக்கில் துறவுவாழ்கையை வழிமொழியவில்லை.நவீன அறிவியல் பொருளாதாரம் ஆகியவற்றின் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்ட அது உலகப் பிடியில் இருந்துகொண்டே ஒரு மறைதேடல் வாழ்வை போதித்தது.அதன் மூலம் சாமான்ய உடலில் ஜனித்த ஒரு உயிர் சுயவிழிப்பின் மூலமும் அகச்சுதந்திரத்தின் மூலமும் சுய அறிதலை நிகழ்த்தமுடியும் என்றும் அதன் மூலம் தன் ஆன்மிகப் பயணத்தை சுபமாக நிறைவு செய்யமுடியும் என்று பிரகடனம் செய்தது.அது தான் ஜே கிருஷ்ணமூர்த்தியை ’ஒரே புரட்சி’ பற்றி பேசச்செய்தது.ஓஷோவை’மனிதன் ஒரு சாத்தியமே.அவன் என்னவாக வேண்டுமானாலும் மாறக்கூடும்’ என்று அறிவிக்கச்சொன்னது.சமூகவியல் இலட்சியவாதங்களின் சரிவுகள் நிகழ்ந்த அதே காலத்திலோ அல்லது அதற்குப் சற்று பிந்தியோ இந்த இலட்சியவாதமும் மெல்ல மெல்ல தன் மூட்டைகளை கட்டத்துவங்கியது.இன்று இவர்களது வழித்தோன்றல்கள் சுயமுன்னேற்ற வகுப்பெடுப்பவர்களாகவும் பன்னாட்டு நிறுவனங்களில் பிழியப்படும் ஒரு புதுவகுப்பிற்கு ஆன்மிக மசாஜ் செய்பவர்களாகவும் மாறிப்போனார்கள்.ஊடகங்கள் அறைகூவும் ‘have fun’ மற்றும்’stay cool’ ஆகியவற்றை புத்தர் கொஞ்சம் சித்தர் கொஞ்சம் பூசிக் கலந்துகட்டி அடிக்கிறார்கள்.பேராச்சர்யமாக நம் விளம்பரங்களோ ‘live the moment’ என்று இவர்கள் மொழியில் பேசத்தொடங்கிவிட்டன.

மேற்சொன்ன கவிதை மனிதகுலத்தின் ஒட்டுமொத்த தேடலையுமே அபத்தமானதாக்குகிறது.பொருளற்ற ஒன்றாக்கிவிடுகிறது.அப்படியொரு பொருள் இருந்தாலும்,அப்படியொரு மிதக்கும் பொருள் இருந்தாலும் அது உன் அடியில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறது..’உன் காலிடைப் பேரோடையில்’எனும் வரியில் உள்ளது ஒரு சின்ன நக்கல் தான்.இதேவிதமான பரிகாசத்தொடுகை ’என் மனைச்சுனையின்’ என்ற இன்னொரு கவிதையிலும் உள்ளது.

என்/மனச்சுனையின் ஆழத்தில்/சில கற்கள்/கிருஷ்ணபகவானின் எலும்புகள் என்பர் சிலர்/க்ரோமக்னன் பொம்பளையின் முட்டுத்துணி/என்பாரும் உளர்/பார்த்துக்கொண்டிருக்கையில் /தலை/ஆழத்தில் உருள உருள்/அந்தமட்டுக்கும்/சீப்பு வாங்கும்/செலவு மிச்சம் எனக்கு

இங்கு ஒருசேர சமூகமானுடவியல் மற்றும் புராணிகம் இவற்றின் பதிலையும் அலட்சியப்படுத்தி ஒரு நடைமுறையாளனின் நாற்காலிக்கு நகர்கிறார்.இதில் உள்ளது டீக்கடையில் விவாதித்துக்கொண்டிருந்த அறிவுஜீவிகள் பிரிந்துசென்ற பிறகு, அவர்களது டம்ளர்களைக் கழுவிக்கொண்டே டீமாஸ்டர் அடிக்கும் கமெண்ட் மாதிரி உள்ளது இது.மேலான வாழ்கையும் அதன் பாற்பாட்ட ஆகர்ஷ்ணத்தைக் காட்டிலும் சாமன்யத் தளத்தில் நகரும் அன்றாட பேர்வழியின் குரலுக்கு இடமளிக்கும் இத்தரப்பை தேவதச்சனின் பல கவிதைகளில் காணலாம்.பொதுவாகவே தேவதச்சன் ’சிந்திக்கும்’ கவிஞர்.அதாவது அவரது கவிதையாக்கத்தில் சிந்திப்பிற்கு கணிசமான பங்கு உள்ளது.ஆயினும் முரணாக அவர் மனித அறிவார்த்தத்தின் மீது பெரிய அபிமானம் கொண்டவரில்லை.அறிவியலை தன் கவிதைக்கான மீபொருண்மைத் தளத்திற்க்கென்று பயன்படுத்திக் கொள்கிறாரே தவிர மற்றபடி அறிவார்த்த செயல்பாடுகளையோ அதன் விளைவான கோட்பாடுகளையோ பெரிதாக கண்டுகொள்வதில்லை அவர்.இதே போல இன்னொரு கவிதை

’எத்தனை தடவை’ என்ற கவிதையில் எழுதுகிறார்

எத்தனை தடவைச் சாவியைத் தேடியிருக்கிறாய்
எத்தனை தடவை பேனாவை
கண்ணாடியை
அடையாள அட்டையை
உன்
தேடலோஓ தேடலின்
பயணக்கட்டுரையின் தாள்கள்
தரையை ஒட்டித் தாழப் பறந்து
கொண்டிருக்கின்றன
ஆளற்ற
கருப்பு நிசியில்…

இங்குமே மனித அறிவுத் தேடலின் மீதான பொறுமையின்மையும் எரிச்சலும் பகடியாக வெளிப்படுவதைப் பார்க்கலாம்.ஆளற்ற கருப்பு நிசி என்பதை பிரஞையற்ற பேரண்டத்தின் குறியீடாகவே பார்க்கிறேன்.அப்படிக் காண்கையில் நம் தேடல்கள் யாவும் தரையொட்டித் தாழப்பறக்கும் தாள்களின் வெற்று அலைச்சலாகவே கருதமுடியும்.அதைத் தாண்டி அதற்கு எந்தவொரு அர்த்தபுஷ்டியும் வாய்ப்பில்லாது போய்விடுகிறது.இப்படியாக,நடைமுறை ஞானமும் மனிதமையமற்ற கோணமும் கொண்ட ஒரு புள்ளியை வந்தடைந்த தேவதச்சன்
இங்கிருந்து தான் தனக்கென்று ஒரு அகண்ட பார்வையை உருவாக்குகிறார் எனச்சொல்லலாம்.அது எந்தக் கோட்பாடும் கையளித்தது அன்று.அதில் ஆன்மிக நம்பிக்கையின் மீதான எந்தச் சாய்மானமும் இல்லை.அவருக்குத் தெரிந்துவிட்டது இவை எதுவும் தன்னைக் காப்பாற்ற வரப்போவதில்லை என்று.ஆனால் இங்கிருந்து அவர் சென்றுசேரும் இடம் மிக ஆச்சர்யகரமானது.பொதுவாக இலட்சியங்கள் வீழ்ந்த நிழலின் அருகில் அமர்ந்து பேசத்துணிந்த எந்த எழுத்தாளனும் கசப்புணர்ச்சியும் விரக்தியும் கலந்த தொனியில் பேசவேண்டியிருக்கும்.தங்கத்தாலான கடந்தகாலத்தின் மீதுற்ற ஏக்கமாகவோ நிகழ்காலம் குறித்த கட்டற்ற புலம்பலாகவோ எழுதித் தள்ள வேண்டியிருந்திருக்கும்.ஆனால் தேவதச்சன் தேர்ந்துகொண்ட வழி இதுவல்ல. அத்துவான வேளை தொகுப்பில் இப்படியொரு கவிதை உள்ளது.

ஹேய்,ஜாலி

ஹேய்,ஜாலி,எந்தக்
கேள்விக்கும் விடையில்லை
எந்தக் குடையும் மழையை
நிறுத்தவில்லை,ஓகோய்
ஊறுகாய் ஆனால் கோடலியில்லை
உடைத்த கண்ணாடி சாவதில்லை
ஹைய்யா,குருவிகளென்றும்
மலையைப் புரட்டியதில்லை.புர்ர்.
புர்.புர்.
ஆனால் அதோ பாரு அதோ பாரு
குருவிகள்
மலையைத் தாண்டுது பாரு

தேவதச்சனின் கவிப்பார்வைக்கான அறிக்கை என்றே சொல்லிவிடலாம் இந்தக் கவிதையை.ஹேய் ஜாலி என்ற குழந்தைத்தனமான கூச்சலை பிறகெப்போதுமே அவர் கைவிட்டுவிடவில்லை என்று படுகிறது.தயக்கமும் மிருதுவான ஏக்கமும் கூடிய கவிதைகளை இயற்றியபோதும் கூட அவரது எல்லாத் தொகுதியிலுமே இந்த கூச்சலை நாம் கேட்கலாம்.இந்த கவிதை இரண்டாவது வரியான ‘எந்தக் கேள்விக்கும் விடையில்லை’என்று தொடங்கியிருந்தால் இதன் தொனியே மாறியிருக்கும்.மாறாக ஹே ஜாலி எனக் கத்திவிட்டுச் சொல்கிறார் எந்தக் குடையும் மழையை நிறுத்தவில்லை என.பொதுவாகவே தேவதச்சன் மனிதனின் சுயபிரக்ஞையின் மீது பெரிய நம்பிக்கை கொண்டவரில்லை.ஏனெனில் அவரது மனிதன் வரலாற்றின் மகத்தான வரிசையில் நின்றுகொண்டிருப்பவன் அன்று.ஒன்று அவன் ஒரு மஞ்சள் பையோடு ரேஷன் கடையில் கியூவில் நின்றபடியிருக்கிறான்.அல்லது பிரபஞ்சம் எனும் பருப்பொருள் பிரமாண்டத்தின் அடியில் தலைசாய்த்து உறங்குகிறான்.இதன்படி பார்க்கபோனால், இயற்கையின் நிகழ்வுகளுக்குப் பதில் தருவது என்பது மனித சாத்தியத்திற்கு அப்பாற்ப்பட்டது என்பது அவரது வலுவான அபிப்பிராயம்.அதனால் தான் எந்தக் குடையும் மழையை நிறுத்தவில்லை என்கிறார்.அதனால் தான் எந்தக் கேள்விக்கும் விடையில்லை என்று ஜாலியாக விசிலடிக்கமுடிகிறது அவரால்.இப்படிக்கூடச் சொல்லிப்பார்க்கலாம்.தேடலின் மீதான பற்றுதல் தொடரும் வரை மனிதனின் அகப்போராட்டம் தொடரவேண்டியுள்ளது.அவனது கண்கள் ஆவலோடு எதிர்காலத்தைப் பார்க்கிறது.பிறகு எரிச்சலுற்று கடந்தகாலத்தைச் சபிக்கிறது.ஆனால் விடைகள் ஏதும் இல்லை என முடிவாகிற போது மனது ஒரு தளர்ச்சி நிலையை வந்தடைகிறது.ஊருக்குப் போகும் கடைசி வண்டியைத் தவறவிட்ட பிறகு ஆசுவாசத்தோடு ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்கிறது.தேவதச்சனின் பெரும்பாலான கவிதைகளில் நாம் காணும் நிதானமான தொனியும் விச்ராந்தியான மனநிலையும் எதோவொரு விதத்தில் இந்த நிலைப்பாட்டின் பிரதிபலிப்பு என்றே நான் நம்புகிறேன்.பிறகு அவரே கூறுகிறார்’குருவிகள் மலையைப் புரட்டியதில்லை.ஆனால் குருவிகள் மலையைத் தாண்டுது பாரு’.இரண்டு கேள்விகள் எழுகின்றன இவ்விடத்தில். குருவிகள் மலையைப் புரட்டமுடியுமா? குருவிகளின் வேலை மலையை புரட்டுவதா?.இரண்டுக்குமே இல்லை என்பது தான் கவிதையின் பதில்.குருவிகள் ஏன் மலையைப் புரட்டவேண்டும்?மனிதன் ஏன் வரலோற்றோடு கிடந்து முட்டிமோத வேண்டும்?அவர்கள் இருவருமே இரண்டையுமே தாண்டிச்செல்லாம் என்கிறார்.செய்தித்தாள்களைக் காகங்கள் தாண்டிச் செல்வதுபோல்,குருவிகள் மலையைத் தாண்டுவது போல் நாம் வரலாற்றைத் தாண்டமுடியுமா?

எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது தொகுதியில் ஒரு கவிதையில் என்னை இனிமேல் தத்துவங்களும் அரசியலும் ஏமாற்றமுடியாது ஏனென்றால் நான் இளைஞன் அல்ல.என்னை இனிமேல் மதமும் கலையும் ஏமாற்றமுடியாது ஏனென்றால் நான் நடுத்தர வயதினன் அல்ல என்கிறார்.சொல்லப்போனால் ரொம்ப நாட்களுக்கு முன்னதாகவே தேவதச்சன் இளமையையும் நடுவயதையும் தாண்டிவிட்டார் என்றே படுகிறது.

என்னளவில் வரலற்றிலிருந்து விலகியதன் மூலம் அதில் சதா ஓடிக்கொண்டே இருக்கும் பிரமாண்ட நாடகத்தை கவிஞர் இழந்துவிட்டார் என்றே சொல்வேன். மனித இச்சையும் கருத்துக்களும் தேசங்களும் கலாச்சாரங்களும் முட்டி மோதி முயங்கி ஆடும் ஒடு மாபெரும் ஆடுகளம் எழுத்திற்கு சுற்றிச்சுழன்று திரியக் கிடைத்த பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும்.ஆனால் தேவதச்சன் வரலாற்றை இழக்கவில்லை,தானாகவே அதிலிருந்து விலகிவிட்டார்.அந்தவிதத்தில் இது அவர் சுயாதீனமாக எடுத்துக் கொண்ட விருப்பத்தேர்வு.இவ்விமர்சனத்தை முன்வைத்தால் ஆம் இது தான் இதே தான் எனது கவிப்பார்வை எனச்சொல்லக்கூடும்.ஒரு வேளை வரலாறு ஓடாத எதிர்காலம் ஒன்று வருமோ?
தெரியவில்லை.

*

’கருத்துக்களில் இல்லை பொருட்களில்….’

தேவதச்சனோடு சேர்த்து வாசிக்கத்தகுத்த இன்னொரு கவிஞரான வில்லியம் கார்லோஸ் வில்லியத்தின் பிரபலமான வரி இது.என்னால் இதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது.ஏனெனில் கவிதையில் எப்போதுமே மகத்தான கருத்துகளுக்கு இடம் இருந்தேவந்திருக்கிறது.’தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என அது சொல்லப்பட்டே வந்திருக்கிறது.ஆயினும் இதை இப்படிப் புரிந்து கொள்ளலாம்.நவீனக்கவிதைக்குள் கருத்துக்களைச் சொல்வதை விட காண்பிக்கவோ நிகழ்த்தவோ தான் வேண்டும்.அதே போல கவிதைக்குள் அமர்ந்திருக்கும் பொருட்கள் பேசித்தான் ஆக வேண்டும். இயல்பாகவே, சாமான்ய தினசரி வாழ்வில் பொருட்களுக்கு இருக்கும் இடம் கருத்துக்களுக்குக் கிடையாது.ஆகையால் அதைப் பற்றிய கவிதைகள் கருத்தோட்டத்திற்கு அருகில் இருப்பதை விட அனுபவத்தின் உடனடித் தன்மைக்கு(immediacy of experience) அருகிலேயே வதிகின்றன.

தேவதச்சன் அளவிற்கு அன்றாடத்தை(domesticity) பாடிய தமிழ்க்கவிஞர் யாருமில்லை என்று எளிதாகவே சொல்லிவிடலாம்.காரணம் ஏற்கனவே சொன்னது போல சரித்திரத்தின் பெரும் நிகழ்வுகளைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை அவர்.மாறாக சரித்திரத்திற்குள் நுழையமுடியாத சின்னஞ்சிறு மனிதர்களின் சின்னஞ்சிறு செய்கைகளே அவரது கவனக்குவிமையங்கள்.அவரது கவிதைகளின் நாயகன் வரலாற்றின் ஊடே வாழ நிர்பந்திக்கப்பட்டவனோ அதன் அழுத்தங்களுக்கு பதிலளிக்கவேண்டியவனோ அல்ல..’சாலையில் போவோர் வருவோர் பெரும்பாலும்/கையில் ஏதாவது ஒரு பையை வைத்திருக்கிறார்கள்’(எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது).அப்படியொரு பையைத் தூக்கிக்கொண்டு ரேஷன் கடை வரிசையில் நிற்கும் ஒருவன் தான் அவன்
அவர்களது அன்றாட வாழ்வின் சாமான்யத் துயரமே இவரது கவிதைகளில் நாம் காணும் துயரம்.அதைத் தாண்டிய எந்தவித இருத்தலியத் துயரத்திற்கும் இடமே இல்லை இங்கு.
முதல் தொகுதியிலேயே சொல்லிவிடுகிறார் ‘நான் அந்நியமாகவில்லை அம்மா/எனக்குக் காபி தராவிடினும்’

தேவதச்சனின் புறவுலகம் கணிசமான அளவு கண்ணாடிக் கோப்பைகள்,குக்கர்,தொலைக்காட்சி,படிக்கட்டு என தினசரி வாழ்வின் தட்டுமுட்டு சாமான்கள் நிரம்பியுள்ளது.இவற்றையெல்லாம் வேறொன்றாக மாற்றவோ வேறொரு அடுக்கிற்கு உயர்த்தவோ இல்லை.மிஞ்சிப் போனால் முட்டை என்பது காலை உணவாக குறியீட்டர்த்தம் தரும்.அவ்வளவு தான்.அவரைப் பொறுத்தளவில் பேரற்புதம் என்பது புத்தகக் குவியலில் இருந்தோ தொலைபேசிக்கருகில் இருந்து திடீரென வெளிவரும் நகவெட்டியாகக் கூட இருக்கக்கூடும்.அவரது தேவதை மத்தியான நேரத்தில் சிறகுகளால் துணியலசிக் கொண்டிருக்கக்கூடும்.சுருக்கமாகச் சொல்வதென்றால் தேவதச்சன் இந்த வாழ்விற்கு ஆம் சொல்கிறார்.இதன் குழப்பத்திற்க்குள்ளாக ஓர் ஒழுங்கை அடைவதை அல்ல மாறாக நாம் நடத்திக்கொண்டிருக்கும் தினத்தின வாழ்வை அப்படியே உயிரோடு சந்திப்பதே தேவதச்சனின் குறிக்கோள்.இதற்கு அவர் நம்மை எழுப்ப வேண்டியிருக்கிறது.ஒரு தட்டை கீழே போட்டாவது எழுப்பவேண்டியிருக்கிறது.அதன் மூலம் அதை ராட்சதத் தட்டாக மாற்றி பிறகதை இன்னும் அவயமிடச்செய்யவும் தேவையிருக்கிறது(விநோத ராட்சசன்)

கவிதையும் அறிவியலும் மீபொருண்மை அனுபவமும்

காரணங்களின் மீதான ஏக்கம் மானுட ஏக்கம் அலாதியானது.பரிணாம கதியில் அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ இந்த வகையினம் அப்படி ஒரு விசித்திரமான இயல்பூக்கத்தை பெற்றுக்கொண்டது.அல்லது தன் உயிரினத்தின் தக்கவைத்தலுக்கான புதிய உத்தியாகவோ,தொடர்ந்து இடம்பெயர நேர்ந்த தற்செயலான நிர்பந்தத்தின் மூலமாகவோ அதை கைக்கொண்டிருக்கலாம்.அன்றிலிருந்து, அது தான் காண்கிற கேட்கிற எதிர்கொள்கிற எல்லா கணத்தையும் காரணகாரியச் சங்கிலியில் கோர்க்கவேண்டிய, ஆட்டிப்படைக்கும் பீடிதத்திற்கு(obsession) ஆளானது.காலப்போக்கில் அதுவே அதன் இயல்பூக்கமாகவும் நியதியாகவும் மாறிப்போனபின்,ஓங்கில்கள் கடலில் புரண்டு கரணம் அடித்துக்கொண்டிருக்க முகவாய்க்கட்டையில் கையூன்றி தொடுவானத்தை வெறிக்கவேண்டிய விதிக்கு ஆட்ப்பட்டது இந்த வகையினம்.

ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஒரு நிகழ்வைப் பற்றிய விளக்கமே.ஒவ்வொரு விளக்கமும் தம்மளவில் ஒரு கண்டுபிடிப்பே.எல்லா அறிவுத்துறைகளைப் போலவே அறிவியலும் கலையும் பிரபஞ்ச நிகழ்வுகளை,வாழ்வியல் கூறுகளை,அகவுலக இயல்புகளை விளக்கமுற்படுகின்றன.இரண்டின் நோக்கமுமே இவற்றைத் தேடுவதும் ஆய்வதும் தாம் கண்டடைந்ததை வெளிப்படுத்துவதும் தான்.ஆனால் தத்தமது செயலாக்கமுறைமையில் வேறுபடுகின்றன.வெளிப்படுத்தும் முறையில் நிரம்பவே விலகிச் செல்கின்றன.கலை கற்பனையையும் அனுபவத்தினூடாக அடையப்பெறும் அகவெழுச்சியினாலுமே தன் தேடலை நிகழ்த்துகிறது.கற்பனையின் பங்களிப்பு இருந்தபோதும் அறிவியல் தன் கண்டடைதலை தர்க்கத்தை நம்பியும்,திட்பமான முறைப்பாடுகளை முன்னிட்டுமே பெறுகிறது.தாம் அடைந்தவற்றை வெளிப்படுத்தும் முறையிலோ இரண்டும் முற்றிலும் எதிரெதிர் முனைகளைப் போய்ச்சேர்கிறது.அறிவியல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தெளிவாக குழப்பமற்று மனித அறிவை ஆம் சொல்லவைக்கும் வகையில் சொல்லியாகவேண்டியிருக்க,கலையோ தன் கண்டடைதலை தர்க்கக் கட்டமைப்புகளின் மீது நிறுவவதில்லை.ஆம் அது தனதொரு பாதத்தை தர்க்கத்தின் மீது வைத்திருந்தாலும் இன்னொரு பாதத்தை வெட்டவெளியில் பட்டத்தைப் போல நழுவவிட்டுவிடுகிறது.வாசகனை அல்லது பார்வையாளனை தான் முன்வைக்கும் அனுபவச் சப்பாத்துகளினுள் நிறுத்தச் செய்தாலும் அவனுக்கு எல்லையற்ற சுதந்திரமொன்றையும் சேர்த்தே கையளிக்கிறது.அதனாலேயே அது திடமற்ற அடித்தளங்களை உருவாக்குகிறது.இன்னும் சொல்லப்போனால் எதிரிலிருப்பவனை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டிய கட்டாயம் இல்லாததால் அதுவொரு சதுப்புநிலத்தின் மீது தன் கண்டடைதலைக் கட்டுகிறது.மாறாக அறிவியல் தன் உண்மையை நிருபிக்கவேண்டிய எத்தனிப்பில் இறங்கிவிடுகிறது.தவிர அறிவியல் தன் விடைகளை வெளிப்படுத்தும் விதத்தில் வெளிப்பாட்டுக் கருவிகளிலோ ஊடகத்திலோ கவனம் செலுத்துவதில்லை அன்றி அதன் வழியாக முன்வைக்கப்படும் தன் ‘உண்மை’யையே முக்கியமானதாகக் கருதுகிறது.கலையின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று தன் வெளிப்பாட்டுக் கருவியான மொழியின் பாற்பட்ட தீராத கவனம்.அதன் சின்னச் சின்ன பிறழ்வுகளிலும் இணைதல்களிலும் தனித்த அழகை அது நிகழ்த்திக்காட்டவேண்டியுள்ளது.அதன் மூலம் தான் முன்னிறுத்தும் அனுபவத்தை பலநூறு கால்கள் கொண்டதாகவும் பிரமாண்டமானதகவும் ஆக்கிக்காட்டுகிறது.அந்த அழகின் பீடிப்பிலும், தன் உணர்வெழுச்சியின் உத்வேகத்திலுமே தான் வாசகனை அல்லது பார்வையாளனை அது ஆம் சொல்ல வைக்கமுடியும்.இன்னும் சொல்லப்போனால் நடனமாது தானும் நடனமும் வேறல்ல என்கிறாள்.இலக்கியமும் அந்தக் கூற்றை ஓரெல்லை வரை மறைவாக நம்பவே செய்கிறது.

இயற்கையின் ஒவ்வொரு சம்பவிப்புமே மனித சக்திற்கு அப்பாற்பட்ட ஒரு பேரிருப்பின் கைங்கர்யமாகக் கருதப்பட்ட காலத்திற்கு பின் மெல்ல மெல்ல மனித சிந்தனை தன் அறிவெல்லைகளுக்கு உட்பட்ட வியாக்கியனங்களை அதற்கு பொருத்திப்பார்க்கத்துவங்கியது.பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்புவரையுமே,இயற்கை நிகழ்வுகளின் விளக்கங்களுக்கான ஆதாரங்களாக இருந்தவை என மூன்றைச் சொல்லலாம்.மறைதேடல்வாதிகள் கூற்றுகள்,இனக்குழுக்களின் சுயமான தொன்மவழிப் பதில்கள், புவிமைய பிரபஞ்சத்தை ஏற்றுக்கொண்ட இயற்கைத் தத்துவவாதிகளின் வாதங்கள்.ஏனெனில் அறிவியல் கருதுகோள்களுக்கு ஸ்தூலமான அடிப்படைத் தரவுகள் அத்தியாவசியம்.தரவுகளுக்கோ திறனுள்ள உபகரணங்கள் அவசியம்.கற்பனையைக் கொண்டு ஒரு கருதுகோளை எட்டியபோதும் அது குறித்து மேலதிகமாகச் சிந்திப்பதிற்கும் நிறுவுவதற்கும் அத்தைகய உயர்கருவிகள் இல்லாத பட்சத்தில் அடுத்தகட்ட நகர்விற்கு வாய்ப்பில்லாது போய்விடும்.(உதாரணத்திற்கு கிமு ஆறாம் நூற்றாண்டு அளவிலேயே கிழக்கில் ஜைன மற்றும் சார்வாக பள்ளிகள் கரட்டு வகையிலான அணுவாதத்தை வந்தடைந்திருந்தன.கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் மேற்கில் லூசிபஸ் டெமாக்ரிடஸ் போன்றோர் தனித்த ஒரு அணுவாதக் கண்ணோட்டத்தை வளர்த்தெடுத்திருந்தனர்.அணுக்கள் பலவிதமான உருவமும் அளவும் கொண்டவை அவை வெவ்வேறான விகிதாச்சரத்தில் இணைந்து ஸ்தூலபொருட்கள் தோன்றுகின்றன என்றெல்லாம் கூட ஊகித்திருந்தன.ஆனால் அதைத் தாண்டிச் செல்வதற்கான தரவுகள் அவர்களிடம் இல்லை.அவற்றிற்கான தொழில்நுட்பத்திற்காக நாம் காத்திருக்கவேண்டியிருந்தது).அத்தகைய சிந்தனைப் போக்குகளை மேலைமரபு இயற்கைத் தத்துவம் எனப் பின்னாளில் வகுத்துக்கொண்டது.சொல்லப் போனால் பின்னர் வழிவந்த அத்தனை அறிவியல் கோட்பாடுகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்குமான மூலவித்துக்களை இயற்கைத் தத்துவவாதிகளிடம் காணமுடியும்.

தாலமியால் முன்மொழியப்பட்ட புவிமையக்கோட்பாடு பலநூற்றாண்டுக்குப் பின் கோபர்நிக்கஸால் சந்தேகிக்கப்பட்டு கடைசியில் பிரபஞ்சத்தின் ஒரு பரிதாபத்திற்குரிய மூலைக்குத் தள்ளப்படுகிறது பூமியுருண்டை.நாம் வாழும் பூமிக்குரிய சிறப்பு அந்தஸ்தை இழப்பது என்பது மனித அகங்காரத்தின் மீதும் அவன் இதுவரை கண்டுவந்திருந்த அழகிய கற்பனைகளின் மீதும் பெரிய பெரிய எரிகற்களை எறிந்தது.இதே நூற்றாண்டின் தொடக்கத்திலும் முடிவிலும் இரண்டு கருவிகள் கண்டறியப்பட்டன.ஒன்று நுண்ணோக்கி.மற்றொன்று தொலைநோக்கி.ஒருவிதத்தில் இவை இரண்டும் மனிதன் தனக்கென்று வடிவமைத்துக்கொண்ட அதி கண்கள் என்று சொல்லலாம்.கடவுள் அருளிய சொந்தக் கண்களின் அற்ப வரையறைகளைக் கண்டுகொள்ள் நேர்கிறது.தான் இதுவரை பார்த்துவந்திருந்த தட்டையான பூமி மீதான கற்பிதங்கள் கழன்று விழுகின்றன.வரலாற்றின் அந்நேரத்தில் வாழநேர்ந்த மனிதன் அளவற்ற சோர்வையும் நிகரற்ற மனவெழுச்சியையும் ஒரே தருணத்தில் அடைந்திருக்கக்கூடும்.இதுநாள் வரை .தான் கருதி வாழ்ந்துவந்த உலகம் சின்னதிலும் சின்னக் கூஜா தானோ என நொந்திருக்கவேண்டும்.அதேநேரம் தன் முன்னே எல்லையற்று விரியும் பேரண்டமும் அதன் அதிசயங்களும் முடிவற்ற சாத்தியங்களை திறந்துவிட்டிருக்கவேண்டும்.அதுபோன்றதொரு சரித்திரத் திருப்பத்தில் ஒட்டுமொத்த சமூகமுமே தனது கண்ணோட்டதை மறுபரிசீலிக்க வேண்டியிருந்தது.அதன் அறிதற் கட்டுமானங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டியிருந்தது.அந்தக் குரல்கள் கலாச்சரத்தின் அத்தனை சுவர்களிலும் எதிரொலித்திருக்க வேண்டும்.சிந்தனைப்போக்கும் மொழியும் அசையும் பொழுது நடைபாதையில் செல்லும் ஒரு கவிஞன் விழிப்போடு நடக்க வேண்டியதாகிறது.புத்தெழுச்சி, கலை இலக்கியத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் பாரதூரமானவை மட்டுமின்றி உலகாளாவியவையும் கூட.ஏனெனில் மேலை மறுமலர்ச்சியை சிலபல நூற்றாண்டுகளுக்குப் பின் எல்லா கலாச்சாரங்களும் தத்தமது வழியில் கடன் வாங்கிக் கொண்டன எனச்சொல்லலாம்.

நியூட்டனின் வருகைப்பிறகு நமக்கும் நாம் வாழும் இடத்திற்குமான உறவு குறித்த கதையாடலே மாறியது எனலாம்.உதாரணத்திற்கு அவரது ஒளியியல் எனும் நூல் வண்ணங்கள் குறித்த அடிப்படைப் புரிதலையே மாற்றியமைத்தது.விண்ணகத்திலிருந்து இறங்கிவருவதாக நம்பப்பட்ட தெய்விக ஒளி ஒற்றைப்படையானது அல்ல அது ஒரு பெரிய அலைக்கற்றை என்றும் அதனுள்ளே ஆயிரக்கணக்கான நிறங்கள் ஒளிந்துள்ளன எனவும் தெரிய வந்தது.இது அந்தக் காலகட்டத்து ஓவியர்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை உண்டுசெய்ததாக சொல்லப்படுகிறது.ஆனால் மெல்ல மெல்ல இந்த நாடகத்திற்குள் முதலாளித்துவம் நுழைகிறது(முதலாளித்துவம் முதலில் வந்ததா அறிவியல் தொழில்நுட்பம் முதலில் வந்தது என்பது கோழியா முட்டையா கதைதான்).அது மெதுவாக தொழில்நுட்பத்தைக் கடத்திச்செல்லத் தொடங்க, சமூக அமைவிடங்கள் யாவும் நெருக்கடியும் புகையும் கொந்தளித்து எழும் சுவர்க்கூடங்கள் ஆகின்றன.சுரண்டலும் இறைச்சலும் நிறைந்துபெருக புதியபுதிய இன்னல்கள் அறிமுகமாகின்றன.இந்தக் காலகட்டத்து கலைவாதமான கற்பனாவதம் அறிவியலை, கடவுளுக்கும் கவிஞனுக்கும் இடையில் நிற்கும் தீயசக்தியாக உருவகித்துக்கொண்டது.அது, விஞ்ஞானம், பிரபஞ்சத்தை பற்றிய முற்றிலும் இயந்திரகதியான தரிசனத்திற்கு இட்டுச்செல்வதாகக் குற்றம் சாட்டியது.மனித அனுபவத்தில் வாய்க்கப்பெற்ற தெய்விகத் தொடுகையை இழந்துவிட்டதாக எண்ணினர் அவரகள்.எல்லா நிகழ்வுகளையும் பொருட்தளத்திற்கு இறக்கி புரிந்துகொள்ளமுயல்வது ஒருவகையான குறுக்கல்வாதமாகவும் மனித சாராம்சத்தின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே கருதப்பட்டது.அதனால் தான் கீட்ஸ் எழுதினார்,நியூட்டன் வானவில்லை அக்கக்காக பிய்த்துவிட்டார் என.அடுத்த நூற்றாண்டின் நவீன அணுக்கொள்கையும் பரிணாமக் கொள்கையும் ஏற்படுத்திய மாற்றங்களைக் கூறவேண்டியதே இல்லை.நிருபணவாத அறிவியல் தன்னை மானுடத்தின் அடிப்படைப் பார்வையாக மாற்றிக்கொண்டது.நிருபணவாததிற்குள் தங்கவியலாத இலக்கியம் தன்னியல்பாகவே விமர்சனத்தரப்பாகத் தன்னை மாற்றிக்கொண்டது.பிறகெப்போதுமே தொழில்நுட்பத்திற்கு ஆதரவாக சொல்லும்படி எதையுமே எழுதாத இலக்கியம் இன்றுவரை வகித்துவரும் விமர்சனப் பாத்திரத்தை வாசகன் ஒருவன் எளிதாகக் கண்டுகொள்ளலாம்.

ஆதரவோ எதிர்ப்போ கவிஞனின் கண்ணோடத்தில், அணுகுமுறையில் நவீன அறிவியல் நிகழ்த்திய தாக்கம் என்பது அளப்பரியது,கண்கூடானது.சின்ன உதாரணம் என்றால் நவீனத்துவத்திற்கு முந்தைய கவிதை நவீனக்கவிதை அளவுக்கு தர்க்கத்தின் மீது சாய்ந்துகொண்டிருப்பதில்லை.தர்க்கவோட்டத்திற்கு இணைய எழுதுவதாகட்டும் அல்லது அதை அறுத்துவிட்டு ஓடுவதாகட்டும் தர்க்கச்சார்பானது இப்போதளவிற்கு முன் எப்போதுமே நிலைகொண்டிருந்ததில்லை.நவீனக் கவிதையின் திரைச்சீலையாக நவீன உணர்திறன்(modern sensibility) இருந்தாகவேண்டும் என கட்டாயப்படுத்தியது.இப்படிச் சொல்லப்படுகிற நவீன உணர்திறனுக்குப் பின்னிருக்கும் அறிவியலின் பங்கு, அந்தக் காலகட்டதைய சமூகவிஞ்ஞானம் மற்றும் தத்துவம் போன்றவற்றின் பங்கிற்கு சற்றும் குறைவற்றது.நவீனக்கவிதை பிறகு பலதருணங்களில் இக்கண்ணோட்டத்தோடு பிணங்கிக்கொண்டு வெளியேறினாலும் இன்றும் ஏதோவொரு விதத்தில் அதன் மையநீரோட்டம் இந்த ‘நவீன உணர்திறன்’ எனப்படும் கொட்டகைக்கு அருகிலே தான் உலாவருகிறது.அதேபோல சென்ற நூற்றாண்டில் அறிமுகமான சார்நிலைக் கோட்பாடும் தேராமைக்கொள்கையும் நம் வாழ்வியல் புரிதல்களை தீண்டவில்லை எனக்கூறமுடியுமா,முழுமுற்றான உண்மை என ஒன்றில்லை என ஆனதற்கும் அறுதியான விழுமியங்கள் ஏதுமில்லை என்ற நிலைக்கும் சம்பந்தமில்லை என்றாகிவிடுமா,குழப்பங்களும் சந்தேகங்களும் சென்றநூற்றாண்டில் விபத்தாகத் தோன்றிய தற்செயல் கற்பிதங்கள் தானா?

எல்லா அறிவியல் கோட்பாடுகளுக்கு அடியிலும் சில மீபொருண்மை அடித்தளங்கள் உண்டு.அதேபோல எல்லா மீபொருண்மை உத்தேசங்களும் அவ்வக்கால அறிவியல் விடைகளின் மூலம் சாயமேற்றப்படுகிறது.விஞ்ஞானம் மீபொருண்மையியலின் மேல் தாக்கம் செலுத்துகிறது.மீபொருண்மை அடித்தளமோ விஞ்ஞானப் போக்கிற்கு வரம்பிடுகிறது.அறிவியல் மீபொருண்மையியல் இவ்வாறு பேதமற்று இருந்த பழம்நாட்களில் இவை எல்லாம் குழுமி இயற்கைத் தத்துவம் என்றே அழைக்கப்பட்டு வந்தன.ஆயினும் நிருபனவாத விஞ்ஞானத்தின் முகிழ்ச்சிக்குப் பிறகு அறிவியல் தனித்தவொரு அறிவுத்துறையாக வளரத்தொடங்க, மீபொருண்மையியல் மெல்ல மெல்ல மூலைக்குத் தள்ளப்பட்டது.கலாச்சரக்களத்தில் மதம் மற்றொரு மூலைக்குத் தள்ளப்பட்டபிறகு சென்ற நூற்றாண்டில் மீபொருண்மையியலே அபத்தமானதாகவும் கேலிக்குரிய ஒன்றாகவும் மாறிப்போனது.சொல்லப்போனால் நிருபிக்கப் பட்டது.ஆனால் அது நவீன அறிவியலின் தாக்கத்தை ஏற்றுக்கொண்டு சற்று நடைமுறைவாதத்தோடு கலந்து பேசி தன்னிருப்பை சமகால மீபொருண்மையியலாகத் இன்றும் தொடரவே செய்கிறது.மேலும் குவாண்டம் இயற்பியல் போன்ற துறைகளின் அதிமுன்னேற்றங்கள் அறிவியலின் மீபொருண்மை அடித்தளத்தை மறுசீரமைக்கக் கோருவதாகவும் சொல்லப்படுகிறது.மீபொருண்மையியலை இருத்தல் குறித்த தத்துவ சிந்தனையாக வகைப்படுத்திக்கொண்டால்,மீபொருண்மை தளம் என்பது மனித அனுபவத்தில், அதன் அறிவுத்துறைகளில், அதன் நிறுவனங்களில் நின்றிலங்கும் ஆழமான அல்ல மேலான ஒரு தளம் எனச் சொல்லலாம்.ஜடப்பொருளைத் தாண்டிய ஒரு அனுபவ வெளி இருப்பதாகவும் அதுவே வாழ்விற்கோ மனிதச்செயல்களுக்கோ அர்த்தம் தருவதாகவுமான ஒரு நம்பிக்கை.சொல்லப்போனால் அர்த்தம் என்பதே ஒரு மீபொருண்மைச் செய்கை தான்.விலங்குகளைப் போலன்றி மனிதன் இது போன்ற அபௌதிக வெளியில் தொங்கும் கயிறுகளை பற்றாமல் வாழமுடியாது என்பது உளவியலாளர் யுங்கின் வாதம்.வாழ்வின் பொருளின்மையைப் பற்றி முன்னெப்போதுமே மனிதன் இவ்வளவு அலட்டிக்கொள்ளவில்லை என்றும் அதற்குக் காரணம் நம் தொழிநுட்பச் சமகாலத்திற்கு இயைந்த மீபொருண்மை அடித்தளங்களை நாம் உருவாக்கிக்கொள்ளவில்லை என்பது தான் என்கிறார்.ஏதோவொரு விதத்தில் தனது பல முனைகளினாலும் உலகளாவிய நவீன கலை இலக்கியம் இந்தப் பணியை பிரக்ஞையற்று ஆற்றிவருகிறது என்றே சொல்லவேண்டும்.மீபொருண்மைத் தளத்தோடு தொடர்புகொள்ளாமல் படைப்பாக்கம் மட்டுமல்ல இலக்கிய வாசிப்பு என்பதே ஒருவிதத்தில் சாத்தியமில்லை எனலாம்.கலைஇலக்கியமாகிய இந்தப் புலமும் தேய்ந்தொழிந்து போகும் பட்சத்தில் என்னாகும்?,ஒரு எளிய மாணவன் ’வாழ்க்கை ரொம்ப எந்திரமயமானதாகிவிடும்’ என்று சரியாகவே பதில் கூறுவான்.

*
சார்பியல் மற்றும் தேராமைக் கோட்பாடுகளின் வருகைக்குப் பிறகு நவீன அறிவியலின் பார்வையோடு சமரசம் செய்துகொண்ட மீபொருண்மைத் தளத்தில் அமைந்த கவிதைகள் உலகெங்கிலுமே எழுதப்பட்டன.உதாரணத்திற்கு e=mc2 சமன்பாட்டைத் தழுவி நிறைய கவிஞர்கள் எழுதிப் பார்த்துள்ளனர்.பிரமிளின் =ம்ச்2கவிதை மரபார்ந்த கீழை தத்துவப் பிண்ணனியைக் கொண்டு எழுதப்பட்டது.தேவதச்சனும் நவீன மீபொருண்மை நோக்கின் வாயிலாக உந்தம் பெற்ற ஒருவரே ஆயினும் அவர் எந்த ஆன்மிக சாயை படிவதையும் தவிர்த்துவிடுகிறார்.

தேவதச்சன் கவிதைகளில் இயங்கும் தர்க்கம் இந்த மீபொருண்மைத் தரப்பிற்கு மிகவும் நெருக்கமானது என்பது என் நம்பிக்கை.அவர்களது விவாதப் பொருளான காலம் மற்றும் வெளி,நிலையான சுயம் மற்றும் அனுபவத்தால் ஏற்படும் மாற்றம்,பொருள் மற்றும் பிரக்ஞை,இவை போன்ற கருத்தாக்கங்கள் மீதான அவதானிப்புகளை தேவதச்சனின் பல இடங்களில் பார்க்கலாம்.இன்னும் சொல்லப்போனால் பொதுப்புத்திப் பார்வையை ,அறிவியல் தோய்ந்த மீபொருண்மைக் கோணத்தால் சந்திப்பது என்பது தேவதச்சனின் கவித்துவ அனுமானங்களுக்கு மிகவும் பிடித்தமான உத்தி.இதை அவரது பல கவிதைகளில் காணமுடியும்.அவரது பிரபலமான கவிதையான ’காற்று ஒருபோதும்’ கவிதையில் வரும் வரியான அலைக்கழியும் வண்ணத்துப் பூச்சிகள்,காலில்/காட்டைத் தூக்கிக்கொண்டு அலைகின்றன’ என்பது ஒரு பள்ளி மாணவனுக்குத் தெரிந்த அறிவியல் செய்தி தானே.

சில வார்த்தைகளை

சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புவதில்லை நான்
ஆனால் தண்ணீருக்கடியில் இருக்கும் கற்களைப் போல
இரண்டு இடத்தில் கிடக்கின்றன அவை
அசையாவிட்டாலும் அவை அசைவற்று
மாற்றிவிடுகின்றன நீரோட்டத்தை
தண்ணீருக்கு அடியில் இருக்கும் கற்களின்
சூரியன் வேறு
அவற்றின் மேல் பறவைகள் வந்து அமர்வதில்லை
எனினும்
கடற்கன்னிகள் ஓரங்களைப் பற்றியபடி ஒய்யாரமாய்
சாய்ந்திருக்க வருகிறார்கள்
முதன்முதலாக எரிமலைகள் தீண்டுவது
நான் சொல்லவிரும்பாத வார்த்தைகளைத் தான்
தண்ணீருக்கு அடியில் கிடக்கும் பாறைகள் மக்குகள் அல்ல
மெல்லவே தம் கூர்மைகளை இழக்கின்றன
மெல்ல மெல்ல கூழாங்கற்கள் ஆகின்றன
குழந்தை ஒன்று கைக்குள் மறைத்து வைத்திருக்கும்
இனிப்பு மிட்டாய் போல
தன் விரல்கள் மூடி
பாதுகாக்கத் தொடங்குகின்றன
நீரோட்டத்தின் ரகசியங்களை
நம்
கண்வழியே பாய்ந்தபடி செல்லும் என்றுமுள்ள
நீரோட்டத்தின் ரகசியங்களை

தண்ணீருக்கடியில் இருக்கும் கற்கள் இரண்டு இடத்தில் கிடக்கின்றன,அவை அசையாவிட்டாலும் நீரோட்டத்தை மாற்றிவிடுகின்றன,தண்ணீருக்கு அடியில் இருக்கும் கற்களின் சூரியன் வேறு அவை மெல்ல மெல்ல கூழாங்கற்கள் ஆகின்றன.இவையெல்லாமே அசலான அறிவியல் உண்மைகள்.இயல்பாகவே அறிவியல் முன்வைக்கும் உண்மைகள் பொதுப்பார்வைக்கு புலன்களால் உய்த்தரியவியலாத காரணத்தால் ஒரு மீபொருண்மைத் தளமாகத் தோன்றுகின்றன அல்லது அவ்வாறே மாறிக்கொள்கின்றன..உதாரணத்திற்கு மேஜை எனும் எளிய பௌதிக நிஜம் அறிவியல் மொழியில் அணுக்களின் சேர்மானம் எனக் கூறப்படுகையில் அதை நம் அனுபவ எல்லைகளைத் தாண்டியே நாம் புரிந்து கொள்கிறோம் அல்லது ஒப்புக்கொள்கிறோம்.கடைசி டினோசார் என்ற கவிதையின் உணர்வுப் பகிரல்கள் என்னவாக இருந்தாலும் அப்புனைவின் அடித்தளம் கட்டப்படுவது விஞ்ஞான அறிதல்களின் அல்லது தகவல்களின் மீது தான்.இங்கு டினோசாரின் கழுத்தில் ஊர்ந்துசெல்லும் கரப்பான் பூச்சி என்பது கூட அறிவியல் உண்மை மேல் சாய்ந்திருக்கும் வரியே.ஆயினும் இவ்விதமான மீபொருண்மைத் தளத்தின் மீது எழும்பி நின்றாலும் தேவதச்சனின் கவிதைகள் வாசகனுடன் ஒரு உணர்ச்சிகரத் தொடர்பை உண்டுசெய்ய வல்லவையாக உள்ளன.உதாரணத்திற்கு இதே கடைசி டினோசார் கவிதையை ஒரு சுவாரஸ்யமான வாசகன் ஒரு டிராஜடியாகக் கூட வாசிக்கக்கூடும் இல்லையா.இதைப் போன்ற அநேகக் கவிதைகள் எழுதியுள்ளார் தேவதச்சன்.ஒளி என்ற கவிதையில் ‘கவிதை எழுதுவது என்பது ஒரு குண்டு பல்பை ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது’ என்கிறார்.இது கவிதைச் செயல்பாட்டை மிகச் சாதாரண நடவடிக்கையாகத் தரக்குறைப்பு செய்வது போல் தோன்றினாலும்,உண்மையில்,கற்பனாவாதக் கருத்தான கவிஞன் ஒரு ஊடகம் தான், படைப்பாக்கம் என்பது கண்ணுக்குப் புலப்படாத ஒரு சக்தி என்ற நிலைப்பாட்டையே ஊர்ஜிதப்படுத்துகிறது.இதில் புதுமை என்னவெனில் இங்கு அது மின்சக்தியாக உருவகிக்கப்பட்டு ஒரு அறிவியல் கதையாடலாக மாற்றிக்காட்டப்படுகிறது.இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ஒன்றுள்ளது.
அதாவது அறிவியல் உலகை தொடர்ந்து ஆய்வு செய்து அதன் புதிய உள்ளடுக்குகளைத் திறந்து காட்டக் காட்ட கவிஞனுக்கோ புதிய புதிய பரிமாணங்கள் புலப்படுகிறது.அதை அவன் தன் கலைக்குள்ளே உபயோகிக்கத் தொடங்குகிறான்.தனது பணியான உலகைத் தொடர்ந்து புதுப்பித்தலை ஒரு அறிவியலாளனும் செய்வதைக் காண்கிறான்.காட்டாக கடல் ஒரு பெரும்நீர்ப்பரப்பு மட்டுமின்றி அது ஒரு மாபெரும் உயிர்க்கோளம் என்பதும் அதுனுள்ளே லட்சக்கணக்கான உயிர்களின் வாழ்வும் மரணமும் சதா நிகழ்ந்துகொண்டே இருக்கிறது என்ற உண்மையும், தேடல் கொண்ட கவிஞன் ஒருவனுக்கு பற்பல கதவுகளை சட்டென்று உடைத்துத் திறக்கக் கூடும்.ஒரு சின்ன நீர்ப்பூச்சி கூட பிரபஞ்சத்தின் குறுவடிவம் தான் என எழுதியவனிடம், அப்பூச்சிக்குள்ளேயே தனித்த ஒரு பிரபஞ்சம் இருப்பதை நுண்ணோக்கி காட்டும்பொழுது அவன் கிளர்ச்சியடையாமல் என்ன செய்யவியலும்.தொழில்நுட்பத்தைக் கலை மிக ஆழமாகத் தொடர்ந்து விமர்சித்து வந்தபோதும் ஓரெல்லைக்கு மேல் அதன் கலைநோக்கிற்குள் அறிவியல் குறுக்கிடவில்லை என்பதே நிதர்சனம்.அறிவியல் தனக்கென்று ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொண்டதே ஒழிய கலையின் வாழ்க்கைப் பார்வையை அது நிராகரித்துவிடவில்லை.அல்லது அது அசாத்தியமாகக் கூட இருக்கலாம்.அதனால் தான் நியூட்டன் வானவில்லை அக்காகப் பிரித்துப் போட்டாலும் கீட்ஸின் வானவில் இன்னும் மிளிர்கிறது மேல்வானத்தில்.இன்று நூறுநூறு கவிஞர்கள் தத்தமது வானவில்லைப் பறக்கவிட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

தவிர ஏற்கனவே சொல்லியது போல தேவதச்சனின் வரும் மனிதன் புலன்களால் வரையறுக்கப்பட்டவன்.அவனுக்குத் தெரியும் கைதவறி விழுந்த முட்டையை மீட்க முடியாதென, ஒரு சிறிய மலரை பூக்கைச்செய்ய இயலாதென.நாம் காணும் உலகம் நாம் நினைக்கும் அளவிற்கு எளியதில்லை என்ற அபார நம்பிக்கை கொண்ட ஒருவரையே இக்கவிதைகளில் நாம் சந்திக்கிறோம்.நம் கண்களால் காணவியலாத நிறங்களும் காதால் கேட்கமுடியாத அலைவரிசைகளும் இருக்கவே செய்கின்றன.அறிவியல் ஏற்கனவே நிருபித்துவிட்டது.இந்தப் பிரபஞ்சமானது நாம் நமது வாழ்வில் அறிந்து தீரவியலாதது.புதிர்களும் மர்மங்களும் நிரம்பியது.அந்தக் காரணத்தினாலேயே நம் உடனடி அனுபவம் இங்கே இவ்விடத்திலேயே ஒரு சாகசமாகக்கூடும்,நாம் விழிப்போடிருந்தால்.விளக்கிக்கொள்ளவியலாத இந்த அபௌதிகப் பேரிருப்பை புலன்கள் சந்திக்கும் இடமே பெரும்பாலான தேவதச்சனின் கவிதைகள் விழித்துக்கொள்ளும் புள்ளி.அங்கிருந்தே அவர் அன்றாடத்தின் அற்பச்செயல்களை பிரபஞ்ச இருப்பில் நிகழ்த்திக் காட்டி அதன் முடிவற்ற விசித்திரத்தையும் சாத்தியங்களையும் தொட்டுக் காட்டுகிறார்.அதைவிட எந்தவிதத்திலும் முக்கியத்துவம் இல்லாத மனிதனின் சாதாரண தருணங்களை கையகப்படுத்தியதின் மூலம்.அந்த எளிய சம்பவிப்புகளுக்கு கவிதைக் குள்ளேயாவது ஒரு அங்கீகாரம் உறுதிப்படுத்தப்படுகிறது

[மேலும்]

devadatchan

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் தொடங்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள். வழக்கம்போல ராஜஸ்தான் பவனில் தங்குமிடம் ஏற்பாடாகியிருக்கிறது.

நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். முன்பதிவுசெய்பவர்கள் முன்னரே செய்துகொள்வதற்காகவே இவ்வறிவிப்பு. நிகழ்ச்சிநிரல் சிலநாட்களில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும்

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

=====================================================================

தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு

தேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்

தேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

முந்தைய கட்டுரைஏழாம் உலகம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிருசூழ் பெருநிலை