‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 68

பகுதி ஐந்து : தேரோட்டி – 33

தேர் இடப்பக்கம் திரும்பி சற்றே பெரிய பாதை ஒன்றில் சென்றது. திடீரென்று பன்னிரண்டு படிகள் தெரிய சுபத்திரை எழுந்து இருகால்களாலும் பீடத்தையும் தாமரை வளைவையும் பிடித்து சரிந்து நின்று கடிவாளத்தை முழுக்க இழுத்து பற்றிக்கொண்டாள். தலையை பின்னால் வளைத்து வாய் திறந்து கனைத்தபடியே சென்ற புரவிகள் அந்தப் படிகளில் இறங்கின. இருவரையும் தேர் தூக்கி அங்குமிங்கும் அலைத்து ஊசலாட்டியது. படிகள் நகைப்பது போல் ஒலி எழுந்தது.

கீழே சென்றதும் “யவன தேர்! இல்லையேல் இந்நேரம் அச்சிற்று சகடங்கள் விலகி ஓடி இருக்கும்” என்றாள். “ஆம், தேர் புனைவதில் அவர்களே நிகரற்றவர்கள்” என்றான் அர்ஜுனன். உலர்ந்த மீனின் வீச்சம் எழத் தொடங்கியது. “மீன்களஞ்சியங்கள் இங்குள்ளன என்று நினைக்கிறேன்” என்றாள். “நன்று” என்றான் அர்ஜுனன். “யாதவர்கள் மீன் விரும்பி உண்பவர்கள் அல்ல. உலர் மீன் அவர்கள் எண்ணிப் பார்க்க முடியாத உணவு. எனவே இங்கு வந்திருக்கமாட்டார்கள்” என்றான்.

அப்பகுதியெங்கும் பீதர்களே நிறைந்திருந்தனர். “இவர்கள் உலர்மீனுக்கு அடிமைகள்” என்றான் அர்ஜுனன். அவள் “காலையிலேயே வாங்குகிறார்களே!” என்றாள். விரைந்து வந்த புரவியைப் பார்த்ததும் இரும்புப் படிகளில் ஏறி ஒரு பீதன் கைகளை விரித்து அவர்கள் மொழியில் கூவ சாலையில் கூடைகளுடனும் பெட்டிகளுடனும் நின்றிருந்த பீதர்கள் பாய்ந்து குறுந்திண்ணைகள் மேலும் சாளரங்கள் மேலும் தொற்றி ஏறிக்கொண்டனர். வண்ணத் தளராடைகள் கைகளை விரித்தபோது அகன்று அவர்களை பெரிய பூச்சிகள் போல காட்டின. அவர்களின் குரல்கள் மான்களின் ஓசையென கேட்டன.

தரையில் கிடந்த கூடைகளின் மேல் ஏறி மென்மரப்பெட்டிகளை நொறுக்கியபடி புரவிகள் செல்ல சகடங்கள் அவற்றின் மேல் உருண்டு சென்றன. சாலைக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த தோல்திரைகளையும் துணிப்பதாகைகளையும் கிழித்து வீசியபடி சென்றது தேர். அவர்களின் மேல் பறக்கும் சிம்மப்பாம்பு பொறிக்கப்பட்ட குருதிநிறமான பதாகை வந்து படிந்து இழுபட்டு பின்னால் வளைந்து சென்றது. “இத்தனை மீன் இங்கு பிடிக்கப்படுகிறதா?” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “இதைவிட பெரிய மீன் அங்காடி ஒன்றிருக்க வேண்டும். இது இங்குள்ளவர்கள் உண்பதற்காக கொள்ளும் மீன். கலக்காரர்களே இங்கில்லை பார்” என்றான்.

சாலை ஓரங்களில் தோல்துண்டுகளை போலவும், வெள்ளித் தகடுகளை போலவும், ஆலிலைச்சருகுகள் போலவும், சிப்பிகள் போலவும், கருங்கல்சில்லுகள் போலவும் குவிக்கப்பட்டிருந்த உலர் மீன்கள் நடுவே தேர் சென்றது. அங்கு தெருநாய்கள் நிறைந்திருந்தன. தேரைக் கண்டு கூவியபடி எழுந்து பாய்ந்து சிறுசந்துகளுக்குள் புகுந்து வால் ஒடுக்கி ஊளையிட்டு தேர் கடந்து சென்றபின் பின்னால் குரைத்தபடி துரத்தி வந்தன. “இந்தச் சாலை பண்டக நிலைக்கு செல்லும் பெருஞ்சாலையை அடையும் என எண்ணுகிறேன்” என்றாள் சுபத்திரை. “ஆம், பொதி வண்டிகள் சென்ற தடம் தெரிகிறது” என்றான்.

வீட்டு வாயிலைத் திறந்து பெருஞ்சாலைக்கு இறங்கியது போல சிறிய திறப்பினுடாக அகன்ற நெடுஞ்சாலையில் அவர்கள் தேர் வந்து சேர்ந்தது. நேராக ஒளிக்குள் சென்றதுபோல கண்கள் கூசி சிலகணங்கள் ஒன்றும் தெரியவில்லை. அங்கு நின்றிருந்த சிறிய யாதவர் குழு அவர்கள் வருவதை எதிர்பார்க்கவில்லை. ஓசையிட்டு திரும்பி ஒருவன் கை வீசி கூவுவதற்குள் கழுத்தில் பட்ட அம்புடன் சரிந்து விழுந்தான். அடுத்தடுத்த அம்புகளால் எழுவர் விழ பிறர் புரவிகளை இழுத்துக் கொண்டு விலகினர்.

அவர்களைக் கடந்து மையச்சாலைக்கு சென்று முழு விரைவு கொண்டது தேர். அப்பகுதியிலிருந்த காவல்மாடத்தில் முரசு ஒலிக்கத் தொடங்கியது. “வந்துவிட்டோம்! இந்த நீண்ட சாலையைக் கடந்தால் தோரணவாயிலை அடைவோம். அதைக் கடந்து அவர்கள் வர குலநெறி இல்லை” என்றாள் சுபத்திரை. “இது பாதுகாப்பற்ற திறந்த சாலை. உன் கையில் உள்ளது நமது வெற்றி” என்றான். சிரித்தபடி “பார்ப்போம்” என்று கடிவாளத்தை எடுத்து மீண்டும் முடுக்கினாள். வெண் புரவிகளின் வாயிலிருந்து தெறித்த நுரை சிதறி காற்றில் பறந்து வந்து அர்ஜுனன் முகத்தில் தெறித்தது. “களைத்துவிட்டன” என்றான். “ஆம், தோரண வாயிலைக் கடந்ததுமே கணுக்கால் தளர்ந்து விழுந்து விடக்கூடும்” என்றாள்.

பெருஞ்சாலையின் அனைத்து திறப்புகளின் வழியாகவும் யாதவர்களின் புரவிகள் உள்ளே வந்தன. அம்புகள் எழுந்து காற்றில் வளைந்து அவர்களின் தேரின் தட்டிலும் குவைமுகட்டிலும் தூண்களிலும் தைத்து அதிர்ந்தன. அர்ஜுனன் “இனி அம்புகள் குறி தவறுவது குறையும்” என்றான். அவன் அம்பு பட்டு அலறியபடி வீரர்கள் விழுந்து கொண்டிருந்தனர். குதிரைகள் சிதறிப்பரந்து வால்சுழற்றி ஓடி வர அந்தப் பெருஞ்சாலையில் விரிவிருந்தது. “இனி எல்லாம் முற்றிலும் நல்லூழ் சார்ந்தது. ஒரு முறை சகடம் தடுக்கினால் ஒரு புரவியின் குளம்பு உடைந்தால் அதன் பின் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றாள்.

“அனைத்து போர்களும் ஊழின் விளையாடல்களே” என்றான் அர்ஜுனன். “போரின் களியாட்டே அது நேராக ஊழெனும் பிரம்மம் கண்ணெதிரே வந்து நிற்கும் காலம் என்பதனால்தான். செல்க!” என்றான் அர்ஜுனன். சுபத்திரை திரும்பி நோக்கி “மேடை ஒன்றில் நடனமிடும் போர் மங்கை போலிருக்கிறீர்கள்” என்றாள். அர்ஜுனன் “நான் நன்கு நடனமிடுவேன், பெண்ணாகவும்” என்றான். பேசியபடியே விழிகளை ஓட்டி தன்னைச் சூழ்ந்து வந்த யாதவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அம்பும் முன்னரே வகுக்கப்பட்டது போல் சென்று மெல்ல அலகு நுனியால் முத்தமிட்டு அவர்களை வீழ்த்தியது.

“பெண்ணாகவா?” என்றாள். “பெண்ணாக ஆகாமல் பெரு வில்லாளியாக எவனும் ஆக முடியாது. வில்லென்பது வளைதலின் கலை” என்றான் அர்ஜுனன். நீண்ட சாலைக்கு அப்பால் கோட்டைப் பெருவாயில் தெரியத் தொடங்கியது. “கோட்டை வாயில்” என்றாள் சுபத்திரை. “எழுபத்தெட்டு காவலர்மாடங்கள் கொண்டது.”

அர்ஜுனன் “நன்று” என்றான். “காவல் மாடங்களிலும் கோட்டை மேல் அமைந்த காவலர் குகைகளிலும் தேர்ந்த வில்லவர்கள் இருப்பார்கள்” என்றாள். “ஆம், இறுதித் தடை இது, செல்” என்றான். “இங்குள்ள யாதவர் வில்லெடுக்க மாட்டார்கள். மதுராபுரியினருக்கு வில்லெடுத்து பறவைகளை வீழ்த்தியே பழக்கம்.” அவள் “மதுராவின் வில்லாளி ஒருத்தி அவர்களுடன் இல்லை. அதனால் இந்தப்பேச்சு” என்றாள். புரவிச் சவுக்கை மாற்றி மாற்றி வீறி விரைவின் உச்சத்தில் செலுத்தியபடி “இன்னும் இன்னும்” என கூவினாள்.

“பெரிய அம்புகளை இந்த மென்மரத்தேர் தாங்காது. இது விரைவுக்கானது. இதில் இரும்புக்கவசங்களும் இல்லை” என்றாள். “பார்ப்போம்” என்றபடி அர்ஜுனன் தன்னருகே வந்த வீரன் ஒருவனை அறைந்து வீழ்த்தினான். அவன் கழுத்திலணிந்த சரடைப் பற்றித் தூக்கி சுழற்றி எடுத்து தன் தேர்த்தட்டில் நிறுத்தி அதே விசையில் அவன் புறங்கழுத்தை அறைந்து நினைவிழக்கச்செய்து அம்புமுனையால் அவன் அணிந்த கவசங்களையும் இரும்புத் தலையணியையும் கட்டிய தோல்பட்டைகளை வெட்டிக் கழற்றி தான் அணிந்தான். அவனைத்தூக்கி பக்கவாட்டில் வீசியபடி பிறிதொருவனை பற்றினான். அவன் மார்புக்கவசத்தைக் கழற்றி சுபத்திரையின் மேல் வீசி “முதுகில் அணிந்து கொள். குனிகையில் உன் முதுகு திறந்திருக்கிறது” என்றான். அவள் அதைப்பற்றி முதுகில் அணிந்து வார்ப்பட்டையை மார்பில் கட்டிக் கொண்டாள்.

அவர்களின் தேர் அதில் தைத்த நூற்றுக்கணக்கான அம்புகளுடன் நெருஞ்சிக்குவியலிலிருந்து மீளும் வெண்ணிறப் பசு போல் இருந்தது. மேலும் மேலும் அம்புகள் வந்து தைத்தன. சகடத்தின் அதிர்வில் அம்புகள் பெயர்ந்து உதிர்ந்தன. அர்ஜுனனின் கவசத்தின் மேல் தைத்த அம்புகளை அவன் தேர்த்தட்டிலேயே உரசி உதிர்த்தான். அவள் “கோட்டை அணுகுகிறது…” என்றாள். கோட்டையின் கதவு வழியாக கூரிய கடற்காற்று நீர்க்குளிருடன் வந்து அவர்களை அறைந்தது.

துவாரகையின் முகப்புக் கோட்டை இருள் புனைந்து கட்டப்பட்டது போல அவர்களை நோக்கி வந்தது. அதன் உச்சியில் அமைந்திருந்த நூற்றுக்கணக்கான அம்பு மாடங்களில் மதுராபுரியின் யாதவ வீரர்கள் விற்களுடனும் வேல்களுடனும் பாய்ந்து ஏறி நிறைவதை அர்ஜுனன் கண்டான். அம்புகளின் உலோகமுனைகள் பறவை அலகுகள் போல செறிந்தன. வெயிலில் மான்விழிகள் போல மின்னின. காவல் முரசங்கள் கருங்குரங்குகள் போல முழங்கிக் கொண்டிருந்தன. கொம்பு ஒன்று உரக்க ஓசையெழுப்பியது.

தொலைவிலேயே அவர்களின் தேர் வருவதைக் கண்ட வீரர்கள் கை நீட்டி பெருங்கூச்சலிட்டனர். சிலர் ஓடிச் சென்று முரசுமேடையில் ஏறி பெருமுரசை முழக்கத்தொடங்கினர். பதினெட்டு பெருமுரசங்கள் முழங்க களிற்று நிரைபோல பிளிறி நிற்பதாக தோற்றம் கொண்டது கோட்டை. “முழு விரைவிலா?” என்றாள் சுபத்திரை. “ஆம் முழுவிரைவில்” என்றான் அர்ஜுனன். பிறிதொரு வீரனிடம் இருந்து பெரிய வில் ஒன்றை பிடுங்கியிருந்தான். “தங்கள் அம்புகள் சிறிதாக உள்ளன” என்றாள் அவள். “சிறிய அம்புகள் பெரிய விற்களில் இருந்து நெடுந்தூரம் செல்ல முடியும்” என்று அதை நாணேற்றினான். கோட்டையில் இருந்து அம்புகள் வந்து அவர்கள் தேரை தொடுவதற்கு முன்னரே அதன் மேலிருந்து யாதவர்கள் அலறியபடி உதிரத் தொடங்கினர்.

“நேராக செல்” என்று அர்ஜுனன் கூவினான். “கோட்டைக் கதவுகளை அவர்கள் மூடக்கூடும்” என்றாள். “இல்லை, மூட வேண்டும் என்றால் முன்னரே மூடியிருப்பார்கள்” என்றான் அர்ஜுனன். “கோட்டையை மூட இளைய யாதவர் ஆணையிட்டால் அது துவாரகையின் போராக ஆகிவிடுகிறது.” சுபத்திரை புரவிகளை சுண்டி இழுத்து தூண்டி சவுக்கால் மாறி மாறி அறைந்தபடி “இன்னும் எத்தனை நேரம் இவை ஓடும் என்று தெரியவில்லை” என்றாள். அர்ஜுனன் “இன்னும் சற்று நேரம்… விரைவு! விரைவு!” என்றான்.

அவன் கண்கள் கோட்டை மேல் இருந்த வீரர்களை நோக்கின. அவன் கண் பட்ட வீரன் அக்கணமே அலறி விழுந்தான். கோட்டை மேலிருந்து வந்த வேல்அளவு பெரிய அம்பு அவர்களின் தேரின் தூணை முறித்து வீசியது. விறகு ஒடியும் ஒலியுடன் முறிந்த குவை முகடு சரிந்து இழுபட்டு பின்னால் சென்று விழுந்து உருண்டது. இன்னொரு பெரிய அம்பில் பிறிதொரு தூண்முறிந்து தெறித்தது. திறந்த தேர் தட்டில் கவசங்கள் அணிந்து நின்ற அர்ஜுனன் அப்பெரிய அம்புகளை எய்த இரு யாதவ வீரர்களை வீழ்த்தினான். அவனது மார்பில் அணிந்த ஆமையோட்டுக் கவசத்தில் அம்புகள் வந்து பட்டு நின்றாடின. தலையில் அணிந்த இரும்புக்கவசத்தில் மணி போல் ஓசையிட்டு அம்பு முனைகள் தாக்கிக் கொண்டிருந்தன.

சுபத்திரை உஸ் என்று ஒலி எழுப்பினாள். அரைக்கணத்தில் அவள் தோளில் பாய்ந்த அம்பை அர்ஜுனன் கண்டான். “உன்னால் ஒற்றைக் கையால் ஓட்ட முடியுமா?” என்றான். “ஆம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் அவள். தேர் அணுகும்தோறும் கோட்டை முகப்பில் இருந்த யாதவர்கள் கூச்சலிட்டபடி வந்து செறிந்து வில்குலைக்கத் தொடங்கினர். அர்ஜுனன் முழந்தாளிட்டு தேர்த்தட்டில் அமர்ந்து வில்லை பக்கவாட்டில் சரித்து வைத்துக் கொண்டான். அவன் அம்புகள் அவர்களை வீழ்த்த அவர்களது அம்புகள் அவனை கடந்து சென்று கொண்டிருந்தன. பின்பு நன்றாக கால் நீட்டி தேர்த் தட்டில் படுத்து தேர்த்தட்டில் வில்லை படுக்கவைத்து அம்புகளை எய்தபடியே அவர்களை நோக்கி சென்றான். பதினெட்டு பேர் அவன் அம்புகள் பட்டு கீழே விழுந்தனர். முழு விரைவில் சென்ற தேர் கோட்டையின் வாயிலைக் கடந்து வெளியேறியது.

“வந்து விட்டோம்” என்றாள் சுபத்திரை. தொலைவில் தோரணவாயில் தெரியத் தொடங்கியது. கோட்டைக்குள் இருந்து யாதவர் இறங்கி புரவிகளில் அவர்களை துரத்தி வந்தனர். தேர்த்தட்டில் படுத்தபடியே உடல் சுழற்றி பின்பக்கம் நோக்கி அம்புகளை எய்த அர்ஜுனன் “செல்க! செல்க!” என்றான். “புரவிகளால் முடியவில்லை. ஒரு புரவி விழப்போகிறது” என்றாள் சுபத்திரை. “நாம் இன்னும் சில கணங்களில் தோரண வாயிலை கடந்தாக வேண்டும்” என்றான் அர்ஜுனன்.

புரவிகள் விரைவழியத் தொடங்கின. சுபத்திரை இரு புரவிகளையும் மாறி மாறி சவுக்கால் அடித்தாலும் அவை மேலும் மேலும் தளர்ந்தபடியே வந்தன. தோரண வாயில் அண்மையில் தெரிந்தது. அவள் கடிவாளத்தைப் பற்றி இழுத்து புரவிகளை நிறுத்தினாள். “என்ன செய்கிறாய்?” என்று அவன் கூவினான். “அவை களைத்துவிட்டன” என்றாள். “நேரமில்லை… ஓட்டு ஓட்டு” என்றான். “இல்லை, அவை அசையமுடியாது நிற்கின்றன.” அவன் பொறுமையிழந்து “ஓட்டு ஓட்டு” என்றான். “ஒரு கணம்” என்றாள். புரவிகள் கால் ஊன்றி தலை தாழ்த்தி நின்றன. ஒரு புரவி மூச்சு விட முடியாதது போல் இருமி நுரை கக்கியது.

அர்ஜுனன் அம்புகளை செலுத்தியபடி தொடர்ந்து வந்த யாதவர்களை தடுத்தான். மிக அகன்ற சாலையாதலால் அவர்கள் பிறை வடிவமாக விரிந்து தழுவ விரிந்த கைகள் போல வந்தனர். அவன் தேரின் புரவிகள் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டுவிட்டது போல் தெரிந்தது. “நாம் நிற்பதை அறிந்து விட்டார்கள்” என்றான் அர்ஜுனன். சுபத்திரை எதிர்பாராதபடி பேரொலியில் கூவியபடி சாட்டையால் இரு புரவிகளையும் அறைந்தாள். உடல் சிலிர்த்து கனைத்தபடி அவை முழு விரைவில் விரைந்தன. அர்ஜுனன் திரும்பி அவற்றின் விரைவை பார்த்தான். அவை தாங்கள் களைத்திருப்பதை ஒரு கணம் மறந்து அனிச்சையாக விரைவு கொண்டன என்று தெரிந்தது. தோரண வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்த அவற்றின் விரைவு மீண்டும் குறையத்தொடங்கியது.

மேலிருந்து சரிந்து தலை மேல் விழுவது போல் துவாரகையின் மாபெரும் தோரண வாயில் அவர்களை நோக்கி வந்தது. இன்னும் சில கணங்கள்தான். சில அடிகள்… இதோ அருகில்… என்று அவன் மனம் தாவியது. அம்பொன்று வந்து அக்கணத்தில் நிலைமறந்த அவன் விலாவில் பதிந்தது. அதை ஒடித்து பிடுங்கி வீசியபின் அதை எய்தவனை நோக்கினான். அவன் முகம் புன்னகையில் விரிந்திருந்தது. திரும்பிப் பார்த்தபோது தோரணவாயிலைக் கடந்து அவர்களின் தேர் மறுபக்கம் சென்றுவிட்டிருந்தது.

தோரண வாயிலுக்கு அப்பால் கூடி நின்றிருந்த துவாரகையின் மக்கள் உரத்த குரலில் “இளைய பாண்டவர் வாழ்க! மதுராபுரியின் அரசி சுபத்திரை வாழ்க!” என்று கூச்சலிட்டனர். தோரணவாயிலைக் கடந்தபின் அதேவிரைவில் சென்ற புரவிகளில் ஒன்று கால் மடித்து மண்ணில் விழுந்து முகத்தை தரையில் பதித்தது. பிறிதொரு புரவி மேலும் சில அடிகள் வைத்து பக்கவாட்டில் சரிந்து விழ தேர் குடை சாய்ந்தது. சுபத்திரை பாய்ந்து புரவிகளின் மேல் மிதித்து அப்பால் சென்று நிற்க அர்ஜுனன் குதித்திறங்கி அவளை தொடர்ந்தான்.

“வாழ்க! வாழ்க!” என்று துவாரகையின் மக்கள் கூவினர். ஓரமாக நின்ற வெண்புரவி ஒன்றை நோக்கி சென்ற சுபத்திரை அதன் கடிவாளத்தைப் பற்றி கால்சுழற்றி ஏறினாள். அதன் உரிமையாளனாகிய வீரன் தலை வணங்கி பின்னகர்ந்தான். இன்னொருவன் கரிய குதிரை ஒன்றை பின்னால் இருந்து பற்றி அர்ஜுனனுக்கு நீட்டினான். அர்ஜுனன் அதில் ஏறியதும் இருவரும் பாய்ந்து அக்கூட்டத்தின் நடுவே இருந்த பாலைவனப் பாதையினூடாக செம்புழுதி பறக்க புரவியில் சென்றனர். அவர்களுக்குப் பின்னால் வாழ்த்தொலிகளுடன் கூட்டம் ஆரவாரமிட்டது. தோரணவாயிலின் நிழலை கடந்து சென்றபோது அவன் மெல்ல தளர்ந்தான். அவளும் தளர்ந்து புரவியை இழுத்து சீராக நடக்கவிட்டாள்.

மென்புழுதியில் விழுந்த குளம்பு ஒலிகள் நீரில் அறைவது போல் ஒலித்தன. சுபத்திரை திரும்பி அர்ஜுனனை பார்த்து “இப்போது போர் புரிந்தவர் இளைய பாண்டவரல்ல. சிவயோகிதான்” என்றாள். “ஏன்?” என்றான் அர்ஜுனன். “அம்பு பட்டவர்களில் ஒருவர்கூட உயிர்துறக்கப் போவதில்லை” என்றாள். “ஆம், கொல்வது என்னால் இயலாதென்று தோன்றியது. அத்தனைபேரும் என் அன்புக்குரியவர்கள் என்றே அகம் எண்ணியது” என்றான். அவள் புன்னகைத்தாள்.

அர்ஜுனன் பெருமூச்சுடன் “வெளியேறிவிட்டோம்” என்று சொல்லி திரும்பி தோரணவாயிலை பார்த்தான். “இல்லை, பிறிதொரு வழியாக இந்நகரத்திற்குள் நுழையவிருக்கிறோம்… இன்னும் சில நாட்களில்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “ஆம், அவரிடமிருந்து எவர் தப்பமுடியும்?” என்று சிரித்தபடி சொன்னான். அவள் விழிகள் மாறுபட்டன. “இது சக்கர சூழ்கை கொண்ட நகரம். வந்தவர் எவரும் மீண்டதில்லை” என்றாள்.

அவள் உடல் ஏதோ எண்ணங்களால் உலைவது தெரிந்தது. குளம்படித்தாளம் பாலையின் நரம்போசை என ஒலித்தது. சுபத்திரை உதடுகளை இறுக்கி திரும்பி தோரணவாயிலுக்கு அப்பால் தெரிந்த துவாரகையின் இரட்டைக்குன்றுகளையும் அவற்றின்மேல் தெரிந்த மேருவடிவ நகரையும் உச்சியில் எழுந்த பெருவாயிலையும் நோக்கி கண்களை சுருக்கியபடி “இதை உடைத்து மீண்டு சென்றவர் ஒருவரே. என் தமையன் அரிஷ்டநேமி” என்றாள்.

அர்ஜுனன் “ஆம்” என்றான். பிறகு இருவரும் எதுவும் பேசவில்லை. அவர்களின் புரவிகள் ஒன்றின் நிழலென ஒன்றாகி குளம்படிகள் மட்டும் ஒலிக்க வாள்போழ்ந்த நீண்ட வடுவெனக்கிடந்த செம்புழுதிப்பரப்பை கடந்து சென்றன. குறும்புதர்களின் நிழல் குறுகி ஒடுங்கத் தொடங்கியது. பாலையின் செம்மை வெளிறிட்டது. வானில் தெரிந்த ஓரிரு பறவைகளும் சென்று மறைந்தன. வியர்வை வழிந்து அவர்களின் புண்களில் காய்ந்த குருதியைக் கரைத்து வழியச்செய்தது.

பாலைவனத்தின் தொடக்கத்தில் அமைந்த முதல் சாவடியை அடைந்தனர். தொலைவிலேயே சங்குசக்கரக்கொடி வானில் பறப்பது தெரிந்தது. பாலைக்காற்றில் தானே ஊளையிட்டுத் திரும்பும் நான்குமுனைக்கொம்பு ஒன்று மூங்கில் உச்சியில் கட்டப்பட்டு மேலே நின்றது. அதைக் கண்டதும் விடாய் எழுந்தது. அணுக அணுக விடாய் உச்சம் கொண்டது. சாவடியின் முற்றத்தில் போய் புரவிகளை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே சென்றபோது கால்கள் தளர்ந்து விழுந்துவிடுவதுபோல் ஆயினர்.

சாவடிப் பணியாளர்கள் வந்து அவர்களை அழைத்துச் சென்றனர். “நீராடுவதற்கு இளவெந்நீர். உணவு.” என்றான் அர்ஜுனன். “அதற்குமுன் இப்புண்களுக்கு மருந்து.” ஏவலன் “மருத்துவரை வரச்சொல்கிறேன்” என்றான். அங்கிருந்த மரப்பீடத்தில் அமர்ந்தபடி அர்ஜுனன் “மது” என்றான். “ஆணை” என்று தலை வணங்கி ஏவலன் விலகினான். அவன் அருகே அமர்ந்த சுபத்திரை “இப்போது வரும்போது எண்ணிக் கொண்டேன் வீரர்களால் எந்தச் சூழ்நிலையிலும் உள் நுழைய மட்டுமே முடியும் என்று. வெளியேறும் கலை அறிந்தவர்கள் யோகியர் மட்டுமே” என்றாள்.

அர்ஜுனன் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை எண்ணியபடி முகத்தை பார்த்தான். “வீரராகிய பார்த்தரை நான் வெறுத்தேன். யோகியாகிய உங்களை விழைந்தேன். என் வயிற்றுள் உறையும் விழைவு அது. நாளை இங்கு பிறப்பவன் வெளியேறவும் தெரிந்தவனாக இருக்க வேண்டும், என் தமையனைப் போல” என்றாள். அர்ஜுனன் உள்ளம் அறியாத துயரொன்றால் உருகியது. அவள் தலையைத் தொட்டு “நான் வெளியேறத் தெரியாதவன். உன்னுடன் இணைந்து நானும் அதற்காக வேண்டிக்கொள்கிறேன். கருணைகூர்க தெய்வங்கள். அருள்க மூதாதையர்” என்றான். அவன் தோள்களில் தலை சாய்த்துக்கொண்டு அவள் “தெய்வங்களே… ஊழே… கனிக!” என்றாள்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா 2015
அடுத்த கட்டுரைசூழும் இருள்