‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 67

பகுதி ஐந்து : தேரோட்டி – 32

சகடங்களின் ஒலி எழுந்து சாலையைச் சூழ்ந்திருந்த மாளிகைகளின் சுவர்களில் பட்டு எதிரொலித்து முழக்கமெனச் சூழ சாலைகளில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர்களையும் புரவிகளையும் பல்லக்குகளையும் விலங்குகளையும் பதறி இருமருங்கும் ஒதுங்கச் செய்தபடி பாய்ந்து முன்னால் சென்றது அர்ஜுனனும் சுபத்திரையும் சென்ற தேர். தேர்த்தட்டில் எழுந்து பின்பக்கம் நோக்கி நின்ற அர்ஜுனன் தன் வில்லை குலைத்து சற்று அப்பால் கையிலொரு பெரிய மரத்தொட்டியுடன் வந்து கொண்டிருந்த முதிய பணியானையின் காதுக்குக் கீழே அடித்தான்.

சற்றே பார்வை மங்கலான முதிய களிற்றுயானை அலறியபடி சினந்து பின்னால் திரும்பி ஓடியது. இன்னொரு அம்பால் அதன் முன்னங்காலில் வயிறு இணையுமிடத்தில் அடித்தான். காலை தூக்கி நொண்டியபடி திரும்பி அரண்மனையின் பெருவாயிலின் குறுக்காக நின்றது. அவர்களின் தேரைத் தொடர்ந்து முற்றத்திற்கு ஓடிவந்த யாதவர்கள் தங்கள் தேர்களிலும் குதிரைகளிலும் ஏறி அதட்டல் ஒலியுடன் கூவி ஒருவரை ஒருவர் ஏவியபடி குளம்புகளும் சகடங்களும் சேர்ந்து ஒலிக்க பாய்ந்து வந்தபோது வாசலை மறித்ததுபோல் குழம்பிச் சினந்த பெரிய யானை நின்று கொண்டிருந்தது.

“விலக்கு! அதை விலக்கு!” என அவர்கள் கூவினர். யானையைவிட பாகன் குழம்பிப்போயிருந்தான். அதன் கழுத்துக் கயிற்றைப் பிடித்து துரட்டியை ஆட்டி கூவியபடி “வலது பக்கம்! வலதுபக்கம்!” என்று ஆணையிட்டான். முதியயானைக்கு செவிகளும் கேளாமலாகிவிட்டிருந்தன. ஒருகாலத்தில் அணிவகுப்பின் முன்னால் நடந்ததுதான். முதுமையால் சிந்தையிலும் களிம்பு படர்ந்திருந்தது. அது நின்ற இடத்திலேயே உடலைக்குறுக்கி வாலைச்சுழித்து துதிக்கையை சுருட்டியபடி பிளிறிக்கொண்டு சுழன்றது. கால்களை தூக்கியபடி இருமுறை நொண்டி அடித்தபின் எடை தாளாது மடிந்த மறு காலை சரித்து வாயிலிலேயே படுத்துவிட்டது.

பாய்ந்துவந்த புரவிகள் தயங்கி விரைவழியமுடியாது பின்னால் திரும்பி கனைத்து வால் சுழற்றிச் சுழல தொடர்ந்து வந்த தேர்கள் நிற்க அவற்றில் முட்டி சகடக்கட்டைகள் கிரீச்சிட நின்றன. ஒரு புரவி நிலை தடுமாறி யானையின் மேல் விழுந்தது. அதிலிருந்த வீரன் தெறித்து மறுபக்கம் விழ சினந்த யானை துதிக்கையைச் சுழற்றி தரையை அடித்தபடி காலை ஊன்றி பாதி எழுந்து பெருங்குரலில் பிளிறியது. ஒன்றுடன் ஒன்று முட்டி தேர்களும் புரவிகளும் முற்றத்தில் குழம்பின. தேரிலிருந்த ஒருவன் சவுக்கை வீசியபடி “விலகு! விலகு!” என பொருளின்றி கூச்சலிட்டான்.

சுபத்திரை நகைத்தபடி “மறுபக்கச் சிறு வாயில்களின் வழியாக சற்று நேரத்தில் அவர்கள் தொடர்ந்து வந்து விடுவார்கள்” என்றாள். “எனக்குத் தேவை சில கணங்கள் இடைவெளி மட்டுமே” என்றான். “இந்நகரம் சக்கரச் சூழ்கை எனும் படையமைப்பு முறையில் அமைக்கப்பட்டுள்ளது அறிவீர்களா?” என்றாள் சுபத்திரை. “அறிவேன்… அதை எதிர்த்திசையில் சுழன்று கடக்கவிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

சுபத்திரை புரவியை சவுக்கால் தொட்டு பெருங்குரலில் விரைவுபடுத்தியபடி திரும்பி “பாலை நிலத்தில் மெல்லிய கூம்புக்குழிகளை பார்த்திருப்பீர்கள். அதனுள் பன்றி போன்ற அமைப்புள்ள சிறு வண்டு ஒன்று குடிகொள்கிறது. இங்கு அதை குழியானை என்பார்கள். அக்குழியின் விளிம்பு வட்டம் மென்மையான மணலால் ஆனது. காற்றில் அது மெல்ல சுழன்று கொண்டிருக்கும். அச்சுழற்சியில் எங்கேனும் கால் வைத்த சிற்றுயிர் பிறகு தப்ப முடியாது. சுழற்பாதையில் அது இறங்கி குழியானையின் கொடுக்குகளை நோக்கி வந்து சேரும். தப்புவதற்கும் வெளியேறுவதற்கும் அது செய்யும் அனைத்து முயற்சிகளும் மேலும் மேலும் குழி நோக்கி அதை வரச்செய்யும்” என்றாள்.

சாலையில் எதிரே வந்த இரு குதிரைவீரர்களை அர்ஜுனனின் அம்புகள் வீழ்த்தின. குதிரைகள் திரும்பி கடிவாளம் இழுபட நடந்து சென்று சாலையோரத்தில் ஒண்டி நின்று தோல் அசைத்து பிடரி சிலிர்த்து குனிந்தன. “குழியானையின் சூழ்கையை நோக்கி நெறிகற்று அமைக்கப்பட்டது இந்நகரம்” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “சக்கரவியூகம் பன்னிரண்டு வகை என்று அறிவேன். அதில் இது ஊர்த்துவ சக்கரம்” என்றான். “ஆம், செங்குத்தாக மேலெழும் மேருவடிவம் இது. இதுவரை எவரையும் இது தப்பவிட்டதில்லை” என்றாள். “நன்று” என்றான். சுபத்திரை கடிவாளத்தை சுண்டினாள். காற்றில் சவுக்கை வீசி குதிரைகளுக்கு மேல் சவுக்கோசை எப்போதும் இருக்கும்படி செய்தாள்.

“நூற்றெட்டு காவல்கோபுரங்கள் அறிவிப்பு முரசுகளுடன் இந்நகரில் உள்ளன. மானுட உடலின் நூற்றெட்டு நரம்பு நிலைகளைப் பற்றி சொன்னீர்கள். அவற்றுக்கு நிகர் அவை. முரசுகளின் மூலமே இந்நகரம் அனைத்து செய்திகளையும் தன்னுள் பரிமாறிக்கொள்ள முடியும். மூன்றாவது திகிரிப் பாதையை நாம் அடைவதற்குள் இந்நகரின் அனைத்துப் படைகளும் நம்மை முற்றும் சூழ்ந்துவிடும்” என்றாள்.

“பார்ப்போம். எந்த சூழ்கையையும் உடைப்பதற்கு அதற்குரிய வழிகள் உண்டு” என்ற அர்ஜுனன் அவள் இடக்கையை அசைத்து தேரை திருப்பிய கணத்திலேயே தொடர்ச்சியாக பன்னிரண்டு அம்புகளை விட்டு இரு சிறு பாதைகளினூடாக தொடர்ந்து பாய்ந்து மையச்சாலைக்கு அவனை பின்தொடர்ந்த புரவிப்படையை அடித்து வீழ்த்தினான். நரம்பு முனைகளில் அம்புகள் பட்ட புரவிகள் கால் தடுமாறி விரைந்து வந்த விசையிலேயே தரையில் விழுந்து புரண்டு கால்கள் உதைத்து எழுந்து நிற்க முயல தொடர்ந்து வந்த புரவிகளால் முட்டி மீண்டும் தள்ளப்பட்டன. நிலை தடுமாறிய அப்புரவிகள் சரிந்து விழ அவற்றின்மேல் பின்னால் வந்த புரவிகள் முட்டிச் சரிந்தன.

கடலலைகள் ஒன்றன்மேல் ஒன்று ஏறிப் புரண்டு சரிவது போல் புரவிகள் விழுவதை அரைக்கணத்தில் ஓரவிழியால் சுபத்திரை கண்டாள். ஒரு தேர் மட்டுமே செல்வதற்கு வழியிருந்த சிறு சந்துக்குள் விரைவழியாமலேயே உள்ளே நுழைந்தாள். நகரெங்கும் காவல் முரசுகள் ஒலிக்கத் துவங்குவதை அர்ஜுனன் கேட்டான். சுபத்திரை திரும்பி “தெளிவான ஆணை” என்றாள். “நம் இருவரையும் கொன்று சடலமாகவேனும் அவை சேர்க்கும்படி மூத்தவர் கூறுகிறார்.” அர்ஜுனன் “நன்று, ஆடல் விரைவுசூழ்கிறது” என்றான்.

இருமருங்கும் மாளிகைகள் வாயில்கள் திறந்து நின்ற அச்சிறு பாதையில் நான்கு புரவி வீரர்கள் கையில் விற்களுடன் தோன்றினர். அம்புகள் சிறு பறவைகளின் சிறகோசையுடன் வந்து தேரின் தூண்களிலும் முகப்பிலும் பாய்ந்து நின்றன. கொதிக்கும் கலத்தில் எழும் நீராவி என தேர்த் தட்டில் நின்று நெளிந்த அர்ஜுனன் அவற்றை தவிர்த்தான். பாகனின் தட்டில் முன்னால் இருந்த தாமரை இதழ் மறைப்புக்குக் கீழே தலையை தாழ்த்தி உடல் ஒடுக்கி கடிவாளத்தை சுண்டி இழுத்து புரவிகளை விரைவுபடுத்தினாள் சுபத்திரை. அர்ஜுனனின் அம்புகள் பட்டு இரு புரவி வீரர்கள் தெருவில் இருந்த கற்பாதையில் உலோகக் கவசங்கள் ஓசையிட விழுந்தனர். புரவிகள் திகைத்து பின்னால் திரும்பி ஓடின.

ஒரு குதிரை அம்புபட்டு நொண்டியபடி தொடர்ந்து வந்து கொண்டிருந்த புரவிகளை நோக்கி ஓட அவற்றை ஓட்டியவர்கள் நிலைகுலைந்து கடிவாளத்தை இழுக்கும் கணத்தில் அவர்களின் கழுத்திலும் தோள்களிலும் அர்ஜுனனின் அம்புகள் பாய்ந்தன. தேர் அவர்களை முட்டி இருபக்கமும் சிதறடித்தபடி மறுபக்கமிருந்த அகன்ற சாலைக்குப் பாய்ந்து சென்று இடப்பக்கமாக திரும்பி மேலும் விரைவு கொண்டது. தேர் திரும்பும் விசையிலேயே கைகளை நீட்டி சுவரோரமாக ஒதுங்கி நிலையழிந்து நின்றிருந்த வீரனின் தோளிலிருந்து ஆவநாழியைப் பிடுங்கி சுழற்றி தன் தோளில் அணிந்து கொண்டான் அர்ஜுனன். அதிலிருந்த அம்புகளை எடுத்து தன் எதிரே வந்த யாதவ வீரர்களை நோக்கி செலுத்தினான். ஒருவன் சரிய இன்னொருவன் புரவியை பின்னுக்கிழுத்து விளக்குத்தூணுக்குப்பின் ஒதுங்கி தப்பினான்.

“துறைமுகத்தை நோக்கி…” என்றான் அர்ஜுனன். “துறைமுகத்திலிருந்து கலங்களில் நாம் தப்ப முடியாது. எந்தக் கலமும் துறை விட்டெழுவதற்கு இரண்டு நாழிகை நேரமாகும். அதற்குள் நம்மை எளிதாக சூழ்ந்து கொள்ள முடியும்” என்று சுபத்திரை கூறினாள். “துறைமுகத்துக்கு செல்லும் பாதை சரிவானது. நம் புரவிகள் உச்சகட்ட விரைவை அடைய முடியும்” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்றபடி அவள் மயில் போல அகவி சவுக்கை இடக்கையால் சுழற்றி புரவிகளை அறைந்தாள். மெல்லிய தொடுகையிலேயே சிலிர்த்து சினம் கொண்டு பாயும் வெண்புரவிகள் ஓசையுடன் புட்டங்களில் விழுந்த சாட்டையடிக்கு தங்களை முற்றிலும் மறந்தன. குளம்படி ஓசை கொண்டு இருபுறமும் இருந்த சுவர்கள் அதிர்ந்தன.

கல் பரவிய தரை அதிர்ந்து உடைந்து தெறிப்பதுபோல் சகட ஒலி எழுந்தது. அர்ஜுனனின் தலை மயிர் எழுந்து பின்னால் பறந்தது. தாடி சிதறி உலைந்தது. சுபத்திரையின் மேலாடை அவள் தோளை விட்டெழுந்து முகத்தை வருடி மேலெழுந்து தேர்த்தூணில் சுற்றி காற்றால் இழுத்து பறிக்கப்பட்டு பின்னால் பறந்து கிளை மீது அமரும் மயிலென ஓர் இல்லத்தின் உப்பரிகைமேல் சென்று விழுந்தது. மேலே காவல்மாடங்களில் இருந்து அவர்களைப் பார்த்தவர்கள் முரசொலியால் அவள் செல்லும் திசையைக் காட்ட துவாரகையின் அனைத்து சாலைகளிலும் இருந்து பேரொலியுடன் புரவிகள் சரிவிறங்கத்தொடங்கின.

மூன்றாவது வளைவில் ஒற்றைப்பார்வையில் பன்னிரண்டு சாலைகளையும் பார்த்த அர்ஜுனன் மலை வெள்ளம் இறங்குவது போல் வந்த புரவி நிரைகளை கண்டான். “பத்து அம்பறாத்தூணிகள் தேவைப்படும்” என்றான். “புரவிகளை நிறுத்த இயலாது. இவ்விரைவிலேயே நீங்கள் அவற்றை கொள்ள வேண்டியதுதான்” என்றாள் அவள். விண்ணிலிருந்து மண்ணை நோக்கி எடையுடன் விழுவது போல அவர்களது தேர் சென்று கொண்டிருந்தது. துரத்தி வந்த புரவிநிரைகளில் ஒன்று பக்கவாட்டில் சென்று சிறிய பாதை ஒன்றின் திறப்பு வழியாக அவர்களுக்கு நேர்முன்னால் வந்தது. அர்ஜுனனின் அம்புகள் அவர்கள் புரவிகளில் பட்டு தெறிக்க வைத்தன.

மீண்டும் மீண்டும் புரவிநிரையில் முதலில் வரும் மூன்று புரவிகளை அவற்றின் கால்கள் விலாவைத் தொடும் இடத்தில் இருந்த நரம்பு முடிச்சை அடித்து வீழ்த்தியதே அவன் போர் முறையாக இருந்தது. உச்சகட்ட விரைவில் வந்த பிற புரவிகளால் முன்னால் சரிந்து விழுந்த அப்புரவிகளை முட்டி நிலைகுலையாமலிருக்க முடியவில்லை. ஒன்றன் மேல் ஒன்றென புரவிகள் மோதிக்கொண்டு சிதறி சரிந்து துடித்து எழுந்து மீண்டும் முட்டி விழுந்தன. அவற்றின் கனைப்போசை பிற புரவிகளை மிரளச்செய்து கட்டுக்கடங்காதவையாக ஆக்கியது. மீண்டும் மீண்டும் அதுவே நிகழ்ந்தபோதும்கூட போரின் விரைவில் தெறித்துச் செல்பவர்கள் போல் காற்றில் வந்து கொண்டிருந்த அவர்களால் அதை எண்ணி பிறிதொரு போர் சூழ்கையை வகுக்க இயலவில்லை.

சிறிய நிரைகளாக துறைமுகப் பெரும்பாதையின் இருபுறங்களிலும் திறந்த சிறிய பாதைகளில் திறப்பினூடாக மேலும் மேலும் பாய்ந்து வந்து அவனை தொடர முயன்று விழுந்துருண்ட முதற்புரவிகளில் மோதி சிதறுண்டு தெருக்களில் உருண்டு தெறித்து துடித்தனர். கீழே விழுந்தபின் அவர்கள் எழுவதற்குள் அவர்களைத் தொடர்ந்து வந்த தேர்ச் சகடங்கள் ஏறி நிலைகுலைய அவர்கள் அலறி நெளிந்தார்கள். துடித்து விழுந்து சறுக்கி குளம்புகளை உதைத்து உடல் நிமிர்த்தி பாய்ந்தெழுந்த புரவிகள் இருபுறமும் ஒதுங்கின. அவற்றின் மேல் வந்து மோதிய தேர்ச் சகடங்கள் அவற்றை உரக்க கனைக்க வைத்தன.

கனவு ஒன்று நிகழ்வது போல மீள மீள ஒன்றே நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் எண்ணியது போலவே அவள் “கனவுரு போல” என்றாள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “போரில் மனம் ஆயிரமாக பிரிந்துவிடுகிறது… அந்நிலை கனவில் மட்டுமே எழுவது.” தேரின் உச்சகட்ட விரைவில் முற்றிலும் எடை இழந்தவனாக உணர்ந்தான். விரைவே அவன் உடலை நிகர் நிலை கொள்ள வைத்தது. அவன் உள்ளத்தை விழிகளிலும் கைகளிலும் கூர்கொள்ள வைத்து ஒரு அம்பு கூட வீணாகாமல் வில்லதிரச்செய்தது.

துறைமுக மேடையை நோக்கி தேர் வீசியெறியப்பட்டது போல் சென்றது. “இப்புரவிகள் இனி அதிக தொலைவு ஓடாது” என்றாள். அர்ஜுனன் “மேலும் விரைவு…” எனக்கூவி வில்லுடன் சேர்ந்து நடனமிட்டான். “அங்கு பிறிதொரு தேர் நமக்குத் தேவை” என்றாள் சுபத்திரை. “துறைமுகக்காவலனின் புரவிகள் அங்கு நிற்கும்” என்றான். “நமக்குத் தேவை தேர்” என்றாள். அர்ஜுனன் “துறைமுக முகப்பில் காவலர்தலைவனின் தேர் நிற்க வாய்ப்புள்ளது. அங்கு செல்” என்றான்.

“இங்கிருந்து களஞ்சியங்களை நோக்கி செல்லும் பெரும்பாதை உள்ளது. ஆனால் அது பொதிவண்டிகளாலும் சுமைவிலங்குகளாலும் நிறைந்திருக்கும் இந்நேரம்” என்றாள். “சுமைவிலங்குகளுக்கு மட்டுமான பாதை என்று ஒன்று உண்டா?” என்றான் அர்ஜுனன். “ஆம், இவ்வழி சுமை விலங்குகளுக்கானது” என்று அவள் கைச்சுட்டி சொன்னாள். “அது மண்பாதை…” அர்ஜுனன் “அதில் செல்லலாம். மானுடரைவிட விலங்குகள் எளிதில் ஒதுங்கி வழிவிடும்” என்றான்.

எதிரேயிருந்த காவல் மாடத்தின் மீதிருந்து அவன் மேல் அம்பு விட்ட இரண்டு வீரர்களை அனிச்சையாக அவன் கை அம்பு தொடுத்து வீழ்த்தியது. ஒருவன் அலறியபடி மண்ணில் விழுந்து அவர்களின் தேரின் சகடத்தால் ஏறி கடக்கப்பட்டான். அவன் எலும்புகள் நொறுங்கும் ஒலி அர்ஜுனனை அடைந்தது. “நெடுநாளாயிற்று துவாரகை ஒரு போரைக்கண்டு” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் “யாதவர் போர்கண்டு தலைமுறைகள் கடந்துவிட்டன” என்று சிரித்தான். “அதோ!” என்று அவள் கூவினாள். “அதோ யவனர்களின் சிறுதேர்.” அங்கே யவன கலத்தலைவன் ஒருவன் ஏறியிருந்த இரட்டைக் குதிரை பூட்டப்பட்ட சின்னஞ்சிறிய தேர் அவர்கள் தேர் வரும் விரைவைக்கண்டு திகைத்து பக்கவாட்டில் ஒதுங்கியது.

அர்ஜுனன் “அதில் ஏறிக்கொள்” என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே சுபத்திரை ஓடும் தேரிலிருந்து பறப்பவள் போல எழுந்து அத்தேரின் முகப்புப் பீடத்திற்கு சென்றாள். அர்ஜுனன் பாய்ந்து அதன் பின்பக்கத்தை பற்றிக் கொண்டான். கையூன்றி தாவி ஏறி யவன மொழியில் ஏதோ சொன்னபடி தன் குறுவாளை உருவிய கலத்தலைவனை தூக்கி வெளியே வீசினான். சவுக்கை பிடுங்கிக்கொண்டு அந்தத் தேரோட்டியை வெளியே வீசிய சுபத்திரை ஓங்கி புரவிகளை அறைய இரு புரவிகளும் கனைத்தபடி முன்னால் ஓடின.

அவர்கள் வந்த தேர் விரைவழியாது துறைமுகப்பை நோக்கி சென்றது. “பக்கவாட்டில் திருப்பு” என்றான் அர்ஜுனன். அவள் கடிவாளத்தை பிடித்திழுக்க எதிர்பாராதபடி அவ்விரட்டை புரவிகளும் ஒன்றன் பின் ஒன்றென ஆயின. “என்ன அமைப்பு இது?” என்றாள் அவள். “யவனத்தேர்களின் முறை இது. மிக ஒடுங்கலான பாதைகளில்கூட இவற்றால் செல்லமுடியும்” என்றான் அர்ஜுனன்.

துவாரகையின் ஏழ்புரவித்தேரைவிட விரைவு கொண்டிருந்தது அது. உறுதியான மென்மரத்தால் ஆன அதன் உடலில் பெரிய சகடங்கள் மெல்லிய இரும்புக்கம்பியாலான ஆரங்கள் கொண்டிருந்தன. பித்தளைக் குடத்திற்குள் பித்தளையால் ஆன அச்சு ஓசையின்றி வழுக்கிச் சுழன்றது . “சகடங்கள் உருள்வது போல தெரியவில்லை, பளிங்கில் வழுக்கிச்செல்வது போல் தோன்றுகிறது” என்றாள் சுபத்திரை. அவர்களைத் தொடர்ந்து வந்த யாதவர்களின் தேர்கள் அவர்கள் தேர் மாறிவிட்டதை உணர்வதற்குள் விரைவழியாமலேயே நெடுந்தூரம் கடந்து சென்றன. “அங்கே! அங்கே!” என்று முன்னால் சென்ற யாதவர்கள் குரல்கள் எழ சுபத்திரை தன் தேரைத் திருப்பி சிறிய வண்டிகள் மட்டுமே செல்லும் வணிக சந்து ஒன்றுக்குள் புகுந்தாள்.

இரண்டு புரவிகள் மட்டுமே போகும் அளவுக்கு குறுகலான பாதை அது. துறைமுகத்தை ஒட்டி அமைந்திருந்த மரக்கல வினைஞர்களின் குடியிருப்பு. மரத்தாலான சிறிய அடுக்குவீடுகள் இருபுறமும் செறிந்திருந்தன. அங்கிருந்த நாட்டவரின் கொடிகள் சாளரங்களுக்கு முன்னால் எழுந்து சாலைமேல் பூத்து வண்ணங்களை காட்டின. உப்பரிகைகள் சாலையின் மேலேயே நீட்டி ஒன்றுடன் ஒன்று தோள் உருமி நிரை வகுத்திருந்தன. தேர் செல்வதற்கான பாதை அல்ல என்பதனால் அவ்வப்போது படிக்கட்டுகள் வந்தன. படிப்படிகளாக இறங்கி தொலைவில் அலையோசை என தன்னை அறிவித்த கடலை நோக்கி சென்றது அச்சாலை.

யவனத் தேரின் சகடங்கள் படிகளில் மோதி அலைகள் மேல் படகெனத் துள்ளி மேலெழுந்து நிலத்தில் அமைந்து முன் சென்றன. யவனப்புரவிகள் நீண்டகால்களைச் சுழற்றி சாட்டையில் கட்டப்பட்ட இரும்புக் குண்டுகளென குளம்புகளை கற்தரையில் அறைந்து முன் சென்றன. தேரின் இருபுறங்களிலும் மாறி மாறி இல்லங்களின் முகப்புகள் உரசிச் சென்றன. துறைமுகச்சாலையில் சென்ற யாதவர்களின் நிரை கூச்சல்களுடனும் ஆணைகளுடனும் திரும்பி அச்சிறுபாதையின் விளிம்பை அடைந்ததும் பிதுங்கி இரட்டைப் புரவிகளாக மாறி அவர்களை தொடர்ந்து வந்தது.

அர்ஜுனன் புன்னகையுடன் முன்னால் வந்த நான்கு புரவிகளை அம்பு தொடுத்து வீழ்த்தினான். தேர்கள் சென்ற விரைவும் அதிர்வும் அவை உருவாக்கிய காற்றும் சாலைவளைவுகளும் சிறுபாதை இணைவுகளும் உருவாக்கிய காற்றுமாறுபாடுகளும் பிறவீரர்களின் அம்புகளை சிதறடித்தன. நூற்றில் ஓர் அம்புகூட அர்ஜுனனை வந்தடையவில்லை. ஆனால் அவன் ஏவிய அம்புகள் தாங்களே விழைவு கொண்டவை போல காற்றிலேறி சிறகடித்து மிதந்து சென்றிறங்கின. அவர்கள் அஞ்சி ஒதுங்கியபோது முன்னரே அவ்விடத்தை உய்த்தறிந்தவை போல அவை அங்கே வந்து தைத்தன. அவன் அம்புகளுக்கு விசைக்கு நிகராக விழைவையும் அளித்து அனுப்புவதாக தோன்றியது.

“அவை நுண்சொல் அம்புகள். அவன் உதடுகளைப் பாருங்கள். பேசிக்கொண்டே இருக்கிறான். நுண்சொல்லால் அனுப்பப்பட்ட அம்புகளில் தெய்வங்கள் குடிகொள்கின்றன. அவற்றின் குருதிவிடாய் கொண்ட நாக்குகள் அம்புமுனைகள்” என்று ஒருவன் கூவினான். யாதவர்குடியின் பொது உள்ளத்தின் குரலாக அது ஒலித்தது. ஒலித்ததுமே அது பெருகி அவர்களின் வலுவான எண்ணமாக ஆகியது. யாதவர் அஞ்சத் தொடங்கியபின் விற்கள் கட்டுக்குள் நிற்காமல் துள்ளின. அம்புகள் பாதிவானிலேயே ஆர்வமிழந்தன. புரவிகள் சினம்கொண்டு பாகர்களை உதறின.

வளைந்து சென்றுகொண்டே இருந்தது சிறிய பாதை. “இது எங்கோ முட்டி நிற்கப்போகிறது” என்றாள் சுபத்திரை. “இல்லை. மறுபக்கம் கடலிருக்கையில் அப்படி நின்றிருக்க வாய்ப்பில்லை” என்றான் அர்ஜுனன். இருபுறமும் உப்பரிகைகளில் நின்ற யவனர்களும் பீதர்களும் சோனகர்களும் காப்பிரிகளும் தங்கள் மொழிகளில் அத்தேரை சுட்டிக்காட்டி கூச்சலிட்டனர். என்ன நிகழ்கிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. சாலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அள்ளி உள்ளே இழுத்துக் கொண்டனர் அன்னையர். சாலையோரங்களில் இருந்த கலங்களையும் தொட்டிகளையும் எடுத்துக்கொண்டு உள்ளே மீண்டனர்.

சுருக்கங்கள் அடர்ந்த நீண்ட உடைகள் அணிந்து பொன்னிறச் சுருள் மயிர் கொண்ட யவனப்பெண்கள், இடுங்கிய கண்களும் பித்தளை வண்ண முகமும் கொண்ட பீதர்குலப் பெண்கள், பெரிய உதடுகளும் கம்பிச்சுருள்முடிகளும் காரிரும்பின் நிறமும் கொண்ட ஓங்கிய காப்பிரிப் பெண்கள். அவர்களின் குரல்களால் பறவைகள் கலைந்த வயலென ஒலித்தது அப்பகுதி. “இப்படி ஒரு உலகம் இங்கிருப்பதை நான் அறிந்ததில்லை” என்றான் அர்ஜுனன். “இத்தனை பெருங்கலங்கள் வரும் துறைமுகத்தில் இவர்கள் இருக்கத்தானே வேண்டும்?” என்றாள் சுபத்திரை.

ஆண்கள் படைக்கலங்களுடன் ஓடிவந்து நடப்பது தங்களுக்குரிய போர் அல்ல என்றறிந்து திண்ணைகளில் நின்று நோக்கினர். போர் அவர்களை ஊக்கம் கொள்ளச்செய்தது. இயல்பாகவே யவனத்தேருக்கு ஆதரவானவர்களாக அவர்கள் மாறினர். மேலிருந்து மர இருக்கைகளும் கலங்களும் வந்து கீழே சென்ற குதிரைகள் மேல் விழுந்தன. ஒரு பெரிய தூண் வந்து கீழே விழ புரவிகள் பெருவெள்ளம் பாறையைக் கடப்பதுபோல அதை தாவித்தாவிக் கடந்தன.

அர்ஜுனன் “திருப்பு! திருப்பு!” என்று கூவுவதற்குள் எதிரில் வந்த பொதி மாடு ஒன்று மிரண்டு தத்தளித்து திரும்பி ஓடியது. சுபத்திரை எழுந்து தாமரை வளைவில் வலக்காலை ஊன்றி பின்னால் முழுக்கச்சாய்ந்து பெருங்கரங்களால் கடிவாளத்தை இழுத்து புரவிகளை நிறுத்தினாள். குளம்புகள் அறையப்பட்ட லாடங்கள் தரையில் பதிந்து இழுபட்டு பொறி பறக்க நின்றன. பக்கவாட்டில் ஒரு சிறு பாதை பிரிந்து சென்றது. பொதிமாடு நின்று திரும்பி நோக்கி “அம்மா” என்றது. எங்கோ அதன் தோழன் மறுகுரல் கொடுத்தது. சுபத்திரை புரவியை திருப்பி சாட்டையை வீசினாள். புரவிகள் சிறிய பாதையில் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே நுழைய தேர் சகடங்கள் திடுக்கிட தொடர்ந்தது.

தேரின் வலதுபக்கம் அங்கிருந்த இல்லத்தின் காரைச் சுவரை இடித்துப் பெயர்த்து சுண்ணப் பிசிர்களை தெறிக்க வைத்தபடி சென்றது. “இப்பகுதியின் அமைப்பு துவாரகையில் எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது ஈரத்தில் புல்முளைப்பதுபோல தானாகவே உருவான பகுதியாகவே இருக்கவேண்டும்” என்றான் அர்ஜுனன். “நாம் எவ்வழியே வெளி வருவோமென்று அவர்களால் உய்த்துணர முடியாது.” சுபத்திரை “துவாரகையின் யாதவர்கள் அறிவார்கள்” என்றாள். “ஏனெனில் அவர்களின் தலைவர் தன் உள்ளங்கை கோடுகளென இந்நகரை அறிவார்.”

அர்ஜுனன் “ஆம், மதுராபுரி யாதவர்கள்தான் மதுராவையே நன்கறிந்திருக்க வாய்ப்பில்லை” என்றான். சினத்துடன் திரும்பிய சுபத்திரை “மதுராவுக்கு வாருங்கள், நான் காட்டுகிறேன். நானறியாத இடம் ஏதும் அங்கில்லை” என்றாள். அர்ஜுனன் “சரி சரி தலைவி, நாம் போரில் இருக்கிறோம். தலைக்கு அடகு சொல்லப்பட்டுள்ளது. நாம் பூசலிட நீண்ட நாட்கள் நமக்குத் தேவை. அவற்றை நாம் ஈட்டியாகவேண்டும்” என்று சிரித்தான். விரைவழியாமல் இருபக்க சுவர்களையும் மாறி மாறி முட்டி உரசி மண்ணையும் காரையையும் பெயர்த்தபடி சென்றது தேர்.

“தப்பிவிட்டோம் என நினைக்கிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “நம்மைத் துரத்தியவர்கள் நேராக கடல்முகம் நோக்கி செல்கிறார்கள்.” முரசுகள் முழங்குவதை அவள் கேட்டு “ஆம், படகுகள் அனைத்தையும் கலங்களால் வளைத்துக்கொள்ளும்படி அரசாணை” என்றாள். “நாம் படகுகளில் ஏறி துவாரகையின் எல்லையை கடக்க முயல்வோம் என அவர்கள் எண்ணுவதில் பொருள் உள்ளது. ஏனென்றால் அதுவே எளிய வழி. பலராமர் அதை நம்பியிருப்பார்” என்றான் அர்ஜுனன். “நான் அவர்களுடன் இல்லாதது உங்கள் நல்லூழ்” என்றாள் சுபத்திரை.

“இந்தப் பாதை மையப்பெருஞ்சாலையை அடையும். நாம் துறை வழியாக தப்புவதாக செய்தியிருப்பதனால் அங்கே காவலர் குறைவாகவே இருப்பார்கள். முழுவிரைவில் சென்றால் அரைநாழிகையில் தோரணவாயிலை கடந்துவிடலாம். அதை கடந்துவிட்டால் நம் ஆட்டம் முடிகிறது” என்றான் அர்ஜுனன். அவள் “அரைநாழிகை நேரம் மிகமிக நீண்டது” என்றாள். “காமத்துக்கு நிகர்” என்று அவன் சொல்ல “மூடுங்கள் வாயை. எங்கே எதைப் பேசவேண்டும் என்பதில்லையா?” என அவள் பொய்ச்சினம் கொண்டாள்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைபரவா
அடுத்த கட்டுரைகோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்