காந்தி, வரலாறு- கடிதம்

gandhi_391605

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,

இது என்னுடைய இரண்டாவது மின்னஞ்சல் கடிதம், முதல் கடிதம் இன்னும் பிரசுரமாகவில்லை, இருந்தாலும், துணிந்து இதை உங்களுக்கு எழுதுகிறேன். .

ஏன் நாம் வரலாற்றை வெறுக்கிறோம்? என்ற தலைப்பில் Dec 19, 2012 அன்று வெளியிட்ட கேள்வி பதில் பகுதியின் மறு பிரசுரத்தை இன்று வாசித்தேன். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தங்களின் கருத்தை அப்படியே ஏற்கிறேன். இருந்தாலும், ”சரளாராணி சௌதராணியைப்பற்றி சொல்லிவிட்டேன் என்பதற்காக தமிழகத்தின் காந்திய அமைப்புகள் எவையும் ‘இன்றையகாந்தி’ நூலை வாங்கவில்லை” என்ற தங்களின் கருத்தை மட்டும் என்னால் ஏற்க முடியவில்லை, இங்கே சென்னையில் நாங்கள் நடத்தி வரும் காந்திய அமைப்பின் சார்பாக, ”இன்றைய காந்தி” புத்தகம் வெளிவந்த தருணத்திலேயே ஏறக்குறைய 10 புத்தகங்கள் வாங்கி அதை நண்பர்களுக்கு இலவசமாக விநியோகித்ததோடு மட்டுமல்லாமல், எங்கள் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் புத்தக அறிமுக கூட்டத்திலும் அப்புத்தகம் வெளி வந்த அதே வாரத்திலேயே அப்புத்தகத்தை அறிமுகம் செய்து பேசினோம்.
மதுரையில் இருந்த மூத்த காந்தியர் ஒருவர் “தமிழில் இப்படி ஒரு நூல் இதுவரை காந்தியைப் பற்றி வந்ததில்லை” சிலாகித்துப் பேசினார். அதற்குப் பின்னர் உங்களுடைய பல நூல்கள் எங்கள் மையத்தில் அறிமுகப்படுத்தப் பட்டன. சென்ற வாரம் கூட “இன்றைய காந்தி” மற்றும் “பின் தொடரும் நிழலின் குரல்” ஆகிய இரண்டு நூல்களையும் என் நண்பர் ஒருவருக்கு வாசிக்க என்னிடமிருந்த பிரதிகளை அவருக்கு அளித்துள்ளேன். ”இன்றைய காந்தி” க்கு முன்னரே நான் உங்களை அறிந்திருந்தும், காந்தி பற்றிய உங்களுடைய இணையப் பதிவுகளை பார்த்த பின்னர் தான் உங்களுடைய பிற படைப்புகளையும் வாசிக்கத் துவங்கினேன். இன்று தினமும் உங்கள் எழுத்துக்களை வாசிக்காமல் பெரும்பாலும் உறங்கச் சென்றதில்லை.

காந்தியைப் பற்றிய தங்களுடைய பார்வை என்னைப் போன்றோருக்கெல்லாம் ஏற்புடையுதே. ஏன், அவரைப் பற்றிய தங்களுடைய கருத்துக்கள் மேலும் மிகச்சிறந்த புரிதல்களை என்னைப் போன்றவர்களுக்கு அளித்துள்ளதாகவே கருதுகிறேன்.

சமீபத்தில் கோவையில், தாங்கள் ஆற்றிய காந்தி பற்றிய உரையின் ஒலி வடிவத்தை எங்கள் அமைப்பினர் அனைவரும் கேட்டோம். அதில் காந்தியர்களிடமும் காந்திய அமைப்பினடமும் காந்தி எவ்வாறு மாட்டிக் கொண்டுள்ளார், என்ற தங்கள் கருத்தைப் பற்றித்தான் அதிகம் விவாதித்தோம் என்று தெரிவித்துக் கொள்வதோடு என்னுடைய இந்த அதிகப் பிரசங்கித் தனத்தை நிறுத்திக் கொள்கிறேன்.

இப்படிக்கு

சரவணன்

அன்புள்ள சரவணன்

நான் எல்லா காந்திய அமைப்புகளையும் சொல்லவில்லை. பல காந்திய அமைப்புகளிடமிருந்து எனக்கு அவ்வாறு சொல்லப்பட்டது.

அது பரவாயில்லை. ஒரு காந்திய அமைப்பு என்னிடம் ‘உங்களுக்குத்தான் இந்த வருடத்துக்கான காந்திய இலக்கியத்துக்கான விருது. முடிவு பண்ணிட்டோம். வழக்கமா பரிசு குடுக்க புக்கே அகப்படுறதில்லை சார். எதாவது ஒண்ணை கண்டுபிடிச்சு பரிசு குடுக்கிறதுதான் வழக்கம். இல்லாட்டி நாங்களே அம்பது அறுபது பக்கத்துக்கு ஒண்ணை எழுதிக்கிறது. இந்தவருஷம் சாலிடா ஒரு புக் இருக்கு. நல்லாவும் இருக்கு” என்றார்

கொஞ்ச நாள் கழிந்து சந்தித்தேன். “சாரி சார். நீங்க வேளாளான்னு நினைச்சு சொல்லிட்டேன். உங்க விக்கிபீடியா எண்டிரியிலே உங்க அப்பா பேரு பிள்ளைன்னு இருந்தது. நாங்க போனவாட்டி தேவருக்கும் அதுக்கு முந்தினவாட்டி கோனாருக்கும் குடுத்தோம். இந்தவாட்டி பாத்திடலாம்னு நினைச்சேன். நீங்க மலையாளின்னு சொன்னாங்க’ என்றார் “ஆமா சார்” என்றேன் சோகமாக. “சாரி சார்” என்று அவரும் சோகமாகச் சொன்னார்

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி : நொபுரு கரஷிமா
அடுத்த கட்டுரைபிகார் மதுவிலக்கு