ஆசிய உற்பத்திமுறை-கடிதம்

1

வணக்கம்.

கரஷிமாவின் அஞ்சலிக்குறிப்பில் சில கருத்து முரண்கள் உள்ளன. வரலாற்றுப்பொருள்வாதமே வரலாறெழுதும் மார்க்ஸியர்களின் கருத்தோட்டமாக இருக்கிறது.வரலாற்றுப்பொருள்முதல் குறிப்பிடும் நிலமானிய உற்பத்திமுறையிலிருந்து விலகியதாக ஆசிய உற்பத்திமுறை இருக்கிறது என்பதே மார்க்ஸ் இந்தியாவைப்பற்றி எழுதிய கட்டுரைகளில் இருக்கும் கருத்து. அவை தன்னளவில் சுயதேவையைப் பூர்த்திசெய்துகொள்ளும் அமைப்பாக இருந்தன என்று விலகலோடு குறிப்பிட்டவர் கார்ல் மார்க்ஸ். நிலமானிய உற்பத்திமுறையை முதலாளியமுறைக்கு நகர்த்துவது எளிது. ஆனால் ஆசியவியல் உற்பத்திமுறையைத் தகர்ப்பதும் மாற்றுவதும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எளிதாக இருக்காது என்று எழுதினார்.

இடைக்கால இந்திய வரலாற்றை எழுதிய இராம்சரண் சர்மா போன்றவர்கள் கூட ஏற்கவில்லை. வரலாற்றுப்பொருள்முதல்வாதச் சூத்திரம் தான் செல்வாக்கோடு இருந்தது. நான் எனது ஆய்வேட்டில் கூட அதைத்தான் நிறுவ முயன்றேன். இப்போது ஆய்வேட்டை எழுதினால் ஆசியவியல் உற்பத்திமுறையை மையப்படுத்தி நிறுவவே முயல்வேன்.
முடிந்தால் இந்தக் கட்டுரையை வாசித்துப்பாருங்கள்

,http://ramasamywritings.blogspot.in/2012/09/blog-post_3.html

அ.ராமசாமி

அன்புள்ள அ.ரா அவர்களுக்கு,

உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது. அந்த ஆய்வேட்டை நூலாக வெளியிடலாமே. முக்கியமான சில கோணங்கள் இருந்தன. இன்று உங்கள் கருத்து மாறியிருந்தால் அதில் ஓர் இரண்டாம் பகுதியாக எழுதிச்சேர்க்கலாம்.

1 மார்க்ஸிய நோக்கில் நிலமானிய முறை என்பது நிலம் வெவ்வேறு நிலவுடைமைசக்திகளால் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, அனைத்து உழைப்பும் முதலீடும் தொகுக்கப்பட்டு உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுவது. அதன் விளைவாக உருவாகும் உபரி அந்த நிலவுடைமையாளர்களால் சேகரிக்கப்பட்டு மையத்தில் குவிக்கப்பட்டு அரசுகளும் பேரரசுகளும் ஆகவேண்டும்.

2. அந்த வகையான நிலமானியமுறையே அடுத்தகட்டம் நோக்கி வளர்ந்துகொண்டிருப்பது. சிற்றரசு, அரசு, பேரரசு என வளர்ந்து பெருமுதலை உருவாக்கி முதலாளித்துவத்தை உருவாக்குவது. ஆகவே அது நில அடிமைமுறையை உருவாக்கினாலும் கூட படைப்பூக்கம் கொண்டது, வரலாற்றில் முன்னேறுவது.

3 ஆசிய உற்பத்திமுறை என மார்க்ஸ் சொல்வது நிலம் நிலஉடைமையாளர்களுக்குச் சொந்தமாக இல்லாமல் பொதுவாக குலங்களுக்கோ ஊர்களுக்கோ சொந்தமாக இருப்பது. தேவைக்கு மட்டும் உற்பத்தி நிகழ்வது. ஆகவே உபரியே உருவாகாதது.

4 இக்காரணத்தால் ஆசிய உற்பத்திமுறை கிராமங்களை அடுத்த கட்ட வளர்ச்சி நிகழாமல் அப்படியே தேங்கவைத்துவிட்டது. இந்தியாவின் பேரரசுகள் நிலத்திலிருந்து பெரிய அளவில் உபரியை ஈட்டவில்லை. அவை பெரும்பாலும் அன்னிய வணிகத்தால் வரும் சுங்க வருமானத்தால் பெருநகரங்களில் மட்டுமே திகழ்ந்த அரசுகள் – இது மார்க்ஸின் புரிதல்

5 இந்தப்புரிதலை மார்க்ஸ் இந்தியாவிலிருந்த கூட்டுநிலவுரிமைமுறை [பின்னர் இது மஹால்வாரி நிலவுடைமை முறை என வெள்ளையர்களால் முறைப்படுத்தப்பட்டது] பற்றிய வெள்ளைய ஆய்வாளர்களின் பதிவுகளிலிருந்து பெற்றுக்கொண்டார். உண்மையில் இப்படிப்பட்ட நிலை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தது. செங்கல்பட்டு வட்டாரத்தில் இம்முறை இருந்ததை யூஜின் இர்ஷிக் எழுதியிருக்கிறார். ஆனால் எல்லா இடங்களிலும் அல்ல.

6 இங்கு வேறுவகையான நிலவரி வசூல் முறை நிலவியது. நிலம் முழுமையாகவே பயன்படுத்தப்பட்டு உற்பத்தி நிகழ்ந்து உபரியானது வரியாக வசூல் செய்யப்பட்டது. பேரரசுகளாக ஆகவும் செய்தது.மார்க்ஸ் எண்ணிய முறையில் அல்ல. ஆகவே ஆசிய உற்பத்திமுறை என மார்க்ஸ் சொன்ன உருவகம் ஏற்கக்கூடியது அல்ல- இதுவே பிற்கால ஆய்வாளர்களின் கருத்து

7. தன்னிறைவுக் கிராமங்கள் என்ற கருத்தை மார்க்ஸ் ஏற்றுக்கொள்ளமாட்டார். மார்க்ஸின் கொள்கைகள் அனைத்துமே உபரி என்னும் சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்டவை. தன்னிறைவுக்கிராமங்கள் உபரியை உருவாக்காதவை, ஆகவே தேங்கியவை என்றே அவர் மதிப்பிடுவார்

ஜெ

முந்தைய கட்டுரைகதைகளைப்பற்றி கேசவமணி
அடுத்த கட்டுரைஇரண்டாயிரம் கடிதங்கள்