‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66

பகுதி ஐந்து : தேரோட்டி – 31

“நாண் இழுபடுகையில் வில்லின் இரு முனைகளையும் சீராக இழுக்குமெனில் மட்டுமே அம்பு நேராக செல்லும்” என்று அர்ஜுனன் சொன்னான். “விசை தோளிலிருந்து நாணுக்கு செல்கிறது. நாணிலிருந்து தண்டுக்கு. தண்டிலிருந்து அம்புக்கு. தண்டின் இருமுனைக்கும் விசையை பகிர்ந்தளிப்பது நாண். எனவேதான் வில்லின் நாண் ஒற்றைத் தோலில் அமைந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.”

“எருமையின் கொம்பின் அடியிலிருந்து பின்கால் குளம்பு வரைக்கும் வளைந்து செல்வதாக தோலைக்கீறி எடுத்து நாணை அமைக்கிறார்கள். நீர் அருந்துவதற்காக பின்காலை உலர்ந்த கரையில் வைத்து முன்னங்காலை நீர் விளிம்பில் வைத்து வாயை நீட்டி நீரை தொடும் ஒரு எருமை ஒவ்வொரு நாணிலும் என் விழிகளுக்கு வந்து போகும்.” வில்லை நிறுத்தி காலால் அதன் நுதிபற்றி நாணை இழுத்து விம்மலோசை எழுப்பினான்.

“நாணுக்கு உகந்தது தோலே. ஏனெனில் பிற அனைத்தை விடவும் சுருங்கி விரிவதும் வலுக்கொண்டதும் அது. மானுட உடலே தோலெனும் நாணால் இழுத்துக் கட்டப்பட்டது என்று சரபஞ்சரம் என்னும் நூல் சொல்கிறது. உடலுக்குள் நூல் ஒன்று செல்கிறது. உள்ளே பல நூறு அம்புகள் ஏவப்படுகின்றன. உள்ளேயே அவை இலக்கை கண்டுகொள்கின்றன.”

சுபத்திரை அவன் சொற்களை கேட்டுக் கொண்டு நின்றிருந்தாள். அவள் கண்களைப் பார்த்து “என்ன?” என்றான். “இல்லை” என்று அவள் தலை அசைத்து புன்னகைத்தாள். “சொல்” என்றான். “நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது விற்கலை என்றே தோன்றவில்லை” என்றாள் அவள். “எந்தக் கலையும் அதன் நடைமுறையிலிருந்தே தொடங்கும். அதன் நெறிகளை நோக்கி வளரும். அதன் தத்துவம் நோக்கி ஒடுங்கும். ஒளிகொண்டு தரிசனம் ஆகும்” என்றான் அர்ஜுனன். புன்னகைத்து “அது எளிய ஒற்றைச்செயலென சிறுக்கும் என்பது உலகியல்” என்றாள்.

“விற்கலை இலக்கின் மீதான விளைவென சிறுப்பது என ஒரு முறை நீ சொன்னாய். தேர்ந்த விற்கலை வீரனுக்கு இலக்குகள் ஒரு பொருட்டல்ல. தொடுக்கும் அனைத்து இலக்குகளையும் வென்றுவிட முடியும் என்று அவன் அறிந்தபின் அறைகூவலென இருப்பது அவனது உடலிலும் உள்ளத்திலும் உள்ள எல்லைகள்தான். விற்கலை என்பது அம்பென, வில்லென, தொடுக்கும் தோளென தன்னையே ஆக்கிக் கொள்ளல். அதன் உச்சம் வெறும் விழியென எண்ணமென முழுமை கொள்ளல்.”

அவள் புன்னகைத்து “அறியேன். ஆனால் நீங்கள் இதை சொல்லும்போது ஒவ்வொரு வார்த்தையிலும் உங்கள் முழு உயிரும் வந்து அமைவதை காண்கிறேன். உங்களுக்கு மாற்றாக இச்சொற்களை எடுத்து வைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. அவற்றின் பொருள் என்னவென்றாலும் அவை என்னிடம் சொல்லப்படுகின்றன என்பதே என்னை உளம்கிளரச் செய்கிறது” என்றாள்.

அவள் தோளைத் தொட்டு புன்னகையுடன் “சரி, இந்த நாணை தொட்டு இழு” என்றான் அர்ஜுனன். அவள் அவனருகே வந்து தோள்தொட்டு நின்றாள். வில் முனையை அவள் பற்றியதும் “வில் மையத்தை விழிகளால் கணக்கிடாதே. விரல்கள் அறியட்டும்” என்றான். “நாணை அதன் இழுவிசையால் கணக்கிடுவது தொடக்கம். இழுத்து ஒரு முறை விட்டதும் ஒலியிலேயே வில்லை அறிந்து கொள்வான் வில்லவன்.”

நாணிழுத்து செவி வரை நிறுத்தி அம்பு தொடுத்ததும் அவள் விழிகள் இலக்கை கூர்ந்தன. அவள் தோள்களைத் தொட்டு மறுகையால் வில்பிடித்த அவள் கைகளை பற்றியபடி அவன் “உம்” என்றான். அவன் மூச்சு அவள் கழுத்தின் குறுமயிர்களை அசைய வைத்தது. “உம்” என்று அவன் மீண்டும் சொன்னான். அம்பு பறந்து சென்று இலக்கைத் தாக்கி நின்றாடியது.

அவள் வில்லை தாழ்த்தியபின் தலை குனிந்து கொண்டாள். அவள் தோள்களை தொட்டு “என்ன?” என்றான். “இல்லை” என்றபின் அவள் வில்லை கொண்டு சென்று பீடத்தில் வைத்தாள். “என்ன?” என்றபடி அர்ஜுனன் அவள் பின்னால் சென்றான். “சொல், என்ன?” என்றான். அவள் அவன் கண்களை நிமிர்ந்து நோக்கி நாணம் திரண்ட விழிகளுடன் “அந்த அம்பு விடும்போது…” என்றாள். “என்ன?” என்றான் அர்ஜுனன். “அந்த அம்பு விடும் போது அதுவும் ஓர் உச்சகணம் போல் இருந்தது” என்றாள்.

புரியாது திரும்பி இலக்கை நோக்கிவிட்டு அவளைப் பார்த்து “ஆம், அது ஓர் உச்சகணம்தான். இன்னும் அரிய இலக்கை எடுப்போம்” என்றான். “போதும்” என்றபடி அவள் பீடத்தில் அமர்ந்தாள். “எளிதில் சலிப்புற்று விடுகிறாய்” என்றான் அர்ஜுனன். “என்னை தீட்டித் தீட்டி கூர்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அது பொருளற்றது என்று தோன்றுகிறது. இதோ இங்குள்ள இக்கூழாங்கற்கள் அனைத்தும் வான்மழையாலும் காற்றாலும் மென்மையாக்கப்பட்டவை. அதைப்போல இருக்கவே நான் விழைகிறேன்” என்றாள்.

“ஏன்?” என்றான் அர்ஜுனன். “ஒரு செயலின் பொருட்டு கூர்மையாக்கப்பட்டவை படைக்கலங்கள். இக்கூழாங்கற்கள் அப்படி ஓர் இலக்குக்கென அமைந்தவை அல்ல.” அவற்றில் ஒன்றை தூக்கி சிறு பீடம் மீது அமர்த்தி “ஆனால் இறையென அமர்த்தப்பட்டால் பின் கல்லென எவரும் கடந்து செல்ல மாட்டார்கள்” என்றாள். அர்ஜுனன் தன் கையிலிருந்த அம்பை இலக்கு நோக்கி எறிந்துவிட்டு “பேசக் கற்றிருக்கிறாய்” என்றான். “நூற்கல்வியின் பயனே அதுதானே?” என்றாள் சுபத்திரை.

படைக்கலச் சாலைக்குள் வந்து தலைவணங்கிய ஏவலனை நோக்கி திரும்பி அர்ஜுனன் விழிகளால் என்ன என்றான். “செய்தி” என்றான் அவன். “இருவருக்குமா?” என்றான் அர்ஜுனன். அவன் “ஆம்” என்று சொல்ல சொல்லும்படி கையசைத்தான். “மூத்த யாதவரின் படைகள் துவாரகையை நெருங்கிக் கொண்டிருக்கின்றன” என்றான் ஏவலன். “படைகளா?” என்றான் அர்ஜுனன். “ஆம், எத்தனை நாட்களுக்கு முன் அவர் மதுராவிலிருந்து கிளம்பினாரென்று தெரியவில்லை. ஆனால் பாலையை இரண்டே நாட்களில் கடந்துவிட்டார்” என்றான்.

அர்ஜுனன் “படைகள் என்றால்?” என்றான். “மதுராவிலிருந்து அவருடன் விருஷ்ணி குலத்து வீரர்களும் அந்தக குலத்து வீரர்களும் வந்தனர். வரும் வழியிலேயே குங்குரர்களும் போஜர்களும் அவருடன் இணைந்து கொண்டிருக்கலாம். அவர்கள் முன்னரே மதுராவை நோக்கி கிளம்பி வரும் வழியில் மூத்த யாதவரை சந்தித்தனர் என்று தோன்றுகிறது.” அர்ஜுனன் தாடியை நீவியபடி சற்றே விழி சரித்து எண்ணம் கூர்ந்துவிட்டு திரும்பி “சினந்து வருகிறார்களா?” என்றான். “ஆம்” என்றான் ஏவலன். “வஞ்சினம் உரைத்து வருவதாக சொன்னார்கள்.”

“என்னிடம் செய்தி சொல்ல உம்மை அனுப்பியது யார்?” என்று அர்ஜுனன் கேட்டான். “அக்ரூரர். அவர் சொன்ன வார்த்தைகளையே திருப்பி சொன்னேன்” என்றான் ஏவலன். அவனை செல்லும்படி கைகாட்டிவிட்டு திரும்பி சுபத்திரையை பார்த்தான். சுபத்திரை “நான் இதை எதிர்பார்த்தேன். இன்னும் பத்துநாட்கள்தான் மணத்தன்னேற்புக்கு உள்ளன. நான் இங்கிருந்து கிளம்பியாயிற்றா என்று கேட்டு எட்டு ஓலைகள் வந்தன. எவற்றுக்கும் இங்கிருந்து முறையான மறுமொழி செல்லவில்லை. இங்கு தங்களுடன் நான் படைக்கலப் பயிற்சி கொள்வது அரண்மனையில் அனைவரும் அறிந்ததே. மூத்த தமையனாருக்கும் இங்கு அரண்மனை முழுக்க அணுக்கர்கள் உண்டு” என்றாள்.

“பெரும் சினத்துடன் வருகிறார். கட்டற்று சினம் கொள்பவர் என்பது அனைவரும் அறிந்ததே” என்றான் அர்ஜுனன். “ஆம். அது இயல்பே” என்றாள். அர்ஜுனன் அவளை நோக்கி “என்ன செய்யவிருக்கிறாய்?” என்றான். “நான் ஏதும் செய்வதற்கில்லை. மறைத்து எதையும் செய்யும் வழக்கமும் எனக்கில்லை. அவர் வரட்டும். என்னை தன் அவைக்கு அழைத்து கேட்பார். என் உள்ளத்திற்கு உகந்ததை தலைநிமிர்ந்து சொல்வேன்” என்றாள். “அவர் என்னை என்ன செய்வார்?” என்றான் அர்ஜுனன். “தாங்கள் சிவயோகி அல்ல என்று இப்போதே அறிந்திருப்பார். பார்த்த மறுகணமே யாரென்று தெளிவார். போருக்கழைப்பார். அவருடன் கதைப்போரிட நீங்கள் சித்தமாக வேண்டியதுதான்.”

அர்ஜுனன் சிரித்து “எனக்கெனப் போரிட என் தமையனைத்தான் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வரவழைக்க வேண்டும்” என்றான். “விளையாடாதீர்கள். இது அதற்கான நேரமல்ல” என்றாள் சுபத்திரை. அர்ஜுனன் மீசையையும் தாடியையும் இடக்கையால் நீவியபடி தலை தாழ்த்தி எண்ணத்திலாழ்ந்தான். “இப்போது செய்வதற்கு ஒன்றே உள்ளது. நான் தேர் கூட்டுகிறேன். என்னுடன் கிளம்பு. துவாரகையின் எல்லையை விட்டு இன்றே விலகிச் செல்வோம்.”

“அதன் பெயர் பெண்கவர்தல் அல்ல” என்று அவள் சொன்னாள். “பெண்கவர்ந்து செல்வதற்கும் நெறிகள் உள்ளன. ஆணென தோள் விரித்து எதிர்த்து நின்று அதை ஆற்றவேண்டும். கரந்து செல்ல நான் ஒன்றும் களவு செய்பவளல்ல” என்றபின் “உங்களுக்கு உகந்த முடிவை எடுங்கள். நான் அரண்மனைக்கு திரும்புகிறேன்” என்றாள். அர்ஜுனன் “நானும் அதையே சொல்ல விழைகிறேன். நான் அரண்மனைக்கு திரும்புகிறேன். அவர் வரட்டும். எதிர்கொள்கிறேன்” என்றான்.

இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி நின்றபின் ஒரு புன்னகையில் இணைந்து கொண்டனர். “சென்று வா. இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவன் இத்தனை சிறிய களங்களில் தோற்பதற்காக வில்லெடுத்தவன் அல்ல” என்றபின் அவள் தோளைத் தொட்டு “வருகிறேன்” என்றான். அந்தத் தொடுகை அவளை மலரச் செய்தது. புன்னகையுடன் அவள் தலையசைத்தாள்.

தன் அறைக்கு வந்து நீராடி ஆடை அணிந்தபின் நூலறைக்குச் சென்று வில்நூல் ஒன்றை எடுத்து படிக்கத் தொடங்கினான். அவன் அணுக்கன் வாயிலில் வந்து நின்று நிழலாட்டம் அளித்தான். விழிதூக்கிய அர்ஜுனனிடம் “படைகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள். நகரமே அச்சத்தில் இருக்கிறது” என்றான். “நகரம் எதற்கு அச்சப்பட வேண்டும்?” என்றான் அர்ஜுனன். “மூத்த யாதவர் வருவது தங்களுக்காகவே என்று அனைவரும் அறிவர்” என்றான் அணுக்கன். “ஆம்” என்றான் அர்ஜுனன். “எவ்வகையிலோ நீங்களும் இளவரசியும் கொண்ட விழைவை இந்நகர் ஒப்புக்கொண்டது. வெளிக்காட்டாமல் அதை கொண்டாடியது. எனவே அச்சம் கொள்கிறது” என்றான்.

அர்ஜுனன் “அவ்வாறு ஏற்றுகொண்டது பிழை என்றால் அதற்குரிய தண்டத்தை அது பெற்றுக் கொள்ளட்டும்” என்றான். “இல்லை… தாங்கள்…” என்று அவன் ஏதோ சொல்ல வர அர்ஜுனன் “நான் என்ன செய்யவேண்டுமென்று எண்ணுகிறீர்?” என்றான். “இப்போது மூத்த யாதவரை களம் நின்று எதிர்கொள்ள தங்களால் இயலாது. அவர் பாரதவர்ஷத்தின் நிகரற்ற கதைபோர் வீரர்.” அர்ஜுனன் “ஆம், அறிவேன். ஆனால் அஞ்சி ஓடும் குலமரபு கொண்டவனல்ல நான்” என்றான். “நானும் அறிவேன்” என்றான் அணுக்கன்.

அர்ஜுனன் விழிதூக்கி “நான் யார் என்று அறிவீரா?” என்றான். “ஆம், நான் மட்டும் அல்ல, இந்நகரில் அனைவரும் அறிவர்” என்றான். அர்ஜுனன் எழுந்து தன் இடையில் கைவைத்து “அக்ரூரருமா?” என்றான். “ஆம், அவருக்கும் முன்னரே தெரியும். நகரில் உள்ளோர்க்கு சற்று ஐயமிருந்தது. தாங்கள் வில் கொண்டு செல்வதைக் கண்ட சூதன் ஒருவன் உறுதிபடச் சொன்னபிறகு அவ்வையம் அகன்றது. அல்லது தாங்கள் இளைய பாண்டவராக இருக்க வேண்டுமென்று ஒவ்வொருவரும் விழைந்ததனாலேயே எளிதில் அடையாளம் கண்டு கொண்டனர்.”

அர்ஜுனன் “யாதவ இளைஞர்கள் என் மேல் சினம் கொள்ளவில்லையா?” என்றான். “ஆம், சினம் கொண்டிருந்தார்கள். ஆனால் தனியாக நகர் புகுந்து இளவரசியின் உளம் வென்றதனால் மெல்ல அவர்கள் அடங்கினார்கள். ஏனெனில் அதிலொரு புராணக்கதையின் அழகு உள்ளது.” அர்ஜுனன் நகைத்து “அவ்வழகை பெருக்குவோம்” என்றான். அணுக்கன் கண்களில் மெல்லிய துயர் வந்தது. “போரென வந்தால்?” என்றான். “நான் இறப்பதற்கு அஞ்சவில்லை” என்றான் அர்ஜுனன். “ஆனால் அவ்வண்ணம் நிகழுமென்றால் அது…” என்றபின் அணுக்கன் மங்கிய புன்னகை செய்து “தெய்வங்கள் பெரும் துயர்களை விரும்புகின்றன என்று சூதர்கள் சொல்வதுண்டு” என்றான்.

“மானுடன் அவ்வப்போது தெய்வங்களை சீண்டிப் பார்க்க வேண்டி உள்ளது. பார்ப்போம்” என்றான் அர்ஜுனன். நீள்மூச்சுடன் அணுக்கன் தலை வணங்கி வெளியே சென்றான். பகல் முழுக்க அர்ஜுனன் நூலறையில் இருந்தான். மாலையில் உணவுண்டபின் மீண்டும் படைக்கலச் சாலைக்கு சென்று பயிற்சி கொண்டான். இரவு திரும்பிவந்து நீராடியபின் மஞ்சத்தில் படுத்து அக்கணமே துயின்றான். காலையில் அவன் அறை வாயிலில் நின்ற அணுக்கன் “படைகள் தோரணவாயிலில் நின்றால் தெரியும் தொலைவுக்கு வந்துவிட்டன இளைய பாண்டவரே” என்றான்.

அர்ஜுனன் எழுந்து “ஆம். அவர் நகர் நுழையட்டும். நான் சிவாலயங்களில் வழக்கமான பூசனை முடித்து வரும்போது அவர்களின் நகர்நுழைவு நிகழ்வதற்கு சரியாக இருக்கும்” என்றான். “இன்று தாங்கள் செல்லத்தான் வேண்டுமா?” என்றான் அணுக்கன். “இன்றுதான் செல்ல வேண்டும்” என்று சொல்லி புன்னகைத்தான் அர்ஜுனன். நீராடி சிவக்குறி அணிந்து புலித்தோலை சுற்றிவந்தான். பூசனைப்பொருட்களுடன் அணுக்கன் தொடர ஒற்றைப் புரவித் தேரில் ஏறி தென்மேற்குத் திசை நோக்கி சென்றான்.

இணைச்செண்டுவெளிக்கு அருகே தேர் சென்றபோது நிறுத்தச் சொல்லி தேரின் தண்டில் தட்டினான். தேர் நின்றதும் இறங்கிச் சென்று செண்டுவெளியின் உள்ளே நடந்து போய் செம்மண் விரிந்து கிடந்த அந்த முற்றத்தை நோக்கி நின்றான். அன்றும் குருதி ஊறியிருப்பதாக தோன்றியது. காலையொளி வானில் முகில்களின் ஓரங்களில் மட்டும் சிவப்பாக ஊறியிருக்க அந்த மண் கடற்காற்றில் மெல்லிய புழுதியலைகளை எழுப்பியபடி இருந்தது. இருளுக்குள் ஒரு கணத்தில் பல்லாயிரம் ஆடுகள் முட்டி மோதி அலை அடித்து நின்ற காட்சி வந்து சென்றது.

திரும்பி வந்து தேரிலேறிக்கொண்டு “செல்க!” என்றான். தேர் சென்று சிவன் ஆலயத்துக்கு முன் நின்றது. இறங்கி ஆலயத்தை நோக்கி செல்கையில் உடன் வந்த அணுக்கனிடம் அரிஷ்டநேமி பற்றி ஏதோ கேட்கவேண்டுமென்று எண்ணினான். ஆனால் மறுகணமே அவ்வெண்ணம் கை நழுவி நீரில் விழுந்த எடை மிக்க பொருள் போல் நெஞ்சுக்குள் சென்றது. அரிஷ்டநேமி அந்நகர்விட்டு சென்றபின் ஓரிரு நாட்களிலேயே அந்நகரம் அவரை மறந்தது. நா தவறியும் கூட எவரும் அவர் பெயரை சொல்லாமலாயினர்.

அத்தனை முழுமையான மறதி என்பது உள்ளம் திட்டமிட்டு நிகழ்த்துவது. அது அத்தனை பேரிலும் ஒரே தருணத்தில் நிகழும்போது மட்டுமே அத்தனை பேராற்றல் கொண்டதாக ஆகிறது. அவரை திராட்சைச்சாற்றை கலத்தில் மூடி நூறாண்டு காலம் புளிப்பதற்காக மண்ணில் புதைத்து வைக்கும் தேறல்சமைப்பவர் போல அந்நகரம் தன் உள்ளாழ்த்தில் எங்கோ மறைத்து வைத்தது. அங்கு நிகழ்ந்தவற்றை சூதர்களும் மறந்தனர். ஒருநாள் நகர்சதுக்கத்தில் வந்து கை முழவை மீட்டிப் பாடிய தென்திசைச்சூதன் ஒருவன் அரிஷ்டநேமி ஏழு ஆழுலகங்களில் சென்று மானுடரின் விழைவுகளை ஆளும் தெய்வங்களை பார்த்த கதையை பாடினான்.

கடும்குளிர் பரவிய இருளால் ஆன நீர் பேரிரைச்சலுடன் ஓடும் ஆறொன்றால் சூழப்பட்ட முதல் உலகம். கசக்கும் அமிலத்தாலான இரண்டாவது உலகம். கொந்தளிக்கும் எரிகுழம்பால் சூழப்பட்ட மூன்றாவது உலகம். கண்ணொளிரும் நாகங்களால் சூழப்பட்ட நான்காவது உலகம். பறக்கும் கூருகிர் தெய்வங்களால் சூழப்பட்ட ஐந்தாவது உலகம். செவி உடையும் பேரமைதியால் வேலியிடப்பட்ட ஆறாவது உலகம். கரைத்தழிக்கும் இன்மையால் சூழப்பட்ட ஏழாவது உலகம்.

ஒருசில வரிகளுக்குள்ளேயே அவன் பாடலைக்கேட்டு ஒவ்வொருவராக விலகி செல்லத்தொடங்கினர். பாடி முடிக்கையில் சதுக்கத்தில் அவன் மட்டுமே இருந்தான். திகைப்புடன் தன்னைச் சூழ்ந்த வெறுமையை பார்த்தபின் குறு கிணை தாழ்த்தி தரை தொட்டு தலையில் வைத்து வணங்கி அவன் திரும்பி சென்றான். அதன் பின் அவரைப்பற்றி பாடும் எவரும் நகருக்குள் நுழையவில்லை.

ஏழு சிவாலயங்களில் முறையே வணங்கி நீரும் வில்வமும் செவ்வரளியும் கொண்டு நெற்றியிலும் சென்னியிலும் சூடி அர்ஜுனன் திரும்பினான். ஆலயத்தில் அவனை பார்த்த சிவநெறியினர் அனைவர் விழிகளிலும் ஒன்றே இருந்தது. திரும்பி ஒளி எழத்தொடங்கியிருந்த சாலைக்கு வந்து தேரில் ஏறிக்கொண்டபோது எதிர்வந்த அனைவர் விழிகளும் அவனைக் கண்டு திகைத்தன. இறந்தவன் உயிர் கொண்டு வருவதை பார்ப்பது போல என்று எண்ணிக் கொண்டான்.

அவனது தேர் மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு வருவதற்குள்ளாகவே இடுங்கிய சாலையின் இருபுறங்களிலும் புரவிகளில் வந்து சூழ்ந்துகொண்ட யாதவ வீரர்கள் அவனை மறித்தனர். வாளுடன் முதலில் வந்தவன் “நான் குங்குர குடித்தலைவன் சாம்பன். அவர் எங்களுடைய படைத்தலைவர் உதயன். இளைய பாண்டவரே, தங்களை பிடித்து வரும்படி மூத்த யாதவரின் ஆணை. மீறுவீர்கள் என்றால் எங்கள் படைகளுடன் போருக்கெழுகிறீர்கள் என்றே பொருள்” என்றான்.

“நான் அவரை சந்திக்க சித்தமாக இருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “தேரிலேயே நான் வரலாமென்றால், அவ்வண்ணம் ஆகுக. அல்லது என்னை பிடித்து இழுத்துச் செல்லவேண்டும் என்று ஆணை என்றால் அது நிகழட்டும்” என்றான். “தாங்கள் தேரிலேயே வரலாம்” என்றான் உதயன். “ஏனென்றல் இன்னும் நீங்கள் தண்டிக்கப்படவில்லை.” அவன் தேரைச் சூழ்ந்து யாதவரின் புரவிகள் நெருக்கியடித்தன. அவன் தேரை இழுத்த புரவி தும்மி தலையாட்டியபடி தன் விருப்பின்மையை தெரிவித்தது.

துவாரகையின் அரண்மனையின் பெருமுற்றத்தை அடைந்ததும் “இறங்குங்கள் இளைய பாண்டவரே” என்றான் உதயன். “எங்கிருக்கிறார் மூத்த யாதவர்?” என்றான் அர்ஜுனன். “குடிப்பேரவையில்” என்று உதயன் சொன்னான். “உங்கள் பிழையுசாவல் அங்குதான்.” பிறவீரர்கள் அவன் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் கைகள் இயல்பாக அசைந்தபோதும் திடுக்கிட்டு உடல் அதிர்ந்தனர்.

அர்ஜுனன் நிமிர்ந்த தலையுடனும் சீரான காலடிகளுடனும் அரண்மனையின் இடைநாழிகளில் நடந்தான். வேலுடனும் வாளுடனும் இரு நிரைகளில் காவல் நின்ற வீரர்கள் அவனை வியப்புடன் நோக்கினர். தலை வணங்கி வழி திறந்த ஏவலர்கள், கையசைவில் ஆணை பெற்று ஓடி செய்தி அறிவிக்கச் சென்ற வீரர்கள் அனைவர் விழிகளும் ஒரே உணர்வையே கொண்டிருந்தன. அணுகும்போதே குடிப்பேரவையின் கலைந்த பேரொலியை அர்ஜுனன் கேட்டான். உள்ளே சென்று அவன் வரவை அறிவித்த ஏவலன் தலைவணங்கி அவன் உள்ளே செல்லலாம் என்று கை காட்டினான்.

உதயன் நெருங்கி “அவைபுகுங்கள் இளைய பாண்டவரே” என்றான். அர்ஜுனன் கதவைக் கடந்து உள்ளே சென்றதும் அதுவரை ஓசையிட்டுக் கொண்டிருந்த பேரவை அமைதியடைந்தது. பின் சினம் கொண்ட யானை போல் அது நீள் மூச்சொன்றை எழுப்பியது. அர்ஜுனன் தலைவணங்கி “பேரவைக்கு என் பணிவை அறிவிக்கிறேன்” என்றபின் திரும்பி அரியணை அருகே பொற்பீடத்தில் அமர்ந்திருந்த பலராமரை பார்த்து “மூத்த யாதவரையும் அரசரையும் வணங்குகிறேன்” என்றான்.

வெயிலில் அலைந்தமையால் பழுத்து செம்புநிறம் கொண்டிருந்த பெரும் கரங்களை தன் மடியில் கோத்து வைத்து பற்களைக் கடித்தபடி பலராமர் அவனை நோக்கிக் கொண்டிருந்தார். அவனுக்கு பீடம் ஏதும் அளிக்கப்படவில்லை. எதிரிலிருந்த அக்ரூரர் “சிவயோகியே, தாங்கள் குற்றம்சாட்டப்பட்டு இந்த அவைக்கு வந்துள்ளீர். தாங்கள் இந்த அவையை ஏமாற்றி விட்டீர்கள் என்றும் இளவரசியிடம் மாற்றுருக்கொண்டு பழகினீர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறீர். தங்களை அதன் பொருட்டு தண்டிக்க வேண்டுமென்று யாதவர்களின் குலத்தலைவர்கள் விரும்புகிறார்கள்” என்றார்.

அர்ஜுனன் சற்றே தலை சாய்த்து வணங்கினான். குடித்தலைவர் ஒருவர் எழுந்து “தங்கள் பெயரென்ன என்று அவைக்கு சொல்லுங்கள்” என்றார். “ஃபால்குனன்” என்றான் அர்ஜுனன். “சென்ற சில ஆண்டுகளாக நான் வாமார்க்க சிவாசாரத்தில் ஒழுகி வருகிறேன்.” அவர் “குலம்?” என்றார். அவன் “நான் அஸ்தினபுரியின் அரசர் பாண்டுவின் மைந்தன். இந்திரப்பிரஸ்தம் ஆளும் யுதிஷ்டிரரின் இளையோன். என்னை அர்ஜுனன் என்றும் பார்த்தன் என்றும் அழைப்பார்கள்” என்றான். அவை முழுக்க மெல்லிய முணுமுணுப்பு கடந்து சென்றது. “இதை மறைத்து இங்கு ஏன் இத்தனை நாள் இருந்தீர்கள்?” என்றார் ஒரு குடித்தலைவர். “நான் மறைக்கவில்லை. கூறவும் இல்லை. ஏனெனில் கூறும்படி இந்த அவையோ அரசோ என்னை கோரவில்லை. நான் யார் என்பது அரசருக்குத் தெரியும். அவரே இந்நாட்டின் காவலர் என்பதனால் நான் இந்நாட்டை ஏமாற்றவில்லை” என்றான்.

அக்ரூரர் இளைய யாதவரை பார்த்து “தங்கள் சொல்லை அவை நாடுகிறது” என்றார். “ஆம், எனக்குத் தெரியும்” என்றார் இளைய யாதவர். “நான் எதையும் பேரவையிடம் ஒளிப்பதில்லை. இளைய பாண்டவர் எனது தோழர். ரைவத மலையில் இத்தோற்றத்தில் அவரைப் பார்த்தபோது பிறர் அவரை எளிதில் கண்டு கொள்ள முடியாதென்று தோன்றியது. எனவே இவ்வுருவிலேயே இங்கு வரும்படி நான் ஆணையிட்டேன்.” கைகளை பீடத்தில் அறைந்தபடி முன்னால் சாய்ந்து “எதற்கு?” என்று உரத்த பெருங்குரலில் பலராமர் கேட்டார்.

“என் தங்கையை மணம் கொண்டு செல்வதற்கு” என்றார் இளைய யாதவர். வெடிப்போசையுடன் தன் தொடையில் அறைந்தபடி எழுந்து “என் ஆணையை மீறி தங்கையை பிறனுக்கு அளிக்க துணிந்து விட்டாயா? தனி அரசொன்றுக்கு தலைவன் என்று ஆணவம் கொண்டாயா? இப்போதே உன்னை தனிப்போருக்கு அழைக்கிறேன்” என்றார்.

“இல்லை மூத்தவரே” என்று இளைய யாதவரும் எழுந்தார். “ஆணவமில்லை இது. என் தங்கையின் உள்ளம் எதை விரும்புகிறது என்று அறியும் விழைவு மட்டுமே. தாங்கள் அமைக்கவிருக்கும் மணத்தன்னேற்பை நான் மறுக்கவும் இல்லை. அதை குலைக்க எண்ணவும் இல்லை. மணத்தன்னேற்பை தங்கை விழைகிறாளா என்று அறிய விரும்பினேன். அவளுக்குரிய மணமகன் என்று இளைய பாண்டவரை அவள் எண்ணினால்கூட அவரிடம் மணத்தன்னேற்புக்கு வந்து போட்டியில் பங்கேற்று வென்றுசெல்லவே நான் ஆணையிடுவேன். இங்கு இவர் வந்ததும் தங்கியதும் தங்கையுடன் பழகியதும் அறப்பிழை அல்ல” என்றார்.

“யாதவ குலப்பெண்கள் ஆண்களுடன் பழகுவதும் தங்கள் உள்ளம் என்ன என்று அறிந்து கொள்வதும் இப்போதுமட்டும் நிகழ்வதும் அல்ல. அவர்கள் தங்கள் மூதன்னையருக்கு உகந்தவற்றையே செய்கிறார்கள். இதை மூதன்னையர் விலக்குவாரென்றால் இப்போது இங்கு எரியும் விளக்குகளில் ஒன்றாவது அணையட்டும்” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். ”இந்த அவை அதற்குச் சான்றாகட்டும்”

பலராமர் திரும்பி பேரவையின் கூடத்தில் எரிந்த நெய்யகல் சுடர்களை மாறி மாறி பார்த்தபின் மெல்ல தோள் தளர்ந்து மேல்மூச்சு விட்டார். அர்ஜுனன் புன்னகையை அடக்கியபடி தலை குனிந்தான். பின் நிரையில் யாரோ “மூத்தவர் இங்குள்ள சாளரங்களில் ஒன்றைத் திறந்து அதன் பின் சுடர்களில் ஒன்று அணைகிறதா என்று பார்த்திருக்க வேண்டும்” என்றார். இரு மெல்லிய சிரிப்பொலிகள் கேட்டன. அர்ஜுனன் அவனைப் பார்க்க அவன் விழிகள் சிரிப்புடன் அர்ஜுனன் விழிகளை சந்தித்தன.

பலராமர் “அவ்வண்ணமெனில் இவன் பிழையேதும் செய்யவில்லை என்கிறாயா?” என்றார். “எனது ஆணையையே நிறைவேற்றினார். பிழை செய்திருந்தாரென்றால் அது நான் செய்த பிழைதான்” என்றார் இளைய யாதவர். “இளவரசியை உள்ளம் கவர்வதற்கு நீங்கள் முயன்றீர்களா?” என்று அக்ரூரர் அர்ஜுனனிடம் கேட்டார். “இது என்ன வினா அமைச்சரே? அழகிய இளம்பெண்ணின் உள்ளம் கவர விழையாத ஆண்மகனென்று எவரேனும் இப்புவியில் உண்டா? அத்தனை முதியவனா நான்?” என்றான் அர்ஜுனன். அவையில் பலர் சிரித்து விட்டனர்.

அவனை நோக்கி திரும்பி சினத்துடன் கையசைத்த அக்ரூரர் “இது நகையாட்டல்ல” என்றார். “ஆம், உள்ளம் கவர முயன்றேன்” என்றான் அர்ஜுனன். “கவர்ந்துளேனா என்று இளவரசி சொல்வார்கள்.” அனைவரும் அவையில் பெண்டிரின் பகுதியை நோக்கினர். அவையில் வலப்பக்க கீழ்நிரையில் இளைய யாதவரின் எட்டு அரசியரும் அமர்ந்திருந்தனர். சத்யபாமை எழுந்து “இளவரசியை அவைக்கு கொண்டுவந்து உசாவும் மரபு யாதவருக்கில்லை. பெண்ணை வினவவோ தண்டிக்கவோ யாதவகுடியில் ஆண்களுக்கு உரிமையில்லை” என்றாள்.

பலராமர் தத்தளிப்புடன் “ஆம், ஆனால் நான்…” என்றார். சத்யபாமை மேலும் சினமெழுந்த குரலில் “பெண்ணின் நடத்தை என்பது அவளுடைய அகச்செயல். அதில் தந்தைக்கோ கதமையனுக்கோ கணவனுக்கோ சொல்லில்லை என்பதே யாதவ நெறி. அவளுடைய பிழையோ நிறைவழிவோ கண்டறிய வேண்டியவர் அவள் அன்னை. இங்கு அவள் அன்னையின் இடத்திலிருக்கும் நான். எங்கள் முடிவு இங்கெழுந்தருளியுள்ள மூதன்னையர் சொல்” என்றாள்.

“அவ்வண்ணமெனில் நீங்களே உசாவி உரையுங்கள்” என்றார். “நான் அவளிடம் கேட்டேன்” என்றாள் சத்யபாமை. பலராமர் தயக்கத்துடன் “என்ன சொன்னாள்?” என்றார். “இளைய பாண்டவரை அன்றி பிறிதொருவரை மணமகனாக ஏற்க முடியாது என்று சொன்னாள்.” குளிர் நீர் கொட்டப்பட்ட யானை போல் உடல் விதிர்க்க பலராமர் நின்றார். ஏதோ சொல்வதற்காக எழுந்த அவர் இரு கைகளும் தளர்ந்தவை போல் தொடையுரசி விழுந்தன. குலத்தலைவர் ஒருவர் “பிறகென்ன? யாதவ முறைப்படி திருமணமே முடிந்து விட்டது. இனி எவருக்கும் சொல்லில்லை” என்றார்.

“இல்லை, இதை நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை” என்று கை தூக்கி கூவியபடி அரங்கின் முகப்புக்கு வந்தார் பலராமர். “என் உயிர் உள்ள அளவும் இவனை அவள் கொள்ள ஒப்புக்கொள்ள மாட்டேன். அது நிகழப்போவதில்லை” என்றார். சத்யபாமா “இனி மணத்தன்னேற்பு நிகழ முடியாது. அவளது தன்னேற்பு முடிந்துவிட்டது” என்றாள். என்ன செய்வதென்றறியாது பதறும் உடலுடன் மேடையில் பலராமர் சுற்றி வந்தார். உடைந்த குரலில் “நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எவ்வகையிலும் ஒப்புக்கொள்ளமாட்டேன்” என்றார்.

“என்ன செய்ய எண்ணுகிறீர்கள் மூத்தவரே?” என்றாள் சத்யபாமா. “அவளை இங்கிருந்து அழைத்துச் செல்வேன். மதுராவில் என் குலத்துக்கு முன் நிறுத்துகிறேன். அங்கு முடிவெடுக்கிறேன்.” அவள் “இங்கிருந்து அவளை தாங்கள் கொண்டு செல்ல முடியாது” என்று உறுதியாகச் சொன்னாள். “இங்கிருக்கும்வரை அவளுக்கு நான் அன்னை. எந்த யாதவப் பெண்ணும் அவள் விழைவை மீறி மணம் கொள்ள மாட்டாள். ஷத்ரியப்பெண் போல் யாதவப்பெண் அடிமையோ உடைமையோ அல்ல.”

“அப்படியென்றால்…” என்றபின் நின்று சுற்றிலும் திரும்பிப் பார்த்து அருகே நின்ற சிறிய மண்டபத்தூணை ஓங்கி தன் கையால் அறைந்தார் பலராமர். அது விரிசல்விட்டு மேற்கூரை சற்று தணிய சரிந்தது. காலால் ஓங்கி உதைத்து அதை கிரீச்சிட உடைத்து கையில் ஏந்தி சுழற்றியபடி அர்ஜுனனை நோக்கி வந்தார். கைகளைக் கட்டியபடி விழிகளைக் கூட அசைக்காமல் அவன் நின்றான். அத்தூணைச் சுழற்றி அவனை அடிக்க வந்த அவர் அவ்வசைவின்மை கண்டு தயங்கினார். “தங்கள் கையால் கொல்லப்படுதல் இந்நாடகத்தின் இறுதி அங்கமென்றால் அவ்வண்ணமே ஆகட்டும் மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.

ஓசையுடன் அத்தூணை தரையில் வீசியபடி “என்ன செய்யவிருக்கிறாய்?” என்றார். “இதோ இங்கிருக்கும் ஐங்குல யாதவருக்கும் அங்கு அமர்ந்திருக்கும் அரசருக்கும் அவர் அறத்துணைவியருக்கும் தங்களுக்கும் தலைவணங்கி ஒன்றை சொல்வேன். இந்த அவையிலிருந்து என் இல்லறத் துணைவியை அழைத்துக் கொண்டு நகர்நீங்கவிருக்கிறேன். எங்களை தடுக்கும் எவரும் என் வில்லுக்கு நிகர் நிற்க வேண்டும்” என்றபின் அர்ஜுனன் திரும்பி சத்யபாமையை நோக்கி “முறைப்படி தங்கள் ஒப்புதலை மட்டுமே நான் கோரவேண்டும் பேரரசியே” என்றான்.

“ஆம், என் மகளை உங்களுக்கு கையளிக்கிறேன்” என்றபின் சத்யபாமா திரும்பி தன் சேடியிடம் “இளவரசியை அவைபுகச்சொல்” என்றாள். அச்சொல்லுக்கு காத்திருந்தது போல் வாயிலுக்கு அப்பால் இருந்து இருபுறமும் சேடியரால் அழைத்து வரப்பட்ட சுபத்திரை தலைகுனிந்து கைகூப்பி மெல்ல காலடி எடுத்து வைத்து அவைக்கு வந்தாள். அவளைக் கண்டதும் அவை அறியாது வாழ்த்தொலி எழுப்பியது. மூத்த யாதவர் ஒருவர் “மணமங்கலம் பொலிக!” என்றார்.

அர்ஜுனன் அவையை குறுக்காகக் கடந்து சுபத்திரையின் அருகே சென்றான். சத்யபாமை சுபத்திரையின் வலதுகையைப் பற்றி அவனிடம் நீட்டி “கொள்க இளைய பாண்டவரே” என்றாள். அவன் வியர்த்துக் குளிர்ந்திருந்த அக்கையை பற்றிக் கொண்டான். அவையில் வாழ்த்தொலி எழுந்தது. இருவரும் சத்யபாமாவை தாள் வணங்கினர். “தங்கள் நற்சொற்கள் துணையிருக்க வேண்டும்” என்றான் அர்ஜுனன். “வீரரைப் பெறுக! குலக்கொடி அறாது காலங்களை வெல்க!” என்று சொன்ன சத்யபாமா திரும்பி தன் அருகே நின்ற மங்கலச்சேடியின் கையிலிருந்த எண்மங்கலம் அடங்கிய தாலத்திலிருந்து மலர்களையும் அரிசியையும் எடுத்து அவர்கள் தலைமேல் இட்டு வாழ்த்தினாள்.

சுபத்திரையின் கையை பற்றியபடி அவைக்கு வந்து நின்ற அர்ஜுனன் அரியணையில் அமர்ந்திருந்த இளைய யாதவரையும் அவையில் பதட்டத்துடன் எழுந்து நின்றுவிட்டிருந்த யாதவ குலங்களையும் நோக்கி தலை வணங்கிவிட்டு வாயிலை நோக்கி நடந்தான். “பிடியுங்கள் அவனை” என்று பலராமர் கூவினார். “இதுதான் உனது முடிவென்றால் அவன் விதவையாக என் தங்கை வாழட்டும்” என்று இளைய யாதவரிடம் கூச்சலிட்டுவிட்டு “கொல்லுங்கள்… தலையை கொண்டுவந்து என் முன் இடுங்கள்” என்றார்.

வாட்களை உருவிக்கொண்டு ஓடி வந்த யாதவ குலத்து இளைஞர்களை நோக்கி அக்ரூரர் கைகளைத் தூக்கி கூவினார். “இது அரசவை. இங்கு ஒருவரோடு ஒருவர் வாள்கோக்க அனுமதி எப்போதுமில்லை. பூசல் என்றால் அது நிகழவேண்டியது அரண்மனை வளாகத்திற்கு வெளியே.” ஸ்ரீதமர் “ஆம், இவ்வரண்மனைக்குள் ஒருவருக்கொருவர் வாள் உருவும் எவரும் அக்கணமே தண்டிக்கப்படுவார்கள். அது மூத்த யாதவராயினும் நெறி ஒன்றே” என்றார்.

இளைய யாதவர் கையசைத்து “இந்நகரம் அந்தகக் குலத்து பட்டத்தரசி சத்யபாமையின் சொல்லுக்கு அடங்கியது. இந்நகரில் படைகளோ குலவீரர்களோ அவளுக்கு எதிராக எழமாட்டார்கள். எனவே முனிந்து இங்கு வந்துள்ள யாதவ குலங்கள் தங்கள் போரை நிகழ்த்தட்டும். அதில் துவாரகையினர் தலையிடவும் மாட்டார்கள்” என்றார்.

“ஆம், இது எங்கள் போர். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார் குங்குர குலத்தலைவர் சம்பிரதீகர். “வாளை எடுங்கள் இளையோர்களே! எத்தனை தொலைவு இவர்கள் செல்வார்கள் என்று பார்ப்போம்” என்று கூச்சலிட்டபடி வெளியே ஓடினார். அவரது வீரர்களும் போர்க்குரலுடன் தொடர்ந்தோடினர்.

அவையின் எட்டு பெருவாயில்களையும் இழுத்துத் திறந்து அதனூடாக உள்ளிருந்த யாதவ வீரர்கள் வெளியே பாய்ந்தனர். இடைநாழிகளை நிரப்பி முற்றத்தில் இறங்கினர். சுபத்திரையின் கையை பற்றிக்கொண்டு நிமிர்ந்து நடந்து வந்த அர்ஜுனன் இடைநாழியைக் கடந்து படிகளில் இறங்கி முற்றத்தை அடைந்தான். திரும்பி அருகே நின்ற வீரன் ஒருவனின் வில்லையும் அவன் தோளில் இருந்த ஆவநாழியையும் வாங்கிக் கொண்டு தேரிலேறிக்கொண்டான். சுபத்திரை தேரில் பாகனுக்குரிய தட்டில் அமர்ந்து கடிவாளத்தை இழுத்து இடக்கையால் மெல்ல சுண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேர் உயிர் கொண்டது.

குதிரைகள் தலை தூக்கி கடிவாளத்தை மெல்ல இழுத்து பிடரி சிலிர்த்தன. பிறிதொரு முறை கடிவாளத்தை சுண்டியபின் அவள் ஆணையிட இரை நோக்கிப் பாயும் சிறுத்தை என உறுமியபடி பெருமுற்றத்தின் சரிந்த கல்பாதையில் குளம்படிகள் பெருகிச்சூழ்ந்து ஒலிக்க சகடங்களைச் சுற்றிய இரும்புப் பட்டை கல்லில் பட்டு பொறிகள் சீறித் தெறிக்க பாய்ந்தோடி அரண்மனையின் உள்கோட்ட காவல் மாடம் அமைந்த வாயிலை இமைப்பொழுதில் கடந்து பெருஞ்சாலையில் இறங்கியது அவர்களின் தேர்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் புகைப்படங்கள் 1
அடுத்த கட்டுரைஇந்தோனேசியா -கடிதங்கள்