கவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’

Devadachan-1 (2)

எப்போவெல்லாம்
மைனாவைப் பார்க்கிறேனோ
அப்போவெல்லாம் தெரிகிறது
நான்
நீராலானவன் என்று
அதன் குறுஞ்சிறகசைவில்
என் மேலேயே தெறிக்கிறேன் நான்

இந்தக் கவிதையில் இருக்கும் மைனா ஓர் அனுபவம்; அன்றாட கணத்தின் அசாதாரணம். அதன் சிறகசைவு நினைவில் இருக்கும் வேறோர் ஞாபகத்தை/அனுபவத்தை/வரலாற்றைத் தூண்டிவிடுகிறது. நமக்குள்ளிருக்கும் ஞாபகச் சுமைகொண்ட ஒரு நானும் அனுபவத்தின் நினைவைக்கொண்ட ஒரு நானும் சந்திக்கும் புள்ளிதான் இங்கே தெறிப்பாகத் தொழிற்படுகிறது. இது தேவதச்சன் என்னும் கவிஞன் உருவாக்கும் ஒரு பேருணர்வு; பல்லாயிரம் மழைத் துளிகளில் ஒரு துளி, பல்லாயிரம் காட்சிகளில் ஒரு காட்சி. இதுதான் தேவதச்சன் கவிதைகள் தரும் அனுபவம்.

கவிதை, இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்களுள் பழமையானது; அலங்காரங்களுடன் ஆனது. மொழி வரிவடிவம் பெற்றதும், இலக்கியம் அலங்காரங்களைக் களைந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டது; நாவல், சிறுகதை வடிவங்கள் பிறந்தன. கவிதையின் தேவை கேள்விக்குள்ளானபோது அதுவும் தன் ஒப்பனைகளைக் களைந்து உரைநடையானது; புதுக்கவிதை தோன்றியது. ஆனால் இதற்குப் பிறகும், புதுக்கவிதை பிறந்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆன பிறகும், ‘கவிதையின் தேவை என்ன?’ என்ற கேள்வி இன்று எழுப்பப்பட்டு வருகிறது.

தொடக்கக்காலத் தமிழ்க் கவிதைக்கு இருந்த தேவையை இன்று உரைநடை உட்கிரகித்துக் கொண்டது எனச் சொல்லப்படுகிறது. தேவையில்லாத நிலையில் இன்று கவிதைகள் வெறும் பொன்மொழிகளாகிவிட்டன என்கிறார் அசோகமித்திரன். இன்றைய கவிதைகளுக்குத் திட்டம் இல்லை என்பது அவர் முன்னிறுத்தும் முக்கியக் காரணம். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இயங்கிய பாரதிக்கு, ‘தேச விடுதலை’ என்னும் திடமான திட்டம் இருந்திருக்கிறது. அதை அவரது கவிதைகளும் எதிரொலித்திருந்தன. ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகான இந்தியாவின் நிலை, சுதந்திரம் அடைய வேண்டும் என்ற லட்சியத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்குவதுபோலத்தான் இருந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் எஞ்சிய லட்சியக் கனவுகளையும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டு சிதறடித்துவிட்டது. திட்டமில்லாத வாழ்வும் குறிக்கோள் இல்லாத பயணமும் புதிய நெறிகளாக அர்த்தம் பெற்றுவிட்டன.

தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றின் தொடக்க கால முயற்சிகளையும் இந்தப் பின்னணியுடன் நினைவுகூரலாம். ந.பிச்சமூர்த்தியும், க.நா.சுப்ரமண்யமும் பாரதியின் முயற்சிக்குப் பிறகு தமிழில் புதுக்கவிதைகளை முன்னெடுத்தவர்கள். ஆனால் இருவரும் புதுக்கவிதைகள் குறித்து வெவ்வேறு கருத்துடையவர்களாக இருந்தனர். பிச்சமூர்த்தி மரபில் நாட்டம் உள்ளவராக இருந்திருக்கிறார். அவரது கவிதைகளும் மரபின் அலங்காரங்களுடன் இருந்தன. ஒருவிதத்தில் முடிவடைந்த லட்சியவாதக் கனவுகளை மீட்டுருவாக்க அக்கவிதைகள் முயன்றன எனக் கொள்ளலாம். ஆனால் க.நா.சு. சீரும், தளையும் முழுவதும் அறுக்கப்பட்டு இறுக்கமும் ஆழமும் கொண்ட வடிவத்தை நோக்கியிருந்தார். ஒருவகையில் பழைய லட்சியவாதக் கனவுகளுக்கு விடைகொடுப்பது என இதைக் கொள்ளலாம். புதுக்கவிதை எனப் பெயரிட்டதும் க.நா.சுதான். இன்று க.நா.சு. வகுத்த இலக்கணங்களுடனான கவிதைகள் தமிழில் வேரூன்ற முடிந்திருக்கிறது. அவற்றுக்கு லட்சியங்கள் இல்லை; பழமை இல்லை. ஆனால் அசாதாரணம் இருக்கிறது.

மரபுக்கும் புதுமைக்குமான முரண்பாடு நடந்த காலகட்டத்தின் வெளிப்பாடுகள் என இவற்றைக் கருதலாம். இந்த விவாதங்கள் நடந்த 1960களுக்குப் பிறகு புதிய கவிஞர்கள் படை 1970-களில் புறப்பட்டுவருகிறது. அவர்களுள் ஒருவர் தேவதச்சன். ‘கவிதைக்கு என்ன தேவை இருக்கிறது?’ என்ற கேள்விக்கான பதிலையும் தேவதச்சனின் கவிதைகள் உருவாக்கும் அனுபவத்தைக் கொண்டு ஆழ்ந்துணர முடியும்.

விமர்சகர் எம்.டி.முத்துக்குமாரசாமி கூறுவதுபோல, ஒரு கவிதை ஒரு பெரும் புராணக்கதையை நினைவுபடுத்தி இரண்டு வார்த்தைகளில் கவிதையால் தூண்டமுடியும். இன்னொன்று குறுகிய விவரங்கள் வாயிலாகவே கவிதையில் காட்சிரூபத்தை உருவாக்க முடியும். அத்துடன் ஒரு மெல்லிய நகைச்சுவைத் துணுக்கின் தன்மை இருக்கவேண்டும். இன்னொன்று குறுங்கவிதை முதுகுத்தண்டு சில்லிடும் திடுக்கிடும் வகையில் மர்மத்தை உருவாக்க வேண்டும் என்கிறார். இந்த மர்மம், ஹாஸ்யம், பதற்றம், திகைப்பு போன்ற உணர்வுகளை உருவாக்கிவிடுபவர் தேவதச்சன். மேலும் இதையே அசோகமித்திரன் கேள்விக்கான பதிலாக சொல்ல முடியும். மேலும் ஒரு கவிதையால் வாசிக்க வாசிக்க வெவ்வேறு பொருள் தரக்கூடியதான சாத்தியத்தை உருவாக்க முடியும் என்கிறார் முத்துக்குமாரசாமி.

தேவதச்சனின் கவிதைகள் காட்சி அனுபவங்களில் தோய்ந்தவை. அவர் கவிதைகளை வாசிக்கும்போது அவை எல்லாமும் அவரது இமைகளின் மொழியிலானவை என உணர முடிகிறது. அவர் பார்த்த காட்சிகள்தாம் கவிதையாக்கம் பெறுகின்றன. அவை எல்லோருக்கும் பொதுவான காட்சிகள்; அவற்றுக்குத் தனித்தன்மை இல்லை. பிரம்மாண்டமான மலைகள், விநோதமான விலங்குகள் இல்லை (டைனோசர் வருகிறது. ஆனால் அது பழக்கப்பட்ட விலங்குதான்). ஆனால் நமக்குப் பழக்கமான காட்சி இடுக்குகளில் நெளிந்துகொண்டிருக்கும் கிடக்கும் நம் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட ஓர் அசாதாரணத்தைக் கவிதைக்குள் காட்சிப்படுத்துவிடுவார். இதன் மூலம் அசோகமித்திரன் குறிப்பிடும் இந்தப் புனிதவாக்கு கவிதையாக புத்தாக்கம் பெற்றுவிடும்; ஒரு தனித்தன்மையை வந்துவிடும். இது இலக்கிய சிருஷ்டிக்கு அவசியமானது. உதாரணமாக இந்தக் கவிதையின் காட்சி. தேவதச்சன் ஒரு இடைவெளிக்குப் பிறகு எழுதிய இந்தக் கவிதை, தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான கவிதையாகக் கருதப்படுகிறது. இந்தக் கவிதை தரும் அனுபவத்தை உருவாக்க உரைநடைக்குத் திராணியிராது என உறுதியாகச் சொல்லலாம்.

ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ஆனால்
எண்ணிலிறந்த தூக்குவாளிகள்
எண்ணிலிறந்த மழைகள்
எண்ணிலிறந்த தலைப்பாகைகள்
எண்ணிலிறந்த காற்றுகள்
எண்ணிலிறந்த தொரட்டிகள்
எண்ணிலிறந்த பகல்கள்
ஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்
ரயில்வே கேட் அருகில்
எப்படா திறக்குமென்று

ஏதாவது ரயில்வே கேட்டில் பார்த்திருக்கக்கூடிய ஒரு பழக்கப்பட்ட காட்சி. ஆட்டிடையன் ஒருவன்தான். ஆனால் தூக்குவாளியும் தொரட்டியும் தலைப்பாகையும் எண்ணிக்கையில் அடங்காதவையாக இருக்கின்றன. மழையும், காற்றும்கூடப் பன்மையாகின்றன. இதுதான் அசாதாரணம். அச்சுறுத்தும் படிமங்கள் கொண்டும் உருவாக்க முடியாத கவிதைக்குரிய விநோதம். புதுக்கவிதைக்கு இந்த விநோதம் அவசியம் என்கிறார் க.நா.சுப்ரமண்யம். ‘எண்ணிலிறந்த பகல்கள்’ என்ற சொல்லில் இந்தக் கவிதையைத் திறக்கச் செய்கிறார். அதே ரயில்வே கேட். ஆனால் காட்சி, தினம் தினம் புதிதாக நிகழ்கிறது. ‘எப்படா திறக்குமென்று’ அலுப்புடன் தினமும் காத்திருக்கிறான் இடையன்.


அவரவர் கைமணல் தொகுப்பின் மூலம் அறிமுகமானவர்கள் ஆனந்தும் தேவதச்சனும். மெய்யியல் மரபின் ஆழத்தைப் பிரதிபலிப்பதாக அந்தக் கவிதைகள் இருந்தன. ஆனந்தின் கவிதைகள் இன்றளவும் அந்த வேதாந்தத் தன்மையை மையப் பொருளாகத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. ஆனால் தேவதச்சன் அந்தக் கவிதைகளிலிருந்து விலகியிருக்கிறார். இன்றைய யாதார்த்தை உணர்ந்திருக்கிறார். அவரது கவிதைகள் அதைச் சுவீகரித்துக்கொண்டுள்ளன.

எண்ணற்ற மனிதர்களை அவர் கவிதைகளுக்குள் சிருஷ்டிக்கிறார். அவர்களின் நெருக்கடிகள், அபிலாஷைகள், சஞ்சலங்கள், தோல்விகள் எல்லாவற்றின் மீது தன் கவிச் சிறகுகளை விரிக்கிறார்.

அன்றாடங்களின் நிகழக் காத்திருக்கும் ஒரு அசாம்பாவிதம்/சந்தோஷம் என்னும் மர்மத்தைத் தம் மொழியால் திறந்து பார்க்க யத்தனிப்பது அவரது கவிதைப் பொருளின் மையமாக இருக்கிறது. பூங்காவில் நடக்கும் மஞ்சள் பூக்களை/துட்டி வீட்டின் பத்தி வாசனையை/ஆஸ்பத்திரியின் சுற்றும் ஈயைக் கொண்டு அந்த கணத்தின் அசாதாரணத்தைப் பிரித்துப் பார்க்கிறார். இந்த அசாதாரணம் என்பது கவிதைக்கான லட்சணங்களில் ஒன்று.

நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்
ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன
சட்டையை தொளதொள வென்றோ
இறுக்கமாகவோ போடுகிறாய்
தலைமுடியை நீளமாகவோ
குறுகவோ தரிக்கிறாய்
உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன,
அஸ்தமனங்கள்,
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம்

இந்தக் கவிதையில் இருக்கும் அன்பின் பதற்றம்தான் தேவதச்சன் விரித்துப் பார்க்க யத்தனிக்கும் மர்மம்.

தேவதச்சனின் கவிதைக்கெனத் தனிச் சொற்களைக் கையாளவில்லை. பெரும்பாலும் மக்களின் புழங்குமொழியில்தான் கவிதைகள் எழுத விரும்புகிறார் என்ற தொனியை அவரது கவிதைகளில் உணர முடிகிறது. சில கவிப் பொருள்களில் மரபின் பாதிப்பை அவதானிக்க முடிந்தாலும் மொழி புதுமையானதாக இருக்கிறது. கவிதையை ஒரு முழுச் சட்டகமாக மாற்றுகிறார். அங்கு மொழிக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. ‘காட்சி வடிவமாக’ (Visual Image) கவிதை வரிகளை உருவாக்குகிறார். அவை ஓர் அனுபவத்தை உருவாக்குவதுடன், மொழி வடிவம் மறைந்து, அனுபவமாகவே நம் மனத்தில் விரிந்து, வியாபிக்கிறது. அவர் சார்ந்த வட்டாரமொழியைச் சிலாகிப்புடன் வெளிப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது.

சிறகசைவு, நிசப்தம் உண்டாக்கும் சப்தம் இந்த இரண்டு செயல்களும் தேவதச்சன் கவிதைகளில் தொடர்ந்து வெளிப்பட்டு வரும் பாடுபொருள்கள்.

துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்

இதே சப்தம் மற்றொரு கவிதையில் காக்கா விட்டுச் சென்ற வீட்டின் குக்கர் சப்தமாக ஒலிக்கிறது; பூட்டப்பட்டிருக்கும் பானு வீடு உருவாக்கும் சப்தமாக கேட்கிறது. சமையல் செய்யும் குடும்பப் பெண் ஒருத்தி எழுப்பும் ‘கூகூகூ’ சப்தமாகவும் ஆகியிருக்கிறது. ஒரு நிசப்தம் போடும் குருவிகளின் சப்தத்திற்கும் பானு வீட்டின் சப்தத்திற்கும் ஆன கால இடைவெளி சில ஆண்டுகள் இருக்கும் என ஊகிக்க முடிகிறது. அதுபோல கண்ணாடிப் பாத்திரங்கள் உடையும் கிளிங் ஓசையும் அவரது கவிதைகளில் தொடர்ந்து தொழிற்படும் ஓர் அம்சம். இவையிரண்டும் அன்றாடத்தின் இரு செயல்கள்; நிலைகள். அன்றாடம் ஒரு பெரும் நதியைப் போல ஓடுவதை தேவதச்சன் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த இரு செயல்களால் அன்றாடம் என்னும் காலத்தில் உருவாகும் இடைவெளிகள் நதியின் சுழியைப் போலச் சுற்றி வருகிறது. அந்தக் கணத்தைச் சொற்களுக்குள் படம் பிடிப்பதன் மூலம் இந்த இடைவெளிகளை நிரப்பப் பார்க்கிறார். அல்லது இடைவெளிகளை நமக்கு விலக்கிக் காண்பிக்கிறார் எனலாம்.

தேவதச்சனின் கவிதைகள் அகவியல் சார்ந்தவை. அவை வெளிப்படுத்தும் சமூக அரசியல் பிரக்ஞையும் மெளனமும் இறுக்கமும் கொண்டவை. அவரது சமீபத்திய கவிதைகளில் இவை மிகத் திட்டமாக வெளிப்பட்டுள்ளன. ‘கடவுள் விடுகிற மூச்சைப்போல்’ என்னும் அவரது கவிதை, மொழியளவில் இறுக்கமும் ஆழமும் கொண்ட நவீனக் கவிதையாக இருந்தாலும் அது முன்னிறுத்தும் பொருள் புரட்சி. பருத்தி எடுக்கும் பெண்ணைக் குறித்தான இந்தக் கவிதையைப் போல மு.சுயம்புலிங்கம் சோளக் கதிர் பறிக்கும் ஒரு பெண்ணைத் தன் கவிதையில் சித்திரிக்கிறார். தேவதச்சனும் சுயம்புலிங்கமும் இருவேறு துருவங்கள்.
தேவதச்சன் கவிதைகளில் அன்றாடத்தின் பல்வேறு காட்சிகள் வழியாகச் சாமான்ய மனிதர்கள் பலரையும் அவர்கள் சார்ந்த வாழ்க்கையுடன் கவிதைக்குள் சிருஷ்டிக்கிறார்.

ஆண்டாளும், சிபிச்சக்கரவர்த்தியும், பாரதியும் தேவதச்சன் கவிதைகளுக்குள் புத்தாக்கம் பெறுவதுபோல நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் வாழ்க்கையும் பதிவாகிறது. பஸ், முரட்டு லாரி, ரயில், சைரன் ஒலி, ரவுண்டானா, சிக்னல், வாகனச் சோதனை எல்லாமும் வருகின்றன. கண்ணாடி பாட்டில் உடையும் க்ளிங் ஓசை, சைக்கிள் பெல்லின் க்ளிங் க்ளிங் சத்தம், காக்கா விட்டுச் சென்ற வீட்டின் குக்கர் இரைச்சல் எல்லாமும் இருக்கின்றன. அகற்றப்பட்ட கண்ணகி சிலை, தற்கொலை செய்துகொண்ட நகைச்சுவை நடிகை, அடிக்கடி நிகழும் மின்வெட்டு போன்ற சமகாலமும் கவிதைகளில் வெளிப்படுகிறது. ஆனால் இந்தச் சமகாலச் சுமைகளை தேவதச்சனின் கவிதைகள் இலகுவான வார்த்தைகளால் வெளிப்படுத்துகின்றன.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கும் தேவதச்சனின் கவிதைகள் இப்போது மூன்றாம் தலைமுறையில் இருக்கின்றன. முதல் தலைமுறைக் கவிதைகள் வேதாந்தத் தன்மையுடன் இருந்தன. அது ‘எழுத்து’ காலத்தின் தொடர்ச்சியாக வெளிப்பட்டன. அடுத்த தலைமுறைக் கவிதைகள், அன்றாடத்தை நோக்கி நகர்ந்து, அன்றாடத்திலேயே வியாபித்தன. மூன்றாம் தலை முறைக் கவிதைகளில், அன்றாடச் செயல்பாடுகள் குறைந்து, அன்றாடத்தின் இன்னொரு அம்சத்தில்தான் நிலைகொண்டிருக்கின்றன. நனைந்த நெல்லி மரத்தின் பச்சையம்போல் காதலும் துளிர்த்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது தேவதச்சனின் கவிதைகள், அவரது கவிதை சொல்வதைப் போல இலைகளின் நடனத்தைப் போன்றவை. அவற்றுக்குச் சொற்கள் இல்லை; வடிவம் இல்லை; தத்துவ விசாரங்கள் இல்லை. கவிதானுபவமாக மட்டும் நம் உள்ளில் வியாபித்துக்கொள்பவை.

devadatchan

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் தொடங்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள். வழக்கம்போல ராஜஸ்தான் பவனில் தங்குமிடம் ஏற்பாடாகியிருக்கிறது.

நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். முன்பதிவுசெய்பவர்கள் முன்னரே செய்துகொள்வதற்காகவே இவ்வறிவிப்பு. நிகழ்ச்சிநிரல் சிலநாட்களில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும்

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது

=====================================================================

தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு

தேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்

தேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

முந்தைய கட்டுரைமண்குதிரை
அடுத்த கட்டுரைமழை- கடிதங்கள்