கலேவலா – தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ,
// புத்தரின் வரலாற்றையும் பௌத்தஜாதகக் கதைகளையும் கூறும் செய்யுள்நூல்கள் அனைத்தையும் காவியங்கள் என்று கொண்டால் மட்டுமே நீங்கள் சொல்வது சரி.
ஆனால் அஸ்வகோஷருடையது சரித்திரநூல். ஜாதகக்கதைகள் போன்றவை புராணத்தொகுதிகள். மகாவம்சம் முதன்மையாகக் அரசகுலவரலாறு. இவையெல்லாம் காவியங்கள் அல்ல. செய்யுளில் அமைந்தவை என்பதனாலேயே காவியங்களாகக் கொள்ளக்கூடாது//
பேசுபொருள் வரலாறு, கதை, உபகதை, கதைகளின் தொகுப்பு எதுவானாலும், காவியத் தன்மை கொண்டது காவியம் என்பதே சம்ஸ்கிருத மரபில் இலக்கணமாகக் கூறப்பட்டுள்ளது. அதனால் தான் ராமனின் வரலாற்றைக் கூறும் வால்மீகி ராமாயணம் காவியமாகிறது. புத்தசரிதம், ராமகாதையைப் போன்ற அதே அழகுடன் புத்தரின் வரலாற்றைப் பாடவேண்டும் என்ற எண்ணத்துடன், வால்மீகத்தின் பல அம்சங்களைப் பிரதிசெய்து இயற்றப் பட்டது. அதன் ஆசிரியர் அஸ்வகோஷர் இன்றுவரை கவியாகவே அறியப் படுகிறார், ஞானியாகவோ குருவாகவோ அல்ல. எனவே எல்லாவகையிலும் அது காவியம். அவரது மற்ற நூலான சௌந்தரானந்தம் இன்றுவரை சம்ஸ்கிருத காவிய பாடத்திட்டத்தில் உள்ளது.
எல்லா உலக மொழிகளிலும், அதன் மிகப் பழமையான அரச வம்சகதைகளைத் தான் காவியங்கள் என்றே அழைக்கிறார்கள். சம்ஸ்கிருதத்தில் ரகுவம்சம் உள்ளது போலத் தான் சிங்களத்தில் மகாவம்சம். “காவிய” என்ற சொல் மூலமே சிங்கள மொழியிலும் அது குறிக்கப் படுகிறது.
ஜாதக் கதைகள் தம்மபதம், திரிபிடகம் உள்ளிட்ட பல பழைய பௌத்த நூல் தொகுப்புகளில் கூறப் படுகின்றன. அவை எல்லாவற்றையும் காவியங்கள் என்று கூறுவதில்லை. ஆனால், நான் குறிப்பிட்ட ஆரிய சூரரின் ‘ஜாதகமாலா’ அதில் உள்ள சில கதைகளை மூலமாகக் கொண்டு எழுதப் பட்டதால் அது காவியம் என்றே அறியப் படுகிறது (காளிதாசனின் சாகுந்தலம், பாரவியின் கிராதார்ஜுனியம், பவபூதியின் உத்தர ராமசரிதம் போல)..
அன்புடன்,
ஜடாயு
அன்புள்ள ஜெயமோகன்,
ஆர்வியின் கேள்விக்கான தங்களது பதில் குறித்த மறுபிரசுரம் கண்டேன். சமீபமாக இந்த மனச்சோர்வு என்னை வெகுவாக அலைக்கழிக்க, வெறுமையும், அர்த்தமின்மையும் சில நாட்களாக என்னை அதிகமும் வாட்டி வருகிறது. என்னதான் எழுதினாலும் படித்தாலும் அவ்வப்போது இந்தச் சுழலில் சிக்கித் தத்தளிப்பதை தவிர்க்க இயலவில்லை. அதனால்தானோ என்னவோ தங்களின் வெண்முகில் நகரம் குறித்து நன்றாக எழுதவில்லை என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ‘விடைபெறுகிறேன்’ என்பதாக ஒரு பதிவை எழுதி நிறுத்திக்கொள்ளலாமா என யோசித்ததுண்டு. ஒரு மனம் அதை ஆமோதிக்க மற்றொரு மனம் நிராகரிக்க செய்வது இன்னதென்று அறியாமல் தவித்தேன்.
அந்தச் சோர்வும் ஒருவகையில் படைப்பூக்கத்தின் தூண்டுதலே என்றுணர்த்த, அதிலிருந்து வெறியேற மீண்டும் வாசிப்பிலும் எழுதுவதிலும் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவுசெய்தவனாக, சில சிறுகதை குறித்த பதிவுகளை எழுதினேன். அதில் தங்களின் மூன்று கதைகள் பற்றிய பதிவும் ஒன்று. அவற்றில் என்னை நான் சற்றே மீட்டுக்கொண்டுவிட்ட தருணத்தில், ஆர்வியின் கேள்விக்கான இந்த பதில் எனக்காகவே எழுதியது போன்று என்னை வந்தடைந்தது!
//ஆனால் இங்கே செய்யப்படும் எச்செயலும் வீணல்ல என்பதும் ஓர் அனுபவமே. எல்லாச் செயலுக்கும் எதிர்ச்செயலுண்டு. ஆகவே எல்லாமே எங்கோ எப்படியோ விளைவுகளை உருவாக்கிக்கொண்டேதான் உள்ளன. அந்த எண்ணமே நம்மை செயல்நோக்கிச் செலுத்தவேண்டும்//
//நமக்குப்பிடித்த ஒன்றைச்செய்து இந்த அன்றாடவெறுமையைத் தாண்ட முடிந்தால் அதைவிட மகிழ்ச்சியானது ஏதும் இல்லை. நம் அடிப்படை இயல்புக்கு உகந்த ஒரு செயலைச் செய்வதன் மூலம் நாம் நம் நாட்களைப் பொருளுள்ளதாக ஆக்கிக்கொண்டால் வாழ்க்கை நிறைவுறுகிறது. அதற்கு அப்பால் வாழ்க்கைக்கு என பெரிய ‘நோக்கமோ’ ‘அர்த்தமோ’ இல்லை//
போன்ற தங்களது வரிகள் ‘சரிதான் பார்த்துவிடுவோம்’ என்ற தைரியத்தையும் ஆறுதலையும் கொடுத்திருக்கிறது. பற்றுவிடற்கு பற்றற்றான் பற்றினைப் பற்றுவது போல செயலினால் எழும் மனச்சோர்வை தீவிரச் செயலினால்தான் வெல்ல முடியும் என்பது புரிகிறது.
சாரதியாகக் கண்ணன் நீங்களிருக்க, அர்ச்சுனர்களுக்கு என்ன கவலை?
ஆகவே கொலை புரிவோம்!
அன்புடன்,
கேசவமணி.