டப்பிங்

1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தாங்கள் கதை திரைக்கதை அமைத்த மலையாள சித்திரம் ‘ஒழிமுறி’ கண்டேன், மிகச் சிறந்த ஒரு படைப்பு , தமிழிலும் இது போல் படங்களில் தங்களது பங்களிப்பு தொடர வேண்டும்.
படத்தில் வரும் நீதி அரசர் (ஜெட்ஜ்) கதாபாத்திரத்தின் குரல் அட்சர சுத்தமாக தங்களது குரலாக ஒலிக்கிறதே? தாங்கள் அப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தீர்களா?

இணையம் ஊடாக தங்களது பல தரப்பட்ட பேச்சுக்களை கேட்டதினால் தங்களது தமிழ் உச்சரிப்பு மனதில் தனியாக பதிந்துவிட்டது , அக்கதாபாத்திரம் சிற்சில தமிழ் வார்த்தைகளை பேசும் பொழுது அது தங்கள் குரலாக எனக்கு பட்டது , அது சரியா?
இல்லை என்றால் அது என் பிரமையாக இருக்க வேண்டும்.

சந்திரமௌலி ராமு

அன்புள்ள சந்திரமௌலி

அது என்குரல்தான்

ஒழிமுறியின் டப்பிங் நானே முன்னின்று நடத்தியது. ஏனென்றால் அந்த உச்சரிப்புமுறை சரியாகவரவேண்டுமென விரும்பினேன். குமரிமாவட்ட உச்சரிப்புமுறை மிகவும் அன்னியமானது – தமிழிலும் மலையாளத்திலும்.

பொதுவாக அன்னியமான உச்சரிப்புமுறைகள் நகைச்சுவைக்கே பெரிதும் பயன்படுத்தப்படும். ராஜமாணிக்கம் போன்ற படங்களுக்குப்பின், சுராஜ் வெஞ்ஞாறமூடு நடிக்கத்தொடங்கியபின், அந்த வட்டார வழக்கைக் கேட்டாலே சராசரி மலையாளி சிரிப்பார்

ஆகவே ஒழிமுறி நகைச்சுவையாக ஆகாமல் உணர்வுநிலைகள் குறையாமல் டப்பிங் செய்யப்படவேண்டுமென விரும்பினேன். மதுபால் பாலக்காட்டைச்சேர்ந்தவர். ஆகவே அவருக்கு அந்த மொழி தெரியாது.

டப்பிங்கில் குரல்தேர்வு ஒரு பெரிய கலை. அதற்கு விதிகள் ஏதுமில்லை. மனதுக்கு தோன்றவேண்டும், அக்குரல் அந்த முகத்துக்கு இசைகிறதா என்று. முதலில் கேட்கும்போது தோன்றுவதே சரி. மறுபடி மறுபடி கேட்டு சரிதான் என நினைக்கத்தொடங்கினால் எல்லாமே சரி என தோன்றும்

அந்தக்குரல் பலநாட்களாக முயன்றும் செட் ஆகவில்லை. ஒருவருக்கு நான் பேசக்கற்றுக்கொடுத்தேன். மதுபால் உள்ளே அழைத்து என் குரல் பதிவை காட்டி காட்சியுடன் பார்க்கச்சொன்னார். மிகச்சரியாகப் பொருந்தியது

சரி என்று உள்ளே போய் 15 நிமிடத்தில் டப்பிங்கை முடித்துவிட்டேன். நக்கலான சிரிப்பு, தமிழும் மலையாளமும் மாறிமாறி வரும் பேச்சு எல்லாமே மிகச்சரியாக அமைந்தது.நடிகர் என்றால் மத்தியான்னம் ஆகியிருக்கும்

இது எப்போதும் உள்ளதுதான். பொதுவாக எழுத்தாளர்கள், இயக்குநர்கள் எளிதாக டப்பிங் கொடுக்கமுடியும். அவர்களே உருவாக்கும் கதாபாத்திரம் என்பதனால். பாபநாசத்தில் சுகா பல கதாபாத்திரங்களுக்குக் குரலாக ஒலித்திருக்கிறார்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64
அடுத்த கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10