லல்லு என்னும் நச்சு சக்தி காரணமாகவே பிகார் அரசைப்பற்றி ஆழ்ந்த அவநம்பிக்கை என்னுள் இருக்கிறது. தமிழகத்தின் அரசியலின் மிகமிகத்தாழ்ந்த எல்லைகளிடம்கூட லல்லுவை உவமிக்கமுடியாது. அவர் அரசியல்வாதியே அல்ல. நிழல் உலக தாதாக்களின் மனநிலையும் செயல்பாடும் கொண்டவர்.
ஆனால் நிதீஷ் குமார் பூரணமதுவிலக்கை அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். வழக்கமான எல்லா ஐயங்களையும் எழுப்புவார்கள். கள்ளச்சாராயம் பெருகும், அது குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பார்கள். அரசுக்கு வரவேண்டிய வருமானம் நிழல் உலகுக்குப்போவதனால் சமாந்தர அரசுகள் உருவாகும் என்பார்கள். கிராமங்களில் ரவுடித்தனம் உருவாகும் என்பார்கள்
பிகாரின் காவல்துறை தமிழகம்போன்றது அல்ல. [இடைநிலைச்] சாதிவெறியால் மூடப்பட்டது அது. மாநிலத்தின் பெரும்பகுதி இன்றைக்கும் எந்தவகையான சட்டத்தின் ஆட்சியும் இல்லாமல் அந்தந்த பகுதியின் சாதியத்தலைவர்களின் வல்லாட்சியிலேயே உள்ளது. அதை அங்கே சாதாரணமாகச் செல்பவர்களே உணரமுடியும். ஒரு விடுதியில் அறை எடுத்தாலே ரவுடிகள் வந்து நம்மை விசாரித்துச்செல்லும் மாநிலம் இந்தியாவில் அது ஒன்றே. நிதீஷால் அதை பெருமளவுக்கு மாற்ற முடியவுமில்லை
இந்த மதுவிலக்கு எப்படி அமலாகும்? இது ரவுடிகளின் கையில் கள்ளச்சாராய சாம்ராஜ்யத்தை அளிக்கத்தான் உதவுமா? போலீஸ் – ரவுடி கூட்டமைப்பால் கட்டுப்படுத்தப்படும் பிகாரில் இதன் விளைவுகள் என்ன? எல்லாமே கேள்விகள்தான். ஆனாலும் இந்த மதுவிலக்கை ஆதரிக்கிறேன். செய்துதான் பார்க்கட்டுமே. முடியவே முடியாது என ஏன் நினைக்கவேண்டும்?
முயன்று அதன் சவால்களைச் சந்தித்து சில சமரசங்களுக்கு நிதீஷ் வரக்கூடும். மதுவை ஒரு முப்பதுசதவீதம் கட்டுப்படுத்தினாலே பிகார் எழுந்துவிடும். பிகாரின் கிராமங்களில் ஏந்நேரமும் போதையில் ஊறிய மக்களைப் பார்க்கலாம். குறிப்பாக அடித்தள மக்கள் மதுவின் பரிபூர்ண அடிமைகள். மது மாவா இரண்டும் அகற்றப்படாமல் பிகாரிக்கு மீட்பே இல்லை. இதுவே அப்பட்டமான உண்மை. இதை உணர்ந்தே நிதீஷ் இதை முயன்றிருக்கிறார். அவர் எந்த அளவுக்கு வென்றாலும் அது நன்றே
நிதீஷுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பிகார் ஆக மாறிவிட்டிருக்கும் தமிழகத்தை எண்ணி ஏங்குகிறேன்