இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11

காலையில் தாமதமாக எழுந்தால்போதும் என்று சரவணன் சொல்லியிருந்தார். அன்று முழுக்க யோக்யகர்த்தா நகரைப் பார்வையிடுவதுதான். ஆகவே காலை எழுந்ததும் வெண்முரசு எழுதிவிட்டு குளித்து நிதானமாகக் கிளம்பினேன்.

முந்தையதினம் காலை மூன்றரைக்குக் கிளம்பி இரவு பத்துக்கு வந்ததுமே அருண்மொழி அதே வேகத்தில் படுத்துக்கொண்டாள். நான் அதன்பின் வெண்முரசு கொஞ்சம் எழுதினேன்.

இத்தனை அலைச்சலிலும் அது கூடவே வந்துகொண்டிருக்கிறது. முன்னரே எழுதிவைக்கமுடியவில்லை .ஆகவே ஒவ்வொருநாளும் மறுநாளைக்குரியதை எழுதினேன்.ஆச்சரியம் என்னவென்றால் நெருக்கடியில் எழுதினால் சிறப்பாக வரும். யோசிக்க ஆரம்பித்தால் ஒன்றுமே தோன்றாமல் நேரம் அழியும்.

ஒன்பது மணிக்குக் கிளம்பி யோக்யகர்த்தாவின் க்ரதான் அரண்மனை வளாகத்துக்குச் சென்றோம். கேரதன் ஜோக்யகர்த்தா ஹதினிக்ராத் என்று இது அழைக்கப்படுகிறது. 1755ல் அன்றைய யோக்யகர்த்தாவை ஆண்ட அரசரான மங்குபுமி என்பவரால் கட்டப்பட்டது.


அரண்மனை என்று ஒரு சம்பிரதாயமாகத்தான் சொல்லவேண்டும். சுதையாலும் இரும்பாலும் தகரத்தாலுமான ஒரு பழைய வீடு. சிற்பங்களென ஏதுமில்லை. ஒரு அருங்காட்சியகம். அதில் சில சாரட் வண்டிகள், பழைய புகைப்படங்கள்.

புகைப்படங்களில் அரசநிகழ்ச்சிகள். எதிலும் பத்துப்பதினைந்து வாளேந்தியவீரர்களும் சில ஏவலர்களும் மட்டுமே. பார்வையாளர்களாகிய மக்களில் பெரும்பாலானவர்கள்ச் சட்டைபோடாமல் கோவணம் போன்ற உடை அணிந்தவர்கள். சிலர் வேடிக்கைபார்த்தபடி தரையில் அமர்ந்திருக்கிறார்கள். பாவப்பட்ட சுல்தான் போலிருக்கிறது.

அரண்மனை வளாகத்திலும் பார்க்க ஒன்றுமில்லை. சுவராசியமான ஒரே அம்சம் ஆங்காங்கே கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த சேவல்கள். ஏதாவது சடங்கா இல்லை மத்தியான்னச் சமையலுக்கா என்று தெரியவில்லை.

வெளியே சிறுவணிகர்கள் கலைப்பொருட்களையும் பிளாஸ்டிக்பொருட்களையும் விற்றனர். இந்தோனேசியத் தொப்பி நம்மூர் இமாச்சலப்பிரதேசத் தொப்பி போல வண்ணமயமானது. ஏகப்பட்ட பெர்முடாக்களை குவித்துப்போட்டு விற்றனர். சவுரிமுடிகூட விற்கப்பட்டதைக் கண்டேன்

தமானஸரி என்னும் நீர்மாளிகையைப்பார்க்கச் சென்றோம். இதுவும் சுதையால் கட்டப்பட்டது. உள்ளே அக்காலத்தில் சுல்தான் நீச்சல்குளம் அமைத்திருக்கிறார். இன்று பாசிபடிந்த நீர். அதில் அக்காலத்தில் அழகிகளை நீந்தவிடுவாராம்.

அவர் கையில் ஒரு ரோஜாவுடன் வந்து உப்பரிகையில் நின்று பார்வையிடுவார். ரோஜாமலரை விட்டெறிவார்.அது யார்மீது படுகிறதோ அவள் அன்று சுல்தானுடன் படுக்கையில் இருப்பாள். நல்லவிஷயம் என்று பட்டது. ஆனால் தப்பித்தவறி ஏதாவது செவிலிக்கிழவிமேல் பட்டுவிட்டால் அதை ரத்துசெய்யும் அதிகாரம் சுல்தானுக்கு உண்டா என்று தெரியவில்லை.

இந்த அரண்மனை வளாகமும் காலியாகவே கிடக்கிறது. அரண்மனைக்குள்ளேயே சிறிய கடைகள் உள்ளன. வெள்ளைக்காரப்பயணிகள் உட்கார்ந்து சாப்பிடுவதற்கான சிறிய இடங்கள் ஆங்காங்கே. வெயிலில் சுற்றிவந்தோம். அந்த இடத்தின் வினோதமான தன்மையே ஒரு கவர்ச்சிதான்.

பலசமயம் நாம் சலிப்பும் ஆர்வமின்மையுமாக பார்க்கும் இந்த இடங்கள் நம் ஆழ்மனத்தில் மிக அழுத்தமாகப்பதிந்து என்றென்றைக்குமாக கனவாகிவிடுகின்றன. இந்த இடத்தில் சுற்றிச்சுற்றி வந்தபோது ஏனோ காசி ஞாபகம் வந்தது.

மெராப்பி எரிமலையைப்பார்ப்பதற்காகச் சென்றோம். ஜாவாவின் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்று இது. இப்பகுதியே எரிமலையடுக்குகளால் ஆனதுதான். மெராப்பி மலை என்றாலே எரிமலை என்றுதான் பொருள்.

உலகின் அணையா எரிமலைகளில் ஒன்று இது. வருடத்தில் பெரும்பாலான நாட்களில் இதன்மேல் கந்தகமேகம் இருந்துகொண்டிருக்கும் அவ்வப்போது இடியோசையுடன் புகைந்து வெடிப்பதுண்டு. செங்குத்தான கூம்பு வடிவம் நெடுங்காலமாக எரிமலைக்குழம்பு வடிந்து உருவானது.

1500 கள் முதல் அடிக்கடி இது வெடித்துக்கொண்டிருக்கிறது. இதன் அடிவாரம் செழிப்பான மண் என்பதனால் பல ஆயிரம் கிராமங்கள் உள்ளன. பெரும்பாலும் நெல், சோளம் பயிரிடும் கிராமங்கள். 1994ல் எரிமலைக்குழம்பு பீறிட்டதில் 27 பேர் உயிரிழந்தனர்.

2006ல் அடுத்த மிகப்பெரிய வெடிப்பு. அதைத்தொடர்ந்து யோக்யகர்த்தா முழுக்க நிலநடுக்கம் ஏற்பட்டது. யோக்யகர்த்தாவில் பெரிய மாடிக்கட்டிடங்கள் இல்லாததை அந்த எரிமலையைப்பார்த்தபின்னரே புரிந்துகொள்ளமுடிந்தது.

கடைசியாக அக்டோபர் 25, 2010 ல் மெராப்பி வெடித்தது. இருபது கிமீ சுற்றளவில் வாழ்பவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். கிட்டத்தட்ட இருபத்தைந்து முறை பூமிநடுங்கியது. ஒரு கிமீ உயரத்துக்கு புகையும் கரியும் எரியும் பாறைகளும் பீரிட்டெழுந்தன.

இருபத்தைந்தாம் தேதி தெற்குதிசைநோக்கி லாவா பீரிட்டெழுந்து வழிந்தது. எரிமலை நவம்பர் வாக்கில் அடங்கத்தொடங்கியது. இன்று இது 2930 மீட்டர் உயரமுள்ளது. இதில் 38 மீட்டர் உயரம் வெடிப்பால் குறைந்தது.

ஆனால் நவம்பர் 2013ல் மீண்டும் மெராப்பி வெடித்தது. இரண்டு கிமீ உயரத்துக்கு புகையும் சாம்பலும் எழுந்தன. மீண்டும் அது சிலவருடங்களில் வெடிக்கும் என்னும் எதிர்பார்ப்பு உள்ளது. தொலைவில் அதைப்பார்க்கையில் புகைந்துகொண்டிருக்கும் தீபாவளிப் பூவாளிப் பட்டாசு போலத்தான் தோன்றியது

மெராப்பி எப்போதும் எரிந்துகொண்டிருந்த மலைதான்.1930ல் முப்பது கிராமங்கள் முற்றாக அழிந்து 1400 பேர் இறந்திருக்கிறார்கள். இருந்தும் அத்தனை கிராமங்கள் அதைச்சூழ்ந்திருப்பதை நம்பமுடியவில்லை. இரவில் இருளுக்குள் கேட்கும் அந்த மலையின் உறுமலை எப்படி அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்?

1 [மெராப்பி வெடித்தது, புகைப்படம்]

மெராப்பி எரிமலை 1006ல் வெடித்து மொத்த ஜாவா தீவையுமே எரிசாம்பலால் மூடி அழித்தது. அன்றிருந்த இந்து பேரரசான மரதாம் அழிந்தது அதன் மூலமே. பரம்பனான் ஆலய வளாகங்களும் போராப்புதூர் தூபியும் எரிமலைச்சாம்பலின் அடியில் மூழ்கின. இன்றுள்ள ஜாவாவே தோண்டி எடுக்கப்பட்டதுதான் என்றால் மிகையல்ல

மெராப்பி எரிமலையின் அடிவாரத்தில் இருந்த கலியுராங் என்னும் கிராமம் எரிமலைக்குழம்பு பீறிட்டு வருவதன் ஒலியைக்கேட்டது. அவர்கள் உடனே ஊரைக்காலிசெய்தனர். ஜாவா நிர்வாகம் உச்சகட்ட எச்சரிக்கையை அறிவித்தது. மலைச்சரிவின் கிராமங்கள் காலிசெய்யப்பட்டன

எரிமலைச்சாம்பல் விழுந்து அந்தக்கிராமம் முழுமையாக அழிந்தது. மனிதர்கள் எவரும் சாகவில்லை. கால்நடைகளும் வீடுகளும் எரிந்து உருகி அழிந்தன. அந்த அழிவுகளை அக்கிராமத்திலேயே அருங்காட்சியகமாக வைத்திருக்கிறார்கள்.

மெராப்பியின் அடிவாரத்தில் இருந்த சுற்றுலாமையத்தில் எங்கள் காரை நிறுத்திவிட்டு பெரிய சக்கரங்கள்கொண்ட ஜீப்புகளில் ஏறிக்கொண்டோம். மூச்சுவடிகட்டிகள் அளிக்கப்பட்டன. புழுதி பறந்த கரடுமுரடான சாலையில் சென்று கலியுராங் கிராமத்தை அடைந்தோம்

அருங்காட்சியகமும் அப்பகுதியின் நிலமும் முழுக்க சாம்பலால் மூடப்பட்டிருந்தன. சிமிண்ட் தொழிற்சாலை வளாகம் போலிருந்தது அது. எங்கும் மென்சாம்பல் புழுதி.

அருங்காட்சியகத்தில் எரிமலைச்சாம்பலில் உருகிய வீட்டுப்பொருட்களை வைத்திருந்தனர். கருகிய நூல்கள். உருகிய ஒலிநாடாக்கள். தொலைக்காட்சிப்பெட்டி பாதி கல்லாக இருந்தது. மாடுகள் எலும்புக்கூடுகளாகிவிட்டிருந்தன.

இரும்புப்பொருட்களும் கல்லும் கலந்து அவை மீண்டும் இரும்புக்கனியாக மாறியவை போலிருந்தன. இத்தனைக்கும் இங்கு பெய்தது வெறும் கரிமழைதான். லாவா அல்ல.

புழுதியில் நடனமிட்டுச்சென்ற ஜீப்பில் ஏறி மேலே சென்றோம். மெராப்பி எரிமலையின் அருகே உள்ள மலையுச்சி வரை. கண்ணை நிறைக்கும் வெறுமையும் விசித்திரமான அழகும் கொண்ட நிலம் அது.


மெராப்பி குமுறிக்கொண்டிருந்தபோது அதைப்பார்வையிடுவதற்காக ஒரு சுரங்க அறை அமைத்திருந்தனர். அதற்கு நேர்முன்னால் பிரம்மாண்டமாக எழுந்து நின்றிருந்த மெராப்பியின் கூர்முனைச்சிகரத்தின் படம் அங்கிருந்தது. அது இப்போது இல்லை.

இன்று அந்த இடம் உடைந்து இடைவெளியாகிவிட்டிருக்கிறது. பெரிய மலையிடுக்கு. அதில் ஓர் ஆறு சென்று வற்றிய தடம்போல மாபெரும் பள்ளம். ஆனால் நீர் இல்லை. வெடித்து வானிலெழுந்த மண் அள்ளிக்குவிக்கப்பட்டதுபோல பெருகிக்கிடக்கிறது. பல கிலோமீட்டர் தொலைவுக்கு.

மெராப்பியின் சரிவில் அந்த குமுறிக்கிடந்த மண்ணில் சாலையமைத்து லாரிகளைக் கொண்டுசென்று இறக்கி கனிமங்களை தேடிச்சேர்த்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தனர். மண்ணின் அடியிலிருந்து பீறிட்டு வந்த மூலப்பொருட்களில் முக்கியமான பல உலோகங்கள் உள்ளன. முதன்மையாக இரும்புத்தாது

அங்கிருந்து கீழே நோக்கியபோது சாம்பல்நிறமான புழுதியில் வண்டுகள்போல லாரிகள் சென்றன. புழுக்கள் போல மனிதர்கள் வேலைபார்த்தனர். அவர்களின் ஓசை எரிமலைப்புகை மண்டிய வானிலிருந்து என ஒலித்தது

நெஞ்சை கனக்கவைக்கும் இடம். ஆனால் மெராப்பிமுனை இருந்த இடத்தில் கருமுகில் விலகி ஒளி பெருகி இறங்கியிருந்தது. ஒரு வகையான தியான நிலை கைகூடியது. அதன் கரையில் நெடுநேரம் அமர்ந்திருந்தேன்.

அது இமையமலையை நினைவுறுத்தியது. அள்ளிக்குவித்ததுபோன்ற மண் காரணமாக இருக்கலாம். அல்லது அந்த மாபெரும் விரிவு. கூம்புமலைகள். இமையமலையில் எரிமலை வாய்கள் சில உள்ளன. அவை வெந்நீர் ஊற்றுக்கள். சமீபத்தில் லடாக்கில் ஒரு வெந்நீர் ஊற்றில் குளித்தோம். கந்தகநீர் அது.

ஆனால் எரியும் மலை என ஏதும் இன்று இமையத்தில் இல்லை. மகாபாரதத்தில் கந்தமாதன மலை என்னும் மலை அங்கே இருந்ததாக வருகிறது. நாற்றமடிக்கும் மலை, கந்தகமலை என்று பெயர். அன்று ஓர் எரிமலை இருந்திருக்கலாம்

மெராப்பி பற்றி பல கதைகள் இம்மக்களிடையே உள்ளன. நிலையற்று ஆடிக்கொண்டிருந்த ஜாவா தீவை சமன்படுத்த பூதங்களால் நகர்த்தி வைக்கப்பட்ட மலை என்று ஒரு தொன்மம். அகத்தியர் கதைபோல

ஆனால் எனக்கு அது சிவரூபம் என்றே தோன்றியது. பூமி என்னும் அனல்கட்டியின் மேல் சிறியதோர் உயிர்ப்படலம். அதில் சாம்ராஜ்யங்கள், பண்பாடுகள், கலைகள் இலக்கியங்கள். உள்ளே குமுறிக்கொண்டிருக்கிறது ஆற்றலென வெம்மையென பிரபஞ்சத்தை நிறைத்திருக்கும் பேரனல்

படங்கள்
Sultan Palace, Merapi Volcano & Sambisari Temple

முந்தைய கட்டுரைஏன் நாம் வரலாற்றை வெறுக்கிறோம்?
அடுத்த கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் புகைப்படங்கள் 1