தீ

fire

இன்று என் கதைகளுக்கு ஆதாரமாக ஒரு பெரிய கதைப்புலம் ஒன்று உள்ளது. யட்சிக்கதைகள், யானைக்கதைகள், வீரர்கதைகள், அம்மதெய்வங்களின் கதைகள் என ஒரு மிகவிரிவான புலம் அது. அதைப்பற்றி ஒரு கலைக்களஞ்சியமே என்னால் உருவாக்க முடியும். அந்தக்கதைகளை நான் என் சிறு வயதுமுதலே கேட்க ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்த நாட்களில் அந்தக்கதைகள் மீது ஒரு விசேஷக்கவனம் உருவாகி அவற்றை சேகரிக்கவும் கற்கவும் நிறையவே அலைந்திருக்கிறேன். அவை பெரும்பாலும் பாடல்களின் வடிவில் இருக்கின்றன. அவற்றை தெற்கன் பாட்டுகள் என்கிறார்கள்.

தென்திருவிதாங்கூர் அல்லது இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் புழங்கிய நாட்டார்பாடல்களுக்குத்தான் தெற்கன்பாட்டுகள் என்று கேரளத்தில் பெயர். அதேபோல அன்று வடகேரளத்தில் இருந்த பாடல்கள் வடக்கன்பாட்டுகள் என்று சொல்லப்பட்டன. இந்தப்பிரிவினையை செய்தவர் ‘கேரள சாகித்ய சரித்ரம்’ என்ற பெருநூலை எழுதியவரான உள்ளூர் பரமேஸ்வர அய்யர். கேரளத்தின் முக்கியமான மூன்று கவிஞர்களில் ஒருவராக கருதப்படும் இவர் பிறப்பால் ஒரு தமிழர்.

‘ஆரோமலுண்ணி’, ‘மாமாங்கம்’ ‘கண்ணப்பனுண்ணி’ போன்ற பிரபலமான மலையாள சினிமாக்கள் வடக்கன்பாட்டுகளை அடியொற்றி அமைந்தவை. எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘ஒரு வடக்கன் வீர கதா’ பலரும் விரும்பிப்பார்த்த படம். அவை பெரும்பாலும் மறைந்த வீரர்களின் தியாகங்களைப்பற்றி சொல்கின்றன. அவற்றில் யட்சிக்கதைகள் குறைவு.

அந்த அளவுக்கு தெற்கன்பாட்டுகள் புகழ்பெறாமல் போய்விட்டன. அதற்கு முக்கியமான காரணம் இப்பாட்டுகள் தமிழ் கலந்த மலையாளத்தில் அமைந்தவை. அக்கால திருவிதாங்கூரில் நடந்த போர்கள், மற்றும் வரலாற்று நிகழ்வுகளை ஒட்டியவை. அவற்றை அறிய கேரளவரலாறு தெரிந்து அதில் ஆர்வம் இருக்கவேண்டும். தமிழிலும் பயிற்சி இருக்க வேண்டும். மாநிலப்பிரிவினைக்குப் பின் குமரிமாவட்டம் தமிழ்நாட்டின் பகுதியாக ஆகி, அதன் திருவிதாங்கூர் காலகட்டத்தை மறக்க முயல்கிறது. கேரளம் தென்திருவிதாங்கூரையே மறந்துவிட்டது.

ஆய்வாளர்களால் தெற்கன்பாட்டுகள் அனேகமாக இப்போது மீட்கப்பட்டுவிட்டன. இத்துறையின் இரு முக்கியமான ஆய்வாளர்கள் எனக்கு இன்று மிக நெருக்கமானவர்கள். தெற்கன் பாட்டுகளை சேகரித்து இருபது நூல்களை வெளியிட்ட மலையாள ஆய்வாளர் த்ரிவிக்ரமன் தம்பி என் வீட்டருகே குடியிருக்கிறார். முப்பதுக்கும் மேலான தெற்கன் பாட்டுகளை வெளியிட்ட அ.கா.பெருமாள் நான் அன்றாடம் சந்திப்பவர்.

ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பு நூல்களையும் ஆய்வாளர்களையும் தகவல் தெரிந்தவர்களையும் தேடி நான் அலைந்து திரிந்தேன். தெற்கன் பாட்டுகளை வாய்மொழியாகப் பாடுபவர்கள் வேகமாக வழக்கொழிந்து வந்தார்கள். பெரும்பாலும் கோயிலைச் சுற்றியிருக்கும் வீடுகளைத்தான் தேடிச்செல்வேன். அன்றெல்லாம் கோயில் சுற்றுப்புறமே வளர்ச்சி குன்றி புறக்கணிக்கப்பட்டு வேறு ஒரு காலத்தில் தூங்கிக் கிடக்கும். கோயிலில் இருந்து மிகவும் தள்ளித்தான் தார்சாலைகள் காணப்படும். அங்கே முச்சந்தி முனையில் கடைகளும் வீடுகளுமாக புதிய காலம் இயங்கிக்கொண்டிருக்கும்.

கோயில் வட்டாரங்களில் நாம் சந்திக்கும் மனிதர்களும் பழையகாலத்தைச் சேர்ந்தவர்கள் போல இருப்பார்கள். காதில் தக்கை போட்ட, மார்பு மறைக்காத, உச்சிக்கொண்டையிட்ட பாட்டிகளை நான் கண்டிருக்கிறேன். அதிகமும் கிழவர்கள். வீடுகள் பெரிதாக பழைமை மிக்கவையாக இருக்கும். பெரும்பாலான வீடுகளில் மச்சு உண்டு. ஆனால் அவற்றுக்குள் பட்டினிதான் நிறைந்திருக்கும். சத்திழந்து வெளிறிய பெண்கள் சன்னல்கள் வழியாக எட்டிப்பார்ப்பார்கள். கோயிலில் வேலை என்பது ஒரு காலத்தில் மிகவும் கௌரவமான, அதிக ஊதியமுள்ள வேலை. அதையொட்டி கோயிலைச்சுற்றி ஒரு தனி உலகம் உருவாகி வந்தது. கேளிக்கைகளும், ஆடம்பரங்களும், ஆணவமும், கலைகளும் நிறைந்த உலகம்.

ஆனால் எண்பதுகளில் பல கோயில்களில் மூத்த போத்திகளுக்கே மாதம் நாற்பது ரூபாய்தான் சம்பளம். ஒருநாள் மண்சுமந்தால் இருபது ரூபாய் கூலிகிடைக்கும் காலகட்டத்தில். கோயிலில் பிற ஊழியர்களுக்கு மாதம் இருபது ரூபாய் முதல் மேலே ஊதியம் கிடைக்கும். மூழ்கும் மரக்கட்டையில் இருக்கும் எறும்புகள் போல கோயிலில் பிறந்து கோயிலில் வளர்ந்து அதிலேயே ஒட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் பழக்கம் காரணமாகவோ பக்தி காரணமாகவோ கோயில்வேலைகளை சுத்தமாகவும் முழுமையாகவும் செய்தார்கள்.

எண்பதுகளின் இறுதியில்தான் புதிய தலைமுறை கோயில்வட்டங்களை உதறி வெளியேற ஆரம்பித்தது. சாதிமேன்மை, வரலாற்றுச் சுமை காரணமாக உள்ளூரில் உழைப்பது சாத்தியமில்லை. பம்பாய்க்குப் போய் சுமை தூக்கினார்கள். ஓட்டல் வேலை செய்தார்கள். தெருக்களில் வியாபாரம் செய்தார்கள். பார்பர் வேலைகூட செய்தார்கள். அதன்பின் வளைகுடா நாடுகள் வழிவிட்டன. பத்து வருடங்களில் கோயில்வட்டத்து வீடுகள் தங்கள் தூக்கத்தில் இருந்து வெளியே வந்தன.

நான் அந்தக் கோயில்கிராமத்தை சென்றடைந்தபோது பன்னிரண்டுமணி இருக்கும். தெருவே விரக்தி கொண்டு கிடப்பது போலிருந்தது. ஒரு அசைவு இல்லை. எனக்கு தகவல் சொன்ன ஆய்வாளர் அங்கே ஒரு பாட்டி நிறைய யட்சிக்கதைகளை அவருக்கு பாடிக்காட்டியதாகவும் டேப் ரிக்கார்டர் இல்லாத காரணத்தால் பதிவுசெய்யவில்லை என்றும் சொல்லியிருந்தார். நான் அந்தவீட்டுமுன் அதுதானா என்று ஐயப்பட்டு நின்றேன். ஏனென்றால் அது ஒரு மாளிகை போல் இருந்தது. வெண்சுதை பூசப்பட்ட பெரிய மதில். அதன் நடுவே பழங்கால ஓடுகள் போட்ட கொட்டியம்பலம். கற்படிகளில் ஏறி கொட்டியம்பலத்தை அடைந்து மறுபக்கம் பார்த்தேன்.

பெரிய உள் முற்றத்தில் மரமல்லி மரங்கள் நாலைந்து நின்றன. மூன்று தென்னைகள். ஒரு பெரிய செம்பருத்திமரம் பூத்துக்குலுங்கி நின்றது. முற்றத்துக்கு அப்பால் முகப்பில் எட்டு சுதைத்தூண்களால் தாங்கப்பட்ட மேல்மாடிகொண்ட வீடு. அதன் மாடியில் எட்டு சன்னல்கள் வெளியே திறந்து கிடந்தன. உயரமான கல்திண்ணை நோக்கி கல்படிகள் ஏறிச்சென்றன. நான் முற்றத்தை அணுகி சிலமுறை ‘யாருமில்லையா?’ என்று கூப்பிட்டேன்.

ஒரு பாட்டி கூனியபடி நடந்து வெளியே வந்தார். என்னை பார்த்ததும் கண்கள் மீது கைவைத்து ‘யார்?’ என்றார். நான் திருவனந்தபுரத்தில் இருந்து வருகிறேன் என்றேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. திண்ணையில் அமரும்படி சொன்னார். நான் திண்ணையில் அமர்ந்துகொண்டு என்னை அறிமுகம் செய்துகொண்டேன். அப்போதும் அவர் புரிந்துகொண்டதுபோல தெரியவில்லை. மிகவும் சோர்ந்துபோனவர்போல இருந்தார்.

உள்ளிருந்து இரண்டு குழந்தைகள் வந்து எட்டிப்பார்த்தன. மூத்த பெண்குழந்தையின் கவுனைப் பிடித்தபடி பாதி முகம் காட்டி ஒரு இளைய ஆண்குழந்தை. இரண்டு குழந்தைகளுமே காய்ச்சல் கண்டவை போல வெளிறி, உதடுகள் காய்ந்து காணப்பட்டன. நான் பாட்டியிடம் அவருக்கு தெற்கன்பாட்டுகள் ஏதாவது தெரியுமா என்று கேட்டேன். எல்லாம் மறந்து போய்விட்டது என்று சொன்னார். என்ன செய்வதென்றே தெரியவில்லை. கிளம்பிப்போ என்று அவர் சொல்வது போல் இருந்தது.

சற்றுநேரத்தில் யாரோ வரும் ஒலி. ஒரு முப்பது வயதுப்பெண் தோளில் வாழையிலையால் மூடப்பட்ட ஒரு உருளியுடன் வந்தாள். வேட்டியும் ஜாக்கெட்டும் அணிந்து மேலே ஒரு துண்டை முந்தானையாக போட்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் கூனல்விழுந்த ஒருவன் வந்தான். மூளைவளர்ச்சி குறைவான முகம். பெரிய பற்கள் நீட்டிக்கொண்டிருந்தன. இடுப்பில் துண்டு மட்டும் கட்டியிருந்தான். அவள் என்னைப்பார்த்ததும் ஒரு கணம் நின்று மலையாளத்தில் ”என்ன?”என்றாள்.

நான் எழுந்து வணங்கி மெல்லிய குரலில் என்னுடைய நோக்கத்தை சொன்னேன். ”இங்கே யாருக்கும் பாட்டும் கூத்தும் ஒன்றும் தெரியாது… நீங்கள் போகலாம்” என்று சற்று கனத்த குரலில் கறாராக சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றுவிட்டாள். குழந்தைகள் அவள் பின்னால் ஓடின. அந்தப்பாட்டியும் எழுந்து பின்னால் சென்றார். மந்தபுத்தி என்னருகே வந்து என் தொடையை தொட்டுப்பார்த்து சிரித்தான். நானும் சிரித்தேன். அவன் உள்ளே கைகாட்டி ”சோறு, சோறு” என்றான்.

எழுந்து போகலாமென்று எண்ணினேன். ஆனால் இன்னும் கொஞ்சநேரம் இருக்கலாம் என்றும் தோன்றியது. இன்னும் ஒருமுறை கேட்டுப்பார்க்கலாம். கள ஆய்வுகளின்போது சலிப்பே வரக்கூடாது என்பார்கள். நான் பொதுவாக தொட்டாற்சுருங்கி. தயக்கத்திலேயே அப்படியே அமர்ந்திருந்தேன்.

மந்த புத்தி என்னிடம் ‘சோறு வேணுமா? போ… உள்ளே போ’ என்றான். பிரியமாக சிரிக்க அவனுக்குத் தெரிந்திருந்தது. மனிதர்களை அவனுக்கு மிகவும் பிடிக்கும் போலும். நான் அவனை மிக விரும்பினேன். அவனுக்கு என்ன கொடுப்பது என்று தெரியவில்லை. சட்டைப்பைக்குள் கைவிட்டு இரண்டு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். அவன் அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டு ‘லீலாவுக்கு… இது லீலாவுக்கு…’ என்றான். லீலா அந்தப் பெண்ணாக இருக்க வேண்டும். அவளுடைய தம்பி இவன்.

அப்போதுதான் அந்த வீட்டின் சூழல் எனக்கு உறைத்தது. கடுமையான பட்டினியில் இருக்கிறார்கள். அந்தச் சோறு கோயிலில் நைவேத்தியம் செய்யப்பட்டது. அது அவர்களின் பங்கு. நூற்றுக்கணகான மரக்கால் அரிசி பொங்கி பட்டை போட்டு நைவேத்யம் செய்யப்பட்ட பழங்காலத்தில் அவர்களுக்கு வண்டிவண்டியாக சோறு வந்திருக்கலாம். அதை அவர்கள் வேலைக்காரர்களுக்கு கொடுத்திருக்கலாம். அப்போது சாமிக்கே தினம் நூறுகிராம் இருநூறு கிராம் என்று தேவஸ்வம் போர்டில் அரிசியை அளந்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தச்சோற்றுக்காகத்தான் குழந்தைகள் பாட்டி எல்லாருமே காலையில் இருந்தே காத்திருந்திருக்கிறார்கள். இரவு அவர்கள் எதையுமே சாப்பிட்டமாதிரி தெரியவில்லை. ஒருவேளை, இந்த அரைநாழி அரிசிச்சோறு மட்டும்தான் அவர்கள் அனைவருக்கும் நாள்தோறும் உணவு…

அவள் மீண்டும் வெளியே வந்து ”நீங்கள் போகவில்லையா?” என்றாள். நான் ”ஒரு விஷயம் சொல்ல விட்டுப்போயிற்று. நான் யூனிவர்சிட்டிக்காகத்தான் இந்தத் தகவல்களை சேகரிக்கிறேன். நீங்கள் தகவல்கள் சொன்னால் வவுச்சர் போட்டு பணம் கொடுப்பேன்” என்றேன். அவள் சந்தேகத்துடன் என்னை பார்த்தாள். ”ஆமாம்…” என்றேன். அவள் சற்று யோசித்தபின் “சரி…அம்மாவை வரச்சொல்கிறேன்” என்று உள்ளே சென்றாள்.

மீண்டும் பாட்டி வந்தார். குழந்தைகள் சோர்வாக நடந்து வெளியே விளையாடச் சென்றன. அவர்களை அம்மா மிரட்டி விளையாட அனுப்பியிருக்க வெண்டுமென ஊகித்தேன். விளையாட ஆர்வமேதும் இருப்பதுபோலத் தோன்றவில்லை. பாட்டி ஆர்வமே இல்லாமல் என்னருகே திண்னையில் அமர்ந்து கொண்டார். நான் என் நோட்டுப்புத்தகத்தில் இருந்து ஒரு தாளைக்கிழித்து அதில் வவுச்சர் எழுதி பாட்டியின் கட்டைவிரல் முத்திரையை அதில் பதியச்செய்து உள்ளே வைத்தபின் இருபது ரூபாய் கொடுத்தேன். பாட்டி அதை வாங்கி கையிலேயே வைத்துக்கொண்டார். நான் அவரிடம் கள்ளியங்காட்டு நீலியைப்பற்றிய பாட்டை பாடச்சொன்னேன்.

பாட்டி மெல்ல தளர்ந்த குரலில் பாட ஆரம்பித்தார். குரல் மிகவும் நடுங்கியது. மந்தபுத்தி வந்து அம்மாவின் காலடியில் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டான். அவள் உள்ளிருந்து வந்து நிலைசாய்ந்து நின்றாள். நல்ல நிறம். அபாரமான உயரம். கூந்தல் இடுப்புக்கும் கீழே வந்திருந்தது. மெலிந்து, வெளிறி, கண்களில் கருவளையம் விழுந்து இருந்தாலும் கம்பீரமாகவே இருந்தாள். பட்டினி கிடந்த யட்சிபோல என்று எண்ணிக்கொண்டேன். பாட்டி பாட்டை நிறுத்திவிட்டு ரூபாயை அவளிடம் கொடுத்தார். அவள் என்னை பார்த்தபோது நான் வேறுபக்கம் பார்த்தேன். அவள் மந்தபுத்திக்கு கண்காட்டி அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அவன் எழுந்து உள்ளே போனான்.

பாட்டி மெல்லமெல்ல பாட்டின் ஓட்டத்தில் ஆழ்ந்து வேகமும் உணர்ச்சிகளும் அடைந்தார். கள்ளியங்காட்டு நீலி விஸ்வரூபம் கொண்டு எழும் காட்சியில் நானும் அந்த உணர்ச்சிவேகத்துக்கு ஆளானேன். பாட்டுடன் சேர்ந்து நான் வேகமாக எழுதிக்கொண்டிருந்தேன். முடிந்தபோது நான் விடுபட்டுப்போன வரிகளைக் கேட்டு முழுமைசெய்தேன். அப்போது அவள் பழைய பித்தளை டம்ளர்களில் பாலில்லாத டீயுடன் வந்தாள். நான் கொடுத்த ரூபாயைக் கொடுத்து மந்தபுத்தியை அனுப்பி டீத்தூளும் சீனியும் வாங்கி வந்திருப்பாள்.

அடுத்த பாடலில் அவளே ஆர்வத்துடன் ஈடுபட்டு அருகே நின்று கேட்டாள். அம்மா பாடுவதில் சற்று சுணங்கி யோசித்தபோது மெல்லிய கள்ளக்குரலில் அவளே பாடினாள். பின்னர் பாட்டி நின்றுவிட மொத்தப் பாட்டையும் அவளே பாடினாள். ‘மிகநன்றாக பாடுகிறீர்கள்’ என்றேன். வெட்கம் முகத்தில் படர ‘பாட எல்லாம் தெரியாது… ஏதோ சும்மா’ என்றாள்.

அடுத்தபாட்டை அவளே பாடினாள். அதுவும் யட்சியின் பாட்டுதான். கூந்தல் அவிழ்ந்து இரண்டு காத தூரத்துக்குப் பறக்க மலை உச்சியில் நிலவொளியில் நின்றுகொண்டிருக்கும் நாகயட்சியின் சித்திரம். அவள் பாடும்போது கண்களைச் சரித்து தனக்குள் ஒன்றிப்போய் பாடினாள். அதன்பின் அவள் முகம் நன்றாகவே தெளிந்துவிட்டிருந்தது. சிரித்தபடி நான் என்ன செய்கிறேன், என் ஊர் எது என்றெல்லாம் விசாரித்தாள். அவளுடைய கணவன் திருவனந்தபுரத்துக்கு வேலைதேடிச் சென்றாராம். மூன்றுமாதங்களாக எந்தத் தகவலும் இல்லை. குடிப்பழக்கம் உடையவர். அவரது தகவல் வருமென எதிர்பார்த்து நாட்கள் செல்கின்றன.

மாலை நிறம் மாறியது. நான் கிளம்புகிறேன் என்றேன். ‘கோயிலுக்கு செல்லவில்லையா?’ என்றாள். ‘போகவேண்டும். ஆனால் கடைசி பஸ் போய்விடுமே?’ என்றேன். ‘அதற்காக கோயிலுக்குப் போகாமல் போவதா? முக்கியமான கோயில். உள்ளே போய் பார்த்தால் நிறைய விஷயம் தெரியும்…” என்று சொல்லிவிட்டு ”இங்கேயே தங்கிவிட்டு நாளைக்கு காலையில் போகலாம்… இங்கே இடத்துக்கு குறைவே இல்லை” என்றாள்.

நானும் அது சரி என்று எண்ணினேன். கோயிலைப் பார்க்காமல் போக எனக்கு மனம் இல்லை. அவள் மாடியைக் காட்டி ”மச்சில் இப்போது யாரும் போவதே இல்லை…. நான் ஒரு அறையை கூட்டி வைக்கிறேன்” என்றாள். நான் அவள் கையெழுத்தை வாங்கிவிட்டு மேலும் முப்பது  ரூபாய் கொடுத்தேன். அவள் அதை வாங்கி கையிலேயே சுருட்டி வைத்துக்கொண்டாள், அதற்காக கூச்சப்படுபவள்போல.

கோயிலுக்கு மந்தபுத்தி என்னுடன் வந்தான். கோயில் குளத்திலேயே குளித்தேன். அவன் என்னிடம் அவனுக்குப்பிடித்தவற்றை காட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டு கூடவே வந்தான். தரிசனம் முடிந்து வரும்போது நன்றாகவே இருட்டிவிட்டது. சில வீடுகளில் சிறு ஒளிப்பொட்டுகள் எரிந்தன. மற்றபடி அப்பகுதியே இருட்டுக்குள் அமிழ்ந்து கிடந்தது. குழந்தைகள் சிறிய மண் எண்ணை விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருக்க பாட்டி சற்று அப்பால் அமர்ந்து நாமஜெபம் செய்துகொண்டிருந்தாள்.

என் துணிப்பை திண்ணையில் இல்லை. அவள் உள்ளிருந்து வந்து ”டேய் கிருஷ்ணா, மேலே ரூம் காண்பிச்சு குடுடா” என்றாள். மரத்தாலான படிகள் வழியாக மாடிக்கு சென்றேன். மரத்தரை. உள்ளே ஒரு அறையில் விளக்கு எரிந்தது. பெரிய அறை. தூசு வாடை எஞ்சியிருந்தது. ஒரு பழங்காலத் தட்டுபடிக் கட்டில். அதில் பாய் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. கட்டில் மீது என்னுடைய பை இருந்தது.

நான் மாடியில் எழுதிக்கொண்டிருந்தபோது கீழிருந்து அவள் வந்து என்னை இரவு உணவுக்கு அழைத்தாள். கீழே சென்றேன். உள்ளே அறையில் எனக்கும் கிருஷ்ணனுக்கும் இலைபோட்டிருந்தாள். கிருஷ்ணன் ஏற்கனவே மகிழ்ச்சியால் பற்களைக் காட்டியபடி அமர்ந்திருந்தான். என்னைக் கண்டதும் ”வா… வந்து உக்காரு” என்று தடுக்கில் தட்டிக்காட்டினான். நான் அமர்ந்துகொண்டதும் அவள் சோறும் தேங்காய்க்குழம்பும் முருங்கைக்கீரைப் பொரியலும் பரிமாறினாள். நான் மதியம் சாப்பிட்டிருக்கவில்லை என்பதனால் அவை மிகவும் சுவையாக இருந்தன. கிருஷ்ணன் உருட்டி உருட்டி தின்றுகொண்டே இருந்தான். நடுவே என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்பு.

சாப்பிட்டபின்பு பாட்டியிடம் பேசலாமென்றால் அவர் படுத்துவிட்டிருந்தார். நான் மாடிக்குச் சென்றேன். களைப்பு இருந்தபோதிலும் தூக்கம் வரவில்லை. அந்த அறையின்மேல் ஓட்டுக்கூரை நிறைய இடங்களில் உடைந்துபோயிருந்தது. உள்ளே வேறு அறைகளில் வௌவால்கள் இருட்டில் நீந்தும் ஒலி. பலவிதமான ஓசைகள். யாரோ நடமாடுவதுபோல. குடுகுடுவென குழந்தைகள் ஓடுவதுபோல. அந்த ஒலிகள் என் புலன்களை திடுக்கிடச் செய்தன. விளக்கை அணைக்க என்னால் முடியும் என்று தோன்றவில்லை.

பகலில் கேட்டபோது சாதாரணமான கதைகளாக இருந்தவை எல்லாம் இப்போது உக்கிரமான காட்சிப்பிம்பங்களாக ஆகிவிட்டிருந்தன. கண்மூடினால் அவை பிரம்மாண்டம் கொண்டன. யாரோ என்னை பார்ப்பது போலவே தோன்றிக்கொண்டிருந்தது. கதவை மூடிவிட்டு கட்டிலில் வந்து படுத்து கண்களை மூடிக்கொண்டேன். மனம் திடுக்கிட்டபடியே இருந்தது. ஆனால் தூங்கிவிட்டேன்.

பின்னர் நான் விழித்தபோது கதவுக்கு அப்பால் யாரோ நிற்பது போல் இருந்தது. ஒருகணம் நான் அதிர்ந்து வெலவெலத்துவிட்டேன். பின்னர் மெல்ல அது ஒரு பிரமைதான் என்ற எண்ணத்தை அடைந்தேன். விளக்கு அணைந்து இருட்டு. பின்பு கதவில் தெளிவான முட்டல் ஒலியை கேட்டேன். கேட்டேனா என்று சந்தேகம் வந்து மீண்டும் கேட்டேன். கதவு தட்டப்பட்டது, பின்பு மெல்ல குரல். ”சார்…சார்” நான் கட்டிலிலேயே அமர்ந்திருந்தேன். என் கால்கள் தன்னிச்சையாக நடுங்கிக்கொண்டிருந்தன.

குரல் மீண்டும் மீண்டும் அழைத்தது. நான் சத்தமில்லாமல் இருட்டுக்குள் அமர்ந்திருந்தேன். சட்டென்று ஒரு தும்மல் வந்தது. அதை அடக்குவதற்குள் தும்மிவிட்டேன். வெளியே சற்றுநேரம் சத்தமில்லை. பின்பு மெல்லிய குரல் ”ஸார்.. கதகு துறக்கூ…” என்னால் அசையவே முடியவில்லை. பின்னர் படி இறங்கிச்செல்லும் ஒலி

நான் விடிய விடிய அப்படியே அமர்ந்திருந்தேன். ஏதேதோ உதிரி எண்ணங்கள். என்ன நினைக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. கோழி கூவும் ஒலி கேட்டபின்னர்தான் லேசான தலைசுற்றலுடன் படுத்துக்கொண்டேன். காலை எழுந்து கீழே வந்தேன். வரும்போதே பையுடன் வந்தேன். கிருஷ்ணன் முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் சிரித்தான். ”சாயா குடிச்சேன்” என்றான்.

நான் நேராக கிணற்றடிக்குச் சென்று முகம் கழுவிக்கொண்டேன். திரும்பி திண்ணைக்கு வந்தேன். பேசாமல் சென்றுவிடுவதா, இல்லை ஒன்றும் நடக்காதது போலப் பேசி விடைபெற்றுச் செல்வதா? ஆமாம், அதுதான்… ஒன்றும் நடக்காதது போல. அதை மட்டும்தான் செய்ய முடியும். வேறு எது செய்தாலும் அது ஒரு கொலைதான்.

உள்ளிருந்து அவள் வந்து என்னைப்பார்த்து புன்னகைசெய்தாள். ”டீ கொண்டு வருகிறேன்” என்றாள். பித்தளை டம்ப்ளரில் பால்விட்ட டீ. அதை நான் எடுத்துக்கொண்டேன். அவளை பார்க்கவே என்னால் முடியவில்லை. அவள் திடமான குரலில் ”ஒரு இருநூறு ரூபாய் இருக்குமான்னு கேக்கத்தான் வந்தேன்” என்றாள். சட்டென்று ஏறிட்டுப் பார்த்துவிட்டு குனிந்துகொண்டேன்.

”இங்கே கொலைப்பட்டினி… பாதிநாள் கோயிலில் சோறு கிடையாது. முருங்கையிலையும் வாழைத்தண்டும் தின்னு என் குழந்தைங்க சாகாம கிடக்கு…” நான் டீயை குடிக்க முடியாமல் கைசுட நின்றேன். ”இந்த வீடும் நிலமும் எல்லாம் இப்ப வேற ஆளுக்கு பாத்தியம். எல்லாம் கடன்… வீட்டிலே கிடந்த பித்தளைப்பாத்திரம் சட்டி பானை எல்லாம் வித்து சாப்பிட்டாச்சு… இனி ஒண்ணுமே மிச்சமில்லை…”

நான் சட்டென்று என் பைக்குள் கைவிட்டு திருவனந்தபுரம் வரை செல்வதற்கான ஏழு ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சத்தை எல்லாம் அவள் அருகே திண்ணையில் வைத்தேன். அதில் முந்நூறு ரூபாய்க்கு குறையாமல் இருந்தது. நான் தலைநிமிரவேயில்லை. பையை எடுத்துக்கொண்டு நேராக இறங்கி படிகளில் இறங்கி சாலையில் விரைந்தேன். யாராலோ துரத்தப்படுபவனைப்போல.

அந்தப் பணத்தை எடுக்கும்போது அவள் கையும் மனமும் எப்படி கூசியிருக்கும் என்று பிறகு பல வருடங்கள் எண்ணியிருக்கிறேன். அந்தக் கூச்சத்தை இல்லாமலாக்கும்படி ஒரு சில சொற்களை நான் சொல்லியிருக்கலாம். பிரியமாக, மரியாதையாக. உண்மையில் அவள் மீது அத்தனை பிரியம் இருந்தது. அத்தனை மரியாதை இருந்தது. ஆனால் ஒன்றுமே சொல்லத்தோன்றவில்லை. அவளை ஏறிட்டுப்பார்க்கும் தைரியம்கூட எனக்கு வரவில்லை.

பலவருடங்கள் கழித்து ஒருநாள் எண்ணிக்கொண்டேன், அவளை அப்படி வரச்செய்ததன் மூலமே நான் அவளை அவமதித்துவிட்டேன் என. நானே ஒன்றும் செய்யவில்லைதான். ஆனால் நான் பணம் வைத்திருந்தேன். அதன் வழியாக அவளை அவமதிக்கும் ஒன்றின் பிரதிநிதியாக அங்கே இருந்தேன். அந்தப்பணத்தை என் முகத்தில் வீசியெறிந்திருந்தால் அவள் நிம்மதி அடைந்திருப்பாள். அது முடியாதபோது  நான் என்ன சொல்லியிருந்தாலும் அந்தத் தீ மேலும் எரிந்து எழுந்திருக்கவே செய்யும்.

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 11, 2010 @ 0:00

  • குறிச்சொற்கள்
  • தீ
முந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சி 2018
அடுத்த கட்டுரைஉரையாடும் காந்தி – இளையோர் சந்திப்பு – கோவை