அன்புள்ள ஜெ
மக்கின்ஸி குறித்து நீங்கள் எழுதி இருந்தது நூறு சதவீத உண்மை .சிலை வைப்பதோடு மட்டும் இல்லாமல் அவர் நினைவாக ஆய்வு நிறுவனம் அல்லது மாணவர் பரிமாற்ற நிகழ்வு என்று ஏதாவது செய்தால் நல்லது.
மக்கின்ஸியின் சிறப்பு என்னவென்றால் அவர் காலனிய பார்வையுடன் ஆய்வுகளை செய்தவர் அல்ல என்பது தான்.எட்வர்ட் சைதின் கோட்பாடு இவரிடம் செல்லுபடியாவாது என்றே தோன்றுகிறது
மக்கின்ஸியும் அவரது குழுவினரும் செய்த ஆய்வு ,சேகரித்த தகவல்கள் பிரமிப்பு ஊட்டுபவை .Madras Oriental Manuscript Libraryல் இருக்கும் சுவடிகளும் அவர் மேற்பார்வையில் தயாரான Descriptive Catalogue ம் அவர் பெருமை கூறும் .
என்ன ஒரு வருத்தம் ,கடந்த 200 ஆண்டுகளில் நம்மவர்கள் அவர் செய்த பணியில் 10% கூட செய்ய்யவில்லை என்பது தான் .இன்றும் நம்மிடையே ஒரு முழுமையான Descriptive Catalogue கிடையாது .கோடிகள் செலவு செய்த பிறகும் Devanagari transcription,manuscript restoration ,digitization, universal online access போன்றவை கனவாகவே இருக்கிறது .
நன்றி
அனீஷ் கிருஷ்ணன்
அன்புள்ள அனீஸ் கிருஷ்ணன்
இந்தியாவின் பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் அரும்பணி ஆற்றிய பல ஐரோப்பியர் சுதந்திரத்திற்குப்பின் மறக்கப்பட்டுவிட்டனர். தேசிய இயக்கம் உருவாக்கிய எதிர்ப்பலை ஒரு காரணம். அதிலிருந்து நம்மால் வெளிவர முடியவில்லை. அத்துடன் சுதந்திரத்திற்குப்பின் எங்கும் எதிலும் அரசியல். அரசியல்வாதிகளை மட்டுமே போற்றுபவர்களாக நாம் ஆகிவிட்டோம்.
மக்கின்ஸி, சீவெல், வுட்ரோஃப் , மோனியர் விலியம்ஸ், ஸிம்மர் என நம் பண்பாட்டாய்வில் பெரும்பங்காற்றியவர்களை மீண்டும் விரிவாக எழுதி மீட்டு நிறுவவேண்டியுள்ளது. தமிழில் ஒரு நல்ல நூல் எழுதப்ப்படுமென்றால் நல்லது
ஜெ
அன்புள்ள ஜே எம்
நீங்கள் இந்தோனேசியா போகிறீர்கள் என முன்பே அறியாமல் இருந்து விட்டேனே என வருந்துகிறேன். 1995 வருடம் நாங்கள் அங்கு சென்று யோக்யகர்த்தா, பாலி தீவு என எல்லா இடங்களும் சுற்றி பார்த்தோம்.
குரங்கு தோட்டம் பாருங்கள். அவர்கள் அதுதான் கிஷ்கிந்தா என்று நம்புகிறார்கள். ராமாயணம் அல்லது மகாபாரதம் நாட்டிய நாடகம் கண்டு களியுங்கள்.
கட்டாயம் பாலி பார்த்து வாருங்கள். உங்களுக்கு மிகவும் பிடிக்கும் பல விஷயங்கள் உள்ளன. வியந்து வருவீர்கள். நம் இந்து சமயம் அங்கு கறை படாமல் உள்ளது. நான்கு வர்ணங்கள் மட்டும். வேறு சாதிகள் கிடையாது. shore temple என்னும் கோயிலில் நம்மூர் அதிரசமும் மிளகு வடையும் (அரிசியில்) பிரசாதம். அங்கேயும் சப்பரம், பல்லக்கு, குடை எல்லாம் உண்டு.
கோயிலுக்கு பெண்கள் நைவேத்யம் எடுத்து செல்லும் பச்சை ஓலையால் செய்த ஐந்தாறு அடுக்குகள் கொண்ட உயரமான தாம்பாளம், அதை அவர்கள் தலையில் சுமந்து செல்லும் அழகு எல்லாம் பார்த்து வாருங்கள்.
என் வீட்டில் பார்தீகளே, கருந்தேக்கில் செய்த ரதி மன்மதன் மரச் சிற்பம் அங்கே வாங்கியதுதான்.
உலகின் மிக அழகான கடற்கரை.
கோணிப்பையில் பணம் கொண்டு சென்று சட்டைப்பையில் பொருள்கள் வாங்கி வாருங்கள்.
சிவா சக்திவேல்
அன்புள்ள சிவா
எங்களுடையது குறுகிய பயணம். ஆகவே யோக்யகர்த்தா மட்டும்தான்
ஜெ