‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 63

பகுதி ஐந்து : தேரோட்டி – 28

பெருஞ்சாலையை அடைந்து இருபுறமும் கூடிநின்ற மக்களின் வாழ்த்தொலிகளும் மலர்சொரிதலும் சேர்ந்து பின்னிய வான் மூடிய பெருந்திரையை கிழித்து சுப்ரதீபம் சென்று கொண்டிருந்தது. செல்லச்செல்ல அதன் விரைவு கூடிக்கூடி வந்தது.  பெருங்காற்றிலாடும் அடிமரங்களை காண்பது போலிருந்தது அதன் கால்களின் அசைவு. துதிக்கை நிலத்தை தொட்டுத் தொட்டு பின் தள்ளுவதாக பட்டது.

எங்கோ எவரோ “விண்ணூர்ந்து ஏகும் அருகர்” என்று கூவினார். அவ்வொரு சொல் எழுவதற்கென்றே அங்கு கூடியிருந்த அனைவருடைய அகங்களும் காத்து நின்றிருந்தன என்று தோன்றியது. “விண்ணேகும் அருகர்! வெள்ளையானை ஊர்ந்தேகும் அருகர்! வெண்முகில் ஏறிய அருகர்! அருகர் புகழ் வாழ்க! அருகர் வெல்க!” என்று அனைத்து புறங்களில் இருந்தும் வாழ்த்தொலிகள் எழுந்து சூழ்ந்தன.

யானையைச் சூழ்ந்து கொந்தளித்த மக்கள்திரள் எழுப்பிய ஒலியலைகள் நகர் மேல் புயல்படர்ந்ததைப்போல் உணரச்செய்தன. “வெள்ளையானை ஏறிய அருகர் வாழ்க! வெண்சங்குப் படிவர் வாழ்க! நேமிநாதர் வாழ்க!” என செவி கிழிக்கும் ஒலியுடன் கூவியபடி கைவீசி துள்ளிக் குதித்தனர். வாழ்த்துக்களை புதியதாக புனையும் சூதர்களை மக்கள் தலைக்குமேல் தூக்கினர். தோள்கள் மேல் அமர்ந்து எம்பி கைவீசி அவர்கள் கூவ அதைக் கேட்டு தாங்களும் முழங்கினர். நகரெங்கும் அணிசெய்யப்பட்டிருந்த மலர்மாலைகளையும் தோரணங்களையும் பிடுங்கி மலர்களாகப் பிய்த்து அள்ளி வீசினர். அந்த மலர்கள் அவர்கள் மேலேயே விழ ஒவ்வொரு தலையும் மலர் சூடியிருந்தது.

சுப்ரதீபத்தைத் தொடர்ந்து புரவியில் சென்ற அர்ஜுனன் தன்னைச்சூழ்ந்து முட்டிமோதிய மனிதர்களை விலக்கமுடியாமல் நின்றுவிட்டான். ஒவ்வொரு முகமும் களிவெறியின் உச்சத்தில் யட்சர்களின் பித்துசூடிய விழிகளுடன் வலிப்பு கொண்டிருந்தது. என்ன செய்வதென்று அறியாமல் அவர்கள் ததும்பினர். ஒருவன் தன் நெஞ்சில் ஓங்கி ஓங்கி அறைந்தான். ஒருவன் அர்ஜுனனின் குதிரையின் புட்டத்தில் அறைய அது திகைத்து முன்னகர்ந்து இருவர் தோள்களில் முட்டிக்கொண்டு பக்கவாட்டில் திரும்பி வால்குலைத்தது.

சுப்ரதீபத்தின் விரைவு கூடிக்கூடி வந்ததை காணமுடிந்தது. யானையின் விரைவை அதன் கால்கள் உடலைத்தொடும் பொருத்தில் தசை எந்த அளவுக்கு இழுபடுகிறது என்பதைக் கொண்டே உணரமுடியும். விழிகளுக்கு அதன் ஓட்டமும் நடையாகவே தெரியும். அதன் பேருருவம் அதன் விரைவை மறைக்கும். புரவியின் முழுவிரைவில் சென்றே அதை தொடர்ந்து அணுகமுடியும் என்று தோன்றியது.

யானை விரைவு மானிடரின் விழிக்கணக்குகளைவிட பல மடங்கு கூடுதல் என்பதை பல களங்களில் அவன் கண்டிருந்தான். ஆயினும் சுப்ரதீபத்தின் விரைவு திகைப்புறச் செய்வதாக இருந்தது. அவ்விரைவை அறிந்து அது சென்ற தொலைவெங்கும் மக்கள் பெருங்கூச்சலுடன் இருபக்கமும் பிளந்து வழிவிட்டனர்.

யானை மீது வெற்றுடலுடன் கைகளை மடியில் கோத்து அமர்ந்திருந்த பேருருவரின் தோற்றம் வானத்தின் ஒளிப்பின்னணியில் நிழலுருவென தெரிந்துகொண்டிருந்தது. அவர்மேல் மென்மழை பட்டுச்சாமரத்தால் வருடிக்கொண்டிருந்தது. அண்ணாந்து நோக்கியபோது கிழக்கே சூரியன் வெண்படிகம்போல மங்கலாக ஒளிவிட இளமழை அதை சிலந்திவலை போல சூழ்ந்திருந்தது. சாலையின் இரு மருங்கும் நின்ற மரங்களின் இலைப்பரப்புகள் ஒளிகொண்டு பளபளத்து அசைந்து நுனி சொட்டின. மரத்தடிகள் பாதி நனைந்து கருமைகொண்டு குளிர்ந்து நின்றன.

சுவர்களின் சுதைப்பரப்புகள் நனைந்து அதன் மேல் ஒளி விழுந்து பட்டுச்சால்வை வளைவுகள் போல மின்னிய மாளிகைகளில் பெண்கள் இல்லங்களில் இருந்து மலர்க்குவைகளை தூக்கிக்கொண்டு வந்து அள்ளி அள்ளி வீசினர். சுப்ரதீபம் அதன் மேலமர்ந்த அரிஷ்டநேமியுடன் பொன்னிறமும் செந்நிறமும் வெண்ணிறமும் கொண்டு சுழன்று பெய்து கொண்டிருந்த மலர் மழையின் நடுவே அசைந்து சென்றது.

எதிரே துவாரகையின் பெரிய கோட்டைவாயில் கடல் எழுந்த நீர்ச்சுவர் போல தெரியத்தொடங்கியது. அதன் மேல்விளிம்பில் கலங்கள் என தெரிந்த காவலர்மாடங்களில் வீரர்கள் கிளைகளில் காய்கள் போல செறிந்து நின்றனர். கைவீசி அவர்களும் வாழ்த்து கூவினர்.

அர்ஜுனன் திரும்பி தன் அருகே வந்த படைத்தலைவரிடம் “அதைத் தொடர்ந்து செல்லுங்கள். அங்கு என்ன நிகழ்ந்தது என்று உடனடியாக என்னிடம் சொல்லுங்கள்” என்று ஆணையிட்டுவிட்டு புரவியைத் திருப்பி அரண்மனை நோக்கி சென்றான். கூர்மர் அவனை எதிர்கொள்ள “அது எங்கு செல்கிறது என்று மட்டும் நோக்குங்கள்… நான் இளைய யாதவரிடம் இதை நேரில் சொல்லி மீள்கிறேன்” என்றான்.

கூர்மர் “யோகியே…” என்று ஏதோ சொல்லவந்தார்.  “பாலையில் அது நெடுந்தொலைவு செல்லமுடியாது. தோரண வாயில் மேல் நின்றிருந்தாலே அதை நெடுந்தொலைவு வரை பார்க்க முடியும்” என்றான் அர்ஜுனன். “இப்போது அரண்மனையில் இருப்பவர்கள் என்ன நிகழ்கிறதென்பதை அறிவதே முதன்மையானது. இனி மணவிழா நிகழாதென்பதை சொல்லியாகவேண்டும்” என்றபின் புரவியை முடுக்கினான்.

அவனுக்கு முன்னால் சென்ற புரவி வீரர்கள் கூர்வேல்களை கண்மூடித்தனமாகச் சுழற்றி “வழி விடுங்கள் வழிவிடுங்கள் வழிவிடுங்கள்” என்று கூவிக்கொண்டே சென்றார்கள். வேல்முனைகள் வளைந்து சுழன்று வெள்ளிக்கோடுகளாக மின்னின. களிவெறியில் தன்னை மறந்து ஆர்த்திருந்த கூட்டம் பிதுங்கி வழிவிட்டது. உடனே வந்து அழுந்தி மூடிக்கொண்டது. சேற்றுப் பரப்பொன்றில் உடலைப் புதைத்து புதைத்து உள்ளே செல்வது போல் உணர்ந்தான். பின்னர் மேலே செல்லமுடியாது புரவி நின்றுவிட்டது. வழியொதுக்கியவர்கள் கூட்டத்தால் பிரித்து அடித்துச்செல்லபப்ட்டனர்.

“அரசாணை… வழி விடுங்கள்… வழிவிடுங்கள்” என்று அவன் கூவினான். அக்குரலை அவனாலேயே கேட்க முடியவில்லை. புயல்பரந்த முட்புதர்க்காட்டில் சிக்கிக்கொண்டது போல் உணர்ந்தான். எல்லா திசையிலிருந்தும் முட்டித் தள்ளப்பட்டதனால் நின்ற இடத்திலேயே அசைந்துகொண்டிருந்தான். அவனைச்சுற்றி கைகள் வீசப்பட்டன. எத்தனை கைகள்! கைகள் காற்றுக்கும் வானுக்குமானவை. பறவைகளில் அவையே சிறகு. கைகள். வானில் அள்ள முயல்பவை. வெறுமை பற்றி ஏற முயல்பவை. அள்ளி வீசுபவை. பிடித்து இழுப்பவை.

கைகள் கொள்ளும் மெய்ப்பாடுகளை தனியாக நோக்க அவன் நெஞ்சு வியந்தது. முகங்களுக்கும் விழிகளுக்கும் நாவுக்கும் தொடர்பின்றி கைகள் பேசிக்கொண்டே இருக்கின்றன. உடல்வளைவை சொற்களாக்கிய நாகங்கள். கேளா ஒலியொன்றை எழுப்பும் நாக்குகள். செல்க என்கின்றன. நிற்க மன்றாடுகின்றன. வருக என்கின்றன. என்னையும் கொள்க என்கின்றன. செவியறிந்த பெருங்கூச்சலை மறந்து சித்தம் விழிதொட்ட அவ்விரைச்சலை அறிந்து செயல்மறந்தது.

“வழிவிடுங்கள் வழிவிடுங்கள்” என்று கூவிய அவன் அகம்படி வீரன் எவராலோ கால் தட்டி வீழ்த்தப்பட்டான். “வழிவிடுங்கள்! அரசப்பணிக்கு வழிவிடுங்கள்” என்று அவன் கூவ அவன் மேல் கூட்டம் மூடியது. அர்ஜுனன் புரவியில் இருந்தவாறு சுழன்று சுழன்று தவித்தான். கடிவாளத்தைப் பற்றியபடி அதன் முதுகின் மேல் எழுந்து நின்று அக்கூட்டத்தை பார்த்தான். சாலை தலைப்பாகைகளின் வண்ணங்கள் இடைவெளியின்றி பரவி புன்னைப் பூக்கள் படலமென மிதந்து செல்லும் ஓடைபோல் தெரிந்தது. தொலைவில் துவாரகையின் குன்றுச்சரிவில் பாதைகள் முழுக்க வண்ணக்கரைசலாக மக்கள் வழிந்திறங்கிக் கொண்டிருந்தனர்.

அரண்மனைக்குச் செல்வது இயல்வதல்ல என்று தோன்றியது. இளைய யாதவரிடம் எப்படி செய்தியை அறிவிப்பது என்று எண்ணினான். பின்னர் அத்தருணத்தில் இளைய யாதவரோ சமுத்ரவிஜயரோ சிவை தேவியோ அவர் மைந்தர்களோ செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றியது. ஆவதொன்றுதான், அக்கணத்தை விழிகளால் சித்தத்தால் சொற்களால் முற்றிலும் பதிய வைத்துக்கொள்வது. அவ்வெண்ணம் வந்ததுமே கோட்டையில் பறவைத்தூது அனுப்ப வழியிருக்கும் என்பது நினைவுக்கு வந்தது. எப்படி அதை மறந்தான்?

அவன் புரவியைத் திருப்பி அதன் விலாவை குதிமுள்ளால் ஓங்கி அழுத்தினான். பிளிறியபடி பாய்ந்தெழுந்து தலைகளுக்கு மேல் கால்களைத் தூக்கிக் குதித்து அது முன்னால் சென்றது. அதன் காலடியில் சிக்கியவர்கள் அலறினார்கள். கீறிவிரையும் படகுக்குப்பின்னால் எழும் நீர்முக்கோணம் போல சுப்ரதீபத்திற்குப் பின்னால் உருவான சிறிய இடைவெளியை நோக்கி அவன் புரவியில் விரைந்தான்.

சுப்ரதீபத்தை தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் அனைவரும் பின் தங்கிவிட்டிருந்தனர். புரவியில் சென்ற தளபதிகள் மட்டும் அதைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். கூர்மரை கூட்டத்தின் நடுவே அலைக்கழிபவராகக் கண்டான். “யோகியாரே…” என அவர் கைநீட்டி கூவினார். அவன் அவரை பார்ப்பதற்குள் கூட்டத்தால் அள்ளி பின்னால் கொண்டுசெல்லப்பட்டார்.

அர்ஜுனன் சுப்ரதீபத்தின் அருகே வந்தபோது அவனது புரவி நுரை கக்கிக் கொண்டிருந்தது. படைத்தலைவர் திரும்பி தொண்டைபுடைக்க கண்கள் பிதுங்க  “கோட்டைவாயிலை மூடும்படி ஆணையிட எனக்கு சொல்லுரிமையுள்ளது யோகியே” என்றார். “வேண்டாம்” என்றான் அர்ஜுனன். குரல்களை சூழ்ந்த பேரோசை ஒலியின்மையாக்கியது. “தோரண வாயிலை நோக்கி செல்கிறார்கள்” என்றார் அவர். “தோரணவாயிலைக் கடந்தால் நாம் செய்வதற்கொன்றுமில்லை. கடிமணத்தின் முறைமைகளின்படி காப்புகட்டியபின் அவர் பன்னிருநாட்கள் நகரெல்லை நீங்கலாகாது. இன்றைய மணநிகழ்வு நின்றுவிடும்.”

அர்ஜுனன் எரிச்சலுடன் “மணநிகழ்வு நடக்காது” என்றான். “அவர் இந்நகரை விட்டுச்செல்கிறார் யோகியே” என்றார் படைத்தலைவர். “ஆம். அவர் உறுதியாக இந்நகரை விட்டு வெளியேறுவார். நாம் செய்வதற்கொன்றுமில்லை” என்றான் அர்ஜுனன். படைத்தலைவர் தவிப்புடன் “உக்ரசேனரின் குடி அங்கே அரண்மனையில் திரண்டுள்ளது. இளவரசி ராஜமதிதேவி அங்கு காத்திருக்கிறார்” என்றார்.

அர்ஜுனன் அப்போதுதான் அவளைப் பற்றி நினைத்தான்.   அவளை இருமுறை பார்த்திருக்கிறான். நெடுங்காலம் இருட்டில் இருந்த பொருட்களுக்குரிய ஓர் இயல்பு அவளிடமிருந்தது. வெண்ணிறமான உயர்ந்த உடலும் கரிய அடர்ந்த புருவங்களும் செதுக்கப்பட்டவை போன்ற மூக்கும் உதடுகளும் கொண்டவள். அழகி. ஆனால் அவள் முகத்தில் துயரமும் அதன் செதுக்கிலேயே கலந்திருந்தது. கம்சரின் வீழ்ச்சிக்குப்பின் அரண்மனையிலிருந்து அகன்று உத்தரமதுராவின் புறநகர் அரண்மனைக்குச் சென்று அங்கேயே தனிமையில் வளர்ந்தவள். அவள்  அரண்மனையைவிட்டு வெளியே வந்ததே இல்லை என்றார்கள்.

முப்பது வயதாகியும் அவளுக்கு மணம் நிகழவில்லை. ஷத்ரிய அரசகுலங்களில் இருந்து  அவளுக்கு மணக்கோரிக்கை ஏதும் எழவில்லை. யாதவர்கள் கம்சனின் குடியை வெறுத்தனர். எங்கும் ஓர் ஆழ்பேச்சு இருந்தது. கம்சன் கொன்ற குழந்தைகளின் கண்ணீர் அவர் குடியைத் தொடரும் என. “ஒருபோதும் அந்தப் பழி நீங்காது. பிழைகள் மைந்தரில் தொடர்பவை. குலக்கொடிவழியாக முடிவிலி வரை சென்று குருதிகொள்பவை. கம்சர் நல்லூழ் செய்தவர். அவர் களத்தில் இறந்தார். அவரது குடியினருக்கு இனி இவ்வுலகம் ஓர் எரிசிதை. எத்திசையும் பூட்டப்பட்ட சிறை” என்றார் முதியவர் ஒருவர்.

அவளுக்கும் அவள் உடன்பிறந்தவர்களுக்கும் வசுதேவர் மணமகன் தேடினார். அவளுக்குமுன் பிறந்த நால்வர் அருகநெறி பூண்டு  கன்னியர்மாடங்களுக்குச் சென்றனர். அவளும் அவ்வாறு செல்வதாக சொன்னாள். கம்சரின் குடியில் அத்தனை பெண்களும் அவ்வாறு சென்றால் அது பெரும்பழியென்றாகும் என்று சூரசேனர் வசுதேவரிடம் சொன்னார். அவளுக்கு ஓர் அரசகுடியில் மணமகனை தேடியே ஆகவேண்டும் என்று ஆணையிட்டார். “இனி அவளுக்கொரு மணம் நிகழ்ந்தபின்னரே நம் அரசகுடியில் மணநிகழ்வு. இது என் ஆணை” என்றார்.

சுபத்திரைக்கு மணமகன் தேடிய காலம் என்பதனால் வசுதேவர் பதற்றம் கொண்டார். பாரதவர்ஷமெங்கும் ஓலையனுப்பினார். நிறைந்த கருவூலத்தையே நிதியென அளிப்பதாகச் சொல்லியும் மறுஓலை வரவில்லை. அப்போதுதான் சௌரபுரத்தில் இருந்து சமுத்ரவிஜயர் துவாரகைக்கு வந்து தன் மைந்தனுக்காக கண்ணீருடன் வேண்டிக்கொண்டார். அவளை அரிஷ்டநேமிக்கு மணமகளாக்கலாம் என்று இளைய யாதவர் சொன்னார்.

கம்சரின் மகளை ஏற்க அரிஷ்டநேமியின் தமையன்களுக்கு தயக்கமிருந்தது. “பசுக்கொலையும் பார்ப்பனக் கொலையும் செய்து திருடிப் புதைத்து வைக்கப்பட்ட செல்வம் போன்றது கம்சரின் குடியின் தீயூழ். அதில் பங்குகொள்வதென்பது அழியாப்பழியை விரும்பி ஏற்பது” என்றார் மூத்தவர் ஸினி. “கம்சரின் கொலையாட்டை நாம் தடுக்கவில்லை என்னும் பழிக்கான கண்ணீரையே நாம் இன்னும் உதிர்த்து முடிக்கவில்லை. இனி குருதியும் சிந்தவேண்டியிருக்கும்” என்றார் சமுத்ரவிஜயர்.

ஆனால் சிவைதேவி “என் மைந்தன் எரிதழலால் ஆனவன். அவன் மேல் எந்த அழுக்கும் ஒட்டாது. அவளை அந்தக் குருதிப் பழியிலிருந்து மீட்பதாகவே அவன் உறவு அமையும்” என்றாள். “யாரறிவார், அவளுக்கு ஊழிட்ட ஆணையே அவனைக் கலந்து பழிநீங்குவதாக இருக்கலாம்!” நிமித்திகர் நூல்கணித்து முற்றிலும் பொருந்தும் பிறவிநூல்கள் அவை என்றனர். “தெய்வங்கள் சொல்கின்றன அவள் அவர் அருகே என்றுமிருப்பவள்.”

மணஉறுதி நிகழ்ந்து மலர் கைமாறப்பட்ட பின்னரும் அவள் விழிகளில் உவகை எழவில்லை என்று சுபத்திரை சொன்னாள். “ஏன் அக்கா உங்கள் விழிகள் அழியாத்துயர் கொண்டவையாகவே உள்ளன?” என்றாள். “எந்தையால் கொல்லப்பட்ட ஏதோ குழந்தையின் விழிகளாக இருக்கலாம். அவை எனக்குப் பிறவியிலேயே வந்தவை” என்றாள் ராஜமதி. “இம்மண்ணில் இன்றுள்ள மானுடரிலேயே பேரழகரை கணவனாகக் கொள்ளவிருக்கிறீர்கள் அக்கா” என்றாள் சுபத்திரை. “பாரதவர்ஷம் விழுந்து வணங்கும் கால்கள் அவை என்கின்றனர் நிமித்திகர்.”

அவள் மெல்ல புன்னகை புரிந்தபோதும் கண்கள் துயர்கொண்டவையாகவே இருந்தன. “ஆம், அவற்றில் நானும் பணியும் நல்லூழ் கொண்டவளானேன்” என்றாள். “அவள் அஞ்சுகிறாள். ஐயம் கொண்டிருக்கிறாள். பழிகோரும் பிள்ளைத்தெய்வங்கள் அத்தனை எளிதாக தன்னை விட்டுவிடாதென்று எண்ணுகிறாள்” என்று சுபத்திரை அவனிடம் சொன்னாள். “ஆனால் நிமித்திகர் அவள் அவரை நீங்காமலிருப்பாள் என்று உறுதிசொல்கிறார்கள். இளைய தமையன் எதையும் வீணே சொல்பவரல்ல என்று நானுமறிவேன்.”

“நானே சௌரபுரத்தவருக்கு செய்தியனுப்புகிறேன்” என்றான் அர்ஜுனன். “இங்கு நிகழ்பவை அவர்களுக்குச் சென்றிருக்கும். அவர்கள் நாடுவது உறுதிப்பாடு ஒன்றையே” என்றபடி புரவியை மேலும் செலுத்தினான். படைத்தலைவர் “யோகியே, இனி இவர் மீண்டுவருவாரா?” என்றார். அர்ஜுனன் திரும்பிப்பார்க்கவில்லை. புரவியை அதட்டி முன்னால் உந்தினான். அப்போதுதான் தான் சொன்ன சொற்களின் பொருளின்மையை உணர்ந்த படைத்தலைவர் தலையை அசைத்தபின் புரவியைத் திருப்பி மீண்டும் சுப்ரதீபத்தை தொடர்ந்தார்.

அந்த ஒரு வீதியிலேயே நகரமக்கள் அனைவரும் கூடிவிட்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். மாளிகைகள் மக்களையே மேலே மேலே என ஏற்றிக்கட்டப்பட்டவை போலிருந்தன. மாளிகைகளின் மேல் நின்று கூவி ஆர்த்தவர்களில் இளம்பெண்கள் பலர் இருந்தனர். அவர்கள் கொண்டாடுபவர் ஒரு பெண்ணை உதறி நகர்விட்டுச் செல்பவர். அப்பெண்ணுடன் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளவில்லையா? அவர்களுக்கு துயரோ சினமோ இல்லையா?

அவர்கள்தான் நேற்றுவரை அந்த மணநிகழ்வை களியாட்டமாக கொண்டாடியவர்கள். அப்போது மதுராவின் இளவரசி ராஜமதியாக இருந்தார்கள். அப்போதே அதை நோக்கி பொறாமைகொண்டிருந்த பிறிதொருத்தி அவர்கள் அனைவருக்குள்ளும் இருந்தாள் போலும். இப்போது இவர்கள் மகிழ்வது ராஜமதியின் இழப்பையா? அவர்களின் ஆழம் கொண்ட வஞ்சத்தையா?

இல்லை என அர்ஜுனன் தலையசைத்தான். இவர்கள் கொண்டாடுவது அவரது முழுமையை. ஒரு பெண்ணுக்கு உரியவராகும்போது அவர் சுருங்குகிறார். மாமலை முடிகள் எவராலும்  அணுகமுடியாது முகிலாடி நின்றாகவேண்டும். ஆம், அதைத்தான். அப்படித்தான். அக்கணமே அவன் அந்தப்பெருந்திரளில்  ஒரு முதியபெண்ணின் முகத்தை கண்டான். அவள் நெஞ்சில் கை அழுத்தி விம்மியழுது கொண்டிருந்தாள். அவள் தசைகள் எரிந்து உருகிக்கொண்டிருந்தன. அவள் அன்னையாக இருக்கவேண்டும். அவர் அப்போது அவள் மைந்தனாகிவிட்டிருக்கவேண்டும்.

கோட்டையின் காவலர்தலைவன் முரசு மேடையில் ஏறி நின்று கையசைத்தான். அர்ஜுனன் அவனைக் கண்டு ‘விலகு விலகு’ என்று சைகை காட்டினான். ‘கோட்டையை மூடவா?’ என்று அவன் சைகையால் கேட்க வேண்டாமென அர்ஜுனன் கைகாட்டினான். “என்ன ஆணை?” என அவன் கேட்டான். “வருகிறேன்” என்று அர்ஜுனன் கையசைத்தான்.

கோட்டை வாயிலைக் கடந்து யானை முன்னால் சென்றது. கோட்டைக்கதவு மூடப்படுமா என எண்ணியிருந்த மக்கள் கூச்சலிட்டனர். கோட்டைமேலிருந்த வீரர்கள் சிலர் தோரணங்களைப் பிய்த்து அள்ளி  யானைமேல் வீசி வாழ்த்து கூவினர். ஒருவன் ஓடிச்சென்று முரசுமேடைமேல் தொற்றி ஏறி முழைத்தடிகளை எடுத்து அறைய பெருமுரசம் முழங்கத் தொடங்கியது.

அர்ஜுனனுக்குப் பின்னால் வந்த படைத்தலைவர் “மங்கலத்தாளம்! பித்துப்பிடித்துவிட்டதா இவர்களுக்கு? மணமங்கலம் நிகழவில்லையே!” என்றார். நகரின் பிற முரசுமேடைகளிலிருந்தும் மங்கலத்தாளம் ஒலிக்கத் தொடங்கியது. வீரர்கள் ஓடிச்சென்று கொம்புகளை எடுத்து கோட்டைமதில்மேல் நின்று உரக்க முழக்கினர்.

அர்ஜுனன் கோட்டைமுகப்பில் இறங்கி மேடைமேல் பாய்ந்தேறி சிறியபடிகளில் சுழன்று ஓடி மேலே சென்றான். கோட்டைக்காவலர் தலைவன் அவனுடன் வந்தான். “பறவைகள்…” என்றான் அர்ஜுனன். “மந்தணமொழியில் மட்டுமே செய்தியனுப்ப முடியும் யோகியே” என்றான் காவலர்தலைவன். “நான் அறிவேன்” என்றான் அர்ஜுனன்.

கோட்டைக்காவலர்தலைவன் கைவீசி ஆணையிட இருவர் ஒரே சமயம் இரு புறாக்களுடன் ஓடிவந்தனர். அர்ஜுனனிடம் ஒருவன் கன்றுத்தோல் சுருளையும் வண்ணப்புட்டியையும் தூரிகையையும் நீட்டினான். சுருக்கமான அடையாளக்குறிகளில் அவன் நிகழ்ந்ததை எழுதி காவலனிடம் அளித்து “அரசருக்கு. உடனே செல்லவேண்டும்” என்றான்.

காவலன் அதை இறுகச்சுருட்டி வேய்மூங்கில் குழாய்க்குள் செலுத்தி புறாவின் உடலில் மெல்லிய வெண்கலக் கம்பியால் கட்டினான். அர்ஜுனன் இன்னொரு ஓலையில் சமுத்ரவிஜயருக்கு அதே செய்தியை எழுதினான். “சௌரபுரியின் அரசருக்கு… உடனே” என்றான். அவர்கள் புறாக்களுடன் ஓட அவன் திரும்பி குறுகிய கருங்கல்படிகளில் ஏறி மேலே சென்றான்.

அந்த உயரத்தில் நின்று நோக்கியபோது மாலையிலிருந்து உதிர்ந்தோடும் வெண்முத்து போல சுப்ரதீபம் சென்று கொண்டிருப்பதை காணமுடிந்தது. அவன் “என்ன ஆணை வந்தாலும் உடனே தோரணவாயிலுக்கு அனுப்புங்கள்” என்றான். படிகளில் இறங்கி ஓடியபடி “நான் செய்யவேண்டியவை இனி அரசரின் ஆணைப்படி” என்றான்.

அவன் கீழே புரவியை நோக்கி சென்றபோது துணைக்காவலர்தலைவன் அவனை நோக்கி ஓடிவந்து “யோகியே, உங்களுக்கு செய்தி” என்றான். “எனக்கா?” என்றான் அர்ஜுனன். “எப்போது வந்தது?” காவலர்தலைவன் “இப்போது…. சிலகணங்களுக்கு முன்” என்றான். அர்ஜுனன் அந்த மூங்கில் குழாயை வாங்கினான். அதன் முத்திரைமெழுகிலிருந்த சங்குசக்கர முத்திரையின் நடுவே பீலியடையாளம் இருந்தது. நடுங்கும் கைகளுடன் அவன் அதை உடைத்து தோல்சுருளை வெளியே எடுத்தான். உலர்ந்த அரக்குப்படலம்போலிருந்த அதை விரித்தபோது உடைந்துவிடுமென அவனுக்கு தோன்றியது.

சுருக்கமான குறிகளால் இளைய யாதவர் ஆணையிட்டிருந்தார். “பட்டுப்புழு சிறகடைந்துவிட்டது. தொடரவேண்டியதில்லை.” அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “என்ன ஆணை?” என்றான் காவலர்தலைவன். “தொடரவேண்டியதில்லை. செல்ல ஒப்புதல் அளிக்கும்படி சொல்கிறார்” என்றபின் அவன் புரவியில் ஏறிக்கொண்டு குதிமுள்ளால் அதை குத்தி பாய்ந்தெழச் செய்து கல்பாளங்களில் லாடங்கள் பொறிபறக்க விரைந்து ஓடச்செய்தான்.

தொலைவில் கவிழ்ந்த வில் என தோரணவாயில் தெரிந்தது. யானை அதன் நாணில் தொடுக்கப்பட்ட அம்பு என. அவன் புரவியை மேலும் மேலும் உந்தி முன்செலுத்தினான். சுப்ரதீபம் தொலைவில் நின்ற இடத்தில் அசைவதுபோல தெரிந்தது. வானில் எழுந்த வண்ணவில் கலையாது அப்படியே நின்றுகொண்டிருந்தது. எண்ணைச்சாயத்தால் வரையப்பட்டது என. பருவடிவப்பொருள் என.

மழை நின்றுவிட்டிருந்தது. முகில்கள் வடக்காக அள்ளிக்குவித்து உருட்டிச் செல்லப்பட்டன. கிழக்கே எழுந்த சூரியன் கண்கூசும்படி வானை நிறைத்தது. சாலையோர வெண்மாடங்கள் ஒவ்வொன்றும் விளக்குச்சுடர்கள் போல ஆயின.

சுப்ரதீபம் தோரணவாயிலை கடந்து செல்வதை பின்னாலிருந்து அவன் பார்த்தான். ஒரு கணம் கூட அதன் நடை தளரவில்லை. கண்ணுக்குத்தெரியாத பளிங்குவலையில் ஆடும் வெண்சிலந்தி. அது தோரணவாயிலை அடைந்தபோது அர்ஜுனன் அறியாது உடல்தளர்ந்தான். ஒவ்வொரு கணமாக அது கடந்துசெல்வதை கண்டான். அதன்மீது தோரணவாயிலின் நிழல் விழுந்து வருடியது. வெண்மை மங்கலாகி மீண்டும் ஒளிர மறைந்து புத்துடல் கொண்டு எழுந்து அப்பால் சென்றது.

புரவியை மீண்டும் தூண்டி அவன் தோரணவாயிலை நோக்கி சென்றான். சிற்பங்கள் விழித்துத் திகைத்து நின்ற முகப்பை அடைந்ததும் அர்ஜுனன் உடல் தளர்ந்து மூச்சிரைக்கத் தொடங்கினான். வாயிற்காவலன் அவனை நோக்கி ஓடிவந்து “நிறுத்தவேண்டாமென ஆணை வந்தது யோகியே” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன் களைப்புடன். காவலன் கைசுட்டி மூச்சிரைக்க “விரைந்து சென்றுகொண்டிருக்கிறார்” என்றான்.

அர்ஜுனன் மறுபக்கம் திரும்பி நோக்க தொடர்ந்து வந்த பெருங்கூட்டம் கோட்டைக்கு அப்பால் நின்றுவிட்டிருப்பதை கண்டான். அவர்களால் தொடரமுடியவில்லை. வாயில்கள் திறந்தே இருந்தன. ஆனால் அது அவர்களின் எல்லை. குலத்தால், வாழ்வால், நம்பிக்கைகளால், அச்சங்களால், ஊழால்.

தோரணவாயிலுக்கு அப்பால் காலைவெயில் விழுந்து செந்நிறத்தில் எரிந்த பாலைவனப் பாதையில் சுப்ரதீபம் சென்றது. அர்ஜுனன் அதை நோக்கியபடி சற்று நேரம் அசையாது நின்றபின் இறங்கி படிகளில் மேலேறினான். அவன் பின்னால் வந்தபடி காவலன் “முதல் சாவடி முப்பது காதம் அப்பாலுள்ளது. பகலெரிந்து அணைந்தபின்னரே அங்கு செல்லமுடியும். குடிநீரின்றி அத்தனை தொலைவு செல்ல எவராலும் இயலாது. யானை பத்துகாதம்கூட செல்லமுடியாது. அவர் வழியிலேயே விழுந்துவிடுவார்” என்றான். அர்ஜுனன் ஒன்றும் சொல்லாமல் மேலேறினான்.

செம்மண் விரிந்த பாலைவனப் பாதையில் சுப்ரதீபம் நெடுந்தொலைவு சென்று விட்டது. அன்று பெருவிழவு நாள் என்பதால் வணிகர் அனைவரும் முன்னரே வந்து விட்டிருந்தனர். பாதையில் செல்பவர் என வருபவர் என எவரும் இருக்கவில்லை. எனவே ஒழிந்த பாதையில் அது ஒழுகிச்செல்வதுபோல தோன்றியது. ஒரு துளிப்பால். இல்லை ஒரு துளி விந்து. ஒரு விதை.

தன் காலடிகள் எழுப்பிய புழுதியின் மேல் முகிலூர்வதுபோல யானை சென்றது. சாளரங்கள் தோறும் அதை நோக்கியபடி அவன் மேலேறினான். தோரணவாயிலின் பக்கவாட்டில் ஏறிச் சென்ற படிக்கட்டு மேலும் மேலுமென குறுகியது. சிறிய கற்படிகள் ஏறி மடிந்து மடிந்து மேலே சென்றன. அந்தச் செங்குத்தான பாதையின் இருள் அவனை மூச்சுத் திணறச் செய்தது. மேலிருந்து எவரோ இறங்கி வருவதைப்போல் உணர்ந்தான். ஒருகணம் அது இளைய யாதவர் என எண்ணி அவன் நெஞ்சு திடுக்கிட்டது. அவனுடைய காலடிகளின் எதிரொலியே என பின்பு தெளிந்தான்.

ஆனால் அவன் உள்ளம் அக்கற்பனையை விரிவாக்கிக்கொண்டது. “அவர் சென்று கொண்டிருக்கிறார் இளைய யாதவரே” என்றான். “ஆம், அவர் எப்போதும் சென்றுகொண்டுதான் இருந்தார்” என்றார் இளைய யாதவர். “அறிந்தேதான் அவரை அழைத்து  வந்தீர்களா?” என்றான் அர்ஜுனன். இளைய யாதவர் “எவர் அதை அறியமுடியும்? நிகழ்வனவற்றை பிரம்மமும் அறியாது. ஆனால் அவர் எவரென அறிந்திருந்தேன்” என்றார்.

“எங்கு செல்கிறார்?” என்றான் அர்ஜுனன். “ஒருதுளிக் குருதியை அவர் அருந்தியிருக்கிறார். அவருள் வாழும் வஞ்சமும் பசியும் கொண்ட தெய்வங்கள் அக்குருதிச் சுவையை அறிந்துள்ளன. அவர் அவற்றை வெல்லவேண்டும்.” அர்ஜுனன் திகைப்புடன் “அதை அருந்தாதவர் எவர்?” என்றான். “நான்” என்றார் இளைய யாதவர். “ஒருபோதும் ஒருதுளியும் அருந்தியதில்லை.” அர்ஜுனன் அவரை திகைப்புடன் நோக்கினான். “நான் விடாயின்றி பெருங்கடல்களை உண்பவன் பார்த்தா.”

அர்ஜுனன் தோரணவாயிலின் பன்னிரண்டாவது நிலையை அடைந்து அதன் திறந்த சாளரம் வழியாக வெளியே நோக்கினான். மழைத்தூறலின் நீர் ஆவியாகி அவித்த நெல்குட்டுவத்தின் மணத்துடன் காற்றாகி வந்து அவன் முகத்தை மோதியது. தொடுவானம் கண் கூசும் ஒளியுடன் வளைந்து நின்றது. அதை நோக்கி வெண்ணிற யானை சென்றுகொண்டிருந்தது. கண்கள் அதை நெடுந்தொலைவுக்கு தொடரமுடியவில்லை.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைவைரமுத்து சிறுகதைகள்
அடுத்த கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9