‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73

பகுதி ஆறு : மாநகர் – 5

மதுராபுரியின் சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட அரண்மனை வாயிலில் அர்ஜுனன் தன் ஒற்றைப்புரவித் தேரில் வந்து இறங்கி உள்ளே நின்று எம்பி எம்பிக் குதித்த சுருதகீர்த்தியை இடையைப் பிடித்து தூக்கி கீழே இறக்கினான். “தந்தையே, தந்தையே, தந்தையே” என்று அழைத்து அவன் காலை உலுக்கிய சுருதகீர்த்தி “நாம் இந்தப் புரவியிலே வரும்போது… நாம் இந்தப் புரவியிலே வரும்போது…” என்றான். “ஒரு முறை அழைத்தால் போதும்” என்றான் அர்ஜுனன். “நாம் இந்தப்புரவியில்…” என்று சொன்ன பிறகு புரவியை திரும்பிப் பார்த்து “இது சிறிய புரவி” என்றான் சுருதகீர்த்தி.

“வா! நாம் மேலே போய் உன் இளையோனை பார்ப்போம்” என்றான் அர்ஜுனன். “இளையோனை நான் இந்தப்புரவியில் ஏற்றிக்கொண்டு கொண்டு போவேன்” என்றான். “எங்கு?” என்றான் அர்ஜுனன். “கலிங்கத்திற்கு. கலிங்கத்தின் இளவரசியை புரவியில் ஏற்றி கொண்டுவருவோம்.” “நீங்கள் எந்தப்புரவியில் ஏறிக் கொள்வீர்கள்?” என்றான் அர்ஜுனன். “இதே புரவியில்தான். நான் முன்னால் ஏறுவேன். அபிமன்யு இங்கே இதோ இங்கே ஏறுவான். அதற்குப் பின்னால்…” என்று சொன்னபிறகு ஐந்து பேர் என்று விரலைக்காட்டினான் சுருதகீர்த்தி.

அர்ஜுனன் அவனை இடையைப் பற்றி சுழற்றித் தூக்கி தன் தோளில் ஏற்றிக் கொண்டான். சுருதகீர்த்தி உரக்கச் சிரித்து அர்ஜுனன் தலைமேல் அடித்து “விரைவாகப்போ! புரவியே கடுகிப்போ!” என்று கூவினான். படிகளில் ஏறி மேலே சென்று அங்கு காத்து நின்றிருந்த அணுக்கச்சேடியிடம் “என் வரவை அறிவி” என்றான் அர்ஜுனன். அவள் முகம் மலர்ந்து தலைவணங்கி “வருக இளைய பண்டவரே!” என்றபின் விரைந்து உள்ளே சென்றாள்.

அர்ஜுனன் பெருங்கூடத்தில் நுழைந்து அங்கிருந்த வெண்கலத்தால் ஆன கருடன் சிலைக்குக் கீழே அமர்ந்தான். சுருதகீர்த்தியை கீழிறக்கி திருப்பி தன் அருகே பிறிதொரு பீடத்தில் அமர்த்தினான். “அபிமன்யு என்னை விட வீரன். அவன் மூன்று குதிரைகள் மீது விரைவாக பயணம் செய்தான்” என்றான் சுருதகீர்த்தி.

“அப்படியா?” என்ற அர்ஜுனன் “என்னிடம் சொல்லவே இல்லையே” என்றான். “நான் இரண்டு குதிரைகளில் பயணம் செய்தேன்” என்றான் சுருதகீர்த்தி. “எங்கு?” என்றான் அர்ஜுனன். “தொலைவில் வேறொரு நாட்டில்” என்றபின் பெரிய இமைகள் மூட முகம் தாழ்த்தி ஒரு கணம் சிந்தித்து “கலிங்க நாட்டில்” என்றான். “எப்போது?” என்றான் அர்ஜுனன். “நாளைக்கு” என்றான் சுருதகீர்த்தி.

படிகளில் செவிலி பேசியபடி இறங்குவது தெரிந்தது. “அவன் வருகிறான்” என்றான் சுருதகீர்த்தி. “அவனும் நானும் கலிங்கத்திற்குச்சென்று…” என்றபின் அந்தச் சொற்றொடரை அப்படியே விட்டுவிட்டு பீடத்திலிருந்து இறங்கி மறுபக்கம் தெரிந்த படிக்கட்டை நோக்கி ஓடினான். படிக்கட்டில் ஒவ்வொரு படியாக அபிமன்யுவை இடைபற்றி தூக்கி இறக்கியபடி வந்த செவிலி புன்னகைத்து “இதோ உங்கள் தமையன் வந்துவிட்டார்” என்றாள். அபிமன்யு “யானையை… யானையை நான் அம்பால் அடித்து…” என்றபின் நின்று விழிவிரித்து பார்த்தான்.

“அபிமன்யூ, நாம் வெள்ளைப்புரவியில் போனோமே” என்று சொன்னபடி சுருதகீர்த்தி ஓடிச்சென்று அபிமன்யுவின் கைகளை பற்றினான். “தந்தை வந்து நம்மிடம் கேட்கும்போது நாம் வெள்ளைப்புரவியில் போவோம் என்று நான் அன்றைக்கு சொன்னேனே?” அழகிய சிறிய புருவங்கள் வளைய “வெள்ளைப்புரவியா?” என்ற அபிமன்யு வெளியே முற்றத்தை நோக்கி கைசுட்டி “நான் அங்கே வெள்ளைப்புரவியில் போவேன்” என்றான். இருவரும் உடனடியாக எழுந்த எண்ணத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் போல வாயிலை நோக்கி ஓட தலைப்பட்டனர்.

செவிலி இருவர் கைகளையும் பிடித்து நிறுத்தி “தந்தை வந்திருக்கிறாரல்லவா? அவரைப் பார்த்து வணங்கிவிட்டு செல்லுங்கள்” என்றாள். “ஆம், தந்தை” என்றபடி அபிமன்யு திரும்பி அர்ஜுனனை பார்த்தான். அவன் சிறிய வாய் சற்றே திறந்தது. கைகள் தொடை தொட்டு விழுந்தன. அர்ஜுனனை பார்த்தபடி அசைவற்று நின்றான். அர்ஜுனன் சிரித்து இரு கைகளையும் நீட்டி “வா” என்றான். செவிலியின் ஆடையைப் பற்றியபடி அபிமன்யு சுழன்று பின்னகர்ந்து அவள் ஆடைமடிப்புகளுக்குள் முகத்தை மறைத்துக் கொண்டான்.

செவிலி “தங்கள் முகம் தெரியவில்லை” என்றாள். “ஆம், நான் விட்டுச் சென்று நெடுநாட்களாகிறது” என்றபின் “வா” என்று மறுபடியும் அழைத்தான். அபிமன்யு நன்றாக திரும்பி செவிலியின் கால்களை பற்றி ஆடைக்குள் பாதியுடலை செலுத்திக்கொண்டான். சுருதகீர்த்தி “இவன் குதிரையில் வருவேன் என்று சொன்னான். பெரிய குதிரை வேண்டுமென்று சொன்னான்” என்றான். “அவனை அழைத்துவா” என்றான் அர்ஜுனன்.

சுருதகீர்த்தி திரும்பி அபிமன்யுவின் தோளைப்பிடித்து இழுத்து “வாடா, தந்தை பெரிய குதிரையை ஓட்டுவார்…” என்றான். “மாட்டேன்” என்றான் அவன். “வாடா” என்று சொல்லி அவன் இடையை சுற்றி வளைத்தான் சுருதகீர்த்தி. அபிமன்யு “மாட்டேன் மாட்டேன்” என்று சொல்லி இறுகப் பற்றிக்கொண்டான். செவிலி அவன் சிறிய தோள்களை பற்றித் தூக்கி அர்ஜுனனை நோக்கி கொண்டுவருகையில் “மாட்டேன். செவிலியன்னையிடம் செல்கிறேன். அன்னையிடம் செல்கிறேன்… மாட்டேன்” என்று கூச்சலிட்டு கால்களை உதறினான்.

அவனை அர்ஜுனன் அருகே கொண்டுவந்து அவன் மடி மீது வைத்தாள். அர்ஜுனன் அவனை தன் கைகளால் தூக்கி பற்றி மடிமேல் அமர்த்திக் கொண்டான். அவன் கைகளின் வலிமையை உணர்ந்ததும் தளர்ந்த கால்களுடன் அபிமன்யு அமர்ந்தான். “ஏன்? தந்தையை உனக்கு அச்சமா?” என்றான் அர்ஜுனன். இல்லை என்று தலை சாய்த்து தோள்களை ஒடுக்கிக் கொண்டான். அவனருகே வந்த சுருதகீர்த்தி சிரித்து “அஞ்சுகிறான்” என்றான். “அவன் சிறுவன்… அவனுக்கு வாளையும் அச்சம்.”

“நீ அஞ்சவில்லையா?” என்று செவிலி கேட்டாள். “இல்லை. நான் தந்தையைப் பார்த்ததும் எனக்கு உடைவாள் வாங்கித் தரும்படி கேட்டேன். பெரிய உடைவாள். இதோ இந்தத்தூண் அளவுக்கு பெரிய உடைவாள்” என்றான் சுருதகீர்த்தி. அர்ஜுனன் மார்பில் அபிமன்யு தன் முகத்தை சேர்த்துக் கொண்டான். அவன் தலையை மெல்ல வருடியபடி குனிந்து கண்களைப் பார்த்து “தந்தையிடம் நீ என்ன சொல்லப்போகிறாய்?” என்றான். ஒன்றுமில்லை என்று அவன் தலை அசைத்தான். “நீ என்னுடன் வருகிறாயா?” என்றான். அபிமன்யு “ம்” என தலையசைத்தான்.

“நான்… நான் வருகிறேன். நாங்கள் கலிங்கத்திற்கு போகும்போது உங்களையும் கூட்டிச் செல்கிறோம்” என்றான் சுருதகீர்த்தி. அவனை நோக்கி திரும்பிய அபிமன்யு “நான் கலிங்கத்துக்கு வரவில்லை. நான் தந்தையுடன் செல்கிறேன்” என்றான். சுருதகீர்த்தி “நானும் வருவேன்” என்றான். அர்ஜுனன் சிரித்து “கலிங்க இளவரசி என்னாவது?” என்றான். சுருதகீர்த்தி “கலிங்க இளவரசியை நாங்கள் கொல்வோம்” என்றான்.

அர்ஜுனன் சிரித்துவிட்டான். “ஏன்?” என்றான். சுருதகீர்த்தி “அவள் கெட்டவள்” என்றான். “அவள் கெட்டவள். ஆகவே நானும் கலிங்கத்திற்கு போகவில்லை. நானும் உங்களுடன் வருகிறேன்” என்றான். படிகளில் இறங்கி வரும் ஓசை கேட்டது. செவிலி திரும்பிப் பார்த்து “இளவரசர்… சுபாகுவின் மைந்தர்” என்றாள். “அவனைத்தான் எதிர்நோக்கியிருந்தேன்” என்றான் அர்ஜுனன். “இங்குதான் இருக்கிறார். எந்நேரமும் இளையோனிடம் பேசிக்கொண்டே இருக்கிறார். மூச்சு நடுநடுவேதான் ஓடுகிறது.”

அர்ஜுனன் திரும்பி நோக்கியபோது சுஜயன் சீரான நடையுடன் அருகே வந்து நின்றான். அர்ஜுனன் அவனை நோக்கியதும் அவன் தலைவணங்கி “வணங்குகிறேன் இளையதந்தையே” என்றான். “பெரும்புகழுடன் இரு” என்றான் அர்ஜுனன். கைநீட்டி அருகே அழைத்தபடி “உன்னைப்பற்றி திரௌபதி சொன்னாள்” என்றான். அவன் நாணத்துடன் புன்னகைசெய்து “நான் உங்களைப்பற்றிய கதைகளை கேட்டேன்” என்றான். அர்ஜுனன் “யார் சொன்னார்கள்?” என்றான். “ஒரு பெரிய புத்தகத்தில் படித்து என் செவிலி சொன்னார். மாலினி என்னும் மூதாட்டியும் சொன்னார்.”

“என்ன கதை?” என்றான் அர்ஜுனன். “போர்கள்” என்றான் சுஜயன். “நீங்கள் இளவரசிகளை மணந்த கதைகள்…” அர்ஜுனன் கைகளை நீட்டி அவன் சிறியகைகளைப் பற்றி அருகணைத்தான். இடைசுற்றி வளைத்து தன் விலாவுடன் இறுக்கிக் கொண்டான். குனிந்து அவனுடைய குடுமியில் முத்தமிட்டபடி “அழகாக இருக்கிறாய். உன்னைப்பார்த்தால் உன் தந்தையை இளமையில் பார்த்தது நினைவுக்கு வருகிறது” என்றான். சுஜயன் இயல்பாக வந்து அவன் தொடைகள் மேல் கைவைத்து சாய்ந்துகொண்டு “நீங்கள் அதன் பிறகு நாகர் உலகுக்கு செல்லவில்லையா?” என்றான். “இல்லை” என்றான் அர்ஜுனன். “மணிபூரகநாட்டுக்கு?” அர்ஜுனன் “அங்கும் செல்லவில்லை” என்றான்.

சுஜயன் விழிகளை உருட்டி எண்ணிநோக்கி “நாகஇளவரசரின் பெயர் அரவான்தானே?” என்று கேட்டான். அர்ஜுனன் “ஆம், அவன் இப்போது பெரிய சிறுவனாக வளர்ந்துவிட்டான் என்றார்கள்” என்றான். சுஜயன் “பப்ருவாகனனும் பெரிய சிறுவனாக வளர்ந்திருப்பான் அல்லவா?” என்றான். அர்ஜுனன் “இருவரும் படைக்கலப்பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்” என்றான். சுஜயன் “அதெல்லாம் பழையகதைகள் என்றார் என் செவிலி. நான் அங்கெல்லாம் சென்றதுபோல உணர்கிறேன்” என்றான்.

“நீ என்னைப்போல் வீரச்செயல்களை செய்யவேண்டும் என்று விரும்புகிறாயா?” என்றான் அர்ஜுனன். “இல்லை” என்று சுஜயன் சொன்னான். சிரித்தபடி “ஏன்?” என்றான் அர்ஜுனன். “நான் அரிஷ்டநேமியைப்போல் பெரிய யோகியாக மாறி வெள்ளை யானைமேல் ஏறி நெடுந்தொலைவுக்கு செல்வேன் என்றான். கைசுட்டி “அங்கே…” என்றான். அபிமன்யு “அரிஷ்டநேமி, அரிஷ்டநேமி, அரிஷ்டநேமி” என்றான். மேற்கொண்டு சொல் எழவில்லை. “இவனுக்கு நான் ஐந்துமுறை அந்தக்கதையை சொன்னேன்” என்றான் சுஜயன். “அரிஷ்டநேமியின் வெள்ளையானை!” என்றபின் அபிமன்யு பாய்ந்திறங்கி கைகளை தலைக்குமேல் தூக்கி எம்பிக்குதித்து “மிகப்பெரியது” என்றான்.

அர்ஜுனன் ஒரு கணம் திகைத்தபின் வாய்விட்டு சிரித்தபடி “இது யாருடைய பயிற்சி?” என்றான். நிமிர்ந்து பார்த்தபோது தொலைவில் நின்ற சுபகையை பார்த்தான். ஒரு கணம் அவன் உதடுகள் சுருங்கின. “உன் பெயர் சுபகை அல்லவா?” என்றான். சுபகை கால் தளர்ந்தவள் போல் சுவருடன் உடலை சேர்த்து நின்றபடி “ஆம்” என்று தலை அசைத்தாள். “உன்னை நினைவுறுகிறேன்” என்றான் அர்ஜுனன். அவள் தொண்டை அசைந்தது. இருமுறை உதடுகள் அசைந்தும் சொல்லெழவில்லை. பின்னர் அடைத்த குரலில் “என்னை நினைவுகூர மாட்டீர்கள் என்று நினைத்தேன்” என்றாள்.

“நினைவுறாத முகங்கள் நிறைய உள்ளன. ஆனால் உன் முகம் எப்படியோ நினைவில் நின்று கொண்டிருக்கிறது” என்றான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “தெரியவில்லை” என்றான். “இப்போது உன் விழிகளில் நிறைந்திருக்கும் இந்த உணர்வுகளை அன்றும் நான் கண்டதனால் இருக்கலாம்.” அவள் அழப்போவது போல் முகம் மாறினாள். பிறகு உதடுகளை இறுக்கியபடி தலை குனிந்தாள். சுஜயன் “இவர்தான் என் செவிலி. உங்கள் வீரக்கதைகளை இவர்தான் சொன்னார்” என்றான். “அந்த நூலில் இருந்து வாசித்து சொன்னார்.”

“நீங்கள் நாகர்களின் ஆழுலகு சென்று மீண்டதைப்பார்த்து நான் பயந்து கண்களை மூடிக்கொண்டபோது ஆயிரம் நாகங்களை பார்த்தேன். அவற்றின் கண்கள் விண்மீன்கள் போல் இருந்தன” என்றான் சுஜயன். அவன் தாடையைப்பற்றித் திருப்பி “நானும் நானும்” என்ற சுருதகீர்த்தி அர்ஜுனனிடம் “நானும் இவனும் நாகருலகிற்கு செல்வோம்” என்றான். “அங்கு சென்று வெள்ளைக் குதிரையில் ஏறி போர் புரிவோம்.” கைகளை விரித்து “வெள்ளையானையைவிட பெரிய வெள்ளைக்குதிரை!” என்றான்.

மயங்கியவன் போல் நின்ற அபிமன்யு மெல்ல உடல் திருப்பி சிறிய சுட்டு விரலைக்காட்டி “இரண்டு வெள்ளைக்குதிரை” என்றான். சுஜயன் சிரித்தபடி “இருவரும் போர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றான். அர்ஜுனன் “நீ நினைப்பதில்லையா?” என்றான். “இல்லை” என்றான் சுஜயன். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “அஞ்சுபவர்கள் கொல்கிறார்கள். அஞ்சாதவர்கள் இவ்வுலகிற்கு அன்பை மட்டுமே அளிக்கிறார்கள்” என்று சுஜயன் சொன்னான். அர்ஜுனன் சற்று திகைத்து உடனே முகம் மலர்ந்து சிரித்தபடி சுபகையைப் பார்த்து “இதென்ன, நீ கற்றுக் கொடுத்த சொற்களா?” என்றான்.

சுஜயன் “இல்லை, இது அந்த நூலில் எழுதப்பட்டிருந்தது. இதை திரும்பச் சொல்லும்படி நான் கேட்டேன்” என்றான். சுபகை “திரும்பத் திரும்ப நூறுமுறை ஆயிரம்முறை இந்த ஒரு வரியை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். எத்தனை முறை சொன்னாலும் இன்னொரு தடவை சொல் என்று கேட்பார்” என்றாள். அர்ஜுனன் “அப்படியா?” என்று குனிந்து சுஜயனின் தலையை அளைந்தான். “நான் நிறைய கனவுகளை கண்டுகொண்டிருந்தேன். அவற்றில் எல்லாம் எனக்கு பேரச்சமே கிடைத்தது. படுக்கையில் சிறுநீர் கழித்தேன்” என்றான் சுஜயன். சுபகை கையால் பொத்தி சிரிப்பை  அடக்கியபடி “சிறுநீர்தான் அது என ஒப்புக்கொள்ளவே ஆறுமாதமாகியது” என்றாள்.

“நேமிநாதரின் கதை வந்த போதுதான் நான் அச்சம் கொண்டிருப்பதே எனக்கு தெரிந்தது. ஒருநாள் துயின்று கொண்டிருக்கும்போது அவர் எனது கனவில் வந்தார்” என்றான் சுஜயன். அர்ஜுனன் “எப்படி?” என்றான். “ஒரு கதவு இருந்தது. அந்தக் கதவுக்கு அப்பால் யாரோ நிற்பது போல் இருந்தது. நான் சென்று அந்தக் கதவை திறந்தபோது தரையிலிருந்து மேலே உத்தரம் வரை பேருருவாக உயர்ந்து அவர் நின்று கொண்டிருந்தார். பெரியசிலை என்று தோன்றியது. ஆனால் சிலை அல்ல, மனிதராகவே இருந்தார். குனிந்து என்னைப் பார்த்து அஞ்சாதே என்று சொன்னார்.”

சுஜயனின் கண்கள் குழந்தைக்குரியவையாக இருக்கவில்லை. “அவரது உள்ளங்கை என் தலையைவிட பெரிதாக இருந்தது. என் தலையைத் தொட்டு எதற்கும் அஞ்சாதே என்று சொன்னார். அஞ்சமாட்டேன் என்று சொன்னேன். அப்படியென்றால் இந்தக் கதவை மூடு என்றார். நான் திரும்ப கதவை மூடிவிட்டேன். ஆனால் கதவுக்கு அப்பால் அவர் இருப்பதை உணர்ந்தேன்.” அர்ஜுனன் வியப்புடன் சுபகையை பார்த்தான். சுஜயன் “அதன்பின் எப்போதும் அந்த மூடிய கதவே நினைவுக்கு வரும். அதற்கப்பால் அவர் நின்றிருப்பார்.” அர்ஜுனன் “அரியது! இத்தனை முழுமையான கனவு குழந்தைகளுக்கு வருமென்பதே வியப்பாக இருக்கிறது” என்றான்.

சுபகை “குழந்தைகளுக்குத்தான் தெளிவான பெரிய கனவுகள் வரும் என்பார்கள். திடீரென்று ஒரு நாள் போர்களைப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார். வலிப்பு வந்துகொண்டிருந்ததும் நின்று உடல் தேறத்தொடங்கியது. ஊழ்கத்தில் நின்றிருக்கும் நேமிநாதரின் சிலை ஒன்று வேண்டுமென்றார். காவலன் ஒருவனிடம் சொன்னேன். அருகநெறி சார்ந்த வணிகர் ஒருவரிடமிருந்து சிறிய மரச்சிலை ஒன்றை வாங்கிக் கொண்டு வந்தான். அதை தன் தெய்வம் என உடன்வைத்திருக்கிறார்” என்றாள்.

“என்னிடம் அந்த சிலை இருக்கிறது” என்று சுஜயன் சொன்னான். எழுந்து இருகைகளையும் தொங்கவிட்டு தலை நிமிர்ந்து நின்றபடி “இப்படி நின்றிருக்கும் சிலை” என்றான். அபிமன்யு அவனைத் தொட்டு உலுக்கி “மூத்தவரே, மூத்தவரே, அவருடைய தோள்கள் மிகப்பெரியனவா?” என்றான். சுஜயன் “ஆம், மிக மிகப் பெரிய தோள்கள்” என்றான். “பெரிய தந்தையார் பீமனைவிட பெரிய தோள்களா?” என்றான் அபிமன்யு. “மண்ணில் எவருடைய தோள்களைவிடவும் இரு மடங்கு பெரியவை என்று நூல்களில் இருக்கின்றது” என்றான் சுஜயன். பின்பு சுபகையிடம் திரும்பி “இல்லையா?” என்றான். “ஆம்” என்றாள் சுபகை.

“அப்படியென்றால் அவர் கதைப்போரில் பெரிய தந்தையாரை தோற்கடித்து விடுவாரா?” என்று அபிமன்யு கேட்டான். “அவர் எவரிடமும் போர் புரிய மாட்டார். ஏனென்றால் மண்ணில் எவரும் அவரிடம் போர் புரியும் ஆற்றல் கொண்டவரல்ல” என்று சுஜயன் சொன்னான். அர்ஜுனன் “எந்தநூல் அது?” என்றான். சுபகை “நேமிவிஜயம் என்று ஒரு நூல் உள்ளது. அதை ஒரு வணிகரிடம் இருந்து வாங்கி வந்து வாசித்து கதை சொன்னேன்” என்றாள். “துவாரகை விட்டு சென்ற இளவரசர் அரிஷ்டநேமி பன்னிரு மலைகளில் ஊழ்கம் இயற்றி ரைவத மலையின் கற்சரிவுக்கு வந்து ஊழ்கத்தில் இருந்து பெருநிறைவை நோக்கிச்சென்றதைப் பற்றி அந்த நூல் சொல்கிறது.”

அர்ஜுனன் “அதில்தான் ராஜமதிதேவி யக்ஷியான கதை உள்ளதா?” என்றான். சுபகை “அம்பிகைதேவியும் கோமத யக்ஷனும் அவரது குகையின் இருபக்கமும் நின்றபடியே ஊழ்கம் செய்து அவருடன் விண்ணுலகம் சென்றனர். பதினெட்டு மலைகளில் பதினெட்டு சித்திகளை நேமிநாதர் அடைந்தார். முதல் மலையில் தாமசம் என்னும் கரிய எருதை கொன்றார். விழிகள் எரியும் நாகங்களையும் அனல்சிறகுகள் கொண்ட பறவைகளையும் கூருகிர்கொண்ட சிம்மங்களையும் நூறுகரங்கள் கொண்ட பாதாளதெய்வங்களையும் இறுதியில் மாரனையும் அவர் வென்றார்” என்றாள்.

சுஜயன் எழுந்து “பதினெட்டாவது தெய்வம் நேமி என்று பெயர் கொண்டது. அவரது ஆடிப்பிம்பம் போலவே அது இருக்கும்” என்றபின் கண்களை விரித்துக்காட்டி “அவர் கொள்ளும் ஆற்றலை அவரிடமிருந்தே அதுவும் கொள்ளும்” என்றான். “அதெப்படி?” என்றான் அர்ஜுனன். “ஏன் என்றால் அவர் எவரிடமும் போரிடவில்லை. போரிட்டிருந்தால் தாமசம் என்னும் முதல்எருதிடமே அவர் தோற்றிருப்பார். அவர் எதைப்பற்றியும் அஞ்சவில்லை. ஒருகணமும் விழிதிருப்பாமல் அவற்றின் விழிகளைப் பார்த்தபடி புன்னகையுடன் கைவிரித்து அணுகிச் சென்றார். முற்றிலும் அச்சமற்றவர்களை வெல்லும் ஆற்றல் தெய்வங்களுக்கு இல்லை. எனவே அவை தோற்று பின் வாங்கின.”

அர்ஜுனன் திரும்பி சுபகையை நோக்கி “ஆடிப்பாவையை அவர் எப்படி வென்றார்?” என்றான். ஊடே புகுந்து “ஆடியை வெல்வதற்குரிய வழி என்பது ஆடியிலிருந்து விலகிச் செல்வதுதான். விலகும் தோறும் சுருங்கி ஆடிக்குள்ளேயே மறையாமல் இருக்க ஆடிப்பாவையால் முடியாது” என்றான் சுஜயன். “தீயாக வரும் தெய்வத்திடம் அவர் குளிர்ந்திருந்தார். காற்றாக வந்தபோது அவர் பாறை போல் அசையாமல் இருந்தார். வஜ்ராயுதமேந்தி வந்த தெய்வங்களுக்கு முன் வெண்முகில் போல் நின்றார். இருளாக வந்து சூழ்ந்த தெய்வங்கள் முன் ஒளியாக இருந்தார்” என்றான்.

அர்ஜுனன் “மனப்பாடமே செய்திருப்பான் போலிருக்கிறதே” என்றான். சுபகை “அந்த ஒரு நூலை நான்மட்டும் பத்து முறைக்குமேல் சொல்லியிருக்கிறேன்” என்றாள். அர்ஜுனன் சுஜயனிடம் “ஒருமுறை என்னுடன் வா. நாம் ரைவத மலைக்குச் சென்று நேமிநாதர் விண்ணேகிய அக்குகையை பார்ப்போம். அங்கு அவருக்கு நின்ற பெருங்கோலத்தில் கருங்கல்லில் சிலை இருக்கிறது” என்றான். “நீங்கள் பார்த்தீர்களா?” என்றான் சுஜயன். “ஆம், பார்த்தேன். அத்தனை அருகர் சிலைகளும் ஒன்று போல் இருக்கும். காலடியில் சங்கு முத்திரை கொண்டவர் நேமிநாதர்.”

“ஆம், அவர்கள் எந்தப் படைக்கலமும் ஏந்துவதில்லை. எந்த அடையாளமும் சூடிக் கொள்வதில்லை” என்று சுஜயன் சொன்னான். அபிமன்யு “நானும் வருவேன்” என்றான். சரிந்திறங்கி அர்ஜுனனின் கால்களின் நடுவே நின்று கைகளை அவன் தொடைகளில் வைத்தபடி “நான் பெரிய வெள்ளைக்குதிரையில் ஏறி ரைவத மலையில் சுழன்று ஏறுவேன். இதோ இப்படி வேகமாக சுழன்று ஏறுவேன்” என்றான். சுருதகீர்த்தி “நானும் வருவேன்” என்றான். அர்ஜுனன் “நாம் அனைவரும் செல்வோம்” என்றான்.

சுருதகீர்த்தி “மூத்தவர் இருவரையும் நாம் அழைத்துச் செல்ல வேண்டியதில்லை” என்றான். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “அவர்கள் கெட்டவர்கள். அவர்கள் வேண்டுமென்றால் கலிங்கத்திற்குப் போய் கலிங்க இளவரசியை மணம் செய்து கொள்ளட்டும்.” அர்ஜுனன் “கலிங்க இளவரசி உனக்கு வேண்டியதில்லையா?” என்றான். சுருதகீர்த்தி குழப்பம் கொண்டு சுபகையையும் அர்ஜுனனையும் மாறி மாறி பார்த்தபின் “நானும் கலிங்க இளவரசியை மணம் கொள்வேன்” என்றான். “நானும் நானும்” என்று அபிமன்யு குதித்தான். “என்ன நானும்?” என்றான் அர்ஜுனன்.

அபிமன்யு கைகளை விரித்து “கலிங்க இளவரசி” என்றான். கையை தலைக்கு மேல் தூக்கி “இவ்வளவு பெரிய இளவரசி” என்றான். “இளவரசி என்று இவர்கள் எதை சொல்கிறார்கள் என்றே தெரியவில்லையே. ஏதாவது எருமையோ பசுவோ ஆக இருக்குமோ?” என்றான் அர்ஜுனன். செவிலி வெடித்து நகைக்க வாய் பொத்தி சுபகை சிரித்தாள்.

சுஜயன் திரும்பி நோக்கி “செவிலியன்னை உங்கள் முன்னால்தான் இப்படி நகைக்கிறார்கள்” என்றபின் முகம் மலர்ந்து “அழகாக இருக்கிறார்கள்” என்றான். அர்ஜுனன் “அவள் நகைப்பதில்லையா?” என்றான். “நகைப்பார், உங்களைப்பற்றிய வரிகள் வரும்போது” என்றான் சுஜயன். சுபகை நாணி பின்னால் விலகிக்கொண்டாள். சுஜயன் அவளை நோக்கி புன்னகைத்து “நாணுகிறார்கள்” என்றான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைஅனந்தம் அரவிந்தம்
அடுத்த கட்டுரைஉபியும் பிகாரும்