அட்டப்பாடி, திரிச்சூர்,ஆதிரப்பள்ளி, வால்பாறை

 

மழைப்பயணம் போய் ரொம்பநாளாகிறது. மழைப்பயணமாக உத்தேசிக்கப்பட்ட சதாரா பயணத்தில் மழை இல்லை. நடுவே கிருஷ்ணன் நண்பர்களுடன் பீர்மேடு வரை ஒரு மழைப்பயணம் போய் மீண்டார்.ஆகவே திரிச்சூர் பயணத்தை மழைப்பயணமாக அமைக்கலாம் என்றார் அரங்கா.

கோவையிலிருந்து நானும் அரங்கசாமியும் திருப்பூர் கதிரும் அரங்கசாமியின் காரில் 21 ஆம்தேதி அதிகாலை கிளம்பினோம். வழியில் கிருஷ்ணனையும் மணிகண்டனையும் ராஜமாணிக்கத்தையும் ஏற்றிக்கொண்டோம்.

 

ஆரம்பமே பிரச்சினை. நான் தங்கியிருந்த விடுதியில் செல்பேசியை மறந்துவைத்துவிட்டேன். அதை ஓலா டாக்ஸியைச் சொல்லியனுப்பி எடுத்துவரவேண்டியிருந்தது. அரங்காவின் காரில் மாற்றுச் சக்கரம் பழுது. அதை செப்பனிடமுடியாது என்றனர். இன்னொன்று வாங்கவேண்டியிருந்தது

ஆகவே காலை எட்டு மணிக்கு அட்டப்பாடியில் இருக்கவேண்டிய நாங்கள் பதினொருமணிக்குச் சென்று சேர்ந்தோம். அங்கே நண்பர் ஆனந்த் கட்டியுள்ள தியானமையம் சென்றோம். அழகிய தங்குமிடம் அது. அடர்காட்டுக்கு அருகே

அருகே ஓடும் சிறுவாணி ஆற்றில் அரங்கா மட்டும் குளித்தார். கலங்கல் நீர் ஓடியது. அதன்பின் ஒரு சின்ன மலையேற்றம். புல்வெளி ஒன்றில் கொஞ்சநேரம் இருந்தோம். மாலை ஐந்து மணிக்கு எனக்கு திரிச்சூரில் இருக்கவேண்டும். கொச்சுபாவா நினைவுச்சொற்பொழிவுக் கூட்டம்

ஒருமணி வரை நேரம்போனது தெரியவில்லை. அதன்பின் அடித்துப்புரண்டு கிளம்பினோம். அவசரத்தில் கதிர் காரை ஓடைக்குள் இறக்கிவிட்டார். தள்ளிமேலே ஏற்றமுயன்றோம். முடியவில்லை. ஜீப் வரவழைத்து கயிறு கட்டி இழுத்துத் தூக்கினோம். வழியே சென்றவர்கள் எல்லாரும் வந்து தூக்கிவிட்டனர்

அட்டப்பாடியில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்புகையில் மணி மூன்று. புயல்வேகமாக ஓட்டினோம். வழியில் பேருந்துகளை லாரிகளை சீறிக்கடந்தோம்.ஆறரை மணிக்கு திரிச்சூர். ஐந்துமணிக்கே நிகழ்ச்சியைத் தொடங்கிவிட்டனர்.

கே.வேணு வந்திருந்தார். அவர் என் ‘நூறுநாற்காலிகள்’ சிறுகதையைப்பற்றிப் பேசினார். கேரள நக்சலைட் இயக்கத்தின் பெருந்தலைவர். ஒரு வாழும் தொன்மம். அவர் என்னைப்பற்றிப் பேசியதை கேட்க நான் இருக்கவில்லை.

வேறு மூவர் நூறுநாற்காலிகளைப்பற்றி பேசிவிட்டிருந்தனர். நான் செல்வதற்காக கால்வாசிப்பேர் வெளியே காத்து நின்றிருந்தனர்.

மேடைக்கு நேராகவே சென்று ஏறினேன். குளிக்கவில்லை.ஆடைமாற்றவில்லை. வியர்வையும் அழுக்குமாக. அதைவிட கஷ்டம் பேசுவதற்கு எதையுமே தயாரித்துக்கொள்ளவில்லை. தலைப்பே அங்கே போனபின் நினைவுக்கு வந்தது.

என் வாழ்க்கையில் மைக் முன்னால் நின்றபின் நான் பேச்சைப்பற்றி எண்ணியது அதுவே முதல்முறை. ‘எழுத்து சந்திக்கும் சவால்கள்’. பேசப்பேச சரியாகவே வந்துவிட்டது. நல்ல உரை என்றனர். ஆனால் இந்த ஆபத்தை இனி வரவழைத்துக்கொள்ளமாட்டேன்
IMG_20151121_124250

 

கூட்டம் எட்டரைக்கு முடிந்தது. ஆற்றூர் ரவிவர்மாவைச் சந்திக்கலாமென்று கிளம்பிச்சென்றோம். கேரளாவில் கவி வனச்சூழியல் மையத்தில் பணியாற்றிய பஷீர் முதல் கவி பயணத்துக்குப்பின் நெருக்கமான நண்பராக மாறியிருந்தார். ஓய்வுபெற்று திரிச்சூரில் வசிக்கிறார். அவரும் கூடவே வந்தார். நல்ல வாசகர்.

வீட்டில் ஆற்றூர் இருந்தார். உற்சாகமான குழந்தைபோல. ஆனால் சமீபத்தைய நோயுறலுக்குப்பின் நினைவு சரியாக நிற்கவில்லை. ஒவ்வொன்றையும் பலமுறை திரும்பச் சொல்லவேண்டியிருந்தது

ஆகவே உணர்ச்சிகள் பலமுறை நிகழ்ந்தன.நான் வெண்முரசு எழுதுவதைப்பற்றியே பலமுறை வியந்து மகிழ்ந்தார். அவரைப்பார்த்து ஒருவருடமாகிறது. ஒரு காலத்தில் என் வீடு போலிருந்த இடம். 1986ல் அதை அவர் கட்டியபோது நான் சென்றிருக்கிறேன். லாரி பேக்கர் பாணியில் கட்டப்பட்டது. செந்நிறமான அழகிய கட்டிடம்

மலரும் நினைவுகள். 1986ல் அந்த திண்ணையில் சுந்தர ராமசாமியும் நானும் ஆற்றூரும் அமர்ந்து மழையைப்ப்பார்த்தபடி விடிய விடிய கட்டன் சாயா குடித்தபடி பேசியிருக்கிறோம். ஜே ஜே சிலகுறிப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்ட காலம் அது.

கெ.வேணு

ஆற்றூர் கம்பராமாயணத்தை மொழியாக்கம் செய்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் செய்யுட்கள் மீதி என்று சொன்னார். யுத்தகாண்டம் கடந்துவிட்டார்

ஒன்பதரை மணிக்குக் கிளம்பி அறைக்கு வந்தோம். ஒய். எம்.சி.ஏ விடுதி. விடுதிக்கு முன் ஒரு உணவகம். அங்கே சாப்பிட்டோம். அந்த பகுதியில்தான் கவின்கலை கல்லூரி, சாகித்ய அக்காதமி, நாடக அக்காதமி என ஏகப்பட்ட கலைமையங்கள் இருந்தன. ஆகவே அப்பகுதியில் எப்போதுமே கலைஞர் கவிஞர் நடமாட்டம் அதிகம்

IMG_20151121_124256
சாயங்காலமாகையாலும் தூறலிருந்தமையாலும் பெரும்பாலும் அனைவருமே கலைமனநிலையில் இருந்தனர். ஒரு கவிஞர் கெட்டவார்த்தை பேச பெண்கள் சிலர் சாப்பிடாமலேயே பாய்ந்து வெளியேறினர். பயப்படவேண்டாம், கவிஞர்தான் என பரிமாறுபவர் எங்களை ஆறுதல்படுத்தினார்

மழையில்லை, தூறல் மட்டுமே இருந்தது. நீண்ட பயணம் அளித்த களைப்பு. உடனே தூங்கிவிட்டோம். ஒய் எம் சி ஏ அறை என்றாலும் மலிவு அல்ல. ஏஸி உண்டு. தேவையில்லை என்றாலும்

IMG_20151122_105954
மறுநாள் காலையில் கிளம்பி நேராக ஆதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்றோம். மழைக்காலத்தில் ஆதிரப்பள்ளி ஒரு பெரிய கொந்தளிப்பு. புகையாக நீர்.

வால்பாறைக்கு வரும் வழியில் ஓர் ஓட்டலில் மீனும் சோறும் சாப்பிட்டோம். இரு ஆத்மாக்கள் சுத்த சைவம். வால்பாறை மழைமுகிலால் முழுமையாக மூடப்பட்டிருந்தது. குளிரின் நிறம் வெண்மை என்று நினைத்தேன்

பேசிக்கொண்டே வந்தோம். அவ்வப்போது நான் கொஞ்சம் தூங்கிவழியவும் செய்தேன். இப்போதெல்லாம் நீண்ட தூரக் கார்ப்பயணங்கள் கழுத்தெலும்புத்தேய்வை பாதித்து கொஞ்சம் தலைச்சுற்றலை அளிக்கின்றன

 

குளிரில் விரைத்துக்கிடந்த ஆளியாறு அணைவழியாக பொள்ளாச்சி வந்தோம். இரவு எட்டரை மணிக்கு எனக்கு நாகர்கோயிலுக்கு ரயில். படுத்து தூங்கிவிட்டேன். மதுரையைக் கடக்கும்போது ரயில் மழையால் அறைபட்டு ஓலமிட்டது. மழையினூடாக நாகர்கோயில் வந்தேன்

அரங்கசாமி மழைக்காகவே வருவதாகச் சொன்னார். நாங்கள் சென்ற எங்குமே பெரிய அளவில் மழை இல்லை. கோவையில் நல்ல மழை.

IMG_20151121_183933

அக்காமலையின் அட்டைகள்

படங்கள்

முந்தைய கட்டுரைமுன்னுரையியல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 72