சகிப்பின்மை -கடிதங்கள்

1

அன்புள்ள ஜெயமோகன்,

சிரித்து மாளவில்லை. சுருக்கமாக சில குறிப்புகள்.

அமெரிக்காவில் இன்று டிரம்ப் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இன வெறுப்பு என் போன்றோரைக் கவலை கொள்ளச் செய்வதே. நான் பி.ஏ.கே வுக்கு எழுதிய குறிப்பிலும் சொன்னேன் டிரம்ப் குறித்து எழுத நினைத்து உட்காரும் போது ஆமிர் பிர்ச்சினை வெடித்தது. முதலில் நான் அதைப் புறந்தள்ளவே நினைத்தேன். மேலும் அவர் ‘வெளியேறி விடுவேன்’ என்றுப் பேசியிருக்கக் கூடாதென்றே என்றே நண்பனுடன் வாதிட்டேன். பிறகு அந்தக் காணொளியைப் பார்த்தப் பின் அவர் பேசியதில் ஒன்றும் ஆட்சேபகரமாக எனக்குத் தோன்றவில்லை. மிகவும் சாதாரணப் பேச்சு. இங்கே புஷ் 2004-இல் வெற்றி பெற்ற போது பல அமெரிக்கர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதே உகந்தது எனப் பேசினர். அவ்வளவு ஏன் நான் கூட என் போன்றோர் மீதான வரி விதிப்பு ஓர் எல்லையை மீறினால் அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடுவேன். அந்திமக் காலத்துக்கு அமெரிக்கா வாழக் கூடிய நாடா என்று என் உறவினர்களும் நானும் விவாதிப்பதுண்டு.

இதோ இப்போதும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ஓர் கலவரச் சூழல் நிலவுகிறது. கறுப்பின மாணவர்கள் பல் கலைக்கழகங்களுள் நிலவும் நிறவெறிக் குறித்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர். இன்று சிகாகோவில் இனக் கலவரம். இவற்றுக்கு நடுவே அமெரிக்காவில் கறுப்பினத்தவர் நிம்மதியாகவே வாழ முடியாது என்றுத் திட்ட வட்டமாகக் கூறும் ஒரு நூல் National Book Award பெற்றுள்ளது. அப்புத்தகம் பல்லாயிரக் கணக்கில் விற்றுக் கொண்டுமிருக்கிறது. நிலமை அவ்வளவு மோசமில்லை என்று இன்னொரு கறுப்பு பேராசிரியர் மறுத்துரைத்திருக்கிறார். ஆக இங்கே நிகழும் கூத்துகளையும் அறிவேன். பால்டிமோர் கலவரம், சீக்கியர்கள் அமெரிக்காவில் கொல்லப் பட்டது, அமெரிக்க துப்பாக்கி கலாசாரம் குறித்தெல்லாம் எழுதியுமிருக்கிறேன். என்ன செய்வது என் இந்திய விமர்சனப் பதிவுகள் அதிகக் கவனம் பெறுகின்றன.

மேலும் என்னை எழுதத் தூண்டியது இணையத்தில் பார்த்த ‘வெளியே போ’ என்றப் பிரசாரமே. நான் பதிவேற்றி சில மணி நேரங்களுக்குள்ளாகவே எனக்குக் கீழ்க் கண்ட பிண்ணூட்டம் வந்தது

“I know you even before you were starting to get a negative publicity in Jeyamohan circles. I still believe you are just a naive NRI with prejudiced reasoning. I would even pray to Jesus that you are not one of the stooges of anti-india christian lobby opinion mercenary that you are widely believed to be. At least your mischievous writings point me that way. ”

இன்று இந்தியாவை விமர்சிக்கும் ஏக போக உரிமை, மிகச் சரியாக சொன்னால் பிறப்புரிமை, இந்துக்களுக்கே உண்டு, அவர்கள் வெளிநாடுகளில் குடியேறினாலும். சிறு பான்மையினர், அதுவும் வெளிநாட்டில் குடியேறியவர்கள் என்றால், இந்தியாவை விமர்சிக்கும் அருகதை கிஞ்சித்துமில்லை என்பதே. மீறி விமர்சித்தால் கைக்கூலி, அடி வருடிப் பட்டங்கள் வந்து விழும். சிறு பான்மையினர் என்றுமே அக்னிப் பரீட்சைக்குட்பட்டவர்களே. இது தமிழகத்தைப் பொறுத்தவரை பிராமணர்களுக்கும் பொருந்தும். வாஸந்தி, மோதியை விமர்சித்து எழுதிய போது மனுஷ்யபுத்திரன் அதை சந்தோஷமாகப் பகிர்ந்தே போதே எழுதினேன் ‘இதே வாஸந்தி பெரியாரை விமர்சித்தால் அவரை மனுஷின் கூட்டம் எப்படி வசை பாடும் என்பது அறிந்ததே’ என்று. சரியாக இரண்டு நாட்களுக்குள் மனுஷ் பிராமணர்களை வசை பாடினார்.

விருது திருப்பித் தரும் சர்ச்சை பற்றி நான் எழுதிய பதிவை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள் என்று நிணைக்கிறேன். அப்போது உங்கள் நிலைப்பாட்டை ஒட்டியே என் நிலைப்பாடும் இருந்தது ஒரு விஷயத்தைத் தவிர. இதோ அந்தச் சுட்டி http://contrarianworld.blogspot.com/2015/11/nayantara-sahgal-and-perils-of.html?m=1

அது வெறும் இந்தியா மீது சேறு வாரியிறைப்பவனின் பதிவல்ல என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் வாதத்தின் படியே இந்த அறிவு ஜீவிகளின் ஹிபாக்ரஸி, இந்தியாவில் பெருமளவில் சிறு பான்மையினர் அமைதியாகவே வாழ முடிவது, அரசியல் சாசனக் குறைப் பாடுகள் என்று பலக் கோணத்தில் எழுதப்பட்டது அக்கட்டுரை.

நான் உங்களோடு வேறுபட்ட ஒரே புள்ளி நீங்கள் நேருவின் கல்விக் கொள்கையை சாடிய விஷயத்தில் தான். அது பற்றித் தனியாக எழுதுகிறேன். தற்சமயம் நேருவின் பொருளாதாரக் கொள்கை பற்றி விவரமாக எழுதுக் கொண்டிருக்கிறேன். அதை வெளியிட்ட பிறகு நான் இந்திய வெறுப்பாளனா என தாராளமாக விவாதிக்கலாம்.

நீங்கள் இங்கே வந்த போது இந்தோனேஷியா போகும் திட்டம் பற்றிக் கூறினீர்கள். உங்கள் பயணப் பதிவுகளைப் படிக்கும் போது மகிழ்வாக இருக்கிறது உங்கள் மகிழ்ச்சியைக் கண்டு.

அன்புடன்
அரவிந்தன் கண்ணையன்

அன்புள்ள அரவிந்தன் கன்னையன்,

இந்தியாவில் எப்போதுமே மத, இன, மொழி, வட்டாரச்சண்டைகள் நிகழ்ந்தபடியே உள்ளன. A Million Mutinies Now. இதன் கட்டமைப்பு அப்படி. ஒன்றாக இருந்தால் உள் முரண்பாடுகளாக இருக்கும். பிரியநேர்ந்தால் போர்கள் பிறக்கும். கூடுமானவரை ஒன்றாக நிறுத்துவதே அறிவுடையோர் செயலாக இருக்கமுடியும்.

மிகநொய்மையான சரடுகளால் கட்டப்பட்டது இந்தக்கூடு. அது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டும் வருகிறது. அதில் மதம் ஓர் அம்சம். இங்கே நிகழ்ந்த வன்முறைகளில் மதம் சார்ந்த பூசல்ளை விட அஸாம், பஞ்சாப்பில் நிகழ்ந்த வட்டாரதேசியப் பூசல்களும் வடகிழக்கின் இனக்குழுப்பூசல்களும் பெரியவை. ஆனால் அவை நம்மால் பேசப்படாமல் போகின்றன. நாம் மொழிவெறியை, வட்டாரவெறியை, சாதிவெறியை மதவெறிக்கு மாற்றாக முன்வைக்கும் முற்போக்கினரால் பீடிக்கப்பட்டிருக்கிறோம்.

இன்று ஒட்டுமொத்தமாகவே இந்தப்பூசல்கள் குறைந்தபடியே வருவதைத்தான் இந்தியாவின் வன்முறை வரலாற்றை அறிந்தவர்கள் சொல்வார்கள். அதற்கு கல்வியிலும் பொருளியலிலும் வந்துள்ள மாற்றங்கள் ஒரு காரணம். இப்பூசல்களை மீண்டும் தூண்டிவிடவே அனைவரும் முயல்கிறார்கள்.எதுவும் அடங்கிவிடக்கூடாது என்று எண்ணுகிறார்கள்.

அமீர்கான் இந்துத்துவர்களைப்பற்றி குறைகூறியிருந்தால் அதில் எந்த பிழையும் இல்லை. தொடர்ச்சியாக பொறுப்பற்ற பேச்சுக்கள் மூலம் அவர்கள் பதற்றத்தை உருவாக்குகிறார்கள். அவர்களின் தரப்பு ஆட்சியிலிருப்பதனால் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் மேலதிக கவனத்துடன் பார்க்கப்படும் என்பதையும் அவர்கள் அறிவதில்லை.

ஆனால் அமீர்கான் குற்றம்சாட்டுவது இந்தியாவை, இந்திய மக்களின் பொதுமனநிலையை. அதை ஓர் பொதுஊடகத்தில் சொல்வதன் வழியாக இந்தியாவின் பொதுப்பண்பாடு மீது இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளால் உருவாக்கப்பட்டுவரும் கடும் துவேஷத்துக்குத் துணைபோகிறார்.

சொல்லப்போனால் இதுவரை எவ்வகையிலும் சகிப்பின்மை கொள்ளாதவர்களையும் ‘அப்படி என்னதான் நடந்தது? நாம் எப்படி இருந்தாலும் இவர்கள் இப்படித்தான் சொல்வார்கள்’ என்று பேசுமிடத்துக்குத்தள்ளுகிறார்.சென்ற இருநாட்களாக அத்தனை டீக்கடைப்பேசுகளிலும் ஒலிக்கும் குரல் இதுதான்

ஆம், அமீர் போன்ற இஸ்லாமிய அடையாளம் கொண்ட முக்கியஸ்தர்கள் மிகமிகக் கவனமாகவே சொற்களை கையாளவேண்டும். மிக எண்ணியே பேசவேண்டும். ஏனென்றால் அவர்களின் சொற்கள் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவேண்டும்.

தமிழில் முப்பதுக்கும் மேலான இஸ்லாமிய இதழ்கள், வஹாபியப்பிரச்சாரம் செய்யும் இதழ்கள் அவை, வருகின்றன. அவற்றில் நாலைந்தைப்பார்த்தாலே நான் சொல்வது விளங்கும். உச்சகட்ட வெறுப்பு, உச்சகட்ட தேசவிரோதப்பிரச்சாரம். இந்தியா இஸ்லாமியர் வாழத்தகுதியற்ற நாடு, இதன் நீதியமைப்பு அரசு அனைத்தும் காஃபிர்களுடையது, ஆகவே இதன் ஒவ்வொரு கூறுடனும் இஸ்லாமியன் போராடியாகவேண்டும், அதுவே ஜிகாத் — இதுதான் அவற்றால் திரும்பத்திரும்ப பேசப்படுகின்றன. வெறுமே யூடியூபில் சென்று அவர்களின் பேச்சுக்களை மட்டும் கேளுங்கள் புரியும்.

ஒவ்வொரு இஸ்லாமிய இதழும் இந்தியா அநீதியில் வேரோடிய காஃபிர் நாடு என்பதற்கு மேற்கோளாகக் காட்டுவது இன்று இருவரை, மனுஷ்யபுத்திரன், அ.மார்க்ஸ். இவர்கள் மதச்சார்பற்றவர்கள் என்னும் லேபில் கொள்ளும்போது இந்த கருத்துக்களுக்கு அதிகாரபூர்வ உண்மை என்னும் முகம் உருவாகிறது.

வரும் மாதம் அனைத்து வஹாபிய இதழ்களும் அமீர் கான் கூறியதையே அட்டைப்படச்செய்தியாகக் கொண்டு வெளிவரும். அதை மட்டுமே இஸ்லாமிய இளைஞர்கள் இன்று வாசிக்கிறார்கள். நான் அஞ்சுவது இவ்வகை எதிர்விளைவுகளை மட்டுமே.

இஸ்லாமியர் மீது மட்டும் அல்ல, அனைவர் மீதும் ஒரு கட்டாயம் இன்று உள்ளது. மனதுக்குத் தோன்றிய கருத்தைச் சொல்லலாம். ஆனால் சிலவற்றிலிருந்து விலக்கிக்கொண்டாக வேண்டும். எம்.ஏஃப் ஹுசேய்ன் ,இஸ்லாமிய அறிஞர் எம்.எம்.பஷீர் போன்றவர்கள் இந்துத்துவ லும்பன்களால் அவமதிக்கப்பட்டபோது நான் எதிர்வினையாற்றும் கட்டாயத்திற்கு ஆளானதும் இதேபோலத்தான்.

நான் உடனடி எதிர்வினைகளைத் தவிர்ப்பவன், ஆனால் இவற்றில் நான் மௌனமாக இருக்கமுடியாது.ஏனென்றால் நான் இலக்கியத்துடன் தொடர்புள்ளவன். இந்துஞான மரபில் ஆர்வமுள்ளவன். ஆகவே நான் எதிர்வினையாற்றியே ஆகவேண்டும். அந்த லும்பன்களிடமிருந்து என்னை வேறுபடுத்திக்கொள்ளவேண்டும். அரவிந்தன் நீலகண்டன்களின் வசைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.

அதையே கமல் ஹாசனும் செய்கிறார். எச்.ராஜாவிடமிருந்து வசைகளை வாங்கிக்கொள்கிறார். அமீர்கான் அதைச்செய்வதில்லை. அவர் ஒரு தரப்பை மட்டும் எடுக்கிறார். நான் சுட்டிக்காட்டுவது அதைத்தான்.

ஜெ

===================================================
ஜெ,

நானும் ஒரு இஸ்லாமியன்தான். இந்தி சினிமா- சீரியல் வணிகத்தில் மிகக்கணிசமான பகுதி டிவிடி, டெலி அப்லோடிங் மற்றும் பல வழிகளில் வருவது. பன்னிரண்டு இஸ்லாமிய நாடுகளில் கமெர்ஷியல் சினிமா இல்லை. ஹாலிவுட் படங்களுக்கு அங்கே ஒருமாதிரி மதத்தடையும் உள்ளது.ஆகவே அவர்களுக்கு கான்கள் ஆதர்சமாக இருக்கிறார்கள். இந்த நிலை முன்பு இருந்ததில்லை. அன்றெல்லாம் சினிமா நேரடியாகச் சென்றால்தான் உண்டு. இன்றைக்குப்போல அதுக்கு டிஜிட்டல் டிஸ்டிரிப்யூஷன் சிஸ்டம் இல்லை. ரெவினியூ வருவதற்கு தெரிந்தும் தெரியாமலும் சேனல்களும் இல்லை.

ஆகவே அமீர் அப்படி ஒரு சின்ன போடு போட்டுவிடுவது அவரது வியாபாரத்துக்கு நல்லது. அதை கண்டித்துவிட்டுவிடுவதற்கு பதிலாக மற்றதரப்பு தெருவிலிறங்கினால் இன்னும் பெரிய தப்பு. ஆனால் இதுதான் நடக்கப்போகிறது. யாருக்கும் ஒரு பொறுப்பும் இல்லை. தேசம் மக்கள் என்னாவார்கள் என்ற எண்ணமே இல்லை.

சாதாரண முஸ்லீமுக்கு இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன? அமீர்கான் அவருக்கு தோன்றிய கருத்தைச் சொல்லலாம். சாதாரண முஸ்லீம் அவரை ஒரு ஐகன் ஆக நினைக்கிறான். அவன் என்ன நினைப்பான். அவனுக்கு இந்தியாவில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. இந்தியாவில் முஸ்லீம்களுக்கு மிகப்ப்பெரிய கொடுமைகள் நடக்கின்றன எல்லாத்தையும் மீடியா மறைத்துவிடுகிறது என்று எல்லா இஸ்லாமிய இதழ்களிலும் திரும்பத்திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அமீர் சொல்லிக்கேட்கும்போது அது உண்மை என்றுதான் முஸ்லீம் இளைஞன் நினைப்பான்.அது அவனை மேலும் அன்னியமாக்கும். மேலும் தீவிரவாத மதவெறிப் பிரச்சாரம் நோக்கிக் கொண்டுபோகும்.

இன்றைக்கு இஸ்லாமியர்களின் பிரச்சினையே ஜனநாயகத்தையும் நவீன வாழ்க்கையையும் தெரிந்த தலைமையே இல்லை என்பதுதான். இன்றைக்கு மீடியாக்களில் இருக்கும் இஸ்லாமிய ஐக்கான்கள் செய்யவேண்டியது இன்றுள்ள இந்த ஜனநாயக அமைப்பையும், மதச்சார்பற்ற அரசையும் நம்பவும் ஏற்கவும் வைக்கக்கூடிய விஷயங்களைத்தான் அவர்கள் செய்வது மேலும் பிளவுபடுத்தக்கூடிய பொறுப்பற்ற பேச்சுக்களை. ரெண்டு தரப்புக்குமே ரத்தம் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். பயமாக இருக்கிறது.

எம்.

அன்புள்ள எம்,

அமீர் போன்றவர்கள் மதவாதிகள் அல்ல. அவர்களின் உலகமே வேறு. அங்கே பணம், அதிகாரம் இரண்டுக்கும் மட்டுமே மதிப்பு. இது மிக மெல்லிய, நன்கு கணக்கிடப்பட்ட, ஒரு வணிகச் சீண்டல், அவ்வளவுதான். இது ஒன்றும் பெரிய விஷயமும் அல்ல. நாலைந்துநாளில் கடந்துபோவது.

ஜெ

*

அன்புள்ள ஜெ,

நண்பர் பத்ரி இப்பதிவினை “I fully endorse” என்ற முன்மொழிவோடு பகிர்ந்துள்ளார். எழுதியவர் யேல் பல்கலையில் பயில்பவர் என்று நினைக்கிறேன். மேலும் அவரே தன்னை “உயர் ஜாதி இந்து” என்று அடையாளப் படுத்திக் கொண்டுள்ளார். அவ்விரண்டு காரணங்களாலும் என்னை நோக்கி வீசியக் கணைகள் அவரை நோக்கி வீசப் பட மாட்டா.

அமெரிக்காவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதென்று நம்பும் எளிய மனம் எனக்கில்லை அதே சமயம் அந்தப் பதிவர் எழுதியதைப் போன்று அமெரிக்கா ஏன் வாழத் தகுந்த இடம் என்பதில் கட்டாயமாக எனக்கு இதுவரை தீர்மானமானத் தெளிவுண்டு. அத்தெளிவு இந்தியக் கலாசாரத்தை விதந்தோதுவதாகக் கூறிக் கொண்டு அமெரிக்காவை விட்டு எக்காலத்திலும் வெளியேறிப் போகாத பல இந்தியர்களுக்குண்டு, இந்துத்துவர்கள் உட்பட.

பள்ளிக்கு குண்டு செய்து எடுத்துக் கொண்டு வந்து விட்டானோ என்ற அச்சத்தில் கைது செய்யப் பட்ட கறுப்பு இஸ்லாமிய சிறுவனை ஒபாமா வெள்ளை மாளிகைக்கு அழைத்த போது பல இந்தியர்கள் மோதி ஒபாமாவிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பனப் போன்றப் பதிவுகளைப் பார்த்தேன். பாடகர் டி.எம்.கிருஷ்ணா அப்படி எழுதியதாக நினைவு. கடந்த சில வாரங்களாக நேருவைப் பற்றி பற்பலத் தரவுகளை சேகரித்தப் போது எனக்குத் தோன்றியது மோதி ஒபாமாவிடம் கற்க வேண்டியது எதுவுமில்லை மாறாக நேருவே அவருக்குத் தேவையான ஞான குரு.

இரண்டு செய்திகள். ஒன்று அமீர் கானின் படங்களின் மேற்கத்திய வசூல் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய தேசங்களில் தான் அதிகம். வளைகுடா நாடுகளில் இருந்து அவருக்கு வசூல் மிகக் குறைவு. இணையத்தில் விரிவான தரவுகள் இருக்கின்றன அவற்றையெல்லாம் இங்குப் பட்டியலிட விருப்பமில்லை.

இரண்டாவது, பி.என். ஹக்ஸருக்கும் மஹலனாபிஸிக்கும் நேரு காலத்தில் நிறுவப் பட்ட கல்விக் கொள்கைகளுக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை. ஹக்ஸர், நேருக் காலத்தில், ஒரு சராசரி வெளியுறவுத் துறை அலுவலர் அவ்வளவே. கல்விக் கொள்கை ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப் பெற்றக் குழு தான் முடிவு செய்தது. அரவிந்தன் நீலகண்டன் நேருவின் பொருளாதாரக் கொள்கைகளை வசைப் பாடுகிறார். நீங்களோ கல்விக் கொள்கைகளை வசைப் பாடுகிறீர்கள். என்ன ஒன்று முக்கியமான வித்தியாசம் நீங்கள் நீலகண்டன் போல் கண்மூடித் தனமாக நேருவை என்றுமே குப்பைக் கூடைக்குத் தள்ள மாட்டீர்கள். நண்பர் பி.ஏ.கிருஷ்ணனிடம் இத்தகவல்களை சரிப் பார்த்தப் பின்னரே இங்கு சொல்கிறேன்.

அரவிந்தன் கண்ணையன்.

அன்புள்ள அரவிந்தன் கண்ணையன்,

இதில் என்ன தவறு உள்ளது? அமெரிக்காவும், ஐரோப்பாவும் இந்தியாவை விட வாழத்தகுதியான நாடுகள்தான். சமீபத்தில் சென்ற இந்தோனேசியாகூட . இந்த அளவுக்கு அசுத்தமான, சீரழிந்த போக்குவரத்துகொண்ட, ஊழல்மலிந்த நிர்வாகம் கொண்ட, கும்பல்மனப்பான்மை மீதூறிய இன்னொரு தேசம் ஒருவேளை ஆப்ரிக்கக் கண்டத்தில் இருக்கலாம். இதில் மழுப்புவதற்கு ஏதுமில்லை.

நான் கடந்தகால ஏக்கத்துடன் இந்தியா திரும்ப எண்ணும் அனைவரிடமும் கூறுவது ஒன்றையே. இந்தியாவில் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என எண்ணி வரவேண்டாம், ஏமாற்றம் அடைவீர்கள். இந்தியாவுக்கு எதையாவது அளிக்கவேண்டும் என எண்ணினால் மட்டும் வாருங்கள்.

அமெரிக்காவோ ஐரோப்பாவோ அதன் பண்பாட்டுநிலையை அதன் முந்தைய தலைமுறையின் கல்வி, அரசியல்போராட்டங்கள், பண்பாட்டுச் செயல்பாடுகள் மூலம் அடைந்தனர். அது இங்கும் நிகழ்வதற்காகவே பேசுகிறோம். எல்லாம் இங்கே ஏற்கனவே இருக்கிறது என்பதற்காக அல்ல.

இங்கே இன்னும் ஜனநாயக அமைப்புகள் வலுப்பெறவேண்டியிருக்கிறது. பொதுவாழ்க்கையின் நேர்மை அறம் பற்றிய கூரியநோக்கு உருவாகவேண்டியிருக்கிறது. குடிமைப்பண்புகள் உருவாகிவரவேண்டியிருக்கிறது. கலாச்சாரச்செயல்பாடுகளுக்கு மரியாதை அமையவேண்டியிருக்கிறது. செல்லவேண்டிய தூரம் மிகமிக அதிகம்.

இந்தியாவை நேசித்தால் இந்தியாவை கண்மூடித்தனமாகக் கொண்டாடவேண்டும் என்பதில்லை. விமர்சனமும் கவலையும்கூட நேசத்தின் வெளிப்பாடுதான்.

இது சகிப்பின்மை கொண்ட சமூகம் என நான் நினைக்கவில்லை. ஆனால் முரண்பாடுகள் மிக்க தேசம். முரண்பாடுகளைச் சகிப்பின்மையாக ஆக்கிக்கொள்வது மிக எளிது. அவ்வளவுதான்

சினிமாவருமானத்தை பிரசுரிக்கப்பட்ட செய்திகளின் அடிப்படையில் சினிமாக்காரர்கள் நோக்குவதில்லை. பலநாடுகளுடன் சட்டபூர்வமான பணப்பரிவர்த்தனையே கிடையாது. அவ்வளவுதான் சொல்வதற்குள்ளது.

அதேபோல நேருவின் சிந்தனையில் மஹாலானொபிஸ், ஹக்ஸர் இருவருக்கும் இருந்த செல்வாக்கு என்ன என்பதை பல்வேறு அரசியல்நூல்கள் வழியாக காணமுடியும். டாக்டர் ராதாகிருஷணன் கல்விக்கொள்கையை வடிவமைத்திருந்தால் அது நேருவியக் கல்விக்கொள்கைபோல் இருந்திருக்காது என அவரது நூல்களுடன் சாதாரணமாக ஒப்பிட்டாலே அறியலாம். அவர் கௌரவ முகம்தான்.

இந்திய அரசும் நிர்வாகமும் செயல்படும் விதத்தை அறிந்தவர்கள் இதேபோல கமிட்டியில் யார் பெயர் இருந்தது என்று மட்டும் பார்க்கமாட்டார்கள். ஹக்ஸருக்கும் கிருஷ்ணமேனனுக்கும் இருந்த நெருக்கம் , அவர்கள் நேருவிடம் செலுத்திய செல்வாக்கு பற்றி விரிவாகவே எழுதப்பட்டுள்ளது.

இந்திராகாந்தியிடம் பபுல் ஜெயகருக்கு இருந்த கருத்தியல் செல்வாக்கு எல்லா சுயசரிதையிலும் இருக்கும். அரசு ஆவணங்களை ஒருவர் கோரினால் ஒன்றும் இருக்காது. நான் எழுதுவது என் வாசிப்பின், இதழாளர்கள் மற்றும் மூத்த அரசியல்வாதிகளுடனான உரையாடலின் விளைவான புரிதல். அதில் எனக்கு எது உறுதியாகத்தெரியுமோ அது.

நேருவையோ அல்லது காந்தியையோ நான் வழிபடவில்லை. அவர்களிடம் எனக்கு ஏற்பும் மறுப்பும் உண்டு. ஏற்பை ஒருதரப்பு வசைபாடும். மறுப்பை இன்னொரு தரப்பு வசைபாடும். . நடக்கட்டும். ஒரு விவாதம் நடந்தால்சரி, அது எதுவானாலும் நன்றே என்பதே என் எண்ணம்

ஜெ

முந்தைய கட்டுரைஆசிரியர்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : நொபுரு கரஷிமா