விருதும் வசையும்

pranab-mukherjee

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

17.11.2015 தமிழ் இந்து நாளிதழில் திரு .பிரணாப் முகர்ஜி அவர்கள் ஒரு அருமையான கருத்தை பேசியுள்ளார்கள் அது ,”தகுதிக்கான அங்கீகாரமே விருது “.

வெளியான பல படைப்புகளில் இருந்து தகுதியானது என கருதி ஒரு படைப்புக்கு விருது வழங்கப்படுகிறது . ஒரு படைப்பாளி அவ் விருதை எக் காரணம் கொண்டு திரும்பிக் கொடுத்தாலும், அவரே தம் படைப்பு விருதுக்கு “தகுதியற்றது ” என்று அறிவிக்கிறார் என்றே பொருள் கொள்ள வேண்டும் . சற்று ஆழ்ந்து நோக்கினால் விருது முதலில் படைப்புக்குத்தான் . படைப்பின் சார்பாகத்தான் அவன் அந்த விருதைப் பெறுகிறான் திருக்குறளை விட திருவள்ளுவர் முக்கியமானவரா ?

எனவே விருதைத் திருப்பி கொடுப்பவர்களிடம் இருந்து அதனுடன் கொடுத்த சன்மானத்தையும் திரும்ப வாங்க வேண்டும் . மேலும் படைப்பு அரசு சார்பில் அச்சிடப்பட்டிருந்தால் அதற்கான நஷ்ட ஈட்டையும் அரசு கோர வேண்டும் .

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடக்கும் இந்தக் கோமாளிக் கூத்துக்களை இதன் மூலமே தடுக்க முடியும் .

அன்புடன்

பா . சரவணகுமார்
வடசேரி நாகர்கோயில்

அன்புள்ள சரவணக்குமார்

இந்த விவாதம் பிகார் தேர்தலுடன் முடிந்துவிட்டது. இனிமேல் இதைப்பேசிப் பயனில்லை என நினைக்கிறேன். எங்கு இனிமேல் தொடரும் என்றால் நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது பாரதிய ஜனதாக்காரர்கள் ஏதேனும் காரணம் சொல்லி அன்றைய எழுத்தாளர்கள் இதேபோல விருதைத் திருப்பிக்கொடுக்கச்சொல்லி வாதிட்டு கொடுக்காதவர்கள் கோழைகள், எரியும்போது பிடில் வாசிப்பவர்கள் என்று சொல்லி நல்ல எழுத்தாளர்களை அவமதிப்பார்கள், அப்போது.

இந்த விருதுமறுப்பு அரசியலில் முன்னின்றவர் எவர்? இடதுசாரிகளின் உலகான மலையாளத்தில் ஒரே ஒரு அரசியல் எழுத்தாளர் .விருது பெற்ற இலக்கியமேதைகள் எவரும் திருப்பியளிக்கவில்லை. மேற்கு வங்கத்தின் மகத்தான இடதுசாரி எழுத்தாளர் எவரும் விருதைத் துறக்கவில்லை. கன்னடத்தின் மாபெரும் படைப்பாளிகள் எவரும் விருதை மறுக்கவில்லை.

அரசியல் மிக தற்காலிகமானது. அரசியல்வாதிகளுக்கு அது பெருந்தொழில். நோக்கர்களுக்கு அது குடிசைத்தொழில். ஃபேஸ்புக்வாலாக்களுக்கு அது பொழுதுபோக்கு விளையாட்டு.கொஞ்சநாள் பற்றவைத்து எரியவைத்துவிட்டு அடுத்த எரிதலுக்குச் சென்றுவிடுவார்கள். இலக்கியம் அந்த அலைகளைப் பின் தொடர்ந்தால் அது இலக்கியம் அல்ல. அதை அறிந்தவர்களே இலக்கியவாதிகள்.

தமிழ்ச்சமூகம் கலைகள், இலக்கியம் எதன் மேலும் மதிப்பற்றது. எழுத்தாளன் பயனற்ற எதையோ செய்பவன் என்னும் எண்ணம் கொண்டது. எழுத்தாளனை அவமதிக்கும் ஒரு தருணத்தையும் கைவிடாதது. அவன் தகுதிக்கு மீறிய எதையோ அடைந்துவிட்டான் எனக்கறுவுவது. எந்த எழுத்தாளனையாவது எதன்பொருட்டாவது வசைபாடி ஒரு பதிவுபோடுங்கள் ‘ஆமாமா, அயோக்கியப்ப்பயல்கள்’ என்று சொல்லி ஒரு கூட்டமே கிளம்பி வருவதைப் பார்க்கலாம்.

ஊரையே சுரண்டிக்கொழுத்த ஊழல் அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் காவடிதூக்குபவர்களுக்கு எழுத்தாளன் அயோக்கியனாகத் தெரிவதன் மாயத்தை புரிந்துகொள்ள நீங்களும் அரசியல்வாதி ஆகவேண்டும்.

இந்த விவாதத்தின் ஒட்டுமொத்த பயன் என்னவென்றால் வெறும் கட்சியரசியல் செய்யும் நாலாந்தர ஆசாமிகள் எல்லாம் கலையில் சாதனை செய்த அரசியல்சாராத எழுத்தாளர்களை ஊடகங்களில் வந்து கோழைகள் என்றும் கையாலாகாதவர் என்றும் வசைபாடியது மட்டும்தான். உடன் வசைபாட தமிழன் என்றும் தயங்கான்.

இந்த இதழ் உயிர்மையில் ஓர் ஆசாமி [ஷண்முகசுந்தரம்] இந்த விருதுமறுப்பு குறித்து எழுதிய கட்டுரையை மலம்நிகர் கீழ்மை என்றே சொல்வேன். யார் அந்த ஆசாமி? ஏதாவது வாசிப்பவனா? இதழ்களின் உரிமையாளர்களின் அரசியல் நோக்குக்கு ஏற்ப வசைத்தொழில் புரியும் அந்த அயோக்கியனை ஓர் எழுத்தாளன் என்று சொல்வதே எழுத்துக்கு அவமதிப்பு.

ஜெ

முந்தைய கட்டுரைகுரு நித்யா புகைப்படங்கள்
அடுத்த கட்டுரைராஜராஜனும் சாதியும்