தோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்களின் இந்தியப் பயணத்தின் போது இரண்டு மின்னஞ்சல் அனுப்பினேன் இத்துடன் உங்கள் கருத்துக்களை பற்றிய ஞானியின் எதிர்வினை கட்டுரையை அனுப்பியுள்ளேன்.உங்களின் இணைய தளத்தில் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்.

நன்றி,

கு.முத்துக்குமார்
தமிழோசை
கோயம்புத்தூர்

***

1
நண்பர் ஜெயமோகனுக்கு

ஜெயமோகன் தன் இணையதளத்தில் ஒரு வாசகரின் கேள்விக்கு பதில்
எழுதும் போது ‘திராவிட சமயம்’ ஆசிரியர் தெய்வநாயகம் அவர்களோடுஎன்னையும் தொடர்புபடுத்தி சிலவற்றை எழுதுகிறார். ஒருவரைப் பற்றி எழுதும் விமர்சனத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் விமர்சனம் என்பது மரியாதைக் குறைவாகவோ அவதூறு கிளப்புவதாகவோ இருப்பது எந்த வகையிலும் எனக்கு உடன்பாடில்லை. வழக்கமாக என்னைப் பற்றி நண்பர் எழுதும் விமர்சனத்திற்கு நான் பதில் எழுதுவதில்லை. ஆனால் அவதூறுக்கு நான் பதில் எழுதாமல் இருக்க முடியாது. அதுவும் தன் சவாலுக்கு எவரும் பதில் தரலாம் என்கிறார்.

ஜெயமோகன். சவால் விடுவது ஒரு சண்டியருக்கு பொருத்தமாக இருக்கலாம். எப்பொழுதும் மரியாதையோடு என்னால் மதிக்கப்படுகிற நண்பர் ஜெயமோகன் இப்படிச் சவால் விடுவதை என்னால் ஏற்கமுடியவில்லை. விமர்சனம் எழுதட்டும், அது இலக்கியத்தையோ, மெய்யியல் முதலியவற்றையோ அது வளர்ப்பதாக
இருக்கட்டும். பிறரைத் தாக்கும் நோக்கத்தோடு, அவதூறு படுத்தும்
நோக்கத்தோடு அதனால் தன்னை விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு ஒருவர் எழுதுவது இலக்கியம் முதலியவற்றை வளர்ப்பதற்கு பதிலாக மனித உறவை, மனிதர்களை நாசப்படுத்துவதாகவே இருக்க முடியும். ஒருவகையில் இதுவும் மனித உரிமை மீறல். ஒரு எழுத்தாளர் இதைச் செய்யக் கூடாது.

ஆசிரியர் என என்னை மதித்து ஜெயமோகன் பல சமயங்களில்
எழுதியிருக்கிறார். சில நூல்களை ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி
ஆகியவர்களோடு எனக்கும் சேர்த்து காணிக்கையாக்கி இருக்கிறார். இது
குறித்தெல்லாம் நான் என்றும் பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை. எண்பதுகளின் தொடக்கத்தில் அவரும், நானும் நெருக்கமாகப் பழகி இருக்கிறோம். அவருடைய சில படைப்புகளை ‘நிகழ்’ இதழில் நான் வெளியிட்டு இருக்கின்றேன். இதற்காகவும் நான் அவரிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவரது படைப்புகளும், சிந்தனைகளும் தமிழ்ச் சூழலில் பரவலாக வேண்டும் என்பதைத்தவிர எனக்கு வேறு நோக்கம் எதுவுமில்லை.

அவரது ‘விஷ்;ணுபுரம்’ , ‘பின்தொடரும் நிழலின் குரல்’ ஆகிய நாவல்கள் பற்றியும் சிறப்பாகவே எழுதி இருக்கிறேன். அவரை இந்துத்துவவாதி என்று நண்பர்கள் இகழ்ந்து உரைத்தபோது நான் அதை மறுத்து இருக்கிறேன். ‘பின்தொடரும் நிழலின் குரலில்’ மார்க்சியர் பற்றி அவர் தந்த விமர்சனங்களை நான் ஏற்றிருக்கிறேன். இறுதியாக ‘கொற்றவை’ நாவல் குறித்து தமிழ்நேயம் இரண்டு இதழ்களில் நண்பர்களின் கட்டுரைகளை விரிவாக வெளியிட்டு இருக்கிறேன். சிலப்பதிகாரத்தின் மீது எனக்கு பெரிதும் மரியாதை உண்டு. இளங்கோவின் குரலோடு இன்னும் பலரது குரலும் சிலம்பு கதையை பல முனைகளில் விரித்துச் செல்வதை நான் வரவேற்கிறேன். இனித் தமிழ்ப் பேராசிரியர் என்று தம்மைக் கருதிக் கொள்வோர், நண்பர் ஜெயமோகனின் கொற்றவையைப் படிக்காமல் இருக்க முடியாது என்றும் எழுதினேன்.

இவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் ஜெயமோகன்
என்னைப் பற்றி விமர்சனம் செய்யக்கூடாது என்பது அன்று. அவரது வளர்ச்சியை நான் பெரிதும் வரவேற்கிறேன். சுந்தர ராமசாமி முதலிய பெரியவர்களை அவர் தொடக்க காலத்திலிருந்தே தொடர்ந்து கடந்து வளர்ந்து வருகிறார் என்பதும் என் மதிப்பீடு. இவற்றையெல்லாம் சொல்லி என்னைத் தாக்க வேண்டாம் என்று அவரிடம் நான் முறையிட மாட்டேன். என்னைப் பற்றியல்லாமல் வேறு எவரைப்பற்றியும் அவர்களை இழிவுபடுத்தும் முறையில் (அ) அவதூறு கிளப்பும் முறையில் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதுதான் என் நோக்கம்.

இப்படி அவதூறு கிளப்புவதில் ஜெயமோகனின் தன்முனைப்பு மட்டுமல்ல. ஆணவமும் வெளிப்படுகிறது. தன்முனைப்பைக் கூட நான் மதிக்கிறேன். ஒருவரின் ஆணவம் அருவருப்பாகத்தான் இருக்கிறது.அடுத்து இனி, அவரது சில கருத்துக்களுக்கு சுருக்கமாகப் பதில்தரவேண்டும். அறிஞர். தெய்வநாயகம் என் மரியாதைக்குரிய நண்பர்.இந்துத்துவத்தோடு பல ஆண்டுகளாக அவர் போராடுகிறார். ஜெயேந்திரரையும் அவரைச் சார்ந்த பிராமணரையும் அவர் கடுமையாகச் சாடுகிறார். விவாதத்திற்கு அழைக்கிறார். அவரது வருணாசிரம எதிர்ப்பு எனக்கு பெரும்அளவு உடன்பாடு.அவரது போராட்டத்தோடு உடன் வரவேண்டியவர்களில் பெரும்பான்மையோர் வரவில்லை. இதுகுறித்து எனக்கு வருத்தம் உண்டு. முதன்மையாக அவரது போராட்ட உணர்வை நான் பெரிதும் மதிப்பதோடு இதற்காக அவரோடு ஒத்துழைக்கவே விரும்புகிறேன்.

 

அவரது நடைமுறைகள் சிலவற்றோடு எனக்கு உடன்பாடு இல்லை. இதுபற்றி அவரும் அறிவார். இப்படி வாதிற்கு அழைத்து பிராமணீயத்தை  அழிக்கமுடியாது. பிராமணீயத்தோடு, பிராமணர் அல்லாதோரும்ஒத்துச் செயல்படுகிறார்கள். வெறும் கருத்தியல் தளத்தில் மட்டும் அதை எதிர்த்து போராடுவது போதாது. இப்படியும் அவரோடு பேசுகிறேன்.

3

அறிஞர். தெய்வநாயகம் தோமாவழிக் கிறித்துவம் பற்றி மிகுந்த
ஈடுபாட்டோடு பேசுகிறார். வள்ளுவத்தினுள்ளும் சைவ, ணவத்தினுள்ளும் இன்னும் இந்திய தத்துவம் சிலவற்றினுள்ளும் தோமாவழிக் கிறித்துவம் பற்றி மிகுந்த நம்பிக்கையோடு எழுதுகிறார். இக்கருத்து எனக்கு உடன்பாடு இல்லை.

தாமஸ் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கலாம். இதற்கான வரலாற்று ஆதாரங்கள் நம்பத் தகுந்த முறையில் இல்லை. அன்றியும் திருக்குறள் முதலியவற்றின் எழுச்சிக்கு தாமஸ் முனிவர்தான் ஒரே காரணம் என்பதும் போதுமானதென தோன்றவில்லை. அதேசமயம் ஐரோப்பிய கிறித்துவத்தின் ஆதிக்க உணர்வு குறித்து தெய்வநாயகம் கூர்மையாகச் சாடுகிறார். தோமாவழிக் கிறித்துவத்தில் ஆதிக்கத்தை அவர் பார்க்கவில்லை. அண்மைக்காலத்தில் இயேசுவின் கொள்கைகளுக்குள் தனியுடைமை எதிர்ப்பை தெய்வநாயகம் முன்நிறுத்துகிறார்.

மதம் என்பதையும், சமயம் என்பதையும் கூட இப்பொழுது வேறுபடுத்திப்பேசுகிறார். மேலும் ஒன்று, பெரியார், அம்பேத்கர் ஆகியவர்களின் நாத்திகத்தை வரவேற்கிறார். சமணம், பௌத்தம் ஆகியவற்றின் நாத்திக கருத்தியலோடு தனக்குள்ள உடன்பாட்டையும் வேறு சில கூறுகளில் அவர்களோடு தனக்குள்ள மாறுபாட்டையும் எடுத்துரைக்கிறார். தொடக்ககால கிறித்துவத்தின் பொதுமைக் கூறுகளை பாராட்டுகிறார். கத்தோலிக்கத் திருச்சபையைச் சாடுகிறார். தான் இந்துவாக பிறந்ததையும், பின்னர் கிறித்துவத்துக்கு மாறியதையும் பின்னர் சிலஅனுபவங்களோடு திருச்சபையை விட்டு வெளியேறியதையும், தற்பொழுது மதச்சார்பு என தனக்கு எதுவும் இல்லை என்று பேசுகிறார். இவற்றையெல்லாம் தந்திரங்கள் என்று என்னால் கருதமுடியவில்லை.

எனினும் இயேசு தேவகுமாரன் சிலுவையில் தன்னை பலியிட்டுக்
கொண்டார். மீண்டும் உயிர்த்தெழுந்தார். மனித பாவங்களுக்கு கழுவாய் தேடினார். இப்படி இயேசுவின் வாழ்வை முழுமையாக அவர் நம்புகிறார். அதுமட்டுமல்ல இயேசு சார்ந்த இந்த பிம்பத்தை அவர் வள்ளுவத்தினுள்ளும் சைவம், வைணவம் ஆகிய சமயங்களின் உள்ளும் காண்கிறார். இதுபற்றி மிக அழுத்தமாக பேசுகிறார். சிவஞானபோதம் இதற்கு ஆதாரம் என்கிறார். இவ்வகை கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இயேசு மனித சமூகத்தின் மேன்மைக்காக உயிர்த்தியாகம் செய்தார் என்பது வரலாறு இல்லை என்றே வைத்துக் கொண்டாலும் இயேசுவைப் பற்றிய இவ்வகையான பிம்பம் எனக்கு உடன்பாடு.

இயேசு மட்டுமல்லாமல் வரலாற்றுக் காலம் முழுவதும் மனித சமூகத்தின் மேன்மைக்காகத் தியாகம் செய்து கொண்டவர்களை இவ்வகை பிம்பத்தினுள் காணமுடியும்

4

 

இந்திய ஞானமரபு குறித்து ஜெயமோகன் விரிவாக எழுதுகிறார். இந்திய
ஞானமரபை இந்து ஞான மரபு என்று அவர் சுருக்கிப் பார்க்க மாட்டார் என்றே நான் நம்புகிறேன். இந்திய ஞானமரபுக்குள் மகாவீரர், புத்தர் என்று பலரைத்தொகுக்க முடியும். சாங்கிய முதலிய தரிசனங்களையும் உள்ளடக்க முடியும். சார்வாகமும் இந்திய மரபில் ஆற்றல்மிக்க ஒரு கூறு. வேதம் சார்ந்த வைதீக மரபினுள்ளும் வைதீகத்தை சாடும் கருத்தியலுக்கும் இடமுண்டு. இவ்வகைப் போக்கு முதலியவற்றை மறுத்து இந்திய ஞான மரபு என்பதை வேதங்களுக்குள் மட்டும் வைத்துக் காண்பதற்கு அறவே இடமில்லை . இவ்வகையான இந்திய ஞானமரபினுள் திராவிடர்க்கு ஃ தமிழர்களுக்கு ஒரு
இடத்தை எவரும் மறுக்க வேண்டியதும் இல்லை. பார்ப்பனியம் என்பதனுள்ளும் இடதுசாரிப் பார்ப்பணியம் என்றும் பேசுவதற்கு இடமுண்டு. இந்துமதம் என்பதும் ஒன்றை மற்றது மறுப்பதான எத்தனையோ கூறுகளோடுதான் இயங்குகிறது.இப்படி எல்லாம் கருதும் என்னை இந்திய ஞானமரபுக்கு எதிரில் நிறுத்தி வைத்துப்பார்க்க வேண்டியதில்லை

இனித் தமிழ் மெய்யியல் பற்றி சிலவற்றை இங்கு நான் சொல்ல வேண்டும். தமிழ் மெய்யியலின் பல்லாயிரமாண்டு தொன்மை குறித்துப் பேசுகிறேன். குமரிக்கண்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் குறித்து நம்பிக்கையோடு இதுவரை நான் பேசியது இல்லை. குமரிக்கண்டம் என்பது ஒரு ஐதீகம் என்று கொற்றவையிலும் ஜெயமோகன் எழுதுகிறார். தமிழரின் தொன்மையை இரண்டாயிரமாண்டு கால வரலாற்றோடு சுருக்கிப் பார்க்க முடியாது. ஹரப்பாநாகரிகத்தோடு தமிழ் மரபை, தமிழர் வரலாற்றை இணைத்துப் பார்க்க முடியும். இந்திய நாகரிகம் என்று சொல்லப்படுவதன் மேலடுக்கு ஆரியம் என்றே வைத்துக் கொண்டாலும் அடித்தளம் முழுவதும் திராவிட நாகரிகம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஹரப்பா நாகரிகம் மேற்கிலுள்ள நாகரிகங்களோடு உறவு கொண்டிருந்தது என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு. (இயேசுநாதரைக் கூடதிராவிடர் என்றே தெய்வநாயகம் குறிப்பிடுவதை நான் மறுக்கவில்லை. மற்றபடி அவர் தரும் ஆதாரங்கள் பற்றி நான் நம்பிக்கையோடு பேசமுடியாது. காரணம் அவை பற்றிய படிப்பறிவு எனக்குக் குறைவு. நம்பிக்கை மட்டுமே வைத்துக் கொண்டு பேசுவது தகாது என்பது பற்றிய உணர்வும் எனக்கு உண்டு).

மேலும் ஒன்று. ஆரியர் வருகை, சமஸ்கிருத உருவாக்கம் பற்றிய
ஆய்வுகள் இன்னும் தொடர்வதாகவே நான் அறிகிறேன். சமஸ்கிருத
உருவாக்கத்தினுள் தமிழருக்கும் பங்கு உண்டு. சமஸ்கிருதம் பற்றி, அதன் பல்லாயிரமாண்டு தொன்மைப் பற்றி, சரஸ்வதி நாகரிகம் பற்றி இந்துத்துவ வாதிகள் விடாப்பிடியாகச் செய்யும் கதை அளப்புகளோடு எனக்கு மரியாதை இல்லை. வேதங்களினுள்ளும் பிற்காலத்தில் செருகப்பட்டதுதான் புரு~ சூக்தம் என்று அம்பேத்கர் ஆராய்ந்து உரைப்பது எனக்கு உடன்பாடு. ஆரியர் என்பது ஒரு இனமா? இல்லையா? என்பது பற்றி நான் உறுதியாக எதுவும் சொல்லமுடியாது. இவை பற்றியெல்லாம் நண்பர் ஜெயமோகனுக்கு உறுதியானகருத்துக்கள் உண்டு என்றால் நான் மேலும் தெரிந்து கொள்ளவே விரும்புகிறேன்.

‘இந்தியா’ என்று பேசுவதிலும் உள்ள பொருத்தப்பாடு பற்றி இங்கு
பேசவேண்டுவதில்லை. இந்தியா என்பது ஆங்கிலேயர் தம் தேவைக்காக உருவாக்கிய கருத்து. இது யார் யாருக்கோ உடன்பாடாக இருக்கலாம். வேறு பெயர் என்று சொல்வதற்கு இல்லாததால் நானும் இப்படிக் குறிப்பிடுகிறேன். ஒவ்வொரு முறையும் மேற்கோளை பயன்படுத்துவதற்கும் இல்லை. தமிழ் மெய்யியல், தமிழ் வரலாறு, தமிழரின் தொன்மை பற்றியெல்லாம் எனக்கு பெருமளவில் நம்பிக்கை உண்டு. என்னைத் தமிழன் என்றுதான் சொல்லிக் கொள்கிறேன். இந்தியன் என்று சொல்லிக் கொள்ள முடியாது. தமிழகத்தில்
தமிழர் என்றும் தமிழின் தொன்மை என்றும் பேசுகிற தமிழ் அறிஞர் பெருமக்களை ன் மதிக்கிறேன். அவர்களோடு எனக்கு முரண்பாடு இல்லை (கருத்து வேறுபாடு குறித்து எப்பொழுதும் ஆய்வுக்கு இடமுண்டு). ஜெயமோகன் இப்படித் தன்னை சொல்லிக்கொள்ள மாட்டார். ஜெயமோகனின் சார்பு குறித்து எனக்கு உறுதியாக எதுவும் தெரியாது. அவருக்கு இந்துத்துவ சார்பு இல்லை என்று இப்பொழுதும் நம்புகிறேன். ஆனால் இது பற்றி அவர் வெளிப்படையாக பேசுவதை எதிர்பார்க்கிறேன்.

அறிஞர் சாத்தூர்சேகரனின் ‘சமஸ்கிருதம் மொழி இல்லை’ என்ற
கட்டுரையை தமிழ் நேயத்தில் வெளியிட்டேன். அதனாலேயே அவருடன் நான்முற்றிலும் உடன்படுகிறேன் என்று எவரும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சமஸ்கிருதம் என்பது ஒரு மொழிதான் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் சமஸ்கிருதத்திற்குச் சொல்லப்படும் தெய்வத்தன்மை எனக்கு அருவருப்பாகத் தோன்றுகிறது. சமஸ்கிருதம் எப்படி உருவாயிற்று என்ற வரலாறு பற்றி அறிஞர் தெய்வநாயகமும், சாத்தூர்சேகரனும், வேறு சிலரும் சில வரலாறுகளை டுத்துரைக்கின்றனர். ஆங்கிலேயருக்கு சமஸ்கிருதம் உவப்பாகத்தான் இருந்தது. அவர்களுக்கு தமிழ், இனம்காட்டப்படவில்லை. ஆதிக்கங்கள் எத்தனையோ வகைகளில் வெளிப்படையாகவோ, மறைவாகவோ செயல்படுகின்றன. இன்றைக்கும் இந்தியாவில் சமஸ்கிருதத்துக்கு நிகரான மரியாதை தமிழுக்குஇல்லை. தமிழருக்கு இல்லை.

6

செம்மொழி என்று இன்றுதான் பேசுகிறோம். செம்மொழி என்பதை வைத்து அரசியல்வாதிகள் என்னவெல்லாமோ தம் தேவைக்கு ஒத்தவாறு செய்வார்கள். தமிழின் தொன்மை நாகரிகம் குறித்து குறைந்த அளவுக்குக் கூட இதுவரை ஆய்வுகள் இல்லை. இந்தியா என்று அறியப்படும் எல்லைக்கு வெளியே தொன்மைக் காலம் தொட்டே தமிழ் பரவித்தான் இருந்தது.

இறுதியாக ஒன்று பணத்திற்காகவோ, வேறு ஆதாயங்களுக்காகவோ,
நானும் எஸ்.வி.ஆர் முதலிய நண்பர்களும் செயல்படுகிறோம் என்று ஜெயமோகன் சொல்லுவது மிகமிக கொச்சைத்தனமான அவதூறு என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை. தெய்வநாயகம் அவர்கள் கூட்டிய தமிழ் சமயம் பற்றிய கருத்தரங்கிற்கு நான் செல்லவில்லை. தமிழ் ஆன்மீகம் என்பதில் எனக்கும் அவருக்கும்கூட கருத்து வேறுபாடு உண்டு. தமிழ் ஆன்மீகம் பற்றி நான் நம்பிக்கையோடு பேசுவேன். அவர் கூறும் தமிழ் ஆன்மவியல் எனக்கு உடன்பாடு இல்லை.

ஆதிக்கத்தை உள்வாங்கியது மதம் என்றும், சமயம் என்பதனுள் ஆதிக்கத்திற்கு இடமில்லை என்றும் அவர் கூறுவதை நான் மறுக்கவில்லை. இயேசுவின் மீது அவர் வைத்துள்ள முற்றான நம்பிக்கைக்காக அவரை நான் குறைத்துப் பேசமாட்டேன். இப்படி எந்த மனிதனுக்குள்ளும் தனக்குள்ளிருந்து கலைந்து கொள்ளமுடியாத சில உணர்வுகள் நம்பிக்கைகள் இருக்க முடியும். அவருடைய அறிவு எல்லைக்குள் இன்னும் தட்டுப்படாத உணர்வுகளை புரிந்து கொண்டு அவரால் களைய முடியவில்லை என்பதற்காக எவரையும் இகழ முடியாது. இயேசுவைப் பற்றி ஒருவர் முற்றாக நம்புவது கூட பாவம் என்றும் சொல்வதற்கு இடமில்லை.

நண்பர் ஜெயமோகனுக்கு நான் எந்த அறிவுரையும் சொல்லமுடியாது. மனித விடுதலையின் சார்பில் அவர் பேசுகிறார், செயல்படுகிறார்
என்று அவரால் சொல்ல முடியும் என்றால் அது எனக்குப் போதுமானது.
உலகமயமாதல் என்ற ஆதிக்கத்தோடு ஒத்துழைக்கும் மனித தரமற்ற
மனிதர்கள் மத்தியில் நாம் ‘பிடில்’ வாசிக்க முடியாது. ஜெயமோகனுக்கு நான் தரும் பதில் இதுவே முதலாவதாகவும் இறுதியாகவும் இருக்கட்டும்.

மேலும் சில நண்பர் சாத்தூர்சேகரன் அவர்களின் கட்டுரை பற்றி தம்
கருத்துக்களை எழுதுமாறு சொல்லியல் ஆய்வில் மிகுந்த ஈடுபாடு உடைய சில தமிழ் அறிஞர்களுக்கும் வேறு பலருக்கும் மடல்கள் எழுதியிருந்தேன். நண்பர் ஜோதி பிரகாசம் உட்பட சிலர் பதில் எழுதினார்கள். (நான் மதிக்கும் தமிழறிஞர் எவரும் பதில் எழுதவில்லை). நண்பர்களின் மடல்களுக்கு தன் சார்பிலான பதிலை விரிவாக சாத்தூர்சேகரன் எழுதியிருக்கிறார். சமஸ்கிருதம் தொடர்பாக மேலும்சில கட்டுரைகளை தமிழ்நேயத்துக்கு எழுதுவதாகக் கூறியிருக்கிறார்.

7

 

சாத்தூர்சேகரன் அவர்களின் கருத்துக்கள் குறித்து நண்பர்கள் எழுதிய
மடல்களையும் அவற்றுக்கு சாத்தூர்சேகரன் அளித்த பதில்களையும் பிறிதொருசமயம் நான் வெளியிடலாம். சமஸ்கிருதத்தின் மீது எனக்கு வெறுப்பு இல்லை. சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற மணவாளன் அவர்கள் சமஸ்கிருதத்தை ஆழமாகக் கற்றால்தான் தமிழிலிருந்து அவர்கள் எவ்வளவு எடுத்துக்கொண்டார்கள் என்பது புரியும் என்றார். மகான் அரவிந்தர் அவர்களின் ஆவணக்காப்பகத்தில் உள்ள அவரது குறிப்பேடுகள் முதலியவற்றை கவிஞர் இரா. மீனாட்சி அவர்களின் ஒத்துழைப்போடு ஆய்வுசெய்த நண்பர் சேதுபதி அவர்கள் அண்மையில் பெ.தூரன் அவர்களின் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் வாசித்தக்கட்டுரையில் வேதங்களைப் பற்றிய தனது ஆய்வில் தெளிவுபடாத சில உண்மைகளை அறிந்துகொள்ள பாரதி மூலம் தான் அறிந்து கொண்ட தமிழ்நூல்கள் பெரிதும் பயன்பட்டன என்று அரவிந்தர் தாம் கைப்பட எழுதிய குறிப்புக்களை மேற்க்கோள் காட்டி பேசினார்.

ஆதிக்கவாதிகள் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தி தமிழுக்குச்செய்த தீங்குகளை எந்தநாளும் மறக்கஇயலாது.சமஸ்கிருதத்துக்கு மையஅரசு செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழுக்குக் கிடைத்தால் தமிழுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை கிட்டும் என
நம்புகிறேன்.

தமிழ்ச்சமயம் பற்றிய கருத்தரங்கில் தெய்வநாயகம் அவர்கள் முன்வைத்தக் கட்டுரைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனினும் திராவிட சமயம் 2008 ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு இதழ்களில் வெளிவந்த தெய்வநாயகம் அவர்களின் விரிவான கட்டுரைகளை படித்த நிலையில் அவருக்கு நான் 24 பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பி இருக்கிறேன். அக்கட்டுரைக் குறித்து தெய்வநாயகம் அவர்களின் கருத்து என்னவாக இருக்கும் என்று இதுவரை எனக்குத் தெரியாது. வழக்கமாக மாறறு க் கருத்துக்களை தன் இதழில் அவர் வெளியிடுவதில்லை. கருத்தரங்குகளிலும் தன் கருத்தை நிலைநிறுத்தும் நோக்கில் திரும்பத் திரும்ப பேசுவார் என்பதுவும் எனக்குத் தெரியும்.

இறுதியாக ஒன்று, அவரவர் கருத்தோடு இருந்து விடுவதுதான் நாகரிகம். அதற்கு பதில் சொல்லித்தான் தீரவேண்டும் என்பது அநாகரிகம்தான்.

ஞானி

 

அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஞானி அவர்களுக்கு,

தங்கள் குறிப்பின் முதல் வரிகள் என்னை நெகிழச்செய்தன, இன்றும் என்னை நீங்கள் உங்கள் மாணவராக எண்ணுகிறீர்கள் என்பது அதில் தெரிகிறது. அது என் நல்லூழ். எப்போதும் ஆசிரியனுடனான உறவு மாணவனுக்கு விலகுவதில்லை. என் தரப்பில் உங்கள் மனதை புண்படுத்தும் ஏதாவது சொல் வெலியாகியிருந்தால் மன்னிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களை அவதூறு செய்யும் நோக்கம் ஏதும் எனக்கு இல்லை. என் கட்டுரையிலும் சரி, அதன் பின் வந்த கடிதத்துக்கு பதில் அளிக்கையிலும் சரி ,இதை தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். உங்கள் தனிப்பட்ட நேர்மையும் அர்ப்பணிப்பும் என் ஐயத்துக்கு அப்பாற்பட்டவை. உங்களையும் குமரிமைந்தனையும் பற்றிக் குறிப்பிடும்போது உங்களை பணத்தால் அல்ல, உங்கள் கருத்துக்கள் மீது உங்களுக்கிருக்கும் நம்பிக்கையை பயன்படுத்தியே உள்ளே இழுப்பார்கள் என்று தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் ஒத்துக்கொள்ளக்கூடிய வகையில், உங்கள் மனம் உவகை கொள்ளும் வகையில் தங்கள் தரப்பை உங்களிடம் முன்வைத்துவிட்டு அவர்கள் மேடையில் உங்களை ஏற்றுவார்கள்.

ஐயா, உங்கள் கடிதமே அதற்குச் சிறந்த ஆவணம். தெய்வநாயகம் அவர்கள் தமிழர் பண்பாடு, திராவிட மதம் பற்றி என்னென்ன சொல்கிறார், அவற்றில் உங்களுக்கு இருக்கும் உடன்பாடு என்ன என்பதைப்பற்றியெல்லாம் சொல்கிறீர்கள். அவருக்கு கிறித்தம மத அமைப்புகளுடன் தொடர்பில்லை என்று அவர் சொன்னதையே சொல்கிறீர்கள். அவரது கிறித்தவ மத நம்பிக்கை அவரது தனிப்பட்ட விஷயம் என்கிறீர்கள். இது உங்களுக்கு அளிக்கப்பட்ட சித்திரம்.

தெய்வநாயகம் அவர்களின் நூல்களில் அவர் சொல்வதென்ன என்பதை மிக வெளிப்படையாகவே நான் எடுத்து எழுதியிருக்கிறேன். தயவுசெய்து அவற்றையும் படித்துப் பாருங்கள். அவர் உங்களிடம் சொன்னவை அல்ல அவை. அவர் கிறித்தவச¨பைகள் அனைத்தாலும் முன்னிறுத்தப்படுவதை அவரது மாநாடுகள் மலர்கள் அனைத்திலும் தெளிவாகவே காணலாம். கிறித்தவம் அவரது அந்தரங்க மதநம்பிக்கை மட்டும் அல்ல. அவர் ஒரு எளிய தனிமனிதருமல்ல. அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பெரும் புள்ளிகளை பங்கெடுக்க வைத்தும், அனைத்து கிறித்தவ சபைகளையும் பங்கெடுக்கச் செய்தும், பலகோடி ரூபாய்செலவில் அவர் நடத்திய மாபெரும் மாநாடுகளே தெள்ளத்தெளிவாக அதற்குச் சான்று.

தெய்வநாயகம் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் மனச்சித்திரம் உங்களில் அவரால் உருவாக்கப்பட்டது. ஆனால் அது உங்களை பிரம்மாண்டமான சர்வதேசச் சதி ஒன்றின் பகுதியாக ஆக்குகிறது. எந்த தமிழ்த்தொன்மை மற்றும் மாண்புக்காக நீங்கள் குரலெழுப்புகிறீர்களோ அதற்கு அழிவை அளிப்பது அது.

ஆம், உங்கள் தீவிர நம்பிக்கைகளையே உங்களை சுரண்டுவதற்கான கருவிகளாக பயன்படுத்துவார்கள் என்றே நான் சொன்னேன். அதுவே நடந்திருக்கிறது

*

இனி என்னைப்பற்றி. நீங்கள் எப்போதும் என்னைப்பற்றி புரிந்துகொண்டவர் என்பதே என் எண்ணம். ஆயினும் உங்கள் கடிதத்தில் கேட்டிருக்கும் கேள்விகளை உங்கள் நண்பர்களுக்காக மீண்டும் எதிர்கொள்கிறேன்.

  1. நான் இந்துத்துவ அரசியலை ஏற்றுக்கொள்பவன் அல்ல. அடிப்படையில் பன்மைத்தன்மைகொண்டதும் ,உரையாடல்தன்மை கொண்டதுமான தத்துவ-மெய்ஞான மரபாகவே நான் இந்து ஞான மரபைக் காண்கிறேன். அதாவது இந்து ஞானமரபு ஓர் அமைப்பு அல்ல, அது ஒரு ஞானக்களன்.

ஆனால் இந்துத்துவ அரசியல் என்பது அந்த பன்மையை அழித்து இந்து மரபு சார்ந்து ஒற்றைப்படையான நம்பிக்கை-குறியீட்டு அமைப்பு ஒன்றை நிறுவவும் அதைக்கொண்டு ஒரு அரசியல் கோட்பாட்டை புனையவும் முயல்கிறது. அது இந்து ஞானமரபை அழிக்கக்கூடியது. இந்துத்துவ அரசியலுக்கு மாற்றாக இந்து மெய்ஞானமரபை நிறுத்துவதே உண்மையான இந்துத்துவ எதிர்ப்பாக இருக்க முடியும். விஷ்ணுபுரம் முதல் நான் அதையே செய்து வருகிறேன் என்பதை அறிவீர்கள். அதுவே சாத்தியமும் கூட.

மாறாக, இங்குள்ள முற்போக்கினர் இந்துத்துவம் மீது கொண்ட காழ்ப்பால் பல்லாயிரம் வருட மரபும் மாபெரும் தத்துவ, இலக்கிய, கலைச்செல்வமும் கொண்ட இந்துஞானமரபை முழுமையாகவே நிராகரிக்கவும் அதை அழிக்கவும் தொடைதட்டுகிறார்கள். ஒற்றைப்படையான வாதங்களால் அதை இழிவுசெய்கிறார்கள். ஒன்றை எதிர்ப்பதற்கு அதை வசைபாடினால் போதும் என்பது ஒரு பெரியாரிய நம்பிக்கை. அதை உங்களைப்போன்று சமூகஇயங்கியல் கற்ற மார்க்ஸியர்களும் இன்று ஏற்றுக்கொண்டு வருகிறீர்கள்.

இந்துத்துவ எதிர்ப்பை இந்து எதிர்பாக்குவது வழியாக வெல்லமுடியாத ஒரு போராக அதை மாற்றிவிட்டிருக்கிறார்கள். இந்து மரபை வசைபாடி, அவமதித்து ,எள்ளிநகையாடி ,அநீதியான குற்றச்சாட்டுகளை சுமத்திப் பிரச்சாரம் செய்து, அதில் ஈடுபாடுகொண்ட கோடானுகோடி மக்களை நமது அரைகுறை அறிவுஜீவிகள் இந்து அடிப்படைவாதம் நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

அறிவுஜீவிகளிடமுள்ள இந்த வெறுப்பையும் வன்மத்தையும் இந்துமரபை, தமிழ்மரபை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் சக்திகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. தமிழர்களின் அனைத்து பண்பாட்டு தனித்தன்மையும் ஒரு ‘pagan’ மூடநம்பிக்கை என்று நம்பும் ஒரு மதவெறி அமைப்பு உங்களைப்போன்ற தமிழியர்களை உங்கள் இந்துஞான எதிர்ப்பின் பெயராலேயே தங்கள் சார்பில் திரட்டிக்கொள்ள முடியும். இன்று இங்குள்ள தமிழியர்கள், பெரியாரியர்கள், முற்போக்கினரில் பெரும்பகுதியினர் அறிந்தோ அறியாமலோ இவ்வாறு கைப்பாவைகளாக ஆகும் வாய்ப்பே அதிகம். என் ஆதங்கம் அச்சம் அந்த தளத்தில்தான்.

அனைத்துக்கும் மேலாக வடவர் எதிர்ப்பு, சம்ஸ்கிருத எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு என எதிர்மறை நோக்குடன் உருவாக்கபப்டும் எச்சிந்தனைகளையும் நான் நலம் பயப்பனவாக நினைக்கவில்லை. இம்மாதிரி எந்த எதிர்ம்றைச் சிந்தனையும் கடைசியில் சமூகப்பிரிவினைக்கும் வன்முறைக்கும்தான் நம்மைக் கொண்டுசெல்கிறது.

  1. தமிழர்களின் தொன்மை, இந்திய பண்பாட்டிலும் ஞானமரபிலும் தமிழகத்துக்கு உள்ள பங்களிப்பு இன்னும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணம் எனக்கு வலுவாகவே உண்டு. குமரிக்கண்டத்தை நான் நிரூபிக்கப்பட்ட உண்மையாக எண்ணவில்லை. ஆனால் இந்தியத் தொன்மங்கள் அனைத்தையும் வைத்து பார்க்கும்போது ஒரு வலுவான சாத்தியக்கூறு அது என்றே எண்ணுகிறேன். இந்தியப்பண்பாட்டில் தமிழர்களின் கொடை வேதகாலம் முதல் தொடங்குகிறது. அதன் அடிப்படைக் கட்டுமானத்திலேயே தமிழர் மெய்யியலும் பண்பாடும் உள்ளது. இதையெல்லாம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.சாமவேதத்தை ஆராய்ந்த நடராஜகுருவே அதைச் சொல்லியிருக்கிறார். பலர் பேசியிருக்கிறார்கள்.

இந்தவிஷயங்களை அறிவார்ந்த தளத்தில் முன்வைத்துப் பேசவேண்டும். அதற்கான கடும் உழைப்பும் பரந்துபட்ட நோக்கும் இன்று தேவை. ஆனால் இன்று நடப்பதென்ன? ஆய்வு என்றால் ஏதோ தன் மூளையில் தோன்றும் கொப்புளங்கள் என்று நம்பும் ஒரு சிறு கூட்டம் நவீன ஆய்வுலகில் என்ன நடக்கிறது, ஒன்றை மெய்ப்பிக்கவும் பொய்ப்பிக்கவும் தேவையான முறைமை என்ன, என்ற போதமே இல்லாமல் கைக்குக் கிடைத்த சொற்களுக்கு விருப்பப்படி பொருள்கொள்ளும் அசட்டு சொல்லாராய்ச்சியையே செய்து கொண்டிருக்கிறது. அதை ஏதோ ஆய்வு என்று சொல்லி முன்னிறுத்துவதன் மூலமாக உண்மையான ஆராய்ச்சியே நிகழாமல் நின்றுவிட்டிருக்கிறது. ஆய்வுக்குள் கூட சாதிக்காழ்ப்புகளையே அளவீடாகக் கொள்கிறார்கள்.

இந்த ஆய்வாளர்கள் எந்த விதமான உலகப்பிரக்ஞையும் இல்லாமல் உலகத்தையே தமிழர்கள்தான் உருவாக்கினார்கள் என்றும் உலக மொழிகளே தமிழிலிருந்து உருவானவையே என்றும் கூச்சலிட்டு ஆய்வு என்பதையே கேலிக்கூத்தாக்கி விட்டிருக்கிறார்கள். தமிழர் தொன்மை சார்ந்த எதையுமே பேசினால் விஷயமறிந்தவர்கள் எல்லாம் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கும் நிலை உருவாகி விட்டிருக்கிறது.

ஐயா, சாத்தூர் சேகரனின் நூலை எல்லாம் நீங்கள் ஒர் ஆய்வாக நினைப்பீர்கள் என்றால் என்ன சொல்வது? வருந்துகிறேன், மிக மிக வருந்தி வெட்குகிறேன், அவ்வளவுதான்.

  1. இந்தியா பற்றிய உங்கள் கருத்து என்னை வருத்தம் கொள்ளச்செய்கிறது. இந்தியா ஆங்கிலேயரின் சிருஷ்டி என்றால் அதில் என்ன பிழை? ஆம், அரசியல் இந்தியா ஆங்கிலேயரின் ஆக்கமே. அது ஒரு வரலாற்று நிகழ்வு. எல்லா நவீன தேசங்களும் அப்படி வரலாற்றின் வழியாக உருவாகி வந்தவைதான். அப்படி வரலாற்றில் உருவாகி வருவதுதான் உண்மையான நவீனதேசியம்.

இந்த நவீன தேசியத்தை மேலும் நவீன தேசியமாக ஆக்கலாம். இன்னும் பன்மைத்துவம் கொண்டதாக ஆக்கலாம். இன்னும் நெகிழ்வான கட்டமைப்புக்கு கொண்டுவரலாம். அந்த கனவு எதுவும் சிறந்ததே.

இந்தியாவெங்கும் மக்கள் பரவலாக்கம் தொன்மையான காலம் முதல் நடந்து வருகிறது. ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் இந்திய நிலப்பகுதிகளில் நடந்த தொடர்போர்கள் மூலம் இந்தியாவில் மக்கள்ப்பரிமாற்றம் விரைவாகியது. இன்றைய இந்திய நிலத்தில் மிக மலைசார்ந்த பகுதிகள் தவிர பிற பகுதிகள் எதிலும் மொழி, இனம், பண்பாடு சார்ந்த ஒரேவகை மக்கள் இல்லை.

பிரிட்டிஷ் ஆட்சியின் நிலையான ஆட்சி உருவாகி,போக்குவரத்து விரைவாகி, வாழ்க்கை வாய்ப்புகள் பெருகியபோது இந்த மக்கள் பரிமாற்றம் உச்சம் கொண்டது. எந்த ஒரு இந்தியனையும் எடுத்து அவரது முன்னோரின் ஊரென்ன என்று கேட்டால் ஓர் இடப்பெயர்வின் கதை இருக்கும். இந்த நிலப்பரப்பில் இவ்வாறு பரவியிருநத மக்களுக்கு ஆங்கிலேயரின் இன, மொழி,மத அடையாளமில்லாத ஒரு நவீன நிர்வாக அரசு நம்பிக்கை ஊட்டியது. அவ்வாறு மெல்லமெல்ல உருவானதே நவீன இந்திய தேசியம்.

அந்த தேசிய உருவகத்தை அடுத்த கட்டத்துக்கொண்டுசென்று, நவீன குடியரசுத்தன்மையை இணைத்து, அதன் பன்மைத்தன்மைக்கு அடிபப்டை உறுதியை அளித்து, இன்றைய இந்தியா உருவகிக்கப்பட்டுள்ளது. அதன் சிற்பிகளான காந்தி, நேரு ,அம்பேத்கர் ஆகியோருக்கு இந்தியர் கடமைப்பட்டுள்ளனர்.

இந்த நவீன இந்திய தேசியத்துக்கு மாற்றாக மதவாத தேசியம் ஒன்றை முன்வைக்கிறார்கள் இந்துத்துவர். அதேபோல மொழிவாத தேசியத்தை உங்களைப்போன்றவர்கள் முன்வைக்கிறீர்கள். இரண்டுமே பழமைவாதத்தில் ஊன்றியவை. அடையாள அரசியல் சார்ந்தவை. வெறுப்பில் இருந்து முளைப்பவை.

ஐயா, நீங்கள் இந்திய தேசியத்தை நிராகரித்து முன்வைப்பது எதை தெரியுமா? மனக்குறுகல் மிக்க, வெறுக்கத்தக்க மொழிவெறி– ·பாசிச தேசியம் ஒன்றை. அதை விட அனைத்து இந்துக்களையும் பௌத்தர்களையும் சமணர்களையும் தன்னுள் அடக்க என்ணும் இந்து தேசியம் எவ்வளவோ மேலானது, விரிந்தது.

நாமக்கல்லில் சில மாதங்கள் முன்பு பொ.வேல்சாமி – பெருமாள்முருகன் ஏற்பாட்டில் நடந்த பதினெண்கீழ்க்கணக்கு ஆய்வுக் கருத்தரங்கில் நான் உங்களைச் சந்தித்தேன். அப்போது நீங்கள் உங்கள் தமிழியக்க நண்பர்களுடன் வந்திருந்தீர்கள். தமிழ்ச்சுவடிகள் குறித்துஉங்களிடம் நான் விவாதித்துக் கொண்டிருந்தபோது உங்களை அழைத்து வந்த கோவை நண்பர் ஆவேசத்துடன் ”தமிழை அழிச்சவனே இங்க உள்ள தமிழனல்லாத கும்பல்தான்… தெலுங்கனும் கன்னடனும் சௌராஷ்டிரனுமா இங்க குடியேறி தமிழ நாசம் பண்ணுறாங்க” என்று பேச நான் அதன் பின் ஒன்றுமே பேச இல்லாமல் விலகிக்கொண்டேன் என்பதை நினைவுறுவீர்கள் அல்லவா?

அவர் சொல்லவந்தது நானும் பொ.வேல்சாமியும் சொன்ன சில எளிய மாற்றுக் கருத்துக்களை மறுக்க! தமிழறிஞர் பொ.வேல்சாமியின் முன்னோர் தமிழ்நாட்டுக்கு வந்து 300 வருடமாகிறது. தொல்காலம் முதல் எங்கள் முன்னோர் வாழ்ந்த நிலம் இப்போது தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கிறது. ஆனால் வெறுப்புக்கு ஏது அளவு?

நீங்கள் சொல்லும் தமிழ்தேசம் அமைந்தால் அடுத்த கணமே யார் தமிழர் என்ற கணக்கெடுப்பு தொடங்கும். அந்த தேசத்தின் முதல் பலியாடுகளாக முஸ்லீம்கள்தான் இருப்பார்கள். அதன்பின் நூற்றாண்டுகளாக இங்கே குடியேறி வாழ்ந்து இந்த நாட்டின் ஆலயங்களை ஏரிகளை பேரிலக்கியங்களை எல்லாம் படைத்த தெலுங்கு, கன்னட, சௌராஷ்டிர மக்கள் இரண்டாம் குடிமக்களாக அடையாளப்படுத்தபப்டுவார்கள். அருந்ததியரும் நரிக்குறவர்களும் வேட்டையாடப்படுவார்கள். உங்களைச் சுற்றி ஒலிக்கும் குரல்கள் அதற்குச் சான்று.

ஐயா, உண்மையிலேயே அப்படி ஒரு பிரிவினை நடந்தால் எத்தனை கோடி தமிழர்கள் இந்தியாவெங்கிலும் இருந்து இங்கே வரவேண்டியிருக்கும் தெரியுமா? இங்கிருப்பவர்களில் கால்பங்கு இந்தியா முழுக்க வாழ்கிறார்கள். வேரூன்றி வெற்றி பெற்று வாழ்கிறார்கள். அது தமிழனின் விடாப்பிடியான உழைப்பின் விளைவு. அனைத்தையும் உதறி அவர்கள் இங்கே வரவேண்டும். இங்கே நூற்றாண்டுகளாக வேரூன்றியவர்களை நீங்கள் அங்கே துரத்துவீர்கள், இல்லையா? பிரிவினைகளின் ரத்தத்தை நாம் உலகமெங்கும் வேண்டுமளவு கண்டுகொண்டிருக்கிறோமே? இன்னும் தேவையா?

மனித வெறுப்பில் ஊறி ,அதிகார பித்தேறி ஃபாசிசப்பிரிவினைவாதம் பேசும் இக்குரல்கள்தான் ஆப்ரிக்காவில் ரத்த ஆற்றை ஓடவிட்டுக் கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கான மக்களை உள்நாட்டு யுத்தத்தின் விளைவான பஞ்சங்களில் பசித்து சாக விட்டுக்கொண்டிருக்கின்றன. உங்களைப்போன்ற அறிவுஜீவிகள்தான் ·பாசிசத்துக்கு அடிப்படைகளை உருவாக்கி தருகிறீர்கள். விளைவுகளில் நீங்களும் உங்கள் வாரிசுகளும் சிக்க மாட்டீர்கள் என்பதை வரலாறு மீண்டும் காட்டுகிறது. சாவதற்கு வரலாறு வேறு ‘பிராய்லர்’ களைத்தான் வளர்க்கிறது

பெரும் மனிதாபிமானியாக நான் அறிந்த ஞானி வேறு. ·பாசிசத்துக்கு அஸ்திவாரம் கட்ட அமர்ந்திருக்கும் ஞானி வேறு. மனிதர்களுக்குள் என்னென்னவோ மாற்றங்கள். ஆனால் நம்மால் நாம் நேசித்த மனிதர்களை எப்போதுமே நேசிக்கத்தான் முடிகிறது

வணக்கம்.

உங்கள் ஆசிகளை நாடும்,

ஜெயமோகன்

****

பெறுநர்

திரு. ஜெயமோகன்

அன்புள்ள நண்பருக்கு வணக்கம்,

நண்பர் முத்துக்குமார் மூலம் என் எதிர்வினையை பெற்றவுடன் மிகுந்த அக்கறையோடு பதில் எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி! உங்களுக்கும் எனக்கும் இடையிலான அன்பு என்றைக்கும் ஒரே தன்மையுடன் நிலவும் என்பதில் எனக்குச் சிறிதளவும் ஐயமில்லை.உங்கள் மடலும் இதை மெய்ப்பிக்கிறது.

வியக்கத்தக்க முறையில் உங்கள் கருத்தும் என்கருத்தும் சில தளங்களில் ஒன்றாகவே இருக்கின்றன. இந்துத்துவ எதிர்ப்புணர்வில் உங்களோடு முற்றாக நான் உடன்படுகிறேன். நீங்கள் இந்து ஞான மரபு என்கிறீர்கள். இதை நான் இந்திய ஞான மரபு என்று எடுத்துக் கொள்வதோடு, உங்களோடு நான் முற்றாக உடன்படுகிறேன். இந்திய ஞான மரபில் ஊறிய எவரும் பாசிஸ்ட் ஆக மாறவே முடியாது. உங்களோடு நான் பழகிய காலத்தில் இருந்த அதே மனிதனாகத்தான் இன்றும் வாழ்கிறேன். இடைக்காலத்தில் நான் உங்களை ஒரு போதும் ஐயுற்றதில்லை. ஆனால் என்னை எப்படி நீங்கள் பாசிஸ்ட் என்று நினைக்க நேர்ந்தது என்பது எனக்குப் புரியவில்லை. இடைக்காலத்தில் நான் தமிழியம் – தமிழ்த்தேசியம் குறித்து எழுதிய எந்தக் கட்டுரையையும் நீங்கள் படிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.

நாமக்கல்லில் மதிய உணவுக்குப்பிறகு மண்டபத்திற்கு திரும்பி வரும் வழியில் ஒரு நண்பர் உங்களோடு கத்திப்பேசி முடித்த சமயத்தில்தான் உங்களிடம் நான் வந்து சேர்ந்தேன். பிறகுதான் செய்தி அறிந்தேன். உங்களிடம் கத்திப் பேசியவர் க.ப. இராமசாமி என்ற பெரியவர்தான் என்று நினைக்கிறேன். அவரது வெறித்தனமான பேச்சையோ,கருத்தையோ நான் ஒருபோதும் மதித்ததில்லை. பாவாணர் பெயர் சொல்லிக்கொண்டு இப்படி வம்பும், வழக்கும் செய்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். அவர்களோடு எனக்கு ஒட்டும்இல்லை. உறவும் இல்லை.

இன்னுமொன்று பெரியாரியக்கத்தை சார்ந்த பலர் வெறித்தனமாக பார்ப்பனீய எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பில் அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்கள். தமிழ்த்தேசியம் என்ற அரசியலில் இணைந்து இருக்கிற பெரும்பாலனவர் இத்தகையவர். இவர்களுக்கு மார்க்சியத்தோடு உறவில்லை. நான் மார்க்சியன் என்பதால் இவர்களும் என்னோடு நெருக்கமாக இருப்பதில்லை. தமிழ் உணர்வாளர் என்ற முறையில் இவர்கள் கூட்டத்தோடு நானும் இருக்கிறேன் என்பதைத் தவிர எங்களுக்குள் ஒத்தஉணர்வு இல்லை. பெரியாரியம் போதாது என்பதை விடாப்பிடியாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். சமதர்மம் என்ற மையத்தில் பெரியாரியத்தையும் மார்க்சியத்தையும் இணைத்தால் மட்டுமே தமிழ்ச் சூழலில் மனித விடுதலைக்கு வழி திறக்கும், என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

2

பெரியாரியம் சிலரிடம் வெளிப்படும் பாசிச உணர்வை நான் ஒரு போதும் ஏற்கவில்லை. கட்சி மார்க்சியரோடும் எனக்குள்ள மாறுபாட்டை நீங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன். இது குறித்து நான் உங்களுக்கு இங்கு விளக்க வேண்டியதில்லை.நவீன இந்திய தேசம் என்று பேசுகிறீர்கள். இந்தியா என்ற பெரும் நிலப்பரப்பை ஒரு தேசமாக இராணுவம் முதலிய சக்திகளைக் கொண்டு தம் வசதிக்காக ஏற்படுத்தியவர் ஆங்கிலேயர் என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள். இந்தியா ஒரு தேசம் இல்லை. இந்தியா ஒரு துணைக்கண்டம். இதன் எல்லைக்குள் தேசிய இனம் பல வாழ்கின்றன.இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் தேசிய இனங்களின் இறையாண்மையை ஒப்புக்கொள்வதாக ஒரு உண்மையான கூட்டாட்சி அமையவில்லை. எவ்வளவு நல்ல எண்ணத்தோடு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது என்றே வைத்துக்கொண்டாலும்
மொழி சார்ந்த தேசிய இனங்கள் பலவற்றுக்கிடையில் ஒருங்கிணைப்பை அரசியல்வாதிகள்ஏற்படுத்தவில்லை.

2020ல் இந்தியா ஒரு வல்லரசாகவோ நவீன தேசிய அரசாகவோ மக்கள் நல நோக்கில் உருவாகும் என்பதற்கான ஆதாரம் என்று சொல்வதற்கு இன்று எதுவும் இல்லை. கா~;மீரை இந்தியா தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள முடியாது. அதுபோல் கிழக்கு மாநிலங்கள் சிலவற்றையும் இராணுவத்தை வைத்து இந்தியா தனக்குள் இணைத்துக்கொள்ளவும் முடியாது. மாநிலங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் குறையப் போவதில்லை. இந்துத்துவத்தின் மதவாத அரசியல் இந்திய மக்களை மேலும் மேலும் நாசமாக்கும். அமெரிக்கா முதலிய மேற்கத்தியருக்கு சேவை செய்யும் முறையில் உருவாகிறஇந்தியா, எண்பது விழுக்காடு உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்தியாவாகத்தான் இருக்கமுடியும்.

இப்படி உருவாகிற இந்தியா மீது எனக்கு எந்த வகையிலும் நம்பிக்கை இல்லை. நீங்கள் நம்புகிற நவீன இந்திய தேசியம் என்ற கருத்து பெரும்பாலான இந்திய மக்களுக்கு எதிரான, இந்திய மக்களை நாசமாக்குகிற கருத்தென்றே, நான் நம்புகிறேன்.இதுகுறித்து நீங்கள்தான் உங்களையே ஆய்வுசெய்து கொள்ள ண்டும். இப்படி ஒரு கருத்து உங்களுக்குள் எப்படி உருவாகிற்று என்பதும் எனக்குப் புரியவில்லை. உங்கள் கருத்து ஆதிக்கவாதிகளுக்கு சாதகமான கருத்தாகத்தான் இருக்கமுடியும். இதுபற்றி நமக்கிடையில் பேசுவதற்கு எதுவும் இல்லை.

இந்திய ஞான மரபு என்றும் நவீன இந்திய தேசியம் என்றும் நீங்கள் சொல்லும் இரு வேறு கருத்தியலுக்கு இடையில் என்ன உறவு இருக்க முடியும் என்பதும் எனக்குப் புரியவில்லை.

இனி, தெய்வநாயகம் பற்றி நான் குறிப்பிட வேண்டும். அவர் கூட்டும்
கருத்தரங்குகளுக்கு என்னை அவர் விடாப்பிடியாக அழைத்தபோதும் நான் போகவில்லை. போகாததற்கு என் உடல்நலக் குறைவு, வசதிக்குறைவு என்பதுகூட காரணமில்லை. அவரது நூல்கள் சிலவற்றை நானும் படித்திருக்கிறேன். விடாப்பிடியாக அவரோடு நான் பேசுகிறேன்.

ஒரு பத்தாண்டுகளுக்கிடையில் அவரது நிலைப்பாட்டில் தொடர்ந்து மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன. அவரை முற்றாக நம்புகிற ஒரு கூட்டத்தோடுதான் அவர் இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக என்னால் ஒருபோதும் இருக்க முடியாது. அவரது வசதிகளும் வாய்ப்புகளும் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. உலக அளவில் அவர் எவரோடெல்லாம் தொடர்பு கொண்டிருக்கிறார் என்பதுவும் எனக்குத் தெரியாது.

இப்படி நான் சொல்லும் பொழுது அவருக்கு எதிராக நான் பேசுகிறேன் என்று நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம். அவருக்கும் எனக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அவரது வருண எதிர்ப்பு என்ற கருத்தில் அவரோடு எனக்கு உடன்பாடு உண்டு. தமிழகத்தில் அந்தணர் வரலாறு என்ற நூல் வெளிவந்த போது, அந்த நூலின் பொய்மைகளை மறுப்பதில் அவரோடு நான் உடன்பாடு கொண்டிருந்தேன். தமிழ் ஆன்மீகம் என்று நான் பேசுகிறேன். தமிழ் ஆன்மவியல் என்று அவர் பேசுகிறார். நிய+யார்க்கில் அவர் ஏற்பாடு செய்த மாநாட்டின் கருப்பொருள், ஏசுவின் இறப்பிற்குப் பின்னர் – போப்பின் தலைமையில் திருச்சபை உருவாக்கப்பட்டதற்கு முன்னரான இடைக்காலத்தில் நிலவிய ‘தொடக்ககாலக் கிறித்துவம்’ குறித்தது என நான் அறிகிறேன். ‘எங்கல்ஸ்’ தொடக்ககாலக் கிறித்துவம் பற்றி எழுதும் பொழுது, பொதுவுடைமைச் சமூகத்திற்கு அதுவொரு முன்மாதிரி என்று எழுதியிருக்கிறார். தெய்வநாயகம் அவர்களுக்கும் இக்கருத்து உடன்பாடு. ஏசுநாதர் முன்வைத்த பொதுமைச் சமூகக்கூறுகளை அழித்துத்தான் திருச்சபை தனக்கானஆதிக்கத்தை ஏற்படுத்தியது என்பது அவரும் ஒப்புக்கொள்கிற கருத்து. அண்மைக் காலத்தில் தெய்வநாயக இக்கருத்தில் ஊன்றி நிற்பதாக அறிகிறேன். இவ்வகையிலும் அவரோடு நான் உடன்படுகிறேன். மற்றபடி, ஏசு என்ற படிமத்தை அவர் சைவத்தினுள்ளும், வைணவத்தினுள்ளும் காண்பதாகச் சொல்லுவது எனக்கு உடன்பாடில்லை.

மற்றபடி ஓர் இந்துத்துவவாதி போல அவரும் ஓர் ஆதிக்கவாதிதான் என்று என்னால் கருதமுடியவில்லை. அவருக்கோ இன்னொருவருக்கோ நான் வசப்பட்டு விடமாட்டேன். எனது நிலைப்பாட்டில் நான் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன். நான் ஒரு ஏமாளி என்பது போல நீங்கள் கருதுவது எனக்கு வருத்தமாகவும் சற்று வேடிக்கையாகவும் இருக்கிறது. இந்துத்துவத்துக்கு எதிரான கருத்தியல் போராட்டத்தில் முனைந்திருக்கும் ஒருவர் தெய்வநாயகம் நோக்கித் தன்பார்வையை செலுத்த வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். இலக்கியம், மெய்யியல் முதலிய களங்களில் உங்கள் ஆற்றல் மிக்க பணியை பெரிதாக மதிக்கிறேன். பார்வை இன்மை காரணமாக இருபது ஆண்டுகளுக்கிடையில் எவ்வளவோ நான் இழந்து விட்டேன்.நண்பர்கள் மூலமே சிலவற்றை அறிந்து கொள்ள, பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

நான் நலத்தோடு இருக்கிறேன். உங்கள் துணைவியார், குழந்தைகள் நலம் பெரிதும் விரும்புகிறேன். எல்லோருக்கும் என் அன்பும் வணக்கமும்.

நன்றி.
30-10-2008 தங்கள்
ஞானி.

 

தாமஸ்:குமரிமைந்தனின் கடிதம்

தாமஸ்:கடிதங்கள்

தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

முந்தைய கட்டுரைபொருளியல் விபத்து:மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆலோசனைக் கடிதங்கள்