அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
தங்களது தமிழர்-கொரியர் கடிதம் (தமிழ் இந்து நாளிதழுக்கு எழுதியது ) மிக பயனுள்ள ஒரு செய்தி . புராண கால பறக்கும் தேர் – ராக்கெட் , எரி அம்பு – ஏவுகணை , கிரகங்கள் எல்லாம் கும்பகோணத்தில் உள்ள ராகு கேது கோவில்களை நோக்கி உள்ளது எனபது போன்ற ஆதாரம் இல்லாத, நம்மை வெளிநாட்டினர் கேலி செய்ய தோதாகத்தான் நம் அறிவியல் கட்டுரைகள் உள்ளன . மேற்கூறிய தமிழர்-கொரியர் செய்தியை நம்பி நம் ஆட்கள் கொரியர்களிடம் பெண் கேட்காமல் இருந்தால் சரி .
அன்புடன்
பா .சரவணகுமார்
வடசேரி, நாகர்கோயில்
அன்புள்ள சரவணக்குமார்
தமிழ் ஹிந்து தமிழில் ஒரு சாதனை என்றே நான் நினைக்கிறேன். இன்றுவரை தமிழில் உள்ள அறிவியக்கத்திற்கும் பொதுவாசகர்களுக்கும் தொடர்பே இருந்ததில்லை. தற்செயலாக அப்படி ஒரு தொடர்பு ஏற்பட்டால்தான் உண்டு. அதுவும் பெரிய அதிர்ச்சியாக இருக்கும் அவர்களுக்கு.
தமிழின் பொதுத்தளம் மேலோட்டமான மேடைப்பேச்சாளர்கள் தொலைக்காட்சிப்பேச்சாளர்கள் வழக்கமான அரசியல் செய்தி எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு உரியதாக இருந்தது. அவர்களுக்கு இங்கே என்ன விவாதிக்கப்படுகிறது எவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே தெரியாது.
தமிழ் ஹிந்து அந்த பெரிய இடைவெளியை நிரப்புகிறது. இங்குள்ள எல்லா தரப்புகளையும் கொண்டுசென்று சேர்க்கிறது. ஆனால் அவ்வாறு அனைத்துத் தரப்புகளையும் கொண்டுசென்று சேர்க்கும்போது அவற்றின் நம்பகத்தன்மையை, மதிப்பை கருத்தில்கொண்டாகவேண்டும். கருத்துத்தரப்பு என்றபேரில் பொருளற்ற வெற்றுப்பேச்சுகள் கலந்துவிடக்கூடாது.
பிழைகள் நிகழலாம். ஆனால் தொடர்ந்து அவை களையப்பட்டால் மட்டும் போதும்
ஜெ
அன்புள்ள ஜெ
தமிழ் ஹிந்து பற்றிய கடிதம் வாசித்தேன். தமிழ் ஹிந்து பரவலாக கவனத்தை ஈர்த்து வருகிறது. முக்கியமாக அது ஒரு கருத்துத்தளம். இன்றுவரை தினமணி நடுப்பக்கம்தான் கருத்துத்தளமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த நாலைந்து ஆண்டுகளாக வெறும் வாத்தியார்த்தனமான சாரமில்லாத கட்டுரைகளை போட்டு அவர்களே அதைக் காலிசெய்துவிட்டனர். தமிழ் ஹிந்துவின் கட்டுரைகள் சுவாரசியமானவை. அதோடு தமிழ் சிந்தனா உலகை காட்டுபவை
ஆனால் அந்தப்பக்கங்கள் முக்கியத்துவம் பெறுந்தோறும் அதில் பரவலாக பிரதிநிதித்துவம் வேணும் என்பதற்காக அசட்டுத்தனமான கருத்துக்களைச் சொல்லும் கட்டுரைகளையும் அவ்வப்போது போட ஆரம்பித்திருக்கிறார்களோ என ஐயம் ஏற்படுகிறது. நான் அப்படி நினைத்த கட்டுரை நீங்கள் சொல்வது. இது கொஞ்சம் கடினம். ஆசிரியர்குழு கவனமாக இல்லாவிட்டால் இப்படி ஆகும்
தமிழகத்தில் மொழி ஆராய்ச்சி என்றபேரிலும் பண்பாட்டு ஆராய்ச்சி என்றபேரிலும் எந்த விதமான மெதடாலஜியும் இல்லாமல் மனம்போன போக்கில் அடித்துவிடும் கட்டுரைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை தவிர்த்துவிடுவதே தமிழ் ஹிந்துவுக்கு நல்லது
சரியான நேரத்தில் இடித்துரைத்திருக்கிறீர்கள்
செல்வராஜ்
அன்புள்ள செல்வராஜ்
தினமணியின் பிரச்சினை அதன் ஆசிரியர்களுடையது. சம்பிரதாயமான டீக்கடைக் கருத்துக்கள், பள்ளிக்கூட உபதேசங்கள் போன்றவற்றுக்கு நாளிதழ்க்கட்டுரைகளில் இடமில்லை என்பதையும் கட்டுரைகளில் ஒன்று புதிய சிந்தனைகள் அல்லது புதிய தகவல்கள் இருந்தாகவேண்டும் என்பதையும் அவர்கள் உணரவேண்டும். அதை நானே பலமுறை எழுதியிருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை உதையை மு வீரையன் போன்ற ஆசாமிகள் எழுதும் வரை பொட்டலக்காகிதமாகக் கூட தினமணியைப் பொருட்படுத்தக்கூடாது என்றே நினைக்கிறேன்
ஜெ