தமிழகத்து கோயில்களின் சடங்குகளைப்பற்றிய ஓர் உரையாடலில் குமரிமைந்தன் சொன்னார், ‘நான் நாத்திகன். ஆனால் கோயில் சடங்குகளை மாற்றக்கூடாது என்றே சொல்வேன். ஏனென்றால் அவை மாபெரும் பண்பாட்டு ஆவணங்கள். அவற்றில் நாம் இன்னும் அறிந்திராத தமிழ்ப்பண்பாட்டுத் தகவல்கள் உறைந்துள்ளன’
நான் அதைப்பற்றி மேலும் யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு பொருளை மதச்சடங்குக்கும், கோயில்வழிபாட்டுக்கும் பயன்படுத்துகிறோமா இல்லையா என்பது எவ்வளவு முக்கியமான தகவல்! உதாரணமாக கன்யாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 16 வகையான வாழைப்பழங்கள் பயிராகின்றன. ஆனால் ஒரே ஒரு பழத்தை மட்டுமே நாம் இறைவனுக்கு நிவேத்யமாக படைக்க முடியும். அது கதலிவாழைப்பழம். அதில் வெள்ளைக்கதலி ,ரசகதலி, செங்கதலி என மூன்று வகை உண்டு
சங்க காலத்தில் வாழைக்கு கதலி என்றுதான் பெயர். ஆம், சங்ககாலம் முதல் நம்மிடம் உள்ள வாழைப்பழம் அதுதான். ஆகவேதான் நம் தெய்வங்களுக்கு அவை பிரியமானவையாக உள்ளன. சடங்குகளை மாற்றக்கூடாது என்ற நம் மரபுசார்மனம் அந்தப்பழத்தின் தனியடையாளத்தை, அதன்மூலம் அந்த பழத்தின் வரலாற்றை இன்றுவரை பேணிவருகிறது.
மட்டிப்பழம், நேந்திரன் பழம், பேயன்பழம், பூவன்பழம், மொந்தன்பழம், சிங்ஙன்பழம் போன்ற பிற பழங்கள் அனைத்துமே கடந்த ஈராயிரம் வருடங்களில் நம்மிடம் வந்துசேர்ந்த பழங்கள் மட்டும்தான். வெறும் அறுபது வருடங்களுக்குள் வந்த பழம்தான் பச்சை நாடாப்பழம். நாம் அவற்றை ஏற்றுக்கொண்டு விட்டோம், நம் தெய்வங்கள் இன்னமும் ஏற்கவில்லை
பழங்களில் கொய்யாவும் ஆரஞ்சும் இன்னமும் கடவுள் அருகே செல்லவில்லை. ஆப்பிள் சொல்லவே வேண்டாம். காய்களில் வழுதுணை என்று சொல்லபப்டும் நீளமான பச்சைக்கத்தரிக்காய் நம்முடையது. ஊதாநிறமுள்ள குண்டு கத்தரிக்காய்கள் வரவு. ஆகவே அது சடங்குகளுக்கு உரியது அல்ல.
நமக்கு இலக்கியத்திலும் இத்தகைய ஒரு மானசீகமான பிரிவினை உள்ளது. நம்முடையது என சிலவற்றை நாம் பேணி வருகிறோம். பிற அனைத்தையும் பிறிது என தமிழன்னையின் கருவறைக்குப் புறத்தே தள்ளி வைத்துவிடுகிறோம். அந்த மனநிலையை ஒட்டுமொத்தமாக நான் குறைசொல்ல மாட்டேன். நம் அடையாளங்களும் தனித்தன்மையும் முக்கியமானவைதான். அவை பேணப்படவும் வேண்டும். நெடுங்கால செவ்வியல் மரபு உள்ள பண்பாடுகளில் இந்த மனநிலை உருவாகிவிடுகிறது ஆனால் அந்த மனநிலை நம்மை மாற்றங்கள் அற்றவர்களாக ஆக்கிவிடும். தேங்கச்செய்துவிடும்.
ஒரு பண்பாடு தன் மையத்தை நிலையானதாக வைத்துக்கொள்ளவும் , கூடவே அனைத்து பாதிப்புகளையும் ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றியமைத்துக்கொள்ளவும் ஒரே சமயம் முயலவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். இந்த இரு விசைகளும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு அந்த முரணியக்கம் மூலமாக உருவாகும் வளர்ச்சியே ஆரோக்கியமானது. மையத்தை காக்கும் நிலைச்சக்தி இல்லையேல் அந்தப்பண்பாடு காலப்போக்கில் வெறும் எதிரொலிகளின் தொகுப்பாக மாறி மறையும். புதியன புகும் இயக்க விசை இல்லையேல் அப்பண்பாடு காலப்போக்கில் இறுகி அழியும்.
தமிழின் நல்லூழ் என்னவென்றால் எப்போதுமே இதில் இவ்விரு விசைகளும் தீவிரமாக இருந்துள்ளன என்பதே. சிலசமயம் நிலைச்சக்தியும் சில சமயம் செயல்சக்தியும் முன்னூக்கம் பெறுகின்றன. அதற்கேற்ப அந்தக்காலகட்டத்தின் இயல்பு அமைகிறது. நிலைச்சக்தி ஓங்கிய நாட்களில் இலக்கணங்கள் உருவாகின்றன. உரைநூல்களும் வழிநூல்களும் அதிகமாக வெளிவருகின்றன. செயல்சக்தி ஓங்கும்போது புத்திலக்கிய அலை கிளம்புகிறது.
தமிழிலக்கிய வரலாற்றை எடுத்துப்பார்த்தால் பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளை நிலைச்சக்தி மேலோங்கிய காலம் எனலாம். இலக்கியம் தேங்கிக்கிடந்தது. புராணங்களும் சிற்றிலக்கியங்களும் எழுதப்பட்டன. அவை கோயில்களையும் சிறு மன்னர்களையும் சார்ந்து வாழ்ந்த கவிராயர்களால் அந்தச் சபைகளைச்சேர்ந்த சிலருக்காக உருவாக்கப்பட்டன. இந்தக் காலகட்டமே ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பெரிய அரசுகள் இல்லாமலாகி வறுமையும் பண்பாட்டுத்தேக்கமும் நிலவியகாலம்தான். தமிழகம் நிலப்பிரபுக்களின் பிடியில் இருந்தது.
அந்தத் தேக்க காலத்தில் இருந்து மிகுந்த வீச்சுடன் எழுந்த மாற்றத்தின் விசையையே நாம் சுப்ரமணிய பாரதி என்று சொல்கிறோம். பாரதியும் ஒரு கவிராயராக எட்டயபுரம் அரசரின் சபையில் இருந்தவர்தான். ஆனால் அந்த பதவியை உதறி அவர் சென்னைநகரின் இதழியல் உலகுக்கு வந்துசேர்ந்தார். அந்தப்பயணமே பண்டைய இலக்கியத்தில் இருந்து நவீன இலக்கியம் நோக்கிய நகர்வின் அழகிய குறியீடு. ஒன்று எட்டையபுரம், இன்னொன்று சென்னை!
பாரதியே தமிழ் நவீன இலக்கியத்தின் முக்கியமானபுள்ளி.தன் கவிதையை பாரதி நவகவிதை என்றே எப்போதும் சொல்கிறார். புதியன வேண்டும் என்ற குரலை நாம் பாரதியிடம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். ‘புத்தம்புதிய கலைகள் மெத்த வளருது மேற்கே… அத்தனையும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்’ என்ற அறைகூவலை அவனது கவிதைகளும் கட்டுரைகளும் எழுப்பிக்கொண்டே இருந்தன. பாரதியின் ஒட்டுமொத்த அறிவியக்கத்தையே புதுமைநாட்டம் என்று சொல்லலாம்
ஆகவேதான் பாரதி நவீன இலக்கியத்தின் எல்லா துறைகளிலும் புதிய அலை உருவாக முதற்புள்ளியாக அமைந்தான். தமிழின் நவீன உரைநடையின் தொடக்கம் அவனே. தமிழ் இதழியலும் அவனிடமிருந்தே ஆரம்பிக்கிறது. தமிழ்க்கலைச்சொல்லாக்கம் அவனால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்ச் சிறுகதையும் தமிழ் நாவலும் அவன் விதையிட்டவை. தமிழ்ப்புதுக்கவிதைக்கும் அவனே பிதா. பாரதி தொடங்கிவைத்ததே தமிழ் நவீன இலக்கியம்.
பாரதி எட்டயபுரம் ஜமீந்தாரில் இருந்து இதழியலுக்கு வந்தது என்பது மிகக்கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய பரிணாமம். கவிராயர்களின் புரவலர்கள் நிலக்கிழார்கள். அவர்களின் ரசிகர்களும் அவர்களே. ஆனால் நவீன இலக்கியத்தின் புரவலர்கள் வாசகர்கள் என்னும் ஒரு பெரும்கூட்டம். அதாவது பொதுமக்கள். அவர்களுக்காகவே நவீன இலக்கியம் எழுதப்பட்டது. பாரதியே அதை சொல்கிறான், நவீன இலக்கியத்திற்கு புரவாலர்கள் மக்கள்தான் என்று
வரலாற்று ரீதியாகப் பார்த்தால் பழைய இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் மிக எளிதாக பிரித்துவிடலாம். பழைய இலக்கியம் அரசர்சபைகளை நோக்கி, சான்றோரை நோக்கி பேசுகிறது. நவீன இலக்கியம் மக்களை நோக்கிப் பேசுகிறது. பழைய இலக்கியம் நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தைச் சேர்ந்தது. நவீன இலக்கியம் ஜனநாயக காலகட்டத்தைச் சேர்ந்தது.பழைய இலக்கியம் மாறாத மதிப்பீடுகளை முன்வைக்கிறது புத்திலக்கியம் மாறும் காலத்தில் அவற்றின் இடமென்ன என்று பார்க்கிறது.
சின்ன சங்கரன் கதை என்ற நூல் பாரதியால் எழுதப்பட்ட ஒரு நகைச்சுவை நாவல். முடிக்கப்படவில்லை. அதில் ஒரு ஜமீந்தாரின் சித்திரம் வருகிறது. அவர் ஊதிப்பெருத்துப்போன மனிதர். அவர் காலையில் குதிரைச்சவாரி மேற்கொண்டாகவேண்டும். ஏன் என்றால் அவர் மன்னர். ஆனால் இருப்பது ஒரே குதிரை. அதுவும் வயதான சோனிக்குதிரை. காலையில் அதை நிற்கச்செய்வதற்கு வேலைக்காரர் உதவிதேவை.
அது நான்கு கால்களில் நின்றதும் ஜமீந்தார் ஏறி அதன் மேல் அமர்கிறார். காலுக்கு ஒருவர் என வேலைக்காரர் நின்று ஜமீந்தாரை தாங்கிக்கொண்டு செல்கிறார்கள். அதாவது அந்தரத்திலே செல்லும் ஜமீந்தாருக்கு கீழே குதிரை ஒன்றும் அறியாமல் தள்ளாடிச் செல்கிறது. நிலப்பிரபுத்துவ காலகட்டங்களையும் அதன் ஆசாரங்களையும்தான் பாரதி கிண்டல் செய்கிறான். அதைசெத்த குதிரை என்று சொல்கிறான். செத்த காலத்தின் உப்பிப்போன அரசு அமைப்பு. அவன் அதிலிருந்து தப்பி தன் இடத்தை புத்திலக்கியச்சூழலில் கண்டுகொண்டிருந்தான்.
ஆகவே இவ்வாறு சொல்லலாம், எதற்காக நவீன இலக்கியம் பிறந்தது? ஏன் அது தேவையாகிறது? நவீன இலக்கியம் ஜனநாயக யுகத்தின் சிருஷ்டி. ஜனநாயகமே நவீன இலக்கியத்தை உருவாக்குகிறது. முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு கவிராயருக்கும் பாரதிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை கவனித்தாலே இது புரியும். கவிராயருக்கு எந்த அரசியலும் இல்லை. மக்களிடம் அவருக்கு எந்த ஒரு பொறுப்பும் இல்லை. அவரது கடமை மன்னரிடம் மட்டுமே. அவரது அறம் என்பது மரபான அறம் மட்டுமே. அவர் மக்களுக்கு மனமகிழ்ச்சியூட்ட, ஆசியளிக்க எழுதுகிறார்.
ஆனால் பாரதிக்கு அரசியல் இருந்தது. அவன் ஒரு புரட்சியாளன். கிளர்ச்சியாளன். அவன் தன்னை மக்களை வழிநடத்துபவனாகவே எண்ணிக்கொண்டான். மக்களை மகிழ்விப்பவனாகவோ அல்லது ஆசியளிப்பவனாகவோ நினைக்கவில்லை. அவனது அறம் என்பது நவீன ஜனநாயக அறம் தான். தன் காலகட்டத்தின் ஒட்டுமொத்தமான பொறுப்பையும் அவன் எடுத்துக்கொள்கிறான். ‘சேரவாரும் ஜகத்தீரே’ என்று அழைக்கிறான். ‘இனியொரு விதிசெய்வோம்’ என்று அறைகூவல் விடுக்கிறான்.
ஆகவே பாரதி கவிராயர்களுக்கு மட்டுமே புரியும் கவிதை வடிவங்களை கைவிட்டுவிட்டு மக்களுக்குப் புரியும் சிந்து போன்ற வடிவங்களை கையாள்கிறான். ஒரு காவியம் எழுதும்போதுகூட சிறிது மொழிப்பயிற்சி உள்ள மக்கள்கூட எளிதில் கற்று இன்புறும் நூலாக அது இருக்கவேண்டும் என்று அவன் அக்கறைகொள்கிறான். நவீன இலக்கியத்தின் வடிவங்கள் அனைத்தும் இவ்வாறு நேரடியான வாசக உறவு மூலம் உருவானவை. மரபின் வடிவங்கள் நேற்றில் இருந்து வந்துசேர்பவை. நவீன இலக்கியத்தின் வடிவங்கள் நிகழ்காலத்தில் இருந்து உருவாகக்கூடியவை என்று சொல்லலாம்.
பாரதியைப் பார்த்தால் இன்னொரு விஷயம் தெரியும். ‘கலைச்செல்வங்கள் அனைத்தும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று அவன் கூவுகிறான்.’திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ என்கிறான். அவனுக்கு ஓர் உலகம்தழுவிய பார்வை இருந்தது. இலக்கியம் ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்’ பேசுவதாக இருக்கக் கூடாது என்றும் அது உலகுடன் உரையாடும் ஊடகமாக இருக்கவேண்டும் என்றும் அவன் நினைத்தான். இந்த உலகளாவிய நோக்கும் நவீன இலக்கியத்தின் அடிபப்டைகளில் முக்கியமானதாகும்.
நவீன இலக்கியத்திற்கும் பண்டைய இலக்கியத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு இது. நவீன இலக்கியத்திற்கு ஓர் உலகப்பீடம் உள்ளது. தல்ஸ்தோயும் ஷெல்லியும் அமர்திருக்கும் பீடத்திலேயே பாரதியும் புதுமைப்பித்தனும் அமர்கிறார்கள். ஆனால் மாம்பழக்கவிசிங்கராயரின் பீடம் என்பது கம்பனும் கபிலனும் அமர்ந்திருப்பதுதான்.
ஜனநாயகம், உலகளாவிய நோக்கு ஆகிய இரண்டும் நவீனத்துவத்தின் இரு முக அடையாளங்கள். இவ்விரு கூறுகள் இலக்கியத்தில் செயல்படும்போதே அந்த இலக்கியம் நவீன இலக்கியமாகிறது. தமிழில் பாரதி அந்த மாற்றத்தை உருவாக்கினான்.
ஜெர்மனிய பெரும்கவிஞரான கதே உலகம் முழுக்க உள்ள இலக்கியம் ஒந்றே என்ற நோக்கில் உலக இலக்கியம் என்ற சொல்லை கையாண்டார். அதன்பின் இலக்கியத்தை அதன் இட கால அடையாளங்களை மீறிச்சென்று உலக இலக்கியமாக அணுகும்போக்கு ஐரோப்பிய்ச்சூழலில் உருவாகியது. உலகையே ஒன்றாக முயன்ற காலனியாதிக்கமும் அந்த மனநிலைக்கு உதவியது.
காலனியாதிக்கத்தின் விளைவாக உலகமொழிகளில் இருந்து ஆக்கங்கள் பிரெஞ்சு ஆங்கில மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டன. அம்மொழிகளில் உலக இலக்கியம் ஒரே பெரும் அமைப்பாக கிடைக்க ஆரம்பித்தது. அம்மொழிகளைக் கற்றவர்களுக்கு உலக இலக்கியம் என்ற போதம் எளிதில் உருவானது. அம்மொழிகளை அறியாதவர்களிடம் அந்த பிரக்ஞ்ஞையே இல்லாத நிலை இருந்தது. இன்றும் அந்நிலை தொடர்கிறது.
யோசித்துப்பாருங்கள் பாரதிக்கு முந்தைய எந்தக் கவிஞனுக்கும் உலக இலக்கியம் என்ற எண்ணமே இல்லை. தான் எழுதுவது உலக இலக்கியத்தின் பெரும்பரப்பில் அமைகிறது என்ற பிரக்ஞையுடன் எழுதிய முதல்படைப்பாளி பாரதி. உலக இலக்கியப் பிரக்ஞையே இலக்கியவாதியை நவீன இலக்கியவாதி ஆக்குகிறது. அது எளிதில் ஒருவனை தன் குறுகிய எல்லைகளில் இருந்து விடுதலை கொள்ளச் செய்கிறது.
காலனியாதிக்கம் மூலம் பொதுவான கல்வி உலகம் முழுக்க பரவியபோது ஜனநாயகக்கோரிக்கைகள் உலகமெங்கும் உருவாயின. அந்த இரு அம்சங்களும் இணைந்தே நவீன இலக்கியம் பிறந்தது. அதற்கு ஐரோப்பிய இலக்கியங்கள் முன்னுதாரணங்களாக அமைந்தன. பாரதிக்கும்கூட ஷெல்லி மிகப்பெரிய முன்னுதாரணமாக அமைந்தான். மானுட உரிமைக்கும் சமத்துவத்துக்கும் அறைகூவும் போராளியாக கவிஞனின் ஆளுமை மாறுவதை நாம் ஷெல்லியில் காண்கிறோம். நவ கவிஞன் என்ற வடிவத்தின் முதல்பெரும் சிலை அவன். பாரதி நமது ஷெல்லி.
இவ்வாறுதான் தமிழில் நவீன இலக்கியம் உருவானது. அதன்பின் நாம் சொல்லும் முக்கியமான பெயர் புதுமைப்பித்தன். பெயரே சொல்வது போல அவ்ர் புதுமைக்காக நிலைகொண்டவர். அந்த துடிப்பே அவரது எழுத்து. இன்றைய நவீன இலக்கியத்தின் மாபெரும் முன்னோடி அவர். இன்று நாம் எழுதும் எல்லா இலக்கிய வகைகளிலும் புதுமைப்பித்தன் வெற்றிகரமாக முதல்முயற்சி செய்திருக்கிறார். புராணங்களை மறு உருவாக்கம் செய்வது, யதார்த்தவாதக் கதை, உருவகக்கதை, பேய்க்கதை, துப்பறியும் கதை, மையமற்ற கதை, நேர்கொட்டுத்தன்மை இல்லாத கதை என அவர் முயலாத கதை வடிவங்களே இல்லை.
பாரதியும் புதுமைப்பித்தனும் நவீன இலக்கியத்தின் இரு மூதாதையர். அதன் பின் ஒரு பெரும் தொடர்ச்சி நமக்குண்டு. கு.ப.ராஜகோபாலன், லா.ச.ராமாமிர்தம்,க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன்,ப.சிங்காரம்…இன்று வரை அந்த மரபு தொடர்கிறது
இவர்களில் பாரதியும் புதுமைப்பித்தனும் மரபை அறிந்து அதையும் உள்வாங்கி எழுதிய நவீன படைப்பாளிகள். சுந்தர ராமசாமியும் அசோகமித்திரனும் மரபில் இருந்து துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியவர்கள். இவர்கள் அனைவரிடமும் ஓங்கிநிற்பது மாற்றத்துக்கான புதுமைக்கான விழைவே.
ஆம், நவீன இலக்கியம் நமக்கு ‘வந்துசேர்ந்த’ ஒன்றுதான். அது புதுமைநாடுவதை தன் ஆதார இயல்பாகக் கொண்டது. ஆகவே மாற்றத்தையே அது விரும்புகிறது. மரபில் இருந்து தன் வடிவத்தை எடுத்துக்கொள்வதை விட்டுவிட்டு அது சமகாலத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறது. அது தன்னை உலகளாவிய ஒரு போக்கின் பிரதிநிதியாக நிறுத்திக்கொள்கிறது. அது ஜனநாயகத்தின் இலக்கிய வடிவம். ஆகவே அது இன்றைய இலக்கியம்.
மரபான இலக்கியவாதிகள் இன்றும் மன்னர்களை நோக்கியே பாடுகிறார்கள். மகிழ்விக்கவே இலக்கியம் படைக்கிறார்கள் என்பதைக் காணலாம். பரிசில் கோரி பாடிய அந்த சங்ககாலக் குரலையே இன்றும் நாம் மேடைதோறும் பார்க்கிறோம். ஐயா நீர்தான் இமையமலைக்கே உயரத்தை கற்பித்தவர் என்று பரங்கிமலை பாண்டித்துரையைப்பற்றி பாட அவர்களுக்கு கூச்சமே இல்லை. அவர்கள் பாடும் சொற்களில் பெரும்பகுதி இச்சகம்பேசுதலே
ஆனால் ஏதோ ஒருவகையில் அவர்கள் நம் நிலப்பிரபுத்துவ மரபை சேர்ந்தவர்களாக இருப்பதனால் அவர்கள் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் போல் இருக்கிறார்கள். ஆகவே நாம் அவர்களை உடனேஏற்றுக்கொள்கிறோம். அவர்களை நம்முடைய கவிஞர்களாக எண்ண ஆரம்பிக்கிறோம். ஒரு தனிமனிதன் முகஸ்துதி செய்தால் நமக்கு கூச்சமாக இருக்கிறது, கவிஞன் செய்தால் அது அவனுடைய தொழில்தானே என்று நினைத்துக்கொள்கிறோம். பெண்ணின் கையைப்பிடித்து இழுப்பது தப்பு, ஆனால் வளையல்விற்பவனின் தொழிலே அதுதானே,இல்லையா?.
அத்துடன் மரபான இலக்கியவாதிகளை போலிசெய்யும் வணிக இலக்கியவாதிகளையும் நாம் எளிதில் ஏற்றுக்கொள்கிறோம். எதனால் நாம் ஒரு மேலோட்டமான வணிக இலக்கியத்தை இலக்கியம் என ஏற்கிறோம் என்று பார்த்தால் ஒன்று தெரியும், அது நம் மரபின் கலைச்செல்வங்களை எளிமையாக திருப்பிச் சொல்லியிருக்கும் என்று. அதாவது அது ஒரு போலித்தங்கம். ஒரு கல்யாண புரோக்கர் சொன்னாராம் பையன் கலெக்டர் என்று. பிடிபட்டதும் அவர் வாதாடினார், டிக்கெட் கலெட்க்ராக இருந்தாலும் கலெக்டர் கலெக்டர்தானே?
எங்கே நவீன இலக்கியம் மரபிலக்கியத்தை சரியாக சமன் செய்யவில்லையோ, எங்கே மக்கள் நவீன இலக்கியத்தை புறக்கணித்து மரபை மட்டுமே போற்றுகிறார்களோ அங்கே போலிமரபிலக்கியம் உருவாகும். அது நவீன இலக்கியத்துக்குப் பதிலாக கொண்டாடப்படும். தமிழில் நிகழ்வது அதுவே.
வணிக இலக்கியவாதி நமக்கு பிடித்ததைச் சொல்கிறான். அவன் ஒரு விற்பனையாளன். கோல்கேட் மாதிரி. நாம் கொஞ்சபேர் நமக்கு கடுக்காய் ருசியிலே பற்பசை வேண்டுமென்றால் உடனே கொண்டுவந்துவிடுவார்கள். என்ன தேவை சொல்லுங்கள் என நம் வாசல்முன் நிற்கிறான் வியாபாரி. ஞானம் அப்படி வந்து நிற்காது. அதை நாம் தேடிச்செல்லவேண்டும். அது எப்படி இருக்கிரதோ அப்படி அதை ஏற்க பழகவேண்டும்
நவீன இலக்கியவாதி நம்மை சீண்டுகிரான். நம் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் மாற்றிக்கொள்ளச் சொல்லி நம்மை அறைகூவுகிறான். அவனை நம்மால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆகவே அவனை நாம் பலசமயம் புறக்கணிக்க விரும்புகிறோம். புரியவில்லை என்று சொல்லிவிடுகிறோம். நவீன இலக்கியவாதியை அடக்கம் இல்லாதவன் என்றும் கிறுக்கு என்றும் சொல்லிவிடுகிறோம்.
ஒருமுறை சுந்தர ராமசாமியிடம் கேட்டேன், வணிக எழுத்தாளர்கள் எழுத்தாளர் மாதிரி தோன்றுகிறார்கள். ஜிப்பா போடுகிரார்கள். நீண்ட மயிர் வைத்துக்கொள்கிறார்கள். கழுத்திலே ஆணி போட்டு இறுக்கியதுபோல விரைப்பாக இருக்கிறார்கள். வயகாரா விளம்பர மாடல் போல கம்பீரமாக எந்நேரமும் இருக்கிறார்கள். ஏன் நவீன இலக்கியவாதி அப்படி இருப்பதில்லை?
சுந்தர ராமசாமி சொனனர் ‘அது வேஷம். சட்டையை கழட்டிவிட்டால் அந்த ஆசாமிகள் சாதாரண லௌகீக ஆசாமிகளாக ஆகிவிடுவார்கள். ஆனால் நவீன இலக்கியவாதி ரோட்டிலே நடந்துபோனால் தெரியும் அவன் வேறு ஆள் என்று. கத்தரிக்காயை போட்டுக் கட்டிவைத்த மூட்டைக்கும் பூனையை போட்டு கட்டி வைத்த மூட்டைக்கும் உள்ள வேறுபாடுதான். நவீன இலக்கியவாதிக்குள் ஏதோ ஒன்று நிமிண்டிக்கொண்டே இருக்கிரது… அதுதான் அவனை எழுதச்செய்கிறது”
அதை மாற்றத்துக்கான துடிப்பு என்பேன். ஒரு செடியில் தளிரின் நுனியில் மட்டுமே அதன் உயிர்விசை உச்சத்தில் இருக்கிறது. வளர் வளர் என அந்தச்செடி அதனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறது. அந்த சுருள் காற்றில் ஆடுகிறது. தவிக்கிரது. எது கிடைத்தாலும் பற்றிக்கொண்டு மேலே எழுகிறது. அதுதான் நவீன இலக்கியம். அது ஒருசமூகத்தின் வளர்ச்சி நுனி. அது தீயின் நாக்கு. அது உலகையே உண்ண விரும்புகிறது . அது பாம்பின் இருநாக்கு. அதன் கண்ணும் காதும் மூக்கும் அதுவே.
நாம் வளர வேண்டுமென்றால், இன்றைய ஜனநாயக யுகத்தின் ஆதாரமாகிய பண்புகள் நம்முள் உருவாகவேண்டும் என்றால் நவீன இலக்கியம் அன்றிவேறு வழி இல்லை. நவீன இலக்கியம் வலுவாக இல்லாத மொழியில் ஜனநாயகம் காலப்போக்கில் அழியும். ஜனநாயகம் இல்லாத நாட்டில் காலப்போக்கில் நவீன இலக்கியமும் அழியும். இரண்டும் ஒன்றுடன் ஒன்றுதொடர்புள்ளவை. ஆரோக்கியமான சமூகம் தன் மரபை அழியவிடாது பேணிக்கொள்ளும். நவீன இலக்கியத்தை எல்லா திசைகளில் இருந்தும் அள்ளிக்கொள்ளும்
நாம் கருவறையில் வைத்து கும்பிடுவதற்கு மரபை வைத்துக்கொள்வோம்.. கதலிப்பழம் நம்மிடம் இருக்கட்டும் வழிபாட்டுக்காக. ஆனால் கோயில் பிரசாதத்தை மட்டுமே உண்டோம் என்றால் ரத்தசோகை பிடித்து அழிவோம். நமக்கு விதவிதமான உணவுகள் தேவை. அவை உலகமெங்கும் இருந்து வரட்டும். அவற்றில் இருந்து நாம் நமது உணவை உருவாக்குவோம். அதுவே நம்மை வல்லமை மிக்கவர்களாக ஆக்கும்
மரபும் நவீனமும் சந்திக்கும் ஆரோக்கியமான புள்ளியில் நிகழட்டும் நமது இன்றைய இலக்கியம்
நன்றி
[07.-09-10 அன்று பினாங்கு சுல்தான் அப்துல் அலீம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் நடத்திய உரை]
முதற்பிரசுரம் Sep 11, 2010/மறுபிரசுரம்