பௌத்தம் கடிதங்கள்

1

வணக்கம்

உங்களுடைய எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஆனால், முதல் முறையாக தற்போதுதான் நான் உங்களை தொடர்பு கொள்கிறேன். எத்தனையோ முறை உங்கள் எழுத்துக்களை வாசித்து விட்டு அதைப்பற்றி உடனே உங்களிடம் என் கருத்துக்களை பகிர வேண்டும் என்று தோன்றும் ஆனால் துணிச்சல் இல்லாமல், அம்முயற்சியினை கைவிட்டுவிடுவேன். ஆனால் இன்றிரவு உங்களுடைய ”இந்துமதம்,ஆத்திகம், நாத்திகம்” குறித்த மறு பதிவினை வாசித்த பிறகு, இதை எழுதுகிறேன்.

ஆத்திகம் மற்றும் நாத்திகம் குறித்த உங்கள் விளக்கம் எனக்கு பல புதிய புரிதல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, பெளத்தம் மற்றும் சமணம் போன்றவை பொருள் முதல் வாத மதங்கள் என்றே என் மனம் நம்பினாலும் கூடவே அதை ஏற்காதது போன்றும் என் மனம் எதிர்வினை புரியும் அது ஏன் என்று புரியாமல் இருந்தேன். உங்களுடைய இந்த கட்டுரையை வாசித்த பின் ஒரு தெளிவு பிறந்தது. நன்றி,

காஞ்சீபுரம் சரவணன்

*

ஜெ

பௌத்த கட்டிடக்கலை பற்றிய உங்கள் கட்டுரை ஒரு பெரிய திறப்பாக இருந்தது. பௌத்தம் பற்றி நிறைய வாசித்திருந்தாலும் பௌத்த கட்டிடக்கலையின் வரலாறு நம்முடைய கட்டிடக்கலையில் செலுத்தியிருக்கும் செல்வாக்கை எண்ணிப்பார்த்ததில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் கார்லே , ஃபாஜா எல்லா இடங்களுக்கும் நான் சென்றிருக்கிறேன்.

உண்டவில்லி பௌத்த குகைகளிலிருந்து வாதாபி குடைவரைகளுக்கும் அங்கிருந்து பல்லவர்கால குடைவரைக்கும் அங்கிருந்து மாமல்லபுரத்துக்கும் ஒரு கோடு வரைந்தால் தமிழகச் சிற்பக்கலையை அறிந்துவிடமுடியும் என்ற எண்ணம் வந்தது

நன்றி

அருண்

*

அன்புள்ள ஜெ,

// அவருக்கு நான் மணிமேகலை பற்றிச் சொன்னேன். உலக அளவில் பௌத்தத்திற்கு என ஒரு காவியம் மட்டுமே உள்ளது, அது தமிழில் உள்ளது. அதன் நாயகி ஒரு பெண், கணிகையும்கூட //

என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் (இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9). இது சரியல்ல. பௌத்தத்தின் முதலாவதும் புகழ்பெற்றதுமான மகாகாவியம் என்றால் அது அஸ்வகோஷர் சம்ஸ்கிருத மொழியில் எழுதிய “புத்த சரிதம்” தான். (பொ.பி. இரண்டாம் நூற்.). புத்தரின் வரலாற்றை விவரிக்கும் நூல். இவரே சௌந்தரானந்தம் என்ற மற்றொரு பௌத்த காவியத்தையும் எழுதியிருக்கிறார். புத்தரின் உறவினனான நந்தனுக்கும் சுந்தரிக்குமிடையேயான காதலையும், அவர்கள் புத்தநெறி தழுவுவதையும் கூறும் காதை இது. அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் சம்ஸ்கிருதத்தில் பல பௌத்த காவியங்கள் எழுதப் பட்டன. ஆரிய சூரர் போதிசத்வரின் முற்பிறவிக் கதைகளைத் தொகுத்து எழுதிய ஜாதகமாலா, ஆர்யதேவரின் சதுஷ்சடிகா, சந்திரகோமி எழுதிய சிஷ்யலேகதர்மகாவியம், சாந்திதேவரின் போதிசர்யாவதாரம் போன்றவை இதில் அடங்கும். புத்தரின் தெய்வீக இயல்பையும் மகாயானத்தையும் நிலைநிறுத்துவதே இவற்றின் முக்கியப் பணியாக இருந்தது. அழகிய கவித்துவம் கொண்ட அஸ்வகோஷரின் முதல் இரு காவியங்கள் தவிர்த்து, மற்றவை அனைத்தும் மிக சாதாரணனமானவை. சம்ஸ்கிருத இலக்கிய வரலாற்று நூல்களில் பட்டியல்களாக வருவதைத் தாண்டி, அவை பரவலாகக் கற்கப் படுவதில்லை. நாகார்ஜுனர், வசுபந்து, தர்மகீர்த்தி போன்றவர்கள் பௌத்தத்தை முழுவதுமாக தூய தத்துவத்திற்குள் கொண்டு சென்று விட்டதால், பின்னர் காவியங்கள் எழவில்லை.

இதன் தொடர்ச்சியாகவே பாலி, பைசாசி, தமிழ், சிங்களம் போன்ற மொழிகளிலும் பௌத்த காவியங்கள் எழுதப் பட்டன. சிங்களத்தின் முதல் காவியமான மகாவமிசம் அதிலொன்று. தமிழில் மணிமேகலை, குண்டலகேசி இரண்டுமே பௌத்த காவியங்கள். மகாவமிசம் பௌத்தத்தை இலங்கையின் சிங்கள அரசவம்ச வீரகாதைகளுடன் இணைப்பது போல, மணிமேகலை தமிழில் ஏற்கனவே வழங்கிய காதையை பௌத்தத்துடன் இணைக்கிறது. புத்தரை வரவேற்று உபசரித்து அவரது தர்ம நெறியை ஏற்று பிக்குணியாக மாறிய ஆம்ரபாலி என்ற கணிகையின் கதை ஏற்கனவே புத்தரின் சரிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதன் நீட்சியே மணிமேகலை.

சிலப்பதிகாரத்தின் உணர்வெழுச்சியும் காவிய நயங்களும் எதுவுமில்லாமல், மணிமேகலை பௌத்த சமய நெறிகளையும் தத்துவ வாதங்களையும் மட்டுமே சத்தமாக எடுத்துரைக்கும் வகையில் தட்டையாக அமைந்துள்ளதை இலக்கிய விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். அந்த வகையில் பௌத்த காவியங்களின் பொது இயல்பின் படியே அது அமைந்துள்ளது.

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு

இந்த கேள்விக்கான விளக்கத்தை முன்னரே எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். அஸ்வகோஷரின் புத்தசரிதம் பற்றியும், மகாவம்சம் பற்றியும் எழுதியிருக்கிறேன். பிற பௌத்த நூல்களைப்பற்றியும் சிறிய குறிப்பு ஒன்று எழுதியிருக்கிறேன்.

புத்தரின் வரலாற்றையும் பௌத்தஜாதகக் கதைகளையும் கூறும் செய்யுள்நூல்கள் அனைத்தையும் காவியங்கள் என்று கொண்டால் மட்டுமே நீங்கள் சொல்வது சரி.

ஆனால் அஸ்வகோஷருடையது சரித்திரநூல். ஜாதகக்கதைகள் போன்றவை புராணத்தொகுதிகள். மகாவம்சம் முதன்மையாகக் அரசகுலவரலாறு. இவையெல்லாம் காவியங்கள் அல்ல. செய்யுளில் அமைந்தவை என்பதனாலேயே காவியங்களாகக் கொள்ளக்கூடாது

நாம் காவியம் என்னும்போது புராணங்களையும் தலவரலாறுகளையும் குலவரலாற்று நூல்களையும் அதில்சேர்ப்பதில்லை. காவியம் என்பது தனியான ஒரு கதையோ அல்லது மூலக்கதையில் இருந்து எழுந்த ஒரு கருவோ சுதந்திர மறுஆக்கம் செய்யப்படுவது. ஒரு காவியகர்த்தனின் ஆன்மா வெளிப்படுவது. பொதுவாக காவிய இலக்கணங்கள் கொண்டது.

அவ்வகையில்தான் மணிமேகலையே இன்று கிடைக்கும் ஒரே சுதந்திரமான பௌத்த காப்பியம் என்று சொன்னேன். இதை நான் நீண்ட ஓரு கட்டுரையாகவும் பல்கலை ஒன்றில் முன்வைத்துள்ளேன்

நீங்கள் சொன்ன பட்டியல் பிரபலமானது. அதில் ஓரளவேனும் காவியம் என சொல்லத்தக்கது அஸ்வகோஷரின் புத்தசரிதம். ஆனால் அதில் மறு ஆக்கம் என்னும் அம்சம் இல்லை. அது வரலாறு மட்டுமே.

மணிமேகலைக்கும் அம்ரபாலி கதைக்கும் பொது அம்சம் என ஏதுமிருப்பதாக என் பார்வையில் தெரியவில்லை. அம்ரபாலி ஓர் அழகிய கணிகை, அவளுக்காக அரசர்கள் போட்டியிட்டனர் , அவள் பின்னர் பௌத்தநெறி சார்ந்தாள். மணிமேகலை கணிகையாக இருக்கவேயில்லை. மணிமேகலை காவியத்தின் முக்கியமான அம்சமே பசிப்பிணி போக்கல்தான்.

மணிமேகலையைப் பற்றிய பொதுவான புலவர் கருத்து ஏற்கத்தக்கது அல்ல. அதை வாசிப்பதற்கான இலக்கியரசனைமுறைகள், விமர்சிப்பதற்கான இலக்கியக் கருவிகள் இல்லாத நிலையில் பொதுவான பழந்ததமிழிலக்கிய ரசனையைக்கொண்டு மதிப்பிட்டு உருவாக்கப்பட்ட எதிர்மறைக் கருத்து அது

மணிமேகலை சிலப்பதிகாரம்போல உணர்ச்சிகர நிகழ்ச்சிகள், பாவியல்பு ஆகியவற்றால் ஆனது அல்ல. அது குறியீடுகள், மறைபொருட்கள் ஆகியவற்றாலான காவியம். பௌத்த குறியீட்டு மரபுடன் அதை இணைத்து வாசிக்கவேண்டும். அதன் படிமங்களை நவீன வாசிப்புமுறையால் விரிவாக்கிக்கொள்ளமுடியும். அப்போது அது பல பொருளடுக்குகளைத் திறந்து காட்டும் ஒரு நூலாக ஆவதைக் காணலாம்.

ஜெ

பளிக்கறை பிம்பங்கள்

முந்தைய கட்டுரைஉபியும் பிகாரும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74