வணக்கம்,
நான் உங்களின் நெடுநாள் வாசகன். ஒரு முறை 2 நிமிடம் நேரிலும் பேசியிருக்கிறேன். பார்த்த போது என்ன பேசுவது என்று தெரியாமல் பெயர் கூறி அறிமுகம் செய்துகொண்டு தொடங்கியவுடன் நீங்கள் என் பெயரை நினைவிலிருந்து “எங்கோ கேள்விப்பட்டிருக்கேனே?” என்றீர்கள். அத்துடன் மேற்கொண்டு வாயடைத்துப்போனேன். பின்னர் “என் பெயரை செம்பதிப்பில் சில முறை எழுதி கையெழுத்திட்டிருக்கிறீர்கள், அதனால் நினைவிலிருந்திருக்கலாம்” என்றேன். புன்னகைத்தீர்கள்.
அன்று உங்களின் உரை நான் பலமுறை உங்களிடமிருந்து கேட்டதே, ஆனாலும் மிகவும் ஒன்றி மறுமுறையும் கேட்டேன். நீங்கள் உரையாற்றும் முறை நூறு பேரிடம் மேடையில் நின்று பேசினாலும், கேட்கும் பொழுது அருகில் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பேசுவதைப் போல் இருந்தது. இது பலநாள் உங்களை படித்தாலும், சில காணொளிகளில் பார்த்ததாலும் இருக்கலாம்.
நான் அறிமுகம் செய்து வெண்முரசை என் மனைவி படிக்கிறாள். என் பாட்டி படிக்கிறாள். என் தாயும், தந்தையும் படிக்கிறார்கள். என் மகளையும் மகனையும் படிக்கவைப்பதற்காக தனியே தமிழ் வகுப்புக்கு வாராவாரம் கூட்டிச்சென்று ‘அனா ஆவன்னா’ தொடங்கியிருக்கிறேன்.
என்னைப்போன்றவர்களுக்கு உங்களின் கொடை நானில்லாத போது என் மகளையும் மகனையும் வழிநடத்தும் என முழுமையாக நம்புகிறேன்.
என்னை வாட்டும் சில கேள்விகளை இத்தருணத்தில் கேட்டுவிட எண்ணம். அனைத்தும் என் சுயநலம் சார்ந்தவை. பதிலலித்தால் தெளிவடைவேன்.
1) என் தாய்மொழி தமிழ் அல்ல.ஆனால் அதில் எழுதப்படிக்கத் தெரியாது. முடிந்தால் படிக்க எழுத முயலுவேன், ஆனால் கடினம். அதே சமயம் ஹிந்தியும் சம்ஸ்கிருதமும் படிக்க எழுத தெரியும். நான் பிராமணன் அல்ல. என் மனைவி தமிழ்ப்பெண். என் மக்கள் தமிழ் குறைவாகவும் ஆங்கிலம் அதிகமும் பேசுபவர்கள். என்னைப்போல் என் தாய்மொழி பேசினால் மகிழ்வேன், அதைப்போலவே தமிழையும் கொள்ள விருப்பம்.
2 என் போன்றவர்களுக்கு/குறிப்பாக என் பிள்ளைகளை நாளைய தமிழ்நாடு எப்படிப் பார்க்கும்? கடந்த 2 வருடங்களாய் தமிழ் இனவாத அரசியல் கட்சிகளின் துவக்கம், என்னைப் போன்றவர்களை மிகவும் யோசிக்க வைத்திருக்கிறது.
3) இந்தியாவின் ஒருமைப்பாடு நீடிக்குமா? மேன்மேலும் துண்டாடப்படும் மாநிலங்களும், மொழி இனவாத அரசியலும் அச்சமூட்டுவதாய் உள்ளதை யாவரும் அறிந்திருக்கின்றனரா? ஒரு வேளை அதைத்தான் அனைவரும் உள்ளூர விரும்புகிறார்களா? நான் அன்னியமானவனா?
உங்களைப் படிக்காமல் என் ஒருநாளும் கடந்ததில்லை.
நன்றி.
வீரி செட்டி
அன்புள்ள வீரி செட்டி,
நான் திரும்பத்திரும்ப எழுதிவரும் ஓர் உண்மை உண்டு. இந்தியாவில் வங்கம் கேரளம் போன்ற சில பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகள் அனைத்திலுமே அனைத்து மொழி, இன, வட்டார மக்களும் கலந்துதான் வாழ்கிறார்கள். இது நீண்ட வரலாற்றின் விளைவாக உருவான அமைப்பு.
வரலாற்றுக்கு முந்தைய காலம் முதலே இங்கே இனக்கலப்பும் மக்கள்பரவலும் நிகழத்தொடங்கிவிட்டன. மூவாயிரம் வருடங்களாக மக்கள் விரிந்து பரவி நிலங்களை நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசியாக பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் பெரும்பஞ்சங்களின்போது மிகப்பெரிய மக்கள் கலப்பு நிகழ்ந்தது
ஆகவே இந்தியாவின் எப்பகுதியிலும் மதம், இனம், வட்டாரம், மொழி சார்ந்த அடிப்படைவாதமும் பிரிவினைவாதமும் பெருந்தீங்கு இழைப்பதாகும். ஒரு பிரிவினை இங்கே உலகப்போருக்கு நிகரான அழிவையும் அகதிப்பிரவாகத்தையும் உருவாக்கியது. மேலும் பிரிவினைகள் என்பவை பேரழிவை மட்டுமே அளிப்பவை
அவற்றால் எந்த லாபமும் இல்லை, அரசதிகாரத்தைக் குறுக்குவழிகளில் கைப்பற்ற நினைக்கும் அயோக்கியர்கள் வளர்க்கும் கொள்கைகள் அவை. நம் நல்வாழ்வு ஒன்றுபட்டு ஒரே தேசமாக நவீனமயமாதலில் மட்டுமே உள்ளது. எதைநோக்கியும் திரும்பிச்செல்வதில் இல்லை.
துரதிருஷ்டவசமாக இங்கே மத அடிப்படைவாதத்தை எதிர்க்கிறோம் என்று பேசும் ‘முற்போக்கு’ கும்பல் மொழி, இன, வட்டார, சாதிய அடிப்படைவாதத்தை முற்போக்குச்சிந்தனை என நினைக்கிறது. வெட்கமில்லாமல் அதை ஊடகங்களில் பிரச்சாரம் செய்கிறது. இந்த ஃபாஸிஸ்டுகளின் குரல் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. நமக்கு இருக்கும் தெரிவே சாதிவெறியா மதவெறியா என்பதுதான் இன்று.
உண்மையில் மதவெறி பிற்போக்கு வட்டாரவெறி, மொழிவெறி, சாதிவெறி முற்போக்கு எனறு நினைக்கவைக்கப்பட்டிருக்கிறது நம் அறிவுலகம். அது பெரும் நிதிச்செலவில் செய்யப்பட்ட அரைநூற்றாண்டுக்கால பிரச்சாரத்தின் விளைவு. எளிதில் அகலாது.அதற்கெதிரான போராட்டம் எளிதானதல்ல.
இந்தியா ஒரு நவீனக் குடியரசாக அமையவேண்டும் என கனவுகண்டனர் காந்தியும் நேருவும் பட்டேலும் அம்பேத்கரும். அவர்கள் அமைத்த மாதிரியை அவர்களின் கண்ணெதிரிலேயே உடைத்தனர் நம் குறுகிய அதிகார வெறியர்கள்
மொழிசார்ந்த அடிப்படைவாதமும் அதன் உள்ளுறையாக அமைந்திருந்த சாதிசார்ந்த அடிப்படைவாதமும் மத அடிப்படைவாதம் அளவுக்கே அழிவுச்சக்தியாக மாறுவதை நேருவும் அம்பேத்கரும் கண்டு மிகுந்த மனக்கொந்தளிப்புடன் எழுதியிருக்கிறார்கள்
அதன் பின் இன்றுவரை இந்தியாவின் ஜனநாயம் என்பது மதம், மொழி, சாதி சார்ந்த வெறிகளால் முன்னெடுக்கப்படுவதாகவே இருந்துள்ளது. வளர்ச்சி நல்வாழ்வு சார்ந்த முன்னுரிமைகள் பின்னுக்குத்தள்ளப்பட்டன.நம் இன்றைய அழிவுக்கான காரணம் ஜனநாயகம் அல்ல, உண்மையான ஜனநாயகம் மலராமைதான்.
ஆனால் நம் ஜனநாயகத்தைத் தோற்கடித்த அடிப்படைவாதச் சக்திகள் ஜனநாயகத்தின் தோல்வியைச் சுட்டிக்காட்டி மீண்டும் ஜனநாயகத்தை அழிக்கும்பொருட்டு எம்பிக்குதிப்பதைத்தான் கண்டுவருகிறோம்.
அடிப்படைவாதம் மிக கவர்ச்சிகரமானது. வெறுப்பின் மொழி மிக எளிதில் தொற்றக்கூடியது. வெறுப்பின் வெறிகொண்டிருப்பவர்கள் சிந்தனையாளர்களாக மட்டுமல்லாமல் செயல்வீரர்களாகவும் கொண்ட கொள்கைக்காக ‘எரிந்து’கொண்டிருப்பவர்களாகவும் தோற்றமளிப்பார்கள்.
ஆகவே எளிய மனங்கள், இளைய மனங்கள் எளிதில் அதைநோக்கிக் கவரப்படுகின்றன. ஆகவே எளிய அதிகார அரசியலுக்கான பாதையாக அடிப்படைவாதம் எப்போதும் இருந்துவருகிறது. ஜனநாயகத்தை அழிக்கும் வைரஸ் அதுவே.
எவர் ஒருவர் ‘எதிரி’ என ஒருதரப்பைச் சுட்டிக்காட்டி அனைத்துத் தீமைகளுக்கும் அதுவே காரணம் என வெறுப்புடன் பேசுகிறாரோ அவர் ’அடிப்படைவாதி என உணர்க. அந்த எதிரி எதுவாக இருந்தாலும்.
ஃபாசிஸம் என்றோ மதவெறி என்றோ மாற்றுமதம் என்றோ மாற்றுச்சாதி என்றோதான் அவரும் தன் எதிரியைச் சுட்டிக்காட்டுவார். தன் எதிரித்தரப்பை அடிப்படைவாதம் என்று சுட்டிக்காட்டி கொந்தளிப்பார். தன்னை முற்போக்கு என எண்ணுவார்
நடுநிலைமைகொண்ட இருபக்கமும் நோக்கக்கூடிய பார்வையே ஜனநாயகத்தின் அடிப்படை விசை. வெறுப்புப்பேச்சு, பிறரை கீழ்மையாகச் சித்தரிக்கும் வாதங்கள் எவையாயினும் அவை அழிவை உருவாக்குவனவே
இந்தத்தெளிவைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தவேண்டியிருக்கிறது. வெறுப்பை கக்கும் எந்த அரசியலையும் ஐயத்துடன் நோக்கி ஆராயும் கண்களை அடையவேண்டியிருக்கிறது
சமீபத்தில் இந்தோனேசியா சென்றேன். அந்த நாட்டின் வரலாற்றை நோக்கினேன். தொடர்ச்சியாக இனக்குழுப்பூசல்கள் தூண்டிவிடப்பட்டு அந்நாடு எப்போதுமே அரசியல் போராட்டத்தில் நிலையற்று இருக்கும்படிச் செய்யப்பட்டது.
அந்நாட்டின் அற்புதமான இயற்கை வளங்கள் மேலைநாட்டு நிறுவனங்களுக்குக் கொள்ளைபோகின்றன. கடைசியாக காடுகள் வெட்டி அழிக்கப்படுகின்றன. அந்த அன்னியக்கம்பெனிகளை ஒரு சொல் சொல்லமுடியாமல் புகையில் இருமி இருமி வாழ்கிறார்கள் மக்கள்.
இந்தியா இன்னும் அப்படி ஆகவில்லை. காரணம் இதுவரை நம்மைக்கொண்டுவந்து சேர்த்த ஜனநாயகப் பண்புகள். ஆனால் அத்திசை நோக்கித்தான் செல்கிறோமோ என்னும் அச்சமும் பதற்றமும் எனக்கும் உள்ளது.
ஒருபக்கம் வலதுசாரிகள் தங்கள் குறுகிய நோக்கில் பிடிவாதமாக நின்று பிளவுகளை முன்வைக்கிறார்கள். நாடே பிளவுண்டு அழிந்தாலும்சரி தங்கள் உணவுப்பழக்கத்தையும் ஆசாரங்களையும் நாட்டுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும் என்று கூச்சலிடுகிறார்கள்
மறுபக்கம் இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மெல்லிய பிளவுக்குரல் எங்கு எழுந்தாலும், சிறிய பிரச்சினை ஏதோ ஒரு மூலையில் எழுந்தாலும் அதையெல்லாம் முடிந்தவரை பெரிதாக்கி ஊடகப்பிரச்சாரம்செய்து சிறுபான்மையினரின் உள்ளத்தில் கசப்பை விதைத்து அவர்களின் திரட்டப்பட்ட ஆதரவைப்பெற்றுவிடமுடியும் என முயல்கிறார்கள்.
மதவாதத்தை வெல்ல சாதியவாதத்தை மொழிவெறியை வட்டாரவெறியை முன்வைக்கிறார்கள். இந்நாட்டை இவர்கள்இருபக்கமும் நின்று இழுக்கிறார்கள். இதன் மொத்த லாபம் இந்நாட்டை சூறையாடுபவர்களுக்குத்தான்
சென்ற அரைநூற்றாண்டுக்கால உலக வரலாறு காட்டுவது ஒன்றே. இயற்கைச்சீற்றங்களால் எந்த நாடும் அழிவதில்லை. நாடுகள் அழிவது மக்களின் உட்பூசல்களால். உள்நாட்டுப்போரால். பஞ்சத்தால் குழந்தைகள் செத்துக்குவியும் நாடுகளில் மறுபக்கம் ஐம்பதாண்டுக்காலமகா ஈவிரக்கமில்லாத உள்நாட்டுப்போர் நிகழ்கிறது.
கொரில்லாக்கள் சுட்டுத்தள்ளுகிறார்கள். தற்கொலைப்படைகள் குண்டுவைக்கின்றன. எதற்காக? யார் பதவிக்கு வருவதற்காக? வந்து அந்த மரணவெளியில் அவர்கள் எதை நிகழ்த்தப்போகிறார்கள்? அரசியல்வெறியர்களுக்கு அந்த வினாக்களே எழுவதில்லை. மக்களுக்காக போர். அதில் மொத்த மக்களும் அழிந்தாலும் பிரச்சினையில்லை.
ஒரு சிறு உள்நாட்டுப்போர் வந்தால்கூட மொத்தப் பொருளியல் கட்டமைப்பும் சிதறிவிடுகிறது. சந்தைகள் அழிகின்றன. வணிகவலை சிதைகிறது. உற்பத்திமுறைகள் இல்லாமலாகின்றன. நாடு மேலும் மேலும் பஞ்சத்தை நோக்கிச் செல்கிறது.
சரியத்தொடங்கிவிட்ட நாட்டை என்ன செய்தாலும் மீட்கமுடியாது. சரியத்தொடங்கிய கட்டிடம் அந்த எடையாலேயே மேலும் மேலும் உடைவதுபோலத்தான். சூடான் ,எத்தியோப்பியா,காங்கோ,கென்யா என வீழ்ச்சியடைந்த நாடுகளின் பொருளியல் அதையே காட்டுகிறது. இப்போது எகிப்து, ஆப்கானிஸ்தான், சிரியா என நாடுகள் சரிந்துகொண்டிருக்கின்றன.
இதற்கு எவரைக் குற்றம்சாட்டுவது? வேறு எவரையுமில்லை. தங்களுக்கு வரலாறு அளித்த வாய்ப்புகளை பூசலிட்டு அழித்துக்கொண்ட, தங்கள் வளங்களை அன்னிய சக்திகளுக்கு தாரை வார்த்த, தங்கள் கூட்டுவல்லமையை வீணடித்த அம்மக்களைத்தான்
ஆனால் மெலிந்து எலும்புக்கூடுகளாக ஆகி கைநீட்டி நிற்கும் அந்தக்குழந்தைகளைக் காண வயிறு பதைக்கிறது. அந்நிலைக்கு இந்தியா செல்லுமா? அந்நிலையில் இருந்து நாம் மீண்டதே இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர்தான். பண்டித ஜவகர்லால் நேருவின் பெருமுயற்சியால்தான்.
அரைநூற்றாண்டுதான் ஆகியிருக்கிறது. நாம் இன்று வைத்திருக்கும் இந்த ஜனநாயக அமைப்பு மிகமிக நொய்மையானது. எந்த ஒரு அன்னிய சக்தியும் சிலநூறு தீவிரவாதிகள் வழியாக இதை எளிதில் சிதறடிக்கமுடியும் என பஞ்சாபும் அஸாமும் நமக்குக் காட்டின. அந்த மாநிலங்கள் கொடுத்த விலையை நாம் அறிவோம்
ஆனால் மதவெறியர்கள், இனவெறியர்கள், சாதிவெறியர்கள், மொழி வெறியர்கள், வட்டாரதேசியம் பேசும் பிரிவினையாளர்கள் அதை உணர்வதில்லை. ஒவ்வொருவருக்கும் தங்கள் குருட்டுத்தனமே தெளிவு எனத் தோன்றுகிறது.
சாமானியன் அவனுடைய அன்றட வாழ்க்கையில் உள்ள ஒன்றுமே நிகழாத சலிப்பை வெல்ல ஏதாவது இடிந்து விழட்டும் ஏதாவது பற்றி எரியட்டும் எவர் ரத்தமாவது விழட்டும் என எண்ணுகிறான். தன்னை தீவிரமானவனாக முற்போக்காளனாக காடிக்கொள்ள இதையெல்லாம் பயன்படுத்துகிறான். தன்னை அறியாமலேயே தன்னை அழிப்பவற்றை வளர்த்துவிடுகிறான்.
ஒன்றும் சொல்வதற்கில்லை. எனக்கிருப்பது மிகப்பெரிய அச்சம் மட்டுமே. எந்தபூசலும் பஞ்சம் நோக்கிய நகர்வே. எந்தப் பஞ்சத்தின் அருகிலும் கழுகு காத்திருக்கிறது.
ஜெ