இந்தோனேசியா -கடிதங்கள்

IMG_6575

ஜெ

கால் படும் மண்ணிற்கு உண்டு பல ஆயிரம் வருட கதைகள். ஆனாலும் மண்ணின் கதைகள் யாரும் அறியா வண்ணம் அமைதி காத்து உறங்குகிறது. மண்ணாகி மறைந்து போக விருப்பமின்றி கட்டிய கோவில்கள் தரும் உணர்வுகள் விதவிதமானவை.

கட்டுவது கலை என்றா? நீள் காலம் வாழும் ஆசையா? பண்பாட்டை பகிர வேண்டிய கடமையா? எது அவர்களை இப்படி கட்டி குவிக்க தோன்றியது என நினைத்தால் மனம் தாளவில்லை. காதில் ஒலிக்கிறது பல காலம் எதிரொலித்தபடி இருந்த உளிகளின் சப்தங்கள்… கொட்டிய கைகள், செதுக்கிய கைகள், கொடுத்த கைகள், எடுத்த கைகள் அத்தனைக்கும் வந்தனம் சொல்ல தோன்றுகிறது.அங்கே வாழ்ந்து மறைந்த மக்கள் நினைவுக்கு வந்தனர்.
நிற்க.
கண் மூடி திறந்தால், பல நூறு ஆண்டு தாண்டி விட்டது. ஒருவரும் இல்லா வெளியில் என்ன தவம் செய்கின்றன அவைகள். ஊழ் எனும் கண் இல்லா விசை ஒன்று அள்ளி சிதைத்து , காற்றில் ஊதி விட்டு செல்கிறது…. மீண்டும் எடுத்து அடுக்கி வைக்க வேறு ஊழ். என்ன விளையாட்டு இது? சிவன், கணபதி, சூரியன், வருணன் …. வெறும் கற்களாக நிற்கவா அன்று கட்டி தீர்த்தான்? கலவர படுத்தி கொள்கிறது இந்த காலம் எனும் சூறை காற்றின் திசைகளும் வேகமும்

யாருக்கோ எதுவோ வேண்டபட, உடனே எங்கிருந்து வந்து கட்ட சொல்லிய உத்தரவு? ( கல்லு கும்ஹாரிடம் சிவன் ஒரே இரவில் ஒருகோடி சிற்பங்களைச் செய்தால் கைலாயத்திற்கு அழைத்துக்கொள்வதாகச் சொன்னான் ) – உனக்கோட்டி சிவன் தொன்ம கதை…. எத்தனை பேரின் கனவுகளில் வந்து உத்தரவு கொடுத்து இப்படி சிவன் விரிந்தபடி சென்றான், இடிந்தான், சிதைந்தான் இன்று பூஜைகள் கொண்டு கண் மூடி அமர்ந்தான்?? படர்ந்து விரிந்த கிடந்த காலம் போய், இன்று தொலைந்தபடியே செல்கிறார்கள் சிவன்கள்

ஏன் இன்றைய பகுதி வெறுமை போன்ற ஒரு அமைதியின்மையை தந்தது என தெரியவில்லை. இன்னும் எத்தனை கனவுகள் தான் உங்கள் உள்ளே சென்று ஆழும் என்பதும் புரியவில்லை.

அன்புடன்,
லிங்கராஜ்

அன்புள்ள ஜெமோ

இந்தோனேசியாவின் இந்துக்கோயில்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவரை விரிவாக வாசித்ததில்லை. அங்குள்ள திரிமூர்த்தி கோயில் கற்பனையை வளர்த்தது. தென்னாடுடைய சிவன் என்னும் சொல் மனசிலே வளர்வதுபோலத் தோன்றியது. அங்கே புயலையும் இடியையும் ஏந்தி நிற்கும் சிவனை ஒரு முறைபோய் வணங்கிவரவேண்டும்

பயணக்கட்டுரைகள் வழியாகத் தெரியும் ஒரு ஜெ வியப்பளிக்கிறார். இந்த அளவுக்கு எந்த தமிழ் எழுத்தாளரும் பயணம்செய்யவில்லை எனநினைக்கிறேன். மாதம்தோறும் போய்க்கொண்டே இருக்கிறீர்கள். எதையோ தேடிக்கொண்டிருக்கிறீர்கள். மறந்துவைத்த எதையோ ஊர் ஊராகப்போய் தேடுவதாக நினைக்கிறேன்

மதுசூதனன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66
அடுத்த கட்டுரைஎகிப்திய பிரமிடுகளை அடிமைகள் கட்டினார்களா?