சுருண்டோடும் வாழ்க்கை நதியின் சித்திரத்தை, அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவது இல்லை. அவை துளிகளில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில், அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார். மேலோட்டமான பார்வையில், காலத்தில் உறைந்து நின்று விட்ட துளியையே, நாம் காண்கிறோம். ஆனால் நுட்பமாகப் பார்க்கும்போது, அத்துளியின் தொடர்ந்த மாறுதலை நாம் காண முடியும். தங்கு தடையற்ற, மகத்தான பிரவாகம் இப்படி ஓர் துளியின், நிலை மாறுதலாக அசோகமித்திரனில் வெளிப்படுகிறது. அவருடைய அத்தனை சிறுகதைகளுக்குமே ‘மாறுதல்’ என்று அர்த்தபூர்வமாக பெயர் சூட்டி விடலாம். அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட கலைவடிவங்கள், அவருடைய மொழி உத்திகள் அனைத்துமே வாழ்க்கை பற்றிய அவருடைய இந்தக் கோணத்தை வெளிப்படுத்தும் தன்மை உடையனவாக அமைந்து விட்டிருக்கின்றன.
நுண்மைக்குள் பொறிக்கப்பட்ட விரிவு என அவர் கதைகளை சுருக்கமாகக் குறிப்பிடலாம். அதற்குத் தேவையான தொழில்நுட்பத் தேர்ச்சி அவருக்கு நிறையவே உண்டு. தமிழில் அசோகமித்திரனின் சிறப்பிடம், இந்த துளித்தன்மை மூலம் அவர் உண்டுபண்ணிய அழகியல் கூறுகளினாலேயே உருவாகியுள்ளது. அவரால் விரிவின் முழுமையை சித்தரிக்க இயலாது. அவருடைய நாவல்களே இதற்குச் சான்று. பெருமளவு சிவராம காரந்தின் யதார்த்தவாத உலகாதய நோக்குகள் கொண்டவராக இருப்பினும் கூட அசோகமித்திரனால் ‘மண்ணும் மனிதனும்’ போன்ற ஒரு படைப்பை உண்டு பண்ண முடியாது போன்மைக்குக் காரணம் இதுவே ஆகும். இலக்கியத்தில் எது ஒருவரது பலமோ அதுவே பலவீனமும் ஆகும் விந்தை அனேகமாக மாற்றமில்லாதது ஆகும். அசோகமித்திரனும் விதிவிலக்கல்ல.
‘சாதாரணத்’துவத்தின் கலை
ஐம்பதுகளில் எழுத ஆரம்பித்த ஐ.தியாகராஜன், அசோகமித்திரன் என்ற இன்றைய முகம் பெற்றதற்கு, முன்புள்ள சலனங்களை, கற்பனை செய்து பார்ப்பது சுவையானதாக இருக்கும். தியாகராஜன். எப்பேற்பட்ட பெயர்! எளிய, நடுத்தர வர்க்கமுகமொன்றை நினைவிற்கு கொண்டு வருகிறதும், எந்த பட்டியலிலும் சர்வ சாதாரணமாக கரைந்து போகிறதுமான ஒரு பெயர். அந்த வயதில் ‘எழுத்து’ போன்ற இதழ்களில் ‘மஞ்சள் கயிறு’ போன்ற கதைகளை எழுதியபோது அவருக்கு தன் பெயரின் சர்வ சாதாரணத் தன்மை மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கலாம். புஜகீர்த்தியும், கிரீடமும், சரிகைகளும் குஞ்சலங்களும் நினைவிற்கு வரக்கூடிய அசோகமித்திரன் என்ற பெயரை அவர் தனக்கென தேர்வு செய்வதற்கு அது காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அப்பெயரே கூட தங்கு தடையற்ற எளிமையின் ஜ்வலிப்பையும், கூர்மையையும் நம் நினைவிற்கு கொண்டு வருமளவு அவருடைய ஆளுமை அதில் ஏறி விட்டிருக்கிறது. எந்த கும்பலிலும் அடையாளமின்றி தங்களை கரைத்துக்கொள்ளக்கூடியவர்கள் அவருடைய கதாபத்திரங்கள். ‘வெறும்’ ஜனங்கள்.
யதார்த்தவாத இலக்கியத்தின் உதயத்துடன் உலகமெங்கும் இலக்கியப் படைப்புக்களில் வெறும் ஜனங்களின் முகங்கள் தென்பட ஆரம்பித்தன. ஆனால் அவற்றின் தன்மைகளில் அடிப்படையான மாறுதல்கள் உண்டு. தன் எளிமையை சரித்திரத்தின் முன் பிரகடனம் செய்வதற்காக, கந்தலுடன் மேடையேறி வருபவன் தல்ஸ்தோயின் குடியானவன். ஏதோ தேவதையின் கரம் பட்டு எழுந்து, மகத்தான மானுட தரிசனங்களின் விவாத அரங்காக மாறி, ஜ்வலிக்கும் மனம் கொண்டவன் தஸ்தாயெவஸ்கியின் குற்றவாளி- எனவேதான், அது யதார்த்த வகைக்குள் அடங்காததாகவும், அவர்கள் சாமானியர்களாக இல்லாமலும் தோன்றுகிறார்கள் போலும்! தீர்க்கதரிசிக்கு இணையான மனிதாபிமானத்துடனும், இரக்கத்துடனும் மேலிருந்து பார்க்கப்பட்டு சித்தரிக்கப்பட்டவன் சேகவ்வின் தொழிலாளி! புதுமைப்பித்தனின், “கணக்குப்பிள்ளை”யின் சர்வ சாதாரணத் தன்மை எப்போதுமே இரண்டு முறை அடிக்கோடு போடப்பட்டு அசாதாரணமாக்கப் படுகிறது. ஜெயகாந்தனின், சாமானிய ஜனங்களுக்கு கருத்துப்பிரதிபலிப்புச் சுமை உண்டு. தமிழில் முதல்முறையாக சர்வ சாதாரணமாக கறிகாய் கடைக்கு மஞ்சள்பையுடன் போகும் விதத்தில் சாமானிய முகங்கள் படைப்பில் வந்தது அசோகமித்திரனின் கதைகளில் தான்.
அவன் எதற்கும் குறியீடு அல்ல. அனுதாபத்துக்கு உரியவனோ, பிரியத்துக்கு உரியவனோ அல்ல. எந்த இலட்சியத்துக்கும் வடிவம் அல்ல. ஆசிரியரில் அவனைப்பற்றி நெகிழ்வுகள் ஏதும், எங்கும் செயல்படுவது இல்லை. அவருடைய பழுத்த யதார்த்தவாதம் அவனை மிக நாசுக்காக கும்பலில் இருந்து சற்று முன்னகர்த்திக் காட்டுகிறது. தன் வரிசையெண்ணை சொல்லி வணங்கிவிட்டு, அவன் மீண்டும் முகங்களின் கடலுக்குள் சென்று விடுகிறான். அவனுடைய ஒரு கணம் சரித்திரம் முழுக்க நிரம்பியிருப்பதும், சரித்திரத்தை படைத்து அழித்து சரித்திரமே ஆகி நிற்பதுமான, ஜனங்களின் முகமாக ஆகிறது. ஒரு துளி, அந்தத் துளியில்தான் அலைகளையும் கொந்தளிப்பையும் பிரவாகத்தையும் நாம் காண்கிறோம்.
தன் படைப்புகளில் எப்போதுமே அசோகமித்திரன் சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். சர்வ சாதாரணமான சம்பவங்கள் தாம் – அனேகமாக அபூர்வமாக உத்வேகம் மிகுந்த சம்பவங்கள் நிகழும்போது கூட தன் சித்தரிப்பின் கச்சிதமான தொழில் நுட்பம் மூலம் அதை சாதாரண சம்பவங்களின் தளத்தில் சரியாக பொருந்த வைத்து விடுகிறார். மொத்தத்தில் அவர் படைப்புலகமே சாதாரணத் தன்மையை தன்னுடைய தனித் தன்மையாக கொண்டுள்ளது. அவருடைய படைப்புலகில் எதுவுமே விசேஷமானதல்ல. ஒரு படைப்பாளி என்ற முறையில் வெகுஜனம் என்ற முகமின்மையின் உள்ளேயிருந்து அதன் குரலாகவே பேசுகிறார். மொத்தமாக அசோகமித்திரனின் கலையையே ‘சாதாரணத்தன்மையின் கலை வெளிப்பாடு’ என்று கூட நாம் வகைப்படுத்திவிட முடியும்.
நடை, பாணியின் ஊற்றுக்கண்கள்
அசோகமித்திரனின் படைப்புலகின் மிக முக்கியமான தனித்தன்மையாக விளங்குவது அவருடைய நடை. அனேகமாக தமிழின் முதல் ‘சாதாரணமான’ நடை என்றுகூட அதை கூறிவிடலாம். அவரைப் படிக்க ஆரம்பிக்கும் பெரும்பாலான வாசகர்கள் இந்த எளிமையால் ஏமாற்றமடைவது வழக்கம். தமிழில் ஆரம்பத்தில் இந்த நடை கவனிக்கப்படவில்லை. பிற்பாடு அதை தவிர்க்க இயலாது என்ற நிலை உருவாகியபோது அது பற்றிய விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. அசோகமித்திரனில் என்ன இருக்கிறது என்று நிறையபேர் கேட்டிருக்கிறார்கள். தங்களை முக்கியமான வாசகர்கள் என்று கருதிக்கொள்பவர்கள் கூடக் கேட்டிருகிறார்கள். இன்றும் கூட கேட்கப்படுகிறது. அசோகமித்திரனின் மொழிநடையை வகைப்படுத்துவது ஒரு வகையில் அவருடைய எழுத்தையும் அவருடைய தரிசன நிலைபாடுகளையும் வகைப்படுத்திப் புரிந்துகொள்வதற்கு நிகர்தான்.
அசோகமித்திரனின் மொழிநடைக்கு இந்திய மரபிலும் சரி, தமிழ் மரபிலும் சரி, வேர்கள் இல்லை என்று பொதுவாக கூறலாம். பழங்குடித்தன்மை பெருமளவு உள்ள தமிழ் உரைவடிவத்தில் ஒருவிதமான வெளிப்பாடமைதி பொதுவாக உள்ளது. இதை நாம் வசதிக்காக ‘சொலவடைகள்’ எனலாம். இவற்றை தவிர்த்து நமது உரை வடிவில் எதையும் தீர்க்கமாக கூறுவது இயலாது. நவீன உரைநடை – வாய் மொழியை பின்பற்றுவது- மேற்குறிப்பிட்ட சொலவடைகளின் அடிப்படை அமைப்பைப் பின்பற்றி நவீன சொலவடைகளை உருவாக்கிக் கொண்டே பேச முடிகிறது. உதாரணமாக சுந்தர ராமசாமியின் மொழிநடை, மிக நவீனமாக கருதப்படும். இந்நடை உண்மையில் நாட்டார் உரைமரபின் – நாகர்கோவில் வட்டார வழக்கின் – கொச்சை தவிர்த்து நவீனமாக மாற்றப்பட்ட மறு வடிவமேயாகும் – ‘ஒரு புளிய மரத்தின் கதை’யின் மொழி நடையில் இதை தெளிவாகக் காணமுடியும். ‘ஜே. ஜே. சில குறிப்புகளி’ல் புழங்கும் மேலும் சிக்கலான மொழி நடை கூட இதன் அடுத்த பரிணாமமேயாகும்.
இந்திய மரபில் இரண்டாவது நடைவடிவம் எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் பண்டித நடை. இதை, நாம் கருத்து நடை அல்லது அறிவுலகின் மொழிநடை (Elite Style) எனலாம். இது பெரும்பாலும் தர்க்கங்களினால் கோர்க்கப்பட்டு உருவாவது. படைப்புக்கு நிச்சயம் உதவாதது. உதாரணமாக இந்தக் கட்டுரையின் மொழிநடையிலேயே அதைக் காணலாம். நவீன உரைநடை வடிவங்களை எடுத்துப் பார்த்தால் கூட இதன் இரு முகங்களைக் காணமுடியும். பாரதி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி என்று முதலில் குறிப்பிட்ட ஒரு போக்கு சி.வை. தாமோதரம்பிள்ளை, மறைமலை அடிகளார் முதல் மு.வ வரையிலான இரண்டாம் போக்கு.
அசோகமித்திரன் மொழிநடையில் இவ்விரண்டின் பின்புலப்பாதிப்பும் இல்லை. அலாதியாக, துண்டாக அது தமிழ்ச் சூழலில் நிற்கிறது. எனவேதான் வினோதமாக பார்க்கப்படுகிறது, வியக்கப் படுகிறது. அத்துடன் பலசமயம் புறக்கணிக்கவும் படுகிறது. நம்மைஅறியாமலேயே அத்துடன் ஒரு விலகல் உருவாகிறது, குறிப்பாக கிராமப் பின்புலம் உடைய வாசகர்களுக்கு. இத்தனை எளிமையான மொழிநடை பலரால் படிக்கமுடியாததாக கூட கருதப்படுகிறது. வெட்டி எடுத்து ,ஒப்பிடும்போது வித்தியாசம் பளீரென்று தெரிகிறது.
அசோகமித்திரனின் நடையின் வேர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கத்திய உலகைப் பாதித்த எழுத்தாளர்களின் மொழிநடையில் தெளிவாக இனம் காணுமளவு தெரிகிறது. ‘தாமஸ் மன்’னின் மெல்லிய புன்னகையுடன் கூடிய, இயல்புத் தன்மை மாறாத நடையில் அசோகமித்திரனிடம் நாம் காணும் பல அம்சங்களை காண முடிகிறது. உத்தி மற்றும் சொற்றொடர் அமைப்புக்களில் நேரடியான பாதிப்பை அசோகமித்திரனில் செலுத்தியவர் என்று ‘ஹெமிங்வே’யைக் குறிப்பிடலாம். பொதுவாக அமெரிக்க எழுத்தின் பாதிப்புதான் அவரில் நிறைய உள்ளது என்று கூறலாம். அதே சமயம் ஹெமிங்வேயின் வாழ்க்கைக் கண்ணோட்டத்திற்கும் அசோகமித்திரனுக்கும் நிறைய இடைவெளி உண்டு. அதிலுள்ள வன்முறை, தாக்கும் வேகம் ஆகியவை இதில் இல்லை. அசோகமித்திரனின் சாமானியனில் முக்கியகுணமாக கோழைத்தனமும், செயலின்மையும் இருந்துகொண்டே இருக்கிறது. ஆயினும் சிறு வட்டத்திற்குள் நுட்பமும், கவனமும் என்ற தன்மை இருவருக்கும் பொதுவாக உள்ளது.
ஒருவகையில் அந்தரத்தில் நிற்பதாயினும் அசோகமித்திரனின் நடை அவருடைய கதையுலகிற்கு மிகச்சரியாகப் பொருந்திவிடுகிறது என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டும். நவீன அமெரிக்க எழுத்தில் வேர் உள்ள மொழிநடை இந்திய, தமிழ்நாட்டு சாமானிய வாழ்வின் சித்தரிப்புக்கு ஏன் இந்த அளவு பொருத்தமாக உள்ளது? அசோகமித்திரன் காட்டும் உலகம் நம்முடைய கைத்தொடும் தூரத்தில் புழங்குவதாயினும் அவருடைய கோணம் எவ்வகையிலும் இந்திய வேர்கள் உடையது அல்ல. இன்று கிட்டத்தட்ட இந்திய புனைகதையுலகில் பாதிப் பங்கை ஆட்சி செய்யும் இந்தக் கோணத்திற்கும், ஐரோப்பிய ஜனநாயக மறு மலர்ச்சி காலத்திற்கும் ஆழமான தொடர்பு உண்டு. முதன் முதலாக சாமானியனை மையம் கொண்ட கோணம் அங்கு உருவாகியது. இன்னும் கூறப்போனால் பிரஞ்சுப் புரட்சியும், அக்காலகட்டத்து உணர்வுகளுமே, இதற்குப் பிறப்புக்காரணம் எனலாம்.
இந்தக் கோணத்தின் வளர்ச்சி ஜனநாயக முறைமைகளாகவும், சாமானியனை நோக்கிச் செயல்படும், நலம் நாடும் அரசுகளாகவும் (Welfare States) வளர்ந்து முற்றிய பிறகு உருவான இலக்கியப் போக்குகளிலிருந்து உத்வேகம் கொண்டவர் அசோகமித்திரன். மிக இயல்பாகவே அவரில் ரஷ்ய இலக்கிய மேதைகளின் அதிக பாதிப்பு இல்லாமலிருப்பதையும் நாம் காணலாம். உணர்ச்சியற்ற தனிமனிதப் பார்வை எனும் கோணம், சாமானியனின் தனிப்பிரக்ஞையை மையமாக்கி எதையும் விவாதிக்கும் மனோபாவம் ஆகியவை மேற்குறிப்பிட்ட ரஷ்ய இலக்கியமேதைகளின் வாழ்க்கைப் பார்வைக்கு அன்னியமானவை. தஸ்தாயெவ்ஸ்கி, தல்ஸ்தோய் முதலியவர்களின் சமூகக் கூட்டுப்பார்வை மட்டுமல்ல, சேகவ்வின் எளிய பிரகாசம் மிகுந்த மனிதாபிமானம் கூட அசோகமித்திரனின் படைப்புக்களில் இல்லை. சாமானியர்களைப் பற்றி நாற்பது ஆண்டுகளாக எழுதிவரும் இந்த கலைஞனை நாம் மிகவும் தயங்கியே ஒரு ‘மனிதாபிமானி’ என்று கூற முடிகிறது.
அசோகமித்திரனின் தார்மீக உணர்வு பெருமளவு மேற்கத்திய தன்மை உடையது. தனிமனித அறச்சார்பு என்ற அந்த மையம்தான், மேற்கத்திய லிபரல் ஜனநாயக முறைமைகளுக்கு அடித்தளம். அது, அசோகமித்திரனின் உலகின் தார்மீக அடிப்படையை தீர்மானிக்கிறது. சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவில் ஒரு வேளை பெரிதும் அன்னியமாக பட்டிருக்கக் கூடிய இம்மையம் இன்று மிகவும் முக்கியத்துவம் பெறக் கூடியதாக ஆகிவிட்டிருக்கிறது. மேற்கத்திய ஜனநாயக முறைமைகள் மற்றும் தனிமனித மனோபாவங்களை அடியொற்றி வெகு வேகமாக தன்னை மாற்றி அமைத்துக்கொண்டிருக்கும் இந்தியச் சூழலில் அதற்கு முக்கியத்துவம் ஏற்பட்டிருப்பது இயல்பானதாகும். அதே சமயம் பழங்குடித்தன்மை கொண்ட இந்திய மரபின் தொடர்ச்சிக்கு அசோகமித்திரனின் இத்தன்மை அன்னியமாக இருப்பதும் இயல்புதான்!.
யதார்த்த – நிதர்சன வாதத்தின் வெற்றிகளும் எல்லைகளும்
அசோகமித்திரனை யதார்த்தவாதி என்று வகைப்படுத்துவது எளிதாகச் செய்யப்பட்டு வரும் செயல். உண்மையும் கூட. நடுத்தர வர்க்க லெளகீகவாதியின் விவேகத்தால் எப்போதும் கட்டுப்படுத்தப் படும் படைப்புலகம் அவருடையது. அவருடைய நோக்கை பழைய பாணியில் வரையறுக்க முயல்வது என்றால் அவருடைய படைப்பு நோக்கின் அடிப்படை கருத்து முதல்வாதமா இல்லை பொருள் முதல்வாத்மா என்ற கேள்வியை கேட்கலாம்.
அசோகமித்திரனை கருத்து முதல்வாதி என்று கொள்ள இயலாது என்பது வெளிப்படை. கருத்து முதல்வாதத்தின் இரு முக்கிய ஓட்டங்களுடனும் அவருக்கு இயைபு இல்லை. மாபெரும் பிரவாகத்தின் காரணத்தை, புனிதமான ஒரு புள்ளியில் குவிக்கும் கடவுள் வாதம் அவரிடம் இல்லை. அவருடைய படைப்புலகில் எங்குமே கடவுள் தென்படுவது இல்லை. பிரவாகத்தின் சலனங்களை தொகுத்து, அதற்கு திசையை நிறுவி, அத்திசையின் முனையில் லட்சியப் புள்ளிகளை நிறுவும் ஹெகல் பாணி மேற்கத்திய கருத்து முதல்வாதமும் அவரிடம் இல்லை.
அவருடைய படைப்புகளில் அசோகமித்திரன் வாழ்வின் பிரவாகத்தை வெறுமே பார்க்கிறார். சலனம் வழியாக அது எந்த விதமான நோக்கத்தையும் நிறைவேற்றுவதை நாம் அங்கு காணமுடிவதில்லை. அது ஒரு முதலிறுதி இருப்பின், இலக்குகளை நிறைவேற்றவில்லை. அதன் சலனங்களுக்கு, ஒட்டு மொத்தமான தருக்கமும் தெரிவதில்லை. இந்த பார்த்தல் ஒரு அத்வைதிக்கு உரியதான விலகல் சார்ந்தது அல்ல. கா. நா. சுவின் ‘பார்த்தலில் ‘ செயல்களை மீறிய பிரவாகம் இது என்ற பிரக்ஞை தரும் விச்ராந்தி உள்ளது. இந்த ‘வெறும் பார்வை ‘யே பொய்த்தேவுவில் சாத்தியமாகியுள்ளது. அசோகமித்திரன் மாயாவாதி அல்ல. நிதரிசன வாதி. அல்லலுறுபவர். கோபப்படுபவர். நெகிழ்பவர். அத்தனை மன எதிர் வினைகளுடனும் வெறுமே பார்த்தபடி இருப்பவர்.
விமரிசனக்குரல் அவர் படைப்புகளில் உள்ளடங்கியதாக, விரக்தி தோணிப்பதாக, எதிர்மறையானதாகவே உள்ளது பெரும்பாலும். இந்தக் கோணத்திற்குக் காரணம் பிரவாக சலனத்தின் தருக்கம், முற்றிலும் பிடிபடாததாக இருக்கிறது என்பதேயாகும். முழுமையான யதார்த்தவாதி, நடைமுறை வாழ்வு சார்ந்த தருக்கத்துடன், வாழ்வை அளக்க முயலும்போது ஏற்படும் பிரமிப்பு இது! இது அவரை எங்கும் இட்டுச்செல்ல இயலாது. அதே சமயம் முற்றிலும் பவுதிகவாதம் சார்ந்த கோணத்தின் அதீத எல்லையான வெறுமையையும், அசோகமித்திரன் அடைவது இல்லை. தற்செயல்களின் தொடர் நிகழ்வான பிரவாகம் என வாழ்க்கையை பார்த்தார் என்றால் மாபெரும் அபத்தமாக ஒவ்வொன்றும் ஆகக்கூடிய – கடவுள் தரிசனத்திற்கு இணையான – அபத்த தரிசனம் அவருக்கு வாய்த்திருக்கும்.
அசோகமித்திரனின் லெளகீக வாதம் எப்போதுமே அதற்கு ஒரு படி முன்னதாகவே நின்று விடுகிறது. பலவிதங்களில் அவருடைய கதையுலகை கம்யூ, சார்த்ரின் உலகுகளோடு ஒப்பிடலாம். சார்த்தரின் – மதில் – (The Wall) கம்யூவின் ‘விருந்தாளி ‘ – அசோகமித்திரனின் ‘காத்திருத்தல் ‘ ஆகிய கதைகளை பரஸ்பரம் ஒப்பிட்டு பார்க்கலாம். நம்பி கோஷமிட்டு செயற்பட்ட ஒரு அரசியல் கோணத்தின் வீழ்ச்சியும் அதனால் உருவாகும் தனிமையும், துரத்தப்பட்டு தாக்கப்படும் நிலையும் ‘ காத்திருத்தலின் ‘ கதைப்பாத்திரத்தை திரும்பிப் பார்க்க வைக்கின்றன. தனது வெறியையும் நம்பிக்கை உத்வேகத்தையும் துணுக்குற வைக்கும் அளவுக்கு அர்த்தமற்றதாக அவன் பார்க்கிறான். சார்த்தரின் கதையில் மையக் கதாபாத்திரம் முற்றிலும் அவனை மீறிய தற்செயல் நிகழ்வுகளினால், துரோகியாக ஆக்கப்படுகிறது. கம்யூவின் கதையில் உருவாக்கிக் காட்டுகிறது.
அசோகமித்திரனின் கதையில் அர்த்தமின்மை, ஒரு எல்லை வரை வந்து நின்று விடுகிறது. மத்தியதரக் குடிமகனாகிய தனக்கு இந்த போராட்டங்களும் நம்பிக்கைகளும் உண்மைஒயில் எதற்க்காக என்று அம் மையக்கதாபாத்திரம் நினைக்கலாம். அடிப்பவன் – அடி பட்பவன் இருவருமே மத்திய வர்க்கத்தினர். காரணமோ அவர்களுக்கு எவ்வகையிலும் சம்பந்தமற்றது. முற்றிலும் அவர்களை மீறிய வேறு எவருடையவோ இச்சைகளுக்காக சம்பந்தமில்லாத நாடகம் ஒன்றில் நடிக்கும்படி ஆகியிருக்கிறார்கள் – இவ்வளவுதான். அசோகமித்திரனின் உலகில் கதாபாத்திரங்களின் இந்த மனநிலையானது மீண்டும் மீண்டும் தென்படுகிறது. ‘பதினெட்டாவது அட்சக்கோட்டில் ‘ ரசாக்கர்களுக்கு எதிராக போராடும்படி தூண்டி மாணவர்ககளுக்கு கைவளையல் தந்து கிண்டல் செய்யும் மாணவிகளைப் பார்த்தபடி சந்திரசேகரன் நினைப்பது ஒர் உதாரணம்.
[மேலும்]